Sunday, June 27, 2004

இரண்டாம் ஜாமங்களின் கதை - 5

சல்மா

நடு இரவில் திடுக்கிட்டுக் கண் விழத்தாள் ஆமினா. அவளது கை அவளையறியாமலேயே அருகில் பாயைத் துழாவிற்று. பிர்தவ்ஸின் கதகதப்பான உடல் கையில் தட்டுப்பட்டவுடன் நிம்மதியடைந்தவள் ‘துவோய் யா அல்லாஹ்’ என முனகினாள். பிர்தவ்ஸை இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படி வயிற்றுக்குள் போட்டுப் படுத்திருக்கப் போகிறோமோ என்கிற நினைவு எழுந்து, பெரும் துக்கமாக மாறி தொண்டையை அடைத்தது. சொஹ்ராவின் கணவன் கரீமிடமிருந்து அவளைப் பாதுகாத்த காலம் போய், இன்று மனசொடிந்த நிலையில் என்னமும் செய்துகொண்டு உயிரைப் போக்கிக்கொள்வாளோ என்கிற பயம் ஆமினாவை தூங்க விடாமல் செய்துகொண்டிருந்தது.

அவளுக்குத் தன் திருமணம் நடந்த விதமும் தன் தாய், தந்தை, தங்கை ஞாபகமும் ஏனோ வந்தது. தன் தந்தை கனி ராவுத்தர் நிறம் தொட்டுப் பொட்டு வைத்துக்கொள்ளலாம் போலக் கறுப்பு. அம்மாதான் எத்தனை வெண்மையாக அழகாக இருப்பாள். அவள் ஒரு அறைக்குள் உட்கார்ந்திருந்தாள் என்றால் ஒரு மின்னல் கீற்று உள்ளேயிருப்பது போல பிரகாசமாக இருக்கும். விளக்காங் குழியிலிருக்கும் சிம்னி விளக்கின் ஒளியில் அவள் நிறம் தகதகப்பதுபோல இருக்கும். அம்மாவுக்கும் அத்தாவுக்கும் எப்போதாவது சண்டை வந்திருக்குமாவென ஞாபகப்படுத்திப்பார்த்தாலும் நினைவுக்குள் அப்படி ஒரு விஷயமே நிகழ்ந்ததில்லை என்றுதான் இருந்தது.

கனி ராவுத்தர் தனது வியாபாரத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பினாரென்றால் ஏதோ ஆர்ப்பாட்டமாகத்தானிருக்கும். தான் கொண்டு வந்த பணத்தினை வைத்து தடபுடலாகச் செலவு செய்து ஊரைக் கலக்கிக்கொண்டிருப்பார். ஒரே நேரத்தில் கறிக்கார நைனார் கடையில் போய் நான்கு ஆட்டுத் தலையை வாங்கி தெருவில் அனைவரும் பார்க்கும்படி இரண்டு கைகளிலும் இரண்டிரண்டாகக் காதைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு வருவார். தெருப் பெண்கள் பேசிக்கொள்வார்கள், "இவருக்கு எதுக்கு இத்தினி பவுசு" என்று.

பொழுதுபோகாத நேரத்தில் பஞ்சாயத்துக் கல்லில் அமர்ந்து சீட்டாடத் தொடங்குவார். அப்படிச் சீட்டாடும் பொழுதுதான் இஸ்மாயிலும்கூட வந்து ஆடத் துவங்கியதும். ஒரு நாள் விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்த இஸ்மாயில் கனியிடம் "பணம் வெச்சு விளையாடப் புடிக்கலே மாமு, எங்கிட்டே இல்லாததா" என்று சொல்லி எழுந்திருக்க.

"பிறகு என்ன வச்சு வெளையாட மாப்பிள்ளை சொல்லு" என்று குஷியாக ராவுத்தர் கேட்க.

"உங்க பொண்ணை வச்சு ஆடலாம். நான் ஜெயிச்சா அவளைக் கட்டிக்கிர்றேன்" என்று இஸ்மாயில் சொல்ல அவரும் உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

"உனக்குப் பொண்ணுக் குடுக்க எனக்குக் கசக்குதா. இருந்தாலும் வெளையாடிப் பாத்துடுவோம்" என்று ஆட்டத்தை ஆரம்பிக்க அன்று மாலை ஆமினா பள்ளியிலிருந்து திரும்பிய பிறகு, ஒரே சந்தோஷமும் பாட்டுமாக வந்தவர், தெருவில் நின்று எதையோ சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆமினாவை "ஏண்டி பொண்ணு இங்கனெ வா" என்று கூப்பிட்டார். குடுகுடுவென ஓடிவந்து அவர் மடியில் உட்கார்ந்து கொண்டு என்ன என்கிற மாதிரி அவர் முகத்தை நிமிந்து பார்த்தாள்.

