Thursday, June 24, 2004

இரண்டாம் ஜாமங்களின் கதை - 3

சல்மா

காலையில் சீக்கிரமாகவே எழுந்துவிட்டாள் ராபியா. மதரஸாவுக்கு ஓதச் செல்ல வேண்டும் என்பதைவிட வாதா மரத்தினடியில் உதிர்ந்து கிடக்கும் பழங்களைப் பொறுக்க வேண்டும் என்கிற ஆசையில் அதிகாலையிலேயே எழுந்து கிளம்பிப் போவாள். இவளைப் போலத்தான் மற்ற பிள்ளைகளும். யார் முதலில் போவது, யார் நிறைய பழம் பொறுக்குவது என்கிற போட்டி அவர்களுக்குள் இருந்துகொண்டிருக்கும்.

வழக்கம்போல தலைக்கு ஒரு துண்டையும் குர்ஆனையும் எடுத்துக்கொண்டு கிளம்பியவளின் ஓட்டத்தை சொஹ்ராவின் குரல் தடுத்து நிறுத்த, வாசல் படியருகிலிருந்தவாறே "என்னம்மா?" என்றாள்.

"குர்ஆனைத் தொடுறதுக்கு முன்னால ஏலுச் செய்தியா?" என்று கத்தினாள் சொஹ்ரா,

"செய்தாச்சும்மா" என்று சொல்லிவிட்டுத் தெருவில் இறங்கி ஓடினாள் அவள். பள்ளிவாசலில் பஜருத் தொழுகைக்குப் பின் யாரும் இருக்கமாட்டார்கள். மோதினார் பாவா மட்டும்தான் ஏதாவது வேலைகள் செய்துகொண்டிருப்பார். அவரை ராபியாவுக்கு ரொம்பவும் பிடிக்கும். காலையில் இவள் போகும்பொழுது அவர் ஒரு பெரிய இரும்புத்தட்டில் சலித்த நைசான மணலை அள்ளித் தண்ணீர் ஊற்றிக் கரண்டியில் கலக்கிக்கொண்டிருப்பார். ராபியா அவர் பக்கத்தில் போய்க் குத்துக்காலிட்டு உட்கார்ந்துகொள்வாள்.

"மோதினார் பாவா இது எதுக்கு?" என்று கேட்பாள்.

"சொல்றேன் புள்ளை இரு" என்பார்.

இவளிடம் ஒரு குவளையைக் கொடுத்து "இந்தா போய் அவுசுல தண்ணி மெத்திக்கிட்டு வா" என்பார். இவள் ஓடிப்போய்த் தண்ணீர் கொண்டுவருவாள்.

"இப்பச் சொல்லுங்க இது எதுக்கு" என்று மறுபடி கேட்பாள்.

அவர் தனது தாடியை லேசாகச் சொறிந்துவிட்டுக்கொண்டு "அதுவந்து நீங்கள்ளாம் சுட்டிபானை வச்சு விளையாடுவீங்க இல்லெ, அதுமாதிரித்தான் நான் விளையாடுறேன். இப்பப் பாரு" என்று சொல்லிவிட்டு விளக்குமாறால் மண்தரையைச் சுத்தமாகக் கூட்டிவிட்டு, அந்த இடத்தில் கரைத்த மணலை ஒவ்வொரு கரண்டியாக இடம்விட்டு வரிசையாக இட்லியைப் போல ஊற்றுவார். அவர் பொய் சொல்கிறார் என்பது இவளுக்குத் தெரியும், அதனால் அவர் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுவாள் "பொய் சொல்லாதிங்க பாவா. தினமும் இப்பிடி மணல் இட்லி ஊத்துறிங்களே, எதுக்காக?" என்று கேட்பாள். அவள் முகத்தில் தெரியும் ஆர்வம் அவருக்குப் பரிதாபமாக இருந்தாலும் சிரித்துக்கொள்வார். அவர் சிரிக்கும்பொழுது அவரது குட்டையான தாடியும் மீசையும் கறுத்த உதடுகளுக்குள்ளிருந்து வெளித் தெரியும் பற்களும் ரொம்பவே வினோதமாக இருக்கும் இவளுக்கு.

