Tuesday, December 03, 2013

கடவுளின் உரை..!

-  சந்திரா ரவீந்திரன்
மழைக்காலத்து மஞ்சள் பூக்கள் மலர்ந்து சொரிந்திருக்கும் வீதியோரங்களில் அவர்கள் நின்றிருந்தார்கள்! தலைக்கு மேலே சாம்பல் புறாக்கள் சத்தமிடாமல் பறந்து சென்றன. ரோஜாக்களின் மணம் கமழும் மெல்லிய குளிர்காற்று இடையிடையே வீசிக் கொண்டிருந்தது. கேள்விகள் ஏதுமற்ற மயக்கம் நிறைந்த பார்வைகள் தெருவெங்கும் நிறைந்திருந்தன. வார்த்தைகளும் வசனங்களும் அங்கு வலிமையற்றுப் போயிருந்தன! பிடுங்கி வீசப்பட்ட பெருமரத்து வேரின் தளைகளைப் போல் புத்துணர்ச்சி அரும்பும் வசீகர முகத்தோடு அவர்கள் நின்றிருந்தார்கள். அடிக்கடி எல்லோர் புருவங்களும் உயர்ந்து விரிந்தன. ஒருவரையொருவர் சிநேகத்துடன் பார்த்துக் கொண்டார்கள். உற்சாகமும் பெருமிதமும் நிரம்பித் ததும்பும் நிமிடங்கள் அவர்களின் முன்னால் நகர்ந்துகொண்டிருந்தன!

கண் இமைக்கும் நேரங்களில் சிறகு முளைத்த வெள்ளைக் குதிரைகள் அவர்களைக் கடந்து போயின. வெற்றிப் பதாகைகளைச் சுமந்ததான புன்னகைகள் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டன. கிரீடம் சூட்டப்பட்ட தலைகளுடன் தாம் அழகாயும் தனித்துவமாயும் இருப்பதான பிரமையில் அனைவரும் மௌனச் சிலிர்ப்போடு வரிசையாக நின்றிருந்தார்கள்!

தெருநாய்கள் பயத்துடன் சிரித்தபடியே நடந்தன. சிறுநரிகள் வீதியைக் குறுக்கறுக்கத் தயங்கி, மீண்டும் பற்றைகளுள் ஓடி மறைந்தன. வானத்தின் ஓரத்தில் முகில்களைத் துளைத்தெழுந்தோர் செஞ்சுடர் மின்னியது! அனைவர் மனசிற்குள்ளும் அசையா மணிகளின் ஓசை! கூடவே வெற்றி முரசுகள், வலம்புரிச்சங்குகள், தாரைகள் தப்பட்டைகளின் பெருமுழக்கம்!
அவர்கள் மீண்டும் மீண்டும் புதுப்புது அர்த்தங்களோடு ஒருவரையொருவர் பார்த்தார்கள். பல நூறு வருடங்களாய் காவித்திரியும், கனவுகளையும் காவியங்களையும் விரைவில் சுப முத்தாய்ப்பிட்டு, ஒரு வெற்றிப் பிரகடனத்தைத் தரிசிக்கப்போவதான, தீர்க்கமான நம்பிக்கையுடன் நீண்ட எதிர்காலத்திற்கான புதிய கனவுகளைக் காணத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

புதிய வாழ்வுக்கான பொன்னுலகம் ஒன்று உருவாகும் பேரழகு அவர்களின் கண்களில் போதையாய் இறங்கி யிருந்தது. தாம் பேசும் வார்த்தைகள் யாவும் தம்மைச் சுற்றி ஹம்சத்வனியிலும் மோகனத்திலும் இழைந்து வருவதாய் மனம் உருகிக்கொண்டிருந்தது!
நீண்ட வெள்ளை வேஷ்டிகளையும் மஞ்சள் சேலை களையும் அணிந்திருந்தவர்கள், மார்பில் குருசுகளெனத் தொங்கும் இலட்சியச் சின்னங்கள் தெரிய, ஒற்றைக் கைகளை அசைத்துவிட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள்.

நகரகாவலர்களின் நடமாட்டம் நிறைந்த நகர்ப்புற வீதி, குறித்த நேரத்தை எதிர்பார்த்து பரபரப்புடன் காத்திருந்தது. அதன் எல்லையில், அகன்ற நிலைப்படிகளோடு ஒட்டிய, வெள்ளிப்பூண்கள் தொங்கும் பெரிய கதவுகளின் பின்னால் பெருமண்டபம் நீண்டு கிடந்தது. சில்லென்ற அடர்ந்த குளிர்காற்று மண்டபத்தின் புறச்சூழலை நிறைத்திருந்தது. தேம்ஸ்நதியிலிருந்து ஒரு கிளையெனப் பிரிந்து வரும் ‘கலியன்ற் பொயின்ற் மரீனா’, அழகிய சிற்றாறாக விரிந்து, மண்டபத்தை ஒட்டிய நீளமான சிமெண்ட் தரையில் மோதி, முன்னும் பின்னுமாய் அலைந்து கொண்டிருந்தது. தடித்த வெள்ளிக்கம்பிகளினால் எல்லையிடப்பட்டிருந்த சிமெண்ட் தரையிலிருந்து மேலே ஏறும் அகன்ற நிலைப்படிகளின் முடிவில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் அலங்கார வாயிற்கதவுகள் யாரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போல் கிளர்ச்சியுடன் நின்றிருந்தது!
வாயில் நிலைகளில், தோரணங்களும் மாலைகளும் அசைந்து கொண்டிருக்க, ரோஜாப் பூஞ்சாடிகளைக் கடந்து அவர்களில் பலரும் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள்.

வாயிலில் சிலர் அணிவகுப்புச் செய்யக் காத்திருப்பது போலவும் குறித்த பொழுதைக் காக்கும் காவலர்களைப் போலவும் நின்று கொண்டிருந்தார்கள்.

கடவுளிடமிருந்து வரும் கருத்தோலையை இங்கே காவிக்கொண்டு வருபவர் சர்வதேசத்திற்கான தமது சமாதானத் தூதுவர் எனப் பேசிக்கொண்டார்கள்.

இலேசான பரபரப்புடன் வாயிற்கதவுகள் திறபடத் தயாரானது!

“கடவுளின் தூதர் வருகிறார் . . .”

வாத்தியங்கள் சீராக முழங்குகின்றன. அனைவரும் அவரை அண்மித்துப் பார்க்கவும் ஆரத்தழுவவும் முயல்கிறார்கள். அவர் கைகளை அசைத்தவாறே புன்னகையை உதிர்த்தபடி மேடையின் பின்னால் மறைந்துபோகிறார்.

அவரின் வரவோடு கிளர்ந்தெழுந்த ஆனந்தப் பேரோசை அடங்க சிறிது நேரம் பிடித்தது! இனிவரப் போகும் நிமிடங்களனைத்தும் மிகப் பெறுமதியானதென அனைவரும் பேரமைதி பேணத் தொடங்கினார்கள். மேடையின் இருமருங்கும் தொங்கும் பெரிய திரைகளில் அற்புதமொன்று நிகழக் காத்திருப்பதாய் பல்லாயிரம் கண்களும் திரைகளை நோக்கத் தொடங்கியிருந்தன.

மண்டபத்திற்குள் உடனே நுழைந்துவிடவேண்டும் என்ற துடிப்பையும் தவிப்பையும் சுமந்தபடி, வெளியே பாதை நீளமாய் பல்லாயிரம் வாகனங்கள் தரிப்பிடம் தேடி வரிசையிட்டுக் காத்து நிற்கின்றன! வெள்ளையுடை அணிந்த காவலர்கள் வேகமாய்க் கைகளை அசைத்து அசைத்து . . . பாதைகளை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

கல்லறைகளும் வணக்கத் தூபிகளும் காவிய நாயகர்களின் வீரத்தைப் பறைசாற்றும் புகைப்படங்களும் ஓவியங்களும் மண்டபத்தின் மேடையைச் சூழ ஒழுங்காக வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. வலதுபுறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உயர்ந்த கொடிக்கம்பத்தில், ஒரு இனத்தின், ஒரு இலட்சியத்தின், ஒரு கொள்கையின், உரிமைகளின், ஒரு ஆட்சியின் அடையாளமாய் வீறு கொண்டெழும் வேங்கைக்கொடியொன்று மேலெழுந்து பறக்கத் தயாராக இருந்தது.

இழப்புகளின் வலியும் இதயம் நிறைந்த துயரமும் அவற்றைத் துடைத்தெறிந்து விடுவதான நம்பிக்கையும் கலந்து உணர்ச்சிப் பெருக்காகி மண்டபமெங்கும் வெப்பப் பெருமூச்சால் நிறைந்திருந்தது!

பொழுது, நண்பகல் பன்னிரண்டு மணியைத் தொடத் தயாராக இருந்தபோது எல்லோரும் அமைதியாக இருக்கைகளை விட்டு எழுந்து நின்றார்கள். அனைவரது கைகளிலும் தீச்சட்டி! கணீரென்ற ஓசையுடன் அசையாமணியொன்று துயரப்பேரொலியை மண்டபமெங்கும் சிதறவிடுகிறது! அதன் எதிரொலி பலமடங்காகி, கல்லறைகளிலும் மானிட மனங்களிலும் மோதித் தெறிக்கிறது! மையத்தில் மலைபோல் குவிந்து கிடக்கும் பூங்கொத்துகளுக்கு நடுவே இருந்த வட்டமான பெரிய தீச்சட்டியில் சுடர் பிரகாசமாய் எரியத் தொடங்கியிருந்தது. கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டு, வேங்கை வீறுடன் பறக்கத் தொடங்கியிருந்தது. உயிரைப் பிழியும் கவிதை வரிகள், கரகரப்பிரியா இராகத்தில் குழைந்து தோய்ந்து மண்டபத்தைக் கண்ணீரால் நிறைக்கத் தொடங்கியது! எல்லோரும் கைகளில் சுடரும் ஒளியைப் பார்த்த வண்ணம் நின்றிருந்தார்கள். சிதறிவிழும் கண்ணீர்த்துளிகள் தீபத்துடன் கலந்து மின்னிக்கொண்டிருந்தன! மெய்சிலிர்க்கும் நிமிடங்களால் மண்டபம் கட்டிப் போடப்பட்டிருந்தது!

துயர் நிறைந்த நினைவுகளில் தோய்ந்திருந்த இதயங்களை அள்ளிச் சுமந்தபடி அசையாமணியோசை காற்றில் கரைந்து போக, சுடர்கள் மெதுவாக அணைக்கப்படுகின்றன. பொன்னும் மணிகளும் நிறைந்த வெள்ளிக் குடங்களை இருவர் சுமந்து வந்து கொண்டிருந்தார்கள். அதனை மேலும் நிரப்பி அனுப்பிவிடும் ஆவலில் பலரும் நெருக்கியடித்து தமது பங்களிப்பை அள்ளி வீசிக்கொண்டிருந்தார்கள்.

“தமிழரின் தாகம் . . . தமிழீழத் தாயகம் . . .”

உணர்ச்சி பொங்கும் இலட்சியப் பிரமா ணங்கள், தடித்த சுவர்களிலும் உயர்ந்த கூரைகளிலும் மண்டபத்தின் சுற்று வாயில் கதவுகளிலும் மோதி பெரிதாக எதிரொலித்தன!
வரலாற்றைச் சுமந்தபடி திரியும் கடவுளின் தூதர், புன்னகையோடு கைகளை அசைத்தவாறே மேடைக்கு வருகிறார். அருகில் மஞ்சள் சேலை அணிந்த வெள்ளைப் புறாவாக அவரின் துணைவி. பின்னால் துணைத்தூதர்கள். கடவுளின் உரையை வரவேற்கத் தயாராக மரியாதையுடன் அவர்கள் நின்றிருந்தார்கள்.

கல்லறைப் பூங்காவின் மையத்தில் பெருஞ்சுடர் இன்னமும் எரிந்தபடியே இருக்க அனைவரின் கவனமும் திரைகளை நோக்கித் திரும்பியிருந்தது. தரையெங்கும் உதிர்ந்து கிடந்த மஞ்சள் மலர்களின் மேல், சப்பாத்துக்களுடனும் குளிர் அங்கிகளுடனும் சிலர் அசையாமல் உறைந்துபோய் நின்றிருந்தார்கள். அனைவரின் காதுகளும் கூர்மையாகியிருந்தன. கண்கள் திரைகளில் நிலைத்திருந்தன.

சத்தியப்பிரமாண வரிகளோடு, மண்டபம் சூழ்ந்த திரைகளெங்கும் கடவுள் பிரசன்னமாகியிருந்தார்! வெற்றிக் களிப்பில் எழுந்த ஆனந்தக் கூச்சல், மண்டபத்தின் கூரைகளை இடித்துச் சென்றது. தலைக்குப் பின்னால் ஒளிவட்டங்களேதுமில்லாமல் கடவுள் ஒரு மனிதனாக நின்றிருந்தார்! கண்களில் கருணையும் உறுதியும் பொங்க, அவர் நேர்கொண்டு நிமிர்ந்து பார்த்தார்.

“எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! . . .”

கடவுளின் குரலைத் தவிர, அனைத்து ஒலிகளும் அடங்கிப் போயிருந்த அந்த நிமிடங்களில் மண்டபத்தின் தடித்த சுவர்களும் கதவுகளும் காதுகளைக் கூர்மையாக்கி நிற்பதென அசைவற்றிருந்தன!

உரையின் நடுநடுவே உணர்ச்சிப் பெருக்கில் கைகள் ஓங்கித் தட்டப்படுகின்றன! குதூகலிப்பில் பலம் கொண்ட மட்டும் மூச்சை உள்ளிழுத்து பின் வெளியில் தள்ளி பலரும் விசில் அடிக்கிறார்கள். எங்களுக்காக ஒருவர் இருக்கிறார் என்ற நெஞ்சார்ந்த ஆறுதலும் நாம் பலம் மிக்கவர்கள் என்ற ஒருமித்த நம்பிக்கையுணர்வும் இணைந்து அனைவரையும் நெஞ்சு நிமிர்த்தி உட்கார வைக்கிறது.

“இச்சகத்துளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும். . .
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே . .!”

நினைவுகளின் ஆழத்தில் பதிந்து போயிருக்கும் பாரதியாரின் உயிர்ப்பு நிறைந்த வரிகள், ஓங்கியொலிக்கும் முரசோசை போல் அனைவரது இதயங்களையும் அறைகிறது! உணர்வுகள் அவர்களையறியாமல் முறுக்கேறுகின்றன! எமனையும் எட்டி உதைக்கும் தைரியம் அவர்களின் உடல் முழுவதும் சூடாகப் பரவுகிறது!

சங்காரம் செய்து, அரக்கர்களை அழித்தொழித்து, ஒரு மீட்பராக அவர்களைக் காத்தருள்வதற்காய் இந்த உலகில் அவதரித்த கடவுளின் அவதார புருஷர் எதிரில் நின்று உரையாற்றியபடி இருக்கிறார். அவரின் உரை ஒரு ஆணியால் எழுதப்படும் சத்தியவாக்குப் போலவும் பெருந்தவமியற்றி வலிமை பெற்ற தவசிகளின் தீர்க்கதரிசனக் கூற்றுக்கள் போலவும் தொடர்ந்து கொண்டிருந்தது!

மண்டபத்தில் இருக்கைகள் அற்றவர்கள், பெருந்திரளின் பின்னாலிருக்கும் அகன்ற வாயில்களை அடைத்தபடி நின்றிருந்தார்கள். கூட்டத்தில் பூனைகளும் நாய்களும் பன்றிகளும் கழுகுகளும் பெருச்சாளிகளும் மனித முகமூடிகளுடன் புன்னகை சிந்திக்கொண்டு இருந்தார்கள். அவற்றின் காதுகளும் கைகளும் கூர்மையாக வேலை செய்து கொண்டிருந்தன. கடவுளின் உரையில் எவருக்கும் புரியாத புதிய தத்துவங்களை வரிக்குவரி கண்டுபிடித்துச் சாதனை புரியும் காரியங்களில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள்.

அவர்களுக்குமப்பால் சுதந் திரத்தை விலைக்கு வாங்கி விடலாம் என்ற நற்சிந்தனைகளைக் காவிக்கொண்டு திரிபவர்கள் சிலர் வசீகரப் புன்னகைகளை உதிர்த்தவாறே அறிவாளிகள் போல் ஒற்றைக் கால்களில் நின்று கொண்டிருந்தார்கள். அதீத பைத்தியக்காரரைப் பார்ப்பது போல் இருந்தது அவர்களின் பார்வை. அவர்களின் உதடுகள் எப்போதும் கேலி வார்த்தைகளை உதிர்க்கக் காத்திருந்தன. ஆனால் யாரும் அதற்கான சந்தர்ப்பத்தையோ அனுமதியையோ கொடுக்கத் தயாராக இருக்கவில்லை. ஆனாலும் அவர்களின் தத்துவங்களை எழுதுவதற்கு விளம்பரங்கள் நிறைந்த கவர்ச்சித் தளங்கள் பல தயாராகக் காத்திருந்தன.

கேலி வார்த்தைகளைச் செதுக்கி, அவர்களால் எதையும் எழுத முடியுமாயிருந்தது. தமக்குப் பிடிக்காதவற்றையும் பிடிக்காதவர்களையும் முரட்டு விலங்குகளாக்கி, மூர்க்கம் மிகுந்த அசுரர்களாக்கிச் சித்தரித்து விடுவதில் வல்லமை பெற்றவர்களாக அவர்கள் இருந்தார்கள். யாரும் கேள்விகளேதும் கேட்டுவிட முடியாதபடியான மாயக் கருவிகளையும் வெள்ளைப் பல்லக்குகளையும் கண்கட்டுவித்தைகளையும் சொந்தமாக்கி வைத்திருக்கும், வலிய ஆட்சியாளர்களின் பின்கதவுகள் அவர்களிற்காக எப்பவும் திறந்துவிடப்பட்டிருந்தன! அடிமட்டச் சேவகர்கள் செய்யும் வேலைகளை அங்கே இவர்கள் கூச்சமின்றி செய்து கொண்டிருந்தார்கள். திட்டமிட்டு அளிக்கப்படும் விருந்துபசாரங்களிலும் கேளிக்கை களிலும் மயங்கி, தாய்வீட்டைக் கேலி செய்யும் கவிதைகளையும் கதைகளையும் அவர்கள் புனைந்து கொண்டிருந்தார்கள். போதை நிறைந்த நடனங்களால் எப்பவும் கட்டிப் போடப்பட்டிருந்தார்கள். பாவங்களுக்கான அனைத்து வகைத் தண்டனைகளும் மறுக்கப்பட்டிருந்த பளிங்கு மாளிகைகள் அவர்களுக்கு அவ்வப்போது பரிசில்களாக வழங்கப்பட்டன.

மண்டபத்தின் திரைகளில் பேருரை நிறைவுற்று, சரித்திரப் பரிணாமங்களும் மீட்பர்களின் சாகசங்களும் திகில் நிறைந்த ஆவணங்கள் போல வந்து போயின. நெடிய வரலாறு ஒன்றின் அடுத்த அத்தியாயத்திற்கான ஆரம்பக் கனவுகளைச் சுமந்தபடி, களி நடனங்களும் புனைவு நாடகங்களும் இசைப்பாடல்களுமாய் முடிவுறும் வரை மண்டபம் அதனுள் மூழ்கிப்போகிறது!


* * *
பின்னர் சில மழைக்காலங்கள் வந்து, அனைத்தையும் கடந்து போனது! அதன் பின்னர் ஒரு இளவேனிற் காலம் வந்தது! சமாதானப் புறாக்களும் பஞ்சவர்ணக் கிளிகளும் பாட்டுப் பாடும் குயில்களும் மகிழ்வுடன் பறந்து திரிந்த, ஒரு கவர்ச்சியான இளவேனிற் காலம் அது!

இந்தக் காலம் இப்படித்தான் ஆகுமென்று யாரும் அறியாத ஒரு மாயப் பொழுதில், எவரும் விரும்பாத ஒரு ஈன வழியில் அது நடந்தேறியது! அப்படித்தான் நடக்கவேண்டுமென்று விரும்பியவர்கள் அதனை மகிழ்வோடு முன்னின்று நடத்தினார்கள்!

உழைப்பும் உயிர்த்தியாகமும் கலந்து, உதிரத்தால் செதுக்கி உருப்பெற்ற பொற்கோட்டை வாயிலினுள் சொல்லாமல் கொள்ளாமல் கண்பொத்தியடித்தது போல் மாயப் பிசாசுகள் புகுந்து கொண்டு ஊழிச்சதிராடின! ‘கடவுள் காப்பாற்றுவார்’ என்று மந்திர உச்சாடனம் மட்டும் செய்தபடி மல்லாக்காகப் படுத்துக் கிடந்தவர்களும் உழைக்கும் ஆர்வமின்றி, அரைத் தூக்கத்தில் பகற்கனாக்கள் கண்டு பின், திடுக்குற்று விழித்தெழுந்தவர்களும் ஒரு பிரளயத்தின் பின்னரான இருள் நிறைந்த கணமொன்றில் திரும்பிப் பார்த்தபோது கடவுள் தன் இருப்பிடத்தில் காணாமல் போயிருந்தார்!!!

கடவுளை நம்பினோர் சொன்னார்கள்:
“அருவமும் உருவமுமானவர் கடவுள்!
ஆதியும் அந்தமுமில்லாதவர்
கடவுள்!
எங்கும் நிறைந்தவர் கடவுள்!
எல்லாம் வல்லவர்
கடவுள்!