"ஏய் கத்துஜா, வா இங்கே" என்று உற்சாகமாகக் கூப்பிட்டவர். உம் மகளுக்குக் கல்யாணம் பேசிட்டு வந்திருக்கேன் ஓடி வா" என்று அடுப்படியை நோக்கி தலையை எட்டிப் பார்த்துவிட்டுத் தன் மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டார்.

அறைகுறையாகக் காதில் விழுந்த விஷயத்தைத் தெளிவாக்கிக்கொள்ளும் பொருட்டு தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்தாள் கத்துஜா. அவளுக்கு சிறு வயதில் காலில் அம்மி விழுந்து நைத்து விட்டதால், நடை நேராக வராது. இழுத்து வைத்துத்தான் நடப்பாள்.

அவரது அருகில் வந்தவள் தரையில் விரித்திருந்த தடுக்கில் அமர்ந்தபடி, "என்ன சொன்னீங்க" என்றாள் ஆர்வமாக.

"பெரிய வீட்டு இஸ்மாயில் இல்ல. அவன் ஒம் பொண்ணை கட்டிக்குடுன்னு கேட்டான். சரி கட்டிக்கடான்னு சொல்லிட்டேன்" என்று சொல்லி சத்தம்போட்டு சிரித்தார், எப்படி என் சாமர்த்தியம் என்பதுபோல.

அவர் எதிர்பார்த்தபடி கத்திஜாவின் முகத்தில் பெரிய சந்தோஷம் எதுவும் தோன்றாதது அவருக்கு ஏமாற்றமாக இருக்க அதனை மறைத்துக்கொண்டபடி, "ஏன் ஒண்ணும் சொல்ல மாட்டிகளோ" எனக் கிண்டலாகக் கேட்டு அவளைக் கூர்ந்து நோக்கினார்.

"அதுக்கில்லேங்க" என்றவள் "இவளுக்கு இப்போதான் பத்து வயசு முடிஞ்சிருக்கு, என்ன அவசரம்னுதான். அந்த இஸ்மாயிலும்கூட மொதத் தாரம் கட்டி இழந்து வயசும் முப்பதத் தாண்டிக் கெடக்குமுல்ல" என்று தயக்கத்துடன் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியவள், அவரது பதிலை எதிர் நோக்கி உட்கார்ந்திருந்தாள்.

"இம்புட்டுத்தானாக்கும். நான்கூட என்னவோ ஏதோன்னுல்ல நெனைச்சேன். போடி போ. இதெல்லாம் ஒரு காரணமா?" என்றவர் "ஊர் உலகத்துல இல்லாததச் செய்ற மாதிரியில்ல சலிச்சுக்கிர்ற. நான் வாக்குக் குடுத்தாச்சு. அடுத்த வாரத்துல ஜிம்மாவுல நிக்கா" என்று சொல்லிவிட்டு "சரி சரி, போய் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணி வெச்சுக் குடு" என்று சொல்லியவாறே துண்டை உதறித் தோளில் சுற்றிப் போட்டபடி மிடுக்காக நடந்து திண்ணைக்குப் போனார்.

அடுத்த சில நாட்களில் திருமணம் நடந்தபொழுது ஆமினாவுக்கு அது பற்றிய எந்த புரிதலும் இல்லை. ஊரெல்லாம் ஆச்சரியப்படும் விதத்தில் சாப்பாடும் குதிரை ஆட்டமும் நடந்தது. கனி ராவுத்தர் புளியங்கொம்பு பார்த்துப் பிடித்ததையே ஊரெல்லாம் பேசிப் பொறாமைப்பட்டது. அதே கனி ராவுத்தர் தன் இரண்டாவது பெண் மைமூதுக்குத் தன் வியாபாரத் தொடர்புகள் மூலம் மாப்பிள்ளை பார்த்து முடித்தபிறகுதான் அவரது சந்தோஷமும் உற்சாகமும் பறிபோனது. மணமான இரண்டே மாதத்தில் வீடு வந்து சேர்ந்தாள் மைமூன். அவனோடு வாழவே மாட்டேன் என்றபடி வீட்டின் மச்சு அறையில் நெற்குதிரை ஒட்டி ஒடுங்கிப்போய் அமர்ந்திருந்த அவளிடம் ஆமினாவும் கதிஜாவும் புத்திமதி சொல்லித் திருப்பி அனுப்பிவிட எவ்வளவோ முயற்சித்தும் மன்றாடிப்பார்த்தும் அவள் அசைந்து கொடுக்கவேயில்லை. "முடியாது" என்று மட்டும் சொல்லியபடியேயிருந்தாள். சிம்னி விளக்கின் ஒளி பட்டுத் தெறித்த அவளது பிஞ்சு முகத்திலிருந்த பிடிவாதத்தையும் வைராக்கியத்தையும் இவர்களால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. யாரும் இனி இது குறித்துப் பேசக்கூடாது என்கிற கட்டளையும் அதிலிருக்கவே செய்தது.

