Saturday, May 22, 2004

விடுபடல்

சு. தர்ம மகாராஜன் - இலங்கை

தன்னைச் சூழவுள்ள மனிதர் கூட்டத்திலிருந்து விலகி, மனித நடமாற்றமற்ற நிசப்தமான ஒரு பிரதேசத்தின் ஒரு மூலையில் அடங்கி இருக்க வேண்டும்போல், அவளது உள் மனது தனிமையைத் தேடித் தவித்தது. சுற்றிலும் தாக்கும் பார்வைக் கணைகளிலிருந்து தப்புவதற்கு தனிமைக்குள் அடங்கினால்தான் முடியும். வாழ்க்கையின் பல பிரச்சனைகளின் இறுதித் தீர்வு அதிர்ஷ்டவசமாக அவளுக்கு தனிமையில்தான் கிடைத்திருக்கிறது. யாருடைய தலையீடுகளையும் பொருட்படுத்தாது, ஒரு கணத்தில் குற்றவாளியாகவும், இன்னுமொரு கணத்தில் குற்றம் சாட்டுபவளாகவும், சில நேரங்களிலே தானே ஒரு நீதிபதியாகவும் நின்று, தன் மனத் தவிப்புகளுக்கான பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள தனிமை உதவியாய் இருந்திருக்கிறது.

தனது இருபத்தியாறாவது வயதில், முதல் காதல், சாதியாலும், பணத்தாலும் முறித்துக் கொண்டு விலகியபோது, உலகமே வெறுத்துப்போய் துவண்டு வீழ்ந்திருந்தபோது, தனிமைதான் தீர்வு கொடுத்தது. காதலன் எனும் வேஷத்தில், அவன் தன்னை பயன்படுத்தி, ஆசைகள் கொடுத்து, இறுதியாய் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கித் தள்ளிவிட்டபோது, அவள் உண்மையிலும் வாழ்க்கையின் இறுதிக் கிடங்கில் வீழ்ந்ததைப் போல்தான் உணர்ந்தாள். கிடங்கின் ஒரு மூலையில் ஒதுங்கும் தவளையைப்போல், வீட்டின் ஒரு அறையில் அடங்கி, குடும்பத்தின் வசவுகளிலிருந்தும், சமூகத்து பார்வைக் கணைகளிலிருந்தும் ஒதுங்கிக் கொண்டாள். அந்த ஒதுங்கலிலான தனிமை, அவளை உசுப்பிவிட்டது. வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி இடப்போனவளுக்கு, அதிர்ஷ்டவசமாய் தனிமையின் சிந்தனை மீளெழச் செய்தது. அன்றிலிருந்து, துக்கமானாலும் தனிமை, மகிழ்ச்சியானாலும் தனிமை. யாருடைய உதவியுமின்றி தனிமையாய் மன உணர்வுகளை தனக்குள்ளேயே பகிர்ந்து உள்வாங்கிக் கொள்ள பழகிக் கொண்டாள்.

இன்றும் அப்படித்தான், தனிமை தேவைப்படுகிறது. உள்ளத்துள் உருண்டுக் கொண்டிருக்கும் இனம் காண முடியாத, கணக்கும் உருண்டையை உடைக்க மனம் தனிமையைத்தான் தேடுகின்றது. தன்னைச் சுற்றியிருக்கும் கூட்டம் தானாய் கலையும் மட்டும் காத்திருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது.

பார்வைக்கு நேரே தெரியும் யன்னலினூடாக வெளியே நோக்கினாள். அங்குமிங்கும் நடமாடும் சனத்துக்கிடையே, வெள்ளைக் கொடிகளாலான அலங்காரம் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டவுடன் மனதுக்குள் இருக்கும் அந்த உருண்டை, மேலும் கீழும் வேகமாய் உருளத் தொடங்கியது.