தினமும் அவர் இப்படிச் செய்வதும் பள்ளிவாசலுக்குத் தொழுகை செய்ய வரும் ஆண்கள் அதிலொன்றைக் கையில் எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குப் போவதும் இவளுக்கும் இவளது தோழிகளுக்கும் பெரும் புதிராகவே இருக்கும். ஒரு நாள் மதரஸாவில் இவளோடு ஓதும் அஹமது கேட்டான், "ஏய் அதுக்குப் பேரு என்னன்னு தெரியுமாடி உங்களுக்கு?" என்று எகத்தாளமாகக் கேட்டான். அவனுடைய கெக்கரிப்பும் ஆர்ப்பாட்டமும் தனக்கு மிகப்பெரிய ரகசியம் ஒன்று தெரியும் என்றும் அதைக் கேட்பவர்கள் அவனிடம் கெஞ்சிக் கேட்க வேண்டும் என்றும் சொல்வதுபோலவும் இருந்தது.

மதினாவும் ராபியாவும் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள் இவனிடமிருந்து நாம் எதையும் தெரிந்துகொள்ளவே வேண்டாம் என்று. இவர்கள் அவனை அலட்சியத்துடன் விலக்குவது அவனுக்குப் பெருத்த அவமானமாக இருக்கும். "ஏண்டி உங்களுக்குத் தெரிய வேணாமா? சொல்லுங்க" என்று கண்களை உருட்டிப் பயம் காட்டினான்.

வேணாம் போடா! அஜரத்துங்ககிட்ட சொல்லிடுவோம் தெரியுமில்ல" என்று மதினா மிரட்டினாள். அதன் பிறகு ஒரு ஓரத்தில் போய் உட்கார்ந்துகொண்ட அஹமதுவுக்குத் தனக்குத் தெரிந்த விஷயத்தை இவர்களிடம் சொல்லியே ஆக வேண்டுமென நாவு துடித்தது. எவ்வளவோ தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு, பிறகு அவர்களைப் பார்த்துத் திரும்பி உட்கார்ந்துகொண்டவன், அவர்களிடம் சொன்னான்.

"அது பேரு வந்து டேலாக்கட்டி. சில மக்குப் பொண்ணுகளுக்கு இதுகூடத் தெரியலை பாவம்" என்று அவர்களிடம் சொல்லி அங்கலாய்த்துக்கொண்டான். ராபியாவும் மதினாவும் அன்று அதன் பெயரை மட்டும் காதில் வாங்கிக்கொண்டார்கள்.

ராபியாவின் தந்தை கரீம் தன் மனைவியிடம் பேசும்பொழுதெல்லாம் யாரையேனும் திட்ட நேரும்பொழுது, "அவனுடைய உறவு எனக்கு டேலாக்கட்டியாக்கும். நெனைக்கறப்போ தூக்கியெறிஞ்சிடுவேன்" என்று அடிக்கடி சொல்வார்.

மோதினார் பாவாவின் கைகள் அளவோடும் அழகாகவும் மணலை மொண்டு ஊற்றுவதைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு இன்று வாதா மரத்தினடியில் பழங்களேயில்லை என்பது கவலையாக இருந்தது.

"ஏன் பாவா இன்னிக்கு மரத்தடியில் பழங்களே இல்லை?" என்றாள் ஏமாற்றத்தோடு.

"ஏன் இல்லை. அங்கே பாரு பெரிய அஜரத்து பொறுக்கிவச்சிருக்காங்க. போய் வாங்கிக்க" என்று சொல்லிக் கைநீட்டினார். அவர் காட்டிய இடத்தில் பெரிய அஜரத் தலைப்பாகையைக் கழட்டி மடியில் வைத்துக்கொண்டு கையில் தஸ்பீஹ் மணியுடன் உட்கார்ந்திருந்தார். ராபியா சந்தோஷமாக அவரை நோக்கி ஓடினாள். தன்னை நோக்கி ஓடிவந்தவளைத் தன் கருணை மிகுந்த கண்களால் பார்த்தவர். "இங்கெ வாம்மா என்று அருகில் கூப்பிட்டார். "அஸ்ஸலாமலைக்கும் அஜரத்துங்க" என்றபடி அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டாள் அவள்.

"அலைக்கும் ஸலாம். எங்கே வந்தீங்க பழம் வாங்கத்தானே" என்றார் குறும்புச் சிரிப்புடன்.

"இல்லை சும்மாதான்" என்று சொல்லிக் கூச்சத்துடன் தலைகுனிந்துகொண்டாள் இவள்.