தன் குடும்பத்திற்கு நேர்ந்த அவமானம் கதிஜாவைக் காட்டிலும் கனி ராவுத்தரை ரொம்பவே பாதித்தது. தனது சிரிப்பு, பாட்டு, கிண்டல் அனைத்தையும் மறந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்க ஆரம்பித்தார் அவர். கதிஜா அழுததெல்லாம் "நாமதான் பொட்டச்சிக வீட்டுக்குள்ள கிடக்கறோம். அவரு ஆம்பளை நாலு இடம் போக, கொள்ள, கடைத்தெரு போகக்கூட வழியில்லாமப் போயிருச்சே" என்று தான்.

கனி ராவுத்தருக்கு ஆமினாவைப் பார்க்கும் பொழுதெல்லாம் கண்ணீர் கோர்க்கும். "என் பிள்ளை," என்று தனக்குள் முனகிக்கொள்வார். தான் சொன்ன மாப்பிள்ளையை ஒரு மறுப்பும் சொல்லாமல் கட்டிக் கொண்ட தியாகியாகத்தான் அவர் அவளை நினைத்துக்கொள்வார். இப்போதெல்லாம் வெளி உலகத்திற்கோ வியாபாரத்திற்கோ போகாத நிலையில் ஆமினா இஸ்மாயில் தயவில்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. அவன் எத்தனை தங்கமானவன் என தன் மாமனை நினைத்துப் பூரித்துப்போவார். அவர் முன்பு மாதிரி வெளியில் வியாபாரத்திற்க்குப் போவதில்லை என்றாலும் ஏதோ வீட்டிலிருந்தேனும் கொஞ்சம் வருமானத்திற்க்கு வழிபார்ப்போமென நினைத்திருந்ததினால் தினமும் காலை உணவுக்குப்பின் உட்காரும் பலகையை எடுத்துப் போட்டு முற்றத்தில் அமர்ந்துகொள்வார். வெளியிலிருந்து மொத்த விலைக்கு வாங்கி வந்து வைத்திருக்கும் ஊதுபத்திக் கட்டைக் கவிழ்த்து நான்கு நான்காகப் பிரித்துக் கைகளில் எடுத்துக்கொள்வார். பிறகு தனது சிறிய மரப்பெட்டியிலிருக்கும் சென்ட் குப்பிகளை வரிசையாக எடுத்துத் தரையில் அடுக்கி பிறகு ஒவ்வொன்றாகத் திறந்து முகர்ந்து பார்த்து ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு சில துளி அத்தரை உள்ளங்கையில் விட்டு ஒன்றாக்கிக்கொள்வார். பிறகு அதை நான்கு ஊதுபத்திகளின் மீதும் மிருதுவாகத் தடவித்தடவி விடுவார். பிறகு வாசனை சரியாக இருக்கிறதாவென முகர்ந்து முகர்ந்துபார்த்துக்கொண்டிருப்பார். அவருக்கு திருப்தி வரும்பொழுது அதனை ஒரு முறத்தில் அடுக்கிவைத்து முற்றத்து வெயிலில் காயவைப்பார். நாள் முழுக்க அத்தர் பூசிய ஊதுபத்திகளை ரோஸ் வண்ண ஜரிகைக் காகிதங்களில் பத்துப் பத்தாக அடுக்கி வைத்து சுருட்டி நுனி வரை சுருட்டி மடித்து ஒரு அட்டைப் பெட்டியில் அடுக்கத் துவங்குவார். யாருடைய ஒத்தாசையையும் அவர் விரும்புவதில்லை. மிகச் சன்னமான குரலில் தனக்குள்ளாகவே ஒரு பைத்தை முணு முணுத்தபடி வேலை செய்து கொண்டிருப்பார். யாரும் இடையூறு செய்யவோ பேசவோ தயங்கும் விதத்தில் அக்குரலில் வருத்தம் தோய்ந்து நெஞ்சைப் பிழிவதாக இருக்கும். பிறகு அவரே மரப்பெட்டியில் அத்தர் பாட்டில்களை வரிசையாக அடுக்கத் துவங்குவார். ஆமினாவுக்கு அந்தப் பாட்டில்களை பார்க்கப் பார்க்க ஆசையாக இருக்கும். விதவிதமான வடிவங்களில் கலை நயமிக்கதாக இருக்கும். மூடிகளும் மிக அழகழகான வடிவத்தில் இருக்கும். நடுங்கும் தன் கரங்களில் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து இறுக அடைத்திருக்கிறதாவென சரிபார்த்து பத்திரப்படுத்துவார். ஒரு சில நாட்களில் யாரேனும் ஒரு வியாபாரி வந்து ஊதுபத்திக் கட்டுகளை பணம் கொடுத்துப் பெற்றுச் செல்வான்.

- தொடரும்

nantri - Ulagathamizh

No comments: