Thursday, November 18, 2004

முறியாத பனை

- சந்திரா. ரவீந்திரன் -

நீண்ட வருடங்களாய் துருப்பிடித்துப் போயிருந்த தண்டவாளங்களில் மீண்டும் புதிதாய் பரபரப்பு, சுறுசுறுப்பு! ஒருநாளில் இருதடவைகள் யாழ்ப்பாணம் நோக்கி வரும் ரயில்வண்டிகளின் சத்தங்கள்! ஜனங்கள் அவசரம்அவசரமாய்க் கூடிப்பிரியும் குட்டிக் குட்டிக் காட்சிகள்!

சப்தங்கள் யாவும் ஓய்கிற போது பழையபடி எல்லாவற்றையும் மீறிக்கொண்டு வரும் கடலை நெய்யின் கமறலும், பூட்ஸ்களின் தோல் மணமும்!

சில சமயம் வயிற்றைக் குமட்டும்! பல சமயங்களில் அடிவயிற்றுக்குள் அப்பிக்கொண்டுவிடும் அச்சமோ, அருவருப்போ, கோபமோ என்று புரியாத ஒரு நெருடல் பந்தாக உருண்டு கொண்டே கிடக்கும்!

சூரியன் அஸ்தமிக்கும் பொழுதுகளில், ஓரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், பொதிகளற்ற வெற்று ரயில் பெட்டிகளினுள்ளேயிருந்து “ஐயோ….அம்…..மா…..!" என்ற மரண ஓலம் எதிரொலியாய் விட்டுவிட்டுக் கேட்கும்!

சில நிமிடங்களிற்கு எங்களின் தொண்டைக்குழிகள் அடைத்துப் போகும்! வீடு அசாதாரண அமைதியில் மூழ்கிக்கிடக்கும்! ஆனால் நாம் பயப்படவே தேவையில்லை! அப்படித்தான் அறிவு சொல்லியது. எத்தனை நம்பிக்கை, அவர்களிற்கு எங்கள் மேலிருந்தது. ரெயில்வே ஸ்ரேசனின் பெரிய பெரிய கட்டடப் பகுதிகளை இணைத்து, பிரதான முகாமாக்கியிருந்த அந்த இந்திய -சிங்- குகளுக்கு நிலையத்தின் தலைமை அதிபரான அப்பாவில் மட்டும் நிறைய மரியாதை!

தண்டவாளங்களோடு ஒட்டியிருந்த எங்கள் ரெயில்வே குவாட்டர்ஸ் மிகவும் அழகானது, வசதியானது! ஸ்ரான்லி வீதிப்பக்கமாயிருந்த, வீட்டின் முன்புறத்தில் முல்லையும் அடுக்கு மல்லிகையும் பந்தலிட்டு நின்றன. மணல் பரவிய நீண்ட முற்றம். இருபுறமும் பச்சைப்புற்கள். வேலி முழுவதும் பின்னிப் படர்ந்திருக்கும் பூங்கொடிகள் - அவை பெரிய பெரிய இலைகளைப் பரப்பி, வேலிக்கு மிகவும் பாதுகாப்பாய் இருந்தன. அவை “ரெயில்வே குவாட்டர்ஸ்- க்கே உரியவை போலத் தனித்துவமாயிருக்கும்! றோஜா நிறத்தில் கொத்துக்கொத்தாய்ப் பூத்துக் குலுங்கும்! ஆனால் வாசனையற்றவை! அவை சிங்களப் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டதால் “சிங்களக் கொடி என்று பெயர் சூட்டியிருந்தோம்.

வீட்டின் இடது புறமிருந்த நீளமான பெரிய வளவில், நெடுநெடுவென்று வளர்ந்திருந்த பத்துப்பன்னிரண்டு பனைமரங்களும், ஓரமாய் இரண்டு முருங்கை மரங்களும்! முருங்கைகள் ஏராளமாய்க் காய்க்கும்! வீட்டின் வலது பக்கமிருந்த சிறிய வளவிலும் இதரை வாழைகள், தென்னைகள், தூதுவளை, துளசி, பயிற்றங்கொடி, கரும்பு என்று பசுமையில் நிலம் செழித்துக் கிடந்தது!

இவற்றிற்கு நீர் பாய்ச்சுவதற்காய் நான் நீண்ட நேரம் நீராடுவது வேறு விடயம்!

பனை மரங்கள் எப்பவும் பேரிரைச்சலுடன் கம்பீரமாய் அசைந்து அசைந்து சலசலத்துக் கொண்டேயிருக்கும். படுக்கையறையின் விசாலமான ஜன்னலினூடாய் பனம்பூக்கள் பறந்து வந்து வாசனையோடு சிதறும்! வீட்டின் ஓரமெங்கும் மஞ்சள் பூப்பந்துகள் திரள் திரளாய் ஒதுங்கிக் கிடக்கும். வளவைப் பார்க்க எப்பவும் எனக்குப் பெருமையாயிருக்கும்!

பின்னால் ரெயில்வே ஸ்ரேசன் வளவில், எமது வீட்டுவேலியோடு ஒட்டியவாறு உயரமான ஒரு “சென்றிப்பொயின்ற்! பனங்கொட்டுகளும் மண்மூட்டைகளும் போட்டு வசதியாக அமைத்திருந்த “சென்றிப்பொயின்ற்!

அவர்கள் வெளியில் “ சென்றியில் ஈடுபடுவதைவிட வேலிக்கு மேலால், எமது வீட்டிற்குள் கண்மேய்ச்சல் விடுவதே அதிகம். கங்கு மட்டை, காய்ந்த ஓலை, பனங்காய், பன்னாடை என்று சடசடத்து விழும்போதெல்லாம், ஆரம்பத்தில் துடித்துப்பதைத்து வெற்றுவேட்டு வைத்து, கூச்சல்களோடும் அதட்டல்களோடும் பத்துப்பதினைந்து பச்சைத்தலைகள் வேலியின் மேலால் எட்டிப்பார்த்து ஆராயும்! போகப்போக, அது அவர்களிற்குப் பழக்கமாகி விட்டதால், பனைகளுக்குப் பாரிய பிரச்சினையேதும் ஏற்படவில்லை.

தண்டவாளங்களை நோக்கித் திறபடும் எமது பின்புறப் படலையை சங்கிலி போட்டுப் பூட்டக்கூடாது என்பது அவர்கள் கட்டளை! சாட்டாக நினைத்த நேரத்தில் உள்ளிட்டு விடுவார்களோ என்ற பயம் நமக்கு! ஆனால் அநாவசியமாக அவர்கள் உள்ளிட்டதில்லை என்பது நம்பமுடியாத உண்மை!

அப்பாவிற்கு, பின் படலையால் வேலைக்குப் போய் வருவது பெரிய சௌகரியமாய் இருந்தது. நேரம் கிடைக்கும் நேரங்களில் வந்து, தேநீர் அருந்தி, நொறுக்குத்தீனி சாப்பிட்டுவிட்டுப் போவார்.

சில சமயங்களில் அப்பாவுடன் சேர்ந்து கேர்ணல், மேஜர் என்று அலங்காரப்பட்டிகளுடன் கிந்திப்பட்டாளங்களும் வருவதுண்டு! அப்பா எச்சிலை மென்று விழுங்கியபடி இழுபட்டுக்கொண்டு வருவது எனக்கு விளங்கும். அவர்கள் கதையோடு கதையாய் வீடுமுழுவதும் கண்களால் கணக்கெடுத்துக் கொண்டு போவார்கள். போகும் போது நட்பாக விடைபெறுவார்கள்.

“ இங்கு எல்லோருக்கும் பெரிய பெரிய வீடுகள் இருக்கிறது. தண்ணீர் வசதியிருக்கிறது. இதைவிட வேறென்ன வேண்டும் உங்களுக்கு? எதுக்காக சண்டை போடுகிறார்கள்….” என்று ஒரு இந்தியக் கேர்ணல் அப்பாவிடம் கேட்டானாம். அவன் ராஜஸ்தானைச் சேர்ந்தவன். விளக்கம் கொடுக்க வேண்டிய வினாத்தான்! ஆனால் “இவன்களுக்கு இதெல்லாம் விளங்குமா? இந்தியப் பெரும்பான்மையினக் குடிமகன் இவன்! ஒரு காலத்தில் பெரும்பான்மையினமாக இருந்து..இப்போ சிறுபான்மையினமாக்கப்பட்டிருக்கும் இந்த இலங்கைத் தமிழனின் உரிமைப் பிரச்சனைகள், அரசியல் துரோகங்கள், நிரந்தர இழப்புகள், பரிதாபங்கள், ஏக்கங்கள்…..எல்லாம் சொன்னாலும்தான் இவனுக்குப் புரியுமா? - அப்படித்தான் அப்பா உடனே யோசித்தாராம். யோசனையின் விளிம்பிற்கு வரமுன்பே, அவன் இந்த மண்ணின் நாணம் மிக்க பெண்களைப் பற்றிச் சிலாகிக்கத் தொடங்கி விட்டானாம். அதன் பின்னர் அவன் பதில் சொல்லக் கூடிய கேள்வியெதுவுமே கேட்கவில்லையாம்!!

வீட்டு வளவிற்குள் கள்ளுச்சீவ வருபவன், வேலியோடு சென்றிப் பொயின்ற் வந்ததிலிருந்து பனையில் ஏறமாட்டேன் என்று பிடிவாதமாக நின்று விட்டான். ஒரு பனையில் அவன் கட்டிவிட்ட முட்டி கவிண்டபடி அப்படியே கிடந்தது. அதிலிருந்து கள்ளு நிரம்பி வழிகிறதோ என்று குமரியாகி நிற்கும் என் குட்டித்தங்கை, பனையோடு ஒட்டிநின்று அடிக்கடி அண்ணாந்து பார்ப்பாள். அவள் பனைமரங்களருகே போனால், சென்றிப்பொயின்ற் றிலிருந்து மெல்லிய விசிலடிப்பும் இனிமையான பாடலிசையும் கேட்கத்தொடங்கிவிடும்! அதனால் பனைகளருகே நின்று நாம் அனுபவிக்கும் சுகங்கள் படிப்படியாகக் குறைந்து கொண்டே போனது!

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் ஆசை தீர அள்ளிக்குளித்துவிட்டு, சின்னத் தூக்கத்திற்காய் படுக்கையறைக்குள் நுழைந்தால், முகாமிலிருந்து வரும் மும்முரமான சத்தங்கள் தூக்கத்தைக் கெடுக்கும்! அச்சமயங்களிலெல்லாம் ஜன்னலினூடாய், கரும்பனைகளில் சிதறிக்கிடக்கும் சின்னச்சின்னக் குழிகளையெல்லாம் ஏகாந்தமாய் எண்ணிப்பார்த்துக் கொண்டு படுக்கையில் கிடப்பேன்! அவர்கள் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த சில நாட்களில் வெறித்தனமாக ஏற்படுத்திய பேரழிவின் சிறு வடுக்கள் மட்டுமே இவை! இந்த வளவிற்குள் எந்தப் பனையும் இதனால் சாய்ந்து விழுந்து விடவில்லை! நிறைந்த வடுக்களோடும் நெடு நெடுவென்று கம்பீரமாய்த்தான் நிற்கிறது!

முன் கேற்றால் வீட்டினுள் நுழைபவர்களை சென்றிப் பொயின்ற் ல் இருப்பவன் முழுமையாகக் காணமுடியாது. ஆனால் வருபவர் வீட்டின் நடு இருப்பறைக்குள் நுழைந்து விட்டால், பின்வாசலூடாய் பைனாகுலர் மூலம் மிகத் தெளிவாய்க் காணலாம்.

என் சிநேகிதி அபி, பெரிய ஓலைத்தொப்பியும் கவர்ச்சியான உடையும் அணிந்துகொண்டு அழகான சைக்கிளில் வந்திறங்கிக் கதைத்துவிட்டுப் போவாள். அவளின் கைப்பையினுள் ஏகப்பட்ட கடுதாசிகள், குறிப்புகள் இருக்கும். உடம்பின் ஒரு பகுதியில் “சயனைட் குப்பி இருக்கும்! பின்புறம் சமையலறைப் பக்கமாய் அவள் வரும்போது “சென்றிப்பொயின்ற் றில் இருப்பவன் தலையை வெளியே நீட்டி கண்ணடித்துச் சிரிப்பான், களிப்பில் கையசைப்பான்!

எனக்கு இதயம் படபடத்துக் கொண்டேயிருக்கும்! அவள் வெகு சாதாரணமாய், அண்ணரின் கதையிலிருந்து ஆஸ்பத்திரிக் கதைவரை பரிமாறிவிட்டு, தேவையானவற்றைச் சேகரித்துக்கொண்டும் சிரித்தவாறே போய்விடுவாள்! “ போகிறாளே என்று மனதிற்குள் ஏக்கமாயும் இருக்கும். போனபின் ஏனோ ஆறுதலாயும் இருக்கும்.

வீடு வீடாகச் சோதனை நடக்கிற போதும் இந்த ரெயில்வே பகுதிக்குள் மட்டும் யாரும் சோதனை போட வருவதில்லை என்று இறுமாப்புடன் இருந்த எமக்கு ஒரு நாள் காத்திருந்தது!

அது ஒரு சுட்டெரிக்கும் வெயில் நாள்! “சென்றிப் பொயின்ற் நோக்கி யாரோ உற்றுப் பார்த்திருக்கிறார்கள். அடுத்த நிமிடம் அதற்கருகாக “கிறனைற் குண்டொன்று வெடித்திருக்கிறது! வந்தவனின் குறி தப்பிவிட்டது! வேலியோடு நின்ற சீனிப்புளி மரத்தின் கிளைகளுக்கு மட்டும் தான் சேதம்! ஸ்ரேசன் பகுதி முழுவதும் மிருகத்தனம் தலைதூக்குவதற்கு இது ஒன்று போதுமே! திபு திபு வென்று எமது பனம் வளவிற்குள் பச்சைப்புழுக்களாய் அவாகள்! சட சட வென்று காற்றைக் கிழிக்கும் இரைச்சலுடன் துப்பாக்கி வேட்டுக்கள்! வீதியால் போய்க்கொண்டிருந்த அப்பாவி மக்கள், பச்சையுடைப் பேய்களால் பன்னாடையாக்கப்டும் அகோரம், ஈனஸ்வரமாய் நீண்ட நேரம் கேட்டுக் கொண்டிருந்தது!

எல்லாம் ஓய்ந்த பின், ஜன்னலினூடாய் வளவைப் பார்த்தேன். மருந்து நெடி வீசியது! அடிவயிற்றுக்குள் இன்னமும் அச்சம் அப்பிக்கிடப்பதான உணர்வு! கரும் பனைகளில் புதிய குழிகள் தோன்றியிருந்தன. சன்னங்களின் பல வெற்றுக் கவசங்கள் மரங்களின் அடியில் ஆங்காங்கே சிதறியபடி! ஆயினும் அழகிய விசிறிகளென, வளவு முழுவதும் பசுமையைப் போர்த்தியிருக்கும் பனைகளெல்லாம் கெக்கலித்துச் சிரிப்பது போல் காற்றில் அழகாய் அசைந்து கொண்டுதானிருந்தன!

ஒரு உற்சாகமான வார இறுதி நாள், ரெயில்வே தொழிலாளிகளை அப்பா அழைத்திருந்தார். அவர்கள் புற்கள் நிறைந்த வளவைத் துப்புரவாக்கத் தொடங்கிவிட்டார்கள். வீடு முழுவதும் பச்சைப்புற்களினதும் காயம்பட்ட வடலி இலைகளினதும் மணம் பொங்கிப் பரவிக்கொண்டிருந்தது!

மேஜர் முக்தயர், ஏணிப்படிகளில் ஏறி நின்றவாறே வளவிற்குள் நின்ற அப்பாவுடன் வெகு சந்தோஷமாய் கதைத்துக் கொண்டிருந்தான். அப்பா, வளவைத் துப்புரவு செய்விப்பது அவனுக்குப் பெரு மகிழ்ச்சி என்று விளங்கியது. புற்களினூடாக வேலிவரை யாராவது தவழ்ந்து வந்து விடுவார்களோ என உள்ளுர ஊறிக்கிடந்த அச்சத்திற்கு அது பெரிய ஆறுதல் தானே!

துப்புரவு செய்யப்பட்ட வளவிற்குள், நிறையப் பனங்கொட்டைகள் ஆங்காங்கே புதைந்து, புதிதுபுதிதாய் முளைவிட்டிருப்பது தெரிந்தது. அப்பா அவற்றைப் பிடுங்கி எடுக்கச் சொல்லவில்லை. அவை நெடும்பனையாகும் அழகைக் கற்பனையில் நான் அடிக்கடி கண்டு களிப்பேன்.

வைகாசி மாதத்து முதல் நாள், நல்ல வெயிலும் கூடவே சுழன்றடிக்கிற காற்றுமாயிருந்தது! சைக்கிள் றிம் இல் சுரீர்சுரீரென்று மணற்புழுதி வந்து மோதிக்கொண்டிருந்தது. நான் அலுவலகத்தில் ரைப் செய்யவேண்டியிருந்த அனைத்துப் பிரதிகளையும் முழுமையாகச் செய்து முடித்து விட்ட திருப்தியுடன், ஆசுவாசமாய் சைக்கிளில் வந்திறங்கினேன். வீட்டினுள் பரபரப்பாக ஆளரவம்! வல்லைவெளி தாண்டி வந்த வடமராட்சி உறவினர்கள் சிலர் என்னைக் கண்டதும் எட்டிப்பார்க்கிறார்கள். ஏதோ வித்தியாசமாய்த்தான் இருந்தது!

அம்மா அழுத கண்ணீருடன் படியிறங்கி ஓடிவந்து என்னைக் கட்டியணைத்து விம்மினா! ஓசையை அடக்கி ஒப்பாரி வைத்தா! எனக்கு எல்லாம் விளங்கிவிட்டது!

“ ஊரில் என் தம்பி போரிட்டு மாண்டான் …. என்று மார்தட்டிப் புலம்பவோ, தலையைப் பிசைந்து குழறவோ ஊரைக்கூட்டி ஒப்பாரி வைக்கவோ முடியாத ஊமைச்சாபம் எங்களுக்கு! நடுஇருப்பறையைத் தாண்டி, பின்புறமாய் எம் அழுகுரல் போய்விடக் கூடாத அவலம் எமக்கு! கத்தி அழுது தீர்க்கமுடியாத அவஸ்தை எம்மை வதைத்து உருக்கியது!

எல்லா சுதந்திரங்களும் பறிக்கப்பட்டு, இப்போ அழுவதற்குரிய ஆகக் குறைந்த சுதந்திரமும் இரகசியமாய்ப் பறிக்கப்பட்டிருந்தது யாருக்குத் தெரியும்? யார் யாரைப் போய்த் தேற்றுவது?!

சில மாதங்கள், எமக்குள் எரியும் துன்பப்பெருநெருப்பை அமுக்கி..அமுக்கி.,.பின்னர் அவை வெறும் தணற் துண்டங்களாய் கனன்று பொசுங்கிக் கழிந்து கொண்டிருந்தது! நம்பமுடியவில்லை! நமது சின்னச் சின்னச் சந்தோஷங்களும் இத்தனை விரைவில் சீர்குலைந்து போகுமென்று நம்பவில்லை!

இலையுயதிர்காலம் தொடங்கி, சீனிப்புளி உருவியுருவி தன் இலைகளை வளவெல்லாம் கொட்டத் தொடங்கிய போது, ஒரு நாள் திடுதிப்பென்று அவர்கள் மூட்டை கட்டத் தொடங்கி விட்டார்கள்! ரெயில்வே ஸ்ரேசனுக்குரிய கட்டடங்களெல்லாம் அவசரம் அவசரமாய் விடுவிக்கப்பட்டு வெறிச்சோடிப் போய்விட்டது! அனைத்து வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன! மேஜர், கேர்ணல் என்ற பதவியிலிருந்தவர்கள், விடைபெற்றுப் போக வீட்டுக்கு வந்தார்கள். சிநேகமும் பண்பும் மிக்க எங்களைப் பிரிந்து போவதில் பெரிய மனவருத்தம் என்று கூறி விடைபெற்றுப் போனார்கள். சொந்த உடைமையைத் துறந்து போவது போன்ற துக்கம் அவர்களின் கண்களில்!

இரவு…ஈ, காக்கைகூட அங்கில்லை என்ற தெளிவான நம்பிக்கையில், இத்தனை நாள் அடக்கிவைத்திருந்த துக்கமெல்லாம் பீறிட்டெழ, நெஞ்சிலடித்து அம்மா கதறத் தொடங்கிவிட்டா!!

“ நாசமாய்ப் போவான்கள்…..என்ரை பிள்ளையையுமெல்லோ நாசமாக்கிப் போட்டுப் போறான்கள்! மகனே!.....நானினி உன்னை எங்கை போய்த் தேட…….எப்பவடா இனி உன்னோட நான் பேச…….. என்று பின்வளவில் குந்தியிருந்து அம்மா குழறிக்கொண்டேயிருந்தா!

எனக்கு கண்களிற்குள் நீர் முட்டிக்கொண்டு வந்து விட்டது! ஆயினும் யாரும் யாரையும் அழ வேண்டாமென்று தடுக்கவில்லை!!


எழுதியவர்:-
சந்திரா. ரவீந்திரன்.

(குறிப்பு:-இவ் உண்மைச் சம்பவம் சிறுகதையாக, லண்டனிலிருந்து வெளியாகும் “யுகம்மாறும் இதழில் 1999ம் ஆண்டு ஆனிமாதம் பிரசுரமாகியிருந்தது. பின்னர் ஈழமுரசு பத்திரிகையிலும் இக் கதை மறுபிரசுரமாக்கப்பட்டிருந்தது)

Monday, October 25, 2004

அவர்கள்

- வி.உஷா -

அம்பையின் கதையில் படித்ததுதான் அவள் நினைவுக்கு வந்தது.

வயதான பெண் அவள். வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறாள். உடல் ஒடுங்கிப் போயிருந்தாலும் உள்ளம் பழைய தினங்களைக் கிளறிப் பார்த்தபடியே இருக்கிறது. இத்தனை வருடங்கள் நம் வாழ்க்கை எப்படி ஓடியது என்று அவள் யோசிக்கிறாள்.

கிலோ கிலோவாக கோதுமை மாவு பிசைந்தது, உருளைக்கிழங்கு வேகவைத்தது, வெங்காயம் நறுக்கியது... என்று ஒரே நினைவுகள்தான் மாறி மாறி வருகின்றன. சமையலறை தவிர வேறு எந்த எண்ணமும் அவளுடைய உள்ளுணர்வுகளில் பதிவாகவில்லை. ஸ்தம்பித்துப் போகிறாள்.

அம்பையில் கதையில் வந்த அந்தப் பெண்மணிக்கும் தனக்கும் என்ன வித்தியாசம் என்று அருணா நினைத்துப் பார்த்தாள்.

வலித்தது.

ஒரு வித்தியாசமும் இல்லை. சொல்லப்போனால் இன்னும் கூடுதல் சுமைகள் தூக்குகிற கழுதையாக ஆகிப் போயிருக்கிறாள். அந்தப் பெண்மணிக்காவது அவள் உழைப்பு சமையலறையுடன் முடிந்து போயிருந்தது. தனக்கு அப்படியல்ல என்று நினைத்தபோது சுயவிரக்கத்தாலும் அவமானத்தாலும் அவள் சிரம் தாழ்ந்தது.

‘‘அருணா...’’

சம்பத்தின் குரல் ஓங்கிக் கேட்டது.

முகத்தோடு சேர்த்து கலங்கிய விழிகளையும் துடைத்துக் கொண்டு அவள் அவனிடம் போனாள்.

‘‘என்ன இது?’’ என்றான் தட்டைக் காட்டி.

‘‘ஏன்..? ரவா உப்புமா..’’

‘‘எனக்குப் பிடிக்காதுன்னு தெரியுமில்லையா உனக்கு?’’