- சந்திரா இரவீந்திரன்
நன்றி - காலச்சுவடு

காதலான ஆழம்

- பசுந்திரா

இந்த செய்தி வந்ததில் இருந்து - அப்பா எத்தனை விடயங்களை சாதித்திருக்கிறார் என்று எனக்குள் ஒரே ஆச்சரியம்.  “எனக்கு படிக்க பணம் தந்தவர் , எனக்கு திருமணம்பேசி செய்து வைத்தவர், நான் அவரது வளர்ப்புப் பிள்ளை, எப்ப வந்தால் பார்க்கலாம் ?" என அழைப்பின் மேல் அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது. நேற்றில் இருந்து தொலை பேசி அலறிக்கொண்டு  இருகிறது.  சில தசாப்த பிரிவின்  முடிவில்  அப்பாவை பார்க்கப்போகிறோம்  என்ற செய்தியால்  . என்னுள் அவர் இப்போது எப்படி இருப்பார் என்ற கற்பனை மேலும் மேலும் வியாபித்தது.  அதனூடே அவர் எங்களை பிரிந்து வெளிநாடு போன நினைவு என் கண்முன்னே நிணலாட்டியது .

“ இது என்ர வீடு ... என்ர அம்மா எனக்காக - முன்பணம் கட்டி பதிவு செய்து தனக்குப்பக்கத்தில இருக்க வேண்டும் எண்டு எடுத்த அறை -  இதிலதான் நான் இருப்பன்  நீர் வெளியில போகலாம் ” இது அம்மா.

அப்பாவின் குரல் எனக்கு கேட்கவில்லை.  ஆனால் அதற்கு அவசியம் இல்லை. அம்மாவின்         குரல்தான்   அந்த விடுதியின்  மூன்றாவது மாடியில் இருக்கும் இருபது அறையில் உள்ளவர்களின் செவிப்பறையிலும் அறைவதுபோல் கேட்கிறதே ? அப்பாவின் என்ன கேள்விக்கு அம்மாவிடம் இருந்து இப்படி ஒரு  பதில் வரும் என்று பக்கத்து அறையில் இருக்கும் என்னால் இலகுவில் அனுமானிக்க முடியும் . ஆனாலும்  எந்த கோள்வி அம்மாவின் - இந்த பதிலுக்கு பொருந்தும் என சற்று குழப்பமாகவே இருந்தது.

அப்பாவுக்கு சண்டை பிடிக்கத் தொரியாது .தான் பேசுவது தொடர்புடைய நபருக்கு மட்டும் கேட்டால் போதும் என நினைப்பவர். தேவைக்கு அதிகமாக சொற்களையோ சக்தியையோ செலவு செய்ய விரும்பாதவர் ஆனால் தர்க்க ரீதியாகவும் நியாயத்தின் பாலும் நின்று பேசுவார். ஆனால் அம்மா உரக்க பேசி - அப்பாவின் பலவீனம் என அவர் நினைக்கும் அமைதியான சுபாவத்தின் மூலமோ , அல்லது அழுது அலறி  அயலவரின் அனுதாபத்தை தேடுவதன் மூலமோ குள்ளத்தனமாக காரியத்தை சாதித்து விடுவார். 'வெளிய போ ..' என பேசிய பிறகு அப்பா உள்ளே இருப்பார் என நான் நினைக்க வில்லை ஆனால் அதற்குப் பிறகு அவரும் வர வில்லை , அம்மாவின் சத்தமும் வரவில்லை .

அப்பா உலக நடை அறிந்து ஒழுகுபவர், மென்மையான சுபாவமும், எதையும் முன்கூட்டியே ஆராய்ந்து பார்க்கும் ஒரு பக்குவமும் , பேதம் பாராமல் எல்லோக்கும் உதவி செய்யும் ஆழமான அன்புமுடையவர். இதை அவரை பார்த்த மறு கணமே யாரும் சொல்லிவிடுவார்கள்.

அந்த சாமத்தில வெளியில போ என்றால் எங்கே போவார் ?. அது கொழும்பு தலைநகரம்  , இன பிரச்சனை அதிகரித்து இருக்கும் காலம் , பதட்டமான நேரம்  .  பகலில் போகும் போதே என்னையும் கூட்டிக் கொண்டு போவார். அப்போதுதான் நிச்சயமாக வீடு திரும்பலாம்.  இப்படி இரவில் தனியே எங்கு போவார்?. பொழும்பு எங்கே எங்களின் ஊர் மன்னார் எங்கே..?

இது ஒரு புறம் இருக்க ;  அந்த நாகரீக  விடுதியில் வெளிநாட்டுக்கு போக என பலர்  யாழ்ப்பாணத்தில் இருந்து  வந்திருந்தார்கள். அனேகமானவர்கள்   பெண்கள் ; மணப்பெண்கள் , தாய்மார்கள் . அப்பாவின் வயதை ஒத்த இளைஞர்கள்  என நிறைந்திருந்தார்கள். அந்த விடுதியில் எங்காவது ஒரு அறையில் எதாவது வாக்குவாதம் நடந்தால்  ஏறக்குறைய மூன்று மடியிலும் உள்ள 58 அறைகளில் உள்ள அனைவரும் அந்த அறையின் முன்னால் கூடிவிடுவார்கள் . யாருக்கும் அங்கே வேறு வேலை இல்லை . வெளி நாட்டு காசை எடுத்து சாப்பிட்டுவிட்டு கூடிக் கூடி கதை அளப்பதே வேலை . விடுதி உரிமையாளர் உட்பட.    இந்த சண்டை ஒருவேளை பகலில் நடந்திருந்தால் சாப்பாடு எடுக்க போன வகையால் சிலர் சந்தர்ப்பத்தை தவற விட்டிருப்பார்கள் . இதுதான் இரவாச்சே யாருக்கும் குறை இல்லை . ஆறே வயதான எனக்கே அம்மாவின் கூச்சலின் பின் அறைக்கு வெளிய பார்க்க வெக்கமாக இருந்தது  . அப்பா எப்படி இவர்களை எதிர் கொள்ளப் போகிறார் , முகம் கொடுத்து பேசப்போகிறார்.  இது பற்றி அம்மாவோ அம்மம்மாவோ   சிந்தித்த மாதிரி எனக்கு தோன்ற வில்லை

அம்மம்மாவை குறை செல்ல முடியாது முன்பொருநாள் இப்படி சண்டையின் நடுவே புகுந்து அம்மாவை தாறு மாறாக பேசினார். - அதற்கு அம்மா “ நான் மாட்டன் எண்டு  சொல்லச் சொல்ல நீதானே கட்டி வைவச்சனி ” என்று பதில் இறுத்தார்.  - அன்றில் இருந்து  அம்மம்மா வாய் திறக்காத அதே வேளை அப்பாவும் மனமுடைந்து போனார். - இதற்காக யாரும் எங்கள் பெற்றோரின்  திருமணம் - பேசி முடித்த திருமணம் என்று  எண்ணி விடக்கூடாது .  ' காதலிக்கும் போது தான் பத்து பன்னிரண்டு கடிதம் போட்டபின்பு தான் அப்பா ஒரு பதில் எழுதுவாராம்'  - என அம்மாவே கூறுவார் .

ஏழாம் இலக்க அறையில் எனக்கு அருகில் அம்மம்மா மண்ணெண்ணை அடுப்பில் எதோ வேக வைத்துக் கொண்டு இருந்தார். ' எட்டாம் அறையில் சண்டை முடிந்து விட்டது இனி படுக்கலாம் தானே ' என்பதை சொல்லாமல் சொல்லுவதாக அம்மம்மா என்னிடம் ‘பசிக்குதா ?' என கேட்டார் . நான் இல்லை என தலையை ஆட்டி விட்டு முழங்கால் இரண்டுக்கும் இடையில் தலையை வைத்தபடி கல்லுப்போன்ற வைரமான சீமெந்து தளத்தை பார்த்த படி இருந்தேன் .ஓர் எறும்பு  சோறு ஒன்றை தூக்கிக்கொண்டு ஈரமான காட்டில் உள்ள தனது  நிலத்தடிப் புற்றை  தேடி மூன்றாவது மாடி முழுக்க  மூசி மூசி சுற்றி வந்தது

என் மண்டைக்குள் அம்மாவின் அந்த பதிலுக்கான கேள்வி இன்னமும் ஓடிக் கொண்டிருந்தது.
அப்பாவை வெளிநாடு அனுப்ப என்று நாங்கள்  கொழும்பு  வந்திருக்கிறோம். ஆனால் அந்த பயணம் ஏதோ காரணத்தால் பின் போடப்பட்டுக் கொண்டே போனது . ஒரு வேளை அப்பா ‘ பயணம் சரி வரும் வரை ஏன் காசை கரியாக்கி பிள்ளைகளின் படிப்பையும் குழப்பி வெளிய போய்வரவும் பயந்து கொண்டு ஏன் இந்த கொழும்பில் இருக்க வேண்டும்  ? மன்னாருக்கே போய்விடலாம்  . எல்லாம் சரி வந்ததும் வரலாம் தானே..? என கேட்டிருக்கலாம் . அதற்கு அம்மா இப்படி எகிறிக் குதித்து இருக்கலாம். ஆனாலும் அதற்காக வெளிய போ என்று சொல்ல வேண்டியதில்லை . ஏன் இந்த அப்பா இப்படி வம்பை விலைக்குவாங்கிறார் ‘ புண்ணுக்கு வலியா மருந்துக்கு வலியா ? என்று - விட்டு விட்டு கும்பல்ல கோவிந்தா  போட வேண்டியது தானே'  எனக்கு ஒன்றும் புரியவில்லை.
>
> தொடர்ந்து அம்மாவின்  சண்டை உக்கிரமடைந்தது.  அப்பா வர வர ஒழுங்காக சாப்பிடுவதில்லை , முடி வெட்டுவதில்லை , தாடி மளித்து மாதக் கணக்காகிறது . கண்ணையும் மூக்கையும் வைத்தே எங்கள் அப்பா என அடையாளம் காணும் அளவுக்கு முகம் மாறிப்போனது. அதற்காகவும் சண்டைகள் வந்து போனது . அவர் பக்க நியாயத்தை கேட்க இங்கே  யாரும் இல்லை. அப்பாவுக்கு சாப்பாடு  நான் -அக்கா - தம்பி மூவரும் தான் பரிமாறுவேம். எங்கள் முகத்திற்காகவே சாப்பிடுவார். எங்களின் முக வாட்டம் அவரை மேலும் வேதனைப்படுத்தி  இருக்கவேண்டும்.

இரண்டு மாத  பிரசவ கூச்சலின்  பின் ஒரு தீர்வு பிறந்தது . இல்லை ஒரு பந்தம் இறந்தது.
அதாவது அம்மாவின் ' விவாகரத்து கோரிக்கை' க்கு  அப்பா சம்மதம் தெரிவித்து விட்டார்.

இந்தப் பிரச்சனைக்கு மூல காரணமே அம்மம்மாதான். அம்மம்மா , அம்மா இருவரும்  பிரச்சனையை அறிவு ரீதியாக அணுக தெரியாது .  தாங்கள் வாய் தவறி ஒன்றை செல்லிவிட்டால் கூட எந்த விலை கொடுத்தும் அதை நிரூபிக்க முனைவார்கள் .

எங்கள் பெற்றோரின் காதல் விவகாரம் அம்மம்மாவிக்கு தெரிய வந்த போது ' அப்பா தான் தன் மகளுக்கு  மாப்பிள்ளை ' என அம்மம்மா தீர்மானித்து விட்டார்.  அனால் ஏதோ காரணத்தால் திடீரென அம்மா அப்பாவை நிராகரித்து விட்டார். இந்நிலையில் அம்மம்மா தான் நினைத்ததை செய்தே தீருவேன் என்று பிடிவாதமாய் நின்று - அம்மாவுக்கு தும்புக்கட்டை அடி போட்டு காரியத்தை சாதித்து விட்டார். இதற்கு அம்மாவின் பண ஆசையும் ஒரு காரணம் . எங்கே அம்மம்மா தன்னை தெரவில் விட்டுவிடுவாரோ என்றபயம். அனால்  இது எதுவும் அப்பாவிக்கு தெரியாமல் போய்விட்டது . தாயும் மகளுமாய் மூடி மறைத்து விட்டார்கள்.

அம்மம்மாவின் மகள் தானே அம்மா இப்போது
> அம்மாவின் முறை ஆரம்பித்து விட்டது. தான் சொன்னதை கேட்காமல் போன அம்மம்மாவை மூன்று பிள்ளைகளுக்கு தாயான பின்னும்  பழிக்குப் பழி தீர்த்து விட்டார். இதில் ஒன்றும் அறியாத அப்பா பலிக்கடாவாக நடுவில் நிக்கிறார் ; எங்கள் மூவரின் வாழ்க்கை பற்றி அப்பாவை தவிர இங்கே யாரும் கரிசனை கொள்வதாக இல்லை.
>
> அம்மா வெற்றிக் களிப்பில் இருந்தார். அம்மம்மா தோற்கடிக்கப்பட்டார்.  அப்பா பாதிக்கப்பட்டார் . நாங்கள் பக்கவிளைவுகளானோம்.  அமைதி .., அமைதி .., அமைதி .., மயான அமைதி . அந்த விடுதியே விறைத்துப் போய் நின்றது

வெளியிலும்  ஒரு மழை பெய்து ஓய்ந்திருக்க வேண்டும்.  கட்டிடங்களில் நீர் நனைந்து தொங்கிக் கொண்டு இருந்தது. மெல்ல மெல்ல தூறலாக ஆரம்பித்து ஏங்கி நின்கும்  பூவுலகத்திற்கு பாலூட்டிப் போகும் வானாமிர்தமான ஒரு சிறு மழை பெய்து ஓய்ந்திருந்தது . ஆனால் அது எதற்கும் பலனின்றி  வந்த தடம் தெரியாமல் வடிந்து சாலை சாக்கடையில் விழுந்து  உவரிக்கடலை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது .

இப்போதெல்லாம் அப்பா எங்கே செல்கிறார் எங்கே சாப்பிடுகிறார். எதுவும் எங்களுக்கு தெரியாது . நான் அப்பாவை நினைக்காத வேளை இல்லை. இதனால் நானும் அம்மாவிடம் பேச்சு வாங்க ஆரம்பித்தேன். என்னை விவாகரத்து செய்ய அம்மாவிடம் சட்டம் ஏதும் இல்லை . நான் சாப்பிடும் போதும் , கணகணப்பாக போர்வைக்குள் சுகமாக தூங்கும் போதும் அப்பாவின் நிலை பற்றிய எண்ணம் என்னை துன்புறுத்தும் .

இந்த விவாகரத்திலும் அம்மா ஒரு விவகாரம் வைத்திருந்தார். எக்காரணம் கொண்டும் அப்பாவை அம்மம்மா வெளிநாடு அனுப்பும் வரை இது பற்றி அம்மம்மாவுக்கு தெரியப்படுத்தக்கூடாது என்பதே அது. விவாகரத்தன் முடிவிலும் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தும் அளவுக்கு அம்மாவுக்கு  அப்பாமேல் நம்பிக்கை இருந்திருக்கிறது .

அப்பா அவ்வப்போது எங்களை மட்டும் வந்து பார்த்து விட்டுப் போவார். அவர் வரும் போது நான் நிறைய சாப்பாடு போட்டுக்கொண்டு போய் கொடுப்பேன். என்னையே சில நொடிகள் பார்ப்பார். அந்தப்பார்வை     ' கடலில்  இருந்து உயிர் தோன்றி.. , பின் கரையேறி..., பின் மரமேறி.., வாலறுந்து..,   பின் முடித்தோல் இழந்து.., இந்த வாழ்வை அடைந்த.. இக் கணம் வரையான ; உயிர் தோன்றிய முழு பரிணாமத்தையும்  என்னுள் கடத்தும். அவரை முற்றும் அறிந்த ; இன்னும் நானே அவராகி  விட்ட ஒரு அந்தரங்க உணர்வு என்னுள் பிரவாகம் எடுக்கும் . ‘எல்லாம் தெரியும் அப்பா..’ என்பது போல் கண் மடல் அசைத்து சாப்பிடச் சொல்வேன். என் மகிழ்ச்சிக்காகவே சாப்பிடுவார். வாடியே கூடி நின்று வேடிக்ககை பார்க்கும். எதையும் கணக்கெடுக்காமல் என்னாலே சாப்பிடுவார்.

அம்மம்மா எரிந்து விழுவார் ‘ வெளிநாட்டுக்குத்தான் போகப்போகிறார் தனிய இருக்கலாம் இப்பவுமா மகளை விட்டுப்பிரிந்து இருக்கவோண்டும்’ என சாடை மாடையாக சொல்லிக்கொள்வார். அம்மாவும் அப்பாவை சலித்துக்கொள்வதுபோல் பெருமூச்சு விடுவார். இது எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு எங்களுக்காகவே அந்த உள்ளம் உயிர் தாங்கி உலாவியது.

அக்கா பொது விதி ஒன்றை கண்டுபிடித்தவள் போல் அப்பாவிடம்.

“ அப்பா... அம்மாவுக்கு விவாகரத்து கொடுத்தால் எங்களையும் பிரிந்து இருக்க வேண்டுமா.. ?" என்று
கேட்டாள்.

எந்த மனிதமும் இன்னொரு மனிதத்தை பார்த்து  சொல்ல கூடாத  ஒரு பேச்சை அம்மா சொல்லியிருந்தார் . அதை வேறு  வழி இன்றி அப்பா சொன்னார். ‘ அம்மாவுக்கு என்னை பார்க்க பிடிக்கவில்லையாம் செத்தாலும் பறவாய் இல்லை முகத்தில முளிக்க வேண்டாமாம்’  என்று தலையை கீழே போட்ட படி சொல்லி முடித்தார். அதை கேட்டதில் இருந்து அக்காவும் அம்மாபோல் ஆகிவிட்டாள். அம்மா பழம்  - என்றால் இவள் காய் என்பாள். காய் என்றால் இலை என்பாள். ஆனால் அம்மா அக்காமேல் பாசமாய் பொழிந்தார்.
>
> அப்பாவை - பார்த்து, பேசி , அவர் தோளில் ஏறி  காதை திருகி , பின் மடியில் விழுந்து  ,எழும்பி முத்தமிட்டு , விளையாடி இரண்டு மாதமாகி விட்டது . இப்போதெல்லாம்  எங்களை வீதியில் நின்று பார்த்து விட்டுப் போய்விடுகிறார் . ஏன் என்று ஆராய்ந்ததில் - அன்று அக்கா அப்பாவுடன்  பேசிவிட்டு அடுத்தநாள் அம்மாவை எதிர்த்தப் பேசியதும் . அம்மா அந்த  விடுதி உரிமையாளரிடம் அப்பாவை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று கூறியதாக உரிமையாளர் பேசிக்கொண்டு இருந்தது  என் காதில் விழுந்தது.

இப்போது அம்மாவே விரும்பினாலும் அப்பாவை பார்க்க முடியாது. இந்த நாட்டிலேயே அவர் இல்லை . ஆரம்பத்தில் அது நல்லதாகவே பட்டது  பெரும் குறையாக எங்களுக்கு இருக்கவில்லை . நாங்களும் மன்னார் வந்துவிட்டோம் . ஆனால் காலம் போகப் போக அப்பா மட்டும் இருந்தாலே போதும் என்று ஆகிவிட்டது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அம்மாவின் இரண்டாவது கணவரே முதல் காரணமாக இருந்தார்.

அம்மா அவரையே அப்பா என கூப்பிடும்படி சொன்னதும். அவர் எங்கள் அப்பாவை அவ்வப்போது குறை கூறுவதும். ஒரு நரக வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயத்தில் தள்ளிவிட்டது.

அப்பாவிடம் இருந்து பணம் மனம் போல் வந்து கொண்டே இருந்தது . அது ஒன்றைத்தான் பிள்ளைகள் பொருட்டு செய்ய முடியும் என்பதால் அவர் தாராளமாகவே செய்தார். அம்மாவின் திட்டம் அமோக வெற்றி அடைந்தது . அப்பாவை அம்மா பூரணமாக தெரிந்து வைத்திருந்தமையே இந்த வெற்றிக்கு  ஒரு காரணம். அதனால்  விரட்டி அடிக்கப்பட ஒரு கணவரின் உழைப்பிலும்  ,  இன்னொரு கணவரின் அரவணைப்பிலும் அவர் வாழ்க்கை பொங்கி வழிந்தது   . அவ்வப்போது இரண்டாவது கணவருடனும் வாக்குவாதம் நடக்கும் ஆனால் அடுத்த கணம் ஒற்றுமையாகி விடுவார்கள். இதை அம்மா - அவர் தன்மேல் அளவுகடந்த பிரியம் வைத்திருக்கிறார்-  என பீற்றிக்கொள்வார். ஆனால் அவரோ தான் வயிறு வளர்ப்பதோடு அவரது முதல் மனைவியையும் வெற்றிகரமாக பேணிக்காக்க  அப்பாவின் காசை அம்மா உடாக அம்மாவுக்கு தெரியாமல்  இறைத்துக்கொண்டு  இருந்தார் . “நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வளியோடி புல்லுக்கும் பொசிவது போல்”  .
அப்பா  எங்கள் மூவரின்  கைத்தொலைபேசிகளுக்கு   அழைப்பார் மணிக்கணக்கில் பேசுவோம் .

அம்மா பற்றிய எனது அபிப்பிராய பேதத்தை அப்பாவிடம் சொன்ன போது அவரின் பதில் என்னை கட்டிப்போட்டு விட்டது . ‘என்ன நடந்தாலும் அவர் உங்கள் தாய். நானே அவரை மன்னித்து விட்டபின் நீங்கள் அம்மாவுடன்  எந்த விவாதத்திற்கும் செல்லக்கூடாது. அவர் விருப்பப்படி அவரை வாழ விடுங்கள். எந்த தொந்தரவும் கொடுக்க வேண்டாம். இந்த வாழ்க்கைகாக அவர் நிறைய போராடி இருக்கிறார்’     என்று உறுதியாக கேட்டுக்கொண்டார்.

