சல்மா
திடீரென அன்று மைமூன் வாந்தி எடுக்கவும் கதீஜா ஓடிவந்து ஆமினாவை அவளது வீட்டிலிருந்து கூட்டிப் போனாள். வரும் வழியில் "நீ வந்து அவ கிட்டக் கேளு பாவிமக எதையுமே சொல்ல மாட்டேங்கிறா" என நடுக்கமுற்ற குரலில் சொல்லியபடி கையில் அரிக்கேன் விளக்கோடு அவர்கள் தெருவில் இறங்கி நடந்து செல்லும் பொழுது, தெருவெங்கும் இருள் கலந்து கிடந்தது. யாராவது பார்த்து "என்ன இந்நேரத்துல எங்கெ போற ஆமினா" என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என யோசித்தபடியே மெதுவாக அடியெடுத்து வைத்து நடந்துகொண்டிருந்தவளுக்குச் சலிப்பாக இருந்தது. இந்த வயதில் தான் பிள்ளை பெற்றுக் குடும்பம் நடத்துவதே பெரிய விஷயமாக இருக்கும்பொழுது இவளுடைய பிரச்சினைகளை வேறு தலையில் சுமக்க வேண்டியிருக்கிறதே என்று. கல்யாணம் முடிந்து விட்டால் அவனோடு வாழ்வதைத் தவிர வேறு நினைப்பு பெண்களுக்கு வருமா என்பதையே மைமூனிடமிருந்துதான் தெரிந்துகொண்டாள். ஊரில் தலைகாட்ட முடியாத கேவலத்தைத் தன் குடும்பத்திற்குத் தந்துவிட்ட பிறகு அவள் உயிரோடு இருக்கத்தான் வேண்டுமா என்றிருந்தது இவளுக்கு. வீட்டை நெருங்கிப் படலைத் திறந்து மெதுவாக உள்ளே நுழைந்தார்கள் இருவருமாக. அத்தாவுக்கு எதுவும் தெரியக் கூடாது, ரொம்பவே மனமொடிந்துபோவார் என்கிற கவலை வேறு அவளை அரித்தது. இவள் தலாக் வாங்கின ஒரு கேவலம் போதாது என்று இது வேறா என்று அவர் உயிர் போய்விடும். இந்த இக்கட்டிலிருந்து எப்படித் தப்பிப்பது என்கிற எண்ணம் வேறு சேர்ந்துகொண்டிருக்க, தெருவில் நாய் ஊளையிடும் சப்தம் பயத்தை உண்டுபண்ணிற்று. இந்நேரம் சொஹ்ரா தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு அழுதால் கணவனும் எழுந்து தன்னைத் தேடுவான் என நினைத்துக்கொண்டவள், விஷயம் தன் மாமியார் ஒருத்திக்கு மட்டும் தெரிந்தால் போதுமே, வேறு வினையே வேண்டாம் என்றெல்லாம் நினைத்தபடி மைமூன் படுத்திருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.
மறுநாள் மாலை வீட்டு மாட்டு வண்டியைப் பண்ணையாள் மருது மூலம் கட்டச் சொல்லியிருந்தாள். அவனுடைய மனைவி முருகி மூலமாகப் பக்கத்து ஊரிலிருக்கும் மருத்துவச்சியைப் பற்றித் தெரிந்துகொண்டு விட்டிருந்தார்கள். முருகி சொன்னாள் "அவளால ஆகாதது எதுவுமேயில்லை" என்று. தானே போய் மாட்டு வண்டியில் கையோடு கூட்டி வருவதாகவும் சொன்னாள். பக்கத்து ஊர் என்றாலும், இப்பொழுது போனால் வருவதற்கு இரவு பத்து மணிக்கு மேலாகும். அதுதான் சரியான நேரமும்கூட என்பதனால் மருதுவும் முருகியும் போயிருந்தார்கள். இருள் நாலாபுறமும் பரவ இரவு வந்து கொண்டிருந்தது. சொஹ்ராவுக்கு சீக்கிரமே உணவூட்டித் தூங்க வைத்திருந்தாள். இஸ்மாயில் வியாபார விஷயமாக ஊரிலில்லை என்பதால் தோதாக இருக்கும் என்று இந்த நாளைத் தேர்ந்தெடுத்திருந்தாள் என்றாலும் அவளது இளம் மனம் கட்டுக்கடங்காதபடிக்குப் பயம் கொண்டிருந்தது.