‘‘ஒருநாள் சாப்பிடக்கூடாதா? வெங்காயம், தக்காளின்னு சேர்த்து கிச்சடியாத்தானே செஞ்சிருக்கேன்?’’

‘‘சாப்பிட்டுதான் தீரணும்கிறியா?’’

‘‘ஜஸ்ட் ஒரு நாள்..’’

‘‘ஒருநாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்ங்கிறியா?’’

‘‘மாவு அரைக்க நேரமில்லே... இந்த வாரம் ஸண்டே முழுக்க விருந்தாளிகள்.. சமையல், டிபன், காப்பின்னு கிச்சனே கதின்னு கெடந்தேன்.. முந்தாநாள் அடை ஆச்சு.. நேத்திக்கு அரிசி உப்புமா.. இன்னிக்குதான் ரவா உப்புமா.. அதுவும் ரொம்ப நாள் கழிச்சு..’’

திடீரென்று அவன் எழுந்தான். கையை உதறினான். வாஷ் பேசினில் கை நீட்டி அலம்பிக் கொண்டான்.

அவளிடம் வந்து நின்றான்.

‘‘நிறுத்த மாட்டியா பேச்சை? பதிலுக்கு பதில் பேசிக்கிட்டேதான் இருப்பியா? வேணும்னேதானே இப்படி பண்ணறே? சொல்லு’’ என்றான்.

சடாரென்று முகம் சிவந்தது. பேசி முடிப்பதற்குள் உதடுகள் துடித்துவிட்டன.

அமைதியாக அவள் நின்றாள். உள்ளே வெப்பம் உருவாகிக் கொண்டிருந்தது. இந்த எட்டு வருடங்களாக இதே டைனிங் டேபிளில், இவனுக்கு எவ்வளவு ரொட்டிகளும் கூட்டுகளும் வத்தக்குழம்புகளும் சாம்பார்களும் செய்து சுடச்சுட பரிமாறியிருக்கிறாள்.? எத்தனை தேங்காய் துருவி, எவ்வளவு வறுத்து அரைத்து அத்தனையும் ருசிருசியாக.. சத்துள்ளதாக.. புத்தம்புதிதாக..

ஒரு நாள், ஒரே ஒரு நாளாவது பாராட்டு வந்திருக்குமா? ‘‘இந்த வெங்காய பஜ்ஜி பிரமாதம் அருணா!’’ என்று ஒரே ஒரு வரி அங்கீகாரமாவது கொடுத்திருப்பானா?

‘இப்படியெல்லாம் பிரமாதமாய் சமைத்துப்போட வேண்டியது உன் கடமை. ரசித்தாலும் அதை வெளிக்காட்டாமல் மவுனமாக சாப்பிட வேண்டியதுதான் என் வேலை. முடிந்தால் அதில் குற்றம் குறை கண்டுபிடித்துச் சொல்வேன். ஏன் தெரியுமா? மனைவிகளையெல்லாம் வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவேண்டும். இல்லையென்றால் நம் தலைமீது தேங்காய் உடைத்துவிடுவார்கள்!’

பெண்களைப் பற்றிய அவனுடைய முடிவான அபிப்ராயம் இது. மாற்றிக்கொள்ள விரும்பாத முரட்டுத்தனமான தீர்மானம்!

அழைப்பு மணியின் மெல்லிய குயிலோசை கேட்டது.

அவன் குளியலறையில் இருந்தான்.

ஈரக்கையைத் துண்டு எடுத்து துடைத்துவிட்டு அவள் வாசலுக்கு விரைந்தாள்.

திறந்தபோது மாதவன் நின்றிருந்தான்.

எதிர் ஃப்ளாட் இளைஞன். புதிதாக திருமணமாகி இளம் மனைவியுடன் குடித்தனம் செய்பவன்.

புன்னகையுடன், ‘‘யெஸ் மாதவன் சார், உள்ளே வாங்க..’’ என்றாள் அருணா.

அவனும் முறுவலித்துவிட்டு, ‘‘ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா மேடம்?’’ என்றான் மென்மையாக.

‘‘சொல்லுங்க..’’

‘‘சரிதா மார்க்கெட்டுக்குப் போயிருக்கா... எனக்கு ஒரு அர்ஜென்ட் கால் வந்ததால, நான் உடனே சைட்டுக்குப் போயாகணும்.. அவ வந்தா இந்த சாவியைக் கொடுத்துடுங்களேன்.. முடியுமா? ப்ளீஸ்..’’ என்றான் கெஞ்சுவதைப் போல.

‘‘இதென்ன மாதவன் சார் இவ்வளவு தயக்கம் உங்களுக்கு? ஆஃப்டர் ஆல், இட்ஸ் மை ட்யூட்டி ஆஸ் எ நெய்பர்.. குடுங்க...’’

‘‘தாங்க் யூ மேடம்.. வெரி கைன்ட் ஆஃப் யூ.. ஸீ யு.. பை பை..!’’ சிறுவனைப் போல் அவன் படிகளில் இறங்கி விரைகிற சுறுசுறுப்பைப் பார்த்தபடி புன்னகையுடன் அவள் திரும்பியபோது..

சம்பத் நின்றிருந்தான்.

‘‘எதுக்கு வந்தான்?’’ என்றான் காட்டமாக.

‘‘இதோ இதுக்காக..’’ அவள் விரல்கள் சாவியை எடுத்துக் காட்டின.

‘‘நீயே வாங்கிப்பியா? என்னைக் கூப்பிட மாட்டியா? எவன் வந்தாலும் நீயே இளிச்சுக்கிட்டுபேசுவியா... பெரிய......... நினைப்பா?’’

தோட்டாக்களைப் போல சீறி வந்த அந்த வார்த்தைகளின் வேகம் தாங்காது அவள் ஸ்தம்பித்துப் போய் நின்றாள்.

திகுதிகுவென்று சொக்கப்பனை போல உடல் எரிந்தது. மண்புழுவை விட அற்பமாக ஒரு பிறவியெடுத்து, அவன் கால்களுக்குக் கீழே நசுங்குகிற மாதிரி அவலமான உணர்வுடன் அவள் துடித்தாள். இன்னும் ஏன் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற ஒரே கேள்வி மட்டும் கத்தியின் முனை போல குத்திக் கொண்டிருந்தது.

சம்பத் இரு கைகளாலும் முகத்தை வேகமாக தேய்த்துக் கொண்டான். உஸ்ஸென்று சப்தத்துடன் மூச்சுவிட்டான்.

மிக நெருங்கி அவள் பக்கத்தில் நின்றான்.

அவள் விரல்களைப் பற்றியபடி ‘‘பொண்ணுன்னா பூ மாதிரி இருக்கணும் அருணா.. பூ கூட இல்லே, மொட்டு மாதிரி அவ்வளவு ஸாஃப்ட்டா இருக்கணும்.. குரலே வெளில கேக்கக்கூடாது.. நடந்தா பூமி அதிராம, சிரிச்சா பல்லு தெரியாம.. அதுதான் அழகுடி அருணா! அதுதான் எனக்குப் பிடிச்ச அழகு.. எங்க பாட்டி அப்படித்தான் இருந்தா, எங்க அம்மா அப்படித்தான் இருந்தா.. நீயும் அப்படி இரேண்டி அருணா! அப்படி இருந்தாத்தாண்டி எனக்குப் பிடிக்குது.. புரிஞ்சுதா? புரியணும்.. இத்தனை வருஷம் புரியலேன்னா இப்பவாவது புரிஞ்சுக்கோ..’’ என்றவன், அவள் கண்களை அழுத்தமாகப் பார்த்துவிட்டு விருட்டென்று திரும்பிப் போனான்.

அப்படி ஒரு சம்பவம் தன் வாழ்க்கையில் நடக்கும் என்று அருணா எதிர்பார்க்கவில்லை.

ராத்திரி சமையலுக்குக் கீரையை என்ன செய்யலாம், பூசணியை என்ன செய்யலாம் என்று யோசித்தபடி வேகமாக வீடு வரும் வழியில் திடீரென்று அந்த பைக் ஆள் எதிரில் வந்ததும், கத்தியைக் காட்டி மிரட்டியதும், செயினை கத்திமுனையில் பறித்துக் கொண்டு போனதும் கண்கட்டுவித்தை போல நடந்து முடிந்துவிட்டது!

ஏழு மணிக்குத்தான் சம்பத் வீட்டுக்கு வந்தான்.

அம்பு போல பாய்ந்து அவளிடம் நின்றான்.

‘‘செயின் திருடு போச்சாமே? பைக்ல வந்து மிரட்டி வாங்கிட்டுப் போனானாமே.. நிஜமாவா... நிஜமாவா?’’ என்றான் வியர்வை கொப்புளிக்க.

அமைதியுடன் நிமிர்ந்தவள் ‘‘ஆமாம்..’’ என்றாள் நிதானமாக..

‘‘என்ன பொண்ணு நீ?’’ என்றான் மிகவும் எரிச்சலுடன். ‘‘ஒவ்வொருத்தியும் ராக்கெட்ல போறா, ப்ளேன் ஓட்டறா... ஏன், நம்ம கிராமத்துப் பொண்ணு லாரியும் ட்ராக்டரும் ஓட்டுது.. இப்படியா கோழையா இருக்கறது... எதிர்ல வந்து நிக்கற திருடன்கிட்ட செயினை கழட்டி குடுத்துகிட்டு? ஆர் யு நாட் அஷேம்ட்?’’

அருணா அவனையே பார்த்தாள்.

மிக மென்மையான புன்னகை ஒன்று மிக நிதானமாக அவளுடைய அதரங்களிலிருந்து வெளிப்பட்டது.

- வி.உஷா -
Quelle-kumutham

Sunday, July 11, 2004

இரண்டாம் ஜாமங்களின் கதை - 6

சல்மா

திடீரென அன்று மைமூன் வாந்தி எடுக்கவும் கதீஜா ஓடிவந்து ஆமினாவை அவளது வீட்டிலிருந்து கூட்டிப் போனாள். வரும் வழியில் "நீ வந்து அவ கிட்டக் கேளு பாவிமக எதையுமே சொல்ல மாட்டேங்கிறா" என நடுக்கமுற்ற குரலில் சொல்லியபடி கையில் அரிக்கேன் விளக்கோடு அவர்கள் தெருவில் இறங்கி நடந்து செல்லும் பொழுது, தெருவெங்கும் இருள் கலந்து கிடந்தது. யாராவது பார்த்து "என்ன இந்நேரத்துல எங்கெ போற ஆமினா" என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என யோசித்தபடியே மெதுவாக அடியெடுத்து வைத்து நடந்துகொண்டிருந்தவளுக்குச் சலிப்பாக இருந்தது. இந்த வயதில் தான் பிள்ளை பெற்றுக் குடும்பம் நடத்துவதே பெரிய விஷயமாக இருக்கும்பொழுது இவளுடைய பிரச்சினைகளை வேறு தலையில் சுமக்க வேண்டியிருக்கிறதே என்று. கல்யாணம் முடிந்து விட்டால் அவனோடு வாழ்வதைத் தவிர வேறு நினைப்பு பெண்களுக்கு வருமா என்பதையே மைமூனிடமிருந்துதான் தெரிந்துகொண்டாள். ஊரில் தலைகாட்ட முடியாத கேவலத்தைத் தன் குடும்பத்திற்குத் தந்துவிட்ட பிறகு அவள் உயிரோடு இருக்கத்தான் வேண்டுமா என்றிருந்தது இவளுக்கு. வீட்டை நெருங்கிப் படலைத் திறந்து மெதுவாக உள்ளே நுழைந்தார்கள் இருவருமாக. அத்தாவுக்கு எதுவும் தெரியக் கூடாது, ரொம்பவே மனமொடிந்துபோவார் என்கிற கவலை வேறு அவளை அரித்தது. இவள் தலாக் வாங்கின ஒரு கேவலம் போதாது என்று இது வேறா என்று அவர் உயிர் போய்விடும். இந்த இக்கட்டிலிருந்து எப்படித் தப்பிப்பது என்கிற எண்ணம் வேறு சேர்ந்துகொண்டிருக்க, தெருவில் நாய் ஊளையிடும் சப்தம் பயத்தை உண்டுபண்ணிற்று. இந்நேரம் சொஹ்ரா தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு அழுதால் கணவனும் எழுந்து தன்னைத் தேடுவான் என நினைத்துக்கொண்டவள், விஷயம் தன் மாமியார் ஒருத்திக்கு மட்டும் தெரிந்தால் போதுமே, வேறு வினையே வேண்டாம் என்றெல்லாம் நினைத்தபடி மைமூன் படுத்திருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.

மறுநாள் மாலை வீட்டு மாட்டு வண்டியைப் பண்ணையாள் மருது மூலம் கட்டச் சொல்லியிருந்தாள். அவனுடைய மனைவி முருகி மூலமாகப் பக்கத்து ஊரிலிருக்கும் மருத்துவச்சியைப் பற்றித் தெரிந்துகொண்டு விட்டிருந்தார்கள். முருகி சொன்னாள் "அவளால ஆகாதது எதுவுமேயில்லை" என்று. தானே போய் மாட்டு வண்டியில் கையோடு கூட்டி வருவதாகவும் சொன்னாள். பக்கத்து ஊர் என்றாலும், இப்பொழுது போனால் வருவதற்கு இரவு பத்து மணிக்கு மேலாகும். அதுதான் சரியான நேரமும்கூட என்பதனால் மருதுவும் முருகியும் போயிருந்தார்கள். இருள் நாலாபுறமும் பரவ இரவு வந்து கொண்டிருந்தது. சொஹ்ராவுக்கு சீக்கிரமே உணவூட்டித் தூங்க வைத்திருந்தாள். இஸ்மாயில் வியாபார விஷயமாக ஊரிலில்லை என்பதால் தோதாக இருக்கும் என்று இந்த நாளைத் தேர்ந்தெடுத்திருந்தாள் என்றாலும் அவளது இளம் மனம் கட்டுக்கடங்காதபடிக்குப் பயம் கொண்டிருந்தது.

நடக்கவிருக்கும் செயலின் விபரீதம் முழுமையாக மனதில் படிய மறுத்தது. இதை விட்டாலும் வேறு வழி இந்தக் கிராமத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. தங்கையின் வயிற்றுப் பாரம் கரைந்தால் போதுமென்றிருந்தது. ஊரில் இவள் உண்டாகியிருப்பது தெரிய நேர்ந்தால் அதன் விளைவுகளை நினைக்கையிலேயே மனம் நடுங்கிற்று. அக்குழந்தையைப் பெற்றெடுக்க முடியாத நிலையில் இதைத்தான் செய்ய வேண்டும். அவளை வேறொரு இடத்தில் உடனடியாகக் கட்டிக் கொடுப்பதாக இஸ்மாயில் சொல்லியிருக்கிறான். தலாக் வாங்கின இத்தா மைமூனுக்கு முடியட்டுமென்றுதான் காத்திருந்தார்கள். அதற்கிடையில் இந்தக் குழந்தை எதற்காக வந்து ஜனிக்க வேண்டும் என்றெல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

ஊர் அடங்கிய பிறகு மெதுவாக தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினாள். நிலவொளி அதிகமில்லாதது வசதியாக இருந்தது. நடப்பதற்குச் சிரமமாக இல்லையெனினும் தரையைக் கூர்ந்து பார்த்தபடியே நடந்தாள், கையில் வெளிச்சத்திற்கென்று விளக்கு எதுவும் எடுத்து வரும் துணிவு இல்லை. யாராவது பார்த்துவிடக்கூடும் எனப் பயமாக இருந்தது. அடுத்த தெருதான் என்பதால் ஒன்றும் பிரச்சினையில்லை. வீட்டை அடைந்து படலைத் திறந்து கொல்லைப்புறத்தை நோக்கிப் போனாள். அங்கே பின்புறத் திண்ணையோடு இருளில் முருகியும் ஏழு வயதான பொண்ணும் குத்தவைத்து உட்கார்ந்திருந்தார்கள். இவளைப் பார்த்ததும் எழுந்து நின்று இவள் முகத்தைப் பார்த்தார்கள். இவள் தன் வாயில் கைவைத்து யாரும் பேச வேண்டாமென்பதுபோல சைகை செய்தாள். வீட்டின் பின்புறக் கதவு தாழிடப்படாமல் சும்மா சாத்தியிருந்தது. கதவைத் தள்ளியதும் உடனே திறந்துகொண்டது. இவள் முதலில் உள்ளே நுழைந்து திரும்பிப் பார்த்தாள் பிறகு இவர்களும் உள்ளே நுழைந்ததும் கதவைத் தாழிட்டுவிட்டு அம்மாவைத் தேடினாள்.

கதீஜா கூடத்தில் தூணில் உடலைச் சாய்த்து அமர்ந்திருந்தாள் இவர்கள் வருகையை எதிர்பார்த்தபடி. இவர்களைப் பார்த்ததும் தட்டுத்தடுமாறி எழுந்து தூணைப் பற்றிக்கொண்டாள். "அவ எங்கே?" என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டாள் ஆமினா. மச்சு மேலே என்று கை காட்டிவிட்டு, அதை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் கதீஜா. நடை தளர்வுற்று சோர்ந்திருந்தது. இப்பிடிப் பாதி ராத்திரியில பழிய எடுக்கிறாளே என தனக்குள் நொந்து கொண்டவளுக்கு ஆமினாவை நினைக்கையில் கண்ணில் நீர் கோர்த்தது. என்பொன்னுமக தங்க மக இந்த வயசுல இம்புட்டுக் காரியமா இருக்காளே என்று நினைத்தாள். அதே சமயத்தில் மைமூனின் வயதும் ஞாபகத்திற்கு வந்தது. "அவளுக்கு இந்த பிஞ்சு வயித்தில் இப்படி ஒரு பிள்ளைய ஏண்டா அல்லா உண்டாக்கினே" என்று அரற்றிக்கொண்டாள். அவர்கள் நால்வரும் ஒருவர்பின் ஒருவராக மரப்படிகளில் ஏறி மாடியை அடைந்தார்கள். அங்கே மெலிதான விளக்கொளியில் சுருண்டுபோய் படுத்திருந்தாள் மைமூன். "அல்லா இவள பாக்கையில ஏங்கொலையே புடிக்குதே" என்று சொல்லிப் பொங்கிவந்த அழுகையைச் சேலைத் தலைப்பை வாய்க்குள் வைத்து அடக்கினாள் கதீஜா. "சரி சரி அழாதீங்க" என்றபடி தன் தாயைத் தேற்றினாள் ஆமினா தன்னுள்ளிருந்த பயத்தை வெளிக்காட்டாதபடி. இவர்களுடைய அழுகையில் கண் விழித்தெழுந்த மைமூன் மிரளமிரள விழித்துக்கொண்டிருந்தாள். அவளது மெலிதான தேகம் மெதுவாக நடுங்கிக்கொண்டிருப்பதை விளக்கொளியில் பார்க்கமுடிந்தது.

ஆமினா இப்பொழுதுதான் மருத்துவச்சியை நேராகப் பார்த்தாள். அவளுக்கு நாற்பத்தைந்து வயதிருக்கும் என்று தோன்றியது. சட்டை போடாமல் சேலையைச் சுற்றிக் கட்டியிருந்தாள். காதுகளில் சிகப்புக் கல் வைரத்தோடு மின்னியது. கைகளிரண்டிலும் தேளின் படம் பச்சை குத்தியிருந்தது பொருத்தமானதாக இருந்தது. அவளது முகத்திலும் கண்களிலும் ஒருவிதமான அலட்சிய பாவமிருந்தது. இது தனக்கொன்றும் புதிதில்லை என்கிற மாதிரி. அவள் ஆமினாவையும் கதீஜாவையும் கேலி செய்யும் விதத்தில் பார்த்து முறுவலிப்பது போலிருந்தது. இதற்கெல்லாமா பயப்படுவீர்களென கேட்காதது தான் குறை. "சரி சரி நேரமாச்சு, நான் வந்த வேலையைப் பார்க்கறேன்" என்று தன் பாட்டுக்குச் சொல்லிவிட்டுத்தான் அக்குளில் இடுக்கியிருந்த பையை எடுத்துத் தரையில் வைத்து, அதிலிருந்து ஒரு எருக்கஞ்செடியின் தண்டை எடுத்து வெளியில் வைத்தாள். பிறகு ஒரு நூல் கண்டு, இறுதியாக ஒரு களிம்பு டப்பி. அவள் அதன் பிறகு செயல்பட்ட விதம் தம் அவள் கைதேர்ந்தவள் எனச் சொல்லக்கூடியதாக இருந்தது. மைமூன் அதனை வெறித்துப் பார்த்தபடியிருந்தாள். அவளிடமிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை. பயமும் வார்த்தைகளும் தனக்குள் இறுகிக் கிடக்க விரக்தியோடுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இலைகள் நீக்கிய எருக்கஞ்செடியின் தண்டின் ஒரு முனையில் தான் கொண்டுவந்திருந்த டப்பியிலிருந்து கருமையான களிம்பைத் தோய்த்தெடுத்தாள், மறு முனையில் நூல் கண்டிலிருந்து நூலைப் பிரித்தெடுத்து நன்கு இறுக்கிக் கட்டித் தன் விரலில் சுற்றிக்கொண்டாள். குச்சியின் அடிப்பகுதியோடு சேர்த்து நூல் அவள் விரல்களுக்குள் இறுக்கமாகப் பிடிக்கப்பட்டிருந்தது. தான் செயல்படலாமா என்கிற விதத்தில் அவள் இவர்களது முகத்தை ஏறிட்டுப் பார்க்க, ஆமினாவுக்குத் தன்னுள் இதயத்திலிருந்து ஏதோ ஒன்று நழுவி விழுவதைப் போலிருந்தது. அவ்வுணர்வு குற்றம் சார்ந்ததாகவோ இழப்பு சார்ந்ததாகவோ இல்லாமல், இயலாமையின் ஒட்டு மொத்த உணர்வாக அது மாறிக்கொண்டிருந்தது. கடவுளால் தான் கைவிடப்பட்டு விட்டதான ஒரு மனநிலையும் இனி என்னவும் நடக்கலாம் என்கிற அவநம்பிக்கையும் ஒன்றுசேர அவள் திடீரென தன் தங்கையை இறுகக் கட்டிக்கொண்டு அழத்தொடங்கினாள். ஒரு குழந்தையைப் போன்ற அவளது மேனியெங்கிலும் பரவிக்கொண்டிருந்த நடுக்கம் இவளையும் பற்றிக் கொள்ள மௌனமான, உள்நோக்கியதொரு கேவல் இருவரிடமிருந்தும் எழத் தொடங்கியது. மருத்துவச்சியின் கடினமான உரமேறிய கைகள் ஆமினாவின் தோளைப் பற்றி பலவந்தமாக இழுத்த பிறகு தன்நிலை உணர்ந்தவள், "பயப்படாதேம்மா, ஒண்ணும் இல்ல நான் ஏதோ ஒரு ஞாபகத்துல அழுதேன். இனி உனக்கு ஒண்ணும் இல்ல. எல்லாப்பிரச்னையும் முடிஞ்சுடும் என்னம்மா" என்று தங்கையின் முகத்தைத் தன் புடவைத் தலைப்பால் துடைத்துவிட்டு அவளை தைரியப்படுத்த முயற்சித்தாள். அது எத்தனை செயற்கையாகவும் கேலிக்கூத்தாகவுமிருந்தது என்பதை அங்கிருந்தவர்களால் உணர்ந்துகொள்ள முடிந்தது. "சரி சரி நேரமாச்சு இல்ல, நான் எப்பொ முடிச்சிட்டு போறது" என்று மருத்துவச்சி அவசரப்படுத்தவும் அவர்கள் அவ்விடத்திலிருந்து விலகிக்கொள்ளத் தொடங்கையில், மைமூன் கூப்பிட்டாள் "அக்கா நீ மட்டும் ஏங்கூட இருக்கமாட்டியா" என்ற கெஞ்சலுடன். "இல்லம்மா நான் உன்கூடத்தான் இருக்கப்போறேன்" என்று அவள் கைகளைத் தன் கைகளுக்குள் எடுத்து வைத்துக்கொண்டாள் ஆமினா.