இதை அக்கா செவி மடுக்க வில்லை. பதிலுக்கு பதில் கேட்டு விடுவாள். தம்பி அம்மாவின் செல்லப் பிள்ளை அவனுக்கு அப்பாவை நேரில் பார்த்தது பற்றி  ஞாபகம் இல்லை.  இது  அவர் மேல் பாரிய ஈடுபாட்டை அவனுக்கு ஏற்படுத்த வில்லை. இவரையே அப்பா என அவ்வப்போது கூப்பிடவும் செய்தான். என்னால் அப்பாவின் சொல்லை மீற முடியவில்லை . அப்பாவிற்கு அருகில்  இருந்து தவிச்ச விடாய்க்கு ஒரு செம்பு தண்ணி எடுத்துக் கொடுக்க முடியவில்லை . அவர் கேட்டு எதை செய்து கொடுத்து விட்டேன் . இதை இறுதி வரை நிறைவேற்றினேன். என்ற பெயரையாவது அவரிடம் பெற்று விட வேண்டும் என்ற விருப்பில் அம்மாவின் பேச்சுக்கெல்லாம் தலை ஆட்டினேன். இப்படியே காலம் ஓடியது.

சிறிது காலம் அப்பா மகிழ்ச்சியாக இருக்க உதவியவர் என்ற ஒரு காரணத்தை விட எனக்கு அம்மா மேல் எந்த அபிமானமும் இல்லை இதை அவரும் அறிவார் . அதனாலேயே பல தருணங்களில் 'நீங்கள் என்னை அல்ல - அப்பாவையே முன்மாதிரியாக கொள்ள வேண்டும் ' என  கூறிக்கொள்வார்.

அம்மாவோடு அப்பா வாழ்ந்த அந்த   காலத்தை அப்பா இப்போது எப்டிப்பார்க்கிறார் என்று தெரியவில்லை . அனால் அவர் உண்மையான அன்புடனே இருந்தார் . அவர் இந்த இருபது வருடமாக அம்மாவுடன் பேசாது இருந்தாலும்   அக்கறை இல்லாமல் இருக்கவில்லை . அது எங்களுக்காகவும் இருக்கலாம் அல்லது அப்பழுக்கு இல்லாத  ஒரு தெளிந்த மனித நேயமாகக் கூட இருக்கலாம்.

அக்கா ஒருவரை  காதலித்து  திருமணம் செய்து கொண்டார் . அந்த திருமணத்தில் அம்மாவால் ஒரு ரகளையே உருவாக்கி விட்டது . பெண்வீட்டாருக்கு  தந்தை வெளிநாட்டில் என்றும் , மாப்பிள்ளை வீட்டாருக்கு  தனது தற்கால கணவரையே தந்தை என்றும் கூறி விட்டர் . ஒரு கட்டத்தில் குட்டு உடையவே  பெரும் குழப்பமாகி விட்டது . காதல் திருமணம் என்பதால்  மாப்பிள்ளை அக்காவின் கழுத்திலேயே தாலி கட்டினார் .

தம்பிக்கும் அப்பாவின் உறவுக்காற பெண்ணை பேசி திருமணம் முடிந்து வைத்தார்  அப்பா . எனக்கு இப்போது  வேண்டாம் என்று செல்லி விட்டேன்.<

இப்போது வீட்டில் நானும் அம்மாவும் தான். புதிய கணவர் - மறைத்து வைத்த அந்த முதல் மனைவி பற்றிய  சமாச்சாரம் அம்மாவுக்கு தெரிய வந்ததும் பிரிந்து போய் விட்டார். திரும்பியும் வந்தார் ஆனால் அம்மா திருப்பி அனுப்பி விட்டார்.

இப்போது அம்மாவுக்கு  பக்தி முத்தி பரவசமடைந்து காணாத பாம்புகளுக்கும் , கண்ட கண்ட பாறாங்கல்லுக்கும் பாலாய் வார்க்கிறார்.

முன் நெற்றியில் ஒரு நரைமுடியை  கண்டதில் இருந்து இந்த பாலாபிசேகம் ஆரம்பித்திருக்கிறது. அவ்வப்போது கண்ணாடி முன் நின்று அந்த முடியை மணிக்கணக்கில் பார்க்கிறார். ஒருவேளை பாலூற்றினால் பழைய முடி திரும்ப கிடைத்து விடும் என்று குருவி யோசியம் சொன்னதோ என்னவோ ? .

விதரங்களை வலை வீசி பிடித்து அனுட்டிக்கிறார். அய்யர் வேசத்தில் வரும் ஆண்டிகளின் கால்களிலும் விழுந்து எழும்புகிறார்.

நான் அப்பாவோடு  மனம் விட்டு விடயங்களை கிலாகிப்பது போல் அம்மாவுடன் பேசுவதில்லை.  "  ஆம்...",   "இல்லை  " . அதற்கு மேல் இல்லை .

நான் திருமண வயதை தாண்டியும் இப்படி தனியே இருப்பதை நினைத்து - இப்படி கோயில் கோயிலாக  வேண்டுதல் வைத்து ஏறி இறங்குவதாக  மற்றவர்களிடம் பேசிக்கொள்கிறார். - திருமணம் முடித்தும் அப்பாவை பிரமச்சாரியாக ஆக்கிய இவருக்கு திருமண பந்தம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என எனக்குள்ளே கேட்டுக்கொள்வேன்.

என்னை கடையில் சாப்பிடச்சொல்லிவிட்டு இல்லாத கோயில்கள் தேடி அலைகிறார். எனக்கு உள்ளூர  சிரிப்பு . அப்பாவின் அருமையும்  தன் தவறும் தெரிந்து இப்படி பாவ மன்னிப்பு கேட்டு அலைகிறார்..? ஏழு யென்மத்திற்கு போதுமான பாவம் செய்து விட்டார் . இந்த வாழ்க்கையில்  இவர் எதையும் இழக்கவில்லை . அதனால் இவர் மேல் எனக்கு எந்தவித அனுதாபமும்  இருந்ததில்லை . ஆனால் அன்று இருந்த அதே அப்பாதான் இன்றும். யாரிடமும் அதை அவர் அடைவு வைக்கவில்லை என்பதில் இருந்து  அவர்  அவ்வளவு ஆழமாக எங்களை நேசித்திருக்க வேண்டும் என்பது புரிந்தது.
வெறும் சதை பிண்டங்களுக்கு ஆசைப்பட்டு காதலையும் அதன்பால் விழையும் வாழ்வையும் புத்திர பாசத்தையும் அவர்  கலப்படம் செய்யவில்லை. நம்பிக்கை  என்பது கனவாய் போக கற்பனையே வாழ்க்கை என வாழ்பவர்.

நான்  நாள் முளுக்க இப்படி அப்பாவின் ஞாபகத்திலேயே கரைகிறேனே.  நேற்று இந்த செய்தி வந்ததில் இருந்து . என்னால் அப்பாவை நினைப்பதை விட வேறு எதுவும் நினைக்கத்தோன்ற வில்லை. அக்கா அத்தான் , பிள்ளையுடன் வந்திருந்தார்.  தம்பியும் , மனைவியும் வந்து விட்டார்கள். இதை விட அப்பா உதவி செய்தசெய்தவர்கள் ஒவ்வெரு உதவியை பிரேரித்துக் கொண்டு அவரின் முகம் தெரியாதவர்கள் கூட ஒரு முறை  நேரில் பார்த்து விட வேண்டும் என  வந்திருந்தார்கள். அவர்களுக்கு அப்பா அனுப்பிய படங்களை காட்டினேன். அகல விழித்துப் பார்த்தார்கள். அப்பாவைப்பற்றி  என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். எனக்கோ - அவர்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரிய வில்லை . இனம் புரியாத பாரம் ஒன்று இதயத்தை அழுத்தியது . இமைகளால் சரி செய்தேன் கண்ணீர்  அரும்பியது .

என் தெய்வத்தின்  பிரேதத்தைக்கூட பார்க்க முடியாத பாவியாகி விட்டேன்” என்று சவுதியில் கட்டுமான பணியின் போது விபத்திற்க்கு  உள்ளாகி  சிதைந்த அப்பாவின் பிரேதப் பெட்டியை கட்டிக்கொண்டு கதறி   அழுதார் அம்மா.
- பசுந்திரா
Nov 2013

Wednesday, November 13, 2013

ஆழ நட்ட வாழை

- பசுந்திரா

11 வயது நிரம்பிய கரனைப் பார்ப்பவர்கள் எட்டு வயதே மதிப்பார்கள். ஆனால் அவனோ அந்த 18 ,19 வயது இளைஞர்கள் மூவரின் பின்னால் கையில் ஒரு தடியை பாதையெங்கும் இழுத்துக் கோடு போட்ட படி நடந்துகொண்டு இருந்தான்.

அவனுக்கு நினைவு தெரிந்த இத்தனை வருடத்தில் இதுவே முதல் தடவையாக வேலைக்குப் புறப்பட்டு இருக்கிறான். பெரிதாக ஒன்றும் வெட்டிப் புடுங்கும் வேலை இல்லை. இது ஒரு எட்டிப் புடுங்கும் வேலை. புடுங்குவதும் தேங்காய் மாங்காய் இல்லை. வெறும் பூ. அவன்  இந்த வேலைக்குப் போக பல காரணங்கள் உண்டு. ஆனால் ஒரு தகுதியும் இல்லை.

ஊரில் இருக்கும் போது அவனது தந்தை வாழை நாட்டுவதற்காக ஆழமான கிடங்கு வெட்டி நடுவே வாழைக்குட்டியை வைத்து இவனைப் பிடித்துக் கொள்ளும் படி கூறி மண்ணைப்  போட்டு மூடுவார் .
வாழைக் குருத்து அவனது வண்டியோடு முண்டிக்கொண்டு நிற்கும். புதிதாக வரும் குருத்துக்களை  விரியமுன்  கிழித்து விடுவதில் பேரானந்தம் அடைவான்.

ஒரு நாள்  “ ஏனப்பா இவ்வளவு ஆழமாக கிடங்கு வெட்டி நடுகிறீர்கள், சின்னச் சின்ன கிடங்கு வெட்டி நடலாமே ?” என்று கேட்டதற்கு   - “ வாழை ஆழ நடு தென்னை தெரிய நடு” – என்று தந்தை கூறிய வேத வாக்கை நம்பி இந்த வாழைப் பொத்தி பிடுங்கும் வேலைக்குச் சேர்ந்து கொண்டான். ஆனாலும் வாழையை நினைக்க வயிற்றைக் கலக்கிக் கொண்டு வந்தது.
அப்பாவிற்குத் தெரிந்தது இங்குள்ளவர்களுக்கும் தெரிந்து இவர்களும் வாழையை ஆழ நட்டிருந்தால் மட்டுமே வாழைப் பொத்தி இவனுக்கு எட்டும். ‘ஒரு வேளை வாழைப் பொத்தி எனக்கு எட்டாவிட்டால் என்ன செய்வது எதற்கும் முன்னே போகும் ஒருவரிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டால் என்ன.’ என்று எண்ணுகையில் தம்பி றமாவின் வாடிய முகம் கண்முன் தோன்றியது.

‘பெரிதாக என்ன வந்து விடப்போகிறது – ஒன்றில்  “சீ..... நீ இந்த வேலைக்குத் சரி வர மாட்டாய், போய் கொஞ்சம் வளர்ந்தாப்பிறகு  வா “ என்று சொல்லுவார்கள். அல்லது  “இந்தத் சின்னப் பயலை ஏனடா கூட்டிவந்தனீங்கள் “ என்று இதோ முன்னுக்குப் போகிறார்களே இவர்களுக்கு பேச்சு விழும் அவ்வளவுதான். ஆனால் அவர்களோ அதுபற்றி எந்த கவலையும் கொண்டதாக தெரியவில்லை. என்னையும் அவர்களில் ஒருவனாக நினைத்து வேலைத்தலம் நோக்கி நடந்து கொண்டு இருக்கிறார்கள். நானாக ஏன் குட்டையை குழப்புவான்’ என்று மௌனமாக இருந்து விட்டான்.

முன்பு தந்தையின் விரலைப் பிடித்துக்கொண்டு நடக்கும் போது சிறிது தூரம் நடந்தாலே   “கால் நோகுதா ? “ என்று கேட்டு விட்டு தூக்கித் தோளில் சுமந்து கொண்டு நடப்பார். அது எல்லாம் என்றோ ஊரோடு முடிந்து விட்டது.

கரனுக்கும் அவனது தம்பி றமாவிற்கும் ஏழு வயது வித்தியாசம் அதனால் கரனுடன் கூட விளையாடுவதற்கு வீட்டில் யாரும் இல்லை. சில சமயங்களில் மூன்று வயதான தம்பியையும் நாய்க்குட்டியையும் சேர்த்து விளையாடுவான். நாய் இவனைத் துரத்தும். பின் இடை நடுவில் நாய்க்குட்டி தம்பியைத் துரத்த அவன் விழுந்து எழும்பி வீரிட்டுக் கத்தி இறுதியில் அம்மா  தடியோடு இவனைத் துரத்தி வருவதுடன் அந்த விளையாட்டு முடிவுக்கு வரும்.

ஒரு வருடத்திற்கு முன் வவுனியா பூவரசங்குளத்தில் இருந்து நாட்டுப் பிரச்சனையால் இடம் பெயர்ந்து ஓமந்தைப் பாடசாலைக்கு வந்த போது கரனின் சந்தோசத்திற்கு அளவே இல்லை. எத்தனை நண்பர்கள். பலரது  பொயர்களைக்கூட ஞாபத்தில் வைத்திருக்க முடியவில்லை. பூவரசங்குளம் கிராமமே அந்தப் பாடசாலையில் தானே தஞ்சமடைந்து இருந்தது.

பாடசாலை, வீட்டுப்பாடம், சாப்பாடு, கொஞ்ச நேரம் விளையாட்டு என்ற வழக்கம் அகதி முகாமிற்கு வந்ததும் தலை கீழாக  மாறி,  விளையாட்டின் நடுவிலே ஓடிப்போய் சாப்பிட்டு விட்டு வந்து மீண்டும் விளையாட்டை முழுநேரமாகச் செய்து கொண்டு இருந்தான். வேறு எந்த வேலையும் இல்லை. இவ்வளவு ஏன் அம்மா அப்பா கூட அரை வாசி நேரம் வகுப்பறை வாசலில் இருந்தபடி இவர்களின் விளையாட்டைத்தானே பார்த்தக்கொண்டு இருந்தார்கள்.

ஆனால் அந்த வாழ்க்கையும் அப்பா  பூவரங்குளத்தில் இருந்த அவர்களது வீட்டைப் பார்க்கப்போய் திரும்பி வராமல் காணாமல் போனதில் இருந்து தொலைந்நு போனது. அன்றில்  இருந்து அம்மாவும் ஒடிந்து போய் அடிக்கடி நோயில் படுத்தார்.  தம்பியை இடுப்பில் வைத்தபடி மற்றவர்கள் விளையாடுவதை அவ்வப்போது எட்டிப் பார்ப்பான்.
 
ஓமந்தையிலும் இருக்கமுடியாமல் மீண்டும் இடம் பெயர்வு.  இடம் பெயர இடம் பெயர இருக்கும் பொருட்களும் ஒவ்வொன்றாக அவர்களை விட்டு இடம் பெயர்ந்தது. தந்தை  தூக்கி வந்த சில பாரமான பொருட்களை தாயால் கொண்டு வர முடியாமல் போக அங்கேயே விட்டு விட்டு கிளிநொச்சியில் உள்ள -கோணாவில் காந்திக் கிராமம் - எனப்படடும் இந்த அகதி முகாமிற்கு வந்து சேர்ந்து இரண்டு மாதம் ஆகிறது. இங்கே அகதி சாமான் என்று  அரிசியும் பருப்புமே தருவார்கள். மீதி எல்லாம் கடையிலேயே வாங்க வேண்டும் . வீட்டில் ஆம்பிளை உள்ளவர்கள் அயல் அட்டையில் வேலைக்குப் போவார்கள். அம்மாவும் அவ்வப்போது ஏதாவது வேலைக்குப் போய் வருவார். கடந்த ஒரு மாதமாக அவரால் முற்றாக முடியாமல் போய் விட்டது.

அம்மாவிற்கு அம்மாள் வருத்தம்.  உடல் நிலை மேலும் மோசமாகியது. தம்பி அம்மாவிற்குக் கிட்டையும் போக முடியாது. வருத்தம் தொத்தி விடுமாம்.  அவரால் எழுந்திருக்கவே முடியவில்லை. இதில் சமைப்பது எப்படி. வீட்டில் அரிசி சேடம் இழுக்க பருப்பு  உயிரை விட்டிருந்தது. அதனால் அம்மா சொல்லச் சொல்ல இவனே கஞ்சி காச்சுவான்.

அந்த வெறும் கஞ்சியிலேயே மூவரின் உயிரும் தங்கி நின்றது. கஞ்சி என்றால் தம்பி நல்லாக் குடிப்பான். ஆனால் ஒருக்கா மூத்திரம் போய் வந்து விட்டால் மீண்டும் அழ ஆரம்பித்து விடுவான் . அம்மாவும் அந்தக் கஞ்சியோடயே  நாள் முழுக்கப் பாயில் கிடப்பார். சில சமயம் காச்சல் வாய்க்கு குடித்த கஞ்சியையும் சத்தி எடுத்து விடுவார்.

ஒவ்வொரு நாளும் அம்மாவின் அம்மை வருத்தத்திற்கு முத்து மாரியம்மன் தாலாட்டு பாட வரும் நாலாம் கொட்டிலில் வசிக்கும் அருமைநாயகம் ஐயா ‘ஏதாவது நல்ல சாப்பாடாய் சாப்பிடு பிள்ளை’ என்று சொல்லி விட்டுப் போகிறார். ஆனால் அதற்கு கையில் காசு இருக்க வேண்டுமே.

முகாமிற்கு முன்னால் இருக்கிற கொட்டில் கடையில் பாண் பணிஸ் இடியப்பம் என பல வகை வகையான சாப்பாடுகள் வரும் அம்மாவையும் தம்பியையும் நினைத்த படி அவற்றை பார்த்துக் கொண்டு நின்று விட்டு வருவான் கரன் . தம்பிக்கு பணிஸ் என்றால் கொள்ளை பிரியம் யாரும் வேண்டிச் சாப்படுவதை கண்டு விட்டால் காட்டிக் காட்டி அழுவான். பணிசுக்குப் பதிலாக காக்கா ,குருவி ,அணில் போன்ற வற்றை தேடித் தேடிக் காட்டுவான் கரன்.  ஓடும் அணிலைப் பார்த்தால் சிரிப்பான் அது ஒரு இடத்தில் நின்று விட்டால் அழுவான் .

இந்த நிலையில் தான் கரன் தானும்  வேலைக்கு வருவதாக சேர்ந்து கொண்டான் . மண்ணில் வேலை என்றால் செய்யலாம் அனால் இது மரத்தில் வேலை அதுவும் கொப்பில்லாத மரத்தில் . இழுத்துக்கொண்டு வந்த தடியை மீண்டும் ஒருமுறை தூக்கிப் பார்த்துக்கொண்டான் . ஒரு வேளை இவன் பயந்தது போல வாழைப் பொத்தி எட்டாது போனால் இந்த தடியால் தட்டிப்பிடுங்கி விட வேண்டும் என்பது அவனது இன்னொரு திட்டம்.

கோணாவில் நல்ல செழிப்பான கிராமம் இந்த மண்ணில் எவ்வளவுதான் விழுந்து புரண்டாலும் உடலில் அழுக்கு பிரளாது வெள்ளை வெளேரென்ற மணல் மண். தோட்டத்திற்கு உகந்த மண் . அக்கராயன் குளத்து நீர் கோணாவில் கிராமத்தையும் சோலையாக்கிக் கொண்டு இருந்தது. நாலா புறமும் தென்னை ,பாக்கு, மா ,பிலா போன்றவற்றோடு வாழைத்தோட்டங்களும்  வயல்களுமாக பச்சைப் பசேல் என்று இருக்கும்.
அவ்வப்போது அங்குள்ள  வாழைதோட்டங்களில் பொத்தி , வாழைக்குலை , வாழையிலை பிடுங்கி ஸ்கந்தபுரம்  சந்தையில் விற்பதற்கு என பலர் அகதி முகாமில் உள்ளவர்களை வேலைக்கு அழைப்பது வழக்கம். அப்படி நாலு போர் வேண்டும் என்று கேட்டதாலேயே கரன் தானும்  வருவதாக கூறி வந்து விட்டான் .

முருகன் கோயில் தாண்டி இருந்த பெரிய வாழைத் தோட்ட சோலைக்குள் முன்னால் சென்ற மூவரும் நுழைந்தார்கள். கரனும் நுழைந்து படலையை சாத்திக் கொண்டான். படலையை தாண்டியதும் குறுக்காக ஒரு வாய்க்கால் சென்றது. இரவு அதனூடாக தண்ணீர் பாச்சியிருக்க வேண்டும் வாய்க்காலில் சேறு படிந்திருந்தது. கொண்டு வந்த தடியை வாய்க்கால் நடுவே ஊன்றி எம்பி குதித்து மறு கரைக்கு தாவினான்.

கம்பு குத்தியபடி நின்றது கரனை காணவில்லை முன்னால் போனவர்களில் ஒருவன் கரன்... கரன் ...”  என்று கூப்பிட்டான். உடம்பெங்கும் சேற்று மண்ணுடன் வாய்க்காலில் இருந்து எழும்பினான் கரன். அவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை

சும்மா கடக்கிற வாய்க்காலை ஏனடா கம்பு குத்திக்கடந்து விழுந்து எழும்புகிறாய்” என்று விட்டு உரப்பையை எடுத்துக்கொண்டு வாழை மரங்களை அண்ணாந்து பார்த்தபடி  ஆளுக்கு ஒரு திசையில் நடந்தார்கள்.

வாழைக்கயர் படும் என சேட்டு போடாமல் வந்ததால் கணிமண்ணில் இருந்து சோட்டு தப்பியது என எண்ணியபடி பெரும் கஸ்டத்தின் மத்தியில் குத்திய தடியை பிடுங்கி எடுத்துக்கொண்டு முடிந்தவரை மண்ணை துடைத்து விட்டு காவல் கொட்டிலில் இருந்து ஒரு பையை எடுத்துக்கொண்டு  வாழைப்பொத்திகளை தேடி நடந்தான் கரன்.