அவர் மெலிந்த உடலும் சுருங்கிய தோலுமாக ரொம்பவும் ஒட்டிப்போயிருந்தார் முதுகில் கூன் விழுந்திருந்தது. கண்கள் குழிக்குள் இருப்பதுபோல உள்ளே ஒடுங்கியிருந்தன. மிக நீளமான மூக்கும் நீண்ட தாடியும் அவருக்கு இருந்தன. அந்த தாடிக்குள் விரலை நுழைத்துக் கோதி விட்டுக்கொண்டிருந்தார். பிள்ளைகள் மீது அவருக்குப் பிரியம் அதிகம். பல நாட்கள் தானே பழங்களைப் பொறுக்கிவைத்துக்கொண்டு, எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து, அவர்களது சந்தோஷத்தைப் பார்த்து ரசிப்பார். வெற்றிலையை அசைபோட்டபடியிருக்கும் வாய்க்குள்ளாக ஸல்வல்லாஹ் என்றபடி தஸ்பீஹ் மணியை உருட்டியவாறு முணுமுணுத்துக்கொண்டிருப்பார். அவர் என்றால் பிள்ளைகளுக்கும்கூடப் பிரியம்தான். ஆனால் சின்ன அஜரத்தை யாருக்குமே பிடிக்காது. முக்கியமாக ராபியாவுக்கும் மதினாவுக்கும். ஓதும்பொழுது ஒரு வார்த்தை தப்பாக உச்சரித்தால் போதும், தொடையிலேயே கிள்ளுவார். அவர் தொடையைத் தொடுவது கிள்ளுவதற்காக மட்டுமில்லை என்று இவளுக்குத் தோன்றும். அவர் தன் கையில் வைத்திருக்கும் குச்சியால் பையன்களை மட்டும்தான் அடிப்பார். பொண்ணுகளைத் தொடையில்தான் கிள்ளுவார். அவரைப் பார்த்தாலே இவளுக்குக் கூச்சமாகவும் வெறுப்பாகவும் இருக்கும்.

"ராபியா இங்க வந்து எம்பக்கத்துல உக்காரு. உனக்கு நல்லா சொல்லித்தரணும்னு உங்கம்மா சொல்லியனுப்பிருச்சிருக்காங்க" என்று பக்கத்தில் வேறு உட்கார வைத்துக்கொள்வார். அவ்வப்போது இவளது கன்னத்தில் கிள்ளுவதும் தடவுவதும் உண்டு. அப்பொழுதெல்லாம் ராபியாவுக்கு அழுகை வரும். மதினாவிடம் "எனக்கு இந்த ஆள்கிட்ட ஓதப் புடிக்கவேயில்லை" என்பாள். அதற்கு "ஒனக்கு மட்டுமா, எனக்குந்தான் புடிக்கலை" என்பாள் மதினாவும்

பையன்களுக்கும் அவரைப் பிடிக்காது, நன்றாக அடிப்பார் என்பதால். அஹமது சொல்வான், "இந்த ஆள் கல்யாணமும் பண்ணலை புள்ளையும் பிறக்கலை, அப்புறம் எப்புடிப் பிள்ளைகள் மேல பாசம் இருக்கும்? காட்டுப்பய மாதிரி அடிக்கிறான்" என்று.

ராபியா அவனைக் கோபிப்பாள் "அஜரத்துங்கள அப்பிடித் திட்டாதே. நரகத்துக்குப் போயிருவே. அஜரத்துங்க அடிக்கிற எடத்திலயெல்லாம் நரகத்து நெருப்பு படாது தெரியுமில்ல" என்பாள்.

"நரகத்துக்குப் போனா சரி, சொர்க்கத்துக்கு நான் போனேன்னா, அப்ப என்ன ஆவும் இப்ப வாங்கின அடியெல்லாம்?" என்று சொல்வான்.

"போடா லூசு, உங்கிட்ட பேசுறதுக்கு" என்று அலுத்துக்கொள்வாள் ராபியா.