நடக்கவிருக்கும் செயலின் விபரீதம் முழுமையாக மனதில் படிய மறுத்தது. இதை விட்டாலும் வேறு வழி இந்தக் கிராமத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. தங்கையின் வயிற்றுப் பாரம் கரைந்தால் போதுமென்றிருந்தது. ஊரில் இவள் உண்டாகியிருப்பது தெரிய நேர்ந்தால் அதன் விளைவுகளை நினைக்கையிலேயே மனம் நடுங்கிற்று. அக்குழந்தையைப் பெற்றெடுக்க முடியாத நிலையில் இதைத்தான் செய்ய வேண்டும். அவளை வேறொரு இடத்தில் உடனடியாகக் கட்டிக் கொடுப்பதாக இஸ்மாயில் சொல்லியிருக்கிறான். தலாக் வாங்கின இத்தா மைமூனுக்கு முடியட்டுமென்றுதான் காத்திருந்தார்கள். அதற்கிடையில் இந்தக் குழந்தை எதற்காக வந்து ஜனிக்க வேண்டும் என்றெல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
ஊர் அடங்கிய பிறகு மெதுவாக தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினாள். நிலவொளி அதிகமில்லாதது வசதியாக இருந்தது. நடப்பதற்குச் சிரமமாக இல்லையெனினும் தரையைக் கூர்ந்து பார்த்தபடியே நடந்தாள், கையில் வெளிச்சத்திற்கென்று விளக்கு எதுவும் எடுத்து வரும் துணிவு இல்லை. யாராவது பார்த்துவிடக்கூடும் எனப் பயமாக இருந்தது. அடுத்த தெருதான் என்பதால் ஒன்றும் பிரச்சினையில்லை. வீட்டை அடைந்து படலைத் திறந்து கொல்லைப்புறத்தை நோக்கிப் போனாள். அங்கே பின்புறத் திண்ணையோடு இருளில் முருகியும் ஏழு வயதான பொண்ணும் குத்தவைத்து உட்கார்ந்திருந்தார்கள். இவளைப் பார்த்ததும் எழுந்து நின்று இவள் முகத்தைப் பார்த்தார்கள். இவள் தன் வாயில் கைவைத்து யாரும் பேச வேண்டாமென்பதுபோல சைகை செய்தாள். வீட்டின் பின்புறக் கதவு தாழிடப்படாமல் சும்மா சாத்தியிருந்தது. கதவைத் தள்ளியதும் உடனே திறந்துகொண்டது. இவள் முதலில் உள்ளே நுழைந்து திரும்பிப் பார்த்தாள் பிறகு இவர்களும் உள்ளே நுழைந்ததும் கதவைத் தாழிட்டுவிட்டு அம்மாவைத் தேடினாள்.
கதீஜா கூடத்தில் தூணில் உடலைச் சாய்த்து அமர்ந்திருந்தாள் இவர்கள் வருகையை எதிர்பார்த்தபடி. இவர்களைப் பார்த்ததும் தட்டுத்தடுமாறி எழுந்து தூணைப் பற்றிக்கொண்டாள். "அவ எங்கே?" என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டாள் ஆமினா. மச்சு மேலே என்று கை காட்டிவிட்டு, அதை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் கதீஜா. நடை தளர்வுற்று சோர்ந்திருந்தது. இப்பிடிப் பாதி ராத்திரியில பழிய எடுக்கிறாளே என தனக்குள் நொந்து கொண்டவளுக்கு ஆமினாவை நினைக்கையில் கண்ணில் நீர் கோர்த்தது. என்பொன்னுமக தங்க மக இந்த வயசுல இம்புட்டுக் காரியமா இருக்காளே என்று நினைத்தாள். அதே சமயத்தில் மைமூனின் வயதும் ஞாபகத்திற்கு வந்தது. "அவளுக்கு இந்த பிஞ்சு வயித்தில் இப்படி ஒரு பிள்ளைய ஏண்டா அல்லா உண்டாக்கினே" என்று அரற்றிக்கொண்டாள். அவர்கள் நால்வரும் ஒருவர்பின் ஒருவராக மரப்படிகளில் ஏறி மாடியை அடைந்தார்கள். அங்கே மெலிதான விளக்கொளியில் சுருண்டுபோய் படுத்திருந்தாள் மைமூன். "அல்லா இவள பாக்கையில ஏங்கொலையே புடிக்குதே" என்று சொல்லிப் பொங்கிவந்த அழுகையைச் சேலைத் தலைப்பை வாய்க்குள் வைத்து அடக்கினாள் கதீஜா. "சரி சரி அழாதீங்க" என்றபடி தன் தாயைத் தேற்றினாள் ஆமினா தன்னுள்ளிருந்த பயத்தை வெளிக்காட்டாதபடி. இவர்களுடைய அழுகையில் கண் விழித்தெழுந்த மைமூன் மிரளமிரள விழித்துக்கொண்டிருந்தாள். அவளது மெலிதான தேகம் மெதுவாக நடுங்கிக்கொண்டிருப்பதை விளக்கொளியில் பார்க்கமுடிந்தது.
