Sunday, February 22, 2004

சிலுவை

ஜெயகாந்தன்

டிரங்க் ரோட்டில் பேரிரைச்சலோடு அந்த பஸ் போய்க் கொண்டிருந்தது. தனக்கு நேர் எதிரில் மூன்று வரிசைகளுக்கு அப்பால் நான்காவது வரிசையில் சன்னலோரமாக உட்கார்ந்திருக்கும் அந்த வாலிபனின் பக்கம் தன் பார்வை திரும்பக் கூடாது என்ற சித்த உறுதியுடன், ஓடுகின்ற பஸ்ஸின் சன்னல் வழியாக, சாலையோரக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த இளம் கன்னிகா ஸ்தீரியின் பார்வையில் அந்தக் காட்சி பட்டது.

தலையில் புல்லுக் கட்டு இடுப்பிலிருக்கும் கைக்குழந்தை அந்த விவசாயப் பெண்ணின் திறந்த மார்பில் உறங்கிக் கொண்டிருந்தது. தாயிடம் பால் குடித்துக்கொண்டே தூங்கிப்போயிருக்கும். சாய்ந்து வீசும் மாலைவெயில் கண்ணில் படாதவாறு ஒரு கையால் குழந்தையை அணைத்துக்கொண்டு மற்றொரு கையை நெற்றிக்கு நேரே பிடித்து, சாலையில் ஓடிவரும் பஸ்ஸைப் பார்த்துக் கொண்டிருந்த அவளை பஸ் கடந்த பின்தான் இந்தக் கன்னிகா ஸ்திரீ பார்க்க முடிந்தது. அந்த இரண்டு கன்னிகா ஸ்திரீகளுமே பஸ் போகிற பக்கம் அல்லாமல் பின் புறம் நோக்கி உட்கார்ந்திருந்தனர்.

அந்த விவசாயப் பெண், குழந்தையோடு நின்றிருந்த அந்தக் காட்சி, இந்த இளம் கன்னிகா ஸ்திரீக்கு என்ன சுகத்தைத் தந்ததோ - முகத்தில் ஒரு புதிய ஒளி வீச, சன்னலுக்கு வெளியே கொஞ்சம் தலையை நீட்டி எட்டிப் பார்த்தாள். நீலநிறத் தலையணி வஸ்திரம் கன்னத்தில் படபடத்தது. தன்னை இவள் பார்ப்பதை அறிந்த விவசாயப் பெண் புன்னகை பூத்தாள். இவளும் பதிலுக்குத் தலை அசைத்தாள்...

''கருவிலாக் கருத்தரித்துக்
கன்னித் தாயாகி
உருவிலானை மனித உருவினில்
உலகுக் களித்த...''


அவள் உதடுகள் முணுமுணுத்தன. மனசில், அந்த விவசாயப் பெண்ணின் தோற்றம், தங்கள் மடத்து வாயிலில் கையில் தெய்வ குமரனை அரவணைத்து நிற்கும் புனிதமேரிச் சிலைபோல் பதிந்தது. பார்வையில் அந்த விவசாயப் பெண்ணின் உருவம் மறைய மறைய, பார்வை கொஞ்சம் கொஞ்சமாய் பஸ்ஸின் போக்கில் திரும்பி மீண்டும் நான்காவது வரிசையில் உட்கார்ந்திருக்கும் அந்த வாலிபனின் முகத்தில் வந்து நின்றது.

அவன் அவளையே - அந்தக் கன்னிகா ஸ்திரீயின் வட்ட வடிவமாய், நீலமும் கறுப்பும் கலந்த அங்கிக்கு வெளியே தெரியும் முகத்தை மட்டுமே - பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளுக்கு உடம்பு சிலிர்த்தது. கண்கள் படபடத்தன. சடக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

''ஏன்? அவன் அழகாகத்தானே இருக்கிறான் ! அழகு இருந்தால்? ... அதுதான் பாபம். பாபத்தின் விளைவு - பாபமூட்டைதான் ! மனித உரு உலகில் பிறப்பதே... பிறவியே... பாவத்தின் பலன்தானே? விலக்கப்பட்ட கனியை விரும்பித் தின்னாமலிருந்தால்.... ஆதாம் ஏவாளின் சந்ததி ஏது? ஆதாமும் ஏவாளும் பிதாவால் புனிதமாகப் படைக்கப்பட்டனர்.

''ஆனால் அவர்கள்? விலக்கப்பட்ட கனியை உண்டதன் பலனாய்ப் பாபிகளானார்கள். அவர்களது பாபத்தின் விளைவாய், ''இந்த மனிதர்கள் அனைவரும்... நானும், என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்களே ... யாரோ பெற்றெடுத்து எங்கோ எறிந்துவிட்டுப்போன மூன்றுநாள் வயதான அநாதைச் சிசுவான என்னை எடுத்து மடத்தில் சேர்த்து வளர்த்துத் தன்னைப்போல் ஒரு கிறிஸ்துவ கன்னிகா ஸ்திரீயாக்கிய என் தாய் இன்விலடாவும், சற்று நேரத்துக்கு முன்பார்த்த அந்தக் கிராமத்து ஏழைத் தாயும், அவள் கையிலிருந்த சிசுவும், அதோ என்னையே பார்த்துக் கொண்டிருக்கின்றானே அந்த இளைஞன்...அவனும், பிறந்திருக்கிறார்கள். பாவிகள்... மனிதர்கள் பாவிகள் ! விலக்கப்பட்ட விஷக்கனியில் புழுத்த புழுக்கள் ! விரியன் பாம்புகள் !....

பஸ் கடகடத்து ஓடிக்கொண்டே இருந்தது.

அவள் கண்கள் மறுபடியும் பஸ்ஸிற்குள் திரும்பும்போது அந்த வாலிபன் மீது விழுந்து, உடனே விலகி மறுபடியும் திரும்பியபோது அவள் எதிரே அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் மடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயதுக் குழந்தையொன்று தன் அழகிய சிரிப்பால் அவள் நெஞ்சைக் குழைத்தது.

அவள் குழந்தையைப் பார்த்துச் சிரித்தாள். குழந்தை அவளை நோக்கித் தாவியது. தாயின் மடியைவிட்டு இறங்கி அவள் பக்கத்திலிருந்த கிழவி இன்விலடாவின் முழந்தாளைப் பிடித்துக் கொண்டு கிழவியின் முகத்தைப் பார்த்தது. கிழவி இன்விலடா தன் கழுத்திலிருந்து தொங்கும் மணிமாலையில் கோர்த்திருந்த சிறிய சிலுவை உருவத்தில் லயித்திருந்தாள்.

அவள் எப்பொழுதும் அப்படிப்பட்ட பழக்கத்தையே கைகொண்டவள் என்று பஸ்ஸில் ஏறியது முதல் அவளைக் கவனித்துக் கொண்டிருந்தவர்களுக்குத் தெரியும். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாய் அவள் அந்தச் சிலுவை உருவத்தில் குனிந்த பார்வையை மாற்றாமல் உட்கார்ந்திருந்தாள். அந்த வெள்ளிச் சிலுவையில் ஏசு உருவம் இருந்தது.

கிழவி குழந்தையின் மோவாயை நிமிர்த்திப் புன்முறுவலித்துக் கொஞ்சினாள். குழந்தை அவள் கையிலிருந்த சிலுவையைப் பிடித்திழுத்தது. சிலுவையைக் குழந்தையிடம் கொடுத்துவிட்டு, ''ஸ்தோத்திரம் சொல், ஆண்டவனே ! ...ஸ்தோத்திரம் சொல்லு...'' என்று இரண்டு கைகளையும் −ணைத்துக் கும்பிடக் கற்றுக் கொடுத்தாள்.