எந்த வாழை மரமும் அவனை வாழ வைப்பதாக தெரிய வில்லை. எட்டாத உயரத்தில் பொத்திகள் தொங்கின. ஒரு சில பொத்திகள் எட்டிய போதும் அவை பல காலங்களாக முறிக்காமல் விட்டு பூத்துக் கொட்டி  பொத்தியும் சூம்பி வாழைக்காய் அளவிலேயே  இருந்தது.  அவற்றை முறித்து எறிய  வேண்டுமே தவிர சந்தைக்கு கொண்டு செல்ல முடியாது.

அப்பா சொன்னது போல்  - இங்கே எந்த வாழையையும் ஆழ கிடங்கு வெட்டி நட்டதாக தொரிய வில்லை . கொண்டு வந்த தடியால் பொத்தியை குத்தி முறிக்கப் பார்த்தான் . பொத்தி மாட்டேன் என்று குலையோடு சேர்ந்து தலையை  ஆட்டியது .  வாழைக்குலையில் தடி குத்தி காயம் பட்டு காய் கண்ணீர் விட்டு அழுதது.

சற்றே சரிந்து நின்ற ஒரு மரத்தில் இருந்து பகீரதப்பிரயத்தனத்தின் பின் ஒரு பொத்தி பிடுங்கி விட்டான். குறைந்தது 20 பொத்தி பிடுங்கினால் தான் அந்த பை நிறையும்.

அந்த ஒரு பொத்தியுடன் பையை இழுத்துக்கொண்டு எட்டாத பொத்திகளுக்கு கொட்டாவி விட்டபடி எட்டும் உயரத்தில் பொத்தி தேடி அலைந்தான். ஆனால் மற்றைய மூவரும் அரை வாசி பையை நிரப்பிவிட்டார்கள்.

இந்த ஒரு பொத்திக்கு என்ன கூலி தருவார்கள் அதைக்கொண்டு ஒரு பணிசாவது  வாங்கிவிட முடியுமா என எண்ணியபடி நடந்தான். ஒருவன் அவனிடம் வந்து பையை பார்த்து சிரித்து விட்டு எத்தனை பொத்தி புடுங்கினாய் கரன் ? ” என்றான்.

“கனக்க பொத்தி கண்டு வச்சிருக்கிறேன் ஆனா ஒண்டுதான் புடுங்கினனான்” என்றான் தலையை பையினுள் ஓட்டி அந்த பொத்தியை பார்த்தபடி வந்தவன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான். பின்  “இனி என்ன செய்யப்போகிறாய் ? ” என்றான்.  “ என்னை தூக்கிப் பிடிச்சால் மள மளவென்று பிடுங்குவேன் “ என்றான். அப்பா தூக்கிப் பிடிக்க பப்பாப்பழம் பிடுங்கிய ஞாபகத்தில்.  வந்தவன் ஓடியே விட்டான் .

பையை கீழே போட்டு விட்டு அதன்மேல் இருந்தபடி ‘என்னண்டு இந்த பொத்திகளை புடுங்கலாம்’ என ஒரு அழகிய பொத்தியை பார்த்துக் கொண்டு யோசித்தான். அந்த பொத்தியின் ஒரு இதழ் மெல்ல விரிந்து இருந்தது. உள்ளே வாழைப்பூவில் இருந்த தேனை குடிக்க முடியாமல் ஒரு வண்டு சற்றிச் சுற்றிப் பறந்தது கொண்டிருந்தது . ஏதோ சிந்தனையில் தோன்ற திடீரென எழுந்து அந்த மூவரையும் தேடி ஓடினான்.

அவர்கள் மூட்டையை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு நடந்தார்கள்.
“உங்கள் மூவரினின் பைகளையும் ஓர் இடத்தில் வைத்துவிட்டு பொத்தியை பிடுங்கி என்னிடம் தாருங்கள் நான் ஓடி ஓடி அவரவர் பையில் போட்டு விட்டு வருகிறேன் நீங்கள் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை “ என்றான் மூச்சு வாங்கியபடி .

அவர்களுக்கும் அது நல்ல யோசனையாகவே பட்டது   ஆனால் அதற்காக இவனுக்கு என்ன கூலி கொடுப்பது என்று யோசித்தார்கள். இறுதியில் எந்த முடிவிற்கும் வராமலே அவனிடம் பொத்திகளை முறித்து கொடுத்தார்கள் அவனும் ஓடி ஓடி அவரவர் பையில் போட்டுவிட்டு வந்தான். கூடவே வழியில் கண்ட பொத்திகளை அவர்களுக்கு கூப்பிட்டுக் காட்டினான் . சற்று நேரத்திலேயே மூவரினதும் அந்த உரப் பை நிரம்பி விட்டது.

நேரம் மதியம் மூன்று மணியாகிக் கொண்டிருந்தது  அந்த மூவரையும் விட அவனே கழைத்து விட்டான் காலை குடித்த கஞ்சி செமித்து பசி எடுத்தது.
அவனது பை மட்டும் அந்த ஒரு பொத்தியுடன் தவம் கிடந்தது. மூவரில் ஒருவன் “இனி முறிக்கும் பொத்திகளை  உன் பையில் போடு” என்றான்.
கரனின் முகத்தில் முழுச் சந்திரன் பிரகாசித்தான். அவர்கள் முறித்து தந்த பொத்திகளை தனது பையினுள்  போட்டான். இருந்தும் என்ன பயன் தோட்டத்தில் இருந்த பொத்திகள் முழுவதும் பறிக்கப்பட்டு விட்டது.

“ இவ்வளவுதான் இனி இல்லை  வாங்கோ தோட்டக்காற  ஐயா வரும் வரைக்கும் அதில போய் இருப்போம்” என்றபடி ஒருவன் காவற்கொட்டிலை நோக்கி நடந்தான் . மற்றவர்களும் அவனை பின் தொடர்ந்து சென்றனர். கரன் ஒவ்வொரு வாழையாக அண்ணாந்து பார்த்தபடியே பின்னால் நடந்தான் .
ஒவ்வெருவரும் தத்தம் மூட்டைகளோடு முதலாளிக்காக காத்திருந்தார்கள். கரனின் பையில் ஆக எட்டு பொத்திகளே இருந்தது .

தோட்டக்காரரும் வந்தார் “எத்தனை மூட்டை ? ” என்று கேட்டார். அந்தக் குழுவின் தலைவன்  “ மூன்று மூட்டை “ என்றான். “அந்தப் பையில் எத்தனை?” என்று கரனை பார்த்துக் கேட்டார். உற்சாகமான குரலில்  “ எட்டு பொத்திகள் ஐயா ” என்றான் கரன்.

எல்லோருக்கும் பொதுவாக முப்பது ரூபாயை ஒருவனிடம் கொடுத்து விட்டு கரனின் பையில் இருந்த எட்டு பொத்திகளையும் ஆளுக்கு இவ்விரண்டாக பிரித்து எடுக்குமாறு  கூறி விட்டு தோட்டக்காரர் சென்று விட்டார்.
கரன் மாறி மாறி மூவரின் முகத்தையும் பார்த்தபடி நின்றான்.

“இந்த மூன்று மூட்டைக்கும் தான் முப்பது ரூபாய் தந்திருக்கிறார் . கரன் அந்த எட்டுப் பொத்தியையும் நீயே எடுத்துக் கொள் எங்களுக்கு வேண்டாம் நாங்கள் காசை பிரித்து எடுத்துக்கொள்கிறோம் ” என்றான்  குழுவின் தலைவன்.
கரனின் பணிஸ் கனவு மெல்ல கரைய ஆரம்பித்தது கண்கள் நீரரும்ப தொண்டை வரை துக்கம் முட்டியது ஓ என்று அழுது விட வேண்டும் போல் இருந்தது . எதையும் காட்டிக் கொள்ளாமல் சரி என தலையை ஆட்டி விட்டு அந்த எட்டுப் பொத்தியோடு வீடு வந்தான்.

களி மண் உடலெங்கும் புரண்டபடி வாழைப் பொத்தியுடன் வந்த மகனைப் பார்த்து படுக்கையில் கிடந்தபடியே கண்ணீர் வடித்தார் அம்மா.

அன்று முளுவதும் தம்பியை பார்த்துக்கொண்டு இருந்த பக்கத்து வீட்டு அக்காவிடம் ஒரு பொத்தியை கொடுத்தான். அம்மாவுக்காக மாரியம்மன் தாலாட்டு பாட வரும் ஐயாவுக்கும் ஒரு பொத்தியை கொடுத்தான் . இரண்டு பொத்திகளை வீட்டில் வைத்து விட்டு . மீதி நான்கு பொத்திகளுடனும் அந்த பெட்டிக் கடையை நோக்கி  ஓடினான் .

கடையில் இருந்த அந்த கண்ணாடிப் பெட்டியில் இன்னமும் மூன்று பணிஸ் மீதியாக இருந்தது . அந்த பெட்டியையும் தன் கையில் இருந்த பொத்தியையும் கடை முதலாளியையும் மாறி மாறி பார்த்தபடி நின்றான்.

“என்னடா வேணும் ? ” என்றார் முதலாளி.

எதுவும் பேசாது ஊமையாக நின்றான்.

மீண்டும் சற்று உரத்த தொனியில்  “என்னடா வேணும் ? ” என்றார்  முதலாளி.

அவரது பெறுமாத வண்டியை பார்த்த படியே “ உங்களுக்கு வாழைப்பொத்தி வேணுமா ? ” என்று கேட்டான்

“ எங்க காட்டு பாப்பம் “ என்றார்.   பையை எட்டிக் கொடுத்தான் .

“பறவாய் இல்லையே பொத்தி வாடாம நல்லாத்தான் இருக்கு இப்பதான் புடுங்கி இருக்குப்போல சரி என்ன விலை ? “ என்றார்.

அவன் அந்த கண்ணாடிப் பெட்டி பணிஸையே பார்த்தபடி நின்றான்.  நான்கு பொத்திகளையும் எடுத்து முட்டைக்கோவாவிற்கு அருகில் வைத்து விட்டு பையை அவனிடம் கொடுத்தார். பின் ஒரு பொத்திக்கு இரண்டு ரூபா வீதம் எட்டு ரூபா காசை மடித்து அவனின் உள்ளங் கையில் வைத்தார். அவனின் கண்கள் அந்த கண்ணாடிப் பெட்டியை விட்டு அகலவில்லை  காசோடு கையை மேசையில் வைத்தபடி  சிலையாய் நின்றான். முதலாளி அந்த மூன்று பணிசையும் ஒரு சரையில் சுத்தி அவனிடம் கொடுத்து விட்டு.

“ உன் பொத்திக்கு இதை விட நல்ல விலை யாரும் தர மாட்டார்கள் ” என்று கூறினார்.

பையை கமக்கட்டில் வைத்துக் கொண்டு இரு கையிலும் இருந்த பணிசையும் காசையும் மாறி மாறி பார்த்தபடி வீடு நோக்கி ஓடினான்.

- பசுந்திரா -

கனகலிங்கம் சுருட்டு

- குரு அரவிந்தன்  

ஒருவருடைய பெயரை வைத்துக் கொண்டு அவருடைய காலத்தைக் கணிக்க முடியுமா என்று சில சமயங்களில் நீங்கள் யோசிக்கலாம். முடியும் என்று நாங்கள் நம்பினோம். ஒரு காலக்கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரேவிதமான முடிவுள்ள பெயர்களைத்தான் பெற்றோர் சூடினார்களோ தெரியவில்லை, அப்படியான தமிழ்ப் பெயர்களை வேறு பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்களிடம் அதிகம் கேள்விப்பட்டதில்லை. கந்தையா, பொன்னையா, செல்லையா, சின்னையா, இராசையா, முருகையா, அழகையா என்று இப்படியான எல்லாப் பெயர்களும் யகர வரிசையில் முடிவதாகவும், பொன்னுத்துரை, சின்னத்துரை, செல்லத்துரை, கண்ணுத்துரை, ராசதுரை, அருமைத்துரை என்று துரையில் முடிவதாகவும் இருந்தன. வேறு ஒரு காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கு சிவலிங்கம்,
கனகலிங்கம், இராமலிங்கம், யோகலிங்கம், சந்திரலிங்கம், கணேசலிங்கம் என்றும், கொஞ்சக் காலம் கழித்துப் பிறந்தவர்களுக்கு சிவராசா, தவராசா, நடராசா, வரதராசா, ஜெயராசா, குணராசா, யோகராசா என்று எல்லாமே ராசாவில் முடியும் பெயர்களாயும் இருந்தன. பெண்களுக்கும் இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, யோகேஸ்வரி, சிவனேஸ்வரி என்று பெயர்கள் இருந்தன. இப்படியான பெயர்களை வைத்துக் கொண்டே ஆணும்சரி, பெண்ணும்சரி அவர்கள் எந்த காலகட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், வயதைக் கேட்காமலே குத்து மதிப்பாக அவர்களின் வயது என்னவாக இருக்கும் என்றும் ஓரளவு எங்களால் கணிக்க முடிந்தது.

கொழும்பிலே உள்ள மகாராஜா நிறுவனத்தில் நான் கடமையாற்றிக் கொண்டிருந்த போது இப்படியான பெயரைக் கொண்ட ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒருநாள் காலை நேரம் நிர்வாக இயக்குநர் என்னைத் தனது அறைக்கு வரும்படி அழைத்திருந்தார். பொதுவாக நிதிநிர்வாகம் பற்றித்தான் நாங்கள் அவரோடு கலந்து உரையாடுவோம். ஏன் அவசரமாக அழைத்தார் என்ற சிந்தனையோடு அவரது அறைக்கு நான் சென்றபோது, அவருக்கு எதிரே வாட்டசாட்மாக ஒருவர் அமர்ந்திருந்தார். என்னைக் கண்டதும் எனக்கு அவரை அறிமுகப் படுத்தி வைத்தார்.
‘மீட் மிஸ்டர் பொன்யா’ என்றார் நிர்வாக இயக்குநர்.

பெயரைக் கேட்டு ஒரு கணம் நான் திகைத்தாலும் அது பொன்யா அல்ல பொன்னையாவாக இருக்கலாம் என்று அவரது தோற்றத்தைக் கொண்டு மனதுக்குள் கணித்துக் கொண்டேன். இங்கே இதுவரை புதிதாக வேலைக்கு வந்தவர்கள் எல்லாம் இளைஞர்களாகவும், நவீன பெயர்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர். இப்படியான பெயரைக் கொண்ட ஒருவரை அன்று அங்கே சந்திக்க வேண்டி வரும் என்று நான் எதிர் பார்த்திருக்கவில்லை

‘ஹலோ’ என்று பொக்கைவாய் தெரியச் சிரித்தார். இருவரும் கை குலுக்கிக் கொண்டோம்.

அவரோ ரைகட்டி கோட்சூட் அணிந்திருந்தார். அவரது பெயரை வைத்துக் கொண்டே அவரது வயதை ஓரளவு என்னால் ஊகிக்கக் கூடியதாக இருந்தது. சுமார் அறுபத்தியேழு அறுபத்தெட்டு வயதிருக்கலாம். நிறைய முடியோடு கூடிய பெரிய மண்டை, குழி விழுந்த கண்கள். கோட்பட்டன் இழுத்து மூடமுடியாதபடி செல்லத் தொப்பை ஒன்றுமிருந்தது. தொப்பைவண்டி தெரியாமலிருக்க, பான்ஸை இறுக்கி இடுப்பிலே தேற்பட்டை ஒன்றும் அணிந்திருந்தார். ஷேவ் செய்த துப்பரவான முகம். நல்லெண்ணெய் வைத்துத் தலை வாரியிருக்க வேண்டும், ஏனென்றால் யாழ்ப்பாணத்து நல்லெண்ணைய் வாசம் குப்பென்று அறையெங்கும் பரவியிருந்தது.

‘உங்களுடைய கொம்பனிக்கு இனிமேல் இவர்தான் இயக்குநராக இருப்பார்’ என்று நிர்வாக இயக்குநர் மேலும் சில விவரங்களையும் அவரைப் பற்றித் தெரிவித்தார். நான் புன்னகையோடு அவருக்கு வணக்கம் கூறி, அவரை எனது இடத்திற்கு அழைத்துச் சென்றேன்.

‘செக்ஸி கை’ (sexy guy) என்று அவரை வியப்போடு பார்த்துக் கண் சிமிட்டிவிட்டுச் சென்றாள் வாசலில் எதிர்ப்பட்ட கம்பனி செக்ரட்ரி.

எனது அறைக்கு அடுத்து இருந்த கண்ணாடித் தடுப்பு அறையைத்தான் அவருக்கு ஒதுக்கிக் கொடுத்திருந்தார்கள். எழுந்து நின்று எட்டிப் பார்த்தால் அவர் உட்கார்ந்திருப்பது தெரியக்கூடியதாகக் கண்ணாடி போட்ட தடுப்பு ஒன்றும் குறுக்கே இருந்தது. அவரோடு பழகத் தொடங்கிய பிறகுதான் அவரது பெரிய மண்டைக்குள் ஒரு கணினியே இருப்பது தெரியவந்தது. வயதிற்கேற்ற அனுபவத்தில் நிறைய விடையங்களைத் தெரிந்து வைத்திருந்தார். அரசாங்க திணைக்களத்தில் உயர்பதவியில் தொழில் புரிந்து ஓய்வு பெற்றதாலோ என்னவோ நிறைய அனுபவசாலியாகவும் இருந்தார். அவரை யாரும் இலகுவில் ஏமாற்றிவிட முடியாது என்பதும் புரிந்தது. அவரிடம் இருந்து முகாமைத்துவம், குறிப்பாகத் தொழிலாளர்களை எப்படிச் சமாளிப்பது என்பது போன்ற பல விடையங்களை அவருடன் பழகிய கொஞ்ச நாட்களில் நானும் நிறையவே கற்றுக் கொண்டேன். வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடம்புச் சூட்டைத் தணிக்கும், வெள்ளைப்பூடு சுட்டுச் சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு நின்றுவிடும், வெந்தயம் சாப்பிட்டால் உடம்பு குளிர்மையாக இருக்கும், இஞ்சி, மிளகு, தேனின் பயன்பாடு என்றெல்லாம் அவர் உள்ளுர் வைத்தியர்போல அவ்வப்போது ஆலோசனை சொல்லிக் கொண்டே இருப்பார். அவர் சொல்வதை நாங்கள் கேட்கிறோமா இல்லையா என்பது பற்றி அவர் யோசிக்காமல் இல்லை, ஆனாலும் சொல்லவந்ததைச் சொல்லியே முடிப்பார்.

ஒருநாள் மதிய நேரம் என்னைத் தனது அறைக்கு வரும்படி அழைத்தார்.

எதிரே இருந்த நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தேன்.
‘எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும்’ என்று திடீரெனக் கேட்டார்.
‘என்.ன?’ என்றேன்.
‘யூ ஆர் லுக் லைக் மை சண், ஒரு மகனிடம் கேட்பது போலக் கேட்கிறேன்’ என்று பீடிகை போட்டார்.
‘சொல்லுங்க..!’ என்றேன்.
அவரது மேசையில் சிறிய சர்க்கரைப் போத்தல் ஒன்று இருந்தது.
‘எனக்கு லோ சுகர், தற்செயலாக எப்போதாவது நான் இங்கே இருக்கும் போது மயக்கமாகப் போய்விட்டால் இந்த சர்க்கரையை எடுத்து ஒரு ஸ்பூன் சர்க்கரை வாயில் போட்டு விடும்’ என்றார்.

பெரியதொரு விடயத்தை எவ்வளவு சாதாரணமாகச் சொல்கிறார். சர்க்கரையைவிட குளுக்கோஸ் விரைவாக வேலை செய்யும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் அவர் சொன்னதைத் தட்டாது ஒரு மகனுடைய பாசத்தோடு சரி என்று தலை அசைத்தேன். முன்பெல்லாம் தண்ணீரில் மூழ்கி முத்துக் குளிப்பவர்கள் குளிக்கும்போது, கயிற்றின் மறுபக்கத்தை மைத்துணரின் கையில் பொறுப்பாகக் கொடுத்து விட்டுத்தான் தண்ணீரில் குதிப்பார்களாம். அவர்கள் மைத்துணரில் நம்பிக்கை வைத்திருந்தது போல இவர் என்மீது வைத்த நம்பிக்கை என்னை ஒருகணம் நெகிழ வைத்தது.

எப்பொழுதும் மதிய உணவு எடுத்ததும் அவர் வெளியே சென்று அங்கே உள்ள மலைவேப்பமர நிழலில் கொஞ்ச நேரம் நின்று ஓய்வெடுப்பார். கேட்டால் ஜில்லென்று வீசும் வேப்பங்காற்று உடம்பிற்கு நல்லதென்பார். அந்த நாட்களில தமிழ்நாட்டு சொக்கலால் ராமசேட் பீடி எப்படிக் கொழும்பில் உள்ள தொழிலாளர் வர்க்கத்திடம் பிரபலமாக இருந்ததோ அதேபோல நெவிகட், திறீறோஸ் சிகரட் இளைஞர்களிடையே பிரபல்யமாக இருந்தது. அதேபோல் யாழ்ப்பாணத்து கனகலிங்கம் சுருட்டு காரம் மணம் குணம் நிறைந்தது என்று எல்லோராலும் அறியப்பட்டதாகவும் இருந்தது. நகரத்திலே சுருட்டுக் குடிப்பவர்கள் மிகக் குறைவு. கொஞ்சம் வயதில் கூடிய ஒரு சிலர் மட்டுமே சுருட்டுக் குடிப்பதைக் கைவிடாமல் அப்போதும் தொடர்ந்து கொண்டிருந்தனர். அந்த ஒரு சிலரில் இவரும் ஒருவராக இருந்தார். வேப்பமரநிழலில் நின்றபடி காற்சட்டைப் பையுக்குள் கையை விட்டு ஒரு சிறிய பொதியை வெளியே எடுப்பார். அதில் இருந்து கறுப்பு நிறத்தில் உள்ள சுருட்டு ஒன்றை வெளியே எடுப்பார். நுனியில் இருந்து அடிவரை அதை உருட்டி ஏதோ விதமாய் பதம் செய்வார். தீப்பெட்டியை எடுத்து அதிலே பக்குவமாக ஒரு தீக்குச்சியை எடுத்து மிகவும் கவனமாக உராசி, அந்தச் சுருட்டைப் பற்ற வைப்பார். சிகரட்மாதிரி சுருட்டு இலகுவில் பற்றிக் கொள்ள மாட்டாது என்பதால், புக்குப் புக்கு என்று கண்ணை மூடித் தம் பிடித்து பொக்கைவாயால் உள்ளே இழுத்துப் புகைவிடுவார். அவருடைய நிறத்திற்கு, தூர நின்று பார்ப்பவர்களுக்கு கரி இஞ்சின் ஒன்று புகை கக்குவது போலத் தெரியும். அந்த மலைவேப்பமர நிழலில் தினமும் நடக்கும் ஒரு நிகழ்வாக இது இருக்கும். அந்த இடத்தைவிட்டு அவர் சென்ற பின்பும் சுருட்டுப் புகைமணம் அந்த இடத்தில் அவர் அங்கே நின்றதற்கான அடையாளத்தை உறுதிப் படுத்தி நிற்கும்.

யாழ்ப்பாணம் புகையிலைக்குப் பெயர் போனதாக இருந்தது. கரீபியன் தீவுகள், மெக்ஸிக்கோ, குவாதமாலா போன்ற இடங்களில் 10ம் நூற்றாண்டளவில் புகையிலையின் பாவனை இருந்ததற்கான சான்றுகள் உண்டு. எப்படி யாழ்ப்பாணத்திற்குப் புகையிலைச் செடியைக் கொண்டு வந்து பயிரிட்டார்கள் என்பது தெரியவில்லை. புகையிலை பயிரிடும் பிரதேசங்களில் போறணை என்று சொல்லப்படுகின்ற சூட்டு அடுப்பில் தான் புகையிலை பதனிடப் படுவதுண்டு. இந்தப் புகையிலையில் இருந்து தான் சுருட்டுச் செய்யப்படும். சுருட்டுச் சுற்றுவது என்பது யாழ்ப்பாணத்தில் ஒரு குடிசைக் கைத்தொழிலாக இருந்தது மட்டுமல்ல, நல்ல வருமானத்தையும் பெற்றுப் பல குடும்பங்களுக்குச் சாப்பாடும் போட்டது. சுற்றியிருந்து எல்லோரும் சுருட்டுச் சுற்றும்போது ஒருவர் மட்டும் அன்றைய தினப்பத்திரிகையை எடுத்துப் பலமாக வாசித்துக் காட்டுவார். கண் காரியத்தில் இருந்தாலும் செவிகள் அன்றைய செய்தியை உள்வாங்கிக் கொள்ளும். அந்த இடத்தில், பத்திரிகை வாசிப்பது என்பது தினசரி நடக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கும்.

இவருடைய பெற்றோர்கள் யாழ்பாணத்தவர்களாக இருந்தாலும் இவர் கொழும்பிலேதான் பிறந்து வளர்ந்திருந்தார். கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தான் கல்வி கற்று, பொறியியலாளராக அதியுயர் புள்ளிகள் பெற்று பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருந்தார். நல்ல ஆங்கில அறிவு உடையவராகவும் இருந்தார். அரசாங்கத்தில் உயர் பதவில் இருந்த இவர் ஓய்வு பெற்றதும் வீட்டிலே சோம்பேறியாக இருக்க விரும்பாமல் இங்கே வேலைக்கு வந்து சேர்ந்தார். இவரது அனுபவத்தையும், திறமையையும் கண்டு கொண்ட எங்கள் நிறுவனம் எந்தவித மறுப்புமில்லாமல் அவரை உள்வாங்கிக் கொண்டது. குறுகிய காலத்தில் எல்லோரையும் தன் வசமாக்கிக் கொண்ட, அனுபவம் மிக்க ஒருவரின் சேவை கிடைத்ததில் எங்கள் நிறுவனம் பெருமைப்பட்டது.

தினமும் அவர் மதிய உணவு அருந்திவிட்டு வந்து உட்கார்ந்தபின், நான் அடிக்கடி எழுந்து நின்று அவரது அறையை நோட்டம் விடுவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அன்று மதியம் என்னுடன் பேசும்போது மறுநாள் அவர் விடுப்பு எடுத்திருப்பதாவும், அதனாலே வேலைக்கு வரப்போவதில்லை என்றும் சொன்னார். அது அவருடைய சொந்த விடையம் என்பதால், ஏன் என்று நான் கேட்கவில்லை. நான் கேட்காமலே அவர் ஏன் விடுப்பு எடுக்கிறார் என்பதற்குக் காரணம் சொன்னார். மறுநாள் அவரது தாயாரின் திதி என்றும் அதனாலே திவசம் கொடுப்பதற்காக வீட்டிலே நிற்கப் போவதாக விளக்கம் சொன்னார். எனக்கு அதைக் கேட்டதும் வியப்பாக இருந்தது. இந்த வயதிலும் தாயாரை மறக்காமல், விடுப்பெடுத்து திதி கொடுக்கிறாரே என்று நினைத்துப் பார்த்த போது, எனக்கு அவர்மேல் இருந்த மதிப்பு இன்னும் ஒரு படி மேலே உயர்ந்தது. தேவையான காசோலைகளில் கையெழுத்தை வாங்கி வைத்துக் கொண்டு, இதைவிட ஏதாவது அவசர தேவை என்றால் அவரது வீட்டிற்கு மறுநாள் வந்து கையெழுத்தைப் பெறுவதாகவும் கூறியிருந்தேன்.
 
மறுநாள் ஏற்கனவே அறிவித்தபடி அவர் வேலைக்கு வரவில்லை. மாலை ஆறுமணியளவில் நான் வீட்டிற்குப் பேவதற்காக ஆயத்தங்கள் செய்தபோது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. எடுப்பதா விடுவதா என்று அரைமனதோடு எடுத்து என்ன என்று கேட்ட எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பொன்னையா அவர்கள் திடீரென இறந்து விட்டதாக அதிர்ச்சியில் இருந்த அவரது மனைவி அந்த துயரச் செய்தியை அழுதழுது சொன்னார். என்னால் நம்பமுடியாமல் இருந்தது. மறுநாள் அவர் வேலைக்கு வந்ததும், அவரிடம் கையெழுத்து வாங்குவதற்காக தயாராக எடுத்து வைத்திருந்த காசோலைகள் மின்விசிறிக் காற்றில் ‘வாழ்வே மாயம்’ என்பதுபோல, நிலையில்லாமல் என் கண்முன்னால் படபடத்தன. உடனடியாகவே வண்டியை எடுத்துக் கொண்டு அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

திவசம் கொடுத்துவிட்டு களைப்பாக இருக்கிறது என்று சாய்மனைக் கதிரையில் படுத்திருந்ததாகவும், மனைவி அவர் ஓய்வெடுத்துத் தூங்குவதாக நினைத்து, சந்தைக்கு காய்கறி வாங்க வெளியே சென்றதாகவும் குறிப்பிட்டார். திரும்பி வந்து பார்த்தபோது அவர் இன்னும் தூங்குவதாக நினைத்ததாகவும், அவருக்குத் தேனீர் தயாரித்துக் கொண்டு வந்து நீட்டிய போதுதான் அவர் எழுந்திருக்கவில்லை என்பதைக் கவனித்தாகவும் சொன்னார். தனது தாயாரின் திதியின் அன்றே அவரும் இறைவனடி சேர்ந்திருந்தார். மறுநாள் நடந்த அவரது மரணச் சடங்கிலும் பங்கு பற்றி விட்டு வேலைக்கு வந்திருந்தேன்.

‘நேற்றிருந்தார் இன்றில்லை’ என்ற நினைவு என்னை வாட்டியது. நிம்மதியான சாவு என்று கம்பனியில் எல்லோரும் பேசிக்கொண்டாலும், எனக்கு மட்டும் ஏனோ அதில் உடன்பாடு இருக்கவில்லை. தனது ஆரோக்கியத்தில் இவ்வளவு கவனமாக இருந்தும், அவருக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற கவலை என்னை வாட்டிக் கொண்டிருந்தது. அவருடைய ஒவ்வொரு அசைவும் கண்ணுக்குள் நிலைத்து நின்றாலும், அவர் இல்லையே என்ற வெறுமையின் தாக்கம் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. எழுந்து நின்று மறுபக்கம் எட்டிப் பார்த்தேன். அடுத்த கண்ணாடித் தடுப்புக்குள் அவர் உட்கார்ந்து இருப்பது போன்ற பிரேமை எனக்குள் ஏற்பட்டாலும் அவர் இல்லை என்ற நிஜம் என்னைத் தடுமாற வைத்தது. உட்கார்ந்து கொண்டு யோசித்துப் பார்த்தேன். ஒருவேளை இரத்தத்தில் சர்க்கரை போதாமல்தான் இறந்திருப்பாரே? அவர் அன்று விடுப்பு எடுக்காமல் வேலைக்கு வந்திருந்தால் நான் அவரைக் கவனமாகக் கவனித்திருப்பேனோ, அந்த மரணத்தைத் தவிர்த்திருக்கலாமோ என்றெல்லாம் மனசு குழம்பிப் போய்க் கிடந்தது. மனசு சமாதானப்படாமல் போகவே, என்னையறியாமலே மீண்டும் எழுந்து மறுபக்கம் எட்டிப்பார்த்தேன். அவர் உட்கார்திருந்த நாற்காலி மட்டுமல்ல, அவரது மேசையில் இருந்த அந்த சர்க்கரைப் போத்தலும் வெறுமையாகவே காட்சி தந்தது.

(பாரிஸ் தமிழர் கல்விநிலையத்தின் வெள்ளிவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டி – 2012 ல் பரிசு பெற்ற சிறுகதை – ஆசிரியர்)

பனங்கொட்டை பொறுக்கி

- குரு அரவிந்தன் 

உள்நாட்டுப் போரின் பாதிப்பு ஆங்காங்கே வெளிப்படையாகத் தெரிந்தது. கவனிப்பு அற்ற பிரதேசம் என்பதால் ஏ9 பாதை குண்டும் குழியுமாயிருந்தது. சில இடங்களில் பாதைகள் செப்பனிடப் பட்டிருந்தன. முன்பெல்லாம் இப்பாதையில் பயணிக்கும்போது பயந்து நடுங்கிக் கொண்டே பயணிக்கவேண்டும். இராணுவத்தின் கெடுபிடி ஒருபக்கம், தெருவோரக் கண்ணிவெடிகளின் பயம் மறுபக்கம். தப்பித்தவறி வண்டி பாதையைவிட்டு விலகினால் காவு கொள்ள எங்கேயென்று கண்ணிவெடிகள் காத்திருக்கும். பாதை ஓரத்தில் அக்குள் தண்டு பிடித்து மெல்ல மெல்ல நொண்டிக் கொண்டு சென்ற அந்த சிறுவனுக்காக என் மனம் பரிதாபப்பட்டாலும், சற்றுத்தள்ளி மூன்று காலில் நொண்டிக் கொண்டு புல் மேய்வதற்குப் பகீரதப் பிரயத்தனம் செய்த அந்தப் பசுக்கன்றுதான் என் மனதில் சொல்லொணா வேதனையைக் கிளப்பிவிட்டது. நண்டு கொழுத்தால் வளையில் இருக்காது என்பதுபோல ஆயுதவிற்பனைக்காக மனிதனே தேடிக்கொண்ட வினையில் மாட்டிக் கொண்ட அப்பாவி இரைகள்தான் இவைகள். பாவம் இந்தப் பசுக்கன்று, வாயற்ற இந்த ஜீவன்களால் தங்களுக்கு நடந்த கொடுமைகளை யாரிடம் சொல்லி அழமுடியும். வண்டிச் சத்தம் கேட்கவே, மிரட்சியோடு நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் புல்லுக்குள் தன் தலையைப் புதைத்துக் கொண்டது.  அதன் பசி அதற்கு.

ஆனையிறவு அருகே எரிந்து கருகிப்போன கவசவாகனம் ஒன்று என் கண்ணில் பட்டு வேகமாக மறைந்து போனது. திரும்பிய பக்கங்கள் எல்லாம் யுத்தம் தின்ற எச்சங்கள் காட்சிப் பொருட்களாய் எங்களுக்குத் தரிசனம் தருவதற்கென்றே காத்திருப்பது போலிருந்தன.

பிரதான பாதையில் இருந்து விலகி வண்டி உள்ளே சென்றபோது, சாலையின் இரண்டு பக்கமும் பனை மரங்கள் வளர்ந்து நிமிர்ந்து நின்று எங்களை வரவேற்றுக் கொண்டிருந்தன. சில பனைமரங்கள் தலையிழந்து மொட்டையடித்த மனிதர்போல சோகத்தில் மூழ்கியிருந்தன. யுத்த முனையில் முன்னின்று எதிரியைத் தடுக்கும் போர் வீரர்களைப்போல அவை நிரையாய் காட்சி தந்தபோது எனக்குப் போராளிகளின் ஞாபகம்தான் சட்டென்று வந்தது. தலையிழந்து நிற்பதற்கு அதுவும் ஒரு காரணம்தான். யுத்த காலத்தில் எறிகணைகள் வந்து குடியிருப்புகள் மீது விழாமல் காப்பதில் இந்தப் பனைமரங்களின் பங்கும் அதிகமாக இருந்திருக்கலாம். எத்தனையோ குடிமனைகளை, குடிமக்களை இந்தப் பனை மரங்கள் காப்பாற்றி இருக்கின்றன. ஏனைய இடங்களில் உள்ள எரிந்து கருகிப்போன, கூரையை இழந்த வீடுகளோடு ஒப்பிட்டுப்  பார்க்கும்போது இந்தப் பகுதியில் இருந்த பனைமரங்களை, அவை ஜடமாக இருந்தாலும் அவற்றின் யுத்தகால சேவைகளைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

நான் சிறுவனாக இருந்தபோது தோப்பிலே இருந்த இந்தப் பனை மரங்களைப் பார்த்து அதிசயித்திருக்கிறேன். யாழ்ப்பாணத்து கற்பகதரு என்று இந்தப் பனை மரங்களைச் சொல்வார்கள். சில பனைமரங்கள், அல்லது தென்னை மரங்களின் அடிப்பக்கத்தில் பாம்பு போல படம் வரைந்திருப்பார்கள். அது ஏன் என்று தொடக்கத்தில் எனக்குப் புரியவில்லை. தாத்தாவிடம் அதுபற்றி விசாரித்தேன். அணில்கள் மரத்தில் ஏறிப் பாளைகளில் வரும் பூக்களைச் சேதப்படுத்தாமல் இருப்பதற்காகத்தான் அப்படிப் படங்கள் வரைவதாக தாத்தா சொல்லி அறிந்து கொண்டேன். பாம்புப் படத்தைப் பார்த்தே மிரளக்கூடிய அணில்கள் அந்தக் காலத்தில் இருந்திருக்கலாம். அணில்கள் மரத்தில் ஏறிக் கள்ளைக் குடித்துவிட்டு வெறியில் முட்டியையும் தட்டி விழுத்திவிடும் என்பதால்தான் அப்படம் வரைவதாக நண்பன் சொன்னான். அது எந்தளவிற்கு உண்மை என்பதும் எனக்குப் புரியவில்லை.நாங்கள் மாணவப் பருவ தன்னார்வத் தொண்டர்களாக இருந்தபோது, பனம் விதைகளைப் பெறுக்கிக் கொண்டு வந்து பாடசாலை வளவில் குவித்திருக்கிறோம். யார் அதிகம் சேகரிப்பது என்பதில் எங்களுக்குள் போட்டியிருந்தது. இரவிலே படுத்திருந்தாலும் அருகிலே இருக்கும் பனந்தோப்பில் இருந்து கேட்கும் தொம் தொம் என்ற சத்தத்தைக் காது கிரகித்துக் கொண்டிருக்கும். அதுவே பக்கத்துப் பனந்தோப்பிலே எத்தனை பனம்பழம் விழுந்தது என்ற கணக்கை மனதில் பதிய வைத்திருக்கும். அதிகாலையில் எழுந்து அந்தப் பனம் விதைகளைச் சேகரித்துப் பள்ளிக்குக் கொண்டு செல்லும்வரை முழுக் கவனமும் அங்கேயே இருக்கும். அதிக பனை விதைகளைச் சேகரித்துக் கொடுத்ததற்காக எங்களில் மூவருக்குப் பாடசாலையில் பாராட்டிப் பரிசு தந்தார்கள். வேறு ஒருநாள் டிராக்டர் வண்டியில் அவற்றை ஏற்றி, எங்களையும் அழைத்துச் சென்றார்கள். வீதி ஓரமெல்லாம் நாங்கள் சிறு குழிகள் தோண்டி அதில் விதைகளைப் போட்டு மூடினோம். இரண்டு மூன்று வாரங்களாக அங்கு சென்று நிரைநிரையாய் நடப்பட்டிருந்த விதைகளுக்குத் தண்ணீர் ஊற்றினோம். அதன்பின் மழைக்காலம் ஆரம்பித்ததால் விதைகள் தானாகவே முளைத்து வளரத் தொடங்கி வடலிகளாகிக் காலப்போக்கில் பனைகளாகி விட்டன. இப்படித்தான் மரம் நடும் திட்டத்தை அவர் ஏனைய பாடசாலைகளிலும் அறிமுகம் செய்திருக்கலாம். குடா நாடு முழுவதும் மாணவர்களைக் கொண்டே பனம் விதைகளை நட்டிருக்கலாம். அந்தப் பனை மரங்கள்தான் வளர்ந்து இன்று பெரிய மரங்களாக வீதி ஓரமெல்லாம் காவல் வீரர்கள்போல நிற்கின்றன.

இதற்கெல்லாம் காரணமானவரை காலம் மறந்து விட்டது. காலம் மறந்து விட்டதா அல்லது அவற்றை எல்லாம் நினைத்துப் பார்க்கும் நிலையில் அங்குள்ள மக்கள் இல்லையா என்பதுகூடத் தெரியவில்லை. சின்னவயது நினைவுகள் எனக்கு இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது. எவ்வளவு தீர்க்க தரிசனத்தோடு அன்று அவர் செயற்பட்டார் என்பதை நினைக்க இப்பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. அவருடைய பெயர் கனகராஜா என்று அறிந்து கொண்டேன். அவரைப்பற்றி அறிமுகம் செய்த போது அவர் ஒரு தொழில் அதிபர் என்றும், மில்க்வைற்சோப் அதிபர் கனகராஜா என்றுதான் எங்கள் பாடசாலை அதிபர் அறிமுகம் செய்து வைத்தார். மில்க்வைட் சோப் என்பது யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட பிரபலமான நீலநிறத்தில் இருந்த சவர்க்காரம். உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதால் மிகவும் பிரபலமாக இருந்தது. அதுமட்டுமல்ல வெள்ளைநிற பாடசாலை சீருடை அணியும் மாணவ, மாணவிகளுக்கு மிகவும் அத்யாவசியமான நீலநிறம் கொண்ட சவர்க்காரமாகவும் இது இருந்தது. நாங்கள் அப்போது மாணவ தன்னார்வத் தொண்டர்களாக இருந்தோம். பாடசாலைக்கு வெள்ளைநிற சீருடையே அணிந்தோம். சீருடையைப் பளீச்சென்று அணிவதற்கு இந்த சோப்பே எங்களுக்கு உதவியாக இருந்தது.

அவர் எங்களிடம் கேட்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
அது என்னவென்றால் ‘பனங்கொட்டை பொறுக்கித் தருவீர்களா?’

எங்களுக்கு அவரது வேண்டுகோள் வியப்பாக இருந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். எந்தப் பெரிய தொழில் அதிபர், அவரைச் சுற்றி எத்தனை தொழிலாளர்கள். அப்படி இருந்தும் இங்கே வந்து மாணவர்களாகிய எங்களைப் பார்த்துப் ‘பனங்கொட்டை பொறுக்கித் தருவீர்களா?’ என்று கேட்கிறாரே என்று நினைத்தோம். ஆனாலும் எங்கள் பாடசாலை அதிபரும் அருகே நின்றதால் எந்த மறுப்பும் சொல்லாது சம்மதித்தோம். நாங்கள் சம்மதத்தின் பெயரில் தலையசைத்தோம். ஆனால் ராஜமாணிக்கம் மட்டும்  மௌனமாகவே நின்றான். அவன் கையிலே அழுக்குப்படாத பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவன். தப்பித் தவறி அழுக்குப் பட்டாலும் முகத்தைச் சுழித்துவிட்டு உடனே கையலம்ப ஓடிவிடுவான். நாங்கள் எல்லோரும் டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவுகளோடுதான் படித்தோம். நாட்டுச் சூழ்நிலையால், நாங்கள் நினைத்தது போல எங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியவில்லை. அவன் எப்படியோ டாக்டராக வெளிவர, நான் கணக்காளரானேன். ஆனாலும் எங்கள் நட்பு தொடர்ந்தது. அவன் உள்ளுரிலேயே தொழில் பார்க்க, நான் வெளிநாடு சென்றேன். உள்நாட்டு யுத்தம் ஓய்ந்து விட்டதாக அறிவித்ததால், இப்போது விடுமுறையில் அவனைப் பார்க்கத்தான் போய்க் கொண்டிருந்தேன்.