அடுத்த சில மணி நேரத்தில் மருந்து வைத்ததால் ஏற்பட்ட வேதனையில் அவள் துடித்ததும் அவளைக் கத்தவிடாமல் இவர்கள் நால்வருமாக மடக்கிப் பிடித்ததும் விடிய விடிய தொடர்ந்துகொண்டிருந்தது. அந்நேரத்தின் நினைவுகள் கொடியதாக, நரக வேதனையாக, பிறகு எவ்வளவோ நாட்கள் ஆமினாவைத் துன்புறுத்தியிருக்கிறது. ரத்தத்திட்டாக, சிதைந்து வெளியேறிய அச்சிசுவின் உயிரோடு மைமூனின் உயிரும் அடங்கிப்போய்விட மறுநாளில் காந்தியின் படுகொலை வெளிஉலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கையில், மைமூனின் மரணம் அந்த ஊரை பதறி எழச்செய்திருந்தது. ஆமினாவுக்குத் துக்கம் தொண்டையை அடைக்கக் கடுமையான வலி உண்டாயிற்று. தலையணை நனைந்துகிடக்க எழுந்து உட்கார்ந்தாள். தன் நினைவுகளால் நெடுந்தொலைவு பயணித்துவிட்டு மீண்டிருந்தது அசதியாக இருந்தது. விடியத் தொடங்கியாயிற்று என்பதை சேவல் கூவும் ஒலியும், பாங்கு சொல்லும் ஓசையும் உணர்த்திற்று. பக்கத்தில் படுத்திருந்த பிர்தவ்ஸின் முகத்தைப் பார்த்தாள். தன் அம்மாவைப் போன்ற அழகும் தங்கையின் பிடிவாதமும் அவளிடம் ஒன்று சேர்ந்திருப்பதாகத் தோன்றிற்று, அவளைப் போலவே இவளும் தன் கணவனை விலக்கி விட்டுத் திரும்பியிருக்கிறாள் என்பது நினைவுக்கு வந்து கடும் வெறுப்பு அவளுக்குள் மண்ட, கையூன்றி எழுந்தாள் தொழுக நேரமாகிவிட்டதை நினைத்தபடி.

தொடரும்

nantri - Ulagathamizh

Sunday, June 27, 2004

இரண்டாம் ஜாமங்களின் கதை - 4

சல்மா

சொஹ்ராவுக்குத் தன்னை ஒரு அப்பாவியாக எல்லோரும் நம்பிக்கொண்டிருப்பதை நினைத்து ரொம்பவும் ஆசுவாசமாக இருந்தது. தனது பெரும்பாலான உணர்ச்சிகளைத் தனக்குள்ளாகப் புதைத்து வைத்துக்கொள்ளவும், யாரும் தன்னைக் கிளறிவிடாமல் இருக்கவும் இந்த பிம்பம் அவளுக்குத் துணையாக இருந்தது. எப்பொழுதுமே அவள் தனது மனத்திலுள்ள எண்ணங்களை எளிதில் யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டாள். பிர்தவ்ஸைப்போல. பிர்தவ்ஸ் எதையும் உடனுக்குடன் போட்டு உடைப்பது போல வெளிப்படுத்திவிடுவாள். அதனால்தானே தனது வாழ்க்கையையும் இப்படி சீரழித்துக் கொண்டாள். யாரிடம் பகிர்ந்து என்னவாகப் போகிறது என்று நினைத்துத் தன் மனத்திற்குள் வைத்துக்கொள்வாள் எதையுமே.

தந்தை இஸ்மாயிலின் மவுத்திற்குப் பிறகும் நன்றாக இருந்த தன் குடும்பத்திடம் தனது திருமணத்திற்குப் பிறகு தன் கணவனால் நிகழ்ந்துகொண்டிருந்த அத்துமீறலான ஊடுருவல் குறித்து அவளுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லாமல்போயிற்று. தனது தாயும் தங்கையும் மென்று விழுங்கிக்கொண்டிருக்கும் வேதனை புரிந்தாலும், தன்னைக் கட்டிப்போட்டிருந்த இயலாமை அவளைச் செயலற்றவளாக ஆக்கியிருந்தது. அக்குடும்பத்திற்கென ஒரு பொறுப்பான ஆண்துணை இல்லாததால்தான் தன் கணவனிடமிருந்து அவர்களை விலக்கவோ, அவனது உதவிகளை மறுக்கவோ இயலாத நிலை உருவாகியிருந்தது. பிர்தவ்ஸ§க்கு மாப்பிள்ளை பார்த்தது, திருமணம் முடிந்தது, சீர் செய்தது என்றெல்லாம் நிறையக் கடமைகளும் செலவும் இருந்தன. இதையெல்லாம் வேறு யார் பார்க்கப்போகிறார்கள் இவனை விட்டால்? அதே சமயம் அவனிடம் எவ்வளவு நாள் அழுதிருக்கிறாள்: "நீங்க அங்கெ போய் வர்றது நல்லாவா இருக்கும்?", "தகப்பனில்லாத பிள்ளைக்குத் தகப்பனா இருக்கக்கூடாதா?", "வெளியில் தெரிந்தால் யார் அவளைக் கல்யாணம் செய்ய வருவாங்க" என்றெல்லாம்.

அவன் எதைத்தான் காதில் வாங்கியிருக்கிறான்! "நீயும் உன்னோட அம்மா வீட்டுல போய் இருந்துக்கறதா இருந்தா எனக்கு சரிதான்!’" என்று அலட்சியமாகச் சொல்லிவிடுவான்.

ஆனால் இவள் தனக்கு எதுவுமே தெரியாத மாதிரித்தான் தங்கையிடமும் தாயிடமும் இருந்து கொண்டிருந்தாள். நடந்து முடிந்த இந்தத் திருமணத்தின் சகல நோக்கங்களையும் இவளும் அறிவாள். இந்த மாப்பிள்ளையை முடிக்க இவள் ஒத்துக்கொள்ளவேயில்லை. கொஞ்சமாவது பொருத்தம் வேண்டாமா என்று அழுது தவித்துப்பார்த்தாள். "உங்க குடும்ப நிலைமைக்கு இவன் ஒத்துக்கிட்டதே பெரிய சங்கதி. உன் வேலையைப் பார். பொருத்தம் பாக்குறாளாம். பொருத்தம்" என்று சொல்லி விட்டான்.

பெண்ணாகப் பிறந்துவிட்ட பிறகு தன் சொல்லுக்கு யாரும் இங்கே மதிப்பு வைக்கப்போவதில்லை என்ற நிலையில் அவள் மௌனமாக இருக்க வேண்டியதாயிற்று. அதன்பிறகு நடந்தவை எல்லாம் அவசர கதியில் நடந்து முடிய, சொஹ்ரா ரொம்பவுமே மனம் ஒடுங்கிப்போய்விட்டாள் என்பதே உண்மை.

அந்த மாலை நேரம் கடுமையான வெப்பத்தைக் கொண்டதாயிருந்தது. பள்ளியிலிருந்து திரும்பிய ராபியாவுக்கு மற்றெந்த நாளையும்விட இன்று மிக முக்கியமானதாக இருந்தது. எல்லாப் பிள்ளைகளுக்கும்தான். ஏன் பெரியவர்களுக்கும் அப்படித்தான். இன்னும் சிறிது நேரத்தில் இருள் கவியத் தொடங்கிவிடும். அப்பொழுதுதான் வானில் ரமலான் பிறை தோன்றும். அதன் பிறகு அடுத்த ஒருமாத காலத்திற்கு ஒரே கொண்டாட்டம்தான். இந்த ரமலான் மாதத்தில் செத்துப்போவதற்கும் கூட கொடுத்துவைத்திருக்க வேண்டுமாம். நேரடி சொர்க்கம் நிச்சயமாம். இதெல்லாம் அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறாள். அதோடு தினமும் வீடுகளில் தின்பதற்குத் தீனி நிறையக் கிடைக்கும். இவையெல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் இம்மாதத்தில் அல்லா பேய்களை வானத்தில் கட்டிப்போட்டு வைத்துவிடுவான் என்பதுதான். குழந்தைகளுக்கு இதைவிட சந்தோஷம் தரும் விஷயம் வேறெதுவும் இருக்க முடியாது இல்லையா?

சாயங்காலத்திலிருந்தே அவளும் மதினாவும் இன்னும் சில பிள்ளைகளுமாக அவளது வீட்டுக்கருகிலிருந்த காலியிடத்தில் ஆளுக்கொரு கல்லைத் தூக்கிப்போட்டுக்கொண்டு அதில் குத்தவைத்து உட்கார்ந்திருந்தார்கள். ராபியாவின் கெண்டைக்காலில் கொசுக்கடிக்க ஆரம்பிக்க, பல்லைக் கடித்தபடி சொறிந்துகொண்டிருந்தவாறு மதினா கேட்டாள், "ஏன் ராபியா இன்னிக்கு அவசியம் பிறை வருமில்ல" என்று. அவளுக்கு ஏதோ சந்தேகமாக இருந்தது. அது தங்களை ஏமாற்றிவிடுமோ என்று. அவளது நீளமான முகத்தில் ஏமாற்றத்தின் சாயல் படர்ந்திருந்ததைக் கவனித்த ராபியா அவளுக்காகவேனும் இன்றே பிறை தெரிந்துவிட வேண்டும் என விரும்பினாள். அவளது முக வாட்டத்தைத் தற்சமயத்திற்காவது போக்க வேண்டுமென்கிற நினைப்பில், "வரும், கட்டாயம் வரும்" என்றவள், "அப்படித் தெரியலைன்னாலும் கூட சிலோன் ரேடியாவுல சொல்வாங்க இல்ல" என்றாள். ஆறுதல் சொல்கிற தோரணையோடு.

"ஆமா உங்க வீட்டுல மாவு இடிச்சாச்சா?" என்று கேட்டாள் மதினா. "உம் இடிச்சாச்சே. உங்க வீட்டுல இடிச்சதுக்கு மறுநாள் அதைக்கூட மறந்துட்டியா" வியப்பு மேலிடக் கேட்டாள் ராபியா.

"அடடா, மறந்தேபோயிட்டேன் பாரு" என்று தன் நெற்றியில் லேசாகத் தட்டிக்கொண்டாள் மதினா.

அதன்பிறகு அவர்கள் மௌனமாக இருந்து வானத்தைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். ராபியாவுக்கு மாவு இடிப்பது பற்றி ஞாபகம் வந்தது. ரம்ஜான் துவங்க ஒருமாதம் முன்பே அதற்கு முன்னேற்பாடாக வீடுகளில் மாவு இடிக்கத் துவங்கிவிடுவார்கள்.

ராபியாவுக்கு ரொம்பவே கொண்டாட்டமாக இருக்கும். அந்த வேலை உண்டு பண்ணுகிற பண்டிகை ஞாபகங்கள் இவளுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும். முன்னாடியே அம்மாவும் பெரியம்மாவும் நெல் அரைக்க ஏற்பாடு செய்வார்கள். முதலில் ஆள்விட்டு நெல்லைப் புடைப்பார்கள். பிறகு அதை அரைத்து வரும்படி செய்து, தேவையான அளவு மாவுக்கு எடுத்துக்கொண்டு, மீதியை மறுபடி மிஷினில் கொடுத்து இரண்டாக உடைத்து வர அனுப்புவார்கள். அதை நோன்புக் கஞ்சிக்கென ஒதுக்கி வைத்துவிடுவார்கள். முதல் நாளிலிருந்தே ராபியா பக்கத்து வீடுகளுக்குச் சென்று உலக்கைகள், மாவு சல்லடைகள் உட்காரும் பலகை, மாவு வறுக்கும் ஓடு எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்ப்பாள். ஒவ்வொன்றிலும் பத்து, பத்து வேண்டியிருக்கும். மறுநாள் அதிகாலையிலேயே பண்ணையார் முதல் நாளே சொல்லி வைத்திருந்து வரச்சொல்லியிருந்த கூலிப்பெண்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள். அம்மாவும் பெரியம்மாவும் காலை மூன்று மணிக்கே எழுந்து அரிசியை அண்டாக்களில் கொட்டிக் களைய ஆரம்பிப்பார்கள். களைந்த அரிசியை நீர் வடிய கூடைகளில் அள்ளிப் போட்டுவிட்டு கழனித் தண்ணியை மாடுகளுக்கென்று குழுதாடியில் நிரப்பிவிட்டு மறுபடி மறுபடி அரிசி வெள்ளை வெளேரென மாறும்வரை களைந்து ஊறவைத்துவிடுவார்கள்.

றைமா பெரியம்மா, "ராபியா மாதிரி அரிசி பளீர் வெள்ளையா மாறணும்" என்று சொல்லி சிரிப்பாள். இவளுக்குப் பெரியம்மா சும்மா தனக்காகச் சொல்கிறாள் எனத் தோன்றும். இரவெல்லாம் அம்மாவைத் தூங்கவிடாமல் ராபியா கெஞ்சிக்கொண்டிருப்பாள். அரிசி களைய எழுந்திருக்கும்பொழுது தன்னையும் எழுப்பிவிடச் சொல்லி. அம்மா ஒத்துக்கொள்ள மாட்டாள். காலையில மூணு மணிக்கி எந்திரிச்சு என்ன செய்யப்போறே நீ என்று. அவளை றைமா பெரியம்மாதான் எழுப்பி விடுவாள்.

அதிகாலை ஐந்து மணிக்குப் பக்கத்து ஊர்களிலிருந்து கூலிக்கு வரும் பெண்கள் வெயில் வரும் முன் உலக்கையால் அரிசியைக் குத்த ஆரம்பிப்பார்கள். வீடெல்லாம் அதிரும். மூச்சை தம் பிடித்து நான்கு நான்கு பேராக இடிக்கத் துவங்க, மற்றவர்கள் சலிக்க ஆரம்பிப்பார்கள். சலித்த பச்சை மாவை முற்றத்தில் வெயில் இல்லாத இடத்தில் அடுப்பு மூட்டி ஒருத்தி வறுப்பாள். பிறகு வறுத்த மாவை அடுப்படிக்குள் பாயில் கொட்டி ஆறவைப்பார்கள். வீடே போர்க்களமாக மாறியிருக்கும். புகையும் தூசியும் கண்ணைப் பிழிந்தெடுக்க, வீட்டுக்குள்ளேயே ஓடிக்கொண்டிருப்பாள் ராபியா, பச்சை மாவை அள்ளித் தின்றுகொண்டு. வயித்துக்குப் பச்சை மாவு ஒத்துக்கொள்ளாது என்று அம்மா அவளை அதட்டியதும், வறுத்த மாவைத் தின்றுகொண்டிருப்பாள். வீட்டில் ஒவ்வொருவருக்கும் செய்ய ஒரு வேலை இருந்து கொண்டேயிருக்கும். அத்தனை கூலிப் பெண்களுக்கு மத்தியில் மாவு இடிக்கவரும் ஒரே ஆண் சாத்தப்பன் மட்டும்தான். அவனைப் பார்த்தால் பெண் மாதிரிதான் தெரியும் இவளுக்கு. தனது உடம்பைப் பெண்ணைப் போலவே அசைத்து மாவு இடித்தபடி இடையிடையே பாட்டுப்படித்து ஆடிக்காட்டி எல்லோருக்கும் உற்சாக மூட்டுவான்.

சாயங்காலம்வரை நடந்துகொண்டிருக்கும் வேலைகளுக்கிடையில் அதிரசம் சுடுவதற்காக மாவு கிண்டத் தயார் செய்வார்கள். அம்மாவும் பெரியம்மாவும். நோன்பில் ஆடிப்போகும் பாக்கிஹாவுக்கு அதிரசமும் வைத்து ஓதவேண்டும். வெல்லம் போட்ட அதிரசமாவும் சீனி போட்ட அதிரசமாவும் தனித்னியே கிண்டி, வேடு கட்டி அறைக்குள் வைப்பார்கள். சூடாக அதிரச மாவு தின்பதற்கு இவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். அதற்கும் அம்மா அதட்டுவாள், சீக்கிரம் உக்காரப்போறே என்று. வீடெங்கும் மாவுத்தூசியால் நிறைந்து போயிருக்கும் இவளும் மாவு இடிக்க வந்த பெண்களும் பெரியம்மா, அம்மா அத்தனை பேருடைய உருவமும் பார்க்கையிலேயே சிரிப்பு பொங்கும் இவளுக்கு.

தலைமுடி உடம்பெல்லாம் மாவு பூசி பூச்சாண்டியைப் போல இருக்கும். எவ்வளவு தட்டி விட்டாலும் தலைமுடி நரைத்தது போலிருப்பது போகாது. இக்கோலத்தோடு தெருவில் போய் தன்னைத் தன்தோழிகளிடம் காட்ட ஆசைதான் என்றாலும் அன்றைய நாள் முழுக்க வீட்டுக் கதவு பூட்டப்பட்டே இருக்கும், வெளியாட்கள் உள்ளே வர முடியாதபடிக்கு. அம்மா சொல்வாள் "யாராவது இத்தனை மாவு காயிறதைப் பார்த்தால் திருஷ்டி வெச்சிடுவாங்க" என்று.

அதன் பிறகு வீடெல்லாம் கழுவி முடித்து அவர்களுக்குக் கூலியைக் கொடுத்து அனுப்பிவிட்டு இவர்களும் குளித்து முடிக்க இரவாகிவிடும். அன்று மட்டும் அத்தாவும் பெரியத்தாவும் சாப்பிட வீட்டுக்கு வராமல் கடையிலிருந்துகொண்டு கேட்டு அனுப்புவார்கள். இரவெல்லாம் கால் வலி தாங்காமல் அம்மாவும் பெரியம்மாவும் முனகிக்கொண்டிருப்பார்கள். இவளுக்குக் கஷ்டமாக இருக்கும். "எதுக்காக இவ்வளவு பாடுபட்டு மாவு இடிக்கணும்" என்று அம்மாவிடம் கேட்பாள்.

"நோன்பு திறந்திட்டு ஆம்பளைங்களுக்கு சாப்பிட இடியாப்பம் சுடணும் இல்லெ அதுக்காகத்தான்" என்பாள் அம்மா.

ரம்ஜான் மாதம் ஆரம்பமாவதற்கு முதல் மாதத்திலேயே அனேகமாக ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மாவு இடிக்கும் ஓசை ஒருவித ராகத்துடன் ஊரெங்கும் சுற்றிச் சுற்றி ஒலித்தபடி இருக்கும், ரம்ஜானை வரவேற்கத் தயாராக.

அவர்கள் நெடுநேரமாகவே வானை அண்ணாந்து பார்த்து சோர்ந்து போய்விட்டார்கள். பிறை தெரிந்தவுடன்தான் சஹருக்கான ஏற்பாடுகளில் இறங்க வேண்டும். வீட்டில் சமைக்க ஆரம்பிக்க, இவள்தான் கடைக்குப் போய் வாழைப்பழமும் முட்டையும் வாங்கி வர வேண்டும், சஹருக்காக.

ராபியா அலுப்புடனும் வருத்தத்துடனும் எழுந்துகொண்டு பாவாடையின் பின்புறத்தைத் தட்டி மணலை உதிரச் செய்தாள். "நான் சாப்பிடப்போறேன், பசிக்குது" என்று மதினாவிடம் சொன்னபடி நடக்க ஆரம்பித்தாள். "அப்ப பிறை வந்த விபரம் ரேடியோவுல கேட்டு சொல்லுவ இல்ல" - பின்னாடியிருந்து கத்தினாள் மதினா.

அவள் தன்னிடம் மதிப்பு வைத்துக் கேட்டது ராபியாவுக்குத் தாங்க முடியாத சந்தோஷத்தை உண்டாக்க, மற்ற பிள்ளைகளுக்கு மத்தியில் தான் ஒரு முக்கியமான ஆளாக இருப்பதுபோல உணர்ந்தாள். அதுவும் பக்கத்தில் அஹமது வேறு இருந்தான்.

"ஓ, சொல்றேன்" என்றாள் கர்வமாக. அஹமது தன்பாட்டுக்கு இருக்காமல், "நீ என்ன சொல்றது. இன்னும் கொஞ்ச நேரத்துல பள்ளிவாசல் மைக்குல மோதினார் பாவா சொல்லிருவாருல்ல, சும்மா எம்முன்னால பீத்திக்கிறான்" என்று.

மதினாவுக்கும், ராபியாவுக்கும் அவன் பேச்சு கடும் கோபத்தை உண்டுபண்ணினாலும் பதில் சொல்லாமல் வீட்டை நோக்கிப் போகத் துவங்கினார்கள்.

முதல் நோன்பு என்பதால் ராபியாவும் மதினாவும் நோன்பு வைத்திருந்தார்கள். அவர்களால் முப்பது நோன்பும் வைக்க முடியாது என்பதால், முதலாவது பதினைந்தாவது, இருபத்தி ஏழாவது, முப்பதாவது என்று விசேஷமான நோன்புகளைத்தான் வீட்டில் வைக்க அனுமதிப்பார்கள். காலையில் சாப்பிடும் வேலையும் இல்லை மதரஸாவும் இல்லை என்பதால் அவர்களிருவரும் சீக்கிரமாகவே ஸ்கூலுக்கு வந்துவிட்டார்கள், உமா இனிமேல்தான் வருவாள். பள்ளிக்கு இன்னும் ஒரு ஆசிரியர்கூட வந்திருக்கவில்லை. பள்ளியே வெறிச்சோடிக் கிடந்தது. வகுப்பறைக்கு வெளியில் பின்புறமாக இருந்த மாமர நிழலில் இருவரும் நின்றுகொண்டிருந்தார்கள். தரையோடு தாழ்ந்திருந்த கிளையில் தாவி ஏறி உட்கார்ந்த ராபியாவுக்கு, அம்மா இதைப் பார்த்தால் என்ன சொல்வாள் என்பது ஞாபகத்துக்கு வந்து சிரிப்புண்டாக்கியது. தனக்குள் சிரித்தபடி தான் அணிந்திருந்த பச்சை நிற சீருடையின் பின்பகுதியை லேசாகக் கை வைத்து அழுத்திப்பார்த்தாள். பிறகு மன நிம்மதியோடு கையை எடுத்து மரக்கிளையின் மீது வைத்து அதனை மெதுவாக ஆட்டிவிட்டுக்கொண்டாள். இவளைத் தொடர்ந்து மரக்கிளையில் ஏறி உட்கார்ந்த மதினா இவளது செயலின் அர்த்தம் புரியாமல் ராபியாவின் முகத்தை உற்றுப் பார்த்தாள். அவளது வட்ட முகம் ஏதோ கவலையினால் இருப்பது போலத் தோன்றிற்று.

"ஏன் ராபியா, இன்னைக்கு உங்க வீட்டுல ஸஹருக்கு என்ன சாப்பாடு?" என்றாள் மதினா.

சிறிது நேரம் யோசனை செய்வது போலிருந்துவிட்டு, "முதல் ஸஹருல்ல? அதனால பருப்பானமும். கறியும்தான்" என்றவள், "உங்க வீட்டுல" என்றாள்.

"எங்க வீட்டுலயும்தான்" என்ற மதினா, "நீ எத்தினி மணிக்கு எந்திரிச்சே சாஹர் நேரம்?" என்றாள்.

"நான் மூணுமணிக்கே எந்திரிச்சிட்டேன் தெரியுமா" என்றாள் ராபியா பெருமையாக. "சஹர் பொஸார நீ பாக்கலையா என்ன?" என்றாள்.

"ப்சி, நான் நாலுமணிக்குத்தான்" என்றாள் வருத்தத்துடன் மதினா. "ஆமா அப்பவே முழிச்சு என்ன செய்வியாம்?"

"எங்க அம்மா இரண்டரை மணிக்கே அலாரம் வச்சு எழுந்திரிச்சுருவாங்க, அந்த சத்தத்துல நானும் எழுந்திரிச்சிருவேன் இல்ல."