குழந்தை கும்பிட்டவாறு இளம் கன்னிகா ஸ்திரீயின் பக்கம் திரும்பி, கன்னங்கள் குழியச் சிரித்துக் கொண்டு தாவியது. அவள் குழந்தையைத் தூக்கி மார்புறத் தழுவிக் கொண்டாள். நெஞ்சில் என்னவோ சுரந்து பெருகி மூச்சை அடைப்பது போலிருந்தது. கண்கள் பனித்து அவளது இமைகளில் ஈரம் பாய்ந்தது.

"காதரின்! மணி என்ன?" - சிலுமையைப் பார்த்துக்கொண்டே கேட்டாள் இன்விலாடா, அந்தக் குழந்தையின் ஸ்பாஞ்சு போன்ற கன்னத்தில் தன் கன்னத்தைப் புதைத்துக்கொண்டு அந்த இன்பத்தில் தன்னையே மறந்திருந்த அவள் காதுகளில் கிழவியின் குரல் விழவில்லை.

"காதரின்! காதரின்!.....தூங்குறியா?......... குழந்தையைப் போட்டுடப்போறே?...மணி என்னா?"

"அம்மா!...மணி, அஞ்சு" என்று கிழவியிடம் சொல்லிவிட்டு குழந்தையை மடியைவிட்டுக் கீழே இறக்கி, "ஸ்தோத்திரம் சொல்லு, ஆண்டவனே.." என்று கொஞ்சினாள் காதரீன். குழந்தை கும்பிட்டது. அவளும் கும்பிட்டாள். அவள் பார்வை மீண்டும் எப்படியோ அந்த நாலாவது வரிசையில் சன்னலோரத்தில் உட்கார்ந்திருக்கும் அந்த வாலிபன் மீது விழுந்தது......

இந்தத் தடவை, அவள் பார்வையை மாற்றாமல் அமைதியான விழிகள் அவனை நோக்கி நிலைத்திருக்க அவனில் லயித்துவிட்டாளா என்ன?

அவனுக்கு இருபது வயசிருக்கும். நல்ல சிவப்பு நிறமும், உடல் வலிவும், கம்பீரமும் சாந்தமும் கூடிய தோற்றம். சன்னலோரத்தில் பஸ் போகும் திக்குநோக்கி அமர்ந்திருந்ததால் அவனது வெள்ளை ஷர்ட்டின் காலரோடு, அந்த நீல நிற சில்க் டையும் படபடத்துக் கழுத்தில் சுற்றியது; கிராப் சிகை கலைந்து நெற்றியில் சுருண்ட கேசம் புரண்டது. அவள் தன்னையே பார்ப்பது கண்டு அவன் உதடுகள் லோசாக இடைவெளி காட்டின. அப்பொழுது அவனது தூய வெண் பற்களின் வசீகரம் அவளையும் பதிலுக்குப் புன்முறுவல் காட்டப் பணித்தது.

காதரீன் சிரித்தபொழுது தேவமகள் போலிருந்தாள். 'உயிர்களிடமெல்லாம் கருணை காட்டவேண்டும். மனிதர்களையெல்லாம் நேசிக்க வேண்டும்' என்ற பண்பினால் ஏற்பட்ட தெய்வீகக் களை அவள் முகத்தில் அளி வீசிக்கொண்டிருந்தது.

'அவன் - அந்த மனிதன் - என்னைப்பற்றி என்ன நினைப்பான்' என்று நினைத்தாள் காதரீன். 'ஓ!.....அது என்ன பார்வை.....' காதரீனின் முகம் விசந்து உதடுகள் துடித்தன. அவளுக்கு அழுகை வந்தது. உதட்டைக் கடித்துக் கொண்டாள். அவனும் கீழுதட்டை லேசாகக் கடித்துக்கொண்டான். காதரீனின் இமைகளின் ஓரத்தில் உருண்ட வந்த இரண்டு முத்துக்கள் யாருக்கும் தெரியாமல் அவளது தலையணியில் படிந்தன. அவன் மட்டும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் என்னைப்பற்றி என்ன நினைப்பான்? இவள் ஏன் இப்படி ஆனாள் என்று நினைப்பானோ? உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு தனத கடமையை நிறைவேற்ற முடியாது தவிக்கும் பேதை என்று நினைப்பானோ? பாபத்தைப் பற்றிச் சிந்திக்காமலிருக்கும் வல்லமையில்லாத கோழை என்று நினைப்பானோ?' அவள் சட்டென்று முகத்தைத் திருப்பிக் கிழவி இன்விலடாவைப் பார்த்தாள். அவள் இந்த பிரபஞ்சத்தின் நினைவே அற்றவள் போல் கையிலிருந்த சிலுவையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் லேசான புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. சில சமயங்களில் பிரார்த்திப்பது போல் உதடுகள் அசைந்து முனகிக்கொண்டிருந்தன.

காதரீனின் மனம் தன்னையும் தன் தாய் இன்விலடாவையும் ஒப்பிட்டுப் பார்த்து

'ஓ!......அவர்கள் எங்கே! நான் எங்கே!------'

இந்தப் பதினெட்டு வயசிற்குள் தான் எத்தனை தடவை பாவ மன்னிப்புக்காகப் புனிதத் தந்தையிடம் மண்டியிட்டது உண்டு என்று எண்ணிப் பார்த்தாள் காதரீன்.

"அம்மா?........"

"என்ன காதரீன்....." - சிலுவையில் முகம் குனிந்து கொண்டிருந்த இன்விலடா சுருக்கம் விழுந்த முகத்தை நிமிர்த்திக் காதரீனைப் பார்த்தாள்.

"அம்மா! நீங்கள் 'கன்பெஷன்' செய்துகொண்டதுண்டோ?........." "உம்; உண்டு மகளே! நாமெல்லாம் பாவிகள்தானே? ஆனால் நமது காவங்களை மனம் திறந்து கர்த்தரிடம் கூறிவிட்டால் நாம் ரக்ஷ¢க்கப்படுகிறோம். நமது பாவங்களையெல்லாம் கர்த்தர் சுமக்கிறார் அதனால்தானே நாம் இரவில் படுக்கச் செல்லுமுன் நமது அன்றாடப் பாவங்களைக் கடவுளிடம் ஒப்புவிக்கிறோம்? அதன் மூலம் நமது ஆத்மா பரிசுத்தப்படுகிறது. அதற்குமேலும் நம் −தயத்தை நமது பாவங்கள் உறுத்திக் கொண்டிருப்பதால்தான் நாம் புனிதத் தந்தையிடம், அவர் செவிகொடுக்கும்போது நமது பாவங்களைக் கூறி மன்னிப்புப் பெறுகிறோம். நமது தந்தை நமக்காகக் கர்த்தரை ஜபிக்கிறார். அப்படிப்பட்ட பாவங்களை நானும் செய்தது உண்டு.........." என்று கிழவி கண்களைத் துடைத்துக் கொண்டாள்

காதரீனுக்கு ஆச்சரியமாக இருந்தது. 'இன்விலடாவும் ஒரு பிராயத்தில் தன்னைப்போல் இருந்ததிருக்கிறார்களோ?' என்று வியந்தாள்.

"காதரீன்!...அப்போ என்க்கு உன் வயசு இருக்கும்; நான் ஒரு கனவு கண்டோன் - எனக்குக் கல்யானம் நடப்பதுபோல் ஒரு கனவு. என்ன பாவகரமான கனவு! விழித்துக்கொண்டு இரவெல்லாம் அழுதேன். கனவு காணும்போது அந்தக் கல்யாணத்தில் நான் குதூகலமாக இருப்பதுபோல் இருந்தது. அதை நினைத்தே அழுதேன். ஒரு கன்னிகா ஸ்திரீ அப்படிக் கனவு காணலாமா? மறுநாள் அந்தப் பாவத்திற்காகப் புனிதத் தந்தையிடம் மன்னிப்புப் பெற்றேன். அன்று பூராவும் தண்ணீர் குடிக்காமல் விரதம் இருந்து கடவுளை ஜபித்துக் கொண்டிருந்தேன்."

கிழவி குரலைத் தாழ்த்திக் காதரீனிடத்தில் மெதுவாகப் பேசினாள் "அப்புறம் ஒரு பெண்ணை வகுப்பில் அடித்து விட்டேன்.......... கன்னத்தில் ஸ்கேலால் அடித்து, சிவப்புத் தழும்பு ஏற்பட்டுவிட்டது. அன்று பூராவும் அதை நினைத்து நினைத்து வருந்தினேன்? அதற்காகவும் 'கன்பெஷன்' செய்து கொண்டேன். −ந்தமாதிரி ஐந்தாறு தடவை."

'இவ்வளவுதானா? இவர்கள் செய்த பாவமெல்லாம் இவ்வளவு தானா? நம்பக்கூட முடியவில்லையே!' என்று தவித்தாள் கதரீன்.

'ஒருவேளை எதையுத் மறக்கறார்களோ?' என்ற சந்தேகம் கூட வந்தது. காதரீனின் சந்தேகத்துக்குப் பதில் சொல்வதுபோல் இன்விலடா கூறினாள்

"பாவத்தை மறைப்பதுதான் சைத்தானின் வேலை. பாவத்தை மனம் திறந்து கடவுளிடம் ஒப்புவிப்போம். கடவுளிடமிருந்து எதையும் நாம் மறைக்க முடியாது."

"ஆமாம்; கடவுளிடமிருந்து நாம் எதையுமே மறைக்க முடியாது......" என்று காதரினும் தலையாட்டினாள். பிறகு தன் கைப்பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துப் பிரித்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தாள் காதரின். அவள் பார்வை ஒருமுறை சன்னல் பக்கம், நாலாவது வரிசையில்.........

அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

'ஓ! அது என்ன பார்வை!' அவள் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தாள்.

'ஒரு ஸ்திரியை −ச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளுடன் விபசாரஞ் செய்தவனாகிறான். உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு. உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்

காதரினால் அதற்கு மேல் படிக்க முடியவில்லை - கண்களை மீடிக் கொண்டாள். புத்தகம் திறந்திருந்தது; கண்கள் மூடி இருந்தன.....

'இதென்ன, பாப எண்ணங்கள்?' என்று மனம் புலம்பியது. இவன் ஏன் இன்னும் இறங்காமல் உட்கார்ந்திருக்கின்றான்? சாத்தானின் மறு உருவா? என்னைச் சோதிக்கிறானா இவனைப்பற்றி எனக்கென்ன கவலை?...ஓ!.....பிதாவே!'

அவள் திடீரென்று உடலில் சிலுவைக் குறியிட்டுக் கொண்டு மனசிற்குள்ளாக ஜபிக்க ஆரம்பித்தாள்: 'பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே!.....எங்களைச் சோதனைக்குட்பப் பண்ணாமல் தீமையினின்றும் எங்களை இரட்சித்துக்கொள்ளும்.....ஆமென்.....'

ஆனாலும் என்ன? அவள் விழிகளைத் திறந்தபோது அவனையே அவளது பார்வை சந்தித்தது.

'மனிதன் பாபத்திலிருந்து தப்பவேமுடியாதா? ஆதாமுக்காகக் கடவுள் படைத்த சுவர்க்க நந்தவனமாகிய ஏதேன் தோட்டத்தில் சர்ப்பமும் விலக்கப்பட்ட விருட்சமும் எப்படி உண்டாயின? கடவுள் மனிதனையும் படைத்து, பாபத்தையும் ஏன் படைத்தார்?......பாபத்தில் இன்பமிருப்பது வெறும் பிரமையா? −ன்பமே பாபமா?- உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் நரகத்துக்குத்தான் போவல்களா? நான் மட்டும் ஏன் பாபங்களுக்காகப் பயப்படுகிறேன்? இதோ, இந்த அழகான வாலிபன் தன் உயிரையே கண்களில் தேக்கி என்னைப் பார்க்கிறானே!.....மனிதர்கள் எல்லாம், பெண்கள் எல்லாம் உருவத்தில் என்னைப்போல் தானே இருக்கிறார்கள்?................'

காதரின் தனக்கு நேரே இரண்டாவது வரிசையில் உட்கார்ந்திருந்த அந்த இளந்தம்பதிகளைப் பார்த்தாள். அவள் கர்ப்பிணி, மயக்கத்தினாலோ, ஆசையினாலோ கண்களை மூடிக்கொண்டு கணவனின் தோள்மீது சாய்ந்திருந்தாள். அந்தக் காட்சியைப் பார்த்தபோது காதரினின் உள்மனத்தில் சைத்தானின் குரல் போல் ஓர் எண்ணம் எழுந்தது.

'அவளுக்கும் எனக்கும் பேதம் இந்த உடையில்தானே? இந்தக் கோலத்தைப் பியத்தெறிந்துவிட்டு ஓடிப்போய் அந்த இளைஞானின் தோளில் சாய்ந்து கொண்டால்?..........

'ஐயேர் பிதாவே! நான் அடுக்கடுக்காகப் பாபங்களைச் சிந்திக்கின்றேனே! என்னை ரட்சியும்.....'

பஸ் நின்றத. பஸ் ஸ்டாண்டில் ஒரே கூட்டம். அந்த இரைச்சலில் பஸ்ஸிலிருந்து இறங்கிக்கொண்டிருக்கும் கும்பலின் பேச்சுக் குரலும் சங்கமித்தது. எல்லோரும் இறங்கும் வரை கிழவி −ன்விலடாவும் காதரினும் காத்திருந்தார்கள். கடைசியாக இருவரும் கீழிறங்கினர்.

ஜட்கா வண்டிக்காரன் ஒருவன் ஓடிவந்தான்.

"மடத்துக்குத்தானே அம்மா? வாங்க வாங்க" என்று வண்டிக்கருகே அழைத்துக்கொண்டு போனான்.

அப்பொழுது, மாலை மயங்கும் அந்தப் பொன்னொளியில் நீல நிற சூட்டும், வெள்ளை ஷர்ட்டும், நீல டையுமாகக் கையில் ஒரு சூட்கேசுடன் அவன் - அந்த இளைஞன், அழகன் - சாத்தானின் தூதுவன் போன்று நின்றிருந்தான்.

காதரினுக்குக் காதோரம் குறுகுறுத்தது. புன்முறுவல் காட்டினாள் அவனும் சிரித்தான். அவர்களை நெருங்கி வந்து முதலில் இன்விலடாவை நோக்கி, "ஸ்தோத்திரம் மதர்" என்று கை கூப்பினான்.

"ஸ்தோத்திரம் ஆண்டவனே!"என்று கிழவி கைகூப்பினாள்.

"ஸ்தோத்திரம்......" என்று காதரினை அவன் பார்க்கும் போது பதிலுக்கு வணங்கிய பாதரினின் கைகள் நடுங்கின

"ஸ்தோத்திரம்.." என்று கூறும்போது குரம் கம்மி அடைத்தது. கண்கள் நீரைப் பெருக்கின

இவர்கள் இருவரும் வண்டியில் ஏறி அமைர்ந்ததும் அவன் தலைக்கு மேல் கைகளை உயர்த்தி ஆட்டிய வண்ணம் விடையளித்தான். அவளும் மனம் திறந்து சிரித்தவாறு கைகளை ஆட்டினாள்.....வண்டி விரைந்தது. அவன் உருவம் மறைந்தது. அவள் கைகள் துவண்டு விழுந்தன் நெஞ்சு விம்மியது.

"காதரின்! யாரது? எனக்குத் தெரியவில்லையே" என்றாள் −ன்விலடா.