ஆமினா இப்பொழுதுதான் மருத்துவச்சியை நேராகப் பார்த்தாள். அவளுக்கு நாற்பத்தைந்து வயதிருக்கும் என்று தோன்றியது. சட்டை போடாமல் சேலையைச் சுற்றிக் கட்டியிருந்தாள். காதுகளில் சிகப்புக் கல் வைரத்தோடு மின்னியது. கைகளிரண்டிலும் தேளின் படம் பச்சை குத்தியிருந்தது பொருத்தமானதாக இருந்தது. அவளது முகத்திலும் கண்களிலும் ஒருவிதமான அலட்சிய பாவமிருந்தது. இது தனக்கொன்றும் புதிதில்லை என்கிற மாதிரி. அவள் ஆமினாவையும் கதீஜாவையும் கேலி செய்யும் விதத்தில் பார்த்து முறுவலிப்பது போலிருந்தது. இதற்கெல்லாமா பயப்படுவீர்களென கேட்காதது தான் குறை. "சரி சரி நேரமாச்சு, நான் வந்த வேலையைப் பார்க்கறேன்" என்று தன் பாட்டுக்குச் சொல்லிவிட்டுத்தான் அக்குளில் இடுக்கியிருந்த பையை எடுத்துத் தரையில் வைத்து, அதிலிருந்து ஒரு எருக்கஞ்செடியின் தண்டை எடுத்து வெளியில் வைத்தாள். பிறகு ஒரு நூல் கண்டு, இறுதியாக ஒரு களிம்பு டப்பி. அவள் அதன் பிறகு செயல்பட்ட விதம் தம் அவள் கைதேர்ந்தவள் எனச் சொல்லக்கூடியதாக இருந்தது. மைமூன் அதனை வெறித்துப் பார்த்தபடியிருந்தாள். அவளிடமிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை. பயமும் வார்த்தைகளும் தனக்குள் இறுகிக் கிடக்க விரக்தியோடுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
இலைகள் நீக்கிய எருக்கஞ்செடியின் தண்டின் ஒரு முனையில் தான் கொண்டுவந்திருந்த டப்பியிலிருந்து கருமையான களிம்பைத் தோய்த்தெடுத்தாள், மறு முனையில் நூல் கண்டிலிருந்து நூலைப் பிரித்தெடுத்து நன்கு இறுக்கிக் கட்டித் தன் விரலில் சுற்றிக்கொண்டாள். குச்சியின் அடிப்பகுதியோடு சேர்த்து நூல் அவள் விரல்களுக்குள் இறுக்கமாகப் பிடிக்கப்பட்டிருந்தது. தான் செயல்படலாமா என்கிற விதத்தில் அவள் இவர்களது முகத்தை ஏறிட்டுப் பார்க்க, ஆமினாவுக்குத் தன்னுள் இதயத்திலிருந்து ஏதோ ஒன்று நழுவி விழுவதைப் போலிருந்தது. அவ்வுணர்வு குற்றம் சார்ந்ததாகவோ இழப்பு சார்ந்ததாகவோ இல்லாமல், இயலாமையின் ஒட்டு மொத்த உணர்வாக அது மாறிக்கொண்டிருந்தது. கடவுளால் தான் கைவிடப்பட்டு விட்டதான ஒரு மனநிலையும் இனி என்னவும் நடக்கலாம் என்கிற அவநம்பிக்கையும் ஒன்றுசேர அவள் திடீரென தன் தங்கையை இறுகக் கட்டிக்கொண்டு அழத்தொடங்கினாள். ஒரு குழந்தையைப் போன்ற அவளது மேனியெங்கிலும் பரவிக்கொண்டிருந்த நடுக்கம் இவளையும் பற்றிக் கொள்ள மௌனமான, உள்நோக்கியதொரு