Wednesday, November 13, 2013

ஆழ நட்ட வாழை

- பசுந்திரா

11 வயது நிரம்பிய கரனைப் பார்ப்பவர்கள் எட்டு வயதே மதிப்பார்கள். ஆனால் அவனோ அந்த 18 ,19 வயது இளைஞர்கள் மூவரின் பின்னால் கையில் ஒரு தடியை பாதையெங்கும் இழுத்துக் கோடு போட்ட படி நடந்துகொண்டு இருந்தான்.

அவனுக்கு நினைவு தெரிந்த இத்தனை வருடத்தில் இதுவே முதல் தடவையாக வேலைக்குப் புறப்பட்டு இருக்கிறான். பெரிதாக ஒன்றும் வெட்டிப் புடுங்கும் வேலை இல்லை. இது ஒரு எட்டிப் புடுங்கும் வேலை. புடுங்குவதும் தேங்காய் மாங்காய் இல்லை. வெறும் பூ. அவன்  இந்த வேலைக்குப் போக பல காரணங்கள் உண்டு. ஆனால் ஒரு தகுதியும் இல்லை.

ஊரில் இருக்கும் போது அவனது தந்தை வாழை நாட்டுவதற்காக ஆழமான கிடங்கு வெட்டி நடுவே வாழைக்குட்டியை வைத்து இவனைப் பிடித்துக் கொள்ளும் படி கூறி மண்ணைப்  போட்டு மூடுவார் .
வாழைக் குருத்து அவனது வண்டியோடு முண்டிக்கொண்டு நிற்கும். புதிதாக வரும் குருத்துக்களை  விரியமுன்  கிழித்து விடுவதில் பேரானந்தம் அடைவான்.

ஒரு நாள்  “ ஏனப்பா இவ்வளவு ஆழமாக கிடங்கு வெட்டி நடுகிறீர்கள், சின்னச் சின்ன கிடங்கு வெட்டி நடலாமே ?” என்று கேட்டதற்கு   - “ வாழை ஆழ நடு தென்னை தெரிய நடு” – என்று தந்தை கூறிய வேத வாக்கை நம்பி இந்த வாழைப் பொத்தி பிடுங்கும் வேலைக்குச் சேர்ந்து கொண்டான். ஆனாலும் வாழையை நினைக்க வயிற்றைக் கலக்கிக் கொண்டு வந்தது.
அப்பாவிற்குத் தெரிந்தது இங்குள்ளவர்களுக்கும் தெரிந்து இவர்களும் வாழையை ஆழ நட்டிருந்தால் மட்டுமே வாழைப் பொத்தி இவனுக்கு எட்டும். ‘ஒரு வேளை வாழைப் பொத்தி எனக்கு எட்டாவிட்டால் என்ன செய்வது எதற்கும் முன்னே போகும் ஒருவரிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டால் என்ன.’ என்று எண்ணுகையில் தம்பி றமாவின் வாடிய முகம் கண்முன் தோன்றியது.

‘பெரிதாக என்ன வந்து விடப்போகிறது – ஒன்றில்  “சீ..... நீ இந்த வேலைக்குத் சரி வர மாட்டாய், போய் கொஞ்சம் வளர்ந்தாப்பிறகு  வா “ என்று சொல்லுவார்கள். அல்லது  “இந்தத் சின்னப் பயலை ஏனடா கூட்டிவந்தனீங்கள் “ என்று இதோ முன்னுக்குப் போகிறார்களே இவர்களுக்கு பேச்சு விழும் அவ்வளவுதான். ஆனால் அவர்களோ அதுபற்றி எந்த கவலையும் கொண்டதாக தெரியவில்லை. என்னையும் அவர்களில் ஒருவனாக நினைத்து வேலைத்தலம் நோக்கி நடந்து கொண்டு இருக்கிறார்கள். நானாக ஏன் குட்டையை குழப்புவான்’ என்று மௌனமாக இருந்து விட்டான்.

முன்பு தந்தையின் விரலைப் பிடித்துக்கொண்டு நடக்கும் போது சிறிது தூரம் நடந்தாலே   “கால் நோகுதா ? “ என்று கேட்டு விட்டு தூக்கித் தோளில் சுமந்து கொண்டு நடப்பார். அது எல்லாம் என்றோ ஊரோடு முடிந்து விட்டது.

கரனுக்கும் அவனது தம்பி றமாவிற்கும் ஏழு வயது வித்தியாசம் அதனால் கரனுடன் கூட விளையாடுவதற்கு வீட்டில் யாரும் இல்லை. சில சமயங்களில் மூன்று வயதான தம்பியையும் நாய்க்குட்டியையும் சேர்த்து விளையாடுவான். நாய் இவனைத் துரத்தும். பின் இடை நடுவில் நாய்க்குட்டி தம்பியைத் துரத்த அவன் விழுந்து எழும்பி வீரிட்டுக் கத்தி இறுதியில் அம்மா  தடியோடு இவனைத் துரத்தி வருவதுடன் அந்த விளையாட்டு முடிவுக்கு வரும்.

ஒரு வருடத்திற்கு முன் வவுனியா பூவரசங்குளத்தில் இருந்து நாட்டுப் பிரச்சனையால் இடம் பெயர்ந்து ஓமந்தைப் பாடசாலைக்கு வந்த போது கரனின் சந்தோசத்திற்கு அளவே இல்லை. எத்தனை நண்பர்கள். பலரது  பொயர்களைக்கூட ஞாபத்தில் வைத்திருக்க முடியவில்லை. பூவரசங்குளம் கிராமமே அந்தப் பாடசாலையில் தானே தஞ்சமடைந்து இருந்தது.

பாடசாலை, வீட்டுப்பாடம், சாப்பாடு, கொஞ்ச நேரம் விளையாட்டு என்ற வழக்கம் அகதி முகாமிற்கு வந்ததும் தலை கீழாக  மாறி,  விளையாட்டின் நடுவிலே ஓடிப்போய் சாப்பிட்டு விட்டு வந்து மீண்டும் விளையாட்டை முழுநேரமாகச் செய்து கொண்டு இருந்தான். வேறு எந்த வேலையும் இல்லை. இவ்வளவு ஏன் அம்மா அப்பா கூட அரை வாசி நேரம் வகுப்பறை வாசலில் இருந்தபடி இவர்களின் விளையாட்டைத்தானே பார்த்தக்கொண்டு இருந்தார்கள்.

ஆனால் அந்த வாழ்க்கையும் அப்பா  பூவரங்குளத்தில் இருந்த அவர்களது வீட்டைப் பார்க்கப்போய் திரும்பி வராமல் காணாமல் போனதில் இருந்து தொலைந்நு போனது. அன்றில்  இருந்து அம்மாவும் ஒடிந்து போய் அடிக்கடி நோயில் படுத்தார்.  தம்பியை இடுப்பில் வைத்தபடி மற்றவர்கள் விளையாடுவதை அவ்வப்போது எட்டிப் பார்ப்பான்.
 
ஓமந்தையிலும் இருக்கமுடியாமல் மீண்டும் இடம் பெயர்வு.  இடம் பெயர இடம் பெயர இருக்கும் பொருட்களும் ஒவ்வொன்றாக அவர்களை விட்டு இடம் பெயர்ந்தது. தந்தை  தூக்கி வந்த சில பாரமான பொருட்களை தாயால் கொண்டு வர முடியாமல் போக அங்கேயே விட்டு விட்டு கிளிநொச்சியில் உள்ள -கோணாவில் காந்திக் கிராமம் - எனப்படடும் இந்த அகதி முகாமிற்கு வந்து சேர்ந்து இரண்டு மாதம் ஆகிறது. இங்கே அகதி சாமான் என்று  அரிசியும் பருப்புமே தருவார்கள். மீதி எல்லாம் கடையிலேயே வாங்க வேண்டும் . வீட்டில் ஆம்பிளை உள்ளவர்கள் அயல் அட்டையில் வேலைக்குப் போவார்கள். அம்மாவும் அவ்வப்போது ஏதாவது வேலைக்குப் போய் வருவார். கடந்த ஒரு மாதமாக அவரால் முற்றாக முடியாமல் போய் விட்டது.

அம்மாவிற்கு அம்மாள் வருத்தம்.  உடல் நிலை மேலும் மோசமாகியது. தம்பி அம்மாவிற்குக் கிட்டையும் போக முடியாது. வருத்தம் தொத்தி விடுமாம்.  அவரால் எழுந்திருக்கவே முடியவில்லை. இதில் சமைப்பது எப்படி. வீட்டில் அரிசி சேடம் இழுக்க பருப்பு  உயிரை விட்டிருந்தது. அதனால் அம்மா சொல்லச் சொல்ல இவனே கஞ்சி காச்சுவான்.

அந்த வெறும் கஞ்சியிலேயே மூவரின் உயிரும் தங்கி நின்றது. கஞ்சி என்றால் தம்பி நல்லாக் குடிப்பான். ஆனால் ஒருக்கா மூத்திரம் போய் வந்து விட்டால் மீண்டும் அழ ஆரம்பித்து விடுவான் . அம்மாவும் அந்தக் கஞ்சியோடயே  நாள் முழுக்கப் பாயில் கிடப்பார். சில சமயம் காச்சல் வாய்க்கு குடித்த கஞ்சியையும் சத்தி எடுத்து விடுவார்.

ஒவ்வொரு நாளும் அம்மாவின் அம்மை வருத்தத்திற்கு முத்து மாரியம்மன் தாலாட்டு பாட வரும் நாலாம் கொட்டிலில் வசிக்கும் அருமைநாயகம் ஐயா ‘ஏதாவது நல்ல சாப்பாடாய் சாப்பிடு பிள்ளை’ என்று சொல்லி விட்டுப் போகிறார். ஆனால் அதற்கு கையில் காசு இருக்க வேண்டுமே.

முகாமிற்கு முன்னால் இருக்கிற கொட்டில் கடையில் பாண் பணிஸ் இடியப்பம் என பல வகை வகையான சாப்பாடுகள் வரும் அம்மாவையும் தம்பியையும் நினைத்த படி அவற்றை பார்த்துக் கொண்டு நின்று விட்டு வருவான் கரன் . தம்பிக்கு பணிஸ் என்றால் கொள்ளை பிரியம் யாரும் வேண்டிச் சாப்படுவதை கண்டு விட்டால் காட்டிக் காட்டி அழுவான். பணிசுக்குப் பதிலாக காக்கா ,குருவி ,அணில் போன்ற வற்றை தேடித் தேடிக் காட்டுவான் கரன்.  ஓடும் அணிலைப் பார்த்தால் சிரிப்பான் அது ஒரு இடத்தில் நின்று விட்டால் அழுவான் .

இந்த நிலையில் தான் கரன் தானும்  வேலைக்கு வருவதாக சேர்ந்து கொண்டான் . மண்ணில் வேலை என்றால் செய்யலாம் அனால் இது மரத்தில் வேலை அதுவும் கொப்பில்லாத மரத்தில் . இழுத்துக்கொண்டு வந்த தடியை மீண்டும் ஒருமுறை தூக்கிப் பார்த்துக்கொண்டான் . ஒரு வேளை இவன் பயந்தது போல வாழைப் பொத்தி எட்டாது போனால் இந்த தடியால் தட்டிப்பிடுங்கி விட வேண்டும் என்பது அவனது இன்னொரு திட்டம்.

கோணாவில் நல்ல செழிப்பான கிராமம் இந்த மண்ணில் எவ்வளவுதான் விழுந்து புரண்டாலும் உடலில் அழுக்கு பிரளாது வெள்ளை வெளேரென்ற மணல் மண். தோட்டத்திற்கு உகந்த மண் . அக்கராயன் குளத்து நீர் கோணாவில் கிராமத்தையும் சோலையாக்கிக் கொண்டு இருந்தது. நாலா புறமும் தென்னை ,பாக்கு, மா ,பிலா போன்றவற்றோடு வாழைத்தோட்டங்களும்  வயல்களுமாக பச்சைப் பசேல் என்று இருக்கும்.
அவ்வப்போது அங்குள்ள  வாழைதோட்டங்களில் பொத்தி , வாழைக்குலை , வாழையிலை பிடுங்கி ஸ்கந்தபுரம்  சந்தையில் விற்பதற்கு என பலர் அகதி முகாமில் உள்ளவர்களை வேலைக்கு அழைப்பது வழக்கம். அப்படி நாலு போர் வேண்டும் என்று கேட்டதாலேயே கரன் தானும்  வருவதாக கூறி வந்து விட்டான் .

முருகன் கோயில் தாண்டி இருந்த பெரிய வாழைத் தோட்ட சோலைக்குள் முன்னால் சென்ற மூவரும் நுழைந்தார்கள். கரனும் நுழைந்து படலையை சாத்திக் கொண்டான். படலையை தாண்டியதும் குறுக்காக ஒரு வாய்க்கால் சென்றது. இரவு அதனூடாக தண்ணீர் பாச்சியிருக்க வேண்டும் வாய்க்காலில் சேறு படிந்திருந்தது. கொண்டு வந்த தடியை வாய்க்கால் நடுவே ஊன்றி எம்பி குதித்து மறு கரைக்கு தாவினான்.

கம்பு குத்தியபடி நின்றது கரனை காணவில்லை முன்னால் போனவர்களில் ஒருவன் கரன்... கரன் ...”  என்று கூப்பிட்டான். உடம்பெங்கும் சேற்று மண்ணுடன் வாய்க்காலில் இருந்து எழும்பினான் கரன். அவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை

சும்மா கடக்கிற வாய்க்காலை ஏனடா கம்பு குத்திக்கடந்து விழுந்து எழும்புகிறாய்” என்று விட்டு உரப்பையை எடுத்துக்கொண்டு வாழை மரங்களை அண்ணாந்து பார்த்தபடி  ஆளுக்கு ஒரு திசையில் நடந்தார்கள்.

வாழைக்கயர் படும் என சேட்டு போடாமல் வந்ததால் கணிமண்ணில் இருந்து சோட்டு தப்பியது என எண்ணியபடி பெரும் கஸ்டத்தின் மத்தியில் குத்திய தடியை பிடுங்கி எடுத்துக்கொண்டு முடிந்தவரை மண்ணை துடைத்து விட்டு காவல் கொட்டிலில் இருந்து ஒரு பையை எடுத்துக்கொண்டு  வாழைப்பொத்திகளை தேடி நடந்தான் கரன்.

எந்த வாழை மரமும் அவனை வாழ வைப்பதாக தெரிய வில்லை. எட்டாத உயரத்தில் பொத்திகள் தொங்கின. ஒரு சில பொத்திகள் எட்டிய போதும் அவை பல காலங்களாக முறிக்காமல் விட்டு பூத்துக் கொட்டி  பொத்தியும் சூம்பி வாழைக்காய் அளவிலேயே  இருந்தது.  அவற்றை முறித்து எறிய  வேண்டுமே தவிர சந்தைக்கு கொண்டு செல்ல முடியாது.

அப்பா சொன்னது போல்  - இங்கே எந்த வாழையையும் ஆழ கிடங்கு வெட்டி நட்டதாக தொரிய வில்லை . கொண்டு வந்த தடியால் பொத்தியை குத்தி முறிக்கப் பார்த்தான் . பொத்தி மாட்டேன் என்று குலையோடு சேர்ந்து தலையை  ஆட்டியது .  வாழைக்குலையில் தடி குத்தி காயம் பட்டு காய் கண்ணீர் விட்டு அழுதது.

சற்றே சரிந்து நின்ற ஒரு மரத்தில் இருந்து பகீரதப்பிரயத்தனத்தின் பின் ஒரு பொத்தி பிடுங்கி விட்டான். குறைந்தது 20 பொத்தி பிடுங்கினால் தான் அந்த பை நிறையும்.

அந்த ஒரு பொத்தியுடன் பையை இழுத்துக்கொண்டு எட்டாத பொத்திகளுக்கு கொட்டாவி விட்டபடி எட்டும் உயரத்தில் பொத்தி தேடி அலைந்தான். ஆனால் மற்றைய மூவரும் அரை வாசி பையை நிரப்பிவிட்டார்கள்.

இந்த ஒரு பொத்திக்கு என்ன கூலி தருவார்கள் அதைக்கொண்டு ஒரு பணிசாவது  வாங்கிவிட முடியுமா என எண்ணியபடி நடந்தான். ஒருவன் அவனிடம் வந்து பையை பார்த்து சிரித்து விட்டு எத்தனை பொத்தி புடுங்கினாய் கரன் ? ” என்றான்.

“கனக்க பொத்தி கண்டு வச்சிருக்கிறேன் ஆனா ஒண்டுதான் புடுங்கினனான்” என்றான் தலையை பையினுள் ஓட்டி அந்த பொத்தியை பார்த்தபடி வந்தவன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான். பின்  “இனி என்ன செய்யப்போகிறாய் ? ” என்றான்.  “ என்னை தூக்கிப் பிடிச்சால் மள மளவென்று பிடுங்குவேன் “ என்றான். அப்பா தூக்கிப் பிடிக்க பப்பாப்பழம் பிடுங்கிய ஞாபகத்தில்.  வந்தவன் ஓடியே விட்டான் .

பையை கீழே போட்டு விட்டு அதன்மேல் இருந்தபடி ‘என்னண்டு இந்த பொத்திகளை புடுங்கலாம்’ என ஒரு அழகிய பொத்தியை பார்த்துக் கொண்டு யோசித்தான். அந்த பொத்தியின் ஒரு இதழ் மெல்ல விரிந்து இருந்தது. உள்ளே வாழைப்பூவில் இருந்த தேனை குடிக்க முடியாமல் ஒரு வண்டு சற்றிச் சுற்றிப் பறந்தது கொண்டிருந்தது . ஏதோ சிந்தனையில் தோன்ற திடீரென எழுந்து அந்த மூவரையும் தேடி ஓடினான்.

அவர்கள் மூட்டையை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு நடந்தார்கள்.
“உங்கள் மூவரினின் பைகளையும் ஓர் இடத்தில் வைத்துவிட்டு பொத்தியை பிடுங்கி என்னிடம் தாருங்கள் நான் ஓடி ஓடி அவரவர் பையில் போட்டு விட்டு வருகிறேன் நீங்கள் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை “ என்றான் மூச்சு வாங்கியபடி .

அவர்களுக்கும் அது நல்ல யோசனையாகவே பட்டது   ஆனால் அதற்காக இவனுக்கு என்ன கூலி கொடுப்பது என்று யோசித்தார்கள். இறுதியில் எந்த முடிவிற்கும் வராமலே அவனிடம் பொத்திகளை முறித்து கொடுத்தார்கள் அவனும் ஓடி ஓடி அவரவர் பையில் போட்டுவிட்டு வந்தான். கூடவே வழியில் கண்ட பொத்திகளை அவர்களுக்கு கூப்பிட்டுக் காட்டினான் . சற்று நேரத்திலேயே மூவரினதும் அந்த உரப் பை நிரம்பி விட்டது.

நேரம் மதியம் மூன்று மணியாகிக் கொண்டிருந்தது  அந்த மூவரையும் விட அவனே கழைத்து விட்டான் காலை குடித்த கஞ்சி செமித்து பசி எடுத்தது.
அவனது பை மட்டும் அந்த ஒரு பொத்தியுடன் தவம் கிடந்தது. மூவரில் ஒருவன் “இனி முறிக்கும் பொத்திகளை  உன் பையில் போடு” என்றான்.
கரனின் முகத்தில் முழுச் சந்திரன் பிரகாசித்தான். அவர்கள் முறித்து தந்த பொத்திகளை தனது பையினுள்  போட்டான். இருந்தும் என்ன பயன் தோட்டத்தில் இருந்த பொத்திகள் முழுவதும் பறிக்கப்பட்டு விட்டது.

“ இவ்வளவுதான் இனி இல்லை  வாங்கோ தோட்டக்காற  ஐயா வரும் வரைக்கும் அதில போய் இருப்போம்” என்றபடி ஒருவன் காவற்கொட்டிலை நோக்கி நடந்தான் . மற்றவர்களும் அவனை பின் தொடர்ந்து சென்றனர். கரன் ஒவ்வொரு வாழையாக அண்ணாந்து பார்த்தபடியே பின்னால் நடந்தான் .
ஒவ்வெருவரும் தத்தம் மூட்டைகளோடு முதலாளிக்காக காத்திருந்தார்கள். கரனின் பையில் ஆக எட்டு பொத்திகளே இருந்தது .

தோட்டக்காரரும் வந்தார் “எத்தனை மூட்டை ? ” என்று கேட்டார். அந்தக் குழுவின் தலைவன்  “ மூன்று மூட்டை “ என்றான். “அந்தப் பையில் எத்தனை?” என்று கரனை பார்த்துக் கேட்டார். உற்சாகமான குரலில்  “ எட்டு பொத்திகள் ஐயா ” என்றான் கரன்.

எல்லோருக்கும் பொதுவாக முப்பது ரூபாயை ஒருவனிடம் கொடுத்து விட்டு கரனின் பையில் இருந்த எட்டு பொத்திகளையும் ஆளுக்கு இவ்விரண்டாக பிரித்து எடுக்குமாறு  கூறி விட்டு தோட்டக்காரர் சென்று விட்டார்.
கரன் மாறி மாறி மூவரின் முகத்தையும் பார்த்தபடி நின்றான்.

“இந்த மூன்று மூட்டைக்கும் தான் முப்பது ரூபாய் தந்திருக்கிறார் . கரன் அந்த எட்டுப் பொத்தியையும் நீயே எடுத்துக் கொள் எங்களுக்கு வேண்டாம் நாங்கள் காசை பிரித்து எடுத்துக்கொள்கிறோம் ” என்றான்  குழுவின் தலைவன்.
கரனின் பணிஸ் கனவு மெல்ல கரைய ஆரம்பித்தது கண்கள் நீரரும்ப தொண்டை வரை துக்கம் முட்டியது ஓ என்று அழுது விட வேண்டும் போல் இருந்தது . எதையும் காட்டிக் கொள்ளாமல் சரி என தலையை ஆட்டி விட்டு அந்த எட்டுப் பொத்தியோடு வீடு வந்தான்.