யாழ்ப்பாணத்திற்கு என்று சில குறிப்பிட்ட குறியீட்டுச் சொற்கள் இருந்தன. இலங்கையின் தென் பகுதிக்குச் சென்றால் அவர்கள் தங்கள் மொழியில் இந்தக் குறியீட்டுச் சொற்களை அடிக்கடி பாவித்துத் தமிழர்களைக் கிண்டல் அடிப்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். பனங்கொட்டை, கறுத்தக் கொழும்பு, போயிலைச்சுருட்டு, நல்லெண்ணெய் இப்பெயர்கள் யாழ்ப்பாணத்திற்கே உரிய குறியீட்டுப் பெயர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இவை கேலிப் பொருளாகத் தெரிந்தன. யாழ்ப்பாணத்துக் கற்பகவிருட்சம் என்று பெருமைப்படுகின்ற பனை மரத்தின் விதையைத்தான் பனங்கொட்டை என்று அவர்கள் கேலிசெய்தார்கள். கறுத்தக் கொழும்பு என்பது ஒரு வகை ருசியான மாம்பழம், போயிலைச்சுருட்டு என்பது யாழ்ப்பாணத்துப் புகையிலையில் செய்யப்படும் சுருட்டு. கோடா என்று சொல்லப்படும் பாணியை இதன்மேல் தடவி போறணையில் பதனிடுவார்கள். பின் அதிலிருந்துதான் சுருட்டுச் செய்வார்கள். சுருட்டுச் சுற்றுவது என்பது யாழ்ப்பாணத்து குடிசைக் கைத்தொழிலாக இருந்து மட்டுமல்ல, அவர்களுக்கு நல்ல வருமானத்தையும் பெற்றுக் கொடுத்தது. அடுத்ததாக நல்லெண்ணெய், எள்ளைச் செக்கில் போட்டு அரைத்து அதில் இருந்து பெறப்படுவதுதான் நல்லெண்ணெய். உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது. அதிலே வேடிக்கை என்னவென்றால் தென் பகுதியைச் சேர்ந்தவர்கள் தேங்காயில் இருந்து பெறப்படும் தேங்காய் எண்ணெய்யைத்தான் முடியில் தேய்ப்பார்கள். தென் பகுதிப் பெண்களின் முடி அடர்ந்து நீண்டு வளர்வதற்கு தேங்காய் எண்ணெய்யும் ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். விடுமுறையைக் களிப்பதற்காக தென்பகுதிப் பெண்கள் வடபகுதியில் உள்ள கீரிமலைக்கு வந்து நீராடிவிட்டு அழகான நீண்ட தலைமுடியை விரித்து வெய்யிலில் உலரவிடும் காட்சி கண்ணுக்குக் கொஞ்சம் கவர்ச்சியாக இருக்கும். குறுக்குக் கட்டோடு அவர்கள் நிற்கும் அந்தக் காட்சி இளவட்டங்களைக் கவர்ந்திழுக்கும். இதற்காகவே சாக்குப் போக்குச் சொல்லி அங்கு சென்று காத்திருக்கும் மாணவர்களும் உண்டு. அப்போதெல்லாம், மாணவர்கள் அவர்களைப் பார்த்து ‘சிங்களத்தி சிவத்தப் பெண்ணே தேங்காய் எண்ணெய் மணக்குதெடி..!’ என்று கிண்டல் செய்து கோரஸ் பாடுவார்கள். அந்தப் பெண்களுக்கு மொழி புரியுமோ இல்லையோ, பதிலுக்கு ஒரு கவர்ச்சிச் சிரிப்பை உதிர்த்து விட்டுப் போய்விடுவார்கள்.

யுத்தகால பாதிப்பு எதுவும் இல்லாமல் நண்பன் ராஜமாணிக்கத்தின் வீடு பளீச்சென்று இருந்தது. நன்றாக உபசரித்து என்னைத் தனது குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தான். யுத்த காலத்தில் தாங்கள் பட்ட அவலங்களைப் பற்றிக் கதைகதையாய் சொன்னான். வெளிநாட்டில் எனது வேலைபற்றி குடும்பம் பற்றி நிறையவே விசாரித்தான். விருந்து சாப்பிட்டு, விடை பெற்று வரும்போது அவன் என் கைகளைப் பற்றிக் கொண்டான்.
‘உனக்கு ஞாபகம் இருக்கா படிக்கிற நாட்களில் மாணவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து  பக்கத்துப் பனந்தோப்புகளிலே பனங்கொட்டை பொறுக்கியது’ என்றான்.
‘ஆமா, உன்னைத் தவிர..!’ என்றேன் சட்டென்று.
‘உண்மைதான், அப்போ எனக்கு அதில் ஈடுபாடு இருக்கவில்லை. என்னுடைய கனவெல்லாம் டாக்டர் ஆகவேண்டும் என்பதிலேயே இருந்தது. பூமியைப் பசுமையாய் வைத்திருக்க வேண்டும், மரம் வளர்க்க வேண்டும் என்ற அந்த விடயம்கூட அந்த நேரம் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. யுத்தம் ஆரம்பமாகி எறிகணைகள் வந்து ஏனைய குடியிருப்புகள் மீது விழுந்த போதுதான் ஒரு உண்மையை நான் புரிந்து கொண்டேன்.’
‘என்ன உண்மை?’
‘இந்த மரங்களின் அவசியத்தைப் பற்றிய உண்மை. என்னுடைய அறியாமையால் அன்று நான் உங்களை எல்லாம் ‘பனங்கொட்டை பொறுக்கிகள்’ என்று கேலி செய்தேன். அதற்காகத்தான் இப்போ உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.’ என்றான்.
‘என்னிடம் மன்னிப்பா, எதற்கு?’
‘உண்மையிலே புதிதாக நிறைய மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வரக்காரணம் யாழ்ப்பாணம் வானம் பார்த்தபூமி என்பதால்தான். ஆறுகள் இல்லாததால், இந்த மண்ணில் மழையை நம்பியே விவசாயம் நடந்தது. கிணற்றில் இருந்தே குடிநீர் பெற்றார்கள். உயர்ந்த மரங்கள் இருந்தால் மழை பெய்வதற்குச் சந்தர்ப்பம் அதிகமுண்டு என்று கருதித்தான் தீர்க்கதரிசனத்தோடு மரம் நாட்டும் முயற்சியில் அன்று ஈடுபட்டார்கள். ஆனால் அதுவே பிற்காலத்தில் எறிகணைகளில் இருந்து குடிமனைகளைக் காப்பாற்றும் பாதுகாப்பு கேடயமாக மாறிவிட்டது.’
‘நாங்கள் அதற்காகத் தொழிலதிபர் கனகராஜாவைத்தன் பாராட்ட வேண்டும். பள்ளியில் படிக்கிற பிள்ளைகளைப் பனக்கொட்டை பெறுக்கச் சொல்கிறாரே என்று அவரை அன்று திட்டிய பெற்றோரும் இருக்கிறார்கள்.’ என்றேன்.
‘அன்று பனம்விதைகளைச் சேகரித்து பெரியதொரு திட்டமாக நீங்கள் எல்லாம் இந்த இடங்களில் நட்டபடியால்தான் இன்று அந்த மரங்கள் வானுயர்ந்து வளர்ந்து எங்களுக்குப் பாதுகாப்பாக நின்றன. அப்போ நாங்கள் உங்களைப் பார்த்துப் ‘பனங்கொட்டை பொறுக்கி’ என்று ஏளனம் செய்தோம். அன்றைய தீர்க்க தரிசனத்தின் அருமை இன்றுதான் புரிகிறது. இந்தப் பனை மரங்கள் இல்லாவிட்டால் எங்கள் குடியிருப்புகளில் செல்குண்டுகள் விழுந்து இன்று நாங்கள் மண்ணோடு மண்ணாய்ப் போயிருப்போம். எங்கள் குடிமனைகளைப் பாதுகாத்தது மட்டுமல்ல, பதுங்குகுழிகள் தோண்டி அதற்கு மேல் பாதுகாப்பாக போடுவதற்கும் இந்தப் பனங்குற்றிகளே பலவிதத்திலும் உதவியாய் இருந்தன. விமானக் குண்டு வீச்சில் இருந்து அவைதான் எங்களைப் பல தடவைகள் காப்பாற்றின. உண்மையிலேயே மரம் வளர்க்க வேண்டும் என்ற இந்தத் திட்டத்தை அன்று நடைமுறைப் படுத்தியவர்களைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும். அவர்களால்தான் இன்று நாங்கள் உயிரோடு இருக்கின்றோம்.’ என்றான் டாக்டர் ராஜமாணிக்கம்.

சின்ன வயதில் தன்னலம் பாராது நாங்கள் செய்த தன்னார்வத் தொண்டு, பிற்காலத்தில் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறது என்பதை அறிந்தபோது என்மனம் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டது. வெளிநாட்டில் நான் நல்ல உத்தியோகத்தில் இருந்தாலும், என்னால் டாக்டராக முடியாமற் போனதற்கு அந்த நாட்களில் பனங்கொட்டை பொறுக்கித் திரிந்து எங்கள் படிப்பை வீணாக்கியது ஒரு காரணமாய் இருக்குமோ என்று இதுவரை நான் எனக்குள் எண்ணிக் குமைந்து கொண்டு இருந்ததற்கு, ஆறுதல் தருவதுபோல இருந்தன அவனது வார்த்தைகள். பனங்கொட்டை பொறுக்கி என்று பாடசாலை நாட்களில் அவன் என் காதுபடச் சுட்டசொல் இத்தனை நாளாய் என் மனதை அரித்துக் கொண்டு இருந்திருக்கிறது என்பது விடைபெற்றுச் செல்லும் போதுதான் எனக்குப் புரிந்தது.
- குரு அரவிந்தன்

சிவப்புப் பொறிகள்

சந்திரா ரவீந்திரன்

அன்றைய விடிகாலைப் பொழுது அவன் உள்ளத்தில் ஒருவித எதிர்பார்ப்பை விதைத்திருந்தது. காலைக் குளிர் நீரில் விறைத்துப் போன தன் கைகளைச் சூடு பறக்கத் தேய்த்து விட்டான்.

"துரை......, தேத்தண்ணியைக் குடிமேனை" பார்வதியின் இதமான வேண்டுதல் மனதிற்குச் சுகமாக இருந்தது. ஆவி பறக்கக் கொதிக்கும் தேனீரை, மெதுவாக வாயால் ஊதிவிட்டு, சிறிதாக உறிஞ்சிக் கொண்டான்.

வானொலியில் மாநிலச் செய்திகள் ஆரம்பமாகியிருந்தது. ஒரு கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு வசதியாக அமர்ந்து கொண்டான்.

'யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றும் தொடர்ந்து மூன்றாவது நாளாக பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டது. அரச அலுவலகங்கள், பாடசாலைகள், கடைகள் தனியார் நிறுவனங்கள் யாவும் மூடப்பட்ட நிலையிலேயே.....'

"தம்பி,......" துரை திடுக்குற்றுத் திரும்பினான். வாசலில் வடிவம் மாமி நின்றிருந்தாள். அவனுக்குப் பகீரென்றது.
"தம்பி, இண்டையோடை நாலாவது நாளாச்சு. நான் உன்னை நாணயமானவன் எண்டு நம்பித்தான், வீட்டுச் செலவுக்கு வைத்திருந்த நானூறையும் அப்பிடியே தூக்கித் தந்தனான். சாப்பாட்டுக்குத் தவிக்கிற தவிப்பை விட என்ரை புருசன், பிள்ளைகளுக்கு நடுவில நிண்டு பதில் சொல்லேலாமல் நான் தவிக்கிற தவிப்பைத்தான் தாங்க முடியேல்லை." வடிவம் மாமி வாசற் கதவோடு அமர்ந்து விட்டாள்.
சுடுதேநீர் சுவையிழந்து கசந்தது! அவன் நெற்றியைத் தேய்த்து யோசித்து விட்டு எழுந்து சமையலறையை நோக்கி நடந்தான். தனது காதணிகளைக் கழற்றித் துடைத்துக் கொண்டு நின்ற பார்வதி இவனைக் கண்டதும் அவற்றைப் பொறுப்போடு நீட்டினாள்.

"அம்மா என்ன இது...?"

"வடிவம் மச்சாள் எங்கட வாசலுக்கை வந்திருந்து இனிமேல் முணுமுணுக்க வேண்டாம். நாலு குமருகள் இங்கை கரை சேராமல் இருக்குதுகள் எண்டதை அயலண்டைக்கு விளம்பரப் படுத்தவும் வேண்டாம்."

அம்மாவிற்கே அறையலாம் போல அவனின் மனம் குறுகுறுத்தது!

´நான் பாடுபடுகிறதெல்லாம் இதுக்குத்தானா?´ அவன் பொறுமையைக் கஷ்டப் பட்டுப் பற்றிக்கொண்டான்.

"இண்டைக்கு...... வெள்ளிக்கிழமை! இந்த அநியாயம் நடக்க வேண்டாம். இண்டைக்குக் கடை திறக்கலாம் தானே? மூண்டு நாளாய்த் திறபடாத கடையில வியாபாரம் தாராளமாய் நடக்கும். பின்னேரத்துக் கிடையில எப்பிடியும் சேர்த்துக் குடுத்திடுவன்"

துரை வாசலுக்கு வந்த போது வடிவம் மாமி போய்க் கொண்டிருந்தாள்.

"தம்பி....., பின்னேரம் எப்பிடியும் என்ரை கையிலை காசை வைச்சிடு" திரும்பிக் கூறியவள் கேற் வாயிலைத் தாண்டி விட்டாள்.

அவனுக்கு மனம் கனத்தது.

"இத்துடன் மாநிலச் செய்திகள் முடிவடைந்தன......' கடைசித் தங்கை மீனா, வானொலியின் அலைவரிசையை அவசரமாக மாற்றிக் கொண்டிருந்தாள்.

'.....பொங்கும் பூம்புனல்.......' இலங்கை வானொலி நிகழ்ச்சி இசைக்குறியைத் தொடர்ந்து ´வாழும் வரை போராடு....... வழியுண்டு என்றே பாடு......´ என்ற தென்னிந்தியத் திரைப் படப் பாடல் இசைக்க ஆரம்பித்தது.

அவன் திறப்புக் கோர்வையை இடுப்பு வேஷ்டியில் செருகி விட்டு, ´ஷேட்´ கைகளை மடித்து, கிழக்கே திரும்பிக் கண்களை மூடி, இறைதியானம் செய்து விட்டு நம்பிக்கையோடு வீதியில் இறங்கினான்.

"மேனை.... ராசா...."

குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். சின்னாத்தைக் கிழவி நடுங்கிய கரங்களில் பசுஞ்சாணத்தோடு நின்றிருந்தாள்.

"கடைக்குப் போறாய் போலை....."

"ஓமாத்தை..... சொல்லணை" அவன் தயங்கி நின்றான்.

"மதவடியிலை கூட்டமாய் வந்து கொண்டிருக்கிறாங்களாம் ராசா" சின்னாத்தைக் கிழவியின் கலக்கம் அவள் கண்களில் தெரிந்தது.

"அட .....உது நெடுகத்தானே? அவங்கள் போடுவாங்கள்....., நீ யோசியாமல் போணை" துரை மேலும் தாமதிக்காமல, திரும்பி சாதாரணமாக நடக்கத் தொடங்கினான். சின்னாத்தைக் கிழவி இன்னமும் தவிப்போடு திகைத்து நிற்பது அவனுக்குச் சிரிப்பையே கொடுத்தது.

ரவுனுக்குள் சனநடமாட்டம் குறைவாகவே இருந்தது. பட்டியிலிருந்து திறந்து விடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் துடிப்பும் படபடப்பும் அவர்களில் நன்கு தெரிந்தது.

துரை, தனது கடைக் கதவுகளைத் திறந்து நிலத்தைக் கூட்டி, காசு மேசையிலிருக்கும் சுவாமிப் படத்திற்குச் சாம்பிராணி போட்டுவிட்டு நிமிர்ந்த போது ஏனைய கடைகளும் திறக்கப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது.

"தம்பி..., பிறிஸ்டல் ரெண்டு வேணும்" சில்லறை லாச்சியில் விழ, பிறிஸ்டல் சிகரெட்டுகள் இரண்டு இடம் மாறின.

"புண்ணியம் கிடைக்குமண்ணா....." வழக்கமான அழுக்குக் கிழவர்களுக்குப் பதிலாக, ஒரு சிறுமி தலையைச் சொறிந்து கொண்டு அலுமினியக் கிண்ணமொன்றுடன் நின்றிருந்தாள். இவனுக்கு எரிச்சலாக வந்தது.

"புண்ணியம் கிடைக்குமண்ணா... நாங்கள் வவுனியாவிலையிருந்து....."

"அகதிகளாய் வந்திருக்கிறியளாக்கும்.... எனக்கு வேலை, உங்கட பட்டாளத்துக்குக் காசு போடுறதாக்கும!"

துரை தன் எரிச்சலை வார்த்தைகளில் காட்டிவிட்டு முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டான்.

"அண்ணா..... மூண்டு நாளாய் சாப்பாடில்லை, ஒரு வாய் தேத்தண்ணிக்கு மட்டும்...." சிறுமி கலங்கிய கண்களோடு கெஞ்சினாள். அவனுக்கு உள்ளம் தடுமாறியது. லாச்சியை இழுத்தான். ஐந்து ரூபாத் தாளொன்றும், ஒரு ரூபாக் குற்றிகள் இரண்டும், பத்துச் சதங்கள் நான்கும் இருந்தன. ஒரு ரூபாக் குற்றியொன்றை எடுத்து மேசையில் வைத்துவிட்டு நகர்ந்தான்.

மனதிற்குள் இனம்புரியாத பாரம்! வயிறு காலை உணவை எண்ணி உறுத்திக் கொண்டிருந்தது. மண் ´கூசா´ வில் கிடந்த பழைய நீரை வாயில் ஊற்றிக் கொண்டு, ஒருவித வைராக்கியத்தில் அவன் தீவிரமாக வியாபாரம் செய்து கொண்டிருந்தான்.

நண்பகல் பன்னிரண்டு மணியான போது முந்நூற்றி அறுபது ரூபா சேர்ந்திருந்தது. அவன் சற்றுத் தெம்போடு காணப்பட்டான்.

´பின்னேரம் நாலு மணிக்கிடையில நானூறுக்கு மேல் சேர்ந்து விடும்.´

மதியவேளைக்குப் பின் வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்த போது, யாழ்ப்பாண ´மினி பஸ்´ ஒன்று மூச்சுப் பிடித்தபடி வந்து, கிறீச்சிட்டு நின்றது. பாய்ந்திறஙகும் ஜனங்களிடத்தில் ஒருவித பரபரப்பும் பதற்றமும் தெரிந்தன! அவர்கள் நடை வேகம் அதிகமாகி.... அதிகமாகி ´ரவுண்´ திடீரென்று கிலிப்பிடித்துத் தீவிரமாகக் கலையத் தொடங்கியது!

"வாறாங்களாம்.... வாறாங்களாம்...."

கடைகள் மிக வேகமாக மூடப்பட்டுக் கொண்டிருந்தன. துரை அவசரமாக மேசை ´லாச்சியை´ இழுத்து, காசுத்தாள்களை அள்ளி, பெனியனுக்குள் திணித்து, சில்லறைகளை வழித்து ´பாக்´கினுள் கொட்டிய போது, தூரத்தில் வித்தியாசமான வாகன இரைச்சல் கேட்கத் தொடங்கியது. கதவை இழுத்துப் பூட்டைக் கொழுவி விட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, குச்சு ஒழுங்கைகளினூடே திரும்பி ஓட்டமும் நடையுமாக வீட்டை வந்து அடையும் போது பார்வதியும் பிள்ளைகளும் ஏக்கத்துடன் காத்து நிற்பது தெரிந்தது!

"என்ரை ராசா.....! வந்திட்டியே?"

"அண்ணா, மதவடியில் நாலு பேர் விழுந்து கிடக்கினமாம்..., நாங்கள் உன்னை நினைச்சுத்தான் நல்லா பயந்து போனம்"

பல குரல்கள் வாசலில் ஒலிக்கத் தொடங்கிய போது அவன் பெருமூச்சு விட்டவாறே உள்ளே நுழைந்து கொண்டான்.

பெனியனிற்குள்ளிருந்து எடுத்த பணத்தை எண்ணி, நானூறைப் புறம்பாக வைத்தபோது ஆறு ரூபா எஞ்சியது! அதனைப் பார்வதியின் கையில் வைத்து விட்டு, வடிவம் மாமியின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். தெருமுனையில் வடிவம் மாமி, தனது மாட்டைத் தேடிக் கயிற்றோடு வருவது தெரிந்தது.

"மாமி...." அவன் காசை நீட்டினான்.

"துரை! நல்ல காரியம்...... என்ரை நாணயத்தையும் காப்பாத்திப் போட்டாய்...." மகிழ்ச்சிப் பூரிப்பினால் வந்த வார்த்தைகளை பூரணமாக வெளியிட முடியாமல், திரும்பி நடக்கத் தொடங்கினாள் வடிவம் மாமி.

துரை ஒருவித ஆழ்ந்த நிம்மதியோடு வீட்டை நோக்கித் திரும்பினான். இப்போ, அவன் நடையில் ஒரு தலை நிமிர்வும், திருப்தியும், சந்தோசமும் இருந்தது. இவனைக் கடந்து சென்று கொண்டிருந்தவர்களின் பரபரப்பை இரசித்துக் கொண்டு வந்தவன் வீட்டை அண்மித்த போது .....பார்வதியும் மற்றவர்களும் விறைத்துப் போய் நின்றிருப்பது போல் தெரிந்தது!?

"என்னம்மா.... என்ன விசயம்? ஏன் எல்லாரும் ஒருமாதிரி நிற்கிறீங்கள்....?" துரை புரியாமல் யோசனையோடு அவசரமாகக் கேட்டான். பார்வதியின் கைகள் படபடக்க, உதடுகள் துடிதுடித்தன.

"என்னம்மா.... ...சொல்லுங்கோவன்" இவனையும் மீறி இவனுக்கு இதயம் படபடத்தது.

"ரவுணெல்லாம் பற்றி எரியுதாம் ராசா...." பார்வதியையும் மீறி அவள் குரல் வெடித்துக் கொண்டு வெளியில் வந்தது.

"கட...வுளே...! அம்மா.....அ...." அவன் கால்கள் பின்ன, தள்ளாடி, வாசற் படியில் அமர்ந்தான். தூரத்தே.... கரும்புகை, சிவப்புப் பொறிகளோடு போட்டியிட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தது.

"துரை.... துரை... .ராசா...." ஓலங்கள் பூமிக்குள்ளிருந்து வருவது போல....!