கேவல் இருவரிடமிருந்தும் எழத் தொடங்கியது. மருத்துவச்சியின் கடினமான உரமேறிய கைகள் ஆமினாவின் தோளைப் பற்றி பலவந்தமாக இழுத்த பிறகு தன்நிலை உணர்ந்தவள், "பயப்படாதேம்மா, ஒண்ணும் இல்ல நான் ஏதோ ஒரு ஞாபகத்துல அழுதேன். இனி உனக்கு ஒண்ணும் இல்ல. எல்லாப்பிரச்னையும் முடிஞ்சுடும் என்னம்மா" என்று தங்கையின் முகத்தைத் தன் புடவைத் தலைப்பால் துடைத்துவிட்டு அவளை தைரியப்படுத்த முயற்சித்தாள். அது எத்தனை செயற்கையாகவும் கேலிக்கூத்தாகவுமிருந்தது என்பதை அங்கிருந்தவர்களால் உணர்ந்துகொள்ள முடிந்தது. "சரி சரி நேரமாச்சு இல்ல, நான் எப்பொ முடிச்சிட்டு போறது" என்று மருத்துவச்சி அவசரப்படுத்தவும் அவர்கள் அவ்விடத்திலிருந்து விலகிக்கொள்ளத் தொடங்கையில், மைமூன் கூப்பிட்டாள் "அக்கா நீ மட்டும் ஏங்கூட இருக்கமாட்டியா" என்ற கெஞ்சலுடன். "இல்லம்மா நான் உன்கூடத்தான் இருக்கப்போறேன்" என்று அவள் கைகளைத் தன் கைகளுக்குள் எடுத்து வைத்துக்கொண்டாள் ஆமினா.
அடுத்த சில மணி நேரத்தில் மருந்து வைத்ததால் ஏற்பட்ட வேதனையில் அவள் துடித்ததும் அவளைக் கத்தவிடாமல் இவர்கள் நால்வருமாக மடக்கிப் பிடித்ததும் விடிய விடிய தொடர்ந்துகொண்டிருந்தது. அந்நேரத்தின் நினைவுகள் கொடியதாக, நரக வேதனையாக, பிறகு எவ்வளவோ நாட்கள் ஆமினாவைத் துன்புறுத்தியிருக்கிறது. ரத்தத்திட்டாக, சிதைந்து வெளியேறிய அச்சிசுவின் உயிரோடு மைமூனின் உயிரும் அடங்கிப்போய்விட மறுநாளில் காந்தியின் படுகொலை வெளிஉலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கையில், மைமூனின் மரணம் அந்த ஊரை பதறி எழச்செய்திருந்தது. ஆமினாவுக்குத் துக்கம் தொண்டையை அடைக்கக் கடுமையான வலி உண்டாயிற்று. தலையணை நனைந்துகிடக்க எழுந்து உட்கார்ந்தாள். தன் நினைவுகளால் நெடுந்தொலைவு பயணித்துவிட்டு மீண்டிருந்தது அசதியாக இருந்தது. விடியத் தொடங்கியாயிற்று என்பதை சேவல் கூவும் ஒலியும், பாங்கு சொல்லும் ஓசையும் உணர்த்திற்று. பக்கத்தில் படுத்திருந்த பிர்தவ்ஸின் முகத்தைப் பார்த்தாள். தன் அம்மாவைப் போன்ற அழகும் தங்கையின் பிடிவாதமும் அவளிடம் ஒன்று சேர்ந்திருப்பதாகத் தோன்றிற்று, அவளைப் போலவே இவளும் தன் கணவனை விலக்கி விட்டுத் திரும்பியிருக்கிறாள் என்பது நினைவுக்கு வந்து கடும் வெறுப்பு அவளுக்குள் மண்ட, கையூன்றி எழுந்தாள் தொழுக நேரமாகிவிட்டதை நினைத்தபடி.
தொடரும்
nantri - Ulagathamizh
No comments:
Post a Comment