களி மண் உடலெங்கும் புரண்டபடி வாழைப் பொத்தியுடன் வந்த மகனைப் பார்த்து படுக்கையில் கிடந்தபடியே கண்ணீர் வடித்தார் அம்மா.

அன்று முளுவதும் தம்பியை பார்த்துக்கொண்டு இருந்த பக்கத்து வீட்டு அக்காவிடம் ஒரு பொத்தியை கொடுத்தான். அம்மாவுக்காக மாரியம்மன் தாலாட்டு பாட வரும் ஐயாவுக்கும் ஒரு பொத்தியை கொடுத்தான் . இரண்டு பொத்திகளை வீட்டில் வைத்து விட்டு . மீதி நான்கு பொத்திகளுடனும் அந்த பெட்டிக் கடையை நோக்கி  ஓடினான் .

கடையில் இருந்த அந்த கண்ணாடிப் பெட்டியில் இன்னமும் மூன்று பணிஸ் மீதியாக இருந்தது . அந்த பெட்டியையும் தன் கையில் இருந்த பொத்தியையும் கடை முதலாளியையும் மாறி மாறி பார்த்தபடி நின்றான்.

“என்னடா வேணும் ? ” என்றார் முதலாளி.

எதுவும் பேசாது ஊமையாக நின்றான்.

மீண்டும் சற்று உரத்த தொனியில்  “என்னடா வேணும் ? ” என்றார்  முதலாளி.

அவரது பெறுமாத வண்டியை பார்த்த படியே “ உங்களுக்கு வாழைப்பொத்தி வேணுமா ? ” என்று கேட்டான்

“ எங்க காட்டு பாப்பம் “ என்றார்.   பையை எட்டிக் கொடுத்தான் .

“பறவாய் இல்லையே பொத்தி வாடாம நல்லாத்தான் இருக்கு இப்பதான் புடுங்கி இருக்குப்போல சரி என்ன விலை ? “ என்றார்.

அவன் அந்த கண்ணாடிப் பெட்டி பணிஸையே பார்த்தபடி நின்றான்.  நான்கு பொத்திகளையும் எடுத்து முட்டைக்கோவாவிற்கு அருகில் வைத்து விட்டு பையை அவனிடம் கொடுத்தார். பின் ஒரு பொத்திக்கு இரண்டு ரூபா வீதம் எட்டு ரூபா காசை மடித்து அவனின் உள்ளங் கையில் வைத்தார். அவனின் கண்கள் அந்த கண்ணாடிப் பெட்டியை விட்டு அகலவில்லை  காசோடு கையை மேசையில் வைத்தபடி  சிலையாய் நின்றான். முதலாளி அந்த மூன்று பணிசையும் ஒரு சரையில் சுத்தி அவனிடம் கொடுத்து விட்டு.

“ உன் பொத்திக்கு இதை விட நல்ல விலை யாரும் தர மாட்டார்கள் ” என்று கூறினார்.

பையை கமக்கட்டில் வைத்துக் கொண்டு இரு கையிலும் இருந்த பணிசையும் காசையும் மாறி மாறி பார்த்தபடி வீடு நோக்கி ஓடினான்.

- பசுந்திரா -

கனகலிங்கம் சுருட்டு

- குரு அரவிந்தன்  

ஒருவருடைய பெயரை வைத்துக் கொண்டு அவருடைய காலத்தைக் கணிக்க முடியுமா என்று சில சமயங்களில் நீங்கள் யோசிக்கலாம். முடியும் என்று நாங்கள் நம்பினோம். ஒரு காலக்கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரேவிதமான முடிவுள்ள பெயர்களைத்தான் பெற்றோர் சூடினார்களோ தெரியவில்லை, அப்படியான தமிழ்ப் பெயர்களை வேறு பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்களிடம் அதிகம் கேள்விப்பட்டதில்லை. கந்தையா, பொன்னையா, செல்லையா, சின்னையா, இராசையா, முருகையா, அழகையா என்று இப்படியான எல்லாப் பெயர்களும் யகர வரிசையில் முடிவதாகவும், பொன்னுத்துரை, சின்னத்துரை, செல்லத்துரை, கண்ணுத்துரை, ராசதுரை, அருமைத்துரை என்று துரையில் முடிவதாகவும் இருந்தன. வேறு ஒரு காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கு சிவலிங்கம்,
கனகலிங்கம், இராமலிங்கம், யோகலிங்கம், சந்திரலிங்கம், கணேசலிங்கம் என்றும், கொஞ்சக் காலம் கழித்துப் பிறந்தவர்களுக்கு சிவராசா, தவராசா, நடராசா, வரதராசா, ஜெயராசா, குணராசா, யோகராசா என்று எல்லாமே ராசாவில் முடியும் பெயர்களாயும் இருந்தன. பெண்களுக்கும் இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, யோகேஸ்வரி, சிவனேஸ்வரி என்று பெயர்கள் இருந்தன. இப்படியான பெயர்களை வைத்துக் கொண்டே ஆணும்சரி, பெண்ணும்சரி அவர்கள் எந்த காலகட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், வயதைக் கேட்காமலே குத்து மதிப்பாக அவர்களின் வயது என்னவாக இருக்கும் என்றும் ஓரளவு எங்களால் கணிக்க முடிந்தது.

கொழும்பிலே உள்ள மகாராஜா நிறுவனத்தில் நான் கடமையாற்றிக் கொண்டிருந்த போது இப்படியான பெயரைக் கொண்ட ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒருநாள் காலை நேரம் நிர்வாக இயக்குநர் என்னைத் தனது அறைக்கு வரும்படி அழைத்திருந்தார். பொதுவாக நிதிநிர்வாகம் பற்றித்தான் நாங்கள் அவரோடு கலந்து உரையாடுவோம். ஏன் அவசரமாக அழைத்தார் என்ற சிந்தனையோடு அவரது அறைக்கு நான் சென்றபோது, அவருக்கு எதிரே வாட்டசாட்மாக ஒருவர் அமர்ந்திருந்தார். என்னைக் கண்டதும் எனக்கு அவரை அறிமுகப் படுத்தி வைத்தார்.
‘மீட் மிஸ்டர் பொன்யா’ என்றார் நிர்வாக இயக்குநர்.

பெயரைக் கேட்டு ஒரு கணம் நான் திகைத்தாலும் அது பொன்யா அல்ல பொன்னையாவாக இருக்கலாம் என்று அவரது தோற்றத்தைக் கொண்டு மனதுக்குள் கணித்துக் கொண்டேன். இங்கே இதுவரை புதிதாக வேலைக்கு வந்தவர்கள் எல்லாம் இளைஞர்களாகவும், நவீன பெயர்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர். இப்படியான பெயரைக் கொண்ட ஒருவரை அன்று அங்கே சந்திக்க வேண்டி வரும் என்று நான் எதிர் பார்த்திருக்கவில்லை

‘ஹலோ’ என்று பொக்கைவாய் தெரியச் சிரித்தார். இருவரும் கை குலுக்கிக் கொண்டோம்.

அவரோ ரைகட்டி கோட்சூட் அணிந்திருந்தார். அவரது பெயரை வைத்துக் கொண்டே அவரது வயதை ஓரளவு என்னால் ஊகிக்கக் கூடியதாக இருந்தது. சுமார் அறுபத்தியேழு அறுபத்தெட்டு வயதிருக்கலாம். நிறைய முடியோடு கூடிய பெரிய மண்டை, குழி விழுந்த கண்கள். கோட்பட்டன் இழுத்து மூடமுடியாதபடி செல்லத் தொப்பை ஒன்றுமிருந்தது. தொப்பைவண்டி தெரியாமலிருக்க, பான்ஸை இறுக்கி இடுப்பிலே தேற்பட்டை ஒன்றும் அணிந்திருந்தார். ஷேவ் செய்த துப்பரவான முகம். நல்லெண்ணெய் வைத்துத் தலை வாரியிருக்க வேண்டும், ஏனென்றால் யாழ்ப்பாணத்து நல்லெண்ணைய் வாசம் குப்பென்று அறையெங்கும் பரவியிருந்தது.

‘உங்களுடைய கொம்பனிக்கு இனிமேல் இவர்தான் இயக்குநராக இருப்பார்’ என்று நிர்வாக இயக்குநர் மேலும் சில விவரங்களையும் அவரைப் பற்றித் தெரிவித்தார். நான் புன்னகையோடு அவருக்கு வணக்கம் கூறி, அவரை எனது இடத்திற்கு அழைத்துச் சென்றேன்.

‘செக்ஸி கை’ (sexy guy) என்று அவரை வியப்போடு பார்த்துக் கண் சிமிட்டிவிட்டுச் சென்றாள் வாசலில் எதிர்ப்பட்ட கம்பனி செக்ரட்ரி.

எனது அறைக்கு அடுத்து இருந்த கண்ணாடித் தடுப்பு அறையைத்தான் அவருக்கு ஒதுக்கிக் கொடுத்திருந்தார்கள். எழுந்து நின்று எட்டிப் பார்த்தால் அவர் உட்கார்ந்திருப்பது தெரியக்கூடியதாகக் கண்ணாடி போட்ட தடுப்பு ஒன்றும் குறுக்கே இருந்தது. அவரோடு பழகத் தொடங்கிய பிறகுதான் அவரது பெரிய மண்டைக்குள் ஒரு கணினியே இருப்பது தெரியவந்தது. வயதிற்கேற்ற அனுபவத்தில் நிறைய விடையங்களைத் தெரிந்து வைத்திருந்தார். அரசாங்க திணைக்களத்தில் உயர்பதவியில் தொழில் புரிந்து ஓய்வு பெற்றதாலோ என்னவோ நிறைய அனுபவசாலியாகவும் இருந்தார். அவரை யாரும் இலகுவில் ஏமாற்றிவிட முடியாது என்பதும் புரிந்தது. அவரிடம் இருந்து முகாமைத்துவம், குறிப்பாகத் தொழிலாளர்களை எப்படிச் சமாளிப்பது என்பது போன்ற பல விடையங்களை அவருடன் பழகிய கொஞ்ச நாட்களில் நானும் நிறையவே கற்றுக் கொண்டேன். வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடம்புச் சூட்டைத் தணிக்கும், வெள்ளைப்பூடு சுட்டுச் சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு நின்றுவிடும், வெந்தயம் சாப்பிட்டால் உடம்பு குளிர்மையாக இருக்கும், இஞ்சி, மிளகு, தேனின் பயன்பாடு என்றெல்லாம் அவர் உள்ளுர் வைத்தியர்போல அவ்வப்போது ஆலோசனை சொல்லிக் கொண்டே இருப்பார். அவர் சொல்வதை நாங்கள் கேட்கிறோமா இல்லையா என்பது பற்றி அவர் யோசிக்காமல் இல்லை, ஆனாலும் சொல்லவந்ததைச் சொல்லியே முடிப்பார்.

ஒருநாள் மதிய நேரம் என்னைத் தனது அறைக்கு வரும்படி அழைத்தார்.

எதிரே இருந்த நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தேன்.
‘எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும்’ என்று திடீரெனக் கேட்டார்.
‘என்.ன?’ என்றேன்.
‘யூ ஆர் லுக் லைக் மை சண், ஒரு மகனிடம் கேட்பது போலக் கேட்கிறேன்’ என்று பீடிகை போட்டார்.
‘சொல்லுங்க..!’ என்றேன்.
அவரது மேசையில் சிறிய சர்க்கரைப் போத்தல் ஒன்று இருந்தது.
‘எனக்கு லோ சுகர், தற்செயலாக எப்போதாவது நான் இங்கே இருக்கும் போது மயக்கமாகப் போய்விட்டால் இந்த சர்க்கரையை எடுத்து ஒரு ஸ்பூன் சர்க்கரை வாயில் போட்டு விடும்’ என்றார்.

பெரியதொரு விடயத்தை எவ்வளவு சாதாரணமாகச் சொல்கிறார். சர்க்கரையைவிட குளுக்கோஸ் விரைவாக வேலை செய்யும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் அவர் சொன்னதைத் தட்டாது ஒரு மகனுடைய பாசத்தோடு சரி என்று தலை அசைத்தேன். முன்பெல்லாம் தண்ணீரில் மூழ்கி முத்துக் குளிப்பவர்கள் குளிக்கும்போது, கயிற்றின் மறுபக்கத்தை மைத்துணரின் கையில் பொறுப்பாகக் கொடுத்து விட்டுத்தான் தண்ணீரில் குதிப்பார்களாம். அவர்கள் மைத்துணரில் நம்பிக்கை வைத்திருந்தது போல இவர் என்மீது வைத்த நம்பிக்கை என்னை ஒருகணம் நெகிழ வைத்தது.

எப்பொழுதும் மதிய உணவு எடுத்ததும் அவர் வெளியே சென்று அங்கே உள்ள மலைவேப்பமர நிழலில் கொஞ்ச நேரம் நின்று ஓய்வெடுப்பார். கேட்டால் ஜில்லென்று வீசும் வேப்பங்காற்று உடம்பிற்கு நல்லதென்பார். அந்த நாட்களில தமிழ்நாட்டு சொக்கலால் ராமசேட் பீடி எப்படிக் கொழும்பில் உள்ள தொழிலாளர் வர்க்கத்திடம் பிரபலமாக இருந்ததோ அதேபோல நெவிகட், திறீறோஸ் சிகரட் இளைஞர்களிடையே பிரபல்யமாக இருந்தது. அதேபோல் யாழ்ப்பாணத்து கனகலிங்கம் சுருட்டு காரம் மணம் குணம் நிறைந்தது என்று எல்லோராலும் அறியப்பட்டதாகவும் இருந்தது. நகரத்திலே சுருட்டுக் குடிப்பவர்கள் மிகக் குறைவு. கொஞ்சம் வயதில் கூடிய ஒரு சிலர் மட்டுமே சுருட்டுக் குடிப்பதைக் கைவிடாமல் அப்போதும் தொடர்ந்து கொண்டிருந்தனர். அந்த ஒரு சிலரில் இவரும் ஒருவராக இருந்தார். வேப்பமரநிழலில் நின்றபடி காற்சட்டைப் பையுக்குள் கையை விட்டு ஒரு சிறிய பொதியை வெளியே எடுப்பார். அதில் இருந்து கறுப்பு நிறத்தில் உள்ள சுருட்டு ஒன்றை வெளியே எடுப்பார். நுனியில் இருந்து அடிவரை அதை உருட்டி ஏதோ விதமாய் பதம் செய்வார். தீப்பெட்டியை எடுத்து அதிலே பக்குவமாக ஒரு தீக்குச்சியை எடுத்து மிகவும் கவனமாக உராசி, அந்தச் சுருட்டைப் பற்ற வைப்பார். சிகரட்மாதிரி சுருட்டு இலகுவில் பற்றிக் கொள்ள மாட்டாது என்பதால், புக்குப் புக்கு என்று கண்ணை மூடித் தம் பிடித்து பொக்கைவாயால் உள்ளே இழுத்துப் புகைவிடுவார். அவருடைய நிறத்திற்கு, தூர நின்று பார்ப்பவர்களுக்கு கரி இஞ்சின் ஒன்று புகை கக்குவது போலத் தெரியும். அந்த மலைவேப்பமர நிழலில் தினமும் நடக்கும் ஒரு நிகழ்வாக இது இருக்கும். அந்த இடத்தைவிட்டு அவர் சென்ற பின்பும் சுருட்டுப் புகைமணம் அந்த இடத்தில் அவர் அங்கே நின்றதற்கான அடையாளத்தை உறுதிப் படுத்தி நிற்கும்.

யாழ்ப்பாணம் புகையிலைக்குப் பெயர் போனதாக இருந்தது. கரீபியன் தீவுகள், மெக்ஸிக்கோ, குவாதமாலா போன்ற இடங்களில் 10ம் நூற்றாண்டளவில் புகையிலையின் பாவனை இருந்ததற்கான சான்றுகள் உண்டு. எப்படி யாழ்ப்பாணத்திற்குப் புகையிலைச் செடியைக் கொண்டு வந்து பயிரிட்டார்கள் என்பது தெரியவில்லை. புகையிலை பயிரிடும் பிரதேசங்களில் போறணை என்று சொல்லப்படுகின்ற சூட்டு அடுப்பில் தான் புகையிலை பதனிடப் படுவதுண்டு. இந்தப் புகையிலையில் இருந்து தான் சுருட்டுச் செய்யப்படும். சுருட்டுச் சுற்றுவது என்பது யாழ்ப்பாணத்தில் ஒரு குடிசைக் கைத்தொழிலாக இருந்தது மட்டுமல்ல, நல்ல வருமானத்தையும் பெற்றுப் பல குடும்பங்களுக்குச் சாப்பாடும் போட்டது. சுற்றியிருந்து எல்லோரும் சுருட்டுச் சுற்றும்போது ஒருவர் மட்டும் அன்றைய தினப்பத்திரிகையை எடுத்துப் பலமாக வாசித்துக் காட்டுவார். கண் காரியத்தில் இருந்தாலும் செவிகள் அன்றைய செய்தியை உள்வாங்கிக் கொள்ளும். அந்த இடத்தில், பத்திரிகை வாசிப்பது என்பது தினசரி நடக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கும்.

இவருடைய பெற்றோர்கள் யாழ்பாணத்தவர்களாக இருந்தாலும் இவர் கொழும்பிலேதான் பிறந்து வளர்ந்திருந்தார். கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தான் கல்வி கற்று, பொறியியலாளராக அதியுயர் புள்ளிகள் பெற்று பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருந்தார். நல்ல ஆங்கில அறிவு உடையவராகவும் இருந்தார். அரசாங்கத்தில் உயர் பதவில் இருந்த இவர் ஓய்வு பெற்றதும் வீட்டிலே சோம்பேறியாக இருக்க விரும்பாமல் இங்கே வேலைக்கு வந்து சேர்ந்தார். இவரது அனுபவத்தையும், திறமையையும் கண்டு கொண்ட எங்கள் நிறுவனம் எந்தவித மறுப்புமில்லாமல் அவரை உள்வாங்கிக் கொண்டது. குறுகிய காலத்தில் எல்லோரையும் தன் வசமாக்கிக் கொண்ட, அனுபவம் மிக்க ஒருவரின் சேவை கிடைத்ததில் எங்கள் நிறுவனம் பெருமைப்பட்டது.

தினமும் அவர் மதிய உணவு அருந்திவிட்டு வந்து உட்கார்ந்தபின், நான் அடிக்கடி எழுந்து நின்று அவரது அறையை நோட்டம் விடுவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அன்று மதியம் என்னுடன் பேசும்போது மறுநாள் அவர் விடுப்பு எடுத்திருப்பதாவும், அதனாலே வேலைக்கு வரப்போவதில்லை என்றும் சொன்னார். அது அவருடைய சொந்த விடையம் என்பதால், ஏன் என்று நான் கேட்கவில்லை. நான் கேட்காமலே அவர் ஏன் விடுப்பு எடுக்கிறார் என்பதற்குக் காரணம் சொன்னார். மறுநாள் அவரது தாயாரின் திதி என்றும் அதனாலே திவசம் கொடுப்பதற்காக வீட்டிலே நிற்கப் போவதாக விளக்கம் சொன்னார். எனக்கு அதைக் கேட்டதும் வியப்பாக இருந்தது. இந்த வயதிலும் தாயாரை மறக்காமல், விடுப்பெடுத்து திதி கொடுக்கிறாரே என்று நினைத்துப் பார்த்த போது, எனக்கு அவர்மேல் இருந்த மதிப்பு இன்னும் ஒரு படி மேலே உயர்ந்தது. தேவையான காசோலைகளில் கையெழுத்தை வாங்கி வைத்துக் கொண்டு, இதைவிட ஏதாவது அவசர தேவை என்றால் அவரது வீட்டிற்கு மறுநாள் வந்து கையெழுத்தைப் பெறுவதாகவும் கூறியிருந்தேன்.
 
மறுநாள் ஏற்கனவே அறிவித்தபடி அவர் வேலைக்கு வரவில்லை. மாலை ஆறுமணியளவில் நான் வீட்டிற்குப் பேவதற்காக ஆயத்தங்கள் செய்தபோது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. எடுப்பதா விடுவதா என்று அரைமனதோடு எடுத்து என்ன என்று கேட்ட எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பொன்னையா அவர்கள் திடீரென இறந்து விட்டதாக அதிர்ச்சியில் இருந்த அவரது மனைவி அந்த துயரச் செய்தியை அழுதழுது சொன்னார். என்னால் நம்பமுடியாமல் இருந்தது. மறுநாள் அவர் வேலைக்கு வந்ததும், அவரிடம் கையெழுத்து வாங்குவதற்காக தயாராக எடுத்து வைத்திருந்த காசோலைகள் மின்விசிறிக் காற்றில் ‘வாழ்வே மாயம்’ என்பதுபோல, நிலையில்லாமல் என் கண்முன்னால் படபடத்தன. உடனடியாகவே வண்டியை எடுத்துக் கொண்டு அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

திவசம் கொடுத்துவிட்டு களைப்பாக இருக்கிறது என்று சாய்மனைக் கதிரையில் படுத்திருந்ததாகவும், மனைவி அவர் ஓய்வெடுத்துத் தூங்குவதாக நினைத்து, சந்தைக்கு காய்கறி வாங்க வெளியே சென்றதாகவும் குறிப்பிட்டார். திரும்பி வந்து பார்த்தபோது அவர் இன்னும் தூங்குவதாக நினைத்ததாகவும், அவருக்குத் தேனீர் தயாரித்துக் கொண்டு வந்து நீட்டிய போதுதான் அவர் எழுந்திருக்கவில்லை என்பதைக் கவனித்தாகவும் சொன்னார். தனது தாயாரின் திதியின் அன்றே அவரும் இறைவனடி சேர்ந்திருந்தார். மறுநாள் நடந்த அவரது மரணச் சடங்கிலும் பங்கு பற்றி விட்டு வேலைக்கு வந்திருந்தேன்.