நான்கு வருடங்கள் தட்டிக் கழித்தலின்பின், குடும்ப நெருக்கடியில் நசிந்து, மனதின் விருப்பம்கூட எண்ணாது, குமாருக்கு கழுத்தை நீட்டியபோது, பல அலங்காரங்களோடும், மேள முழக்கங்களோடும், பல பெரியோர்கள் ஆசிர்வாதங்களோடும்தான் கழுத்தில் தாலி ஏறியது. கழுத்தில் தாலி கனக்க, உடல் மேல் அவன் தேகம் கணக்க, சாராய நெடியுடனான முதலிரவின் வேதனை தனிமையைத்தான் தேடியது. தேகங்களின் உணர்வுப் பகிர்தலில் அவனது சுயநலம் அவளை தனிமையில் கண்ணீர் வடிக்க வைத்தது. எல்லை மீறிய போதையுடனான அவனது செயற்பாடுகள் ‘‘போகப் போக சரியாயிடும்’’ என்கிற பெரியோரின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து சகித்துக் கொண்டாள்.

வாரத்தில் நான்கு நாட்கள், இரவில் அவனது எல்லை மீறிய குடிபோதையும், அதன் பின்னாலான பலாத்காரமான புணர்தலும், தவிர்த்து ஒதுங்கிய போதான அடியையும், உதையையும் அவள் தனிமையோடு பகிர்ந்து கொண்டாள்.

இரவுகள் என்றாலே பயம், எங்கேயாவது ஓடி ஒதுங்கிக் கொள்ள வேண்டுமென்ற, அவளது தனிமையான தீர்வு, வயிற்றில் உருப்பெற்றிருந்த கருவும், அதனது சகமான வருடலாலும் மெய்மறக்கச் செய்தது.

தனது இரண்டாவது கரு, குடிபோதையில் அவன் உதைத்த உதையால் கலைந்துபோன போது, தளர்ந்த வாழ்க்கையின் பிடிப்பு, தன் இரண்டு வயது பிள்ளையின் மழலை மொழியின் தனிமையில் மீண்டும் பற்றிக் கொண்டது.

போகப் போக தேகத்தின் இச்சை இறந்துபோய், ஒவ்வொரு இரவும் அவனுக்கு, ஒரு பிணமாய் புணர்தலில் ஈடுகொடுத்தாள். குடிபோதையின் இயலாமையும், அதனாலான நரம்பின் வீரியக் குறைவும் அவனை பாதியிலேயே சோர்வடையச் செய்தது. அவனது சோர்வும், இயலாமையும் அவளில் சந்தேகம் கொள்ள வைத்தது. சந்தேகத்தின் உச்சத்தில் ஊர்கூட்டி வார்த்தைகளால் அவள் துகிலுரித்தான்.

அவளது மானம்காக்க கிருஷ்ணர்கள் வரவில்லை. பதிலாக தமக்கிடையே கோடு போட்டு பிள்ளையோடு முடங்கிக் கொண்டாள்.

அவள் கணவனை உதறிய சமூகம், அவளை பரிதாபமாய் விமர்சனம் பண்ணியது. ஆனால், அவனிடமிருந்து விலகவிடாது அவளை கலாசாரத்தால் நசுக்கியது.

தன் பிள்ளையின் எதிர்காலம் நினைத்து, திருமணமாகி ஐந்து வருடங்களின்பின், முதன் முதலாய் கணவனின் எதிர்ப்பையும் மீறி வேலைக்குச் சென்றாள். எப்போதும் போல் தனிமைதான் அவளுக்கு அந்த தீர்வைக் கொடுத்தது. ஆரம்பத்தில் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தவன், பின் ஏனோ பேசாது விட்டு விட்டான்.

அவள் உழைப்பின் சந்தோஷத்தைப் பிள்ளையோடு தனிமையில் அனுபவித்தாள். சந்தோஷமாய் வேலைவிட்டு வீடு திரும்பிய ஒரு பொழுதில்தான், அவன் விபத்தில் இறந்த செய்தி கிடைத்தது. ஏனோ மனம் பதறவில்லை. நிதானமாய் ஹாஸ்பிடல் செல்ல, அவளுக்கு முன்னமேயே அவன் உறவுகள் கூட்டம் கூடியிருந்தது.

வீடு திருமணத்திற்கு பின், அவனது மரணத்தில், சனநெரிசலால் நிறைந்து காணப்படுகிறது. தனிமையையே நாடிப் பழகியவளுக்கு, அதிகளவான சனநடமாட்டம் தொந்தரவைக் கொடுத்தது. ஒரு அறைக்குள்ளேயே அடங்கியவளை, உறவினர் கூட்டம் இழுத்து வந்து, சவத்தினருகே குந்த வைத்து, வேடிக்கைப் பார்த்தது. பிள்ளையை மடியில் வைத்துக்கொண்டு, ஒன்றும் செய்வதறியாது மரக்கட்டையாய் அவளும் வேடிக்கைப் பார்த்தாள்.