"ஹ்ஹோ....." என்று கைகளை நெரித்தவாறு ஒர பொய்ச் சிரிப்புடன் காதரின் சொன்னாள்

"அம்மா! முதலில் எனக்கும் கூடத் தெரியவில்லை. என் கிளாஸில் படிக்கிறாளே −ஸபெல் - அவளோட அண்ணன்..."

"ஓ....."

"பிதாவே! என்னை ரட்சியும். எவ்வளவு பாபங்கள்! எவ்வளவு பாபங்கள்......" என்று மனசில் முனகிக்கொண்டாலும் காதரினின் கண்கள் அவன் புன்னகை பூத்த முகத்தோடு கைகளை ஆட்டி விடை பெற்றுக்கொண்ட அந்தக் காட்சியையே கண்டு களித்துக் கொண்டிருந்தன.

'அவர் யாரோ? மறுபடியும் அவரைக் காணும் அந்தப் பாக்கியம் ... பக்கியமா?... இல்லாவிட்டால் அந்தப் பாபம் - மறுபடியும் எனக்குக் கிட்டுமா?' என்று மனம் ஏங்கியது...

பாபம் செய்யக்கூடத் தனக்கு நியாயமில்லையே என்று நினைத்த பொழுது கண்கள் கலங்கின் தொண்டையை அடைத்துக்கொண்டு அழுகை பீறிட்டது. அவள் அழ முடியுமா? அழக்கூட அவளுக்கேது நியாயம்?...

தலையணி காற்றில் பறந்து முகத்தில் விழுந்தது வசதியாய்ப் போயிற்று. அந்த நீலத் துணிக்குள் அவள் உடலும் மனமும் முகமும் பதைபதைத்து அழ, வண்டி ஓடிக் கொண்டிருந்தது.

கிழவி இன்விலடா கையிலிருக்கும் சிறிய சிலுவையில் ஆழ்ந்து மனசிற்குள் கர்த்தரை ஜபித்துக்கொண்டிருந்தாள்.


--------------------------------------------------------------------------------

அன்று இரவெல்லாம் காதரின் உறக்கமில்லாமல் படுக்கையில் கிடந்து தனது பாபங்களுக்காகக் கடவுளிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள்.

சில நேரங்களில் அந்த இளைஞனின் முகத்தை, புன்னகையை எண்ணிப் பெருமூச்செறிந்தாள்.

பிறகு அயர்ந்து உறங்கிப்போன பின் ஒரு கனவு கண்டாள்.

கனவில்...

...ஒரு பெரிய சிலுவை, கிழவி இன்விலடா அதைத் தூக்கித் தோள் மீது சுமந்துகொண்டு நடக்கிறாள். வெகுதூரம் நடந்தபின் இன்விலடாவின் உருவம் மாதாகோயில் மாதிரி மிகப் பெரிய ஆகிருதியாகிறது. தோள்மீது சுமந்து வந்த பிரம்மாண்டமான சிலுவை அவள் உள்ளங்கையில் இருக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டே மெல்லிய புன்னகையோடு கர்த்தரை ஜபித்துக் கொண்டிருக்கிறாள் இன்விலடா...

மாதாகோயில் மணி முழங்குகிறது. வானத்திலிருந்து புனித ஒளி பாய்ந்து வந்து இன்விலடாவின் மேனியைத் தழுவுகிறது...

மாதாகோயில் மணி முழங்கிக்கொண்டிருக்கிறது...

இன்னொரு பெரிய சிலுவை. அதைத் சுமப்பதற்காகக் காதரின் வருகிறாள். குனிந்து புரட்டுகிறாள். சிலுவையை அசைக்கக்கூட அவளால் முடியவில்லை.... திணறுகிறாள்.... அவள் முதுகில் கசையாலடிப்பது போல் வேதனை... சிலுவையைப் புரட்ட முடியவில்லை....

அப்பொழுது தூரத்தில் ஒரு குரல் கேட்கிறது :

''காதரின் !... என் அன்பே ! ... காதரின்!...''

திரும்பிப் பார்க்கிறாள். அந்த இளைஞன் ஓடி வருகிறான். காதரினும் சிலுவையை விட்டுவிட்டு அவனை நோக்கித் தாவி ஓடுகிறாள். அவனது விரித்த கரங்களின் நடுவே வீழ்ந்து அவன் மார்பில் முகம் புதைத்துக்கொண்டு அழுகிறாள். அவன் அவள் முகத்தை நிமிர்த்தி அவளது உதடுகளில் முத்தமிடுகிறான்...

ஆ ! அந்த முத்தம் ! ...

'இது பாபமா?... நான் பாபியாகவே இருக்க விரும்புகிறேன்...?' என்று அவனை இறுகத் தழுவிக் கொள்ளும்போது...

மாதாகோயில் மணி முழங்குகிறது....

விழிப்பு, கண்ணீர், குற்றம் புரிந்த உணர்ச்சி !...

தலை குனிந்துகொண்டு எல்லோருடனும் சேர்ந்து முழந்தாளிட்டுக் கர்த்தரை ஜபிக்கும்போது...

ஐயோ ! பாவம்... மனமாரக் கண்ணீர் வடிக்க முடிந்தது.

நெஞ்சில் கனக்கும் பாவச் சுமை கண்களில் வழியாகக் கண்ணீராய்க் கரைந்து வந்துவிடுமா?...


--------------------------------------------------------------------------------

அன்று புனிதத் தந்தையிடம் பாப மன்னிப்புக்காகச் சென்றாள் காதரின்.

தூய அங்கி தரித்து, கண்களில் கருணையொளி தவழ, குழந்தை போல் புன்னகை காட்டி அழைக்கும் அவரது முகத்தைப் பார்த்து அருகில் நெருங்குவதற்குக் கூசிச் சென்றாள் காதரின்.

''Kather!"

''மகளே !...'' - அவர் அவளுக்குச் செவி சாய்த்தார்.

''நான் மகாபாபி !... பெரிய பாபம் செய்துவிட்டேன் !... நான் பாபி !....''

''பாபிகளைத்தான் கடவுள் ரட்சிப்பார் மகளே !... இயேசு நீதிமான்களை அல்ல - பாபிகளையே மனம் திரும்புவதற்காக அழைக்க வந்தேன்'' என்றார் - என்று நீ படித்ததில்லையா? ...உன் பாபங்களை உன் வாயாலேயே கூறி வருந்தினால் இரட்சிப்பு ஆயத்தமாயிருக்கிறது மகளே !...''

காதரின் அவர் காதுகளில் குனிந்து உடல் பதைக்க, கண்கள் கலங்கிக் கலங்கிக் கண்ணீர் பெருகக் கூறினாள். வார்த்தைகள் குழைந்தன் பாதிரியார் திகைத்தார்.

அவள், ''Kather ...நான் செய்த மகாபாபம், மன்னிக்க முடியத பாபம் !... ஓ... கன்னிகாஸ்திரீயாக நான் மாறிய பாபம்...ஓஓ !...'' - அவள் விக்கி விக்கி அழுதாள். தன்னையே சிலுவையில் அறைந்ததுபோல் துடித்தாள்.

ஜெயகாந்தன்
நன்றி - ஆறாம்திணை

Wednesday, February 18, 2004

ஒரு கட்டுக்கதை

அம்பை

பன்றி என்னுடன் சம்பாஷிக்க வந்தபோது மாலை ஆறரை மணி இருக்கும். ஒரு பதினைந்து இருபது குட்டிகளாவது இருக்கும் தொளதொளத்துத் தொங்கிய அதன் வயிற்றில். சாக்கடையில் புரண்டுவிட்டு வந்திருந்தது. மேல்உடம்பு கன்னங்கரேல் என்று சாக்கடைத் தண்ணீரில் பளபளத்தது. கீழே, வயிறு சதையின் நிறத்தில் கட்டிகட்டியாய்த் தொங்கியது.