‘நேற்றிருந்தார் இன்றில்லை’ என்ற நினைவு என்னை வாட்டியது. நிம்மதியான சாவு என்று கம்பனியில் எல்லோரும் பேசிக்கொண்டாலும், எனக்கு மட்டும் ஏனோ அதில் உடன்பாடு இருக்கவில்லை. தனது ஆரோக்கியத்தில் இவ்வளவு கவனமாக இருந்தும், அவருக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற கவலை என்னை வாட்டிக் கொண்டிருந்தது. அவருடைய ஒவ்வொரு அசைவும் கண்ணுக்குள் நிலைத்து நின்றாலும், அவர் இல்லையே என்ற வெறுமையின் தாக்கம் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. எழுந்து நின்று மறுபக்கம் எட்டிப் பார்த்தேன். அடுத்த கண்ணாடித் தடுப்புக்குள் அவர் உட்கார்ந்து இருப்பது போன்ற பிரேமை எனக்குள் ஏற்பட்டாலும் அவர் இல்லை என்ற நிஜம் என்னைத் தடுமாற வைத்தது. உட்கார்ந்து கொண்டு யோசித்துப் பார்த்தேன். ஒருவேளை இரத்தத்தில் சர்க்கரை போதாமல்தான் இறந்திருப்பாரே? அவர் அன்று விடுப்பு எடுக்காமல் வேலைக்கு வந்திருந்தால் நான் அவரைக் கவனமாகக் கவனித்திருப்பேனோ, அந்த மரணத்தைத் தவிர்த்திருக்கலாமோ என்றெல்லாம் மனசு குழம்பிப் போய்க் கிடந்தது. மனசு சமாதானப்படாமல் போகவே, என்னையறியாமலே மீண்டும் எழுந்து மறுபக்கம் எட்டிப்பார்த்தேன். அவர் உட்கார்திருந்த நாற்காலி மட்டுமல்ல, அவரது மேசையில் இருந்த அந்த சர்க்கரைப் போத்தலும் வெறுமையாகவே காட்சி தந்தது.

(பாரிஸ் தமிழர் கல்விநிலையத்தின் வெள்ளிவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டி – 2012 ல் பரிசு பெற்ற சிறுகதை – ஆசிரியர்)

பனங்கொட்டை பொறுக்கி

- குரு அரவிந்தன் 

உள்நாட்டுப் போரின் பாதிப்பு ஆங்காங்கே வெளிப்படையாகத் தெரிந்தது. கவனிப்பு அற்ற பிரதேசம் என்பதால் ஏ9 பாதை குண்டும் குழியுமாயிருந்தது. சில இடங்களில் பாதைகள் செப்பனிடப் பட்டிருந்தன. முன்பெல்லாம் இப்பாதையில் பயணிக்கும்போது பயந்து நடுங்கிக் கொண்டே பயணிக்கவேண்டும். இராணுவத்தின் கெடுபிடி ஒருபக்கம், தெருவோரக் கண்ணிவெடிகளின் பயம் மறுபக்கம். தப்பித்தவறி வண்டி பாதையைவிட்டு விலகினால் காவு கொள்ள எங்கேயென்று கண்ணிவெடிகள் காத்திருக்கும். பாதை ஓரத்தில் அக்குள் தண்டு பிடித்து மெல்ல மெல்ல நொண்டிக் கொண்டு சென்ற அந்த சிறுவனுக்காக என் மனம் பரிதாபப்பட்டாலும், சற்றுத்தள்ளி மூன்று காலில் நொண்டிக் கொண்டு புல் மேய்வதற்குப் பகீரதப் பிரயத்தனம் செய்த அந்தப் பசுக்கன்றுதான் என் மனதில் சொல்லொணா வேதனையைக் கிளப்பிவிட்டது. நண்டு கொழுத்தால் வளையில் இருக்காது என்பதுபோல ஆயுதவிற்பனைக்காக மனிதனே தேடிக்கொண்ட வினையில் மாட்டிக் கொண்ட அப்பாவி இரைகள்தான் இவைகள். பாவம் இந்தப் பசுக்கன்று, வாயற்ற இந்த ஜீவன்களால் தங்களுக்கு நடந்த கொடுமைகளை யாரிடம் சொல்லி அழமுடியும். வண்டிச் சத்தம் கேட்கவே, மிரட்சியோடு நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் புல்லுக்குள் தன் தலையைப் புதைத்துக் கொண்டது.  அதன் பசி அதற்கு.

ஆனையிறவு அருகே எரிந்து கருகிப்போன கவசவாகனம் ஒன்று என் கண்ணில் பட்டு வேகமாக மறைந்து போனது. திரும்பிய பக்கங்கள் எல்லாம் யுத்தம் தின்ற எச்சங்கள் காட்சிப் பொருட்களாய் எங்களுக்குத் தரிசனம் தருவதற்கென்றே காத்திருப்பது போலிருந்தன.

பிரதான பாதையில் இருந்து விலகி வண்டி உள்ளே சென்றபோது, சாலையின் இரண்டு பக்கமும் பனை மரங்கள் வளர்ந்து நிமிர்ந்து நின்று எங்களை வரவேற்றுக் கொண்டிருந்தன. சில பனைமரங்கள் தலையிழந்து மொட்டையடித்த மனிதர்போல சோகத்தில் மூழ்கியிருந்தன. யுத்த முனையில் முன்னின்று எதிரியைத் தடுக்கும் போர் வீரர்களைப்போல அவை நிரையாய் காட்சி தந்தபோது எனக்குப் போராளிகளின் ஞாபகம்தான் சட்டென்று வந்தது. தலையிழந்து நிற்பதற்கு அதுவும் ஒரு காரணம்தான். யுத்த காலத்தில் எறிகணைகள் வந்து குடியிருப்புகள் மீது விழாமல் காப்பதில் இந்தப் பனைமரங்களின் பங்கும் அதிகமாக இருந்திருக்கலாம். எத்தனையோ குடிமனைகளை, குடிமக்களை இந்தப் பனை மரங்கள் காப்பாற்றி இருக்கின்றன. ஏனைய இடங்களில் உள்ள எரிந்து கருகிப்போன, கூரையை இழந்த வீடுகளோடு ஒப்பிட்டுப்  பார்க்கும்போது இந்தப் பகுதியில் இருந்த பனைமரங்களை, அவை ஜடமாக இருந்தாலும் அவற்றின் யுத்தகால சேவைகளைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

நான் சிறுவனாக இருந்தபோது தோப்பிலே இருந்த இந்தப் பனை மரங்களைப் பார்த்து அதிசயித்திருக்கிறேன். யாழ்ப்பாணத்து கற்பகதரு என்று இந்தப் பனை மரங்களைச் சொல்வார்கள். சில பனைமரங்கள், அல்லது தென்னை மரங்களின் அடிப்பக்கத்தில் பாம்பு போல படம் வரைந்திருப்பார்கள். அது ஏன் என்று தொடக்கத்தில் எனக்குப் புரியவில்லை. தாத்தாவிடம் அதுபற்றி விசாரித்தேன். அணில்கள் மரத்தில் ஏறிப் பாளைகளில் வரும் பூக்களைச் சேதப்படுத்தாமல் இருப்பதற்காகத்தான் அப்படிப் படங்கள் வரைவதாக தாத்தா சொல்லி அறிந்து கொண்டேன். பாம்புப் படத்தைப் பார்த்தே மிரளக்கூடிய அணில்கள் அந்தக் காலத்தில் இருந்திருக்கலாம். அணில்கள் மரத்தில் ஏறிக் கள்ளைக் குடித்துவிட்டு வெறியில் முட்டியையும் தட்டி விழுத்திவிடும் என்பதால்தான் அப்படம் வரைவதாக நண்பன் சொன்னான். அது எந்தளவிற்கு உண்மை என்பதும் எனக்குப் புரியவில்லை.நாங்கள் மாணவப் பருவ தன்னார்வத் தொண்டர்களாக இருந்தபோது, பனம் விதைகளைப் பெறுக்கிக் கொண்டு வந்து பாடசாலை வளவில் குவித்திருக்கிறோம். யார் அதிகம் சேகரிப்பது என்பதில் எங்களுக்குள் போட்டியிருந்தது. இரவிலே படுத்திருந்தாலும் அருகிலே இருக்கும் பனந்தோப்பில் இருந்து கேட்கும் தொம் தொம் என்ற சத்தத்தைக் காது கிரகித்துக் கொண்டிருக்கும். அதுவே பக்கத்துப் பனந்தோப்பிலே எத்தனை பனம்பழம் விழுந்தது என்ற கணக்கை மனதில் பதிய வைத்திருக்கும். அதிகாலையில் எழுந்து அந்தப் பனம் விதைகளைச் சேகரித்துப் பள்ளிக்குக் கொண்டு செல்லும்வரை முழுக் கவனமும் அங்கேயே இருக்கும். அதிக பனை விதைகளைச் சேகரித்துக் கொடுத்ததற்காக எங்களில் மூவருக்குப் பாடசாலையில் பாராட்டிப் பரிசு தந்தார்கள். வேறு ஒருநாள் டிராக்டர் வண்டியில் அவற்றை ஏற்றி, எங்களையும் அழைத்துச் சென்றார்கள். வீதி ஓரமெல்லாம் நாங்கள் சிறு குழிகள் தோண்டி அதில் விதைகளைப் போட்டு மூடினோம். இரண்டு மூன்று வாரங்களாக அங்கு சென்று நிரைநிரையாய் நடப்பட்டிருந்த விதைகளுக்குத் தண்ணீர் ஊற்றினோம். அதன்பின் மழைக்காலம் ஆரம்பித்ததால் விதைகள் தானாகவே முளைத்து வளரத் தொடங்கி வடலிகளாகிக் காலப்போக்கில் பனைகளாகி விட்டன. இப்படித்தான் மரம் நடும் திட்டத்தை அவர் ஏனைய பாடசாலைகளிலும் அறிமுகம் செய்திருக்கலாம். குடா நாடு முழுவதும் மாணவர்களைக் கொண்டே பனம் விதைகளை நட்டிருக்கலாம். அந்தப் பனை மரங்கள்தான் வளர்ந்து இன்று பெரிய மரங்களாக வீதி ஓரமெல்லாம் காவல் வீரர்கள்போல நிற்கின்றன.

இதற்கெல்லாம் காரணமானவரை காலம் மறந்து விட்டது. காலம் மறந்து விட்டதா அல்லது அவற்றை எல்லாம் நினைத்துப் பார்க்கும் நிலையில் அங்குள்ள மக்கள் இல்லையா என்பதுகூடத் தெரியவில்லை. சின்னவயது நினைவுகள் எனக்கு இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது. எவ்வளவு தீர்க்க தரிசனத்தோடு அன்று அவர் செயற்பட்டார் என்பதை நினைக்க இப்பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. அவருடைய பெயர் கனகராஜா என்று அறிந்து கொண்டேன். அவரைப்பற்றி அறிமுகம் செய்த போது அவர் ஒரு தொழில் அதிபர் என்றும், மில்க்வைற்சோப் அதிபர் கனகராஜா என்றுதான் எங்கள் பாடசாலை அதிபர் அறிமுகம் செய்து வைத்தார். மில்க்வைட் சோப் என்பது யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட பிரபலமான நீலநிறத்தில் இருந்த சவர்க்காரம். உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதால் மிகவும் பிரபலமாக இருந்தது. அதுமட்டுமல்ல வெள்ளைநிற பாடசாலை சீருடை அணியும் மாணவ, மாணவிகளுக்கு மிகவும் அத்யாவசியமான நீலநிறம் கொண்ட சவர்க்காரமாகவும் இது இருந்தது. நாங்கள் அப்போது மாணவ தன்னார்வத் தொண்டர்களாக இருந்தோம். பாடசாலைக்கு வெள்ளைநிற சீருடையே அணிந்தோம். சீருடையைப் பளீச்சென்று அணிவதற்கு இந்த சோப்பே எங்களுக்கு உதவியாக இருந்தது.

அவர் எங்களிடம் கேட்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
அது என்னவென்றால் ‘பனங்கொட்டை பொறுக்கித் தருவீர்களா?’

எங்களுக்கு அவரது வேண்டுகோள் வியப்பாக இருந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். எந்தப் பெரிய தொழில் அதிபர், அவரைச் சுற்றி எத்தனை தொழிலாளர்கள். அப்படி இருந்தும் இங்கே வந்து மாணவர்களாகிய எங்களைப் பார்த்துப் ‘பனங்கொட்டை பொறுக்கித் தருவீர்களா?’ என்று கேட்கிறாரே என்று நினைத்தோம். ஆனாலும் எங்கள் பாடசாலை அதிபரும் அருகே நின்றதால் எந்த மறுப்பும் சொல்லாது சம்மதித்தோம். நாங்கள் சம்மதத்தின் பெயரில் தலையசைத்தோம். ஆனால் ராஜமாணிக்கம் மட்டும்  மௌனமாகவே நின்றான். அவன் கையிலே அழுக்குப்படாத பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவன். தப்பித் தவறி அழுக்குப் பட்டாலும் முகத்தைச் சுழித்துவிட்டு உடனே கையலம்ப ஓடிவிடுவான். நாங்கள் எல்லோரும் டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவுகளோடுதான் படித்தோம். நாட்டுச் சூழ்நிலையால், நாங்கள் நினைத்தது போல எங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியவில்லை. அவன் எப்படியோ டாக்டராக வெளிவர, நான் கணக்காளரானேன். ஆனாலும் எங்கள் நட்பு தொடர்ந்தது. அவன் உள்ளுரிலேயே தொழில் பார்க்க, நான் வெளிநாடு சென்றேன். உள்நாட்டு யுத்தம் ஓய்ந்து விட்டதாக அறிவித்ததால், இப்போது விடுமுறையில் அவனைப் பார்க்கத்தான் போய்க் கொண்டிருந்தேன்.

யாழ்ப்பாணத்திற்கு என்று சில குறிப்பிட்ட குறியீட்டுச் சொற்கள் இருந்தன. இலங்கையின் தென் பகுதிக்குச் சென்றால் அவர்கள் தங்கள் மொழியில் இந்தக் குறியீட்டுச் சொற்களை அடிக்கடி பாவித்துத் தமிழர்களைக் கிண்டல் அடிப்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். பனங்கொட்டை, கறுத்தக் கொழும்பு, போயிலைச்சுருட்டு, நல்லெண்ணெய் இப்பெயர்கள் யாழ்ப்பாணத்திற்கே உரிய குறியீட்டுப் பெயர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இவை கேலிப் பொருளாகத் தெரிந்தன. யாழ்ப்பாணத்துக் கற்பகவிருட்சம் என்று பெருமைப்படுகின்ற பனை மரத்தின் விதையைத்தான் பனங்கொட்டை என்று அவர்கள் கேலிசெய்தார்கள். கறுத்தக் கொழும்பு என்பது ஒரு வகை ருசியான மாம்பழம், போயிலைச்சுருட்டு என்பது யாழ்ப்பாணத்துப் புகையிலையில் செய்யப்படும் சுருட்டு. கோடா என்று சொல்லப்படும் பாணியை இதன்மேல் தடவி போறணையில் பதனிடுவார்கள். பின் அதிலிருந்துதான் சுருட்டுச் செய்வார்கள். சுருட்டுச் சுற்றுவது என்பது யாழ்ப்பாணத்து குடிசைக் கைத்தொழிலாக இருந்து மட்டுமல்ல, அவர்களுக்கு நல்ல வருமானத்தையும் பெற்றுக் கொடுத்தது. அடுத்ததாக நல்லெண்ணெய், எள்ளைச் செக்கில் போட்டு அரைத்து அதில் இருந்து பெறப்படுவதுதான் நல்லெண்ணெய். உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது. அதிலே வேடிக்கை என்னவென்றால் தென் பகுதியைச் சேர்ந்தவர்கள் தேங்காயில் இருந்து பெறப்படும் தேங்காய் எண்ணெய்யைத்தான் முடியில் தேய்ப்பார்கள். தென் பகுதிப் பெண்களின் முடி அடர்ந்து நீண்டு வளர்வதற்கு தேங்காய் எண்ணெய்யும் ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். விடுமுறையைக் களிப்பதற்காக தென்பகுதிப் பெண்கள் வடபகுதியில் உள்ள கீரிமலைக்கு வந்து நீராடிவிட்டு அழகான நீண்ட தலைமுடியை விரித்து வெய்யிலில் உலரவிடும் காட்சி கண்ணுக்குக் கொஞ்சம் கவர்ச்சியாக இருக்கும். குறுக்குக் கட்டோடு அவர்கள் நிற்கும் அந்தக் காட்சி இளவட்டங்களைக் கவர்ந்திழுக்கும். இதற்காகவே சாக்குப் போக்குச் சொல்லி அங்கு சென்று காத்திருக்கும் மாணவர்களும் உண்டு. அப்போதெல்லாம், மாணவர்கள் அவர்களைப் பார்த்து ‘சிங்களத்தி சிவத்தப் பெண்ணே தேங்காய் எண்ணெய் மணக்குதெடி..!’ என்று கிண்டல் செய்து கோரஸ் பாடுவார்கள். அந்தப் பெண்களுக்கு மொழி புரியுமோ இல்லையோ, பதிலுக்கு ஒரு கவர்ச்சிச் சிரிப்பை உதிர்த்து விட்டுப் போய்விடுவார்கள்.

யுத்தகால பாதிப்பு எதுவும் இல்லாமல் நண்பன் ராஜமாணிக்கத்தின் வீடு பளீச்சென்று இருந்தது. நன்றாக உபசரித்து என்னைத் தனது குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தான். யுத்த காலத்தில் தாங்கள் பட்ட அவலங்களைப் பற்றிக் கதைகதையாய் சொன்னான். வெளிநாட்டில் எனது வேலைபற்றி குடும்பம் பற்றி நிறையவே விசாரித்தான். விருந்து சாப்பிட்டு, விடை பெற்று வரும்போது அவன் என் கைகளைப் பற்றிக் கொண்டான்.
‘உனக்கு ஞாபகம் இருக்கா படிக்கிற நாட்களில் மாணவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து  பக்கத்துப் பனந்தோப்புகளிலே பனங்கொட்டை பொறுக்கியது’ என்றான்.
‘ஆமா, உன்னைத் தவிர..!’ என்றேன் சட்டென்று.
‘உண்மைதான், அப்போ எனக்கு அதில் ஈடுபாடு இருக்கவில்லை. என்னுடைய கனவெல்லாம் டாக்டர் ஆகவேண்டும் என்பதிலேயே இருந்தது. பூமியைப் பசுமையாய் வைத்திருக்க வேண்டும், மரம் வளர்க்க வேண்டும் என்ற அந்த விடயம்கூட அந்த நேரம் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. யுத்தம் ஆரம்பமாகி எறிகணைகள் வந்து ஏனைய குடியிருப்புகள் மீது விழுந்த போதுதான் ஒரு உண்மையை நான் புரிந்து கொண்டேன்.’
‘என்ன உண்மை?’
‘இந்த மரங்களின் அவசியத்தைப் பற்றிய உண்மை. என்னுடைய அறியாமையால் அன்று நான் உங்களை எல்லாம் ‘பனங்கொட்டை பொறுக்கிகள்’ என்று கேலி செய்தேன். அதற்காகத்தான் இப்போ உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.’ என்றான்.
‘என்னிடம் மன்னிப்பா, எதற்கு?’
‘உண்மையிலே புதிதாக நிறைய மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வரக்காரணம் யாழ்ப்பாணம் வானம் பார்த்தபூமி என்பதால்தான். ஆறுகள் இல்லாததால், இந்த மண்ணில் மழையை நம்பியே விவசாயம் நடந்தது. கிணற்றில் இருந்தே குடிநீர் பெற்றார்கள். உயர்ந்த மரங்கள் இருந்தால் மழை பெய்வதற்குச் சந்தர்ப்பம் அதிகமுண்டு என்று கருதித்தான் தீர்க்கதரிசனத்தோடு மரம் நாட்டும் முயற்சியில் அன்று ஈடுபட்டார்கள். ஆனால் அதுவே பிற்காலத்தில் எறிகணைகளில் இருந்து குடிமனைகளைக் காப்பாற்றும் பாதுகாப்பு கேடயமாக மாறிவிட்டது.’
‘நாங்கள் அதற்காகத் தொழிலதிபர் கனகராஜாவைத்தன் பாராட்ட வேண்டும். பள்ளியில் படிக்கிற பிள்ளைகளைப் பனக்கொட்டை பெறுக்கச் சொல்கிறாரே என்று அவரை அன்று திட்டிய பெற்றோரும் இருக்கிறார்கள்.’ என்றேன்.
‘அன்று பனம்விதைகளைச் சேகரித்து பெரியதொரு திட்டமாக நீங்கள் எல்லாம் இந்த இடங்களில் நட்டபடியால்தான் இன்று அந்த மரங்கள் வானுயர்ந்து வளர்ந்து எங்களுக்குப் பாதுகாப்பாக நின்றன. அப்போ நாங்கள் உங்களைப் பார்த்துப் ‘பனங்கொட்டை பொறுக்கி’ என்று ஏளனம் செய்தோம். அன்றைய தீர்க்க தரிசனத்தின் அருமை இன்றுதான் புரிகிறது. இந்தப் பனை மரங்கள் இல்லாவிட்டால் எங்கள் குடியிருப்புகளில் செல்குண்டுகள் விழுந்து இன்று நாங்கள் மண்ணோடு மண்ணாய்ப் போயிருப்போம். எங்கள் குடிமனைகளைப் பாதுகாத்தது மட்டுமல்ல, பதுங்குகுழிகள் தோண்டி அதற்கு மேல் பாதுகாப்பாக போடுவதற்கும் இந்தப் பனங்குற்றிகளே பலவிதத்திலும் உதவியாய் இருந்தன. விமானக் குண்டு வீச்சில் இருந்து அவைதான் எங்களைப் பல தடவைகள் காப்பாற்றின. உண்மையிலேயே மரம் வளர்க்க வேண்டும் என்ற இந்தத் திட்டத்தை அன்று நடைமுறைப் படுத்தியவர்களைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும். அவர்களால்தான் இன்று நாங்கள் உயிரோடு இருக்கின்றோம்.’ என்றான் டாக்டர் ராஜமாணிக்கம்.