இன்று இரண்டாவது நாள். இன்னும் சிறிது நேரத்தில் அவனது இறுதிப் பயணம். அவள் மனம் தவித்தது. ஆவல் கொண்டது. எதற்காகவென்று இனம் காண முடியாது தடுமாறியது. பிள்ளையின் தலை வருடியவாறே உயிரற்ற அவனது முகத்தைப் பார்த்தாள். போதை வெறியில் வாயில் எச்சில் வடித்தபடி, புணரத்துடிக்கும், அந்த விகாரமான முகத்தைவிட, உயிரற்ற உப்பிய முகம் சற்ற ஆறுதலை அளித்தது.

மரண வீட்டில் கூட்டம் சலசலத்தது. அவளை பெண்கள் கூட்டம் தனியறையில் அமர்த்தியது. திருமணத்திற்கு பின் மீண்டும் ஒரு அலங்காரம். அவள் நினைவுகள் பின் நகர்ந்து மீண்டன. அறையிலுள்ள சிறுயன்னலினூடாக பார்வையை செலுத்தினாள். அவனுக்கான இறுதி மரியாதை செலுத்துவதில் குழுமியிருந்த கூட்டம் மும்முரமாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. உள்மனம் வெளிக்காட்ட இயலாத ஒரு உணர்வால் நிறைந்திருந்தாலும், அதன் கனம் முனனிலும் பார்க்கக் குறைவதை உணர்ந்தாள். அக்கூட்டத்தினரிடையே தன் பிள்ளையின் முகம் கண்டு மனம் பதறியது. கண்கள் நீர்த்திரையால் வெளிகாட்சிகளை மங்கலாக்கின.

இப்போது அவளுக்கான நேரம். ஒரு சில சடங்குகளை முடித்து, இரு பெண்கள் கைப்பிடித்து சவத்தினருகே புரட்டிப் போட்ட ஒரு உரலில் அவளை அமர வைத்தார்கள். அவர்களது முகத்தில் அப்பியிருந்த சோகம் கண்டு, அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது. தனக்குள் இல்லாத ஒன்று, அவர்களுள் வெளிப்படுவதில் இருந்த ஹாஸ்யத்தை மனதுக்குள்ளேயே ரசித்தாள். சவத்துக்கு முதுகுகாட்டி அமர்ந்ததில் மனதுக்கு சற்று ஆறுதலாய் இருந்தது.

நேரம் போகப் போக, அவள் மனது இருப்புக் கொள்ளவில்லை. சடங்குகளினாலான சங்கடத்தை தவிர்க்க தலையை கவிழ்த்து நிலம் பார்த்தாள். அவளை சுற்றியிருந்த பெண்களின் கால்கள்தான் கண்ணில் பட்டது. அவை தன் கால்களிலும் பார்க்க நேர்த்தியாக இருப்பதைப் போல் தோன்றியது. திடீரென்று பெண்களிக் கால்களது இடமாற்றம் அவளை உசுப்பியது.

ஒரு சீலையின் மறைவில் இரு பெண்களது உதவியோடு அவள் அணிகலன்கள் கழன்ற வீழ்ந்தன. நெற்றிப் பொட்டு துடைக்கப்பட்டது. இறுதியில் ஒரு வெட்டவெளி அமைதியில், அவளது கழுத்தில் கனத்துக் கொண்டிருந்தது அறுந்து வீழ்ந்தது. அவள் கண்களிலிருந்து இரு சொட்டு கண்ணீர் துளிகள் வழிந்து கன்னத்தில் உருண்டோடின.

ஏதோ ஒரு இருக்குப் பிடியிலிருந்து விடுபட்டதைப் போல், அவள் நெஞ்சுக் குழியிலிருந்து பலமாய் ஒரு பெருமூச்சு வெளிவந்தது.

முற்றும்

சு. தர்ம மகாராஜன்
இலங்கை