பள்ளிவாசலிலேயே ராபியாவுக்குப் பிடித்தமான இடம் அவுஸ்தான். தரையோடிருக்கும் பெரிய தண்ணீர்த் தொட்டி. தொழ வருபவர்கள் அந்தத் தண்ணீரில்தான் ஏலுச்செய்வார்கள். அந்தத் தொட்டியில் ஏராளமான மீன்களை வாங்கி விட்டிருப்பார்கள். தண்ணீரில் வளர்ந்து கிடக்கும் பாசிக்குள் நுழைந்துகொண்டு, பதுங்கி விளையாடும் மீன்களை மேலே வரச்செய்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பாள். காலையில் வீட்டிலிருந்து வரும்போது மறக்காமல் கொண்டுவரும் காசில் பள்ளிவாசலுக்கு வெளியே புட்டு விற்கும் பையனிடம் புட்டு வாங்கிக்கொள்வாள். அதை அவுஸின் ஒரு மூலையில் அமர்ந்து தூளாக்கி அதனுள் போடுவாள். மொத்த மீன்களும் அதைச் சாப்பிட மேலேறி வரும். ஒரே பரபரப்பும் சண்டையும் அவைகளுக்கிடையே நடக்கும். அதைப் பார்த்து ரசிப்பது அவளுக்கு அன்றாட வேலை. இதை யாரோ அவளது அம்மாவிடம் சொல்லிக்கொடுத்து அம்மா நன்றாகத் திட்டினாள்.

"உன்னைப் பள்ளிவாசலுக்கு அனுப்பறது ஓதத்தானே தவிர வெளையாட இல்லை. வயசுக்கு வர்றதுக்கு முந்தி குரானை முடிச்சிட்டா அஜரத்துங்களுக்கு வேட்டி பணம் வச்சுக் குடுக்கலாம்னு இருக்கேன். நீ இப்படி விளையாடிட்டா வர்றே" என சத்தம் போடுவாள். அதே மாதிரி பள்ளிக்குப் போகும்பொழுதும், போய்விட்டு வந்த பிறகும் "முகம் கழுவி பவுடர் போட்டுக்கொள். வயசுக்கு வர்ற வயசாகப்போகுது" என்று அறிவுறுத்துவாள்.

அன்று காலை மதரஸா நடக்கும்பொழுது பிள்ளைகள் எல்லோருக்கும் குப்பியின் மூணாம் நாள் கத்தப் பாத்திஹாவுக்காக ஒவ்வொரு ரூபாய் கொடுத்தார்கள். பிள்ளைகளுக்கு ஒரே சந்தோஷம். எதிர்பாராமல் கிடைத்த ரூபாயை எப்படியெல்லாம் செலவழிப்பது என்று மனதிற்குள் கனவு கண்டுகொண்டிருந்தார்கள். பள்ளிவாசல் எதிரிலிருக்கும் பெட்டிக் கடைக்கு முன்னால் ஒரே கூட்டம்.

மதினா ராபியாவின் காதில் கிசுகிசுத்தாள் "காசை செலவழிக்காதே" என்று. ஏன் எனப் புரியாமல் கேட்டவளிடம் "மவுத்தான வீட்டுக்காசு. அத வச்சுக்க வேணாம். அவுஸ் தண்ணிக்குள்ள போட்டுருவோம்" என்றாள் பிறகு இருவரும் காசை யாருக்கும் தெரியாமல் அவுஸ் தண்ணிக்குள் வீசினார்கள். ராபியாவுக்கு மனசே சரியில்லை. காலையில் புட்டு வாங்கியாவது மீனுக்குப் போட்டிருக்கலாமே என்று தோன்றியது. மதினா ஒன்று சொன்னால் நிச்சயம் அதற்குக் காரணம் இருக்கும் என்பதனால்தான் அவள் சொல்படி செய்தாள். மதினாவுக்கும் இவளுக்கும் இடையில் எந்த ஒளிவு மறைவும் ரகசியங்களும் இதுவரைக்கும் இருந்ததில்லை. ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. அது ராபியாவின் சித்தி பிர்தவ்ஸ், தன் கணவனிடமிருந்து தலாக் வாங்கி வீட்டிற்குத் திரும்பிவிட்டது மட்டும்தான். அதைப்பற்றி யாரிடமும் எதுவும் பேசக்கூடாது என்று அவளை அம்மா மிரட்டிவைத்திருந்தாள்.

றைமா பெரியம்மா சத்தம் போடுவாள் "இதையெல்லாம் எத்தனை நாள் மறைத்து வைக்க முடியும். இன்னைக்கு இல்லே நாளைக்கு வெளியில் வரத்தான் போகிறது. இதெல்லாம் ஒண்ணும் தெரியாத பொண்ணிடம் போய் என்ன பேச்சு பேசுற நீ" என்று.

அவர்கள் இருவரின் வாக்குவாதங்களும் எதையட்டி என்கிற விபரம் புரியாமல் ராபியா தடுமாறுவாள், ஏகப்பட்ட குழப்பங்களுடன். தலாக் என்றால் என்னவென்று யாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது என்றும் தெரியவில்லை. ஒருவேளை அஹமதுவுக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ?

nantri - Ulagathamizh