சின்ன வயதில் தன்னலம் பாராது நாங்கள் செய்த தன்னார்வத் தொண்டு, பிற்காலத்தில் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறது என்பதை அறிந்தபோது என்மனம் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டது. வெளிநாட்டில் நான் நல்ல உத்தியோகத்தில் இருந்தாலும், என்னால் டாக்டராக முடியாமற் போனதற்கு அந்த நாட்களில் பனங்கொட்டை பொறுக்கித் திரிந்து எங்கள் படிப்பை வீணாக்கியது ஒரு காரணமாய் இருக்குமோ என்று இதுவரை நான் எனக்குள் எண்ணிக் குமைந்து கொண்டு இருந்ததற்கு, ஆறுதல் தருவதுபோல இருந்தன அவனது வார்த்தைகள். பனங்கொட்டை பொறுக்கி என்று பாடசாலை நாட்களில் அவன் என் காதுபடச் சுட்டசொல் இத்தனை நாளாய் என் மனதை அரித்துக் கொண்டு இருந்திருக்கிறது என்பது விடைபெற்றுச் செல்லும் போதுதான் எனக்குப் புரிந்தது.
- குரு அரவிந்தன்

சிவப்புப் பொறிகள்

சந்திரா ரவீந்திரன்

அன்றைய விடிகாலைப் பொழுது அவன் உள்ளத்தில் ஒருவித எதிர்பார்ப்பை விதைத்திருந்தது. காலைக் குளிர் நீரில் விறைத்துப் போன தன் கைகளைச் சூடு பறக்கத் தேய்த்து விட்டான்.

"துரை......, தேத்தண்ணியைக் குடிமேனை" பார்வதியின் இதமான வேண்டுதல் மனதிற்குச் சுகமாக இருந்தது. ஆவி பறக்கக் கொதிக்கும் தேனீரை, மெதுவாக வாயால் ஊதிவிட்டு, சிறிதாக உறிஞ்சிக் கொண்டான்.

வானொலியில் மாநிலச் செய்திகள் ஆரம்பமாகியிருந்தது. ஒரு கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு வசதியாக அமர்ந்து கொண்டான்.

'யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றும் தொடர்ந்து மூன்றாவது நாளாக பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டது. அரச அலுவலகங்கள், பாடசாலைகள், கடைகள் தனியார் நிறுவனங்கள் யாவும் மூடப்பட்ட நிலையிலேயே.....'

"தம்பி,......" துரை திடுக்குற்றுத் திரும்பினான். வாசலில் வடிவம் மாமி நின்றிருந்தாள். அவனுக்குப் பகீரென்றது.
"தம்பி, இண்டையோடை நாலாவது நாளாச்சு. நான் உன்னை நாணயமானவன் எண்டு நம்பித்தான், வீட்டுச் செலவுக்கு வைத்திருந்த நானூறையும் அப்பிடியே தூக்கித் தந்தனான். சாப்பாட்டுக்குத் தவிக்கிற தவிப்பை விட என்ரை புருசன், பிள்ளைகளுக்கு நடுவில நிண்டு பதில் சொல்லேலாமல் நான் தவிக்கிற தவிப்பைத்தான் தாங்க முடியேல்லை." வடிவம் மாமி வாசற் கதவோடு அமர்ந்து விட்டாள்.
சுடுதேநீர் சுவையிழந்து கசந்தது! அவன் நெற்றியைத் தேய்த்து யோசித்து விட்டு எழுந்து சமையலறையை நோக்கி நடந்தான். தனது காதணிகளைக் கழற்றித் துடைத்துக் கொண்டு நின்ற பார்வதி இவனைக் கண்டதும் அவற்றைப் பொறுப்போடு நீட்டினாள்.

"அம்மா என்ன இது...?"

"வடிவம் மச்சாள் எங்கட வாசலுக்கை வந்திருந்து இனிமேல் முணுமுணுக்க வேண்டாம். நாலு குமருகள் இங்கை கரை சேராமல் இருக்குதுகள் எண்டதை அயலண்டைக்கு விளம்பரப் படுத்தவும் வேண்டாம்."

அம்மாவிற்கே அறையலாம் போல அவனின் மனம் குறுகுறுத்தது!

´நான் பாடுபடுகிறதெல்லாம் இதுக்குத்தானா?´ அவன் பொறுமையைக் கஷ்டப் பட்டுப் பற்றிக்கொண்டான்.

"இண்டைக்கு...... வெள்ளிக்கிழமை! இந்த அநியாயம் நடக்க வேண்டாம். இண்டைக்குக் கடை திறக்கலாம் தானே? மூண்டு நாளாய்த் திறபடாத கடையில வியாபாரம் தாராளமாய் நடக்கும். பின்னேரத்துக் கிடையில எப்பிடியும் சேர்த்துக் குடுத்திடுவன்"

துரை வாசலுக்கு வந்த போது வடிவம் மாமி போய்க் கொண்டிருந்தாள்.

"தம்பி....., பின்னேரம் எப்பிடியும் என்ரை கையிலை காசை வைச்சிடு" திரும்பிக் கூறியவள் கேற் வாயிலைத் தாண்டி விட்டாள்.

அவனுக்கு மனம் கனத்தது.

"இத்துடன் மாநிலச் செய்திகள் முடிவடைந்தன......' கடைசித் தங்கை மீனா, வானொலியின் அலைவரிசையை அவசரமாக மாற்றிக் கொண்டிருந்தாள்.

'.....பொங்கும் பூம்புனல்.......' இலங்கை வானொலி நிகழ்ச்சி இசைக்குறியைத் தொடர்ந்து ´வாழும் வரை போராடு....... வழியுண்டு என்றே பாடு......´ என்ற தென்னிந்தியத் திரைப் படப் பாடல் இசைக்க ஆரம்பித்தது.

அவன் திறப்புக் கோர்வையை இடுப்பு வேஷ்டியில் செருகி விட்டு, ´ஷேட்´ கைகளை மடித்து, கிழக்கே திரும்பிக் கண்களை மூடி, இறைதியானம் செய்து விட்டு நம்பிக்கையோடு வீதியில் இறங்கினான்.

"மேனை.... ராசா...."

குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். சின்னாத்தைக் கிழவி நடுங்கிய கரங்களில் பசுஞ்சாணத்தோடு நின்றிருந்தாள்.

"கடைக்குப் போறாய் போலை....."

"ஓமாத்தை..... சொல்லணை" அவன் தயங்கி நின்றான்.

"மதவடியிலை கூட்டமாய் வந்து கொண்டிருக்கிறாங்களாம் ராசா" சின்னாத்தைக் கிழவியின் கலக்கம் அவள் கண்களில் தெரிந்தது.

"அட .....உது நெடுகத்தானே? அவங்கள் போடுவாங்கள்....., நீ யோசியாமல் போணை" துரை மேலும் தாமதிக்காமல, திரும்பி சாதாரணமாக நடக்கத் தொடங்கினான். சின்னாத்தைக் கிழவி இன்னமும் தவிப்போடு திகைத்து நிற்பது அவனுக்குச் சிரிப்பையே கொடுத்தது.

ரவுனுக்குள் சனநடமாட்டம் குறைவாகவே இருந்தது. பட்டியிலிருந்து திறந்து விடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் துடிப்பும் படபடப்பும் அவர்களில் நன்கு தெரிந்தது.

துரை, தனது கடைக் கதவுகளைத் திறந்து நிலத்தைக் கூட்டி, காசு மேசையிலிருக்கும் சுவாமிப் படத்திற்குச் சாம்பிராணி போட்டுவிட்டு நிமிர்ந்த போது ஏனைய கடைகளும் திறக்கப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது.

"தம்பி..., பிறிஸ்டல் ரெண்டு வேணும்" சில்லறை லாச்சியில் விழ, பிறிஸ்டல் சிகரெட்டுகள் இரண்டு இடம் மாறின.

"புண்ணியம் கிடைக்குமண்ணா....." வழக்கமான அழுக்குக் கிழவர்களுக்குப் பதிலாக, ஒரு சிறுமி தலையைச் சொறிந்து கொண்டு அலுமினியக் கிண்ணமொன்றுடன் நின்றிருந்தாள். இவனுக்கு எரிச்சலாக வந்தது.

"புண்ணியம் கிடைக்குமண்ணா... நாங்கள் வவுனியாவிலையிருந்து....."

"அகதிகளாய் வந்திருக்கிறியளாக்கும்.... எனக்கு வேலை, உங்கட பட்டாளத்துக்குக் காசு போடுறதாக்கும!"

துரை தன் எரிச்சலை வார்த்தைகளில் காட்டிவிட்டு முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டான்.

"அண்ணா..... மூண்டு நாளாய் சாப்பாடில்லை, ஒரு வாய் தேத்தண்ணிக்கு மட்டும்...." சிறுமி கலங்கிய கண்களோடு கெஞ்சினாள். அவனுக்கு உள்ளம் தடுமாறியது. லாச்சியை இழுத்தான். ஐந்து ரூபாத் தாளொன்றும், ஒரு ரூபாக் குற்றிகள் இரண்டும், பத்துச் சதங்கள் நான்கும் இருந்தன. ஒரு ரூபாக் குற்றியொன்றை எடுத்து மேசையில் வைத்துவிட்டு நகர்ந்தான்.

மனதிற்குள் இனம்புரியாத பாரம்! வயிறு காலை உணவை எண்ணி உறுத்திக் கொண்டிருந்தது. மண் ´கூசா´ வில் கிடந்த பழைய நீரை வாயில் ஊற்றிக் கொண்டு, ஒருவித வைராக்கியத்தில் அவன் தீவிரமாக வியாபாரம் செய்து கொண்டிருந்தான்.

நண்பகல் பன்னிரண்டு மணியான போது முந்நூற்றி அறுபது ரூபா சேர்ந்திருந்தது. அவன் சற்றுத் தெம்போடு காணப்பட்டான்.

´பின்னேரம் நாலு மணிக்கிடையில நானூறுக்கு மேல் சேர்ந்து விடும்.´

மதியவேளைக்குப் பின் வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்த போது, யாழ்ப்பாண ´மினி பஸ்´ ஒன்று மூச்சுப் பிடித்தபடி வந்து, கிறீச்சிட்டு நின்றது. பாய்ந்திறஙகும் ஜனங்களிடத்தில் ஒருவித பரபரப்பும் பதற்றமும் தெரிந்தன! அவர்கள் நடை வேகம் அதிகமாகி.... அதிகமாகி ´ரவுண்´ திடீரென்று கிலிப்பிடித்துத் தீவிரமாகக் கலையத் தொடங்கியது!

"வாறாங்களாம்.... வாறாங்களாம்...."

கடைகள் மிக வேகமாக மூடப்பட்டுக் கொண்டிருந்தன. துரை அவசரமாக மேசை ´லாச்சியை´ இழுத்து, காசுத்தாள்களை அள்ளி, பெனியனுக்குள் திணித்து, சில்லறைகளை வழித்து ´பாக்´கினுள் கொட்டிய போது, தூரத்தில் வித்தியாசமான வாகன இரைச்சல் கேட்கத் தொடங்கியது. கதவை இழுத்துப் பூட்டைக் கொழுவி விட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, குச்சு ஒழுங்கைகளினூடே திரும்பி ஓட்டமும் நடையுமாக வீட்டை வந்து அடையும் போது பார்வதியும் பிள்ளைகளும் ஏக்கத்துடன் காத்து நிற்பது தெரிந்தது!

"என்ரை ராசா.....! வந்திட்டியே?"

"அண்ணா, மதவடியில் நாலு பேர் விழுந்து கிடக்கினமாம்..., நாங்கள் உன்னை நினைச்சுத்தான் நல்லா பயந்து போனம்"

பல குரல்கள் வாசலில் ஒலிக்கத் தொடங்கிய போது அவன் பெருமூச்சு விட்டவாறே உள்ளே நுழைந்து கொண்டான்.

பெனியனிற்குள்ளிருந்து எடுத்த பணத்தை எண்ணி, நானூறைப் புறம்பாக வைத்தபோது ஆறு ரூபா எஞ்சியது! அதனைப் பார்வதியின் கையில் வைத்து விட்டு, வடிவம் மாமியின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். தெருமுனையில் வடிவம் மாமி, தனது மாட்டைத் தேடிக் கயிற்றோடு வருவது தெரிந்தது.

"மாமி...." அவன் காசை நீட்டினான்.

"துரை! நல்ல காரியம்...... என்ரை நாணயத்தையும் காப்பாத்திப் போட்டாய்...." மகிழ்ச்சிப் பூரிப்பினால் வந்த வார்த்தைகளை பூரணமாக வெளியிட முடியாமல், திரும்பி நடக்கத் தொடங்கினாள் வடிவம் மாமி.

துரை ஒருவித ஆழ்ந்த நிம்மதியோடு வீட்டை நோக்கித் திரும்பினான். இப்போ, அவன் நடையில் ஒரு தலை நிமிர்வும், திருப்தியும், சந்தோசமும் இருந்தது. இவனைக் கடந்து சென்று கொண்டிருந்தவர்களின் பரபரப்பை இரசித்துக் கொண்டு வந்தவன் வீட்டை அண்மித்த போது .....பார்வதியும் மற்றவர்களும் விறைத்துப் போய் நின்றிருப்பது போல் தெரிந்தது!?

"என்னம்மா.... என்ன விசயம்? ஏன் எல்லாரும் ஒருமாதிரி நிற்கிறீங்கள்....?" துரை புரியாமல் யோசனையோடு அவசரமாகக் கேட்டான். பார்வதியின் கைகள் படபடக்க, உதடுகள் துடிதுடித்தன.

"என்னம்மா.... ...சொல்லுங்கோவன்" இவனையும் மீறி இவனுக்கு இதயம் படபடத்தது.

"ரவுணெல்லாம் பற்றி எரியுதாம் ராசா...." பார்வதியையும் மீறி அவள் குரல் வெடித்துக் கொண்டு வெளியில் வந்தது.

"கட...வுளே...! அம்மா.....அ...." அவன் கால்கள் பின்ன, தள்ளாடி, வாசற் படியில் அமர்ந்தான். தூரத்தே.... கரும்புகை, சிவப்புப் பொறிகளோடு போட்டியிட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தது.

"துரை.... துரை... .ராசா...." ஓலங்கள் பூமிக்குள்ளிருந்து வருவது போல....!

அவன் மேலே அண்ணாந்து, கரிய வானத்தில், தெரியாத புள்ளியொன்றைப் புரியத பாவத்துடன் தேடிக்கொண்டிருந்தான்.

- சந்திரா ரவீந்திரன்

பிரசுரம் - சிரித்திரன்,
மூன்றாம் பரிசு பெற்ற கதை
நிழல்கள்´ சிறுகதைத் தொகுப்பிலிருந்து

ஆசை வெட்கமறியாதோ..?

- குரு அரவிந்தன்
 
(நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள். ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது, மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது. சரியா பிழையா தெரியவில்லை. )

ழுபது கிலோ மீற்றர் வேகத்தில் சென்ற நான் சைகைவிளக்கு சிகப்பு நிறத்திற்கு மாறவே வண்டியை நிறுத்தினேன். அதே வேகத்தில் வந்த அவள் எனது வண்டிக்கு அருகே தனது சிகப்புநிற வண்டியை நிறுத்திவிட்டு உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள். இப்படியான முகஅலங்காரங்களை சாதாரணமாக சைகை விளக்குகளில் வண்டியை நிறுத்தும் போது பெண்கள் செய்வது வழக்கம். ஆனால் இவள் தலையை ஒரே சீராக வேகமாக அசைத்துக் கொண்டு உதட்டுக்கு அலங்காரம் செய்ததால் அவளது அந்தச் செய்கை என்னை அவளது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. ஏதாவது பாட்டைப் போட்டுவிட்டு அதற்கேற்பத் தலையசைக்கின்றாள் என்பது புரிந்தது. இளமை ஒருபக்கம் அவளிடம் துள்ளி விளையாட, அவள் சுறுசுறுப்பாகவும், அழகாகவும் இருந்தில் என்னை அவள் கவர்ந்திருந்தாள். பச்சை விளக்கு எரியவே நான் வண்டியை முன்நோக்கி ஓட்டிச் சென்றேன். அடுத்த பச்சை விளக்கைத் தாண்டும் போது சட்டென்று மஞ்சள் விளக்கு எரிந்தது. கடந்து மறுபக்கம் போய்விடலாம் என்றுதான் நினைத்தேன், ஆனால் முன்னால் சென்ற வண்டிகள் ஏதோகாரணத்தால் மெதுவாக நகரத் தொடங்கவே எனது வண்டி பாதுகாப்புக் கோட்டைக் கடக்கும்போது சிகப்பு விளக்கு எரியத் தொடங்கிவிட்டது. பொதுவாக வீதியைக் கடக்கும்போது இப்படியாக நடப்பதுண்டு என்பதால் ஏதோ கற்பனையில் இருந்த நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இரண்டு வாரங்கள் கழித்து எனக்கு சிகப்பு விளக்கில் தெருவைக் கடந்ததற்காகத் தண்டப்பணம் கொடுக்கும்படி தபாலில் அறிவிப்பு வந்தது.
அங்கே அந்த சந்தியில் கண்காணிப்புக் கமெரா இணைக்கப்பட்டிருந்ததை அவர்கள் அனுப்பிய படத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. எனது வண்டி கோட்டைத் தாண்டும்போது சிவப்பு விளக்கு எரிவதைத் துல்லியமாகத் தானியங்கிக் கமெரா படம் பிடித்திருந்தது. எனது கவனமெல்லாம் அவளது சிகப்பு நிற வண்டியில் இருந்ததால் நான் பாதையைக் கடக்கும்போது கமெராவைக் கவனிக்காமல் போயிருக்கலாம். அவர்கள் ஆதாரத்திற்காக அனுப்பிய புகைப்படத்தில் இன்னுமொரு விடயத்தை என்னால் அவதானிக்க முடிந்தது. அதாவது எனக்கருகே வண்டி ஓட்டிக் கொண்டு வந்த அந்தப் பெண்ணின் சிகப்பு நிற வண்டியும் எனது வண்டியைப் போலவே சிகப்பு விளக்கில் அகப்பட்டிருந்தது.

வண்டியின் இலக்கத்தை எடுத்து நண்பன் மூலம் எப்படியோ அவளது தொலைபேசி இலக்கத்தைக் கண்டறிந்து அவளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். முதலில் ஒன்றுமே தெரியாதது போல நடித்தவள் அந்தப் படத்தில் அருகே இருப்பது தனது வண்டிதான் என்பதை ஏற்றுக் கொண்டாள். தனது பெயர் நிஷா என்றும், தனக்கும் தண்டப்பணம் கட்டும்படி அறிவிப்பு வந்திருப்பதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டாள். அவளது முகத்தை மட்டும் ஞாபகம் வைத்திருந்த எனக்கு அவளது குரலிலும் ஒருவித கவர்ச்சி இருப்பது, அவளோடு தொலைபேசியில் பேசும்போது புரிந்தது.

தண்டப்பணம் கட்டினால் புள்ளிகள் பறிபோய்விடும், அதனால் வண்டிக்கான காப்புறுதி அதிகரித்து விடும் என்பதை அவளுக்கு விளங்கப்படுத்தினேன். நான் ஒரு சட்டத்தரணி என்பதைச் சொல்லி, எனக்காக நான் வாதாடும்போது அவளுக்கும் சேர்த்து வாதாடப்போவதாகச் சொன்னேன். முதலில் தயங்கியவள் ஒருவிதமாக ஒப்புக் கொண்டாள். அவளை முதன்முதலாகக் கண்ட அன்றே அவள்மீது எனக்கு ஒருவகை ஈர்ப்பு இருந்ததால் அவளது சம்மதம் எனக்குள் ஒருவித கிளுகிளுப்பை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான்.

நான் தண்டப்பணம் சம்பந்தமாக சில விவரங்களை அவளிடம் கேட்டிருந்தேன். நானே அவளிடம் வந்து பெற்றுக் கொள்வதாகச் சொன்னபோது அவள் அதை மறுத்து தானே நேரில் கொண்டு வந்து தருவதாகச் சொன்னாள். எனவே தொடர்பு கொள்வதற்குச் சாதகமாக எனது செல்பேசி இலக்கத்தைக் கொடுத்திருந்தேன். மறுநாளே அவள் என்னைத் தொடர்பு கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு என்னைத்தேடி வந்திருந்தாள். எங்கேயாவது தனியாக உட்கார்ந்து ஆறுதலாகப் பேசலாம் என்று நினைத்து அவளை அழைத்தேன்.

‘வாங்க, ரிம்ஹோட்டனில காப்பி குடிச்சிட்டே உட்கார்ந்து பேசுவோமா?’ என்றேன்.
தலையசைத்துவிட்டு என்னோடு வந்தாள். ஆளுக்கொரு காப்பி எடுத்துக் கொண்டு ஓரமாய் உட்கார்ந்தோம்.
‘அப்புறம் சொல்லுங்க, நீங்க இங்கேதான் பிறந்தீங்களா நிஷா?’
‘ஆமா, நான் இங்கேதான் பிறந்தேன். எங்க அப்பா அம்மாதான் சிலோன்லை இருந்து வந்தவங்க’
‘இலங்கையில் எங்கே..?’ என்றேன்.
‘யாழ்ப்பாணம்’ என்று மொட்டையாய்ச் சொன்னாள்.
உங்க குடும்பத்தில நீங்க எத்தனைபேர், நீங்கதான் மூத்த பெண்ணா?
அவள் நெற்றியைச் சுருக்கி என்னை ஒரு மாதிரிப்பார்த்தாள்.
‘எனக்குத் தெரியுமே, ஏற்கெனவே சொன்னாங்க நான்தான் நம்பவில்லை’ என்றாள்.
‘என்ன சொன்னாங்க, யார் சொன்னாங்க?’ என்றேன்.
‘சொன்னாங்க, கொஞ்சம் இடம் கொடுத்தா எல்லாமே விசாரிப்பாங்க என்று சொன்னாங்கள்.’
‘எல்லாமே என்றால்?’
‘ஊரைச் சொன்னால், ஊரில வடக்கா கிழக்கா தெற்கா மேற்கா என்றெல்லாம் கேட்பாங்க என்று சொன்னாங்கள்´ என்றாள்.
‘ஓ அதுவா உங்க பிரச்சனை, நான் அதைக் கேட்கவில்லை. எனக்கு அது தேவையுமில்லை’
‘அப்போ என்னோட பிறந்த தினத்தை வைத்து எண்சோதிடம் பார்க்கப் போறீங்களா?’
‘என்ன நீங்க எல்லாமே தப்புத் தப்பாய் சிந்திக்கிறீங்க’

‘இப்ப எதுக்கு என்னை இங்கே வரச் சொன்னீங்க, இது எங்க முதலாவது டேற்ரிங் தானே?’ என்று அதிரடியாய்க் கேட்டாள்.
‘டேற்ரிங்கா என்ன சொல்லுறீங்க?’ எனக்குக் மெல்ல உதறல் எடுத்தது.
‘அப்போ ஏன் வரச்சொல்லிக் கூப்பிட்டீங்க’ என்றாள்.
‘நானா வரச்சொன்னேன், நீங்க தானே வருவதாகச் சொன்னீங்க, வந்த இடத்தில் ஒரு காப்பி சாப்பிடுவோமா என்று உங்களை உபசரித்தது தப்பா?’ என்றேன்.

‘நானா கேட்டேன், நீங்கதானே காப்பிக்குக் கூப்பிட்டீங்க, அப்புறம் இன்னொருநாள் டினருக்குக் கூப்பிடுவீங்க, அது இரண்டாவது டேற்ரிங்காய் போயிடும், அப்புறம் மூண்டாவது டேற்ரிங்.. தெரியும்தானே மூணாவது தடவை சந்திக்கும்போது என்ன செய்வாங்க என்று’  சொன்னவள் மீதமிருந்த காபியை உறிஞ்சியபடியே என் முகத்தில் ஏதாவது மாற்றங்கள் தெரிகிறதா என்று விழி உயர்த்திப் பார்த்தாள்.

இவளோடு கவனமாகப் பழகவேண்டும் என்று என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். இங்கே பிறந்தவள் என்பதால் டேற்ரிங் என்பதை சாதாரண விடயமாக எடுத்துக் கொள்கிறாளா, எனக்கும் அவளுக்கும் இந்த விடயத்தில் என்ன வித்தியாசம். நாங்களும் எமக்குப் பிடித்தவர்களோடு ஆண் பெண் வித்தியாசம் பாராட்டாமல் பழகுகின்றோம். கொஞ்சம் நெருக்கமாகப் பழகும்போது அவர்களைப் புரிந்து கொள்கிறோம். அவர்கள் எதிர்ப்பாலாக இருந்தால் சிலசமயம் அவர்கள்மீது எங்களுக்கு ஒரு வகை ஈர்ப்பு எற்படுகின்றது. இருவருக்கும் நல்ல புரிந்துணர்வோடு ஒருவர்மேல் மற்றவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டால் அதைச் சந்தர்ப்பம் பார்த்து வெளிப்படுத்துகின்றோம். இதுதான் காதலாகிறது. அந்தக் காதல்தான் அடுத்த கட்டத்திற்குச் சென்று காதல் திருமணமாகிறது. ஏதாவது காரணங்களால் இந்தக் காதல் தடைப்பட்டும் போகலாம். எங்களுடைய இந்தக் கலாச்சாரத்தைத்தான் இவள் தவறாகப் புரிந்து கொண்டு எடுத்ததற்கெல்லாம் டேற்ரிங் என்கிறாளோ என நினைக்கத் தோன்றியது.

வழக்குச் சம்பந்தமாக அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். மீண்டும் ஒருதடவை சந்தித்துக் கொண்டோம். நீதிமன்றத்தில் வழக்கு எடுக்கப்பட்ட திகதியைத் தொலைபேசி மூலம் அவளுக்குத் தெரியப்படுத்தியிருந்தேன். கட்டாயம் வருவதாகச் செல்லியிருந்தாள்.

வாகனப்போக்குவரத்து நீதி மன்றத்தில் இந்த வழக்கு எடுக்கப்பட்டபோது சொன்னபடியே அவளும் அங்கே வந்திருந்தாள். பனிக்காலமாகையால் வீதிப்பாதுகாப்பு காரணமாக மெதுவாகவே வண்டிகள் ஊர்ந்தன என்பதை முக்கிய காரணமாக எடுத்து அதை நீதிபதிக்கு விளங்கப் படுத்தினேன். எனது வாதத்தை நீதிபதி ஏற்றுக் கொண்டு வழக்கைத் தள்ளுபடி செய்திருந்தார். தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாகவே அமைந்திருந்ததால் அவள் முகத்தில் புன்னகை பூத்திருந்தது. இருவரும் நீதிமன்ற அறையைவிட்டு வெளியே வந்து வண்டியை நோக்கி நடந்தோம்.

அருகே வந்து கைகொடுத்து நன்றி சொல்லிவிட்டு கைப்பையை எடுத்தபடி ‘உங்க பீஸ்’ என்றாள்.
‘நான் பெரிதா எதுவம் செய்யவில்லை. எனக்காக வாதாடும்போது உங்களுக்கும் சேர்த்து வாதாடினேன். அவ்வளவுதான்’ என்றேன்.
‘இல்லை வேறுயாரிடமாவது சென்றிருந்தால் நான் பணம் கொடுத்துத்தானே வாதாடியிருப்பேன். இது உங்க தொழில், சொல்லுங்க எவ்வளவு?’ என்றாள்.
‘எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டேன் என்றால் நான் என்ன செய்யிறது. இதை ஒரு கடனாய் நினைச்சால் தாங்க, உங்க மனம் நோகக் கூடாது என்பதற்காக வாங்கிறேன்’ என்றேன்.
‘நானும் உங்க மனசை நோகவைக்கவில்லை. உங்களைப்பற்றி நிறையவே அறிந்து வைத்திருக்கிறேன், யூ ஆ ஸோ ஸிமாட் அதனாலே.. நீங்க செய்த இந்த உதவிக்கு ஏதாவது தரணும்..!’
‘விடமாட்டீங்க போல இருக்கே, உங்க இஷ்டம். தருவதை வாங்கிக் கொள்கிறேன்’ என்றேன்.

அவள் அருகே வரவே ஏதாவது பணம் கொடுக்கப்போகிறாள் என நினைத்தேன், ஆனால் அவள் இச் சென்ற ஓசையோடு எட்டி ஒரு முத்தம் கொடுத்தாள். எதிர்பாராத முத்தத்தால் ஒருகணம் நான் உறைந்து போயிருந்தேன். யாராவது பார்த்திருப்பார்களோ என்ற அச்சத்தில் அக்கம் பக்கம் பார்த்தேன். இவ்வளவு விரைவில் அதிகம் பழகாத ஒரு பெண்ணிடம் இருந்து முத்தம் கிடைக்குமா? அவள் இந்த சூழ்நிலையில் வளர்ந்தவள் என்ற துணிச்சலா? எனது சிந்தனையின் இடைவெளியில் அவள் மறைந்து போயிருந்தாள். மூன்றாவது சந்திப்பில் என்ன நடக்குமென்று தெரியும்தானே என்று இதைத்தான் அன்று அவள் சொன்னாளா?

வண்டியில் ஏறி, கண்ணாடியில் கன்னத்தைப் பார்த்தேன். உதட்டுச்சாயம் மெல்லிய கோடாய்ப் பதிந்திருந்தது. இதுவரை இல்லாத, சொன்னால் புரியாத இனிய உணர்வுகள் உடம்பெல்லாம் பரவியது. மறுகன்னத்தையும் காட்டியிருக்கலாமோ என்று ஒருகணம் எண்ணத் தோன்றியது. டேற்ரிங் என்றால் என்னவென்று புரிந்தது போலவும் புரியாதது போலவும் ஒருவித தடுமாற்றமிருந்தது.

அடுத்த சந்திப்பு எப்போ கிடைக்கும் என்று மனசு ஏங்கத் தொடங்கியதென்னவோ உண்மைதான். நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள். ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது, மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது. சரியா பிழையா தெரியவில்லை. அந்த நேரம் எல்லாமே ஒன்றுதான் என்பது போல மயக்கமாயுமிருந்தது. அவள் சென்று நெடுநேரமாகியும் அவளது மூச்சுக் காற்று எனது காதுமடலை வருடிக்கொண்டிருந்தது.

 - குரு அரவிந்தன்

மீளவிழியில் மிதந்த கவிதை..!

 - குரு அரவிந்தன்    

(மீளவிழியில் மிதந்த கவிதையெல்லாம்
சொல்லில் அகப்படுமோ?)

மின்னல் அடித்ததுபோல எல்லாமே சட்டென்று நடந்துவிட்டது. அதிர்ச்சியில் இருந்து நான் மட்டுமல்ல, அவளும் மீளவில்லை என்பதை அவளது அந்தப் பிடி உணர்த்தியது.

எவ்வளவு லாவகமாய் அவள் என்னைக் கடந்து சட்டென்று திரும்பி பின்பக்கமாய் வந்து என்னை இறுக்கி அணைத்தாள் என்பது எனக்கே வியப்பாக இருந்தது. தன்னைப் பாதுகாக்க என்னை முன்னால் தள்ளி நிறுத்தினாளோ, அல்லது எனது ஆண்மையில் அவளுக்கு இருந்த அதீத நம்பிக்கைதான் காரணமோ தெரியவில்லை, எதுவாய் இருந்தால் என்ன, என்னை நம்பிச் சரணடைந்தவளைக் காக்கவேண்டியது எனது பொறுப்பு என்பதை உணர்ந்து அவளுக்கு அடைக்கலம் கொடுத்தேன்.

தற்செயலாகத்தான் அது நடந்தது, பாடசாலையால் வரும்போது அவளது பென்சில் பெட்டி தெருவில் விழுந்து விடவே அதைக் குனிந்து எடுக்க முயன்றபோது, முன்வீட்டு வாசலில் படுத்திருந்த நாய் தன்னைத் தாக்கத்தான் எதையோ எடுக்கிறாள் என்ற பயத்தில் அவளைத் துரத்தத் தொடங்கியது. அந்தச் சமயம் பார்த்து நானும் எங்கள் வீட்டுக் கேற்றைத் திறந்து வெளியே வந்தேன். அதனால்தான் பாதுகாப்புத் தேடி ஓடிவந்து அருகே நின்ற என்னைக் கட்டிப்பிடித்தாள். அழகு ஓவியம் ஒன்று இதமான உடம்பும் சதையுமாய் என்னைத் திடீரெனக் கட்டிப் பிடித்ததில் நான் அதிர்ந்து போனதென்னவோ உண்மைதான். அதுவும் சிலநாட்களாக யார்மீது எனக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டிருந்ததோ, அவளே வலியவந்து என்னை அணைப்பதென்றால்? ஒரு ஸ்லோமோஷன் காட்சிப்படம் போல அந்தக் காட்சி என் மனதில் திரும்பத்திரும்ப நிழலாடிக் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது. சொர்க்கத்திற்குப் போனது போன்ற அந்த இனிய சுகம் அதிக நேரம் நீடிக்கவில்லை. அதிர்ச்சியில் இருந்து அவள் மீண்டபோது, பெண்மைக்கே உரிய நாணம் அவளைச் சட்டென்று விலகி நிற்கவைத்தது. வேர்த்து வியர்திருந்த முகத்தில் இன்னமும் பயக்களை தெரிந்தது. இப்பொழுதும் அவளது உடம்பு லேசாகப் பதறிக் கொண்டிருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. மூச்சு வாங்க ஓடி வந்ததில் அவளது மார்பகம் மேலும் கீழும் ஏறி இறங்கியது. பாடசாலையின் மெல்லிய வெள்ளைச் சீருடை ஆங்காங்கே வியர்வையில் தோய்ந்து போனதில் அந்த இடத்தை மட்டும் சூரியவெளிச்சம் வட்டம் போட்டு அதிசயமாய்க்  காட்டியது. வயசுக் கோளாறோ என்னவோ எனது பார்வை சட்டென்று அங்கேபட்டுத் தெறித்தபோது, அவள் என்னை அணைத்தபோது ஏற்படாத உணர்வு அந்த வனப்பில் கிளர்ந்தெழுந்தது. வேறு நேரம் என்றால் எனது பார்வையின் உக்கிரத்தை அவள் புரிந்து கொண்டிருப்பாள், இப்போதைய நிலையில் சுயமாக இயங்க முடியாமல் தடுமாறியதில் அவள் அதைக் கவனத்தில் எடுக்கவில்லை என்பது எனக்குப் புரிந்தது. தப்பாத இடத்தில் தப்பான பார்வை என்பதால் வலிந்து பார்வையைத் திசை திருப்பினேன்.

‘இதிலே கொஞ்ச நேரம் இருங்க..!’ அருகே இருந்த மரக்குற்றியைக் காட்டிச் சொன்னேன்.

அவள் பாதையைத் திரும்பிப் பார்த்தபடியே தயக்கத்தோடு உட்கார்ந்தாள். உட்கார்ந்ததும் ஓடிச்சென்று ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன்.
அதை வாங்கிய அவள் என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்தபடியே என்னை மேலும் கீழும் பார்த்தாள்.
‘பயந்து போயிட்டீங்க, இதைக் கொஞ்சம் குடியுங்க..’ என்றேன்.
சுயமாக இயங்கமுடியாமல் எனது வழி நடத்தலுக்காகவே காத்த்திருந்தவள்போல, மளமளவென்று தண்ணீரைக் குடித்தாள்.
முருகனுக்கு ஒரு பிள்ளையார் யானை உருவில் வந்தது போல எனது காதலுக்குப் பைரவர் நாயின் உருவில் உதவிக்கு வந்தாரோ? என்று தெருவிலே விழுந்து கிடந்த புத்தகங்களை ஒவ்வொன்றாகப் பொறுக்கும்போதும் மனசுக்குள்  யோசித்தேன். பொறுக்கிய புத்தகங்களை அப்படியே எடுத்து வந்து அவளிடம் கொடுத்தேன். வாங்கிக் கொண்டாள், நன்றி சொல்லவில்லை. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாத அதிர்ச்சி நிலையில் அவள் இருந்தாள்.

‘ஆ யூ ஓகே..?’ என்று வினாவினேன்.
கனவுலகிலிருந்து கலைந்து ‘ஓம்’ என்று என்னை நிமிர்ந்து பார்த்துத் தலை அசைத்தவள், மீண்டும் மெல்லத் தலை குனிந்தாள். அதுவே அவள் அழகிற்கு அழகு சேர்த்தது.

சற்றே தலை குனிந்தாள், சாமீ! இவளழகை
எற்றே தமிழில் இசைத்திடுவேன்? கண்ணிரண்டும்
ஆளை விழுங்கும் அதிசயத்தைக் கூறுவனோ?
மீள விழியில் மிதந்த கவிதையெல்லாம்
சொல்லில் அகப்படுமோ?


ஏக்கப் பெருமூச்சு விட்டபடி மெதுவாக எழுந்து வீதியைத் திரும்பிப் பார்த்தபடியே வீடு நோக்கி நடந்தாள். என்னைத்தான் திரும்பிப் பார்த்தாளோ அல்லது திரும்பவும் தன்னை அந்த நாய் துரத்தலாம் என்ற பயத்தோடு திரும்பிப் பார்த்தாளோ தெரியவில்லை. அவளுக்கு சற்றுமுன் நடந்ததை நினைத்துப் பயம் இருந்திருக்கலாம். நாய் துரத்தாவிட்டாலும் என் மனம் அவளைப் பின்னால் துரத்திக் கொண்டே சென்றதை அவள் அறிந்திருக்க நியாயமில்லை. ஏக்கப் பார்வையோடு அவள் பிரிந்தபோது, பாரதி கண்ட கனவுகளை எனக்குச் சொந்தமாக்கி, அவளிடம் கண்ட அந்த ஆளை விழுங்கும் அழகை எனக்குள் மென்று சுவைத்துப் பார்த்தேன். நான் நானாக இல்லை என்பதை என்னைவிட்டு அவள் பிரிந்த அக்கணமே நான் உணர்ந்து கொண்டேன்.

அவள் என்னைவிட ஒரு வகுப்பு மேலே படித்துக் கொண்டிருந்தாள். பள்ளிச் சீருடையில் கூட்டமாக மாணவிகள் போகும்போது மற்றவர்களைவிட அவள் மட்டும் வித்தியாசமாய் என் கண்களில் பட்டாள். தினமும் எத்தனையோ பெண்களைப் பார்த்தாலும், என்னைக் கவரக்கூடிய ஏதோ ஒருவித கவர்ச்சி அவளிடம் இருந்திருக்கிறது. அதுதான் என் மனம் நேரகாலம் தெரியாமல் அவளைத் துரத்தித் திரிகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். அவள் கல்லூரி சீருடையில் மட்டுமல்ல எந்த உடையிலும் சிரித்த முகத்தோடு அழகாகவே இருந்தாள். அந்த நிகழ்வின்பின் என்னைக் கண்டால் ஒரு புன்சிரிப்புடன் தலை குனிந்து கொள்வாள். பெண்மையின் நளினம் அவளது ஒவ்வொரு அசையிலும் வெளிப்படுவதைத் தினமும் அவதானித்தேன். எனக்குள் மெல்ல மெல்லக் காதலை வளர்த்துக் கொண்டேனே தவிர காதலைச் சொன்னதில்லை. சொல்ல நினைத்தாலும் விலாங்கு மீன்போல நழுவிக் கொண்டேயிருந்தாள்.
 
ஒரு நாள் படிப்பதற்கு ஏதாவது கதைப்புத்தம் இருக்குமா என்று வலிய வந்து கேட்டாள். கிடைத்த சந்தர்ப்பத்தை ஏன் நழுவவிடுவான் என்று குறுஞ்சிமலர் நாவலை அவளிடம் கொடுத்தேன். படித்துவிட்டு மிகவும் அருமையான நாவல் என்று வர்ணித்தாள். ஏன் என்று வினாவினேன். அதில் வரும் கதாநாயகனின் பெயர் தனக்கு மிகவும் பிடித்த பெயர் என்றாள். அதன்பின் எங்களிடையே புத்தகப் பரிமாறல் அடிக்கடி தொடர்ந்து கொண்டிருந்தது.

நாட்டின் போர்ச் சூழல் காரணமாக நாங்கள் பயந்து பயந்தே தினமும் வாழவேண்டி வந்தது. ஒருநாள் எங்கள் ஊரைநோக்கி இராணுவம் திடீரென முன்னேறுவதாகச் செய்தி வந்தது. நாங்களும் எங்கே போவது என்று தெரியாமல் அவசரமாக இடம் பெயர்ந்தோம். உயிர் வாழ ஆசைப்பட்டு ஆளுக்கொரு திசை நோக்கிச் சென்றதால் அவளை நான் மீண்டும் சந்திக்கவில்லை. நான் புலம் பெயர்ந்து வெளிநாடு வந்திருந்தேன். அவளும் அப்படியே ஏதாவது வெளிநாட்டிற்குப் போயிருக்கலாம் என்று என்னைச்சமாதானப் படுத்திக்கொண்டு மறைமுகமாக அவளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டேன்.

மின்னஞ்சல்கள் தினமும் நிறைய வந்து குவிந்து கொண்டிருக்கும். இலவசம் என்பதால் விரும்பியவர்கள் எல்லாம் திக்கெட்டில் இருந்தும் அனுப்பிக் கொண்டிருப்பார்கள். வேண்டாதவற்றை அழிப்பதே மிகவும் சிரமமாக இருக்கும். அன்றும் ஆர்வம் காரணமாக நண்பன் ஒருவன் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றைத் திறந்து பார்த்தேன். வன்னியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பிரதி பெறுபவளின் பக்கம் என் கவனம் திரும்பியது. அவளேதான், இயக்கப் பெயராக இருக்கலாம் பெயர் மட்டும் மாற்றப்பட்டிருந்தது. அப்படி என்றால் அவள் அங்கேதான் இருக்கிறாளா? இது எப்படிச் சாத்தியமாயிற்று, ஒரு நாயைக் கண்டு பயந்து அந்த ஓட்டம் ஓடியவள், துப்பாக்கி ஏந்துவாளா? என்னால் கடைசிவரை நம்பமுடியாமலே இருந்தது. தமிழர் வாழ்ந்த நிலமெல்லாம் இராணுவத்தால் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கப்பட்டது. யுத்தம் ஓய்ந்து வன்னி நிலம் பறிபோனபோது அவளுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. எந்த ஒரு செய்தியும் அவளைப்பற்றிக் கிடைக்கவில்லை.

தினமும் வரும் திடுக்கிடும் செய்திகளைக் கேட்கும்போதும், படங்களைக் காணொளிகளைப் பார்க்கும் போதும் அவளை நினைத்து என் மனம் வேதனையில் தடுமாறும்.

மாவீரர் தினத்திலன்று ஒவ்வொரு முறையும் மலரஞ்சலி செய்யும் போது என்கண்கள் பனிக்கும். கார்த்திகைப் பூக்கள் சூடுவதற்கல்ல, அர்பணிப்பதற்கே என்பதும் எனக்குத் தெரியும். ஆனாலும் அர்பணிக்கும் அந்த மலர்கள் நிச்சயமாக அவளுக்காக இருக்கக்கூடாது என்று ஒவ்வொரு தடவையும் என்மனம் சுயநலமாய் நினைக்கவைக்கும்.
 
ஏனோ இம்முறை மட்டும் மலர் வைக்கும்போது என்னை அறியாமலே குலுங்கிக் குலுங்கி அழுதேன். அன்று காணொளியில் பார்த்த அந்தக் காட்சி என்னை மீண்டும் மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உறைய வைத்திருந்தது. யாருக்காக அவள் தன்னுயிரைத் தந்தாள்?

மண்மீது கொண்ட காதலால்
மண்ணின் மானம் காக்கத்
தன்னையே தந்த அவளது அந்த
மீள விழியில் மிதந்த வலியெல்லாம்
சொல்லில் அகப்படுமோ?

பிரிவு....!

- Athanas Jesurasa

அது அற்புதமாக இருந்தது. நிச்சயமாக எனக்குத் தெரியும், 8.30க்கு ‘மூர்’ றோட்டில் தண்டவாளத்தின் ஓரமாக என்னைக் கடந்துபோகும் அந்தச் சிங்களப் பெட்டையை வைத்தே, அச் சிறுகதைஎழுதப்பட்டிருக்க வேண்டும்.

கையில் குடையோடும், சிந்தனை தேங்கிய முகமாயும் மெல்ல நடந்துபோகும் அவள்,சோகம் நிறைந்தவளாக  மனோரம்மியமான நடையில் பாத்திரமாகி இருந்தாள்.

யாரோ‘மூர்’ றோட்டிற்கும் ஸ்ரேஷனிற்குமிடையில் இருந்து 8.35 ட்றெயினுக்குப் போகும் ஒருவரே, அதை எழுதியிருக்கவேண்டும். எழுதியவரை அறிய நான் ஆவலாயிருந்தேன். அது‘வீரகேசரி’யில் வந்து, இரண்டு மூன்று கிழமைகளும் கழிந்துவிட்டன. 2
 அதுஎதிர்பாராமல் நிகழ்ந்தது. ‘சரஸ்வதி மண்டபத்’தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாமுடிந்து திரும்பிக்கொண்டிருந்தபோது, ஞானலிங்கம் அவரை அறிமுகப்படுத்தினான்.

“இவர்தான் சுப்பிரமணியன். நீர் முந்திச்சொன்ன ‘உறவுகள் பிரியும்’ கதையைஎழுதினவர்.”

சந்தியில் ஞானலிங்கம் விடைபெற்றுக் கொள்ளுப்பிட்டிக்குச் சென்றான். நாங்கள்வெள்ளவத்தைக்குக் கதைத்தபடி நடந்தே வந்தோம்.

அந்த வீரகேசரிக் கதையை நான் பாராட்டியபோது, அவர் நன்றி தெரிவித்தார். “கடற்கரையால போகிற, அந்தச் சிங்களப் பெட்டையைத் தானே அதில் எழுதியிருக்கிறீர்” எனநான் கேட்டபோது சிறிது தாமதித்துவிட்டு, தன் நண்பரைப் பார்த்து,

“நீரும் அந்தப் பெட்டையைக் கண்டிருக்கிறீர்தானே? உமக்கு அதைத்தான் எழுதியிருக்கிறனெனத்தெரிய இல்ல! நீர் ஒண்டும் அதப்பற்றிச் சொல்ல இல்ல” என்றபடி என்னைப் பார்த்து,

“நீர்தான் ஐசே சரியாய்ப் பிடிச்சிருக்கிறீர்!” என்று, மெல்லிய வெட்கச்சிரிப்புடன் சொன்னார். தொடர்ந்தும் கதைத்தபடி இருந்தார். அவரோடு கதைப்பதிலும்ஆவலாக இருந்தது.

இடுப்பளவில் உயர்த்தப்பட்ட இடது கையும் சிறிது சாய்ந்த தலையுமாக, கிறுகிறெனச் சிறிய கவடுகள் பதித்து நடந்தபடி அவர் கதைப்பது, விசித்திரமாய்த்தான் இருக்கும்.

பேச்சிடையே, தன்னைப்பபற்றிய விஷயங்களிற்கூட “இருக்கும், சில வேளை எழுதியிருப்பன், எழுதாமலும் இருந்திருப்பன்.... எனக்குத்தெரியாது....” எனத் தன்னைப்பற்றித் தனக்கே நினைவில்லாததைப்போல அவர் கதைத்தபோது, எனக்கு விசித்திரமாக இருந்தபோதும், அதனாலேயே தொடர்ந்தும் அவரோடு தொடர்புகொள்ள ஆவல்ஏற்பட்டது.

3
அதன் பின்னால் ‘ஸ்ரேஷனி’ல் நாங்கள் சந்தித்துக்கொள்வோம்.அந்த 8.35 ஸ்லோ ட்றெயின் கோட்டையை அடையும் வரை, அந்தப் பதினைந்து நிமிடங்களில் நாங்கள் கலை இலக்கிய விடயங்களைப் பற்றிக் கதைத்துக் கொள்வோம். சிலவேளை மௌனமாக அது கழியும். அவர் ரயிற் பெட்டியின் வெளிக்கம்பியைப் பிடித்தபடி, கடலையே இலயிப்பாகப் பார்த்தபடி நின்றுகொண்டிருப்பார். அந்த மௌனமும் அற்புதமாக இருக்கும்.

கோட்டையில் ‘பூந்தோட்ட வீதி’யில் அவர் என்னைப் பிரிந்து தன்னுடைய ‘ஒவ்வீசு’க்குப் போவார்.

அந்நாட்களில் ‘ஈழம்’ தினசரியின் சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளிவந்திருந்தன. சுப்பிரமணியனின் ‘விசரர்கள்’ அதில் பாராட்டைப் பெற்றிருந்தது.

உள்ளடக்கம் எனக்குப் பிடிக்கவில்லைத்தான். மனக்கோளாறு கொண்ட பாத்திரங்களின் இயக்கங்கள்.... .... ஆனால், அதில் கையாளப்பட்டிருந்த நடை .... .... ! அது அற்புதமானது.அவரது எழுத்து நடையில் எனக்கு ஒரே இலயிப்பு.

நான் சொன்னேன், “உள்ளடக்கத்தில கவனஞ்செலுத்தினால் உம்மட அருமையான நடைக்கு பிரமிக்கத்தக்க சிறுகதைகளை நீர் எழுதலாம்.” ஆனால் அவர்,
“நான் என்ன செய்யிறது ஐசே, இந்த உலகமே அழகான காட்சிகளால, இனிய சோகங்களால நிறைஞ்சிருக்கிறதைப்போல .... என்ர மனசுக்குள்ள கிடந்து பினையிற உணர்ச்சிகளையெல்லாம் அப்பிடியே சொல்லவேணும் போலக் கிடக்கு. அதத்தான் எழுதிறன். எழுதினா ஒரு திருப்தி.”

‘மௌனி’யும் ‘லா.ச.ரா.’வுமென்றால் அவருக்கு ஒரே இலயிப்பு.  “எவ்வளவு அழகு! நுணுக்கம் நுணுக்கமான உணர்ச்சிகளையெல்லாம் என்னமாதிரி எழுதுகினம்! எல்லாராலயும் இப்பிடி எழுத ஏலாது ஐசே. இவையின்ர தாக்கத்தாலதான், எனக்கும் எழுத விருப்பம்.”

இடையிடையில், தான் எழுதிய சிறுகதைகளையும் காட்டுவார். அவருக்கு அவற்றை எழுதியதே திருப்தி. பத்திரிகைகளுக்கு அனுப்புவதிலும் அக்கறையில்லை.

‘மோனக்குரல்’ , ‘குளிர்ந்துபோன நிராசைகள்’, ‘ஆத்மாவின் வறுமை’, ‘ஓ! இந்தஅழகுகள்!’ என்பவையெல்லாம் அவர் காட்டிய சிறுகதைகளே.

மழைதூறற் பொழுதில் தனிமையாய்க் கிடக்கும் பஸ் தரிப்பிடங்கள், பனிப்புகாரில் தோய்ந்த மலைத்தொடர்கள், நிறைவேறாத ஆசைகள், விசரர்களைப்போல் இயங்குகின்ற பாத்திரங்கள், ரயிலின் கூ .... என நீண்ட சோகக்குரல்.... எல்லாம், சுற்றிச் சுற்றி அவற்றில் தலைகாட்டும்.

அவரது அழகியல் நோக்கின் வெளிப்பாடுகளை, மனோரம்யமான அந்த நடையை நான் வியந்துபாராட்டுவேன். ஆனால் அந்த விசர்ப் போக்கான பாத்திரங்களை, திரும்பத் திரும்ப எழுதும் மனமுறிவுகளைப் பற்றிக் கதைக்கும்போது நாம் கருத்து வேறுபடுவோம். அவ்வேளைகளில் விட்டுக்கொடுக்காதபடி அவர் எதை எதையோவெல்லாம் கதைப்பார்.

சமீபத்தில் ‘ஓர் தனி உலகம்’ என்ற அவரது சிறுகதை வெளிவந்திருந்தது. அதில்வருகின்ற இளைஞன் வேலை செய்யவே பஞ்சிப்படுகிறான். வேலை ஒன்றுமில்லாமல் இந்த உலகத்தின் அழகை இரசிக்கவே ஆசைப்படுகிறான்.

அதைப்பற்றிக் கதைத்தபோது, அவரிடம் சொன்னேன், “சுப்பிரமணியம், இப்பிடிச் சும்மா உலகத்தில இருக்க ஏலாது.... அழக இரசிக்கத்தான் வேணும் .... ஆனா வேலையுஞ் செய்யத்தான் வேணும். புற உலகத்திலயிருந்தும் வாழ்க்கையில இருந்தும், நாங்கள் ஓட ஏலாது.”

ஆனால் , “எங்களுக்குப் புற உலகத்தப் பற்றிக் கவலையில்ல. எங்கட உலகம்எங்களுக்குள்ளேயே இருக்கு. அதிலேயே எங்களுக்குத் திருப்தி. அதிலயே எங்களுடைய வாழ்க்கை முடிஞ்சுபோகும்” என்று திருப்பிச் சொன்னார்.

“இதெல்லாம், வசதியான ஒரு கும்பலின்ர சிந்தனைப் போக்குகள். பெரும்பாலான மக்கள் இப்பிடி வாழ ஏலாது. ஏன், உம்மட குடும்ப நிலைக்கும் இது ஏலாது. உமக்குத் தங்கச்சிகள் இருக்கு. அப்பருக்கும் வயது போயிற்றுது. அப்ப இதெல்லாம் நீர்தானே பாக்கவேணும். இந்த உப்புப் புளிப் பிரச்சினைகள் எனக்கு முக்கியமில்லை எண்டு, நீர்சொல்ல ஏலாது.” – நான் சொன்னேன்.

“அவையவையின்ர பாட்டை அவையவையள் பாத்தாலென்ன? நாங்க ஏன், அவையின்ர பொறுப்பைத் தலையில சுமக்க வேணும்? எங்களுக்கு, எங்கட மனத்திருப்திதான் முக்கியம். இல்லையெண்டுஅவையள் ஆரும் வற்புறுத்தினால்.... நான் செத்துப் போவன்.”
நான் அதிர்ச்சியில் மௌனமாகிப்போனேன்.

4
அடுத்த மாதம் முழுவதும் நான் அவரைச் சந்திக்கவில்லை. காலையிலும் மத்தியானத்திலும் இரவிலுமாக என்னுடைய வேலைநேரம் மாறிமாறி அமைந்தது. ‘போஸ்ற்ஒவ்வீஸ்’ என்றால் அப்படித்தானே! இடையிடையில் ‘ஓவர்ரைமு’ம் செய்யவேண்டியிருந்தது. இயைபற்ற வேலைநேரத்திலும் இயந்திர உழைப்பிலும் மனம் வெறுப்படைந்திருந்த போதிலும், வாழ்வின் சுமை காரணமாக அதில் கலந்து போனேன். சுப்பிரமணியனும் என்னைச் சந்திக்கவில்லை.

அந்த மாதம் வறட்சியாகவே ஓடிமறைந்தது.

5
இந்த மாதம் முழுவதும் 9.00 மணி நேர வேலை. முதலாம் திகதி 8.30க்கு ஸ்ரேஷனுக்கு வந்தபோது ட்றெயினில் சுப்பிரமணினைச் சந்தித்தேன். ஆனால், இரண்டொரு பேச்சுக்களோடு அவர் மௌனங்கொண்டார். வெளிக்கம்பியைப் பிடித்தபடி, அடிவானத்தில் எதையோ தேடுகிறவரைப்போல கடற்பக்கத்தையே வெறித்து நோக்கியபடி நின்றார். ‘பூந்தோட்ட வீதி’யில் பிரிந்து செல்லும்வரை அவர் ஒன்றுமே கதைக்க வில்லை.

அதன் பின்னால் ஒரு கிழமைவரை நான் அவரைச் சந்திக்கவில்லை. அந்தப் பிரிவு, எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

அடுத்த ‘போயா’விற்கு மற்ற நாள் ஸ்ரேஷனில் நின்றுகொண்டிருந்த  போது, சிறிது தள்ளி யாருடனோ கதைத்துக் கொண்டிருந்த பேரம்பலம் என்னைக் கண்டுவிட்டுக் கெதியாக வந்து, ஓர்அதிர்ச்சியான செய்தியைச் சொன்னான்.

“இஞ்சேற்றாப்பா, சுப்பிரமணியன் தற்கொலை செய்திற்றானாம். தெல்லிப்பளையில தங்கட வீட்டுக்கருகில ட்றெயினுக்கு முன்னால பாஞ்சானாம். ரெண்டு நாளுக்கு முந்தித்தான் இது நடந்திது. காலம ஊரால வந்த ஒரு பெடியன்தான்சொன்னான்.”

என் நெஞ்சம் அதிர்ந்தது.

அந்த அதிர்ச்சியில், நான் மௌனத்தில் புதைந்து போனேன். நம்ப முடியாதது நடந்து முடிந்தும் விட்டதையறிய, மனது துயர்கொண்டது.
 ‘ஓ! சுப்பிரமணியனை இனிச் சந்திக்க ஏலாது .குறுக்குக் கம்பியைப் பிடித்தபடி – ரயிலில் கதைக்கும் அந்த அருமையான நேரங்களும், இனிமேல் வரப்போவதில்லை....’

 ‘எல்லாம் முடிந்துபோனது.’

கணங்கள், ஊர்ந்து கொண்டிருந்தன. கல்கிசைக்குப் போகும் ‘கரிக்கோச்சி’ கூ .... .... எனநீளமாய்க் கூக்குரலிட்டபடி ஓடியது.

‘துயரத்தில் புதைந்துபோன ஒரு பெண்ணின் சோகக் குரலைப் போல ....’ என அக்கூவலை ஒருகதையில் சுப்பிரமணியன் எழுதியிருந்தது, உடனே நினைவுக்கு வந்தது.

அது பெண்ணின் குரலோ என்னவோ .... எனக்கும்சோகக் குரலாகவே, அது இருக்கிறது!

தை 1970

மகத்தான துயரங்கள்....!

- Athanas Jesurasa    

ண்பனோடு சும்மா உலவித்திரியலாமென வந்தவனின் கண்ணில் தொலைவில் அவள் பார்வைகொண்டதில் பழைய நினைவுகள் கிளர, தனது வாழ்க்கையின் சாரமே துயரம்தானோவென உணர்வுகொண்டான்.
    சூனியங் கவிந்ததெனக் கழிந்த இரு ஆண்டுகளிற்குப் பிறகு காண்பதில் எவ்வாறு எதிர்கொள்வதெனத் திகைப்புக்கொண்டவன், நண்பனோடு கதைகொண்டதைப்போல அவளைக் கடக்கையில்,
     “எங்களையெல்லாம் மறந்திற்றீங்கள் போல....” எனக் குரல் கேட்டதில் திடீரென நிற்பாட்டிச் சைக்கிளைத் திருப்பினான்.
    குழந்தையின் கையில் இழுபட்டபடி கிடந்த தாலியைக் கண்டதில் ‘உன்னையா?’ என உருகிக் கேட்க வந்த வார்த்தைகளும் பதுக்கங்கொள்ள, “அப்பிடியில்ல.... கதைப்பிராக்கில கவனிக்க இல்ல” என வெளியிட்டான்.
    அவளோடு  தான் அந்நியங்கொள்ள  நேர்ந்ததும் இந்தத் தாலியால்தானே என்பது உறுத்த, மௌனமாய் அதனை வெறித்த பார்வை கொண்டான்.
    ‘இது’ இந்தக் கழுத்தில் ஏறியதை உணர்த்த வந்ததென லோகநாதனின் தந்தி கிடைத்ததில், இரைந்தபடி கிடந்த கடலை வெறித்துத் திரிந்த நாட்களும் முகங்காட்டக் கண்டான்.
     நிர்ப்பந்தமாய்க் கழிந்த காலை மாலை ரயிற் பயணங்களிடையிலும்  ‘பார்சல் ஒவ்வீசின்’ தூசி நிறைந்த இரைச்சல்களிடையிலும் தனது வாழ்க்கை சாரமற்றுப் போனதென்பது பெரிதாய் உறுத்தச் சலிப்புக் கொண்டவன், ஒரு  மாறுதல் காணலாமெனப்  பேராதனைக்குப் போய் சில நாட்கள் தங்கினான்.
    தொங்கு பாலத்தின் அசைவில் ஆடியபடி, காலடியில் ‘மாவலி’யை வெறித்துப்பார்த்து நின்றதில், இப்படித்தான் துயரங்களும்  தன்னை ஆட்டுகின்றனவோவெனப் பிரமைகொண்டான். அடர்பச்சை மூங்கிற்கரையைப் போல்தான் தன் வாழ்க்கை  ஜீவநாதத்தை இழந்து மௌனங்கொண்டதெனவும்; வெயில் விழாதபடி அடர்ந்து நின்றதில் நிழல்கள் பரப்பி நின்றதான மரங்களிடையில் – புற்களின் நடுவில் தனியாய்க் கிடந்ததான தரிப்பு விடுதியைப் போற்றான் தானும் தனிமைகொண்டானெனவும்  தோன்றியதில், நின்று பெருமூச்செறிந்தான்.
    இரண்டு மாதங்களின் முன்னால்தான் அவளைச் சந்திக்கவந்து, இறுதிப் பரீட்சை நன்றாய் முடிந்த களிப்பில் மிதந்தவளோடு  இந்தப் புற்றரையின் தரிப்பு விடுதி ; தொங்கு பாலம்; மூங்கிற்கரையருகில் நடத்தல் எனத் திரிந்தபோது வசீகரங்கொண்டதெனத்  தோற்றிய வாழ்க்கை இன்று சூனியங்கொண்டதே என்று உணர்ந்தவனின் கண்கள், எதிரில் விரிந்துகிடந்த பெருவட்டப்  புற்றரையை  வெறித்தன.
    ‘றஜவத்தை’யில் துரைராசாவின் அறையில், ஜன்னலுக்கூடாக நின்று நோக்கியதில் தொலைவில்  ‘வாசிற்றி’ பார்வைகொள்ள, அதனுள் நுழையும் வாய்ப்பும் இழக்கப்பட்டதான பழைய நினைவும் வர, ‘தன் வாழ்க்கையே நீண்ட இழப்புக்களைக்கொள்ள வந்ததுதானோ’ என, நினைவுகொண்டான்.
     கொழும்பு திரும்பியதில் ‘வவசெற் பிளேசின்’ நாற்பத்தோராம் இலக்க அறைக்குள்ளும் பார்சல் ஒவ்வீசுக்குமாகக் கழிந்த சாரமற்ற வாழ்க்கையிடையிலும், அவளிடமிருந்து ஒரு கடிதத்தையாவது  எதிர்பார்த்திருந்தான்.
    இரண்டு  மூன்று மாதங்கள் கழிந்ததிலும் ஒன்றையும் காணாததில் துயர்கொண்டவன் மனது, நம்பிக்கை இழந்ததில் சலிப்புக்கொண்ட  வேளை, அவள் பீ. ஏ.யில் பாசாகியதைத் தெரிவித்த லோகநாதனின் கடிதம் கிடைத்ததில் இறுதிப்  பரீட்சை முடிந்த களிப்புத் துள்ள தன்னோடு திரிந்த அவளது நினைவு மின்னலிட, நம்பிக்கை துளிர்த்ததெனக் காத்திருந்தான்.
    காலங் கழிந்ததிலும் ஒன்றையுங் காணாதவனின் கண்ணில், தொடுவானமும்; தொலைதூர நட்சத்திரங்களும்  பார்வைகொண்டு உறுத்தின.
    ‘பிரபஞ்ச வெளியின் தனித்த கிரகங்களைப்போல்தான் நாமும் தனித்துப்போனோமோ’வென நினைத்தவன் மனது யாழ்ப்பாணத் தொலைவை கிரக இடைவெளித்தூரமெனக் கற்பித்ததில் விரக்திகொண்டு, இனி ஒருபோதும் யாழ்ப்பாணம் செல்வதில்லையெனக் கொழும்பிலேயே சாரமற்று  உழன்றுகொண்டிருந்தான்.
   எச்சில்தொட்டு  எழுதியதில் ஊறி விளிம்புகட்டிய காபன் பென்சில் எழுத்துக்களில், ஏதோ என்னவோ எனப் பயந்து கடிதம்மேற் கடிதமாய் அம்மா உருகி எழுதியதில்,  தள்ளாத வயதில் அவளிற்கேன் இந்தத் துயரமெனத் தோன்ற  யாழ்ப்பாணம் வந்தவேளை.... இவளையும் காணநேர்ந்ததே என்பது தோன்ற, மனது  துயர்கொள்ள நின்றான்.
    “என்ன யோசிக்கிறீங்க ....” என அவள் கேட்டதில் விழிப்புக்கொண்டவன்,  “இல்ல.... பழைய நினைவுகள்....” என மெதுவாய்ச் சொல்லியபடி அவளைப் பார்த்தான். யோசனைகள் முகத்தில் நிழலிட்ட தென, அவள் நின்றாள் ; அவளும் பழைய நினைவுகளைக் கொண்டாள்போலும்!
    படிக்கையில், மத்தியானம் ஊரிற்குச் சென்று அவசரமாய்த்  திரும்புகிறவனை எதிர்பார்த்துக் காத்து மெல்ல நடந்து போகையில், அவனும்  வர இதே ஒழுங்கையால் கதைத்தபடிபோன நாட்களை நினைத்திருக்கலாம்.
     காலையில் செபம் விரைவில் முடிந்துபோனபோதும் மறுபுறத்தில் ‘நமச்சிவாய வாழ்க ....’ என நீண்டுசெல்லும் சிவபுராணத்தைத் தொடரும் சைவச் சொற்பொழிவு முடியும்வரை, பத்தோ பதினைந்து  வேதக்காரப்  பிள்ளைகளாய்க் காத்திருந்த வேளைகளில்...., அந்நிய மதச் சூழலில் – மதம் தந்த நெருக்கங்காரணமாய் கதைத்திருந்த பொழுதுகள்....!
    free periods இல், லைபிறறியில்.... ; பேராதனையின் ‘அந்த  மனோகர நாட்களை’யும் நினைத்திருக்கலாம்.
    முகம் இருள்கொண்டதென நின்றவளின் கண்ணில் நீர்முத்துத் திரண்டதெனக் கண்டவன், வாய்விட்டு அழுதுவிடுவாளோ எனத் தோன்ற, ‘இரண்டு  வருஷமாய் ஒரு கடிதமும் போடாததைக்’ கேட்க நினைந்ததையும் கைவிட்டுத் தலையைத் திருப்பி மறுபுறத்தைப் பார்த்தான்.
    சைக்கிள் ‘பாரில்’ சாய்ந்தபடி, தெளிவாய்க் காலடியில் எதையோ உற்றுப் பார்த்ததென நின்ற லோகநாதனைத்  தவிர, அந்த ஒழுங்கையே தனிமை கொண்டதென வெறிச்சிட்டுக் கிடந்தது. மதியம் நெருங்கிய பொழுதில் வேலியோரச் சிறுநிழல்கள் தவிர வெயிலில் வறண்டு கிடந்ததைக் கண்டதில் இதுபோல்தானேயென, தனது வாழ்க்கையினையும் நினைத்துக் கொண்டான்.
    “நல்லாய் மெலிஞ்சுபோனீங்க...., உடம்பப் பாக்கிறதுக்கென்ன....” எனக் கேட்டு, “என்ர வாழ்க்கையில என்ன சந்தோஷமிருக்கு?” எனப் பதில்சொன்னதில்,
     “எல்லாந்தான் முடிஞ்சுபோச்சே....” என்றவள் சேலைத் தலைப்பை வாயில் அடக்கியபடி விம்மினாள்.
     “மலர்! இதென்ன றோட்டில....” என்றவன் கதையை மாற்ற முயன்று, “இப்ப எங்க போக வெளிக்கிட்டனீர்?” எனக்  கேட்டான்.
     “ஆஸ்பத்திரிக்குப் போகவேணும்” என அவள் பதில் சொல்லியதில், “அப்ப, நேரம் போகுதே....!”  என்றவனுக்கு,
     “ஓம், கச்சேரியடியில பஸ் எடுக்கவேணும்” என விம்மற் குரலில் மெல்லச் சொல்லியவள், சிறிதே சுறுசுறுப்புக் கொண்டாள்.
     அவள் விரைவிற் போகட்டுமென, அவன் மௌனங்கொண்டு நின்றபோது....
     “கொழும்புக்குப்  போறதுக்கிடையில ஒருக்கா வீட்ட  வாருங்க....” எனக் குரல் கேட்டு,
     “பாப்பம்....” என இழுத்தபடி சைக்கிளைத் திருப்பினான்.
     “பாப்பமெண்டால்....? கட்டாயம் வாருங்க ....,எவ்வளவு நாளாய்க்  காணஇல்ல....”  என்றபடி சேலைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்தபடி அவள் நின்றதைக் கண்டதில், பழைய ‘இழைவு’ மின்னலிட்டதெனத்  தோன்ற மௌனமாய்  நிலைத்தபார்வையோடு  “ஓம்” எனத் தலையாட்டினான்.
     அவள், நடந்து  போனாள்.
     தோளிற் கிடந்த குழந்தை அவனைப் பார்த்துக் கையைத் தூக்கித்தூக்கிக் கீழே போட்டபடி சென்றதைக் கண்டவன்,
     வாழ்வின் வசந்தங்களும், கையசைத்தபடி இவ்வாறுதான் தன்னைவிட்டும் எந்நேரமும் செல்கின்றனவோ என உணர்வுகொண்டதில் மனது வெறுமைகொள்ள, ‘தனது வாழ்க்கையின் சாரமே துயரந்தானேயெனச்’ சலிப்புக்கொள்ள நின்றவனின் காதில், “யேசு....போவமா?”  என லோகநாதன் கேட்டதென்ற ஒலிகள், ஈனஸ்வரத்தில் தடவிச் சென்றன....