"அப்பவே எழுந்திரிச்சு உங்கம்மா என்ன செய்வாங்க?" கண்களை அகலத் திறந்து ஆச்சர்யமாகக் கேட்டாள் மதினா.

"அப்ப எழுந்தாத்தானே சரியா இருக்கும்? முதல்ல அடுப்பு மூட்டி சோறு ஆக்குவாங்க. சோறு வேகுறப்போ ஏலுச் செய்துட்டு தஜஜ்ஜத் தொழுவாங்க. அப்புறம் மத்த வேலைகளப் பாக்கறதுக்குள்ள நாலு மணி ஆயிரும் இல்ல" என்று தான் பார்த்தவற்றைப் பெரிய மனுஷத்தன்மையுடன் விவரித்தாள் ராபியா.

கொஞ்ச நேரம் இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. மதினாவுக்கு ஆதங்கமாக இருந்தது, சஹர் முஸாபரைப் பார்க்க முடியவில்லையே என்று. காற்று இதமாக வீசியது. மாமரத்திலிருந்து பூக்கள் உதிர்ந்து தரையில் விழுவதைக் கவனித்துக்கொண்டிருந்த ராபியா திடீரென நினைவு வந்ததுபோல, "ஆமா நீ வீட்டுப்பாடம் எழுதிட்டியா?" என்றாள்.

"இல்லை" அலட்சியமாக பதில் சொன்னாள் மதினா.

"ஏன், சார் அடிக்க மாட்டாங்க?" தன் பயத்தை வெளிப்படுத்தினாள் ராபியா.

"நான்தான் நோன்பு வச்சிருக்கேன் இல்ல, சார் அடிக்க மாட்டாங்களே" என்ற மதினா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிக்க அவளோடு சேர்ந்துகொண்டாள் ராபியாவும்.

ரம்ஜான் மாதத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் சிறு சலுகை ஆசிரியர்கள் யாரும் அடிக்கமாட்டார்கள் என்பதுதான். அந்தப் பெருமை எல்லாக் குழந்தைகளுக்குமே உண்டு.

மதினாவின் தலையில் செல்லமாகக் குட்டிய ராபியா, "நீ சரியான ஆளு" என்றவளின் குரலில், தான் மட்டும் வீட்டுப்பாடத்தைக் கை வலிக்க எழுதி விட்டோமே என்கிற ஆதங்கம் நிறையவே இருந்தது.

- தொடரும்

nantri - Ulagathamizh

இரண்டாம் ஜாமங்களின் கதை - 5

சல்மா

நடு இரவில் திடுக்கிட்டுக் கண் விழத்தாள் ஆமினா. அவளது கை அவளையறியாமலேயே அருகில் பாயைத் துழாவிற்று. பிர்தவ்ஸின் கதகதப்பான உடல் கையில் தட்டுப்பட்டவுடன் நிம்மதியடைந்தவள் ‘துவோய் யா அல்லாஹ்’ என முனகினாள். பிர்தவ்ஸை இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படி வயிற்றுக்குள் போட்டுப் படுத்திருக்கப் போகிறோமோ என்கிற நினைவு எழுந்து, பெரும் துக்கமாக மாறி தொண்டையை அடைத்தது. சொஹ்ராவின் கணவன் கரீமிடமிருந்து அவளைப் பாதுகாத்த காலம் போய், இன்று மனசொடிந்த நிலையில் என்னமும் செய்துகொண்டு உயிரைப் போக்கிக்கொள்வாளோ என்கிற பயம் ஆமினாவை தூங்க விடாமல் செய்துகொண்டிருந்தது.

அவளுக்குத் தன் திருமணம் நடந்த விதமும் தன் தாய், தந்தை, தங்கை ஞாபகமும் ஏனோ வந்தது. தன் தந்தை கனி ராவுத்தர் நிறம் தொட்டுப் பொட்டு வைத்துக்கொள்ளலாம் போலக் கறுப்பு. அம்மாதான் எத்தனை வெண்மையாக அழகாக இருப்பாள். அவள் ஒரு அறைக்குள் உட்கார்ந்திருந்தாள் என்றால் ஒரு மின்னல் கீற்று உள்ளேயிருப்பது போல பிரகாசமாக இருக்கும். விளக்காங் குழியிலிருக்கும் சிம்னி விளக்கின் ஒளியில் அவள் நிறம் தகதகப்பதுபோல இருக்கும். அம்மாவுக்கும் அத்தாவுக்கும் எப்போதாவது சண்டை வந்திருக்குமாவென ஞாபகப்படுத்திப்பார்த்தாலும் நினைவுக்குள் அப்படி ஒரு விஷயமே நிகழ்ந்ததில்லை என்றுதான் இருந்தது.

கனி ராவுத்தர் தனது வியாபாரத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பினாரென்றால் ஏதோ ஆர்ப்பாட்டமாகத்தானிருக்கும். தான் கொண்டு வந்த பணத்தினை வைத்து தடபுடலாகச் செலவு செய்து ஊரைக் கலக்கிக்கொண்டிருப்பார். ஒரே நேரத்தில் கறிக்கார நைனார் கடையில் போய் நான்கு ஆட்டுத் தலையை வாங்கி தெருவில் அனைவரும் பார்க்கும்படி இரண்டு கைகளிலும் இரண்டிரண்டாகக் காதைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு வருவார். தெருப் பெண்கள் பேசிக்கொள்வார்கள், "இவருக்கு எதுக்கு இத்தினி பவுசு" என்று.

பொழுதுபோகாத நேரத்தில் பஞ்சாயத்துக் கல்லில் அமர்ந்து சீட்டாடத் தொடங்குவார். அப்படிச் சீட்டாடும் பொழுதுதான் இஸ்மாயிலும்கூட வந்து ஆடத் துவங்கியதும். ஒரு நாள் விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்த இஸ்மாயில் கனியிடம் "பணம் வெச்சு விளையாடப் புடிக்கலே மாமு, எங்கிட்டே இல்லாததா" என்று சொல்லி எழுந்திருக்க.

"பிறகு என்ன வச்சு வெளையாட மாப்பிள்ளை சொல்லு" என்று குஷியாக ராவுத்தர் கேட்க.

"உங்க பொண்ணை வச்சு ஆடலாம். நான் ஜெயிச்சா அவளைக் கட்டிக்கிர்றேன்" என்று இஸ்மாயில் சொல்ல அவரும் உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

"உனக்குப் பொண்ணுக் குடுக்க எனக்குக் கசக்குதா. இருந்தாலும் வெளையாடிப் பாத்துடுவோம்" என்று ஆட்டத்தை ஆரம்பிக்க அன்று மாலை ஆமினா பள்ளியிலிருந்து திரும்பிய பிறகு, ஒரே சந்தோஷமும் பாட்டுமாக வந்தவர், தெருவில் நின்று எதையோ சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆமினாவை "ஏண்டி பொண்ணு இங்கனெ வா" என்று கூப்பிட்டார். குடுகுடுவென ஓடிவந்து அவர் மடியில் உட்கார்ந்து கொண்டு என்ன என்கிற மாதிரி அவர் முகத்தை நிமிந்து பார்த்தாள்.

"ஏய் கத்துஜா, வா இங்கே" என்று உற்சாகமாகக் கூப்பிட்டவர். உம் மகளுக்குக் கல்யாணம் பேசிட்டு வந்திருக்கேன் ஓடி வா" என்று அடுப்படியை நோக்கி தலையை எட்டிப் பார்த்துவிட்டுத் தன் மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டார்.

அறைகுறையாகக் காதில் விழுந்த விஷயத்தைத் தெளிவாக்கிக்கொள்ளும் பொருட்டு தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்தாள் கத்துஜா. அவளுக்கு சிறு வயதில் காலில் அம்மி விழுந்து நைத்து விட்டதால், நடை நேராக வராது. இழுத்து வைத்துத்தான் நடப்பாள்.

அவரது அருகில் வந்தவள் தரையில் விரித்திருந்த தடுக்கில் அமர்ந்தபடி, "என்ன சொன்னீங்க" என்றாள் ஆர்வமாக.

"பெரிய வீட்டு இஸ்மாயில் இல்ல. அவன் ஒம் பொண்ணை கட்டிக்குடுன்னு கேட்டான். சரி கட்டிக்கடான்னு சொல்லிட்டேன்" என்று சொல்லி சத்தம்போட்டு சிரித்தார், எப்படி என் சாமர்த்தியம் என்பதுபோல.

அவர் எதிர்பார்த்தபடி கத்திஜாவின் முகத்தில் பெரிய சந்தோஷம் எதுவும் தோன்றாதது அவருக்கு ஏமாற்றமாக இருக்க அதனை மறைத்துக்கொண்டபடி, "ஏன் ஒண்ணும் சொல்ல மாட்டிகளோ" எனக் கிண்டலாகக் கேட்டு அவளைக் கூர்ந்து நோக்கினார்.

"அதுக்கில்லேங்க" என்றவள் "இவளுக்கு இப்போதான் பத்து வயசு முடிஞ்சிருக்கு, என்ன அவசரம்னுதான். அந்த இஸ்மாயிலும்கூட மொதத் தாரம் கட்டி இழந்து வயசும் முப்பதத் தாண்டிக் கெடக்குமுல்ல" என்று தயக்கத்துடன் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியவள், அவரது பதிலை எதிர் நோக்கி உட்கார்ந்திருந்தாள்.

"இம்புட்டுத்தானாக்கும். நான்கூட என்னவோ ஏதோன்னுல்ல நெனைச்சேன். போடி போ. இதெல்லாம் ஒரு காரணமா?" என்றவர் "ஊர் உலகத்துல இல்லாததச் செய்ற மாதிரியில்ல சலிச்சுக்கிர்ற. நான் வாக்குக் குடுத்தாச்சு. அடுத்த வாரத்துல ஜிம்மாவுல நிக்கா" என்று சொல்லிவிட்டு "சரி சரி, போய் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணி வெச்சுக் குடு" என்று சொல்லியவாறே துண்டை உதறித் தோளில் சுற்றிப் போட்டபடி மிடுக்காக நடந்து திண்ணைக்குப் போனார்.

அடுத்த சில நாட்களில் திருமணம் நடந்தபொழுது ஆமினாவுக்கு அது பற்றிய எந்த புரிதலும் இல்லை. ஊரெல்லாம் ஆச்சரியப்படும் விதத்தில் சாப்பாடும் குதிரை ஆட்டமும் நடந்தது. கனி ராவுத்தர் புளியங்கொம்பு பார்த்துப் பிடித்ததையே ஊரெல்லாம் பேசிப் பொறாமைப்பட்டது. அதே கனி ராவுத்தர் தன் இரண்டாவது பெண் மைமூதுக்குத் தன் வியாபாரத் தொடர்புகள் மூலம் மாப்பிள்ளை பார்த்து முடித்தபிறகுதான் அவரது சந்தோஷமும் உற்சாகமும் பறிபோனது. மணமான இரண்டே மாதத்தில் வீடு வந்து சேர்ந்தாள் மைமூன். அவனோடு வாழவே மாட்டேன் என்றபடி வீட்டின் மச்சு அறையில் நெற்குதிரை ஒட்டி ஒடுங்கிப்போய் அமர்ந்திருந்த அவளிடம் ஆமினாவும் கதிஜாவும் புத்திமதி சொல்லித் திருப்பி அனுப்பிவிட எவ்வளவோ முயற்சித்தும் மன்றாடிப்பார்த்தும் அவள் அசைந்து கொடுக்கவேயில்லை. "முடியாது" என்று மட்டும் சொல்லியபடியேயிருந்தாள். சிம்னி விளக்கின் ஒளி பட்டுத் தெறித்த அவளது பிஞ்சு முகத்திலிருந்த பிடிவாதத்தையும் வைராக்கியத்தையும் இவர்களால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. யாரும் இனி இது குறித்துப் பேசக்கூடாது என்கிற கட்டளையும் அதிலிருக்கவே செய்தது.

தன் குடும்பத்திற்கு நேர்ந்த அவமானம் கதிஜாவைக் காட்டிலும் கனி ராவுத்தரை ரொம்பவே பாதித்தது. தனது சிரிப்பு, பாட்டு, கிண்டல் அனைத்தையும் மறந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்க ஆரம்பித்தார் அவர். கதிஜா அழுததெல்லாம் "நாமதான் பொட்டச்சிக வீட்டுக்குள்ள கிடக்கறோம். அவரு ஆம்பளை நாலு இடம் போக, கொள்ள, கடைத்தெரு போகக்கூட வழியில்லாமப் போயிருச்சே" என்று தான்.

கனி ராவுத்தருக்கு ஆமினாவைப் பார்க்கும் பொழுதெல்லாம் கண்ணீர் கோர்க்கும். "என் பிள்ளை," என்று தனக்குள் முனகிக்கொள்வார். தான் சொன்ன மாப்பிள்ளையை ஒரு மறுப்பும் சொல்லாமல் கட்டிக் கொண்ட தியாகியாகத்தான் அவர் அவளை நினைத்துக்கொள்வார். இப்போதெல்லாம் வெளி உலகத்திற்கோ வியாபாரத்திற்கோ போகாத நிலையில் ஆமினா இஸ்மாயில் தயவில்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. அவன் எத்தனை தங்கமானவன் என தன் மாமனை நினைத்துப் பூரித்துப்போவார். அவர் முன்பு மாதிரி வெளியில் வியாபாரத்திற்க்குப் போவதில்லை என்றாலும் ஏதோ வீட்டிலிருந்தேனும் கொஞ்சம் வருமானத்திற்க்கு வழிபார்ப்போமென நினைத்திருந்ததினால் தினமும் காலை உணவுக்குப்பின் உட்காரும் பலகையை எடுத்துப் போட்டு முற்றத்தில் அமர்ந்துகொள்வார். வெளியிலிருந்து மொத்த விலைக்கு வாங்கி வந்து வைத்திருக்கும் ஊதுபத்திக் கட்டைக் கவிழ்த்து நான்கு நான்காகப் பிரித்துக் கைகளில் எடுத்துக்கொள்வார். பிறகு தனது சிறிய மரப்பெட்டியிலிருக்கும் சென்ட் குப்பிகளை வரிசையாக எடுத்துத் தரையில் அடுக்கி பிறகு ஒவ்வொன்றாகத் திறந்து முகர்ந்து பார்த்து ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு சில துளி அத்தரை உள்ளங்கையில் விட்டு ஒன்றாக்கிக்கொள்வார். பிறகு அதை நான்கு ஊதுபத்திகளின் மீதும் மிருதுவாகத் தடவித்தடவி விடுவார். பிறகு வாசனை சரியாக இருக்கிறதாவென முகர்ந்து முகர்ந்துபார்த்துக்கொண்டிருப்பார். அவருக்கு திருப்தி வரும்பொழுது அதனை ஒரு முறத்தில் அடுக்கிவைத்து முற்றத்து வெயிலில் காயவைப்பார். நாள் முழுக்க அத்தர் பூசிய ஊதுபத்திகளை ரோஸ் வண்ண ஜரிகைக் காகிதங்களில் பத்துப் பத்தாக அடுக்கி வைத்து சுருட்டி நுனி வரை சுருட்டி மடித்து ஒரு அட்டைப் பெட்டியில் அடுக்கத் துவங்குவார். யாருடைய ஒத்தாசையையும் அவர் விரும்புவதில்லை. மிகச் சன்னமான குரலில் தனக்குள்ளாகவே ஒரு பைத்தை முணு முணுத்தபடி வேலை செய்து கொண்டிருப்பார். யாரும் இடையூறு செய்யவோ பேசவோ தயங்கும் விதத்தில் அக்குரலில் வருத்தம் தோய்ந்து நெஞ்சைப் பிழிவதாக இருக்கும். பிறகு அவரே மரப்பெட்டியில் அத்தர் பாட்டில்களை வரிசையாக அடுக்கத் துவங்குவார். ஆமினாவுக்கு அந்தப் பாட்டில்களை பார்க்கப் பார்க்க ஆசையாக இருக்கும். விதவிதமான வடிவங்களில் கலை நயமிக்கதாக இருக்கும். மூடிகளும் மிக அழகழகான வடிவத்தில் இருக்கும். நடுங்கும் தன் கரங்களில் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து இறுக அடைத்திருக்கிறதாவென சரிபார்த்து பத்திரப்படுத்துவார். ஒரு சில நாட்களில் யாரேனும் ஒரு வியாபாரி வந்து ஊதுபத்திக் கட்டுகளை பணம் கொடுத்துப் பெற்றுச் செல்வான்.

- தொடரும்

nantri - Ulagathamizh

Thursday, June 24, 2004

இரண்டாம் ஜாமங்களின் கதை - 3

சல்மா

காலையில் சீக்கிரமாகவே எழுந்துவிட்டாள் ராபியா. மதரஸாவுக்கு ஓதச் செல்ல வேண்டும் என்பதைவிட வாதா மரத்தினடியில் உதிர்ந்து கிடக்கும் பழங்களைப் பொறுக்க வேண்டும் என்கிற ஆசையில் அதிகாலையிலேயே எழுந்து கிளம்பிப் போவாள். இவளைப் போலத்தான் மற்ற பிள்ளைகளும். யார் முதலில் போவது, யார் நிறைய பழம் பொறுக்குவது என்கிற போட்டி அவர்களுக்குள் இருந்துகொண்டிருக்கும்.

வழக்கம்போல தலைக்கு ஒரு துண்டையும் குர்ஆனையும் எடுத்துக்கொண்டு கிளம்பியவளின் ஓட்டத்தை சொஹ்ராவின் குரல் தடுத்து நிறுத்த, வாசல் படியருகிலிருந்தவாறே "என்னம்மா?" என்றாள்.

"குர்ஆனைத் தொடுறதுக்கு முன்னால ஏலுச் செய்தியா?" என்று கத்தினாள் சொஹ்ரா,

"செய்தாச்சும்மா" என்று சொல்லிவிட்டுத் தெருவில் இறங்கி ஓடினாள் அவள். பள்ளிவாசலில் பஜருத் தொழுகைக்குப் பின் யாரும் இருக்கமாட்டார்கள். மோதினார் பாவா மட்டும்தான் ஏதாவது வேலைகள் செய்துகொண்டிருப்பார். அவரை ராபியாவுக்கு ரொம்பவும் பிடிக்கும். காலையில் இவள் போகும்பொழுது அவர் ஒரு பெரிய இரும்புத்தட்டில் சலித்த நைசான மணலை அள்ளித் தண்ணீர் ஊற்றிக் கரண்டியில் கலக்கிக்கொண்டிருப்பார். ராபியா அவர் பக்கத்தில் போய்க் குத்துக்காலிட்டு உட்கார்ந்துகொள்வாள்.

"மோதினார் பாவா இது எதுக்கு?" என்று கேட்பாள்.

"சொல்றேன் புள்ளை இரு" என்பார்.

இவளிடம் ஒரு குவளையைக் கொடுத்து "இந்தா போய் அவுசுல தண்ணி மெத்திக்கிட்டு வா" என்பார். இவள் ஓடிப்போய்த் தண்ணீர் கொண்டுவருவாள்.

"இப்பச் சொல்லுங்க இது எதுக்கு" என்று மறுபடி கேட்பாள்.

அவர் தனது தாடியை லேசாகச் சொறிந்துவிட்டுக்கொண்டு "அதுவந்து நீங்கள்ளாம் சுட்டிபானை வச்சு விளையாடுவீங்க இல்லெ, அதுமாதிரித்தான் நான் விளையாடுறேன். இப்பப் பாரு" என்று சொல்லிவிட்டு விளக்குமாறால் மண்தரையைச் சுத்தமாகக் கூட்டிவிட்டு, அந்த இடத்தில் கரைத்த மணலை ஒவ்வொரு கரண்டியாக இடம்விட்டு வரிசையாக இட்லியைப் போல ஊற்றுவார். அவர் பொய் சொல்கிறார் என்பது இவளுக்குத் தெரியும், அதனால் அவர் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுவாள் "பொய் சொல்லாதிங்க பாவா. தினமும் இப்பிடி மணல் இட்லி ஊத்துறிங்களே, எதுக்காக?" என்று கேட்பாள். அவள் முகத்தில் தெரியும் ஆர்வம் அவருக்குப் பரிதாபமாக இருந்தாலும் சிரித்துக்கொள்வார். அவர் சிரிக்கும்பொழுது அவரது குட்டையான தாடியும் மீசையும் கறுத்த உதடுகளுக்குள்ளிருந்து வெளித் தெரியும் பற்களும் ரொம்பவே வினோதமாக இருக்கும் இவளுக்கு.

தினமும் அவர் இப்படிச் செய்வதும் பள்ளிவாசலுக்குத் தொழுகை செய்ய வரும் ஆண்கள் அதிலொன்றைக் கையில் எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குப் போவதும் இவளுக்கும் இவளது தோழிகளுக்கும் பெரும் புதிராகவே இருக்கும். ஒரு நாள் மதரஸாவில் இவளோடு ஓதும் அஹமது கேட்டான், "ஏய் அதுக்குப் பேரு என்னன்னு தெரியுமாடி உங்களுக்கு?" என்று எகத்தாளமாகக் கேட்டான். அவனுடைய கெக்கரிப்பும் ஆர்ப்பாட்டமும் தனக்கு மிகப்பெரிய ரகசியம் ஒன்று தெரியும் என்றும் அதைக் கேட்பவர்கள் அவனிடம் கெஞ்சிக் கேட்க வேண்டும் என்றும் சொல்வதுபோலவும் இருந்தது.

மதினாவும் ராபியாவும் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள் இவனிடமிருந்து நாம் எதையும் தெரிந்துகொள்ளவே வேண்டாம் என்று. இவர்கள் அவனை அலட்சியத்துடன் விலக்குவது அவனுக்குப் பெருத்த அவமானமாக இருக்கும். "ஏண்டி உங்களுக்குத் தெரிய வேணாமா? சொல்லுங்க" என்று கண்களை உருட்டிப் பயம் காட்டினான்.

வேணாம் போடா! அஜரத்துங்ககிட்ட சொல்லிடுவோம் தெரியுமில்ல" என்று மதினா மிரட்டினாள். அதன் பிறகு ஒரு ஓரத்தில் போய் உட்கார்ந்துகொண்ட அஹமதுவுக்குத் தனக்குத் தெரிந்த விஷயத்தை இவர்களிடம் சொல்லியே ஆக வேண்டுமென நாவு துடித்தது. எவ்வளவோ தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு, பிறகு அவர்களைப் பார்த்துத் திரும்பி உட்கார்ந்துகொண்டவன், அவர்களிடம் சொன்னான்.

"அது பேரு வந்து டேலாக்கட்டி. சில மக்குப் பொண்ணுகளுக்கு இதுகூடத் தெரியலை பாவம்" என்று அவர்களிடம் சொல்லி அங்கலாய்த்துக்கொண்டான். ராபியாவும் மதினாவும் அன்று அதன் பெயரை மட்டும் காதில் வாங்கிக்கொண்டார்கள்.

ராபியாவின் தந்தை கரீம் தன் மனைவியிடம் பேசும்பொழுதெல்லாம் யாரையேனும் திட்ட நேரும்பொழுது, "அவனுடைய உறவு எனக்கு டேலாக்கட்டியாக்கும். நெனைக்கறப்போ தூக்கியெறிஞ்சிடுவேன்" என்று அடிக்கடி சொல்வார்.

மோதினார் பாவாவின் கைகள் அளவோடும் அழகாகவும் மணலை மொண்டு ஊற்றுவதைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு இன்று வாதா மரத்தினடியில் பழங்களேயில்லை என்பது கவலையாக இருந்தது.

"ஏன் பாவா இன்னிக்கு மரத்தடியில் பழங்களே இல்லை?" என்றாள் ஏமாற்றத்தோடு.