''இதோ பார். எனக்குப் பேச வேண்டும்'' என்றது.

''என்னை எப்படித் தேர்ந்தெடுத்தாய்?'' என்றேன்.

''உன் புத்திசாலித்தனமான, தீட்சண்யமான கண்களைக் கண்டு உன்னைத் தேர்ந்தெடுத்தேன் என்றெல்லாம் சொல்வேன் என்று எதிர்பார்க்காதே. பார்க்கப்போனால் அப்படி ஒரு ஒளியும் எனக்குத் தெரியவில்லை. பார், நான் ஒரு பன்றி. எனக்குப் பேச வாய்ப்புக் கொடு. பொழுது போகாமல் திண்டாடும் பன்றி நான்'' என்றது.

அப்படி புகழ்ச்சியில் மயங்கும் நபர் இல்லை நான். இருந்தாலும் இது கொஞ்சம் அத்து மீறிய ஆணவமாய்ப் பட்டது.

''இதோ பார், எனக்கு நேரம் இல்லை'' என்று சூடாகச் சொல்வதற்குள் குட்டிகள் தொங்கும் பகுதியைப் பக்கவாட்டில் தழையவிட்டு அமர்ந்துவிட்டது பன்றி.

''சரி பேசு'' என்றேன்.

''பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்'' என்றது, பெருத்த தலையைக் கீழே சாய்த்தபடி.

''என் காதில் விழவில்லை''

''மெளனமாய்ப் பேசுகிறேன்'' என்றது.

ஆணவப் பன்றிகளுக்கு அடுத்தபடி என்னால் பொறுக்க முடியாதது வேதாந்தப் பன்றிகள். அசுவாரஸ்யமாய்த் தலையைத் திருப்பிக் கொண்டடேன் எதிர்ப்பக்கம்.

''சும்மா தமாஷ். ஜனங்கள் மிருகங்களின் வாயிலிருந்து ஞானம் சொட்டும் சொற்கள் வரும் என்று நினைக்கிறார்கள். நீதிக் கதைகளில் ஓட விடுகிறார்கள். 'சீ, சீ இந்தப் பழம் புளிக்கும்' போன்ற நீதியை உதிர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குப்பையில் அளைந்து, சோர்ந்து, சலித்துப்போன பன்றி நான். ஞான சம்பந்தமான விஷயங்களில் எனக்கு ஈடுபாடில்லை'' என்றது.

''எதைப் பற்றித்தான் பேச விரும்புகிறாய்?''

''உங்கள் கட்டடத்தின் வாயிற்கதவு பற்றி.''

மாடியும் கீழுமாய் ஆறு வீடுகள் கொண்ட கட்டடம் அது. அடுத்தாற்போல், முள்வேலியால் இரு பக்கமும் அடைக்கப்பட்ட வெற்று மனை. வெற்று மனை என்று சொன்னது பேச்சுக்காத்தான்.குடிசை ஜனங்களின் கட்டணம் இல்லாத கழிப்பிடம் அது. பன்றிகளின் வாசஸ்தலம். மத்தியான வேளைகளில் ஜன்னல் அருகே ட்ரியோ ட்ரியோ என்று கூச்சம் கேட்கும். பன்றிகள் ஓடும். சில சமயம் தெரு ஆரம்பத்திலுள்ள சந்தில் நுழையும் போது க்ஹே க்ஹே என்று ஆரம்பத்திலுள்ள ச்நதில் நுழையும்போது க்ஹே க்ஹே என்று மூச்சு சீறும் கதறல் கேட்கும். நின்றால், ''போயிட்டேயிருங்க. பன்னி அடிக்கிறாங்க'' என்று தள்ளி விடுவார்கள்.

''எதுக்கு, எதுக்குப்பா அடிக்கிறாங்க?''

''எதுக்கு அடிப்பாங்க? சாப்பிடத்தான். நவந்துகிட்டே இருங்க.''

கட்டடத்தின் வாயிற்கதவில் ஒருநாள் நுழையும் சதுர அளவு இடம் இருந்தது. பலமுறை, துரத்தப்பட்ட பன்றிகள் அதில் நுழைந்து ஓடும். அதை மூடிவிடும் யோசனை இருந்தது.

''அந்த நுழைவாயில் எனக்குப் பிடிக்கிறது. அதில் நான் ஆனந்தமாய் நுழைய முடிகிறது. நாலு பக்கமும் முள்வேலி இருக்க, நுழைவதற்கான வாகான இடம். பரபரவென்ற நான் ஓடும்போது சுவர்க்கக் கதவு மாதிரி எனக்குத் திறந்து வழிவிடுகிறது. அதைப்பற்றிப் பேச எனக்குப் பிடிக்கிறது. ஒரு பன்றிக்குத் தேவை, நுழையக் கூடிய கதவுதான் என்று எனக்குத் தோன்றுகிறது.''

வோட்ஹவுஸின் புத்தகங்களின் செல்லப் பன்றி நினைவுக்கு வந்தது. பிரபுவின் கொழுத்த ரோஜா வண்ணப் பன்றி. போட்டிகளில் பரிசு பெறும் பன்றி.

அதைப்பற்றிச் சொன்னேன்.

அமெரிக்கப் பன்றிப் பண்ணைகளில் கொழுக்கவைக்கப்பட்டு, வலியில்லாமல் இறக்கும் பன்றிகள்பற்றிச் சொன்னேன். வலியில்லாமல் இறப்பது ஒரு பெரிய சலுகைதான் என்ற. நிறம்பற்றி அவ்வளவு சுவாரஸ்யம் காட்டவில்லை. சாகப்போகிற பன்றி கறுப்பானால் என்ன, ரோஜா வண்ணமானால் என்ன என்றது. மற்றவர்கள் சாப்பிடுவதற்காக இறப்பதுப்பற்றி ஒரு ஆட்சேபனையும் காட்டவில்லை. அதுபற்றிக் கேட்டபோது ஆட்சேபணை காட்டக்கூடிய அதிகாரம் உள்ள நிலையில் தான் இல்லை என்று பேச மறுத்துவிட்டது. சிறிது நேரம் மெளனத்தில் கழிந்தது.

''சாவைப்பற்றி என்ன நினைக்கிறாய்?'' என்றேன்.

''அது ஒரு பெரிய கழி'' என்றது. ''நீளமாய், உருண்டையாய் இருப்பது. இரும்பாலோ, மரத்தாலோ ஆனது. இரும்பானால் ஆசனத்திலிருந்து வாய்வரை செருகப்படும் சாவு. மரமானால் அடிச்சாவு.

''எப்படி அலட்டிக்கொள்ளாமல் சொல்கிறாய்?''

''அலட்டிக்கொண்டு ஒன்றம் ஆகப்போவதில்லை. செருகுச் சாவு, அடிச்சாவு, இயந்திரச்சாவு என்று பிரித்துத் தேர்ந்தெடுக்கும் சலுகை வேண்டும் என்று போராடலாம். பன்றிகளிடம் ஒற்றுமை இல்லை.''

''இயற்கையான சாவு பற்றிச் சொல்லமாட்டேன் என்கிறாயே?''

''சாவதில் என்ன இயற்கை இருக்கிறது? வலுக்கட்டாயம்தான்.''

''இல்லையில்லை. மரத்திலிருந்து இலை உதிர்வது மாதிரி மெல்ல இயற்கையோடு கலப்பது...''

''எனக்கு ஒரு உபகாரம் செய்''

''என்ன?''

''தயவுசெய்து இதில் கவிதையைக் கொண்டுவராதே'' என் வாழ்க்கை ஏற்கனவே கெட்டுக்கிடக்கிறது. கவிதையை வேறு என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.''

''நான் சொன்னதில் என்ன கவிதைத்தனம் இருக்கிறது?''