 -   மாசி 1971

Friday, October 24, 2008

சுமை

குரு அரவிந்தன் - கனடா
(கனடியத் தமிழ் வானொலி (CTR) சர்வதேசரீதியாக நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற சிறுகதை இது.)

இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப் போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப் பட்டதும், கூச்சம் தாங்காமல் அவை தானாகவே இறுக மூடிக் கொண்டன. இமைகள் மூடிக் கொண்டாலும் காது மடல்கள் விரிந்து நெருங்கி வரும் கனமான பூட்ஸின் அதிர்வுகளை மௌனமாக உள்வாங்கிக் கொண்டன. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதற்கான எதிர்பார்ப்பில், இதயம் ஏனோ வேகமாகப் படபடவென்று அடித்துக் கொண்டது. மிக அருகே அதிர்வுகள் நிசப்தமாகிப் போனதால், பயத்தில் இதயம் இன்னும் வேகமாக அடித்துக் கொள்ள, தூங்குவது போலப் பாசாங்கு செய்ய முனைந்தான்.

'எழுந்திருடா' பூட்ஸ் கால் ஒன்று விலாவில் பட்டுத் தெறித்தது.

துடித்துப் பதைத்துக் கைகளை ஊன்றி எழுந்திருக்க முயற்சி செய்தான். 'சுள்' என்று முழங்கால் மூட்டு வலித்தது. அடிக்கு மேல் அடிவாங்கிய அந்த உடம்பிற்கு, எங்கே வலிக்கிறது என்பதைக்கூட உணர முடியாமல் இருந்தது. வீங்கிப்போன கால்கள் எழுந்து நிற்கமுடியாமல் துவண்டு சரிந்தன. வந்தது யாராய் இருக்கும் என்று ஊகித்ததில் நிமிர்ந்து பார்க்கவே பயமாக இருந்தது.
'வெளியே வாடா நா..!' தொண்டை கிழிய அவன் கூச்சல் போட்ட போது அவனது குரலை இவனால் இனம் காண முடிந்தது. அவனது கண்களில் இவன் படும் போதெல்லாம் இப்படித்தான் கொச்சைத் தமிழில் கூச்சல் போட்டுக் கத்துவான். ஒரு போதும் அவனது வாயிலிருந்து நல்ல சொற்கள் உதிர்ந்ததை இவன் கேட்டதில்லை.

தள்ளாடியபடியே வெளியே வந்து, அச்சத்துடன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சப்பாத்துக் கால்களைப் பின் தொடர்ந்தான். இரும்புக் கதவுகள் பல திறந்து, மூடப்பட்டு இறுதியில் ஒரு அறைக்குள் இருந்த அதிகாரி முன் நிறுத்தப் பட்டான். இந்தச் சிறைக்கு மாற்றப்பட்ட நாளில் இருந்து யாரையுமே நிமிர்ந்து பார்க்க அவனுக்குப் பயமாக இருந்தது.

'நீ நடேசுதானே..?'

எப்போவோ மறந்துபோன அவனது பெயர் நினைவுவர மெல்ல தலை நிமிர்த்திக் குரல் வந்த திசை நோக்கிப் பார்வையைச் செலுத்தினான். அவனைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய ஆவணமாய் இருக்கலாம், அந்த அதிகாரிக்கு முன்னால் மேசையில் விரித்து வைக்கப்பட்டிருந்தது. அதுவும் இவனது கடந்த கால நிலையற்ற வாழ்க்கைபோல, மின்விசிறிக் காற்றில் அடிபட்டுத் துடித்துக் கொண்டிருந்தது.

எதுவும் பேசாது தலையாட்டிக் காளைபோல, இவன் தன்னிச்சையாய் தலை அசைத்தான்.

'உனக்கு விடுதலை, கையொப்பம் போட்டு விட்டு நீ போகலாம்..!'

அவனுக்குத் திக்கென்றது. விடுதலையா? எனக்கா? அவன் ஒருபோதும் விடுதலை வேண்டும் என்று கேட்கவே இல்லையே..? விடுதலை என்று கையொப்பம் போட்ட பல தமிழ் இளைஞர்கள் வீடுபோய்ச் சேரவில்லை என்பது இவனுக்குத் தெரியும். இவனைக் கொண்டே அப்படிப் பலரின் சடலங்களைப் புதைத்தால் என்றாவது தெரியவருமென்று, அடையாளம் தெரியாமல் எரிக்கப் பண்ணியிருக்கிறார்கள்.

கையிலே ஒரு பையைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். கையெழுத்துப் போட்டுவிட்டு பிரித்துப் பார்த்தான். இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் இவன் கைதானபோது அணிந்திருந்த வேட்டியும், சேட்டும் இவன் நினைவுகளைப் போலவே அவையும் கசங்கி மங்கிப்போய்க் கிடந்தன. சேட்டை உதறி மாட்டிப் பார்த்தான். தொளதொளத்துப் போயிருந்தது. தாடியும், பரட்டைத் தலையும் தெருப் பிச்சைக்காரனை அவனுக்கு ஞாபகமூட்டியது.
பலியாடு போலப் பின்தொடர, இராணுவ தடை முகாமிற்கு வெளியே உள்ள வீதியில் அவனைக் கொண்டு வந்து விட்டார்கள். இவனது இளமைக் காலத்தை முற்றாகக் கொள்ளையடித்த அந்த இராணுவ முகாமை வெறுப்போடு திரும்பிப் பார்த்துக் கொண்டே உயிர் வாழும் ஆசையில் அந்த இடத்தை விட்டு வேகமாய் நடந்தான்.

இனி எங்கே போவது? யாரிடம் போவது? உள்ளே இருக்கும்வரை இல்லாத பிரச்சனை இப்போ பூதாகரமாய் தலை தூக்கி நின்றது. காலையில் இருந்து பட்டினி கிடந்ததால் பசி வயிற்றைக் கிண்டியது. உள்ளே இருந்திருந்தால் ஒருவேளை கஞ்சியாவது கிடைத்திருக்கும். உடலும் உள்ளமும் சோர்ந்து போக அப்படியே தெருவோர மரத்தடியில் உட்கார்ந்தான்.

மழை வரும்போல, ஆங்காங்கே வானம் கறுத்திருக்க குளிர் காற்று சில்லிட்டது. சூடாக ஏதாவது குடித்தால் இதமாக இருக்கும்போல் தோன்றிற்று. யாரோ பாதி குடித்துவிட்டுக் கீழே போட்டு நசுக்கிவிட்ட பீடித்துண்டு ஒன்று குழி விழுந்த தெருவில் அரை உயிரோடு இழுப்பு வந்ததுபோல இழுத்துக் கொண்டு கிடந்தது. அதை எடுத்து அதில் ஒட்டியிருந்த மண் துகள்களை ஊதித் தள்ளிவிட்டு வாயில் வைத்து உதட்டைக் குவித்து ஒரு இழுப்பு இழுத்தான். இழுத்த இழுப்பில் இதமான சூடு உள்ளே உடம்பெல்லாம் பரவ, நரம்புகள் புடைத்து நிற்பதை இவன் உணர்ந்தான். அந்த பீடித்துண்டு கொடுத்த உட்சாகத்தோடு மீண்டும் எழுந்து தள்ளாடியபடி நடந்தான்.

எங்கே போவது என்று தெரியாமல் கால்போன திசையில் விச்ராந்தியாக நடந்தான். கனமான பூட்ஸ் கால்கள் பதிந்த இடமெல்லாம் திட்டுத் திட்டாய் வீங்கிப் போயிருந்தன. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் வேதனை தாங்காது 'விண் விண்' என்று மூட்டுக்கள் வலித்தன. காலாகாலமாய் முடிவின்றி நடந்ததுபோல கால்கள் துவண்டு போயின. இன்னும் எவ்வளவு தூரம்..?

எப்படியோ யாரையோ எல்லாம் கெஞ்சி மன்றாடி, மாடுகள் சோடைபிடித்துப் போவதுபோல கடைசியில் இவனும் தான் பிறந்த மண்ணுக்கு வந்து சேர்ந்தான். இருபத்திரண்டு வருடங்களுக்குமுன் இருந்த கிராமம் எப்படியோ எல்லாம் மாறிப்போயிருந்தது. பெட்டிக்கடை மளிகைக் கடையாய் மாறி இருப்பதை அதிசயமாய்ப் பார்த்தான். குழந்தை பசியிலே வீரிட்டதைத் தாங்கமுடியாமல் ஊரடங்குச் சட்டத்தையும் பொருட்படுத்தாமல் தெருவைக் கடந்து பின்பக்கத்தில் இருந்த பெட்டிக் கடைக்குப் பால்மா வாங்கச் சென்ற பொழுதுதான் இவன் இராணுவத்தால் பிடிக்கப்பட்டான். அப்புறம் வேண்டாத குற்றமெல்லாம் இவன்மீது சாட்டி இவனையும் கும்பலோடு கும்பலாகக் கொண்டு போனார்கள். ஒவ்வொரு முகாமாக இவனைக் கொண்டு திரிந்து, அலைக்கழித்து இவனது குடும்பத்திற்கு கண்ணாமூச்சி காட்டினார்கள். பணவசதியோ செல்வாக்கோ இல்லாததால் இவனை வெளியே கொண்டுவர இத்தனை காலமாகியும் இவனது குடும்பத்தால் எதுவுமே செய்ய முடியாமல் போய்விட்டது.

யார்யாரையோ எல்லாம் விசாரிக்க, கடைசியில் கடைக்கு முன்னால் உள்ள மரத்தடியில் கண்ணாடியோடு உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த வயோதிபர்தான் அவனை யார் என்று அடையாளம் கண்டு கொண்டார். 'தன் கணவன் உயிரோடு இருக்கிறான்' என்ற ஒரு நல்ல வார்த்தையைக் கேட்பதற்காக ஒவ்வொரு முகாமாக இவன் மனைவி அலைந்து திரிந்து உயிர் உருக அரசிடம் யாசித்தது அவர் மனக்கண்முன் நிழலாய் வந்தது.
நடேசு தனது குடும்பத்தைப் பற்றி அவரிடம் விசாரித்தான். அவர் கொடுத்த தகவலின்படி அவனது மனைவி இறந்து போனதும், மகள் பாட்டியோடு வளர்ந்து வந்ததும், இப்போ திருமணமாகி அந்த ஊரிலேயே தங்கி இருப்பதும் தெரியவந்தது.

''நீ திரும்பி வருவாய் என்று நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை நடேசு!'' அவனது மகள் குடியிருக்கும் ஒதுக்குப் புறமான ஒரு குடிசைக்கு அவனை அவர் அழைத்துச் செல்லும் போது அவர் ஆச்சரியமாய்ச் சொன்னார்.

வாசலில் சொறி நாய் ஒன்று கண்மூடிப் படுத்திருந்தது. நாயைச் சுற்றி ஈக்கள் வட்டமிட்டு மொய்த்துக் கொண்டிருக்க, மெல்லிய உறுமலோடு தலை நிமிர்த்திப் பார்த்துவிட்டு மீண்டும் சுருண்டு படுத்துக் கொண்டது. அறிமுகம் இல்லாத இவனைப் பார்த்துக் குரைக்காமல் விட்டதே இவனுக்கு மிகப்பொரிய ஆறுதலாக இருந்தது.

'சரசு..!' என்று பெரியவர் வெளியே நின்றபடி குரல் கொடுத்தார்.

இருபத்திமூன்று, அல்லது இருபத்திநாலு வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி வெளியே வந்தாள். அவளின் முந்தானையைப் பிடித்தபடி நாலு, ஐந்து வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றும் தொடர்ந்து வந்தது.

நடேசு ஆச்சரியத்தோடு வெயியே வந்த அந்தப் பெண்ணைப் பார்த்தான். இருபத்திரண்டு வருடங்களுக்குமுன் மனைவியைப் பார்த்த ஞாபகம் சட்டென்று வந்தது.

'சரசு, இது யார் என்று தெரியுதா..?'

அவள் நடேசுவைச் சலனமற்ற ஒரு பார்வை பார்த்துவிட்டு 'தெரியாது' என்பது போலத் தலையசைத்தாள்.

'இதுதான் உன்னோட அப்பா, நடேசு..!'

அவள் அந்த வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. அவளது முகபாவத்தில் இருந்து அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவள் இல்லை என்பது இவனுக்குப் புரிந்து போயிற்று. அவளோ வேண்டாத சந்தேகத்தோடு நடேசுவைப் பார்த்தாள்.

'அவர்தான் செத்துப் போயிட்டாரே..?' புதிதாக ஒருவனை ஏற்கமுடியாத நிலையில் வார்த்தைகள் இழுபட்டன.

'இல்லை சரசு, தொலைந்து போனவன், செத்துப் போயிட்டான் என்றுதான் நாங்க எல்லோரும் நினைச்சு கருமாதி எல்லாம் செய்திட்டோம். ஆனால் இத்தனை வருடமாய் மாறிமாறி ஒவ்வொரு தடைமுகாமிலையும் இருந்திருக்கிறான். இப்பதான் நாட்டிலே சமாதானம் என்று சொல்லி இவனை விடுதலை செய்தார்களாம்.'

அவள் இடையிலே வந்த இந்தப் புதிய உறவை ஏற்றுக் கொள்ள முடியாதவளாய், இந்தக் கதை எல்லாம் எனக்கு வேண்டாம் என்பது போலப் பிடிவாதமாய், அவரது கூற்றை மறுப்பதுபோலத் தலையசைத்தாள்.
'அப்பா என்கிற உறவே என்ன என்று தெரியாமல் நான் இத்தனை வருசமாய் வளர்ந்திட்டேன்;. பாட்டி போனதுக்கப்புறம் வேளாவேளைக்குச் சாப்பிடக்கூட வழியில்லை. கூலி வேலை செய்து இந்தக் குழந்தையை வளர்த்து எடுக்கவே என்பாடு சங்கடமாய் இருக்கு. இப்போ புதிதாய் இந்த வயதிலே அப்பா என்று இவர் உறவு முறை சொல்லிக் கொண்டு வந்தால் நான் என்ன செய்ய..? இருக்கிற சுமையே எனக்குப் போதும் சாமி, இனி என்னாலே புதிதாய் வேறு ஒரு சுமையையும் தாங்கமுடியாது!'

இது போலக் கௌரவமாக வாழ்ந்த இப்படி எத்தனை ஆயிரம் குடும்பங்கள் அந்த மண்ணிலே சிதைக்கப்பட்டு அவர்களின் எதிர்காலக் கனவுகள் எல்லாம் பெரும்பான்மை இனத்தவர்களால் கொள்ளை அடிக்கப் பட்டிருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்க நடேசுவுக்கு ஓவென்று அழவேண்டும் போலிருந்தது. ஆழமாக நினைவுமுள் கிழித்த வேதனையில் காலில் இருந்த வலி மறந்துபோக, தன் எதிர்காலம் குறித்த கவலை இப்போது அவனைப் பிடித்துக் கொண்டது.

'பாட்டிக்கு என்னாச்சு..?' பெரியவர் கேட்டார்.

'பாட்டி போனவருடம் செத்துப் போயிட்டா.' என்றாள் சரசு.

'அப்போ உன் புருசன்..?'

'மூன்று வருடமாச்சு, இவனுக்கு சாப்பிட ஏதாவது கடையிலே வாங்கிக் கொண்டு வர்றேன் என்று சொல்லிவிட்டு கடைப்பக்கம் போனவர்தான் அப்புறம் திரும்பி வரவே இல்லை..!' என்றாள்.

எங்கே போயிருப்பான் என்பதுதான் எப்போதுமே விடை தெரியாக் கேள்வியாய்த் தொக்கி நிற்கிறது. தன்னைப் போலவே தொலைந்து போனவர்களின் பட்டியலில் அவனது பெயரும் எங்கேயாவது எழுதப்பட்டிருக்கலாம் என இவன் நினைத்தான். இன்று நாட்டில் இருக்கும் சூழ்நிலையில் அவன் உயிரோடு இருப்பானோ என்பதுகூட இவனுக்குச் சந்தேகமாய் இருந்தது.

'ஏதோ பெற்றெடுத்த கடமைக்காக என்றாலும் காய்ச்சிற கஞ்சியோ, கூழோ மிச்சம் இருக்கிறதைக் கொடுத்தால் போதும் சரசு, உனக்கு ஒருகாலும் நடேசு பாரமாய் இருக்கமாட்டான்.' வேலி ஓலையில் பிய்த்து எடுத்த ஈக்குச்சியால் பல்லைக் குடைந்து கொண்டிருந்த நடேசுவிற்காகப் பெரியவர் பரிந்துரைத்தார்.

கனவு கண்டுகொண்டு வாசலில் படுத்திருந்த நாய் திடீரென எழுந்து தன் இருப்பை உறுதி செய்ய ஒரு உசுப்பல் உசுப்பி சோம்பல் முறித்தது. நடேசுவைக் கண்டு கொள்ளாமல், ஒரு பாய்ச்சல் பாய்ந்து எதிர் வீட்டுக் கோழியை விரட்டிக் கொண்டு ஓடியது. வாசலின் வெறுமையில் கலைந்துபோன ஈக்கள் எல்லாம் இப்போ நடேசுவைச் சுற்றி மொய்க்கத் தொடங்கின.

குரு அரவிந்தன்
கனடா

நன்றி : கனடிய தமிழ் வானொலி

புல்லுக்கு இறைத்த நீர்..!

குரு அரவிந்தன் - கனடா

தவிர்க்க முடியாமல் போயிருக்கலாம். எப்படியோ அவனை நேருக்கு நேரே சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது.
எதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும் தர்மசங்கட நிலை ஏற்படும்போது சிலர் தெரியாதமாதிரி, கண்டும் காணாததுபோல முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டு அந்த இடத்தை விட்டு மெல்ல நழுவி விடுவதும் உண்டு. சிலர் வேறு வழியில்லாமல் ''சார் எப்படி இருக்கிறீங்க, சௌக்கியமா..?'' என்று பட்டும் படாமலும் குசலம் விசாரித்து விட்டு விலகிச் செல்வதும் உண்டு. இன்னும் சிலர் உண்மையாகவே குரு பக்தியோடு, நலம் விசாரிப்பதில் அக்கறையோடு நின்று நிதானமாக பேசுவதும் உண்டு.
'இத்தனை வருடங்களுக்குப் பின்னும் என்னுடைய பெயரை ஞாபகம் வைச்சிருக்கிறீங்களே, எப்படி சார்..?' என்று வேறுசிலர் ஆச்சரியப்படுவதும் உண்டு.