அவன் மேலே அண்ணாந்து, கரிய வானத்தில், தெரியாத புள்ளியொன்றைப் புரியத பாவத்துடன் தேடிக்கொண்டிருந்தான்.

- சந்திரா ரவீந்திரன்

பிரசுரம் - சிரித்திரன்,
மூன்றாம் பரிசு பெற்ற கதை
நிழல்கள்´ சிறுகதைத் தொகுப்பிலிருந்து

ஆசை வெட்கமறியாதோ..?

- குரு அரவிந்தன்
 
(நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள். ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது, மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது. சரியா பிழையா தெரியவில்லை. )

ழுபது கிலோ மீற்றர் வேகத்தில் சென்ற நான் சைகைவிளக்கு சிகப்பு நிறத்திற்கு மாறவே வண்டியை நிறுத்தினேன். அதே வேகத்தில் வந்த அவள் எனது வண்டிக்கு அருகே தனது சிகப்புநிற வண்டியை நிறுத்திவிட்டு உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள். இப்படியான முகஅலங்காரங்களை சாதாரணமாக சைகை விளக்குகளில் வண்டியை நிறுத்தும் போது பெண்கள் செய்வது வழக்கம். ஆனால் இவள் தலையை ஒரே சீராக வேகமாக அசைத்துக் கொண்டு உதட்டுக்கு அலங்காரம் செய்ததால் அவளது அந்தச் செய்கை என்னை அவளது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. ஏதாவது பாட்டைப் போட்டுவிட்டு அதற்கேற்பத் தலையசைக்கின்றாள் என்பது புரிந்தது. இளமை ஒருபக்கம் அவளிடம் துள்ளி விளையாட, அவள் சுறுசுறுப்பாகவும், அழகாகவும் இருந்தில் என்னை அவள் கவர்ந்திருந்தாள். பச்சை விளக்கு எரியவே நான் வண்டியை முன்நோக்கி ஓட்டிச் சென்றேன். அடுத்த பச்சை விளக்கைத் தாண்டும் போது சட்டென்று மஞ்சள் விளக்கு எரிந்தது. கடந்து மறுபக்கம் போய்விடலாம் என்றுதான் நினைத்தேன், ஆனால் முன்னால் சென்ற வண்டிகள் ஏதோகாரணத்தால் மெதுவாக நகரத் தொடங்கவே எனது வண்டி பாதுகாப்புக் கோட்டைக் கடக்கும்போது சிகப்பு விளக்கு எரியத் தொடங்கிவிட்டது. பொதுவாக வீதியைக் கடக்கும்போது இப்படியாக நடப்பதுண்டு என்பதால் ஏதோ கற்பனையில் இருந்த நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இரண்டு வாரங்கள் கழித்து எனக்கு சிகப்பு விளக்கில் தெருவைக் கடந்ததற்காகத் தண்டப்பணம் கொடுக்கும்படி தபாலில் அறிவிப்பு வந்தது.
அங்கே அந்த சந்தியில் கண்காணிப்புக் கமெரா இணைக்கப்பட்டிருந்ததை அவர்கள் அனுப்பிய படத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. எனது வண்டி கோட்டைத் தாண்டும்போது சிவப்பு விளக்கு எரிவதைத் துல்லியமாகத் தானியங்கிக் கமெரா படம் பிடித்திருந்தது. எனது கவனமெல்லாம் அவளது சிகப்பு நிற வண்டியில் இருந்ததால் நான் பாதையைக் கடக்கும்போது கமெராவைக் கவனிக்காமல் போயிருக்கலாம். அவர்கள் ஆதாரத்திற்காக அனுப்பிய புகைப்படத்தில் இன்னுமொரு விடயத்தை என்னால் அவதானிக்க முடிந்தது. அதாவது எனக்கருகே வண்டி ஓட்டிக் கொண்டு வந்த அந்தப் பெண்ணின் சிகப்பு நிற வண்டியும் எனது வண்டியைப் போலவே சிகப்பு விளக்கில் அகப்பட்டிருந்தது.

வண்டியின் இலக்கத்தை எடுத்து நண்பன் மூலம் எப்படியோ அவளது தொலைபேசி இலக்கத்தைக் கண்டறிந்து அவளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். முதலில் ஒன்றுமே தெரியாதது போல நடித்தவள் அந்தப் படத்தில் அருகே இருப்பது தனது வண்டிதான் என்பதை ஏற்றுக் கொண்டாள். தனது பெயர் நிஷா என்றும், தனக்கும் தண்டப்பணம் கட்டும்படி அறிவிப்பு வந்திருப்பதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டாள். அவளது முகத்தை மட்டும் ஞாபகம் வைத்திருந்த எனக்கு அவளது குரலிலும் ஒருவித கவர்ச்சி இருப்பது, அவளோடு தொலைபேசியில் பேசும்போது புரிந்தது.

தண்டப்பணம் கட்டினால் புள்ளிகள் பறிபோய்விடும், அதனால் வண்டிக்கான காப்புறுதி அதிகரித்து விடும் என்பதை அவளுக்கு விளங்கப்படுத்தினேன். நான் ஒரு சட்டத்தரணி என்பதைச் சொல்லி, எனக்காக நான் வாதாடும்போது அவளுக்கும் சேர்த்து வாதாடப்போவதாகச் சொன்னேன். முதலில் தயங்கியவள் ஒருவிதமாக ஒப்புக் கொண்டாள். அவளை முதன்முதலாகக் கண்ட அன்றே அவள்மீது எனக்கு ஒருவகை ஈர்ப்பு இருந்ததால் அவளது சம்மதம் எனக்குள் ஒருவித கிளுகிளுப்பை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான்.

நான் தண்டப்பணம் சம்பந்தமாக சில விவரங்களை அவளிடம் கேட்டிருந்தேன். நானே அவளிடம் வந்து பெற்றுக் கொள்வதாகச் சொன்னபோது அவள் அதை மறுத்து தானே நேரில் கொண்டு வந்து தருவதாகச் சொன்னாள். எனவே தொடர்பு கொள்வதற்குச் சாதகமாக எனது செல்பேசி இலக்கத்தைக் கொடுத்திருந்தேன். மறுநாளே அவள் என்னைத் தொடர்பு கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு என்னைத்தேடி வந்திருந்தாள். எங்கேயாவது தனியாக உட்கார்ந்து ஆறுதலாகப் பேசலாம் என்று நினைத்து அவளை அழைத்தேன்.

‘வாங்க, ரிம்ஹோட்டனில காப்பி குடிச்சிட்டே உட்கார்ந்து பேசுவோமா?’ என்றேன்.
தலையசைத்துவிட்டு என்னோடு வந்தாள். ஆளுக்கொரு காப்பி எடுத்துக் கொண்டு ஓரமாய் உட்கார்ந்தோம்.
‘அப்புறம் சொல்லுங்க, நீங்க இங்கேதான் பிறந்தீங்களா நிஷா?’
‘ஆமா, நான் இங்கேதான் பிறந்தேன். எங்க அப்பா அம்மாதான் சிலோன்லை இருந்து வந்தவங்க’
‘இலங்கையில் எங்கே..?’ என்றேன்.
‘யாழ்ப்பாணம்’ என்று மொட்டையாய்ச் சொன்னாள்.
உங்க குடும்பத்தில நீங்க எத்தனைபேர், நீங்கதான் மூத்த பெண்ணா?
அவள் நெற்றியைச் சுருக்கி என்னை ஒரு மாதிரிப்பார்த்தாள்.
‘எனக்குத் தெரியுமே, ஏற்கெனவே சொன்னாங்க நான்தான் நம்பவில்லை’ என்றாள்.
‘என்ன சொன்னாங்க, யார் சொன்னாங்க?’ என்றேன்.
‘சொன்னாங்க, கொஞ்சம் இடம் கொடுத்தா எல்லாமே விசாரிப்பாங்க என்று சொன்னாங்கள்.’
‘எல்லாமே என்றால்?’
‘ஊரைச் சொன்னால், ஊரில வடக்கா கிழக்கா தெற்கா மேற்கா என்றெல்லாம் கேட்பாங்க என்று சொன்னாங்கள்´ என்றாள்.
‘ஓ அதுவா உங்க பிரச்சனை, நான் அதைக் கேட்கவில்லை. எனக்கு அது தேவையுமில்லை’
‘அப்போ என்னோட பிறந்த தினத்தை வைத்து எண்சோதிடம் பார்க்கப் போறீங்களா?’
‘என்ன நீங்க எல்லாமே தப்புத் தப்பாய் சிந்திக்கிறீங்க’

‘இப்ப எதுக்கு என்னை இங்கே வரச் சொன்னீங்க, இது எங்க முதலாவது டேற்ரிங் தானே?’ என்று அதிரடியாய்க் கேட்டாள்.
‘டேற்ரிங்கா என்ன சொல்லுறீங்க?’ எனக்குக் மெல்ல உதறல் எடுத்தது.
‘அப்போ ஏன் வரச்சொல்லிக் கூப்பிட்டீங்க’ என்றாள்.
‘நானா வரச்சொன்னேன், நீங்க தானே வருவதாகச் சொன்னீங்க, வந்த இடத்தில் ஒரு காப்பி சாப்பிடுவோமா என்று உங்களை உபசரித்தது தப்பா?’ என்றேன்.

‘நானா கேட்டேன், நீங்கதானே காப்பிக்குக் கூப்பிட்டீங்க, அப்புறம் இன்னொருநாள் டினருக்குக் கூப்பிடுவீங்க, அது இரண்டாவது டேற்ரிங்காய் போயிடும், அப்புறம் மூண்டாவது டேற்ரிங்.. தெரியும்தானே மூணாவது தடவை சந்திக்கும்போது என்ன செய்வாங்க என்று’  சொன்னவள் மீதமிருந்த காபியை உறிஞ்சியபடியே என் முகத்தில் ஏதாவது மாற்றங்கள் தெரிகிறதா என்று விழி உயர்த்திப் பார்த்தாள்.

இவளோடு கவனமாகப் பழகவேண்டும் என்று என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். இங்கே பிறந்தவள் என்பதால் டேற்ரிங் என்பதை சாதாரண விடயமாக எடுத்துக் கொள்கிறாளா, எனக்கும் அவளுக்கும் இந்த விடயத்தில் என்ன வித்தியாசம். நாங்களும் எமக்குப் பிடித்தவர்களோடு ஆண் பெண் வித்தியாசம் பாராட்டாமல் பழகுகின்றோம். கொஞ்சம் நெருக்கமாகப் பழகும்போது அவர்களைப் புரிந்து கொள்கிறோம். அவர்கள் எதிர்ப்பாலாக இருந்தால் சிலசமயம் அவர்கள்மீது எங்களுக்கு ஒரு வகை ஈர்ப்பு எற்படுகின்றது. இருவருக்கும் நல்ல புரிந்துணர்வோடு ஒருவர்மேல் மற்றவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டால் அதைச் சந்தர்ப்பம் பார்த்து வெளிப்படுத்துகின்றோம். இதுதான் காதலாகிறது. அந்தக் காதல்தான் அடுத்த கட்டத்திற்குச் சென்று காதல் திருமணமாகிறது. ஏதாவது காரணங்களால் இந்தக் காதல் தடைப்பட்டும் போகலாம். எங்களுடைய இந்தக் கலாச்சாரத்தைத்தான் இவள் தவறாகப் புரிந்து கொண்டு எடுத்ததற்கெல்லாம் டேற்ரிங் என்கிறாளோ என நினைக்கத் தோன்றியது.

வழக்குச் சம்பந்தமாக அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். மீண்டும் ஒருதடவை சந்தித்துக் கொண்டோம். நீதிமன்றத்தில் வழக்கு எடுக்கப்பட்ட திகதியைத் தொலைபேசி மூலம் அவளுக்குத் தெரியப்படுத்தியிருந்தேன். கட்டாயம் வருவதாகச் செல்லியிருந்தாள்.

வாகனப்போக்குவரத்து நீதி மன்றத்தில் இந்த வழக்கு எடுக்கப்பட்டபோது சொன்னபடியே அவளும் அங்கே வந்திருந்தாள். பனிக்காலமாகையால் வீதிப்பாதுகாப்பு காரணமாக மெதுவாகவே வண்டிகள் ஊர்ந்தன என்பதை முக்கிய காரணமாக எடுத்து அதை நீதிபதிக்கு விளங்கப் படுத்தினேன். எனது வாதத்தை நீதிபதி ஏற்றுக் கொண்டு வழக்கைத் தள்ளுபடி செய்திருந்தார். தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாகவே அமைந்திருந்ததால் அவள் முகத்தில் புன்னகை பூத்திருந்தது. இருவரும் நீதிமன்ற அறையைவிட்டு வெளியே வந்து வண்டியை நோக்கி நடந்தோம்.

அருகே வந்து கைகொடுத்து நன்றி சொல்லிவிட்டு கைப்பையை எடுத்தபடி ‘உங்க பீஸ்’ என்றாள்.
‘நான் பெரிதா எதுவம் செய்யவில்லை. எனக்காக வாதாடும்போது உங்களுக்கும் சேர்த்து வாதாடினேன். அவ்வளவுதான்’ என்றேன்.
‘இல்லை வேறுயாரிடமாவது சென்றிருந்தால் நான் பணம் கொடுத்துத்தானே வாதாடியிருப்பேன். இது உங்க தொழில், சொல்லுங்க எவ்வளவு?’ என்றாள்.
‘எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டேன் என்றால் நான் என்ன செய்யிறது. இதை ஒரு கடனாய் நினைச்சால் தாங்க, உங்க மனம் நோகக் கூடாது என்பதற்காக வாங்கிறேன்’ என்றேன்.
‘நானும் உங்க மனசை நோகவைக்கவில்லை. உங்களைப்பற்றி நிறையவே அறிந்து வைத்திருக்கிறேன், யூ ஆ ஸோ ஸிமாட் அதனாலே.. நீங்க செய்த இந்த உதவிக்கு ஏதாவது தரணும்..!’
‘விடமாட்டீங்க போல இருக்கே, உங்க இஷ்டம். தருவதை வாங்கிக் கொள்கிறேன்’ என்றேன்.

அவள் அருகே வரவே ஏதாவது பணம் கொடுக்கப்போகிறாள் என நினைத்தேன், ஆனால் அவள் இச் சென்ற ஓசையோடு எட்டி ஒரு முத்தம் கொடுத்தாள். எதிர்பாராத முத்தத்தால் ஒருகணம் நான் உறைந்து போயிருந்தேன். யாராவது பார்த்திருப்பார்களோ என்ற அச்சத்தில் அக்கம் பக்கம் பார்த்தேன். இவ்வளவு விரைவில் அதிகம் பழகாத ஒரு பெண்ணிடம் இருந்து முத்தம் கிடைக்குமா? அவள் இந்த சூழ்நிலையில் வளர்ந்தவள் என்ற துணிச்சலா? எனது சிந்தனையின் இடைவெளியில் அவள் மறைந்து போயிருந்தாள். மூன்றாவது சந்திப்பில் என்ன நடக்குமென்று தெரியும்தானே என்று இதைத்தான் அன்று அவள் சொன்னாளா?

வண்டியில் ஏறி, கண்ணாடியில் கன்னத்தைப் பார்த்தேன். உதட்டுச்சாயம் மெல்லிய கோடாய்ப் பதிந்திருந்தது. இதுவரை இல்லாத, சொன்னால் புரியாத இனிய உணர்வுகள் உடம்பெல்லாம் பரவியது. மறுகன்னத்தையும் காட்டியிருக்கலாமோ என்று ஒருகணம் எண்ணத் தோன்றியது. டேற்ரிங் என்றால் என்னவென்று புரிந்தது போலவும் புரியாதது போலவும் ஒருவித தடுமாற்றமிருந்தது.

அடுத்த சந்திப்பு எப்போ கிடைக்கும் என்று மனசு ஏங்கத் தொடங்கியதென்னவோ உண்மைதான். நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள். ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது, மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது. சரியா பிழையா தெரியவில்லை. அந்த நேரம் எல்லாமே ஒன்றுதான் என்பது போல மயக்கமாயுமிருந்தது. அவள் சென்று நெடுநேரமாகியும் அவளது மூச்சுக் காற்று எனது காதுமடலை வருடிக்கொண்டிருந்தது.

 - குரு அரவிந்தன்

மீளவிழியில் மிதந்த கவிதை..!

 - குரு அரவிந்தன்    

(மீளவிழியில் மிதந்த கவிதையெல்லாம்
சொல்லில் அகப்படுமோ?)

மின்னல் அடித்ததுபோல எல்லாமே சட்டென்று நடந்துவிட்டது. அதிர்ச்சியில் இருந்து நான் மட்டுமல்ல, அவளும் மீளவில்லை என்பதை அவளது அந்தப் பிடி உணர்த்தியது.

எவ்வளவு லாவகமாய் அவள் என்னைக் கடந்து சட்டென்று திரும்பி பின்பக்கமாய் வந்து என்னை இறுக்கி அணைத்தாள் என்பது எனக்கே வியப்பாக இருந்தது. தன்னைப் பாதுகாக்க என்னை முன்னால் தள்ளி நிறுத்தினாளோ, அல்லது எனது ஆண்மையில் அவளுக்கு இருந்த அதீத நம்பிக்கைதான் காரணமோ தெரியவில்லை, எதுவாய் இருந்தால் என்ன, என்னை நம்பிச் சரணடைந்தவளைக் காக்கவேண்டியது எனது பொறுப்பு என்பதை உணர்ந்து அவளுக்கு அடைக்கலம் கொடுத்தேன்.

தற்செயலாகத்தான் அது நடந்தது, பாடசாலையால் வரும்போது அவளது பென்சில் பெட்டி தெருவில் விழுந்து விடவே அதைக் குனிந்து எடுக்க முயன்றபோது, முன்வீட்டு வாசலில் படுத்திருந்த நாய் தன்னைத் தாக்கத்தான் எதையோ எடுக்கிறாள் என்ற பயத்தில் அவளைத் துரத்தத் தொடங்கியது. அந்தச் சமயம் பார்த்து நானும் எங்கள் வீட்டுக் கேற்றைத் திறந்து வெளியே வந்தேன். அதனால்தான் பாதுகாப்புத் தேடி ஓடிவந்து அருகே நின்ற என்னைக் கட்டிப்பிடித்தாள். அழகு ஓவியம் ஒன்று இதமான உடம்பும் சதையுமாய் என்னைத் திடீரெனக் கட்டிப் பிடித்ததில் நான் அதிர்ந்து போனதென்னவோ உண்மைதான். அதுவும் சிலநாட்களாக யார்மீது எனக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டிருந்ததோ, அவளே வலியவந்து என்னை அணைப்பதென்றால்? ஒரு ஸ்லோமோஷன் காட்சிப்படம் போல அந்தக் காட்சி என் மனதில் திரும்பத்திரும்ப நிழலாடிக் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது. சொர்க்கத்திற்குப் போனது போன்ற அந்த இனிய சுகம் அதிக நேரம் நீடிக்கவில்லை. அதிர்ச்சியில் இருந்து அவள் மீண்டபோது, பெண்மைக்கே உரிய நாணம் அவளைச் சட்டென்று விலகி நிற்கவைத்தது. வேர்த்து வியர்திருந்த முகத்தில் இன்னமும் பயக்களை தெரிந்தது. இப்பொழுதும் அவளது உடம்பு லேசாகப் பதறிக் கொண்டிருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. மூச்சு வாங்க ஓடி வந்ததில் அவளது மார்பகம் மேலும் கீழும் ஏறி இறங்கியது. பாடசாலையின் மெல்லிய வெள்ளைச் சீருடை ஆங்காங்கே வியர்வையில் தோய்ந்து போனதில் அந்த இடத்தை மட்டும் சூரியவெளிச்சம் வட்டம் போட்டு அதிசயமாய்க்  காட்டியது. வயசுக் கோளாறோ என்னவோ எனது பார்வை சட்டென்று அங்கேபட்டுத் தெறித்தபோது, அவள் என்னை அணைத்தபோது ஏற்படாத உணர்வு அந்த வனப்பில் கிளர்ந்தெழுந்தது. வேறு நேரம் என்றால் எனது பார்வையின் உக்கிரத்தை அவள் புரிந்து கொண்டிருப்பாள், இப்போதைய நிலையில் சுயமாக இயங்க முடியாமல் தடுமாறியதில் அவள் அதைக் கவனத்தில் எடுக்கவில்லை என்பது எனக்குப் புரிந்தது. தப்பாத இடத்தில் தப்பான பார்வை என்பதால் வலிந்து பார்வையைத் திசை திருப்பினேன்.

‘இதிலே கொஞ்ச நேரம் இருங்க..!’ அருகே இருந்த மரக்குற்றியைக் காட்டிச் சொன்னேன்.

அவள் பாதையைத் திரும்பிப் பார்த்தபடியே தயக்கத்தோடு உட்கார்ந்தாள். உட்கார்ந்ததும் ஓடிச்சென்று ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன்.
அதை வாங்கிய அவள் என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்தபடியே என்னை மேலும் கீழும் பார்த்தாள்.
‘பயந்து போயிட்டீங்க, இதைக் கொஞ்சம் குடியுங்க..’ என்றேன்.
சுயமாக இயங்கமுடியாமல் எனது வழி நடத்தலுக்காகவே காத்த்திருந்தவள்போல, மளமளவென்று தண்ணீரைக் குடித்தாள்.
முருகனுக்கு ஒரு பிள்ளையார் யானை உருவில் வந்தது போல எனது காதலுக்குப் பைரவர் நாயின் உருவில் உதவிக்கு வந்தாரோ? என்று தெருவிலே விழுந்து கிடந்த புத்தகங்களை ஒவ்வொன்றாகப் பொறுக்கும்போதும் மனசுக்குள்  யோசித்தேன். பொறுக்கிய புத்தகங்களை அப்படியே எடுத்து வந்து அவளிடம் கொடுத்தேன். வாங்கிக் கொண்டாள், நன்றி சொல்லவில்லை. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாத அதிர்ச்சி நிலையில் அவள் இருந்தாள்.