''நீ சாவிலிருந்து ரத்தத்தைப் பிரிக்கிறாய். ரத்தம் சிந்தாத, அழகான இலையுதிர்ச் சாவு பற்றிச் சொல்கிறாய். ஆனால் ரத்தம் சேர்ந்தது சாவு. வெளியில் கொட்டினாலும் உள்ளே உறைந்து போனாலும் ரத்தமில்லாமல் சாவு இல்லை. நீ சாவை அழகாக்கப் பார்க்கிறாய்.''

குற்றச்சாட்டு.

சாவைப்பற்றி முதலில் எண்ணியது பன்னிரண்டு வயதில். கால்கள் அந்தரத்தில் மிதக்க, ஒரு பந்தை எம்பிப் பிடித்துக் கொண்டிருந்தபோது, தலையை மேலே வீசிப் பந்தைப் பார்த்த கணத்தில், வலியுடன் கூடிய மின்னலாய் அந்த எண்ணம் தாக்கியது. நாம் சாகிறோம். உள்ளே ஓடிவந்து முட்டியில் முகம் கவித்துப் பயந்தேன். கை, கால், முகம், உடம்பு எல்லாம் அந்நியமாகப்பட்டது. மாட்டிவிட்ட ஒன்றாய்த் தோன்றியது. இதனுள்ளே நான், நான், நான் என்று புகுந்து பார்த்தேன். பீதி கவ்வியது. செவிக் குழியிலா, கண்ணினுள்ளா, பல்லிடுக்கிலா, அக்குள் பள்ளத்திலா எதில் நான் இருக்கிறேன் என்று தேடினேன். பயத்தில் வியர்த்துப்போனேன்.

அதன்பின் சில சலுகைகளை நானே எனக்குத் தந்துகொண்டேன். சில வகைகளில் நான் சாக விரும்பவில்லை. விபத்தில் சாக விரும்பவில்லை. உடல் சிதைய, திடீர்த் தாக்குதலில் சாவு, விபத்துச் சாவு. எனக்கு வேண்டாம். வலியுடன் துடித்துச் சாவு - அதுவும் வேண்டாம். இரண்டாம் உலகப்போர்பற்றிப் படித்தபின் யூதர்களைப் போல் விஷப் புகைக்கூண்டுகளில் சாக நான் விரும்பவில்லை. அணு ஆயுதத்தால் ஆன ஹிரோஷிமாச் சாவும் வேண்டாம். வியட்நாமிற்குப்பின் நபாம் போன்ற இரசாயனக் குண்டுகளால் ஆன சாவையும் ஒதுக்கினேன். ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்கக் கண்டங்களைக் கண்டுகொண்டபின், பஞ்சசாவு, வெள்ளச் சாவு, பூகம்பச் சாவு, சிறையில் சாவு, தூக்குக் கயிற்றுச் சாவு, துப்பாக்கிச் சாவு என்று ஒவ்வொன்றாய் விலக்கிக்கொண்டே வந்தேன். எஞ்சியது அழகுச் சாவு. வெளியுடன் கலக்கும் கவிதைச் சாவு. வலியில்லை. ரணமில்ல. குருதியில்லை.

பன்றியின் கோபம் எனக்குப் புரிந்தது.

சில நாட்களுக்குப் பின் ஒரு விடிகாலைப் பொழுது க்ஹரே... என்று அலறல் கேட்டது. நாலு பேர் கழியுடன் பன்றியைத் துரத்தினார்கள். அது விரைந்து வாயிற்கதவை நோக்கி ஓடியது. அதன் உடம்பு இன்னமும் பெருத்துவிட்டதை அது மறந்துவிட்டது. அந்தச் சதுர இடைவெளியில் சிக்கிக்கொண்டது. நான் ஓடிவரும் முன் ரத்தம் பீறிட்டு, பொம்மைகள் மாதிரிப் பன்றிக் குட்டிகள் வெளியில் விழுந்தன.அருகில் போனதும் பன்றி என்னை அடையாளம் கண்டுகொண்டது. சிவப்பேறிய கண்களைத் திறந்து சொல்லியது.

''தயவுசெய்து சாவைப்பற்றிய ஏதாவது அரிய உண்மையைச் சொல்லிவிட்டுப் போவேன் என்று எதிர்பார்க்காதே. ஒன்றுதான் என்னால் சொல்ல முடியும். நாம் சாகிறோம்.''

நீண்ட கழிகள் நெருங்கி வந்தன.

நன்றி : வீட்டின் மூலையில் ஒரு சமையலறை

Monday, February 02, 2004

இரை

செம்பருத்தி

இன்றைய விடியலில் வானம் சற்றுத் தெளிவாய் இருப்பதுபோலத் தோன்றியது. பூமியைக் குளிரவைத்து திருப்திப் பட்டதோ என்னவோ கொட்டும் மழை நின்று மெல்லிய தூறல்கள் மட்டும் ஆங்காங்கே நனைந்துபோன பூமி குளிர்காயவென சூரியன் முகிற்போர்வையை விலக்கத் தொடங்கியிருந்தது. நான் மெதுவாக எனது வீட்டிலிருந்து எட்டிப் பார்க்கின்றேன்.

வானமும் பூமியும் புதிதாகப் பிறந்ததுபோல் இருந்தது. நான் வாழும் இந்த வனாந்தரம் அழுக்குகள் நீங்கக் குளித்திருந்தது. 'ஓ என்னை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தவில்லையே. நான்தான் நாதன்' பாம்புகள் இனத்தைச் சேர்ந்தவன். கடந்த நான்கு நாட்களாகப் பெய்த அடைமழை என்னை வீட்டோடு கட்டிப்போட்டிருந்தது. இப்போது பசி என் வயிற்றைக் கிள்ளுகின்றது. மழை மறுபடி தொடங்குமோ, என்னவோ நான் அதற்கிடையில் என் வயிற்றை நிரப்பியாக வேண்டும். என் புற்றிலிருந்து வெளியே வருகின்றேன். அப்பப்பா, இந்தத் தரை எப்படி ஜில்லென்றிருக்கிறது! குளிர்ந்த காற்று என் முகத்தில் உரச, என்னைப் புது உற்சாகம் தொற்றிக்கொள்ளுகின்றது. விரைவாக ஊர்ந்து என் இரையைத் தேடிப்போய்க் கொண்டிருக்கிறேன்.

இளங்காலை சூரியன் மெதுவாக என் இமைகளைத் தட்டியபோதுதான் விடிந்தது எனக்குப் புரிந்தது. அடடே இன்று வானம் சற்று வெளிறி இருக்கிறதே. நான் மெதுவாக எழுந்து சோம்பல் முறித்துக்கொள்கின்றேன். ஒருதடவை என் உடம்பை உலுப்பி உதறும்போது உரோமங்கள் சில்லிட்டு மீண்டும் அடங்குகின்றது. ஒட்டிப்போன எனது வயிற்றைப் பார்க்கிறேன். சே. சரியாகச் சாப்பிட்டு நான்கு நாட்களாகிறது. எப்படியும் வயிற்றை நிரப்பியாகவேண்டும். நான் வழக்கமாகச் சாப்பிடும் சாப்பாட்டுக் கடைப்பக்கம் போகிறேன். ம் கூம் யாரையும் அங்கு காணவில்லை. மெதுவாகக் குரலை உயர்த்தி 'வள் வள்.' என சத்தமிடுகிறேன். இனி யாராவது சாப்பிட வந்து அவர்கள் போடும் எச்சில் இலை விழும்வரை என் வயிற்றுக்குப் பொறுமையில்லை. ஊர்மனைக்குச் செல்வோம் எனத் தீர்மானித்தபடி செல்கிறேன். என்னைப்பற்றிய விபரத்திலிருந்து என்னைப் புரிந்துகொள்வீர்கள்தானே.