'உங்கவீட்டிற்கு குடும்பத்தோடு ஒரு நாளைக்கு வரணும் சார், உங்களைப் பற்றி தினமும் வீட்டிலே சொல்லுவேன், இது நீங்க கொடுத்த வாழ்க்கை.' கைகளைப் பற்றிக் கொண்டு டாக்டர் சுந்தர் சென்றவாரம் கண்கலங்கச் சொன்னபோது எனக்கும் கண்கள் கலங்கிவிட்டன.

வீட்டைவிட்டு வெளியே உலாவந்தால் என்னிடம் படித்த மாணவர்கள் நிறையவே தென்படுவார்கள். இப்படி என்னிடம் படித்த எத்தனையோ மாணவர்கள் இன்று டாக்டகளாகவோ, அல்லது உயர் பதவி வகிப்பவர்களாகவோ இருந்து கொண்டு சென்ற இடமெல்லாம் என்னிடம் நலம் விசாரிக்கும்போது, இந்த சமுதாயத்திற்கு முடிந்த அளவு நல்லதொரு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கிக் கொடுத்த எனது கடந்தகால வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருப்பதாக எனக்குள் ஒரு பெருமிதம் தோன்றும். என்னுடைய மாணவன் என்று சொல்லிக் கொள்வதில், அறிமுகம் செய்வதில் மனசெல்லாம் பூரித்துப் போகும். இவன் மட்டும் எந்த வகையிலும் சேராமல் வித்தியாசமாய், மரியாதையின் நிமிர்த்தம் சட்டென்று வாயிலே இருந்த சிகரட்டை எடுத்து பின்னால் மறைத்துக் கொண்டு நின்றான். வாய்க்குள் இருந்த புகையைக் கஸ்டப்பட்டு மென்று விழுங்குவது தொண்டைக் குழி அசைவில் தெரிந்தது. பார்ப்பதைத் தவிர்த்திருக்கலாம். தர்மசங்கடமான அந்த நிலையில் தன்னைத்தானே மாட்டிக் கொண்டு விழித்தான். அந்த இறுக்கத்தைத் தணிக்க, எதிர்த்தாற்போல் நின்ற அவனிடம் 'எப்படி இருக்கிறாய்,..?' என்று குசலம் விசாரித்தேன்.

என்னுடைய கல்லூரி வாழக்கையில் வந்துபோன பலரில் இவனும் ஒருத்தனாய் இருந்தான். நல்ல நிறமாய், மிக நேர்த்தியாக உடை அணிந்து இருப்பான். அன்று மாணவனாய் இருக்கும் போது பார்த்த அதே அலட்சிய் பார்வை. உருவம் மட்டும் கொஞ்சம் மாறி இருந்தது. புத்தகமும் கையுமாய் அதே மூக்குக் கண்ணாடியோடும், கீழ்க்கண் பார்வையோடும் காட்சி தந்தான். வெகுநாட்களாகத் தூங்காதவன் போல முகம் களைத்திருந்தது.
'சார் நல்லா இருக்கிறீங்களா..?' என்று ஒரு சொல்லாவது அவன் கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. எனக்கேன் இந்த ஆசை என்பது எனக்கே புரியவில்லை. எதையுமே நிலையாக உள்வாங்கிக் கொள்ளும் நிலையில் அவன் தற்போது இல்லை என்பது அவனை அருகே பார்த்தபோது புரிந்தது. தள்ளாத வயதில் எதிர்பார்புகள் அதிகமாக இருக்குமோ?

மேளனத்தின் இடைவெளியைத் தவிர்ப்பதற்காக,
'என்ன இந்தப் பக்கம்..?' என்றேன்.

'சும்மா.. லைபிரரிக்கு..!'

அந்த ஒற்றைச் சொல்லுக்கு மேலே அவன் எதுவும் சொல்லவில்லை.
அந்த ஒற்றைச் சொல்லை வைத்துக் கொண்டு இவனைப் பற்றிய முழுவதுமான எந்த ஒரு முடிவிற்கும் என்னால் வர முடியாமல் இருந்தது.
காற்றின் சுழற்சியில் சிகரட் புகை மேலே எழும்பி முதுகைத் தாண்டி தலைக்குமேலால் சுருண்டு போனது. விரல் இடுக்கில் இதுவரை பின்னால் மறைத்து வைத்திருந்த சிகரட் விரலைச் சுட்டிருக்க வேண்டும். அப்படியே கீழே நழுவவிட்டான். விழுந்த இடத்தைப் பார்க்காமலே வெகுலாவகமாக குறி வைத்துச் செருப்புக் காலால் மெல்ல நசித்து விட்டான். அது நசுங்கிய வேகத்தில் வித்தியாசமான ஒருவித மணம் பரப்பி வண்டிச் சக்கரம்பட்ட தேரைபோல இறுதி மூச்சை விட்டுப் பிதுங்கிப் போனது. என் மீது இருந்த பார்வையை எடுக்காமலே தன்னிச்சையாகவே அத்தனையையும் செய்து முடித்தான்.

ஒருவேளை இவனது கடந்தகால வாழ்க்கையும் இப்படித்தான், புரியாத தெரியாத காரணங்களால் அடிபட்டு நசுங்கிப் போயிருக்குமோ..?
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, இவன் முதன் முதலாக அட்மிஷன் கேட்டு வந்தபோது அவனது தாயும் கூடவே வந்திருந்தாள். கேட்டதற்கு மட்டும் இவன் தலையசைத்தான், பாரம் நிரப்புவது முதற்கொண்டு மிகுதி யாவற்றையும் தாயே செய்து முடித்தாள். போகும்போது 'என் பையன் டாக்டராகணும், அது உங்க பொறுப்பு என்று வேறு சொல்லிவிட்டுச் சென்றாள். மகனை எப்படியாவது டாக்டர் ஆக்கிவிட வேண்டும் என்ற ஆதங்கம் அவள் பேச்சிலும் செய்கையிலும் தெரிந்தது.

அவனுக்கு கணிதம் நன்றாகவே வந்தது. ஆனால் விஞ்ஞானம் புரியவே மாட்டேன் என்றது. பொறியியல் துறையில் அவனுக்கு இருந்த ஆர்வம் விலங்கியல் துறையில் வரவேயில்லை. ஆனாலும் எப்போதும் புத்தகமும் கையுமாய் படித்துக் கிழிப்பவன் போல் வெறும் பாவனை செய்வான்.
தாயின் கனவுகள் வெறும் பகற்கனவாய்ப் போகப் போகிறது என்பது எனக்குச் சீக்கிரமே புரிந்து போயிற்று. காலத்தை விரயமாக்க வேண்டாம், அவனுக்குப் பிடித்தமான துறையில் அவனைச் செல்ல விடும்படி ஜாடைமாடையாக தாயிடம் சொல்லிப் பார்த்தேன். கேட்பதாக இல்லை. மகனை டாக்டராக்கிப் பார்ப்பதைத் தவிர வேறு லட்சியமே தனக்கு இல்லை என்பது போல, நான் சொன்னது எதையுமே அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கடைசியில் காலம்தான் பதில் சொன்னது. தாயின் கனவு கலைந்தபோது, அவன் எதுவுமே இல்லாமல் வெறும் பூஜ்யமாய் இருந்தான்.

'உன் அம்மா..?' சட்டென்று தாயின் ஞாபகம் வரவே விசாரித்தேன்.
'அம்மாவிற்கென்ன என்னை தனியே நடுத்தெருவில் விட்டிட்டு மகாராசியாப் போயிட்டா.' சட்டென்று சுதாரித்துக் கொண்டு, கைகளை உயர்த்தி மேலே காட்டிச் சொன்னான். பார்வை எங்கோ வெறித்தது.

'ஐயாம் சொறி..!' அனுதாபப்பட்டு ஆறுதல் கூறினேன்.

கனவுகளை யதார்த்தம் என்று நம்பி ஏமாந்தவள் இவனின் தாய். இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றவள் மகாராசியாய் எப்படிப் போயிருக்க முடியும், பரிதவித்துத்தான் போயிருப்பாள் என்று, அவனது பதில் என்னை எண்ண வைத்தது.

என்னுடைய கடந்தகால ஆசிரியர் தொழில் அனுபவத்தில், இப்படி எத்தனையோ திறமை மிக்க மாணவர்கள் பெற்றோரின் வீண் பிடிவாதத்தால், தவறான பாதையில் வழிகாட்டப்பட்டு கடைசியில் ஒன்றுமே இல்லாமற் போவதைப் பார்த்திருக்கிறேன். இவன் மட்டும் என்ன விதிவிலக்கா?
கொஞ்சக் காலம் என்னிடம் படித்தவன் என்ற முறையில், அவனது இந்த நிலைக்கு நானும் ஒருவிதத்தில் காரணமோ என்று மனசு சங்கடப்பட்டது.
'நேரம் இருந்தால் எங்க வீட்டுப் பக்கம் ஒரு நடை வாவேன்' என்றேன்.
'எங்கே இருக்கிறீங்க..? முகவரியைக் கொஞ்சம் கொடுங்களேன்' என்றான்.
முகவரியைச் சொன்னேன். பவ்வியமாய் ஒரு துண்டுப் பேப்பரில் குறித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான்.

'கட்டாயம் வரணும் சரியா?' என்றேன்.

'கட்டாயம் வர்றேன், ஆனால் நீங்க யார் என்று இன்னமும் சொல்லவே இல்லையே..?' என்றான்.

அவனது காலடியில் கிடந்த நசிக்கப்பட்ட சிகரட் துண்டு என் பார்வையில் பட்டது. அந்த சிகரட் புகையின் நாற்றம் என் உடம்பு முழுவதும் சட்டென்று படிந்து விட்டது போல ஏனோ என் உணர்வு சங்கடப்பட்டது.

குரு அரவிந்தன்
கனடா
நன்றி : ஆனந்தவிகடன்

ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்!

- குரு அரவிந்தன் - கனடா -

இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. ஒன்று அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்த டி.என்.ஏ ரிப்போட், மற்றது அழகாக குண்டு குண்டாக அவருக்கு நன்கு பழக்கப்பட்ட கையெழுத்தில் முகவரி எழுதப்பட்டிருந்தது. ஊட்டி கான்வென்ட் ஹாஸ்டலிலிருந்டது எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தைத்தான் முதலில் பிரித்துப் படித்தார்.

'அன்புள்ள அப்பா'
பதினைந்து வயது நிரம்பிய மகள் திவ்யாவிடம் இருந்து கடிதம் வந்திருந்தது. ஆர்வத்துடன் தொடர்ந்து வாசித்தார்.

'அப்பா இனிமேல் உங்களை உரிமையோடு 'அப்பா' என்று என்னால் அழைக்க முடியுமோ தெரியாது. ஆனாலும் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் டி.என்.ஏ ரிப்போர்ட் உங்கள் கையிற்கு வருமுன் எனக்கும் உங்களுக்கும் இடையே இருந்த உறவைப் பற்றி மனம் விட்டுப் பேசவிரும்புகின்றேன்.

அப்பா என்றால் பாசம், அப்பா என்றால் அன்பு, எனக்கு எல்லாமுமாய் நீங்கள் தான் இருந்திருக்கிறீர்கள். அம்மாவின் அலட்சியமும், அசட்டையும், உதாசீனமும் என்னை அம்மாவிடம் இருந்து தூரவிலகிப்போக வைத்ததாலோ என்னவோ, உங்கள் மீது அதிகம் ஈடுபாடு கொள்ள வைத்தது. அன்பையும் பாசத்தையும் என் இதயத்தில் விதைத்து விட்டு உங்கள் இதயத்தை மட்டும் எப்படி அப்பா உங்களால் கல்லாக்கிக் கொள்ள முடிந்தது?

அம்மாவிற்கும் உங்களுக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் பூதாகரமாய் வளர்ந்து இப்படி விவாகரத்தில் முடியுமென்று நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. 'இவளுக்கு அப்பா நீங்கள் அல்ல' என்று அம்மா ஆவேசமாகக் கத்திக் கூச்சல் போட்ட போது கூட நான் அதைப் பெரிது படுத்தவில்லை. ஆனால் 'நீ என் பெண்தானா?' என்ற கேள்விக் குறியோடு என்னை நீங்கள் நிமிர்ந்து பார்த்தீர்களே அதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.
பெற்றோருக்குள் ஏற்படும் பிரச்சனைகளால் பிஞ்சுமனங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றன என்பதை ஏன்தான் பெற்றவர்கள் உணர்ந்து கொள்ள மறுக்கிறார்களோ தெரியாது. என் எதிர் காலத்தை நினைக்க எனக்கே பயமாக இருக்கிறது. எல்லோர் பார்வையிலும் நான் ஒரு கேள்விக் குறியாய்த் தெரிகிறேன். என்னைப் பொருத்தவரை எனக்கேற்பட்ட இந்தப் பாதிப்பு ஒரு மாறாத ரணமாய் என் மனதில் பதிந்து விட்டது.

அப்பா கடைசியாக உங்களிடம் ஒரு வேண்டுகோள்! விஞ்ஞானம் முன்னேறி விட்டது. அம்மா சொன்னது உண்மை என்றால் டி.என்.ஏ ரிப்போட் வந்ததும் நான் உங்கள் பெண் அல்ல என்பது நிரூபணமாகிவிடும். அந்த நிமிடமே நான் உங்களை விட்டு அன்னியப்பட்டு விடுவேன். அப்படி ஒரு நிலைமை ஏற்படுமுன் கடைசியாக ஒரு முறை உங்களைச் சந்திக்க விரும்புகின்றேன். எனக்கென்னவோ உங்கள் தோளில் முகம் புதைத்து மனதில் இருப்பதை எல்லாம் உங்களிடம் அழுது கொட்டித் தீர்க்க வேண்டும் போல இருக்கிறது! உங்கள் பிடிவாதத்தை கைவிட்டு என்னைப் பார்க்க ஒரே ஒரு முறையாவது வருவீர்களா?'

அந்தக் கடிதத்தை வாசித்ததும் அவர் இடிந்து போய்விட்டார். கணவன் - மனைவி பூசல் காரணமாக ஒன்றுமறியாக் குழந்தை வீணாகத் தண்டிக்கப் படுகிறாளே என்று நினைத்தார். விவாகரத்துக் கோரும் அளவிற்கு அவர் என்ன தான் தப்புச்செய்தார்?

கல்யாணமான புதிதில் அவருக்கு ஏற்றமாதிரி நடந்து கொண்ட மனைவி காலப் போக்கில் தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினாள். சிறிது சிறிதாக அவர்களுக்குள் தொடங்கிய பிரச்சனை குழந்தை பிறந்த பின்பும் தொடர்ந்து விசுவரூபம் எடுத்தது.

அவரிடம் பணம் இருந்தது, அவளிடம் அழகும் இளமையும் இருந்தன. அவளது விருப்பம் இல்லாமல் அவளது குடும்பத்தின் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் இந்தக் கல்யாணம் நடந்தது என்பது அவளாகச் சொல்லும் வரை அவருக்குத் தெரியாது. ஆனாலும் தனது குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு அவரிடம் உள்ள வசதிகளை அனுபவிப்பதற்காக அவளும் இவ்வளவு காலமும் மௌனமாய் அவரோடு ஒத்துப் போயிருக்கிறாள்.
'உனக்கு விருப்பம் இல்லாமலா இந்தக் கல்யாணம் நடந்தது?'
'ஆமா! என்னை ஒரு பெண்ணாய் யாருமே மதிக்கலே! உங்களுடைய பணத்தைக் குறிவைத்து என் ஆசைகளை, என் காதலை, கடந்த காலத்தை எல்லாவற்றையுமே எங்க அப்பா அடமானம் வைத்து விட்டாரே!' அவள் விசும்பி விம்மலாய் வெடித்தாள்.

'காதலா.......?'

'ஆமாம் காதல்தான்! என் காதலனைத் திருமணம் செய்யப்போவதாக நினைத்துத் தான் அவனோடு நான் நெருங்கிப் பழகினேன். ஆனால் விதி தான் உங்கள் உருவத்தில் வந்து விளையாடி விட்டதே! இனிமேலாவது எனக்கு விவாகரத்து மூலமா விடுதலை கொடுங்க...'

'அப்போ இத்தனை காலமும் என்னோட வாழ்ந்ததெல்லாம்......?'

'வாழ்ந்தது இந்த மீனாவோட உடம்பு மட்டும் தான், மனசல்ல! இனியும் போலியாய் என்னை நானே ஏமாற்றிக் கொண்டு உங்களோடு வாழ என்னாலே முடியாது. எனக்கு இந்த நரகத்தில் இருந்து விடுதலை வேணும்!'
'பிரிஞ்சு போகத்தான் வேண்டும் என்றால் அதை யாராலும் தடுக்க முடியாது, ஆனால் நம்ம பெண்ணோட கதி?''

'நம்ம பெண்ணா? யார் சொன்னது அவ உங்க பெண் என்று?'

'நீ... என்ன சொல்கிறாய்?'

'ஆமாம்! திவ்யாவிற்கு அப்பா நீங்க இல்லை!'

''இந்தா பார்! நம்ம குடும்ப வாழ்கையோட விளையாடாதே!'

'நான் விளையாடலே, ஆனால் அதுதான் உண்மை!'

இடி ஒன்று தாக்கியது போல அவர் அதிர்ந்து போனார்.
'அப்போ திவ்யா என்னோட பெண் இல்லையா?'

'இல்லை.

'பொய்..! என்னை அவமானப்படுத்த பொய் சொல்றே.. பிரியணும்னா போய்த் தொலை.. எதுக்காக இப்படி சித்திரவதை பண்றே..'

'இப்போ திவ்யா உங்க பெண்ணு இல்லைன்னு நிரூபிக்கணும் இல்லியா..?'

'கடவுளே!...

'நிரூபிச்சுக் காட்டறேன்

மனித மனத்தில் விழும் ஏமாற்றப் பள்ளங்கள் குரூரமாக வக்கிரங்களால் நிரம்பிவிடும் போலும்... அவள் அவனை அவமானப்படுத்தவே சதி தீட்டினாள். லீவுக்கு வந்த திவ்யாவைக் கட்டாயப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தி...

ஹாஸ்டல் விருந்தினர் அறைவாசலில் எதிர்பாராமல் அவரைக் கண்டதும் ஒரு கணம் திகைத்துப் போய் நின்று விட்டாள் திவ்யா. அப்புறம் சமாளித்துக் கொண்டு, 'நான் உங்களுக்கு ஒரு கடிதம் போட்டேனே கிடைத்ததா?' என்றாள்.

'கிடைச்சதும்மா...'

'டி.என்.ஏ ரிப்போட் இன்னும் வரல்லையா?'

'வந்திடிச்சு!'

'வந்திடிச்சா?'
அவள் முகத்தில் ஏமாற்றமும், அதே நேரத்தில் அதன் முடிவை அறிந்து கொள்ளும் தவிப்பும் தெரிந்தன.

'நினைச்சேன், நீங்க தயங்கி நிற்கும்போதே உங்களுக்கு உண்மை தெரிஞ்சிருக்கும் என்று நினைச்சேன்!'

'தெரியும்!'

'அப்போ அம்மா சொன்னது அத்தனையும் உண்மை தானே?'

'இல்லை, அம்மா சொன்னதில் உண்மையில்லை! அம்மாவிற்கு என்னோடு வாழப்பிடிக்கலை, அதனாலே எனக்குக் கோபமூட்டி என்னிடம் இருந்து விவாகரத்து வாங்கத்தான் அம்மா அப்படிச் சொல்லியிருக்கா!'

'அப்பா! நீங்க என்ன சொல்லுறீங்க?'

'டி.என்.ஏ ரிப்போட்டைப் பார்த்தேன்! நீ என்னோட பெண்தான்!'

'உண்மையாவா...?'

'ஆமாம்! யார் என்ன சொன்னாலும் நீ என்னோட மகள்தான்!'

'அப்......பா!' அந்த ஒரு சொல்லுக்காகவே காத்திருந்தது போல அவள் பாய்ந்து வந்து அவரைக் கட்டி அணைத்து மார்பிலே முகம் புதைத்து விக்கி விக்கி அழுதாள். இன்னும் பெரிதாக நெஞ்சு வெடிக்க ஓலமிட்டு அழவேண்டும் போல அவளுக்கு இருந்தது.

'அழாதே அம்மா!' அவர் பாசத்தோடு கண்ணீரைத் துடைத்து விட்டார். சட்டென்று அழுவதை நிறுத்தி, அவள் அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

'இனிமேல் நான் அழமாட்டேன், எனக்கும் அப்பா இருக்கிறார்!' அவள் சந்தோஷமிகுதியால் அவர் கைகளுக்குள் முகத்தைப் புதைத்து வாய்விட்டுச் சிரித்தாள்.

மகளைத் திருப்திப் படுத்திய சந்தோஷத்தோடு அவர் வீடு திரும்பினார். வீடு வந்ததும் முதல் வேலையாக பிரித்துப் படிக்கப்படாத அந்த டி.என்.ஏ ரிப்போட்டை அப்படியே கவரோடு சேர்த்துக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டார். மனம் அமைதியாக இருந்தது. இந்த அமைதிக்காக அவர் கொடுத்த விலைகூட அதிகமாகத் தோன்றவில்லை. மீனா கோரிய விவாகரத்தில் பரஸ்பர சம்மதம் என்று மறுபேச்சின்றி கையெழுத்து போட்டுக் கொடுத்திருந்தார்.

பதிலுக்கு அவளும் டி.என்.ஏ அறிக்கை முடிவை திவ்யாவிடம் வெளியிடுவதில்லை என்று வாக்குறுதி அளித்திருந்தாள். விவாகரத்து வழக்கு முடிய சிறிது காலம் ஆகலாம்... ஆனால் திவ்யாவின் நிம்மதி ஆயுட்காலத்திற்கும் நீடிக்கும்.

- குரு அரவிந்தன் - கனடா -
(நன்றி – கல்கி)