‘ஆ யூ ஓகே..?’ என்று வினாவினேன்.
கனவுலகிலிருந்து கலைந்து ‘ஓம்’ என்று என்னை நிமிர்ந்து பார்த்துத் தலை அசைத்தவள், மீண்டும் மெல்லத் தலை குனிந்தாள். அதுவே அவள் அழகிற்கு அழகு சேர்த்தது.

சற்றே தலை குனிந்தாள், சாமீ! இவளழகை
எற்றே தமிழில் இசைத்திடுவேன்? கண்ணிரண்டும்
ஆளை விழுங்கும் அதிசயத்தைக் கூறுவனோ?
மீள விழியில் மிதந்த கவிதையெல்லாம்
சொல்லில் அகப்படுமோ?


ஏக்கப் பெருமூச்சு விட்டபடி மெதுவாக எழுந்து வீதியைத் திரும்பிப் பார்த்தபடியே வீடு நோக்கி நடந்தாள். என்னைத்தான் திரும்பிப் பார்த்தாளோ அல்லது திரும்பவும் தன்னை அந்த நாய் துரத்தலாம் என்ற பயத்தோடு திரும்பிப் பார்த்தாளோ தெரியவில்லை. அவளுக்கு சற்றுமுன் நடந்ததை நினைத்துப் பயம் இருந்திருக்கலாம். நாய் துரத்தாவிட்டாலும் என் மனம் அவளைப் பின்னால் துரத்திக் கொண்டே சென்றதை அவள் அறிந்திருக்க நியாயமில்லை. ஏக்கப் பார்வையோடு அவள் பிரிந்தபோது, பாரதி கண்ட கனவுகளை எனக்குச் சொந்தமாக்கி, அவளிடம் கண்ட அந்த ஆளை விழுங்கும் அழகை எனக்குள் மென்று சுவைத்துப் பார்த்தேன். நான் நானாக இல்லை என்பதை என்னைவிட்டு அவள் பிரிந்த அக்கணமே நான் உணர்ந்து கொண்டேன்.

அவள் என்னைவிட ஒரு வகுப்பு மேலே படித்துக் கொண்டிருந்தாள். பள்ளிச் சீருடையில் கூட்டமாக மாணவிகள் போகும்போது மற்றவர்களைவிட அவள் மட்டும் வித்தியாசமாய் என் கண்களில் பட்டாள். தினமும் எத்தனையோ பெண்களைப் பார்த்தாலும், என்னைக் கவரக்கூடிய ஏதோ ஒருவித கவர்ச்சி அவளிடம் இருந்திருக்கிறது. அதுதான் என் மனம் நேரகாலம் தெரியாமல் அவளைத் துரத்தித் திரிகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். அவள் கல்லூரி சீருடையில் மட்டுமல்ல எந்த உடையிலும் சிரித்த முகத்தோடு அழகாகவே இருந்தாள். அந்த நிகழ்வின்பின் என்னைக் கண்டால் ஒரு புன்சிரிப்புடன் தலை குனிந்து கொள்வாள். பெண்மையின் நளினம் அவளது ஒவ்வொரு அசையிலும் வெளிப்படுவதைத் தினமும் அவதானித்தேன். எனக்குள் மெல்ல மெல்லக் காதலை வளர்த்துக் கொண்டேனே தவிர காதலைச் சொன்னதில்லை. சொல்ல நினைத்தாலும் விலாங்கு மீன்போல நழுவிக் கொண்டேயிருந்தாள்.
 
ஒரு நாள் படிப்பதற்கு ஏதாவது கதைப்புத்தம் இருக்குமா என்று வலிய வந்து கேட்டாள். கிடைத்த சந்தர்ப்பத்தை ஏன் நழுவவிடுவான் என்று குறுஞ்சிமலர் நாவலை அவளிடம் கொடுத்தேன். படித்துவிட்டு மிகவும் அருமையான நாவல் என்று வர்ணித்தாள். ஏன் என்று வினாவினேன். அதில் வரும் கதாநாயகனின் பெயர் தனக்கு மிகவும் பிடித்த பெயர் என்றாள். அதன்பின் எங்களிடையே புத்தகப் பரிமாறல் அடிக்கடி தொடர்ந்து கொண்டிருந்தது.

நாட்டின் போர்ச் சூழல் காரணமாக நாங்கள் பயந்து பயந்தே தினமும் வாழவேண்டி வந்தது. ஒருநாள் எங்கள் ஊரைநோக்கி இராணுவம் திடீரென முன்னேறுவதாகச் செய்தி வந்தது. நாங்களும் எங்கே போவது என்று தெரியாமல் அவசரமாக இடம் பெயர்ந்தோம். உயிர் வாழ ஆசைப்பட்டு ஆளுக்கொரு திசை நோக்கிச் சென்றதால் அவளை நான் மீண்டும் சந்திக்கவில்லை. நான் புலம் பெயர்ந்து வெளிநாடு வந்திருந்தேன். அவளும் அப்படியே ஏதாவது வெளிநாட்டிற்குப் போயிருக்கலாம் என்று என்னைச்சமாதானப் படுத்திக்கொண்டு மறைமுகமாக அவளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டேன்.

மின்னஞ்சல்கள் தினமும் நிறைய வந்து குவிந்து கொண்டிருக்கும். இலவசம் என்பதால் விரும்பியவர்கள் எல்லாம் திக்கெட்டில் இருந்தும் அனுப்பிக் கொண்டிருப்பார்கள். வேண்டாதவற்றை அழிப்பதே மிகவும் சிரமமாக இருக்கும். அன்றும் ஆர்வம் காரணமாக நண்பன் ஒருவன் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றைத் திறந்து பார்த்தேன். வன்னியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பிரதி பெறுபவளின் பக்கம் என் கவனம் திரும்பியது. அவளேதான், இயக்கப் பெயராக இருக்கலாம் பெயர் மட்டும் மாற்றப்பட்டிருந்தது. அப்படி என்றால் அவள் அங்கேதான் இருக்கிறாளா? இது எப்படிச் சாத்தியமாயிற்று, ஒரு நாயைக் கண்டு பயந்து அந்த ஓட்டம் ஓடியவள், துப்பாக்கி ஏந்துவாளா? என்னால் கடைசிவரை நம்பமுடியாமலே இருந்தது. தமிழர் வாழ்ந்த நிலமெல்லாம் இராணுவத்தால் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கப்பட்டது. யுத்தம் ஓய்ந்து வன்னி நிலம் பறிபோனபோது அவளுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. எந்த ஒரு செய்தியும் அவளைப்பற்றிக் கிடைக்கவில்லை.

தினமும் வரும் திடுக்கிடும் செய்திகளைக் கேட்கும்போதும், படங்களைக் காணொளிகளைப் பார்க்கும் போதும் அவளை நினைத்து என் மனம் வேதனையில் தடுமாறும்.

மாவீரர் தினத்திலன்று ஒவ்வொரு முறையும் மலரஞ்சலி செய்யும் போது என்கண்கள் பனிக்கும். கார்த்திகைப் பூக்கள் சூடுவதற்கல்ல, அர்பணிப்பதற்கே என்பதும் எனக்குத் தெரியும். ஆனாலும் அர்பணிக்கும் அந்த மலர்கள் நிச்சயமாக அவளுக்காக இருக்கக்கூடாது என்று ஒவ்வொரு தடவையும் என்மனம் சுயநலமாய் நினைக்கவைக்கும்.
 
ஏனோ இம்முறை மட்டும் மலர் வைக்கும்போது என்னை அறியாமலே குலுங்கிக் குலுங்கி அழுதேன். அன்று காணொளியில் பார்த்த அந்தக் காட்சி என்னை மீண்டும் மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உறைய வைத்திருந்தது. யாருக்காக அவள் தன்னுயிரைத் தந்தாள்?

மண்மீது கொண்ட காதலால்
மண்ணின் மானம் காக்கத்
தன்னையே தந்த அவளது அந்த
மீள விழியில் மிதந்த வலியெல்லாம்
சொல்லில் அகப்படுமோ?

பிரிவு....!

- Athanas Jesurasa

அது அற்புதமாக இருந்தது. நிச்சயமாக எனக்குத் தெரியும், 8.30க்கு ‘மூர்’ றோட்டில் தண்டவாளத்தின் ஓரமாக என்னைக் கடந்துபோகும் அந்தச் சிங்களப் பெட்டையை வைத்தே, அச் சிறுகதைஎழுதப்பட்டிருக்க வேண்டும்.

கையில் குடையோடும், சிந்தனை தேங்கிய முகமாயும் மெல்ல நடந்துபோகும் அவள்,சோகம் நிறைந்தவளாக  மனோரம்மியமான நடையில் பாத்திரமாகி இருந்தாள்.

யாரோ‘மூர்’ றோட்டிற்கும் ஸ்ரேஷனிற்குமிடையில் இருந்து 8.35 ட்றெயினுக்குப் போகும் ஒருவரே, அதை எழுதியிருக்கவேண்டும். எழுதியவரை அறிய நான் ஆவலாயிருந்தேன். அது‘வீரகேசரி’யில் வந்து, இரண்டு மூன்று கிழமைகளும் கழிந்துவிட்டன. 2
 அதுஎதிர்பாராமல் நிகழ்ந்தது. ‘சரஸ்வதி மண்டபத்’தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாமுடிந்து திரும்பிக்கொண்டிருந்தபோது, ஞானலிங்கம் அவரை அறிமுகப்படுத்தினான்.

“இவர்தான் சுப்பிரமணியன். நீர் முந்திச்சொன்ன ‘உறவுகள் பிரியும்’ கதையைஎழுதினவர்.”

சந்தியில் ஞானலிங்கம் விடைபெற்றுக் கொள்ளுப்பிட்டிக்குச் சென்றான். நாங்கள்வெள்ளவத்தைக்குக் கதைத்தபடி நடந்தே வந்தோம்.

அந்த வீரகேசரிக் கதையை நான் பாராட்டியபோது, அவர் நன்றி தெரிவித்தார். “கடற்கரையால போகிற, அந்தச் சிங்களப் பெட்டையைத் தானே அதில் எழுதியிருக்கிறீர்” எனநான் கேட்டபோது சிறிது தாமதித்துவிட்டு, தன் நண்பரைப் பார்த்து,

“நீரும் அந்தப் பெட்டையைக் கண்டிருக்கிறீர்தானே? உமக்கு அதைத்தான் எழுதியிருக்கிறனெனத்தெரிய இல்ல! நீர் ஒண்டும் அதப்பற்றிச் சொல்ல இல்ல” என்றபடி என்னைப் பார்த்து,

“நீர்தான் ஐசே சரியாய்ப் பிடிச்சிருக்கிறீர்!” என்று, மெல்லிய வெட்கச்சிரிப்புடன் சொன்னார். தொடர்ந்தும் கதைத்தபடி இருந்தார். அவரோடு கதைப்பதிலும்ஆவலாக இருந்தது.

இடுப்பளவில் உயர்த்தப்பட்ட இடது கையும் சிறிது சாய்ந்த தலையுமாக, கிறுகிறெனச் சிறிய கவடுகள் பதித்து நடந்தபடி அவர் கதைப்பது, விசித்திரமாய்த்தான் இருக்கும்.

பேச்சிடையே, தன்னைப்பபற்றிய விஷயங்களிற்கூட “இருக்கும், சில வேளை எழுதியிருப்பன், எழுதாமலும் இருந்திருப்பன்.... எனக்குத்தெரியாது....” எனத் தன்னைப்பற்றித் தனக்கே நினைவில்லாததைப்போல அவர் கதைத்தபோது, எனக்கு விசித்திரமாக இருந்தபோதும், அதனாலேயே தொடர்ந்தும் அவரோடு தொடர்புகொள்ள ஆவல்ஏற்பட்டது.

3
அதன் பின்னால் ‘ஸ்ரேஷனி’ல் நாங்கள் சந்தித்துக்கொள்வோம்.அந்த 8.35 ஸ்லோ ட்றெயின் கோட்டையை அடையும் வரை, அந்தப் பதினைந்து நிமிடங்களில் நாங்கள் கலை இலக்கிய விடயங்களைப் பற்றிக் கதைத்துக் கொள்வோம். சிலவேளை மௌனமாக அது கழியும். அவர் ரயிற் பெட்டியின் வெளிக்கம்பியைப் பிடித்தபடி, கடலையே இலயிப்பாகப் பார்த்தபடி நின்றுகொண்டிருப்பார். அந்த மௌனமும் அற்புதமாக இருக்கும்.

கோட்டையில் ‘பூந்தோட்ட வீதி’யில் அவர் என்னைப் பிரிந்து தன்னுடைய ‘ஒவ்வீசு’க்குப் போவார்.

அந்நாட்களில் ‘ஈழம்’ தினசரியின் சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளிவந்திருந்தன. சுப்பிரமணியனின் ‘விசரர்கள்’ அதில் பாராட்டைப் பெற்றிருந்தது.

உள்ளடக்கம் எனக்குப் பிடிக்கவில்லைத்தான். மனக்கோளாறு கொண்ட பாத்திரங்களின் இயக்கங்கள்.... .... ஆனால், அதில் கையாளப்பட்டிருந்த நடை .... .... ! அது அற்புதமானது.அவரது எழுத்து நடையில் எனக்கு ஒரே இலயிப்பு.

நான் சொன்னேன், “உள்ளடக்கத்தில கவனஞ்செலுத்தினால் உம்மட அருமையான நடைக்கு பிரமிக்கத்தக்க சிறுகதைகளை நீர் எழுதலாம்.” ஆனால் அவர்,
“நான் என்ன செய்யிறது ஐசே, இந்த உலகமே அழகான காட்சிகளால, இனிய சோகங்களால நிறைஞ்சிருக்கிறதைப்போல .... என்ர மனசுக்குள்ள கிடந்து பினையிற உணர்ச்சிகளையெல்லாம் அப்பிடியே சொல்லவேணும் போலக் கிடக்கு. அதத்தான் எழுதிறன். எழுதினா ஒரு திருப்தி.”

‘மௌனி’யும் ‘லா.ச.ரா.’வுமென்றால் அவருக்கு ஒரே இலயிப்பு.  “எவ்வளவு அழகு! நுணுக்கம் நுணுக்கமான உணர்ச்சிகளையெல்லாம் என்னமாதிரி எழுதுகினம்! எல்லாராலயும் இப்பிடி எழுத ஏலாது ஐசே. இவையின்ர தாக்கத்தாலதான், எனக்கும் எழுத விருப்பம்.”

இடையிடையில், தான் எழுதிய சிறுகதைகளையும் காட்டுவார். அவருக்கு அவற்றை எழுதியதே திருப்தி. பத்திரிகைகளுக்கு அனுப்புவதிலும் அக்கறையில்லை.

‘மோனக்குரல்’ , ‘குளிர்ந்துபோன நிராசைகள்’, ‘ஆத்மாவின் வறுமை’, ‘ஓ! இந்தஅழகுகள்!’ என்பவையெல்லாம் அவர் காட்டிய சிறுகதைகளே.

மழைதூறற் பொழுதில் தனிமையாய்க் கிடக்கும் பஸ் தரிப்பிடங்கள், பனிப்புகாரில் தோய்ந்த மலைத்தொடர்கள், நிறைவேறாத ஆசைகள், விசரர்களைப்போல் இயங்குகின்ற பாத்திரங்கள், ரயிலின் கூ .... என நீண்ட சோகக்குரல்.... எல்லாம், சுற்றிச் சுற்றி அவற்றில் தலைகாட்டும்.

அவரது அழகியல் நோக்கின் வெளிப்பாடுகளை, மனோரம்யமான அந்த நடையை நான் வியந்துபாராட்டுவேன். ஆனால் அந்த விசர்ப் போக்கான பாத்திரங்களை, திரும்பத் திரும்ப எழுதும் மனமுறிவுகளைப் பற்றிக் கதைக்கும்போது நாம் கருத்து வேறுபடுவோம். அவ்வேளைகளில் விட்டுக்கொடுக்காதபடி அவர் எதை எதையோவெல்லாம் கதைப்பார்.

சமீபத்தில் ‘ஓர் தனி உலகம்’ என்ற அவரது சிறுகதை வெளிவந்திருந்தது. அதில்வருகின்ற இளைஞன் வேலை செய்யவே பஞ்சிப்படுகிறான். வேலை ஒன்றுமில்லாமல் இந்த உலகத்தின் அழகை இரசிக்கவே ஆசைப்படுகிறான்.

அதைப்பற்றிக் கதைத்தபோது, அவரிடம் சொன்னேன், “சுப்பிரமணியம், இப்பிடிச் சும்மா உலகத்தில இருக்க ஏலாது.... அழக இரசிக்கத்தான் வேணும் .... ஆனா வேலையுஞ் செய்யத்தான் வேணும். புற உலகத்திலயிருந்தும் வாழ்க்கையில இருந்தும், நாங்கள் ஓட ஏலாது.”

ஆனால் , “எங்களுக்குப் புற உலகத்தப் பற்றிக் கவலையில்ல. எங்கட உலகம்எங்களுக்குள்ளேயே இருக்கு. அதிலேயே எங்களுக்குத் திருப்தி. அதிலயே எங்களுடைய வாழ்க்கை முடிஞ்சுபோகும்” என்று திருப்பிச் சொன்னார்.

“இதெல்லாம், வசதியான ஒரு கும்பலின்ர சிந்தனைப் போக்குகள். பெரும்பாலான மக்கள் இப்பிடி வாழ ஏலாது. ஏன், உம்மட குடும்ப நிலைக்கும் இது ஏலாது. உமக்குத் தங்கச்சிகள் இருக்கு. அப்பருக்கும் வயது போயிற்றுது. அப்ப இதெல்லாம் நீர்தானே பாக்கவேணும். இந்த உப்புப் புளிப் பிரச்சினைகள் எனக்கு முக்கியமில்லை எண்டு, நீர்சொல்ல ஏலாது.” – நான் சொன்னேன்.

“அவையவையின்ர பாட்டை அவையவையள் பாத்தாலென்ன? நாங்க ஏன், அவையின்ர பொறுப்பைத் தலையில சுமக்க வேணும்? எங்களுக்கு, எங்கட மனத்திருப்திதான் முக்கியம். இல்லையெண்டுஅவையள் ஆரும் வற்புறுத்தினால்.... நான் செத்துப் போவன்.”
நான் அதிர்ச்சியில் மௌனமாகிப்போனேன்.

4
அடுத்த மாதம் முழுவதும் நான் அவரைச் சந்திக்கவில்லை. காலையிலும் மத்தியானத்திலும் இரவிலுமாக என்னுடைய வேலைநேரம் மாறிமாறி அமைந்தது. ‘போஸ்ற்ஒவ்வீஸ்’ என்றால் அப்படித்தானே! இடையிடையில் ‘ஓவர்ரைமு’ம் செய்யவேண்டியிருந்தது. இயைபற்ற வேலைநேரத்திலும் இயந்திர உழைப்பிலும் மனம் வெறுப்படைந்திருந்த போதிலும், வாழ்வின் சுமை காரணமாக அதில் கலந்து போனேன். சுப்பிரமணியனும் என்னைச் சந்திக்கவில்லை.

அந்த மாதம் வறட்சியாகவே ஓடிமறைந்தது.

5
இந்த மாதம் முழுவதும் 9.00 மணி நேர வேலை. முதலாம் திகதி 8.30க்கு ஸ்ரேஷனுக்கு வந்தபோது ட்றெயினில் சுப்பிரமணினைச் சந்தித்தேன். ஆனால், இரண்டொரு பேச்சுக்களோடு அவர் மௌனங்கொண்டார். வெளிக்கம்பியைப் பிடித்தபடி, அடிவானத்தில் எதையோ தேடுகிறவரைப்போல கடற்பக்கத்தையே வெறித்து நோக்கியபடி நின்றார். ‘பூந்தோட்ட வீதி’யில் பிரிந்து செல்லும்வரை அவர் ஒன்றுமே கதைக்க வில்லை.

அதன் பின்னால் ஒரு கிழமைவரை நான் அவரைச் சந்திக்கவில்லை. அந்தப் பிரிவு, எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

அடுத்த ‘போயா’விற்கு மற்ற நாள் ஸ்ரேஷனில் நின்றுகொண்டிருந்த  போது, சிறிது தள்ளி யாருடனோ கதைத்துக் கொண்டிருந்த பேரம்பலம் என்னைக் கண்டுவிட்டுக் கெதியாக வந்து, ஓர்அதிர்ச்சியான செய்தியைச் சொன்னான்.

“இஞ்சேற்றாப்பா, சுப்பிரமணியன் தற்கொலை செய்திற்றானாம். தெல்லிப்பளையில தங்கட வீட்டுக்கருகில ட்றெயினுக்கு முன்னால பாஞ்சானாம். ரெண்டு நாளுக்கு முந்தித்தான் இது நடந்திது. காலம ஊரால வந்த ஒரு பெடியன்தான்சொன்னான்.”

என் நெஞ்சம் அதிர்ந்தது.

அந்த அதிர்ச்சியில், நான் மௌனத்தில் புதைந்து போனேன். நம்ப முடியாதது நடந்து முடிந்தும் விட்டதையறிய, மனது துயர்கொண்டது.
 ‘ஓ! சுப்பிரமணியனை இனிச் சந்திக்க ஏலாது .குறுக்குக் கம்பியைப் பிடித்தபடி – ரயிலில் கதைக்கும் அந்த அருமையான நேரங்களும், இனிமேல் வரப்போவதில்லை....’

 ‘எல்லாம் முடிந்துபோனது.’

கணங்கள், ஊர்ந்து கொண்டிருந்தன. கல்கிசைக்குப் போகும் ‘கரிக்கோச்சி’ கூ .... .... எனநீளமாய்க் கூக்குரலிட்டபடி ஓடியது.

‘துயரத்தில் புதைந்துபோன ஒரு பெண்ணின் சோகக் குரலைப் போல ....’ என அக்கூவலை ஒருகதையில் சுப்பிரமணியன் எழுதியிருந்தது, உடனே நினைவுக்கு வந்தது.

அது பெண்ணின் குரலோ என்னவோ .... எனக்கும்சோகக் குரலாகவே, அது இருக்கிறது!

தை 1970