"ஏன் இல்லை. அங்கே பாரு பெரிய அஜரத்து பொறுக்கிவச்சிருக்காங்க. போய் வாங்கிக்க" என்று சொல்லிக் கைநீட்டினார். அவர் காட்டிய இடத்தில் பெரிய அஜரத் தலைப்பாகையைக் கழட்டி மடியில் வைத்துக்கொண்டு கையில் தஸ்பீஹ் மணியுடன் உட்கார்ந்திருந்தார். ராபியா சந்தோஷமாக அவரை நோக்கி ஓடினாள். தன்னை நோக்கி ஓடிவந்தவளைத் தன் கருணை மிகுந்த கண்களால் பார்த்தவர். "இங்கெ வாம்மா என்று அருகில் கூப்பிட்டார். "அஸ்ஸலாமலைக்கும் அஜரத்துங்க" என்றபடி அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டாள் அவள்.

"அலைக்கும் ஸலாம். எங்கே வந்தீங்க பழம் வாங்கத்தானே" என்றார் குறும்புச் சிரிப்புடன்.

"இல்லை சும்மாதான்" என்று சொல்லிக் கூச்சத்துடன் தலைகுனிந்துகொண்டாள் இவள்.

அவர் மெலிந்த உடலும் சுருங்கிய தோலுமாக ரொம்பவும் ஒட்டிப்போயிருந்தார் முதுகில் கூன் விழுந்திருந்தது. கண்கள் குழிக்குள் இருப்பதுபோல உள்ளே ஒடுங்கியிருந்தன. மிக நீளமான மூக்கும் நீண்ட தாடியும் அவருக்கு இருந்தன. அந்த தாடிக்குள் விரலை நுழைத்துக் கோதி விட்டுக்கொண்டிருந்தார். பிள்ளைகள் மீது அவருக்குப் பிரியம் அதிகம். பல நாட்கள் தானே பழங்களைப் பொறுக்கிவைத்துக்கொண்டு, எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து, அவர்களது சந்தோஷத்தைப் பார்த்து ரசிப்பார். வெற்றிலையை அசைபோட்டபடியிருக்கும் வாய்க்குள்ளாக ஸல்வல்லாஹ் என்றபடி தஸ்பீஹ் மணியை உருட்டியவாறு முணுமுணுத்துக்கொண்டிருப்பார். அவர் என்றால் பிள்ளைகளுக்கும்கூடப் பிரியம்தான். ஆனால் சின்ன அஜரத்தை யாருக்குமே பிடிக்காது. முக்கியமாக ராபியாவுக்கும் மதினாவுக்கும். ஓதும்பொழுது ஒரு வார்த்தை தப்பாக உச்சரித்தால் போதும், தொடையிலேயே கிள்ளுவார். அவர் தொடையைத் தொடுவது கிள்ளுவதற்காக மட்டுமில்லை என்று இவளுக்குத் தோன்றும். அவர் தன் கையில் வைத்திருக்கும் குச்சியால் பையன்களை மட்டும்தான் அடிப்பார். பொண்ணுகளைத் தொடையில்தான் கிள்ளுவார். அவரைப் பார்த்தாலே இவளுக்குக் கூச்சமாகவும் வெறுப்பாகவும் இருக்கும்.

"ராபியா இங்க வந்து எம்பக்கத்துல உக்காரு. உனக்கு நல்லா சொல்லித்தரணும்னு உங்கம்மா சொல்லியனுப்பிருச்சிருக்காங்க" என்று பக்கத்தில் வேறு உட்கார வைத்துக்கொள்வார். அவ்வப்போது இவளது கன்னத்தில் கிள்ளுவதும் தடவுவதும் உண்டு. அப்பொழுதெல்லாம் ராபியாவுக்கு அழுகை வரும். மதினாவிடம் "எனக்கு இந்த ஆள்கிட்ட ஓதப் புடிக்கவேயில்லை" என்பாள். அதற்கு "ஒனக்கு மட்டுமா, எனக்குந்தான் புடிக்கலை" என்பாள் மதினாவும்

பையன்களுக்கும் அவரைப் பிடிக்காது, நன்றாக அடிப்பார் என்பதால். அஹமது சொல்வான், "இந்த ஆள் கல்யாணமும் பண்ணலை புள்ளையும் பிறக்கலை, அப்புறம் எப்புடிப் பிள்ளைகள் மேல பாசம் இருக்கும்? காட்டுப்பய மாதிரி அடிக்கிறான்" என்று.

ராபியா அவனைக் கோபிப்பாள் "அஜரத்துங்கள அப்பிடித் திட்டாதே. நரகத்துக்குப் போயிருவே. அஜரத்துங்க அடிக்கிற எடத்திலயெல்லாம் நரகத்து நெருப்பு படாது தெரியுமில்ல" என்பாள்.

"நரகத்துக்குப் போனா சரி, சொர்க்கத்துக்கு நான் போனேன்னா, அப்ப என்ன ஆவும் இப்ப வாங்கின அடியெல்லாம்?" என்று சொல்வான்.

"போடா லூசு, உங்கிட்ட பேசுறதுக்கு" என்று அலுத்துக்கொள்வாள் ராபியா.

பள்ளிவாசலிலேயே ராபியாவுக்குப் பிடித்தமான இடம் அவுஸ்தான். தரையோடிருக்கும் பெரிய தண்ணீர்த் தொட்டி. தொழ வருபவர்கள் அந்தத் தண்ணீரில்தான் ஏலுச்செய்வார்கள். அந்தத் தொட்டியில் ஏராளமான மீன்களை வாங்கி விட்டிருப்பார்கள். தண்ணீரில் வளர்ந்து கிடக்கும் பாசிக்குள் நுழைந்துகொண்டு, பதுங்கி விளையாடும் மீன்களை மேலே வரச்செய்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பாள். காலையில் வீட்டிலிருந்து வரும்போது மறக்காமல் கொண்டுவரும் காசில் பள்ளிவாசலுக்கு வெளியே புட்டு விற்கும் பையனிடம் புட்டு வாங்கிக்கொள்வாள். அதை அவுஸின் ஒரு மூலையில் அமர்ந்து தூளாக்கி அதனுள் போடுவாள். மொத்த மீன்களும் அதைச் சாப்பிட மேலேறி வரும். ஒரே பரபரப்பும் சண்டையும் அவைகளுக்கிடையே நடக்கும். அதைப் பார்த்து ரசிப்பது அவளுக்கு அன்றாட வேலை. இதை யாரோ அவளது அம்மாவிடம் சொல்லிக்கொடுத்து அம்மா நன்றாகத் திட்டினாள்.

"உன்னைப் பள்ளிவாசலுக்கு அனுப்பறது ஓதத்தானே தவிர வெளையாட இல்லை. வயசுக்கு வர்றதுக்கு முந்தி குரானை முடிச்சிட்டா அஜரத்துங்களுக்கு வேட்டி பணம் வச்சுக் குடுக்கலாம்னு இருக்கேன். நீ இப்படி விளையாடிட்டா வர்றே" என சத்தம் போடுவாள். அதே மாதிரி பள்ளிக்குப் போகும்பொழுதும், போய்விட்டு வந்த பிறகும் "முகம் கழுவி பவுடர் போட்டுக்கொள். வயசுக்கு வர்ற வயசாகப்போகுது" என்று அறிவுறுத்துவாள்.

அன்று காலை மதரஸா நடக்கும்பொழுது பிள்ளைகள் எல்லோருக்கும் குப்பியின் மூணாம் நாள் கத்தப் பாத்திஹாவுக்காக ஒவ்வொரு ரூபாய் கொடுத்தார்கள். பிள்ளைகளுக்கு ஒரே சந்தோஷம். எதிர்பாராமல் கிடைத்த ரூபாயை எப்படியெல்லாம் செலவழிப்பது என்று மனதிற்குள் கனவு கண்டுகொண்டிருந்தார்கள். பள்ளிவாசல் எதிரிலிருக்கும் பெட்டிக் கடைக்கு முன்னால் ஒரே கூட்டம்.

மதினா ராபியாவின் காதில் கிசுகிசுத்தாள் "காசை செலவழிக்காதே" என்று. ஏன் எனப் புரியாமல் கேட்டவளிடம் "மவுத்தான வீட்டுக்காசு. அத வச்சுக்க வேணாம். அவுஸ் தண்ணிக்குள்ள போட்டுருவோம்" என்றாள் பிறகு இருவரும் காசை யாருக்கும் தெரியாமல் அவுஸ் தண்ணிக்குள் வீசினார்கள். ராபியாவுக்கு மனசே சரியில்லை. காலையில் புட்டு வாங்கியாவது மீனுக்குப் போட்டிருக்கலாமே என்று தோன்றியது. மதினா ஒன்று சொன்னால் நிச்சயம் அதற்குக் காரணம் இருக்கும் என்பதனால்தான் அவள் சொல்படி செய்தாள். மதினாவுக்கும் இவளுக்கும் இடையில் எந்த ஒளிவு மறைவும் ரகசியங்களும் இதுவரைக்கும் இருந்ததில்லை. ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. அது ராபியாவின் சித்தி பிர்தவ்ஸ், தன் கணவனிடமிருந்து தலாக் வாங்கி வீட்டிற்குத் திரும்பிவிட்டது மட்டும்தான். அதைப்பற்றி யாரிடமும் எதுவும் பேசக்கூடாது என்று அவளை அம்மா மிரட்டிவைத்திருந்தாள்.

றைமா பெரியம்மா சத்தம் போடுவாள் "இதையெல்லாம் எத்தனை நாள் மறைத்து வைக்க முடியும். இன்னைக்கு இல்லே நாளைக்கு வெளியில் வரத்தான் போகிறது. இதெல்லாம் ஒண்ணும் தெரியாத பொண்ணிடம் போய் என்ன பேச்சு பேசுற நீ" என்று.

அவர்கள் இருவரின் வாக்குவாதங்களும் எதையட்டி என்கிற விபரம் புரியாமல் ராபியா தடுமாறுவாள், ஏகப்பட்ட குழப்பங்களுடன். தலாக் என்றால் என்னவென்று யாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது என்றும் தெரியவில்லை. ஒருவேளை அஹமதுவுக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ?

nantri - Ulagathamizh

Wednesday, June 16, 2004

இரண்டாம் ஜாமங்களின் கதை - 2

"இப்பத்தான் வர்றியா ராபியா" என்றபடி அறைக்குள் எட்டிப்பார்த்த றைமா பெரியம்மாவை ஓடிப்போய்க் கட்டிக்கொண்டாள். "நாம இப்ப குப்பி வீட்டுக்கு எதுக்காகப் போறோம்" என்று அண்ணாந்து அவள் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.

"ஆமா, குப்பி மௌத்தாப் போயிட்டாங்க தெரியுமா, அதுக்காக," என்ற றைமா, "சரி சரி, நீ கௌம்பு. ஏற்கனவே ஒங்கம்மா கோபமா இருக்கா" என்றாள்.

குப்பியை ராபியாவுக்கு அவ்வளவாகப் பிடிக்காது. அதனால் அவளுக்கு விசேஷமாக ஒன்றும் தோன்றவில்லை. அவசர அவசரமாகப் பாவாடை சட்டையை பீரோவிலிருந்து உருவி எடுத்து உடுத்திக் கொண்டாள். சீப்பை எடுத்துத் தனக்குத்தானே தலைமுடியை ஒதுக்கிக்கொண்டாள். நீளமான தலைமுடி. ஈரம் காயாமல் நசநசத்தது. அம்மா பார்த்தால் நன்றாகத் திட்டுவாள் என நினைத்தபடி முடியை அறைகுறையாகப் பின்னி விட்டுக்கொண்டு ஓடிப்போய்த் தயாராக வாசல்படியை ஒட்டி நின்று கொண்டாள்.

"ராபியா!" மறுபடி அம்மா கூப்பிடும் குரல் கேட்டதும் அடுப்படிக்குள் ஓடினாள். "இந்தா, இந்த பால குடி. குடிச்சிட்டு இந்த தூக்குப் போணிய கையில எடுத்துக்க கிளம்பறதுக்கு. இந்தா நாங்களும் துப்பட்டிய போட்டுட்டு கௌம்புறோம்" என்றபடி அடுப்படியைத் தாழ்ப்பாள் போட்டாள்.

ராபியா பாலைக் குடித்துவிட்டு வாசற்படியில் போய் நின்றுகொண்டாள். மழை இன்னும் லேசாக தூறிக்கொண்டிருந்தது. எதிர் வீட்டு பரிதாக்கா ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துக் கேட்டாள். "ராபியா, எங்கெ போறிங்க? அடக்கம் பண்ணப் போறாங்களாக்கும்."

"ஆமா. குப்பி வீட்டுக்குத்தான்" என்றாள் ராபியா. வாசல்படியை ஒட்டி நிறுத்தியிருந்த காரிலிருந்து முத்து கீழே இறங்கி பரிதா வீட்டு ஜன்னலைப் பார்க்க திரும்பியதும் பரிதா விடுக்கென்று தலையை உள்ளுக்குள் இழுத்துக்கொண்டாள்.

முத்துவுக்குச் சிரிப்பு வந்தது. "ஏன் ராபியா நான் என்ன பேயா பிசாசா? ஏன் இப்படி பயந்து ஒளியுது" என்று கேட்டான். "அதெப்புடி? பரிதாக்கா வயசுக்கு வந்துட்டாங்க இல்லெ? பிறகெப்புடி ஆம்பளைங்க முகத்துல முழிப்பாங்க. அதெல்லாம் முழிக்கக்கூடாது தெரியுமா" என்றாள் பெருமை பொங்க.

அதற்குள்ளாக அம்மாவும் பெரியம்மாவும் வெளியில் வரவும், முத்து காரில் ஏறி டிரைவர் சீட்டில் உட்கார்ந்துகொள்ள, முதலில் காரில் ஏறப் போன ராபியாவிடம், "இந்தா இதைப் போட்டுக்க" என்றபடி சொஹ்ரா ஒரு தாவணியை அவள் கையில் கொடுத்தாள். இவள் அதைக் கையில் வாங்கியபடி மலங்க மலங்க விழித்தாள், இது எதுக்காக என்கிற மாதிரி.

"உஷ், நெஞ்சு தெரியுதுல்ல. மவுத்தான வீட்டுக்கு நாலு பேர் வருவாங்க. அசிங்கம் பிடிச்சாப்புல இப்படியா நிக்கப் போறே? பொண்ணா லச்சணமா இருக்க வேணாம். சொல்றத செய்யி" என்று கிசுகிசுத்தாள் சொஹ்ரா.

றைமா பெரியம்மாவுக்கு ஏனோ கோபம் வந்தது. "எதுக்காக நீ அவள இப்பிடி விரட்டுற? இப்ப என்ன அவ்வளவு பெரிய பொம்பளையாயிட்டா அவ, எப்பப் பாரு குத்தம் சொல்லிக்கிட்டு" என்று அவளை அதட்டியவள், ராபியாவிடம் "சும்மா இப்போதைக்கு இதை உடம்புல சுத்திக்கோ, உங்கம்மாவுக்காக" என்றாள்.

ராபியாவுக்கு சொஹ்ராவே தாவணியை சுத்தி விட்டாள். இருவரும் காரில் ஏறிக்கொண்டதும் கார் புறப்பட்டது. அம்மாவும் பெரியம்மாவும் வெள்ளை நிறத் துப்பட்டியினால் தங்கள் உடம்பை முழுவதுமாகச் சுற்றி மூடியிருக்க அவர்கள் இருவருக்கும் நடுவே ஒடுங்கிப்போய் உட்கார்ந்திருந்தாள் ராபியா.

இரண்டு தெரு தள்ளித்தான் மவுத்தான குப்பியின் வீடு இருந்தது. ஐந்தே நிமிடத்தில் போய்ச்சேர்ந்து விட்டார்கள். வாசலில் பெரிய பந்தல். நிறைய ஆண்கள் அங்கு கிடந்த சேர்களில் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். மணி ஐந்து தான் இருக்கும் என்றாலும், மழை பெய்ததால் வேகமாக இருட்டிக் கொண்டிருந்தது. காரிலிருந்து இறங்கிய அம்மாவும் பெரியம்மாவும் முகத்தைக் கண் மட்டும் தெரியும்படி மூடிக்கொண்டு வேகமாக நடந்து அங்கிருந்த ஆண்களைத் தாண்டிப்போய் வீட்டிற்குள் நுழைந்து கொள்ள, புதிதாகப் போட்டிருந்த தாவணி வெட்கத்தை உண்டு பண்ண, முன்னும் பின்னும் அதை இழுத்து சரிசெய்தபடி நடந்தாள் ராபியா.

வீட்டினுள்ளிருந்து கேட்ட அழுகைச் சத்தம் வேறு பயமாக இருந்தது என்றாலும் தயங்கியபடி வீட்டிற்குள் நுழைந்தாள். உள்ளே நுழைந்ததுமே குப்பென்று ஊதுபத்திப் புகை வாடை மூக்கில் ஏறி பயத்தை அதிகப்படுத்தியது. நாலா பக்கமிருந்தும் அழுகையலி கேட்கும் அந்த ஹாலின் நடுவில் செத்துப்போன குப்பியின் மையத்தைப் பெரிய பெஞ்சில் மேற்கு நோக்கி கால் நீட்டி படுக்க வைத்திருந்தார்கள். முழுக்க வெள்ளைத் துணியால் மூடியிருந்த உடல் இவளுக்கு நடுக்கத்தை உண்டு பண்ணியது. கையிலிருந்த தூக்கை நழுவவிட்டு விடுவோமோ என்கிற பயத்தில் அதனை இறுகப் பற்றித் தன் நடுக்கத்தை அதனுள் புதைக்க முயன்றாள்.

அம்மா இருக்கும் இடத்தை நோக்கி சுவர் ஓரமாகவே பதுங்கிப் பதுங்கி மெதுவாக நடந்து அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் நடுவில் உட்கார்ந்துகொண்டாள். நாற்காலிக்குக் கீழே ஒரு வட்ட டப்பியில் உப்பை நிரப்பி அதில் ஒரு கட்டு ஊதுபத்தியைச் சொருகி வைத்திருந்தார்கள். அதிலிருந்து திமுதிமுவென்று மேலெழும்பி வந்துகொண்டிருந்த புகையை உற்றுப் பார்த்தவளுக்கு குடலைப் புரட்டியது.

அம்மா, நபிஸா மச்சியைத் தன் மடியில் சாய்த்து, முதுகை தட்டிக் கொடுத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். "அழுகாதே நபிஸா. நமக்கு வகைஞ்சது அவ்வளவுதான். அழுகாதே."

நபிஸாவுக்கு அழுகை ஓயவில்லை. "என்னைப் பெத்த அம்மா என்னைய அனாதையா விட்டுட்டுப் போயிட்டியே. அத்தாவை இப்படி அனாதையா விட்டுட்டுப் போயிட்டியே, இனி எங்களுக்கு யாரு இருக்கா? அல்லா எம் மொகத்தப் பாக்கமாட்டேன்னுட்டியேடா" என்று உரத்த குரலில் கதறினாள்.

அவளது கத்தலின் துக்கம் பற்றிக்கொள்ள, இன்னும் ஒன்றிரண்டு பேர் அவள் கூட சேர்ந்து கொண்டு ஒப்பாரிவைக்க ஆரம்பித்தார்கள். நபிஸா மச்சியின் சிவந்த உருண்டை முகம் அழுதழுது வீங்கிப் போயிருந்தது. பிரிந்து கிடந்த தலைமயிர் நெற்றியிலும் முகத்திலும் வந்து விழுந்து முகத்தை மறைத்தது. அவளது கேவல் சத்தம் அம்மாவின் மடியிலிருந்து பெரிதாகக் கேட்டுக்கொண்டிருக்க, இந்தத் தூக்கைப் பெரியம்மா வாங்கிக்கொள்ள மாட்டாளா என்று அவள் முகத்தையே உற்றுப் பார்த்தாள் ராபியா. இதைக் கொடுத்த நிமிடமே ஒரே ஓட்டமா இங்கிருந்து வெளியே ஓடிவிட வேண்டும் என நினைத்தவள் மெதுவாக, "பெரியம்மா எனக்குப் பயமா இருக்கு. நான் வெளிய போய் உக்காரட்டுமா?" என்றாள்.

"சரி போ" என்று இவள் காதில் கிசுகிசுத்த றைமா இவள் கையிலிருந்த காப்பியை வாங்கிக்கொண்டாள். "மொத இதை நான் எல்லாருக்கும் ஊத்திக் குடுக்குறேன். . . ஏம்மா யாராவது இந்தக் காப்பியை ஒரு டம்ளர்ல ஊத்திக்கொண்டு வாங்களேன் இந்தப் பொம்பளைப் புள்ளைக்குக் குடுக்க" என்றவாறு நபிஸாவை சொஹ்ராவின் மடியிலிருந்து எழுந்து உட்கார வைக்க முயன்றாள்.

ராபியாவுக்கு பெரிய நிம்மதி. அங்கிருந்து எழுந்து மெதுவாக கூட்டத்தைக் கடந்து வெளியே வந்தவள், இனி உட்கார ஒரு சௌகரியமான இடம் தேட வேண்டும் என நினைத்தபடி கண்களை நாலாபுறமும் சுழற்றிப் பார்த்தாள். காலியாகக் கிடந்த ஒன்றிரண்டு சேர்களில் எதில் உட்காரலாம் என்று யோசித்து விட்டுக் கறுப்புக் கலர் சேரொன்றை சுவர் பக்கம் சத்தமில்லாதபடி தூக்கி வந்தாள். மழை பெய்து தரையெல்லாம் சேறும் சகதியுமாக இருந்ததால் பாவாடையைக் கெண்டைக் காலுக்கு மேலாக தூக்கிப் பிடித்தபடி சேரில் உட்கார்ந்தாள்.

அவளுக்குச் சற்றுத் தள்ளி குப்பியின் கணவர் கமால் மாமு உட்கார்ந்திருந்தார். அவர் அழுகிறாரா என்று அவர் முகத்தையே உற்றுக் கவனித்தாள். தலையைக் குனிந்தபடி வருத்தமாக உட்கார்ந்திருந்தாரே தவிர அழவில்லை. ஏன் அவருக்கு அழுகை வரவில்லை என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள். ஒரு நாள் அம்மாவிடம் கேட்டிருக்கிறாள், "ஏம்மா ஆம்பிளைங்களுக்கு அழுகையே வராதா" என்று.

"ஏன்?"

"இல்லெ, ஆம்பளைங்க அழுது நான் பார்த்ததேயில்லை. அவங்களுக்கு கண்ணுல தண்ணிய வச்சு அல்லா படைக்கலையா?"

அம்மா சொன்னாள், "மக்கு. ஆம்பளைங்க அழுகக் கூடாது. அழுகமாட்டாங்க. அவங்க பொம்பளைங்க மாதிரியில்ல."

அவளுக்குப் போரடித்தது. அஹமதுவை எங்கே காணவில்லை என்று கண்களாலேயே தேடத் துவங்கினாள். அவன் இருந்தாலாவது பேசிக்கொண்டிருக்கலாம்.

nanatri - ulagathmizh

Tuesday, June 15, 2004

இரண்டாம் ஜாமங்களின் கதை - 1

சல்மா

மழை விழுவதை வகுப்பறை சன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தாள் ராபியா. வகுப்பறைக்குச் சற்றுத் தள்ளி விளையாட்டு மைதானத்தை ஒட்டியிருந்த ஆசாரி குளத்தின் உயர்வான மண் மேட்டின் மீதிருந்து மழைநீர் இறங்கி வழிவதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. குளத்தின் உட்புறம் வழியும் நீர் குடிதண்ணீராக இருந்தபோது வெளிப்புறத்தில் விழுந்து ஓடும் நீர் சாக்கடையில் கலந்து கொண்டிருந்தது. இடையிடையே வீசிய காற்று ஜன்னல் வழியே அவளது முகத்தில் மழையை வாரி இறைத்தது தாங்க இயலாத உற்சாகத்தை உண்டாக்கிற்று. ‘அம்மாவின் பேச்சைக் கேட்டு இன்று ஸ்கூலுக்கு வராமல் இருந்திருந்தால். . .’ மழைவரும் நாளன்று பள்ளியில் ஆசிரியரோ ஆசிரியைகளோ வகுப்புகளுக்கு பாடம் நடத்த வருவதில்லை என்பது வழக்கமான விஷயம். "ஒரு பீரியடை முடித்துவிட்டு அடுத்த கிளாஸ் ரூமுக்குப் போவதற்குள் நனைந்துவிடுவோம் என்ற பயம் டீச்சர்களுக்கு" என்று ராபியாவும் மற்ற பிள்ளைகளும் கிண்டலாகப் பேசிச் சிரித்துக்கொள்வார்கள். அவர்களது சோம்பல் இவர்களுக்கு அன்றைய தினத்தை அதிக குதூகலமிக்கதாக மாற்றிவிடும். பாட்டுப் போட்டியும் கதைகளும் சொல்லிக் கொண்டு ஜோராக நேரத்தைக் கழிப்பார்கள்.

"ஏய் ராபியா!" யாரோ தன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது காதில் விழ திடுக்கிட்டுத் திரும்பினாள். வகுப்பறையின் லீடர் உமா, "உன்னைத் தேடி ஆள் வந்திருக்கு இல்ல, பார்" என்றாள். யாராக இருக்கும் என்கிற யோசனையுடனும் எதற்காக என்கிற கேள்வியுடனும் எழுந்து பிள்ளைகளைத் தாண்டி வாசற்படிக்கு வந்தாள். கார் டிரைவர் முத்துதான் குடைக்குள் ஒடுங்கி நின்று கொண்டிருந்தான்.

"என்ன முத்தண்ணே" என்று கேட்டவளிடம், "அம்மா உன்னை கூட்டி வரச் சொன்னாங்க" என்றான். "ஏன்" என்றாள் ராபியா புரியாமல்.

"தெரியல்லை. வா போகலாம்" என்றான் அவசரப்படுத்தும் குரலில். அவளுக்கு இந்த மழை நேரத்து வகுப்பறையை விட்டுப்போக சுத்தமாக விருப்பமில்லை. "அதெல்லாம் உடனே வரமுடியாது முத்தண்ணே. நான் டீச்சர்கிட்ட கேட்டுட்டு வர்றேன். குடையை மட்டும் குடுத்துட்டுப் போங்க" என்றாள்.

"அதெல்லாம் இல்லெ. நீ உடனே கேட்டுட்டுவா. அம்மா என்னய திட்டுவாங்க. இப்பவே வா. கேட்டுட்டுப் போகலாம்" என்றவனிடம், "இல்லெ எனக்கு கொஞ்சம் எழுத வேண்டியது இருக்கு. எழுதாம டீச்சர் அனுப்ப மாட்டாங்க. நீங்க போங்க" என்றாள் பிடிவாதமாக.

முத்துவுக்கு வேறு வழி தெரியவில்லை. போக மனமில்லாமல் "சரி" என்று சொல்லி குடையை மட்டும் இவளிடம் தந்து விட்டுப் போனான்.

ராபியாவுக்கு அப்பாடா என்றிருந்தது. சிறிது நேரம் கழித்து நடந்தே போகலாம், மழையில் நனைந்து கொண்டு. அதோடு வழியில் தேங்கிக் கிடக்கும் மழைநீரை கால்களால் உதைத்து வி¬ளையாடியபடி எல்லோரோடும் சேர்ந்தே நடந்து போகலாம் என்பதை நினைத்தபோது சந்தோஷமாக இருந்தது.

உமா கேட்டாள். "எதுக்காக உன்னை கார் அனுப்பி கூப்பிட்டிருப்பாக? எதாச்சும் முக்கியமான விஷயமா இருக்காது?" அவள் முகத்தில் லேசான வருத்தம் தெரிவது போலிருப்பதை ராபியா கவனித்தாள்.

"அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. மழையில நனைஞ்சு போயிருவேன்னு கூப்பிட்டு விட்டிருப்பாங்க" என்று அலட்சியமாக சொல்லி விட்டு தன் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

வகுப்பறையிலிருந்த அத்தனை மாணவிகளுமே தன்னையே கவனிப்பதையும் இவளைக் கூப்பிட கார் வந்து திரும்பிப்போன ஆதங்கம் முகங்களில் தெரிவதையும் கவனித்த அவளுக்குப் பெருமையாக இருந்தது. ரமேஷ் தன்னைக் கவனிக்கிறானா என்று ஓரக் கண்ணால் பார்த்தாள். அவன் கவனிக்காமலிருப்பது சற்று ஏமாற்றமாக இருந்தது.

"நல்லவேளை நீ மாட்டேன்னு சொன்ன. நாம நடந்தே போகலாம் ஜாலியா" என்றாள் இவளுக்கருகில் அமர்ந்திருந்த மதினா.

"ஆமாம். அதுக்காகத்தான நான் வரலைன்னு சொல்லி அனுப்பிட்டேன்" என்ற ராபியா மறுபடியும் வகுப்பறைக்கு வெளியே கொட்டும் மழையை பார்க்க ஆரம்பித்தாள். அவளுக்கு நேரெதிரே இருந்த பன்னீர் மரத்திலிருந்து மழைநீர்பட்டு பூக்கள் கொட்டிக்கொண்டிருப்பதைப் பார்க்க அழகாக இருந்தது. போகும் பொழுது அந்தப் பூவையெல்லாம் பொறுக்கி பையில் போட்டுக் கொண்டு போக வேண்டும். இந்தப் பள்ளியிலேயே அவளுக்கு மிகவும் பிடித்தமான இடம் இந்த பன்னீர்ப்பூ மரம் தான். அந்த மரத்தின் நிழலில் அமர்ந்து படிக்கத்தான் ரொம்பவும் பிடிக்கும். எவ்வளவு பெரிய மரம் என்று அதைப் பார்க்கும் பொழுதெல்லாம் தனக்குள்ளே சொல்லி வியந்து கொள்வாள். இந்த மரம் ஏன் இந்த ஊரில் வேறெங்கேயுமே இல்லை என்று அம்மாவிடம் அடிக்கடி கேட்பாள். "எனக்கென்னடி தெரியும், இல்லைன்னா இல்லைதான்" என்று ஒரு வார்த்தையில் முடித்துக் கொள்வாள். தனக்குத் தெரிவதில் பாதி கூட அம்மாவுக்குத் தெரிவதில்லை என்று சமயங்களில் ராபியாவுக்கு பெருமையாக இருக்கும். இன்றைக்கு இந்தக் கேள்வியை பெரியம்மாவிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். ‘பெரியம்மா டவுனிலிருந்து வந்ததனால் நிறைய விஷயம் தெரியும். அம்மா மாதிரி பட்டிக்காடு இல்லை’

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து சேர்ந்த பொழுது குடைக்குள்ளிருந்தாலும் முழுவதுமாக நனைந்திருந்தாள். இவளைப் பார்த்த நொடியிலேயே சொஸ்ராவுக்கு ஆத்திரம் பொங்கியது. அவளுக்குக் கோபத்தைக் காட்ட கத்தவோ திட்டவோ தெரியாது என்றாலும் முகத்தின் சிடு சிடுப்பை வைத்து அவளது கோபம் புரிந்தது.

"ஏன் நாங்க கூப்பிட்டு விட்டா வர மாட்டியோ? அப்படி என்னா படிச்சிக்கிட்டு இருந்தே, உன் சனியனால நாங்களும் போகாம நிக்கிறோம்" என்றபடி ராபியாவின் பக்கத்தில் வந்தவள் அவளது தோற்றத்தைப் பார்த்து அப்படியே திகைத்து நின்று விட்டாள்.

வெள்ளைநிறத்தில் ராபியா அணிந்திருந்த பிளவுஸ் மழையில் நனைந்து அவளது உடம்பின் உள் பகுதியை அப்படியே வெளித்தெரியச் செய்திருந்தது. வயதுக்கு மீறிய வளர்ச்சியைவிடக் கூடுதலாகத் தெரிந்த அவளது மார்புகள் அப்பட்டமாக வெளித் தெரிந்து அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கிற்று. ராபியாவின் தோளைத் தொட்டு எதுக்காக நனைஞ்சே என்று உலுக்கியவள் "இந்தக் கோலத்துலதான் பள்ளிக்கூடத்திலிருந்து வர்றியா? அட அல்லாவே, அம்புட்டுப்பேரும் வேடிக்கை பார்த்திருப்பாங்களே. பொம்பளைப் புள்ளைக்கு கொஞ்சமாச்சம் கூச்சம் வேணாம். இதைக்கூட யாரும் கத்துத் தரணுமா" என்று புலம்பியபடியே அவள் தலையைத் துவட்டி விடத் துவங்கினாள்.

அம்மாவின் புலம்பலின் அர்த்தம் ராபியாவுக்கு சரியாகப் புரியவில்லை. எதற்காக இப்படிச் சொல்கிறாள் என்று அவள் குனிந்து தன்னைத்தானே பார்த்துக்கொண்டாள். தண்ணீரில் நனைந்ததனால் உடலின் மேடிட்ட மார்புப்பகுதி அப்படியே வெளித்தெரிந்தது. அதைப் பார்த்ததும் இவளுக்கும் சிறிது கூச்சமாக இருந்தது.

தலையை துவட்டி முடித்து சொஹ்ரா இவளிடம் "போ. போயி துணியை மாத்திட்டு கௌம்பு. நாம இப்ப குப்பி வீட்டுக்குப் போறோம். வீட்டுல நாங்க போயிட்டா நீ வந்து தனியா இருப்ப அப்பிடின்னுதான் ஒன்னயையும் கூடக் கூட்டிப் போயிரலாம்னு வரச் சொன்னா இப்பிடியா செய்வ?" என்று முணுமுணுத்துக் கொண்டே அடுப்படிக்குப் போனாள்.

ராபியாவுக்கு சந்தோஷம் மறுபடி தலை தூக்கியது. நாமும் வெளியே போகப் போகிறோம் என்பதனால் இன்று மாலை படிக்கத் தேவையில்லை. மதரஸாவுக்கும் போகத் தேவையில்லை என்ற பெருமையோடு குடுகுடுவென ஓடிப்போய் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டு உடைமாற்றத் தொடங்கினாள்.

nanatri - ulagathmizh

Tuesday, June 01, 2004

எதிர்ப்பு

ஈழநாதன்

"...இந்தக் கதைக்கும் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல..."

காட்டிலே கூடியிருந்த மரங்களிலிருந்து தனியாக,கிளையும் கொப்புமாக பரப்பி பசுமையோடு நின்றிருந்தது அந்த மரம்.

அதனைக் கடந்து போகும் பறவைக் கூட்டங்கள் கூட சிறிது நேரம் தங்கிப் போக விரும்பின அந்தளவு வனப்பும் வளமும் கொண்டு விளங்கியது அந்த மரம் காலங்காலமாக பலவித பறவைக் கூட்டங்கள் கிளைகளில் கூடமைத்துத் தங்கின,கிளைகளின் உச்சியில் கூட்டமாக வாழ்ந்து வந்த காகம்,மரப் பொந்துகளில் வசித்த ஆந்தை இவை தவிர சிறு குருவிகள் அணில்கள் எல்லாவற்றிற்கும் மரம் நிழலும் பழமும் கொடுத்தது.

காகங்களின் கூடு மரத்தின் உச்சியில் ஓரமாக இருந்தது,அதில் பலவிதமான காகங்கள் குடியிருந்தன,அவற்றிற்கிடையே பல நேரங்களில் சச்சரவு கிளம்பும்,உணவுக்கும் இடத்துக்கும் தத்தமக்கிடையே அடித்துக் கொள்ளும்,ஆனாலும் அவை மரத்தை விட்டுப் போகவில்லை,கிழட்டுக் காகங்களின் சமரசத்தில் ஓரளவு ஒற்றுமையாக வாழ்ந்தன.

இதே நிலவரம் தான் மரத்தின் நடுப்பகுதியில் பொந்துகளில் வாழ்ந்து வந்த ஆந்தைகளுக்கும்,பொந்துகளின் தலைமைப் பதவிக்கு காலம் காலமாக சச்சரவு நடக்கும் ஒன்றை ஒன்று அடித்துக் கொள்ளும் கிழக்கோட்டான்களின் மத்தியஸ்தத்தில் அவையும் ஒற்றுமை பேணின.

காகங்களுக்கும் ஆந்தைகளுக்கும் இடையில் இடப்பிரச்சனையில் என்றுமே நல்லுறவு இருந்ததில்லை,காலம் காலமாக அந்த மரத்தின் நிழலையும் வளத்தையும் பங்கு போட்டுக் கொள்வதில் இரு பகுதிக்குமே பிரச்சனைதான்,இரண்டு பக்கத்திலுமிருக்கும் முதியவர்களால் நிலமை கட்டுக்குள் இருந்தது.

காலப்போக்கில் இருபகுதியிலும் இனப்பெருக்கத்தால் உறுப்பினர் எண்ணிக்கை பெருகியது,குடும்பங்கள் புதிதாக உருவாகின மரம் கொடுத்து வந்த பழங்கள் போதாமல் பிற மரங்களையும் நாடவேண்டிய தேவை ஏற்பட்டது.

இந்த நேரத்தில் தான் ஆந்தைகள் மத்தியில் புதிய எண்ணம் முளைவிட்டது அந்த மரம் காலம் காலமாக ஆந்தைகளுக்குச் சொந்தமெனவும்,காகங்கள் இடையில் வந்து உச்சியை ஆக்கிரமித்துக் கொண்டனவெனவும் கிழட்டு ஆந்தைகள் ஆந்தைக் குஞ்சுகளுக்குப் போதித்தன,ஆந்தைக் குஞ்சுகளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது தங்களுக்கு சொந்தமான வளத்தை காகங்கள் சுரண்டுவதாக எண்ணின,இரவு நேரங்களில் காகங்கள் தூங்கியதும் அவர்களது கூடுகளைக் கலைப்பதும் முட்டைகளைத் திருடுவதுமாக தொல்லை கொடுக்க ஆரம்பித்தன,சில ஆந்தைகள் இன்னும் மேலே போய் உச்சிப்பகுதிகளில் இருந்த சிறு பொந்துகளை துளை செய்து தமது குடியிருப்புகளாக்கிக் கொண்டன.தடுக்கவேண்டிய வயதான ஆந்தைகள் கைகட்டி வேடிக்கை பார்த்தன

வயதில் இளைய காகங்களுக்கு பொறுமை காக்க முடியவில்லை அவை இரவுகளில் விழித்திருந்து முட்டைகள் களவு போகாமலும் கூடுகள் கலையாமலும் காவலுக்கிருந்தன,இன்னும் சில உச்சியில் வந்து கூடு கட்டிக் கொண்ட ஆந்தைகளுடன் சண்டைக்குப் போயின,வயதான காகங்களுக்கு இது பிடிக்கவில்லை மரம் இருவருக்கும் பொது இருவரும் சண்டையிடாமல் வாழ்ந்தால் அம்மரத்தின் பலனை இன்னும் பலகாலம் பயன்படுத்தலாம் என்பது அவர்களது வாதம்,ஆந்தைகள் என்ன செய்தாலும் சண்டைக்குப் போவதை அவை விரும்பவில்லை பொறுமை காக்கும்படி குஞ்சுகளுக்கு அறிவுறுத்தின.

இது ஆந்தைக் குஞ்சுகளுக்கு வாய்ப்பாகியது நாளுக்கு நாள் காகக் குஞ்சுகளை சீண்டி வேடிக்கை பார்த்தன,இவற்றைப் பொறுக்க முடியாத கிழக்காகங்கள் ஆந்தைத் தலைவர்களிடம் முறையிட்டன இனி இப்படி நடக்காது என்று உறுதிமொழி கிடைத்தாலும் அதை நம்புவதற்கு காகக்குஞ்சுகள் தயாராக இருக்கவில்லை,இது எங்கள் மரம் நீங்கள் வந்தேறு குடிகள் என்ற ஆந்தைக் குஞ்சுகளின் கூச்சல் அவற்றை சீற்றமடைய வைத்திருந்தது.

காகங்கள் கூடி ஆலோசித்தன இப்படியே போனால் விரைவில் அம்மரம் தங்களிடமிருந்து பறிபோய் விடும் என்று குஞ்சுகள் வாதிட்டன கிழக்காகங்களும் நிலைமையின் தாக்கத்தைப் புரிந்து கொண்டதால் மௌனம் காத்தன,குஞ்சுகள் தீர்மானம் மேற்கொண்டன இனி அவர்கள் தாக்கினால் நாங்களும் திருப்பித் தாக்குவோம் வயதில் இளைய குஞ்சுகள் முழங்குவதைக் கேட்க கிழக்காகங்கள் கவலை கொண்டன என்ன மாதிரி அமைதியாக இருந்த மரம் இனி அங்கே அமைதி நிலைக்குமா என்ற கவலை கிழக்காகங்களுக்கு,அவை இன்னும் ஆந்தைகளுடன் சமரசமாகப் போய்விடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தன.

குஞ்சுக்காகங்கள் தீர்மானத்தைச் செயற்படுத்த முனைந்தன மரத்தின் ஒருபக்கத்தில் வளர்ந்து செழித்திருந்த பனைமரத்திலிருந்து தும்புகளையும் ஓலைகளையும் கொண்டுவந்து தங்கள் கூடுகளை பலப்படுத்தின,இரவுகளில் முறை வைத்துக் காவல் காத்தன,பனைமரம் பலவிதங்களிலும் காகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவிருந்தது.

இந்தத் தகவல்கள் ஆந்தைகளுக்கு எட்டியபோது இளைய ஆந்தைகள் கோபத்தில் குதித்தன காகங்களை பூண்டோடு அழித்து மரத்தை மீட்போமென சபதமிட்டன,விடயம் கிழக்கோட்டானுக்குப் போனது ஆந்தைகளிடத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்கவும்,காகங்களை அழித்து மரத்தை முற்றாகத் தம்வசப்படுத்தவும் இளைய ஆந்தைகளின் கோபத்தைப் பயன்படுத்திக் கொள்வதுதான் வழி என்று கிழக்கோட்டான் எண்ணமிட்டது.

இரவிரவாக ஆந்தைகள் கூடின,நிலவொளியில் கூடி காகங்களை அழிக்கும் வழிவகைகளை ஆராய்ந்தன கிழக்கோட்டான் தலைமை வகித்தது,காகங்கள் மீது ஆந்தைகள் எல்லாம் கூடித் தாக்குதல் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது,இந்த நேரம் அறிவாளி ஆந்தையொன்று ஒரு யோசனை கூறியது மரத்தின் ஓரமாக வளர்ந்துள்ள பனைமரமே காகங்களைப் பலமுள்ளவர்களாக மாற்றியுள்ளது,சகலவிதத்திலும் அவற்றைப் பனைமரமே வளர்க்கின்றது எனவே அதனை அழித்துவிட்டால் காகங்களின் வளர்ச்சி தடைப்படும் எப்போதும் ஆந்தைகளுக்கு அடிமையாக இருக்கும் என்று அது கூறியது இளைய ஆந்தைகளுக்கு மட்டுமல்ல கிழக்கோட்டானுக்கும் அது நல்ல யோசனையாகவே பட்டது.

இரவிரவாக ஆந்தைகள் பனைமரத்தை முற்றுகையிட்டன,கொலைவெறிதாண்டவமாட தும்புகள் ஓலைகளைக் கிழித்தன அப்படியும் ஆத்திரம் தணியாமல் கிழித்தவற்றை மேலே போட்டு பனைமரத்தைக் கொழுத்தின கொழுத்தி முடிந்ததும் சுவாலை விட்டெரியும் பனைமர வெளிச்சத்தில் அவை காகக் கூடுகளுக்குள் பாய்ந்தன எதிர்ப்பட்ட காகங்களைக் குதறின,இந்நேரம் காகஙக்ளும் அலறியடித்துக் கொண்டு எழுந்தன இவ்வளவுநாளும் தங்களுக்கு படிமுறை வளர்ச்சி தந்த பனை மரம் தீயில் கருகிக் கொண்டிருப்பதை அவற்றால் தாங்கமுடியவில்லை போதாக்குறைக்கு காகக் கூடுகள் பல சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தன உயிரிழந்த காகங்கள் மரத்தின் அடியில் விழுந்து கிடந்தன.

இளைய காகங்கள் ஆத்திரத்தில் துடித்தன "இப்படியே போனால் எதுவுமே எஞ்சாது" இளைய காகம் ஒன்று குரல்கொடுத்தது "வாருங்கள் என்னோடு" காகக் குஞ்சுகள் எழுந்தன பறக்கும் அந்த இளைய காகத்தைத் தொடர்ந்தன எரிந்து கொண்டிருக்கும் பனை மரத்தை வட்டமிட்டது அந்த காகம் பாதி எரிந்து கொண்டிருந்த ஓலைத் துண்டொன்றை வாயில் கவ்வியது பறந்து போய் ஆந்தைகளின் பொந்தொன்றில் போட்டது,காகக் குஞ்சுகள் கோபத்தில் ஆர்ப்பரித்தன "இதுதான் வழி" "இதுதான் வழி" "எங்களைப் பணிய வைக்கமுடியாதென்று உணர்த்துவோம்" இளைய காகத்தைத் தொடர்ந்து மற்றக் குஞ்சுகளும் எரியும் கொள்ளிகளைப் பொறுக்கி வந்து ஆந்தைகளின் பொந்தில் போடத்தொடங்கின.வயதான காகங்கள் தடுக்க முயற்சி செய்யவில்லை,கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன.

விடிந்தபோது மரம் புகைகக்கியபடி எரிய ஆரம்பித்திருந்தது

பி.கு:- இந்தக் கதைக்கும் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல

ஈழநாதன்
nantri-Sooriyan.com

Friday, May 28, 2004

ஓட்டம்

கமலாதாஸ்
தமிழில் - க.லல்லி

கடந்த வருடம்தான் பெருநகரங்களில் வாழ்வதை விட்டு கேரளாவில் குடியேறுவது என்று முடிவெடுத்தேன். என்னுடைய கலைப்படைப்புகளின் புகழ் அதிகரித்த காலத்தில் என்னுடைய விரல்கள் திறமையை இழக்க ஆரம்பிப்பதால் சில வேளைகளில் நினைத்தேன், அனுபவ வறட்சி அதன் பின்புலமாக இருந்திருக்கக்கூடும். இதனைத் தொடர்ந்து என்னுடைய சிற்பங்கள் ஒரே மாதி¡¢யாக உருவெடுத்தன. கலை வாழ்வை பிரதிபலிக்கலாம். தவறில்லை. ஆனால் மாற்றமின்றி தொடர்ந்தால்?

நகரங்களில் எனக்கு மாடலாக வந்தவர்கள் ஆன்மவறட்சியுடைய நகர்ப்புற படைப்புகளாயிருந்தார்கள். வெளிநில முகமும் தூசுபடிந்த தலையுமாய் காணப்பட்டார்கள். நனைந்த பஞ்சு போல அவர்களது தசைகள் தொளதொளத்து இருந்தன. அவர்கள் அடிவயிற்றில் இருந்த கட்டிகளையும் அறுவைசிகிச்சை தழும்புகளையும் புடைத்திருக்கும் நரம்புகளையும் ஒருவித சங்கடத்துடன் கவனித்தேன். ஓய்வு நேரத்தில் கருகில உதடுகளுக்கிடையே சிகரெட்டை பற்ற வைத்தார்கள். பூரியையும் உருளைக்கிழங்கையும் சுவைத்துச் சாப்பிட்டார்கள். என்னுடைய கழிவறையில் பெரும் ஓசையுடன் மலஜலம் கழித்தார்கள். அவர்களுடைய வேகமான அசைவுகள் என்னையும் பீடித்தன. பேரூந்துகளிலும் மின்சார ரயிலிலும் செல்லும் பயணிகளின் பொறுமையின்மை அவர்களிடம் காணப்பட்டது.