ம்.. ஆம்.. ஆ எனது கடைசிக் குழந்தையின் வீரிட்டு அழுத குரல்கேட்டு விழித்து எழுகிறேன். என்னருகில் வாடிய முகத்துடன் என் மனைவி. அவள் மடியில் எனது கடைக்குட்டி. அவனது அழுகையை நிறுத்த முயன்று கொண்டிருந்தாள் அவள். பாவம் அவளுடைய சமாதானம் ஒன்றும் எடுபடவில்லை. பசியால் அழும் குழந்தைக்கு என்ன சமாதானம் சொன்னால் கேட்கும்? அவள் இயலாமையுடன் என்னைப்பார்க்க கசிந்த என் கண்களை வேறு ஓர் பக்கம் திருப்பிக்கொள்கிறேன். எனது ஆறு வயது மகனும், நான்கு வயது மகளும் குளிருக்கு அடக்கமாக, பழைய சேலையைப் போர்த்தி அதே பாயில் சுருண்டிருந்தார்கள். தூங்கும் அவர்களது முகத்திலும் அப்பட்டமாகப் பசிக்களை. சொந்த மண்ணைவிட்டு நீங்கிய கணத்திலிருந்து பசிக்கு நாங்கள் பழக்கப்பட்டுவிட்டோம். ஆனால், இந்தப் பிஞ்சுகள். சோர்வுடன் எழுந்து நிற்கிறேன். எனது உடம்பிலும் தளர்ச்சி, முற்றத்திலிருந்த பானையிலிருந்து நீரைமொண்டு எனது முகத்தை அலம்பிக் கொள்கிறேன். உள்ளே வந்து மேற்சட்டை போட்டுக்கொண்டு எனது விறகு கட்டும் சைக்கிளை எடுக்கிறேன். 'கொஞ்சம் இடைவெளிவிட்டிருக்கு இதற்கிடையில் போய் ஏதேனும் விறகு கட்டி வித்திட்டு வாறன் என்ன' என்று கூறி மனைவியிடம் விடைபெறுகிறேன். அவள் என் கண்களை ஆழமாகப் பார்த்தவாறே 'கவனம் நீங்களும் இரண்டு நாளாய் வடிவாய் சாப்பிடேல' என்றாள். அவள் குரல் கம்மியது, விழியில் நீர் திரையிட்டது. 'அட நாங்கள் அனுபவிக்காததே, நீ கவலைப்படாதே' அவளைச் சமாதானப்படுத்திவிட்டு சைக்கிளில் ஏறுகிறேன்.

நானும் ஊர்ந்து ஊர்ந்து இரைக்காக அலைந்து களைத்துவிட்டேன். ம். ஒரு சிறு புழுக்கூட என் கண்களில் அகப்படவில்லை. பசியால் என் கண்கள் பஞ்சடைகின்றது. இனி ஏதாவது இரை என்னைத்தேடி வரும்வரை இந்த மரத்தில் இருந்தபடியே ஒரு குட்டித்தூக்கம் போடுவோம் என்று நினைத்தபடியே பாதையோரமாக உள்ள இந்த மரத்தில் படுத்திருக்கிறேன். தூக்கமும்வரவில்லை. என் பாம்புச் செவியை நீட்டியபடியே ஒரு இரையின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்.

ஊர்மனையாவும் குளிரிலிருந்து இன்னும் விடுபடவில்லை. இங்கொன்றும், அங்கொன்றுமாக இப்போதுதான் மனிதத் தலைகள் தெரிகின்றது. எந்த வீட்டிலிருந்தாவது புகைவராதா என்று ஏக்கத்துடன் அலைகிறேன். கடவுளே என் வயிறு கொதித்துக்கொண்டிருக்கிறது. இருப்பினும், என் முயற்சியைக் கைவிடாது தொடர்ந்தும் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கிறேன், இடையிடையே குலைத்தவாறு.

என்னால் சைக்கிள் மிதிக்க முடியவில்லை, என்றுமில்லாதவாறு ஒரு பலவீனம் என்னை ஆட்கொண்டிருக்கிறது. இருப்பினும் பசியால் வாடும் என் குழந்தைகளின் முகமே என் சிந்தையில் இருந்தபடியால் எனது சோர்வைப் பொருட்படுத்தாது விரைகிறேன். பின்னாலுள்ள கத்தி, கோடரி, கயிறு என்பன இப்போது எனக்குப் பலத்த சுமையாக இருக்கிறது. கடவுளே! எப்படித்தான் விறகு கட்டப்போகிறேனோலு} ஒருவாறு காட்டை அடைந்துவிட்டேன். சைக்கிளைவிட்டு இறங்கி காட்டிற்குள் செல்லும் ஒற்றையடிப்பாதையில் விரைந்து கொண்டிருக்கிறேன். பாதையோரமாக சற்றுத்தள்ளி இருந்த ஒரு காய்ந்த மரம் என் கண்களில் படுகிறது. அதனருகே சென்று வெட்டத் தொடங்குகிறேன். காய்ந்த மரம்தான் இருப்பினும் தண்ணீர் ஊறி இருப்பதால் வெட்டக் கஸ்டப்படுகிறேன். இப்போதைக்கு இது போதும் வெட்டிய விறகுக் கட்டைகளை சைக்கிளில் ஏற்றிக் கட்டுகிறேன். சுமையுடன் சைக்கிளை உருட்டுவது மிகக் கஸ்டமாக இருக்கிறது. என் உடலிலிருந்து இந்தக் குளிரிலும் வியர்வை ஆறாகப்பெருக்கெடுக்கிறது. ஆழமான மூச்சுகள் எடுத்தவாறே வீதிக்கு வருகிறேன். மனதில் ஒரு திருப்தி மெதுவாக வீதியில் சைக்கிளை மிதிக்கிறேன்.

உர்.. ஊ ல். அட கடவுளே! வானத்தில் ஒரு பெரிய இயந்திரக் கழுகு சுற்றத் தொடங்கியிருந்தது. எனக்கு ஒருபுறம் கோபமும், ஒருபுறம் வேதனையாகவும் இருந்தது. மழைவிட்ட சிறிது நேரத்தில்கூட வந்துவிட்டானே பாவி என்று மனதிற்குள் சபித்தவாறே சைக்கிளை பாதையோரமாக இருந்த மரத்தில் சாத்திவிட்டு மறைவிடம் தேடி விரைகிறேன்.

இரைக்காக நான் காத்திருந்தபோது, விண்ணில் ஒரு சத்தம். அட மனிதர்களைக் கொல்லும் இயந்திரக் கழுகு வந்துவிட்டதுபோல் இருக்கிறது. ஒரு விறகு வெட்டி பயத்துடனே தனது சைக்கிளை நான் இருந்த மரத்தில் சாத்திவிட்டு மறைவிடம் நோக்கி விரைய, நான் அலுப்புடன் கண்களை நாலாபுறமும் சுழற்றியபோது அது எனது கண்களில் படுகிறது. அட, எனக்குச் சற்று அதிஸ்டம் இருக்கிறது போலிருக்கிறதோ! விறுவிறுவென மரத்திலிருந்து இறங்கி அங்கு விரைகிறேன்; ஆம் அந்த விறகுவெட்டியின் சைக்கிளில் இருந்த விறகின் பட்டையில் சில தவளைகள் ஒட்டிக்கொண்டிருந்தன. அவை பொய்க்கோலம் பூண்டிருந்தாலும், எனது இரையை நான் அறியமாட்டேனா என்ன? ஆவலுடன் விறகுக்கட்டில் புகுந்து ஆவலுடன் அவற்றை வேட்டையாடத் தொடங்குகிறேன்.

எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. உடல் தளர்ந்து கண்கள் இருட்டத் தொடங்கியிருந்தது. வானத்தில் இப்போது திட்டுத்திட்டாக நீலம். பறவைகள் ஆரவாரித்தபடியே பறந்து கொண்டிருந்தது. பூக்கள் எல்லாம் குளித்து முடிந்து காற்றில் தலை துவட்டிக்கொண்டிருந்தது. ஆனால் நான் இதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லை. வயிற்றுக்கு விருந்து இல்லாதபோது புலனுக்கு விருந்து இருந்தென்ன? விட்டென்ன? தெருவில் மூலையில் கிடக்கும் குப்பை மேடுகளை ஆராய்ந்தபடியே ஓடிக்கொண்டிருக்கிறேன்.

அப்பாடா எனக்கு இப்போதுதான் மூச்சு வந்தது. மிகத்தூரத்தில் எங்கோ குண்டுகளை உமிழ்ந்துவிட்டு அந்த விண் அரக்கன் போய்விட்டான். நான் எனது மறைவிடத்தைவிட்டு வெளியே வருகிறேன். மீண்டும் எனது குழந்தைகளின் முகம் என் நினைவில் வரவே, புதுவேகத்துடன் சைக்கிளை எடுத்து மிதிக்கத் தொடங்குகின்றேன். சற்று நேரத்திற்கெல்லாம் விறகுச் சிராய் போலும் என் முதுகில் குத்தியது. சீ. என்ன இது என்று முதுகை நெளித்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் சைக்கிளை மிதிக்கிறேன். சிறிது தூரம் பயணித்த பின்னர் மீண்டும் அதே சிராய் குத்தியது. எனக்கு எரிச்சலாக வந்தது. நான் சைக்கிளைச் சாத்திவிட்டு, மறைவிடத்தில் ஒதுங்கியபோது கட்டுத் தளர்ந்துவிட்டது போலும் திரும்பவும் நிறுத்தி இறுக்கிக் கட்டலாம் என்று யோசித்தேன்.

இன்னும் கொஞ்சத்தூரம்தானே அதற் கிடையில் என்ன நடந்துவிடப்போகிறது என்று தொடர்ந்தும் போய்க்கொண்டு இருக்கிறேன். சற்றைக்கெல்லாம் அதே சிராய் மீண்டும் சற்று வேகத்துடன் குத்தியது. சரி இனியும் தாங்காது இறங்கி யோசித்தபோது, கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு பெண் என்னைக் கைகாட்டி அழைப்பது தெரிந்தது. ஒருவாறு சமாளித்தபடியே சைக்கிளை அவளருகே கொண்டு செல்கிறேன். என்ன விலை என்று விறகைப் பார்த்துக் கேட்கிறாள். எழுபத்தைந்து ரூபாய் என்றேன். ஐம்பது ரூபாய்தான் தருவேன் சரியா எனக் கேட்டாள். நான் இப்போது அவளுடன் பேரம் பேசும் நிலையில் இல்லை. அத்துடன், இந்த மழைநேரம் அதிக தூரம் போகவும் முடியாது; சரி என்று சொல்லிவிட்டு விறகைப் பறித்துவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டேன்.

அப்பாடா. இப்போதுதான் என் வயிறு குளிர்ந்தது. நான் தவளை வேட்டை நடத்தி முடிக்கும் கணத்தில் அந்த விறகுவெட்டி மீண்டும் சைக்களை எடுத்து ஓடத் தொடங்கினான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிறிது நேரம் விறகுக்கட்டின்மேலும் கீழுமாக ஓடித்திரிந்தேன். எனக்கு உடனடியாக கீழே இறங்கவேண்டும் போல் இருந்தது. வயிறு நிரம்பியிருந்ததால் மேலிருந்து கீழே குதிக்கவும் விரும்பவில்லை. அந்த விறகுவெட்டி சைக்கிளை நிறுத்துவான் எனக் காத்திருந்தேன். ம் கூம் அவன் நிறுத்தவில்லை. என் பொறுமை எல்லை கடந்தது. மெதுவாக என் நாக்கால் அவனைத் தீண்டினேன். ஆனால், அவனோ என்னை சட்டை செய்யாது தொடர்ந்தும் ஓடிக்கொண்டு இருந்தான். இது என் கோபத்தை அதிகரித்தது. எனவே மீண்டும் சற்று தீண்டினேன். அவன் இந்த முறை மெதுவாக திரும்பிப் பார்த்துவிட்டு ஒருகையால் சரிந்திருந்த விறகுக்கட்டை சரிசெய்துவிட்டு, மீண்டும் ஏதோ வெறிபிடித்தவன் போல் ஓடத்தொடங்கினான். என்கோபம் உச்சத்திற்கு ஏறியது. எனது பலமெல்லாம் திரட்டி வேகமாக தீண்டினேன். இந்தமுறை அவன் இறங்க உத்தேசித்திருக்க வேண்டும். சைக்கிளின் வேகத்தை குறைத்தான். ஆனால், அதேநேரம் ஒரு பெண் அவனை மறித்ததால் அவ விடம் சென்றபின்னரேயே நிறுத்தினான். நான் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாக இருந்தேன். அப்பாடா சைக்கிள் ஒருமாதிரி நின்றது. அவன் அந்தப் பெண்ணுடன் பேரம் பேசிக்கொண்டிருந்தபோதே நான் வேகமாக நழுவி விடுகிறேன்.

நாய் அலைச்சல் என்று இதைத்தான் சொல்வார்களோ..! இதுபோல எந்த ஒரு நாளும் நான் அலைந்ததில்லை. என் கால்கள் நிற்கச் சொல்லிக் கெஞ்சியது. என் வயிறு ஓடச்சொல்லி மன்றாடியது. நான் இரண்டிற்கும் இடையில் ஊசலாடிக்கொண்டு இருந்தேன். நான் தளர்ந்துபோய் அலைந்து கொண்டு இருந்தேன். அட அப்போதுதான் அது என் கண்களில் பட்டது. பாதையோரமாக விழுந்து கிடந்தது. ஆம் அது ஒரு பாண்பொதி ஆவலுடன் அதைத் தின்று என் வயிற்றை நிரப்பிக்கொள்கிறேன். வயிறு நிரம்பிய களிப்பில் நான் வந்த வழியே திரும்பி ஓடுகிறேன்.

அந்தப் பெண்ணிடம் பணத்தை வாங்கிக்கொண்டு மிகவேகமாக விரைகிறேன். எனக்கு இப்போது நன்றாகத் தலை சுற்றியது. புதுத் தளர்ச்சி என் உடலில் எங்கும் வேகமாகப் பரவியது. ஒரு கடையில் நிறுத்தி பாண் வாங்கிக்கொள்கிறேன். என் கண்மணிகளின் பசியால் வாடிய முகம் வரவர என் நினைவை கூடுதலாக வியாபிக்கத் தொடங்கியது. ஐயோ இது என்ன என்னால் எதையும் பார்க்கமுடியவில்லையே. கண்கள் இருண்டுவிட்டது. உடல் மிகவும் தளர்ந்து போகிறது. கடவுளே என் சைக்கிள் என் கையைவிட்டு நழுவி எங்கோ விழுகிறது. நான் தூக்கி எறியப்படுவது மட்டும் எனக்கு இப்போது புரிந்தது. வெளி ஒலிகள் ஏதும் எனக்கு இப்போது கேட்கவில்லை. நான் எங்கோ இருட்டான பாழும் கிணற்றில் மிக ஆழமாகப் போய்க் கொண்டிருக்கிறேன். ஐயோ கடவுளே! என் குழந்தைகளின் பசியை எப்படித் தீர்ப்பேன் என் குழந்தைகளினதும், மனைவியினதும் பசியால் வாடிய முகங்கள் எனது நினைவில் இறுதியாக மங்கலாகத் தெரிந்தது. என் கடைக்குட்டி வீரிட்டு அழும் ஒலி என் காதில் கடைசியாக ஒலித்துக்கொண்டிருந்தது.

- செம்பருத்தி -