எப்போதும் எனது நேரம் நிதானமாக கழிவதையே விரும்பினேன். மண்ணுக்கடியில் புதைந்திருக்கும் வித்து போல பொறுமையை என்னுள் வளர்த்து வைத்திருந்தேன். ஒரு செடி செழித்து மரமாக வளர்வதைப் போல எனது சிற்பங்கள் நின்று நிதானித்து உருவெடுத்தன. மேற்கூரையில்லாத வராந்தாக்களில் வேலை செய்தேன். நான் உத்தேசிக்காமலேயே எனது சிற்பங்கள் அனல் பறக்கும் வெய்யிலிலும் காற்றிலும் மழையிலும் உருமாறின. இயற்கை அவற்றைத் தொட்டுத் தடவி ஒளிர்ந்திடச் செய்தது. அதனாலோ என்னவோ பலரும் அவற்றிற்கு உயிர் இருப்பதாகக் கூறினர். மாடல்களிடமிருந்த அந்த உயிர்ப்பை சிற்பங்கள் இவ்வாறாகப் பெற முடிந்தது. என்னுடைய சிற்பங்கள் நிறைய விற்பனையாகி வருவாய் அதிகா¢த்தது. கலையுணர்வு அற்றவர்கள் நான் நிர்வாண உடல்களைக் கொண்டு சிற்பங்கள் உருவாக்குவது குறித்து அவதூறுகள் பரப்பினர். இத்தகைய வதந்திகளைப் பரப்புகின்றவர்கள் மனநோய் பீடித்தவர்கள் என்றும் அவர்களின் விஷம் தோய்ந்த இதழ்கள் இத்தகைய அருவருப்பிற்கு பழகிப்போனவை என்றும் கூறி அவர்களைப்பற்றி அறிய வைத்தார் என் கணவர். அதன் பின்னர் அவர்களது வசைச் சொற்களுக்காய் என் கண்ணீரை நான் வீணாக்கியதில்லை.

என் கணவர் தனது நாற்பத்தி மூன்றாம் வயதில் அதிக இரத்த அழுத்தம் காரணமாக மூன்று மாதகாலம் படுக்கையில் கிடக்க நேர்ந்தது. அவரது வலது காலும் கையும் முற்றிலும் செயலற்றுப் போனது. சில காலம் அவருடைய பேச்சுப் பாதிக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில்தான் நான் குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டியதாயிற்று. எனது காலை முழு நேரத் தொழிலானது. படிப்படியாக ஊன்றுகோலுடன் வீட்டில் நடக்கவும் பேசவும் அவருக்குத் தெம்பு வந்தது. ஆனால் அந்த நிலை வந்தபோது அவருக்கு வேலை பறிபோயிருந்தது. நான் ஓய்வின்றி சிற்பங்களை செதுக்கிக் கொண்டிருக்கும்போது என்னருகில் சாய்ந்தவாறு ஊன்றுகோலில் கையூன்றி மெலிதான குரலில் 'வாதநோய்காரனுக்கு வாழ்க்கைப்பட என்ன தலையெழுத்து உனக்கு. பாவம். துரதிருஷ்டமானவள் நீ' என்று கூறுவார்.

அந்தக் குரலில் இருந்த அனுதாபம் எனக்கு வேண்டியதாயில்லை. குடும்பத் தேவைகளுக்காய் பொறுப்பேற்கு முன்னர் காமவிகாரம் படைத்த என் கணவருக்கு ஒரு விளையாட்டுப் பொம்மையைப் போலிருந்தேன். முழமையாய் என் உடலை அர்ப்பணிப்பதன் மூலமே அவரை நான் திருப்திப்படுத்த முடிந்தது. அவருடைய இடத்தில் ஒருவேளை நான் வாதநோயில் படுத்திருந்தால் ஒரு வருடத்திற்கு மேல் அவரால் தாக்குப் பிடித்திருக்க முடியாது. படுக்கையறையில் கடமையாற்ற முடியாத மனைவியை அவர் கவனித்திருக்க மாட்டார். காம உணர்வுகளுக்கு அவர் அளித்த அந்த முக்கியத்துவம் எனக்கு அச்சமூட்டியது. இதன் காரணமாகவோ என்னவோ இப்போது அவரைக் கவனித்துக் கொள்வது இரகசிய சந்தோஷத்தை அளித்தது. இந்நிலையில் எனக்கு அவநம்பிக்கைக்கு¡¢யவராய் இருக்கமாட்டார் என்ற எண்ணமே தெம்பளித்தது. ஒரு நாள் என்னிடம் 'நீ இப்போதெல்லாம் கண்ணாடியில் உன்னைப் பார்த்துக் கொள்வதில்லையா?' என்று கேட்டார்.

'எனக்குத் தொடர்ந்து வேலைகள். கண்ணாடியில் முகத் பார்த்து பூரிப்பதற்கு வேலை செய்யும் பெண்ணிற்கு எங்கு நேரம்?' என்றேன்.

'இந்நாட்களில் நீ மிகவும் அழகு வாய்ந்தவளாகிவிட்டால், அழகு சாதனங்களின் உதவியின்றியே உன் அழகு சுடர்விடுகின்றது. கண்டிப்பாக உன்னை நீ கண்ணாடியில் பார்க்க வேண்டும்' என்றார்.

எவ்வித பொறுப்புமற்ற சுபபோகத்தில் திளைத்த பழைய நாட்களில் இவர் என் அழகைப் புகழ்ந்து பேசுகையில் அளவிடமுடியாத சந்தோஷமாயிருக்கும். ஒரு விளையாட்டுப் பொருளுக்கு அந்தப் புகழ்ச்சி தேவையானதுதான். அது நம் சார்புத் தன்மையை மறப்பதற்கு பொ¢தும் உதவும். பொருளாதார ரீதியில் கணவனையும் உறவினரையும் வீட்டு வேலையாட்களையும் பொறுப்பேற்றிருக்கும் மனைவிக்கு இத்தகைய புகழ்ச்சி தேவையில்லை என்பதை படிப்படியாக உணர்ந்தேன். என்னை அழகுப் பதுமையாக்கி அவரை சந்தோஷப்படுத்தும் அவசியம் இப்போது எனக்கில்லை. நான் அடிமையல்ல. சுதந்தரமானவள். தலைமுறையாய்த் தொடர்ந்து வரும் பரம்பரைப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுபட்டவள் என்று கர்வத்துடன் நினைத்துக் கொண்டேன்.

ஆயள்வேத சிகிச்சைக்காக என் கணவரை கேரளாவிற்கு அழைத்துச் செல்லுமாறு என் நண்பர்கள் ஆலோசனை கூறினர். எங்களது இடமாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம். நகரின் எல்லை தாண்டி கடற்கரையோரத்தில் அமைந்திருந்த 'நாலுக்கட்டு' வீட்டினை ஒரு தரகன் என்னிடம் காண்பித்தான். பழைய வீடாக இருப்பதால் வாடகை மிகவும் குறைவு என்றான். அந்த வீட்டுச் சுவர்களிலும் மேற்கூரைகளிலும் பாசி படர்ந்திருந்தது. அந்த இரும்புகேட் துருப்பிடித்து பலவிடங்களில் கிராதி விட்டுப் போயிருந்தது. சுவர்களுக்கு பின்புறம் பயன்படுத்தப்படாத பாழ்நிலங்களில் காட்டுச் செடிகளும் கொடிகளும் படர்ந்து கிடந்தன. அதற்கப்பால் நீலக்கடல் விரிந்து கிடந்தது. நீரில் சூரியஒளி படுவதாலோ என்னவோ கடலுக்கு மேலிருந்த வானம் விநோத வெண்மையில் ஒளிர்ந்தது. அந்தத் தருணத்தில் கடலையும் மேகங்களையும் வானத்தையும் பார்த்தபின்பு தரகனிடம் 'வேறு ஒரு வீட்டைப் பார்க்க எனக்கு விருப்பமில்லை' என்றேன்.

கதவைத் திறந்து இருள் அடர்ந்த அந்த வீட்டிற்குள் நுழைகையில் வெளவால்களின் எச்சமும் எலிப் புழுக்கைகளின் வீச்சமும் கூடிய ர்நாற்றம் வீசியது. வீஇட்டுக் கதவுகளிலும் சன்னல்களிலும் படிந்திருந்த தூசியைத் துடைத்துக் கொண்டே வீட்டுத் தரகன்,

"அண்டை அயலவர்கள் இந்த வீட்டைப் பற்றி நிறையப் பொய்கள் சொல்வார்கள். பொறாமை பிடித்தவர்கள். இந்த வீட்டில் யாரோ ஒருவனை அடித்துக் கொலை செய்ததாகக்கூட கூறுவார்கள். இங்கு வாடகைக்கு வருபவர்களை விரட்டுவதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதைகள் அவை" என்றான். சன்னல்கள் மிகவும் சிறியதாயிருந்தன. நடுமுற்றத்திலிருந்து பார்க்கும்போது நீண்ட உருண்ட தூண்களும் கடப்பைக்கல் தளம் பாவியிருந்த முற்றமும் தொ¢ந்தன. தென்வடல் திசையிலும் கீழ்மேலும் காற்று நுழைந்து செல்வதற்கான வழிகளுடன் வீடு அமைந்திருந்தது. உள்முற்றத்தின் ஓரங்களில் எனது சிற்பங்களை நிறுவத் தீர்மானித்தேன். சிற்பங்களில் வேலை பார்க்கும் போது நிறைய காற்றும் வெளிச்சமும் அங்கு கிடைக்கும்.

தரகனிடம், "இந்த வீடு எனக்குப் பொருந்தும்" என்றேன்.

என் கணவர், "கழிவறைகளை நீ பார்க்க விரும்பவில்லையா?" என்றார். நான் தலையாட்டினேன்.

"இப்போது எதனையும் பார்க்க எனக்கு விரும்பமில்லை".

இத்தனை காலம் எனக்காய்த் தனிமையில் கனவுகளுடன் காத்திருந்த வீடு இறுதியில் என்னுடையதாயிற்று. அதன் கனவுகள் மட்டுமே அந்த பழைய வீட்டை நிலைகுலையாமல் பாதுகாத்திருக்க வேண்டும். இல்லையென்றால் வெகுகாலத்திற்கு முன்பே காற்றும் மழையும் அதன் கூரைகளையும் உத்திரங்களையும் தூண்களையும் சூறையாடியிருந்திருக்கலாம்.

நானும் பலவருடங்களாக எனது மனத்தோற்றத்தில் இம்மாதி¡¢யான வீட்டினை கனவு கண்டு வந்திருக்கிறேன். அதன் துரப்பிடித்திருந்த கேட்டும் முட்புதர்கள் நிறைந்த பாழ்நிலமும் அதனைத் தாண்டி கரையை முட்டி மோதிக் கொண்டிருக்கம் அலைகளும் எனது கனவுகளில் திரும்பத் திரும்ப வந்திருக்கின்றன. அதன் தலைவாசலையும் சன்னல்களையும் நடுமுற்றத்தையும் தூண்களையும் கடப்பைக்கல் தரையையும் பாசி படர்ந்த மேற்கூரையையும் வெளவால்கள் படபடக்கும் பரண்களையும் எல்லாவற்றையும் நான் பார்த்திருக்கிறேன்.

என் கணவருக்கு மூலிகைத் தைலங்களை உடலில் தேய்த்துக் குளிப்பாட்டுவதற்கு ஒரு கிழவனை நியமித்தேன். வீட்டு வேலைகளையும் சமையலையும் செய்வதற்கு ஒரு கிழவி வந்து சேர்ந்தாள். முதல் சில மாதங்கள் மகிழ்ச்சியுடன் கழிந்தன.

ஒரு கிராமத்துப் பெண்ணும் எனக்கு மாடலாக கிடைத்தாள். அவள் பெயர் ஸ்ரீதேவி. புதினேழு வயது கூட நிரம்பாதவள். ஆரம்பத்தில் மிகவும் கூச்சமும் தயக்கமும் நிறைந்தவளாயிருந்தாள். பின்னர் பெருமிதத்துடனே தனது நிர்வாணத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தாள். அவளை நிற்க, உட்கார, படுக்க வைத்து நிறைய சிற்பங்களை உருவாக்கினேன். அவளுடைய உயிர்ப்பின் இரத்தத்தையெல்லாம் உறிஞ்சியதாலோ என்னவோ எனது உருவங்களில் அபூர்வ ஜீவன் ததும்பிற்று. அவள் உயிரற்ற பொம்மை போல சரிந்து விழுகையில் அவளின் பிரதிமைகளோ புத்துயிர்ப்புடன் தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருந்ததை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். வெயிலின் வெம்மை படுவதாலோ என்னவோ மனித உடம்பின் உஷ்ணமும் அந்தக் கல்லிலும் மரத்திலும் சூடு இருந்தது. ஒரு நாள் எனது கணவர் அந்தப் பெண்ணின் நிலையைப் பார்த்து "போதும் நிறுத்து. இனியும் அவளால் தாங்க முடியாது" என்றார்.

அவர் முகத்தில் கோபம் தெறித்தது. நேரடியாக என்னிடம் காட்டிய கோபம் எனக்குத் திகைப்பூட்டியது. இதுவரையிலும் எனது சிற்பக்கூடத்திற்குள் நுழைந்திராதவர் இப்போது சிலைகள் உருவாக்க வேண்டாமென்று உத்தரவிடுகின்றார்.

அந்தப் பெண் கடப்பைக்கல் தரையில் இடதுபுறம் ஒருக்களித்து படுத்திருந்தாள். அவள் கண்கள் மூடியிருந்தன.

"அவள் நன்றாகத்தானிருக்கிறாள்" என்றேன்.

"ஒருவேளை இருக்கலாம். ஆனால் இவ்வாறு தொடர்ந்தால் நிச்சயம் அவள் இறந்து போவாள். நீ இரத்தக் காட்டேறி போல அவள் ரத்தத்தை உறிஞ்சுகிறாய். உன்னுடைய சிற்பங்கள் உனது மாடல்களின் உயிரைத் திருடுகின்றன".

அந்தப் பெண்ணின் முகத்தை மீண்டும் ஏறிட்டுப் பார்த்தேன். வெளிறிய அழகிய முகம். நீராம்பல் போன்ற கன்னங்கள். நீண்ட புருவங்களுடைய கண்கள்.

"அவள் அழகானவள் என்ற நினைக்கின்றீர்களா?" என்று அவரிடம் கேட்டேன்.

"எனது கருத்துக்கு இங்கு இடமில்லை" என்று முணுமுணுத்தார். ஸ்ரீதேவி - சதைப்பற்று இல்லாத மெலிந்த இந்த அழகிய பெண்ணின் உடல் மீதான அவர் பார்வை என்னவாயிருக்கும் என்று அறிய முயன்றேன். பறித்துப் போடப்பட்ட பலாக்கிளை போல் படர்ந்திருந்த அவள் உடலின் ஏற்ற இறக்கங்களை கல்லில் வளைவுகளாக என்னால் உருமாற்ற முடிந்தது. ஒவ்வொரு சிலையை முடிக்குந் தறுவாயிலும் அவள் அதிக களைப்பினால் சரிந்து விடுவாள். ஒரு வனவிலங்கின் அயர்ச்சி போன்றிருந்தது அது. நான் ஆறு துருவங்களை முடித்த பின்னர் அடுத்தடுத்து ஆறு குழந்தைகளைப் பெற்ற அதீத அயர்ச்சி அவளிடத்து காணப்பட்டது. ஒருமுறை கண்கள் பாதி மூடிய நிலையில்
"அம்மா எனக்குக் களைப்பாயிருக்கிறது. போக விடுங்கள்" என்றாள்.

அவளுக்குச் சூடான பால் தந்தேன். அவள் உடலை வாசனைத் தைலம் தேய்த்து நன்கு பிடித்து விட்டேன்.

நான் ஸ்ரீதேவியை மிகவும் நேசித்தேன். ஒரு சிற்பி தன்னுடைய மாடலாக பணிபுரிபவர்களிடத்து காட்டும் நேசந்தான் அது. அவளைக் கொண்டு நான் சிற்பங்களை வடித்த பின்பு எனது அன்பு திடீரென்று மறைந்து விடுமா என்று என் கணவர் கேட்டபோது பதில் பேசாமலிருந்தேன். அதற்கானத் ¨தா¢யம் எனக்கில்லை. உணர்வுகளின் வறட்சியை ஒளிவுமறைவின்றிக் காட்ட என்னால். இயலவில்லை. உணவுக்கும் உடைக்குமாய் என்னை முழுவதுமாய் சார்ந்திருக்கும் அவருக்கு என் மீதுள்ள மா¢யாதை குறைந்துவிடும் என்ற பயத்தாலோ என்னவோ நான் ஏதும் பேசவில்லை. குடும்பத் தேவைகளுக்காய் பொறுப்பேற்றவள் என்ற முறையில் அவர் என்னைச் சார்ந்தருப்பதை உள்ளுர சலித்தேன். அதே நேரம் இந்நிலை தொடர்வதையே விரும்பினேன். ஆடம்பரமாகவும் எதிர்காலம் பற்றிய கவலைகளுமற்று இருக்கும் போதுதான் நான் அவருக்கு அவசியமானவள் என்பதை உணர்ந்திருந்தேன். அவர் மூட்டைப்பூச்சி போல் என் ரத்தத்தை உறிஞ்சுவதற்கு. அவர் பணியிலிருந்த காலத்தில் என் மீது அன்பும் மதிப்பம் வைத்திருந்ததாக நடித்தது கூட இல்லை.

எப்படி நான் அந்த சாப இரவில் எழுந்தேன்? சிறு தூறல் ஜன்னலில் தெறிக்கும் சப்தம் தவிர வேறு எந்த சப்தங்களற்ற அந்த இரவில் எப்படி எனக்கு விழிப்பு வந்தது? இயல்பற்ற அமானுஷ்ய அமைதி என்னுள் ஊடுருவிற்று. அமைதி நம்மை உறக்கத்திலிருந்து தட்டி எழுப்புமா? நான் கையில் டார்ச்சுடன் எனது கணவரை ஒவ்வொரு அறையாய்த் தேடினேன். நிலவொளியில் சமையலறைக்கு வெளியே இருந்த வராந்தாவில் என் கணவர் ஸ்ரீதேவியைத் தழுவிக் கொண்டிருப்பதைக் கண்டேன். வேதனை தகிக்கும் உயிர்களின் முகபாவங்களையும் உடல் விறைப்பையும் வெளிப்படுத்திய அவர்கள் பந்தயக் குதிரைகள் பந்தயத்தின் முடிவில் காணப்படுவது போல் இருந்தனர். அந்த ஒரு கணம், பின் வராந்தாவை விட்டு ஓடினேன். ஒரு தொன்மையான சடங்கை சந்தர்ப்பவசத்தால் காண நேர்ந்ததைப் போன்று உணர்ந்தேன்.

அதன் பினன்ர் அரைமணி நேரம் கூட அங்கு நான் தங்கவில்லை. அந்த இடத்திற்கு அந்நியமானவளாகிவிட்டேனா? கரையோரத்தில் நடக்கும் என்னைப் பொ¢ய அலையொன்று கடலுக்குள் மூழ்கடித்திருக்கும் என்று அவர் கருதலாம். அடுத்த மாத வாடகையைக் கூட கொடுக்க முடியாத அவர் தன் துரதிருஷ்டத்திற்கும் காரணமான அந்த பெண்ணை வெறுக்கலாம். அவள் அழகு திடீரென்று ஊனமாகவும் மாறக்கூடும்.

கீழ்த்திசையில் சில ஒளிக்கீற்றுக்கள் தோன்றியிருந்தாலும் அந்த கடற்கரையில் இருள் அடர்ந்திருந்தது. அந்த இருள் புகைந்து கொண்டிருக்கும் மயானத்து சாம்பலின் நிறமாயிருந்தது. சிற்பங்களை உருவாக்கப் பயன்படும் கணிமண்ணின் எண்ணற்ற வெறிநாய்களின் முகங்களாக கொந்தளிக்கும் அரபிக் கடலோரம் நான் நடந்து கொண்டிருந்த போது நூற்றைம்பது வருட காலத்து அரூத வீடு எனக்கு அமைதியாக இறுதி விடை கொடுத்திருக்குமா?

அந்த வீட்டைத் தவிர வேறு யாரிடத்தும் அந்தக் கணத்தில் எனக்குப் பற்று ஏற்படவில்லை. என்னுடைய வாழ்வு ஒரு கனவென்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். இந்த ஓட்டம் மட்டுமே நிஜம். ஒரு காலத்தில் நான் நேசித்த மனிதனிடமிருந்தும் திருமணம் என்ற பொன் விலங்கிலிருந்தும் ஓடிப் போகிறேன் எனது கைகள் அழுத்தமாகப் பற்றியிருப்பதையும் மீறி நான் அணிந்திருந்த வெள்ளைச் சேலை நான் முன்னேறி நடக்க நடக்க பாய்மரம் போல் காற்றில் ஆவேசத்துடன் படபடத்தது. அமைதி குலைவுற்றிருந்த வேளையில் தனிமை, மேகத்தின் மென்மையுடனே என்னைப் போர்த்திக் கொண்டது. ஒரு சிறுமியாயிருக்கும் போதே அதன் தொடுதலை உணர்ந்திருக்கிறேன். கடற்காற்று ஓங்கி வீசுகையில் என் கால்கள் பிடி தளர்ந்து தள்ளாடின தண்டு வளைகள் நிறைந்த ஈரமணலில் பாதம் புதையுண்டது. அந்தத் தருணங்களில் மட்டும் புதிதாய் முளை விட்டிருக்கும் வேதனை இதயத்திலிருந்து பீறிட்டது.

கடலின் சில்லிப்பு என் பாதங்களை மரக்க வைத்தது. பறவைகள் வராந்தாவில் கீறிச்சிடும் போது, நடுமுற்றத்தில் சூரியஒளி படரும்போது அந்த இரண்டு பேரும் இறந்தவர்கள் - உயிருள்ளவர்கள் தங்கள் கண்களை கசக்கி சுற்றும் முற்றும் பார்ப்பார்கள். கனத்த மனதுடன் அங்குமிங்குமாக ஒவ்வொரு அறையாக என்னைத் தேடுவார்கள்.

சூரியனின் ஒளிக்கீற்றுக்கள் நடுமுற்றத்தின் ஓரங்களிலிருக்கும் சிலைகளின் மேல் விடும். அவை உயிர் பெறும். வயோதிகம் பீடிக்கப்பெற்ற அந்த மனிதனும் அந்த பதினேழு வயது பெண்ணும் சிலையாக மாறுவார்கள். அவர்கள் கல்வியிலும் வெறும் சிலையாக மட்டுமே இருப்பார்கள். விரிந்த நாசிகளுடைய பந்தயக் குதிரைகளின் சிலைகள் போல.

திடீரென்று கடலில் பிணவாடை வீசுவதை உணர்ந்தேன். மேலெழும்ப முயற்சிக்கும் பட்டம் போல, எனது கரங்கள் காற்றில் உறைந்து விடாதபடிக்கு அவற்றை ஆட்டிக்கொண்டே முன்னே ஓடினேன். அந்தத் தருணத்தில் சூரியன் எனது வலது கண்ணின் ஓரம் வழியே கிழக்கில் உதிக்கக்கண்டேன்.

நன்றி: Indian Literature (Original)
நன்றி: யுகம் மாறும் 1999 (தமிழில் வெளிவந்தது)

Sunday, May 23, 2004

எங்கே தவறு?

பறந்து வந்த சாப்பாட்டுக் கோப்பையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள மதுமிதா குளிர்சாதனப் பெட்டிக்கும் மின்சார அடுப்புக்கும் இடையில் இருந்த இடைவெளிக்குள் புகுந்து குனிந்தாள்.

ஏழு மாதக் கர்ப்பிணியான அவளால் அந்தச் சிறிய இடைவெளிக்குள் தன்னை முழுமையாக அடக்க முடியவில்லை.
கோப்பை அவளைத் தாண்டிச் சுவரில் மோதி, அவள் ஆசை ஆசையாகச் சமைத்த சாப்பாடுகள் நிலத்தில் சிதறின.

ஏற்கனவே படபடத்த அவளது நெஞ்சு, கோப்பை உடைந்த சத்தத்தில் இன்னும் வேகமாக அடித்துக் கொண்டது. கால்கள் வெடவெடத்தன.

-உனக்குப் புருஷன் வீட்டாரோடை சரியான முறையில் பழகத் தெரியாது. -
சாப்பாட்டை நிலத்தில் விதைத்ததோடு திருப்பிப்படாத மகேசன் அவளை அடிப்பதற்காக கோபாவேசத்துடன் நெருங்கினான்.

அந்தச் சிறிய சமையலறைக்குள் ஒடுங்கி நிற்கும் அவளுக்கு, தன்னை எப்படிக் காத்துக் கொள்வதென்றே தெரியவில்லை. பயத்தில் வீரிட்டாள்.

அந்தச் சத்தத்தில் குளியலறைக்குள் குளித்துக் கொண்டிருந்த கண்ணன் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தான். மூர்க்கத்தனத்துடன் மதுமிதாவை நோக்கி விரையும் மகேசனை கட்டிப் பிடித்து மறித்தான்.

ஒரு நொடிப்பொழுது பிந்தியிருந்தாலும் கர்ப்பிணியான மதுவின் உடலின் ஏதோ ஒரு பகுதியை மகேசனின் மூர்க்கத்தனம் பதம் பார்த்திருக்கும்.
மதுவின் கண்கள் கண்ணனுக்கு நன்றி கூறின.

-என்ன மகேசண்ணை நீங்கள்........! உங்களுக்கு மதுவை அடிக்க மனம் வருதே? ஏன் இப்பிடி அவளைக் கொடுமைப் படுத்துறீங்கள்? அவள் உங்கடை தம்பி பெண்சாதியெண்டதை மறந்திட்டீங்களோ? -
கண்ணன் வேதனை இழைந்தோட வினவினான்.

-நீ என்னடா கதைக்கிறாய். அவளுக்கு நான் அவளின்ரை புருஷன்ரை அண்ணன் எண்டதே மறந்து போச்சு. நீ அதுக்குள்ளை வந்திட்டாய். - சீறினான் மகேசன்.

மகேசனின் சீற்றம் மதுவை இன்னும் பயமுறுத்த அவள் கண்ணனின் பின் ஒளிந்து கொண்டாள்.

- என்னடி அவனுக்குப் பின்னாலை ஒளியிறாய்? அவன் என்ன உனக்குப் புருஷனோடீ?-

அவனது அநாகரிகமான பேச்சைக் கேட்க விரும்பாமல் மது தனது அறைக்குள் ஓடிச் சென்று கட்டிலில் வீழ்ந்து அழுதாள்.

- ஏன் எனக்கு இந்தக் கொடுமை. இன்னும் எத்தினை காலத்துக்குத்தான் இந்த அவஸ்தைகளை நான் தாங்கோணும்! -
மனசுக்குள் வேதனை பொங்கக் கண்ணீரைச் சொரிந்தாள்.
இன்று அவளது முதலாவது திருமணநாள். அதைக் கொண்டாடத்தான் அவள் ஸ்பெஷல் சமையல் செய்திருந்தாள்.

அவளது அக்கா சுபேதாவும,; அத்தான் மகேசனுமாகத்தான் அவளை மகேசனின் தம்பி சபேசனுக்கு மனைவியாக்க இங்கு யேர்மனிக்குக் கூப்பிட்டார்கள்.

-கொம்பியூட்டர் கோர்ஸ் செய்கிறேன் - வரமாட்டேன் என்று மது மறுத்துத்தான் பார்த்தாள்.
சுவேதாதான் போனுக்கு மேல் போனாக அடித்து ஊரிலிருந்து அம்மா சகோதரர்கள் படும் கஷ்டங்களைக் காரணங்களாக்கி யேர்மனிக்கு மதுவை வரச் செய்தாள்.

வந்து ஹோல் எடுத்து, தாலி கட்டி திருமதி. சபேசன் ஆகும் வரையிலான அந்த
மூன்று மாதங்களும், மது சிட்டுப் போல் சிறகடித்துப் பறந்து திரிந்தாள்.
சபேசனின் கடைக் கண் பார்வையில் களித்திருந்தாள்.

கூட்டுக் குடும்பமாய் சுவேதா மகேசன் ஒரு அறையிலும், மது சபேசன் இன்னொரு அறையிலும், சபேசனின் நண்பன் கண்ணன் இன்னும் ஒரு அறையிலுமாக அந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த சில நாட்களுக்குள்ளேயே, மகேசனின் நடவடிக்கையில் ஏதோ தப்பிருப்பதை மது உணர்ந்து கொண்டாள்.

குளித்துக் கொண்டிருக்கையில் திறப்புத் துவாரத்தில் நிழலாடுவதும், உடை மாற்றிக் கொண்டிருக்கையில், எதேச்சையாக உள்ளே நுழைவது போல் மகேசன் அவள் அறையில் நுழைவதும,; எதேச்சையான விடயங்கள் தான் என்று மதுவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆனாலும் சந்தோசமான குடும்பத்தில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் துணிவின்றி, மௌனித்திருந்து மனதுக்குள் சஞ்சலப்பட்டாள்.

சுவேதா வேலைக்குப் போகும் நேரத்தில் தனது வேலை நேரத்தை மாற்றி மகேசன் வீட்டில் நிற்கத் தொடங்கியதுமல்லாமல் - hP போட்டுத் தா. பக்கத்திலை
இருந்து சாப்பாடு போட்டுத்தா. என்னோடை கதை....... என்று தொல்லைப் படுத்தவும், அவள் அதற்கு மறுக்கும் பட்சத்தில் அவளை மூர்க்கமாகத் தாக்க முற்படவும் தொடங்கிய போதுதான், அவள் துணுக்குற்று, சபேசனிடம் - உங்கள் அண்ணனின் நடவடிக்கை சரியில்லை - என்று முறையிட்டாள்.

முதலில் புரியாது விழித்த சபேசன், என்ன சொல்கிறாள் என்று புரிந்ததும்
- என்ரை அண்ணனை எனக்குத் தெரியும். நாங்கள் ஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்த குடும்பம். இப்பிடியான கதையளைச் சொல்லி எங்களைப் பிரிக்கலாம் எண்டு மட்டும் நினைக்காதை. - புழுவைப் போல மதுவைப் பார்த்து பொரிந்து தள்ளினான்.

வெகுண்ட மதுவின் மனதுள் அன்றுதான் சபேசனிலிருந்த காதல் மயக்கம் மெதுமெதுவாய் கரையத் தொடங்கியது. - மனைவி நான் சொல்லுறன். நம்ப மறுக்கிறானே - என்று சினப்பட்டாள்.


குழந்தை பிறந்ததும் மகிழ்வில் எல்லாவற்றையும் மறக்க முயன்றாலும், மகேசனின் அருவருப்பான லீலைகளில் வாழ்க்கையையே வெறுத்தாள். தனிக்
குடித்தனம் போய் விடுவோம் என்று சபேசனிடம் மன்றாடிப் பார்த்தாள்.

பலனில்லாது போக, அக்கா சுபேதாவிடம் தனது அவஸ்தைகள் பற்றிச் சாடை மாடையாகச் சொல்லிப் பார்த்தாள்.

- உனக்கு அடக்க ஒடுக்கம் இல்லை. பெரியாக்களை மதிக்கிற குணமும் இல்லை. அவரே உன்ரை அடங்காப்பிடாரித் தனத்தைப் பற்றி என்னட்டைச் சொல்லிப் பேசினவர். நீ அடங்காமல் வாழுற ஆசையிலை, சாமிப் போக்கிலை வாழுற அவரையே நாக்கூசாமல் குறை கூற நினைக்கிறாய். இப்பிடி ஒரு தங்கைச்சி கிடைச்சதை நினைக்கவே எனக்கு வெட்கமாய் இருக்கு.

சுவேதா சீறிய சீறலில் மது அடங்கிப் போனாள். ஒடுங்கிப் போனாள். அனாதையாக உணர்ந்தாள். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அந்த வீட்டுக்குள் நடக்கும் அநியாயங்களை மென்று விழுங்கினாள்.

மகேசனுக்கு இது நல்ல வசதியாகப் போய்விட்டது. பகல் வேலையையே விட்டு விட்டு இரவில் வேலை செய்யத் தொடங்கினான்.
பகலில் இவளின் அழகிய மேனியைத் தொடுவதிலும், உரசுவதிலும் கண்ணாயிருந்தான். மறைமுகமாகக் கட்டிலுக்குக் கூட அழைத்துப் பார்த்தான். அவள் மறுக்கும் நேரமெல்லாம் மூர்க்கம் பிடித்தவனாய் அவளை அடிக்கவும் உதைக்கவும் முயற்சித்தான்.
இப்படியான சமயங்களில்தான் கண்ணன் இவர்கள் விடயத்தில் தலையிடத் தொடங்கினான்.

இந்த நரக வாழ்க்கையின் நான்கு வருட ஓட்டத்தில் மது இரண்டாவது குழந்தையையும் பெற்றிருந்தாள்.
தனிமைப் படும் நேரத்திலெல்லாம், தன்னைக் காத்துக் கொள்ள மதுவே கண்ணனை அழைக்கத் தொடங்கியுமிருந்தாள்.

அண்ணன் மேல் கண்மூடித்தனமான பாசம் வைத்திருக்கும் சபேசனோ, கணவன் மேல் அதீத நம்பிக்கை வைத்திருக்கும் சுபேதாவோ தராத பாதுகாப்பை, கண்ணன் தந்ததில் கண்ணன் மீது தன்னையறியாமலே பாசமாகிப் போனாள்.

மகேசன் - அவன் உன்ரை புருசனோ - என்று கேட்கிற ஒவ்வொரு தருணத்திலும் அவளுக்கு கண்ணனிடமான மன நெருக்கம் இறுக்கமாகிக் கொண்டே போனது.

அந்த மனநெருக்கம் தப்பென்று தெரிந்தும், தப்பிக்க முடியாமல் மது தடுமாறினாள். கட்டிய கணவன் பக்கத்தில் கட்டிலில் து}ங்கிய போதும், மனம் துப்புக் கெட்டு பக்கத்து ரூம் கண்ணனைத் தொட்டுத் தொட்டு வருவதைத் தடுக்க முடியாமல் தவித்தாள்.

நான் என்ன கெட்டவளா? ஏன் இப்படியானேன்? தன்னையே கேள்விகளால் துளைத்தாள்.

-சபேசன் என் கணவன்தான். ஆனாலும் காதலிக்க முடியவில்லையே. வெறுப்பில்லா விட்டாலும் மனதால் விரும்ப முடியவில்லையே!
ஏன் இப்படியானது? இவனுடனான நான்கு வருட வாழ்க்கை கசந்து விட்டதா? அல்லது கசக்க வைத்தானா?

பருந்தாகத் திரியும் இவன் அண்ணன் முன் நான் கோழிக்குஞ்சாய் நடுங்குவதைக் கூடக் கண்டு கொள்ளத் தெரியாத இவனை என்னால் கணவனாகவே கருத முடியவில்லையே! - தானே தனக்குப் பதிலும் சொன்னாள்.

இரவு விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில், மது நினைவுகளால் கண்ணனைத் தழுவிக் கொண்டிருந்தாள்.

சந்திரவதனா
யேர்மனி


ஒரு பிற்குறிப்பு
-------------------------
ஐந்து வருடங்களின் பின் கலாச்சாரமும் பண்பாடும் தன் கழுத்தை நெரித்து விடப் போகிறதே என்ற பயத்தில், குடல் தெறிக்க ஓடிய மது, வேகமாக வந்த ரெயின் ஒன்றில் மோதி, யேர்மனிய நகரமொன்றின் தண்டவாளங்களில் இரத்தமும் சதையுமாகச் சிதைந்து போனாள்.
அவளைக் கூட்டி அள்ளி.................!


பிரசுரம் - ஈழமுரசு (30 செப்டெம்பர் - 06 ஒக்டோபர் 1999)

Saturday, May 22, 2004

விடுபடல்

சு. தர்ம மகாராஜன் - இலங்கை

தன்னைச் சூழவுள்ள மனிதர் கூட்டத்திலிருந்து விலகி, மனித நடமாற்றமற்ற நிசப்தமான ஒரு பிரதேசத்தின் ஒரு மூலையில் அடங்கி இருக்க வேண்டும்போல், அவளது உள் மனது தனிமையைத் தேடித் தவித்தது. சுற்றிலும் தாக்கும் பார்வைக் கணைகளிலிருந்து தப்புவதற்கு தனிமைக்குள் அடங்கினால்தான் முடியும். வாழ்க்கையின் பல பிரச்சனைகளின் இறுதித் தீர்வு அதிர்ஷ்டவசமாக அவளுக்கு தனிமையில்தான் கிடைத்திருக்கிறது. யாருடைய தலையீடுகளையும் பொருட்படுத்தாது, ஒரு கணத்தில் குற்றவாளியாகவும், இன்னுமொரு கணத்தில் குற்றம் சாட்டுபவளாகவும், சில நேரங்களிலே தானே ஒரு நீதிபதியாகவும் நின்று, தன் மனத் தவிப்புகளுக்கான பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள தனிமை உதவியாய் இருந்திருக்கிறது.

தனது இருபத்தியாறாவது வயதில், முதல் காதல், சாதியாலும், பணத்தாலும் முறித்துக் கொண்டு விலகியபோது, உலகமே வெறுத்துப்போய் துவண்டு வீழ்ந்திருந்தபோது, தனிமைதான் தீர்வு கொடுத்தது. காதலன் எனும் வேஷத்தில், அவன் தன்னை பயன்படுத்தி, ஆசைகள் கொடுத்து, இறுதியாய் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கித் தள்ளிவிட்டபோது, அவள் உண்மையிலும் வாழ்க்கையின் இறுதிக் கிடங்கில் வீழ்ந்ததைப் போல்தான் உணர்ந்தாள். கிடங்கின் ஒரு மூலையில் ஒதுங்கும் தவளையைப்போல், வீட்டின் ஒரு அறையில் அடங்கி, குடும்பத்தின் வசவுகளிலிருந்தும், சமூகத்து பார்வைக் கணைகளிலிருந்தும் ஒதுங்கிக் கொண்டாள். அந்த ஒதுங்கலிலான தனிமை, அவளை உசுப்பிவிட்டது. வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி இடப்போனவளுக்கு, அதிர்ஷ்டவசமாய் தனிமையின் சிந்தனை மீளெழச் செய்தது. அன்றிலிருந்து, துக்கமானாலும் தனிமை, மகிழ்ச்சியானாலும் தனிமை. யாருடைய உதவியுமின்றி தனிமையாய் மன உணர்வுகளை தனக்குள்ளேயே பகிர்ந்து உள்வாங்கிக் கொள்ள பழகிக் கொண்டாள்.

இன்றும் அப்படித்தான், தனிமை தேவைப்படுகிறது. உள்ளத்துள் உருண்டுக் கொண்டிருக்கும் இனம் காண முடியாத, கணக்கும் உருண்டையை உடைக்க மனம் தனிமையைத்தான் தேடுகின்றது. தன்னைச் சுற்றியிருக்கும் கூட்டம் தானாய் கலையும் மட்டும் காத்திருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது.

பார்வைக்கு நேரே தெரியும் யன்னலினூடாக வெளியே நோக்கினாள். அங்குமிங்கும் நடமாடும் சனத்துக்கிடையே, வெள்ளைக் கொடிகளாலான அலங்காரம் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டவுடன் மனதுக்குள் இருக்கும் அந்த உருண்டை, மேலும் கீழும் வேகமாய் உருளத் தொடங்கியது.

நான்கு வருடங்கள் தட்டிக் கழித்தலின்பின், குடும்ப நெருக்கடியில் நசிந்து, மனதின் விருப்பம்கூட எண்ணாது, குமாருக்கு கழுத்தை நீட்டியபோது, பல அலங்காரங்களோடும், மேள முழக்கங்களோடும், பல பெரியோர்கள் ஆசிர்வாதங்களோடும்தான் கழுத்தில் தாலி ஏறியது. கழுத்தில் தாலி கனக்க, உடல் மேல் அவன் தேகம் கணக்க, சாராய நெடியுடனான முதலிரவின் வேதனை தனிமையைத்தான் தேடியது. தேகங்களின் உணர்வுப் பகிர்தலில் அவனது சுயநலம் அவளை தனிமையில் கண்ணீர் வடிக்க வைத்தது. எல்லை மீறிய போதையுடனான அவனது செயற்பாடுகள் ‘‘போகப் போக சரியாயிடும்’’ என்கிற பெரியோரின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து சகித்துக் கொண்டாள்.

வாரத்தில் நான்கு நாட்கள், இரவில் அவனது எல்லை மீறிய குடிபோதையும், அதன் பின்னாலான பலாத்காரமான புணர்தலும், தவிர்த்து ஒதுங்கிய போதான அடியையும், உதையையும் அவள் தனிமையோடு பகிர்ந்து கொண்டாள்.

இரவுகள் என்றாலே பயம், எங்கேயாவது ஓடி ஒதுங்கிக் கொள்ள வேண்டுமென்ற, அவளது தனிமையான தீர்வு, வயிற்றில் உருப்பெற்றிருந்த கருவும், அதனது சகமான வருடலாலும் மெய்மறக்கச் செய்தது.

தனது இரண்டாவது கரு, குடிபோதையில் அவன் உதைத்த உதையால் கலைந்துபோன போது, தளர்ந்த வாழ்க்கையின் பிடிப்பு, தன் இரண்டு வயது பிள்ளையின் மழலை மொழியின் தனிமையில் மீண்டும் பற்றிக் கொண்டது.

போகப் போக தேகத்தின் இச்சை இறந்துபோய், ஒவ்வொரு இரவும் அவனுக்கு, ஒரு பிணமாய் புணர்தலில் ஈடுகொடுத்தாள். குடிபோதையின் இயலாமையும், அதனாலான நரம்பின் வீரியக் குறைவும் அவனை பாதியிலேயே சோர்வடையச் செய்தது. அவனது சோர்வும், இயலாமையும் அவளில் சந்தேகம் கொள்ள வைத்தது. சந்தேகத்தின் உச்சத்தில் ஊர்கூட்டி வார்த்தைகளால் அவள் துகிலுரித்தான்.

அவளது மானம்காக்க கிருஷ்ணர்கள் வரவில்லை. பதிலாக தமக்கிடையே கோடு போட்டு பிள்ளையோடு முடங்கிக் கொண்டாள்.

அவள் கணவனை உதறிய சமூகம், அவளை பரிதாபமாய் விமர்சனம் பண்ணியது. ஆனால், அவனிடமிருந்து விலகவிடாது அவளை கலாசாரத்தால் நசுக்கியது.

தன் பிள்ளையின் எதிர்காலம் நினைத்து, திருமணமாகி ஐந்து வருடங்களின்பின், முதன் முதலாய் கணவனின் எதிர்ப்பையும் மீறி வேலைக்குச் சென்றாள். எப்போதும் போல் தனிமைதான் அவளுக்கு அந்த தீர்வைக் கொடுத்தது. ஆரம்பத்தில் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தவன், பின் ஏனோ பேசாது விட்டு விட்டான்.

அவள் உழைப்பின் சந்தோஷத்தைப் பிள்ளையோடு தனிமையில் அனுபவித்தாள். சந்தோஷமாய் வேலைவிட்டு வீடு திரும்பிய ஒரு பொழுதில்தான், அவன் விபத்தில் இறந்த செய்தி கிடைத்தது. ஏனோ மனம் பதறவில்லை. நிதானமாய் ஹாஸ்பிடல் செல்ல, அவளுக்கு முன்னமேயே அவன் உறவுகள் கூட்டம் கூடியிருந்தது.

வீடு திருமணத்திற்கு பின், அவனது மரணத்தில், சனநெரிசலால் நிறைந்து காணப்படுகிறது. தனிமையையே நாடிப் பழகியவளுக்கு, அதிகளவான சனநடமாட்டம் தொந்தரவைக் கொடுத்தது. ஒரு அறைக்குள்ளேயே அடங்கியவளை, உறவினர் கூட்டம் இழுத்து வந்து, சவத்தினருகே குந்த வைத்து, வேடிக்கைப் பார்த்தது. பிள்ளையை மடியில் வைத்துக்கொண்டு, ஒன்றும் செய்வதறியாது மரக்கட்டையாய் அவளும் வேடிக்கைப் பார்த்தாள்.

இன்று இரண்டாவது நாள். இன்னும் சிறிது நேரத்தில் அவனது இறுதிப் பயணம். அவள் மனம் தவித்தது. ஆவல் கொண்டது. எதற்காகவென்று இனம் காண முடியாது தடுமாறியது. பிள்ளையின் தலை வருடியவாறே உயிரற்ற அவனது முகத்தைப் பார்த்தாள். போதை வெறியில் வாயில் எச்சில் வடித்தபடி, புணரத்துடிக்கும், அந்த விகாரமான முகத்தைவிட, உயிரற்ற உப்பிய முகம் சற்ற ஆறுதலை அளித்தது.

மரண வீட்டில் கூட்டம் சலசலத்தது. அவளை பெண்கள் கூட்டம் தனியறையில் அமர்த்தியது. திருமணத்திற்கு பின் மீண்டும் ஒரு அலங்காரம். அவள் நினைவுகள் பின் நகர்ந்து மீண்டன. அறையிலுள்ள சிறுயன்னலினூடாக பார்வையை செலுத்தினாள். அவனுக்கான இறுதி மரியாதை செலுத்துவதில் குழுமியிருந்த கூட்டம் மும்முரமாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. உள்மனம் வெளிக்காட்ட இயலாத ஒரு உணர்வால் நிறைந்திருந்தாலும், அதன் கனம் முனனிலும் பார்க்கக் குறைவதை உணர்ந்தாள். அக்கூட்டத்தினரிடையே தன் பிள்ளையின் முகம் கண்டு மனம் பதறியது. கண்கள் நீர்த்திரையால் வெளிகாட்சிகளை மங்கலாக்கின.

இப்போது அவளுக்கான நேரம். ஒரு சில சடங்குகளை முடித்து, இரு பெண்கள் கைப்பிடித்து சவத்தினருகே புரட்டிப் போட்ட ஒரு உரலில் அவளை அமர வைத்தார்கள். அவர்களது முகத்தில் அப்பியிருந்த சோகம் கண்டு, அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது. தனக்குள் இல்லாத ஒன்று, அவர்களுள் வெளிப்படுவதில் இருந்த ஹாஸ்யத்தை மனதுக்குள்ளேயே ரசித்தாள். சவத்துக்கு முதுகுகாட்டி அமர்ந்ததில் மனதுக்கு சற்று ஆறுதலாய் இருந்தது.

நேரம் போகப் போக, அவள் மனது இருப்புக் கொள்ளவில்லை. சடங்குகளினாலான சங்கடத்தை தவிர்க்க தலையை கவிழ்த்து நிலம் பார்த்தாள். அவளை சுற்றியிருந்த பெண்களின் கால்கள்தான் கண்ணில் பட்டது. அவை தன் கால்களிலும் பார்க்க நேர்த்தியாக இருப்பதைப் போல் தோன்றியது. திடீரென்று பெண்களிக் கால்களது இடமாற்றம் அவளை உசுப்பியது.

ஒரு சீலையின் மறைவில் இரு பெண்களது உதவியோடு அவள் அணிகலன்கள் கழன்ற வீழ்ந்தன. நெற்றிப் பொட்டு துடைக்கப்பட்டது. இறுதியில் ஒரு வெட்டவெளி அமைதியில், அவளது கழுத்தில் கனத்துக் கொண்டிருந்தது அறுந்து வீழ்ந்தது. அவள் கண்களிலிருந்து இரு சொட்டு கண்ணீர் துளிகள் வழிந்து கன்னத்தில் உருண்டோடின.

ஏதோ ஒரு இருக்குப் பிடியிலிருந்து விடுபட்டதைப் போல், அவள் நெஞ்சுக் குழியிலிருந்து பலமாய் ஒரு பெருமூச்சு வெளிவந்தது.

முற்றும்

சு. தர்ம மகாராஜன்
இலங்கை