Friday, May 06, 2005

புதிய மனுசி

- ஆதிலட்சுமி சிவகுமார் -

நிலவின் ஒளியில் கூரைத்தகரங்கள் பளபளத்தன. அவள் தன் உள்ளங்கைகளை ஒருதரம் தடவிப் பார்த்தாள். கரகரப்பாய் காய்த்தபடி கைகள். தன் கைகளால் மண்வெட்டியும் பிக்கானும் பிடித்து அவள் உழைத்த உழைப்பின் அறுவடைதான் இந்தக் தகரங்கள் என நினைத்துப் பெருமைப் படுபவளாய்.. அவள் முகம்.. 'இந்தப் பிஞ்சுகள் ரெண்டும்.. மழையிலையும்.. குளிரிலையும் விறைக்கக் குடாது.." குழந்தைகளைத் திரும்பிப் பார்த்தாள். பாயைவிட்டு விலகிப்போய் ஓரமாய் தூங்கிக்கொண்டிருந்தார்கள்... மூத்தவள் ஐஸ்வர்யா அச்சில் வார்த்த மாதிரி தகப்பனையே போன்று அகலிகா கொஞ்சம் கறுப்பு. ஆனால் இவளைப்போல கம்பி கம்பியாய் நீளமான தலைமுடி.

"மூத்தபிள்ளை சரியாய்த் தேப்பனையே மாதிரி... நல்ல நேரம் பொம்பிளைப் பிள்ளையாய்ப் போச்சு... இல்லாட்டி.. தேப்பனை முடிச்சுப்போடும்..."
ஐஸ்வர்யா பிறந்திருந்தபோது உறவினர்கள் சொன்னார்கள். ஆனால் என்ன விதியோ.. அவன் இல்லாமற்தான் போய்விட்டான். மனது கனத்தது.

மற்றைய நாட்களில் என்றால் கூலிவேலைக்குப் போய்விட்டு வரும் அவள் பாயிற் சரிந்தவுடனேயே தூங்கிப்போவாள். இன்றைக்கு அவளால் முடியாமலிருந்தது. ஆறு வருடங்களாய் ஒதுக்கித்தள்ளிவிட்டு வேகமாய் முன்னேறிய துன்பங்கள் எல்லாமாக ஒன்று திரண்டு தன்னைத் துன்புறுத்துவதாக அவள் உணர்ந்தாள். அழக்கூடாது என்கிற வைராக்கியத்தோடு இறுகிப் போயிருந்த அவளின் விழிகள் ஈரலித்தன.
அவள் தான் வைராக்கியமானவள் என்பதைப் பல தடவைகள் உணர்த்தியவள்.. அவள் அவனைக் காதலித்தபோது.. உற்றம் சுற்றம் ஒன்றாகி அவர்களின் உறவை எதிர்த்தபோது - அந்த எதிர்ப்புக்களை எல்லாம் உதறி அவனையே திருமணம் செய்துகொண்டது முதல் வைராக்கியம். அவள் வீட்டில் நான்காவது பெண்பிள்ளை. மூத்தவர்கள் மூவரும் திருமண வாய்ப்பின்றி முதிர்ந்துகொண்டிருந்தார்கள். அவனுடைய வீட்டில் மூன்று பெண்கள். இரண்டு ஆண்களில் இவன் இளையவன். இருவரும் தாமாகவே தம் வாழ்வைத் தீர்மானித்துக் கொண்டார்கள். மூத்தவள் ஐஸ்வர்யா பிறந்து... அகலிகாவும் பிறந்து.... அகலிகா ஆறுமாதக் குழந்தையாயிருந்தபோதுதான் அந்தப் புயல் மையங்கொண்டது.

'சத்ஜெய.." கிளிநொச்சி மீதான பெரும்படையெடுப்பு. ஒரு மையிருட்டுப் படர்ந்திருந்த சாமப்பொழுதில்.. ஊரோடு சேர்ந்து இடம்பெயர்ந்து... ஸ்கந்தபுரத்தில் ஒதுங்கினார்கள்... முருகன் கோயில்.. இரண்டாம் பாடசாலை.. அகதிக்குடியிருப்பு என்று நாட்கள் நகர்வடைந்தன.

ஒரு அதிகாலைப்பொழுது அவன் காலை நீட்டி கப்போடு சாய்ந்து அமர்ந்திருந்தான். அவன் முகம் ஒட்டி உலர்ந்து.. உதடுகளும் காய்ந்து தெரிந்தன. கன்னங்களில் வளர்ந்து சுருண்டிருந்த உரோமங்கள்.. அவள்கூட மெலிந்து போய்விட்டாள். சரியாகச் சாப்பிட முடியாதிருந்தது. பிள்ளைகளுக்கு மட்டும் ஒரு நேரச் சாப்பாடு எப்படியோ கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவன் வேலைசெய்த மில் முதலாளி வீட்டுக்கு வந்திருந்தார்.

"மிசின் பெட்டி ஒண்டு ஒழுங்கு செய்திருக்கிறன் ராசன்.. ஒருக்கா அங்க உள்ள சாமானுகளை ஏத்த வேணும்..."

"ரவுண் முழுக்க ஆமி நிக்கிறானெண்டு கதைக்கினம்..."

"உதெல்லாம் கட்டுக்கதை.. ரவுணுக்கை பெடியள் தான் நிக்கிறான்கள்.. நேற்றும் முருகேசற்றை வீட்டுச்சாமான்கள் ஏத்தி வந்தவையாம்..."

மரத்தின் கீழ் அடுப்பெரித்துக்கொண்டிருந்த அவளுக்கு உரையாடல் கேட்டது.

"என்ன கமலி.. மனுஷன் விட்டிட்டுப் போகாது போல..."
அவளிடம் வந்து அவளுக்கு மட்டும் கேட்கக்கூடியதாகக் கேட்டான்.

"அந்த மனுசனும் எங்கடை கலியாணத்துக்கு உதவினது.. ஏதோ யோசிச்சு செய்யுங்கோவன்..."

அவன் மரக்கொப்பில் கொழுவியிருந்த சேர்ட்டை எடுத்து உதறிப்போட்டான். ஓலைத் தட்டியில் செருகிக்கிடந்த சீப்பை எடுத்து தலை வாரினான்.

"பாணும் சம்பலும் கிடக்கு... தரட்டே..."

"இல்லா.. அந்தாள் பாத்துக்கொண்டிருக்குது... போட்டுவாறன்.."
கால்களுக்குச் செருப்புக்கூட இல்லாமற்தான் போனான்.

அன்றுமுழுவதும் அவன்வரவில்லை. அவள் பதறிப்போய் அவனைத் தெரிந்த எல்லோரிடமும் விசாரித்தாள். அவனுக்கு என்ன நடந்ததென்று தெரியாமலே போய்விட்டது. பிள்ளைகளை அணைத்துக்கொண்டு இரவுபகலாய் அழுதாள்.
உறவினர்கள் யாரும் ஏனென்று கேட்கவில்லை.

அவனுடைய அண்ணன் வீடு கொஞ்சத்தூரத்தில் இருந்தது. அவள் இரண்டு குழந்தைகளையும்கொண்டு ஒருநாள் அங்கு போனாள்... உதவிக்காக அல்ல. அவனைப்பற்றி ஏதாவது அறிந்தீர்களா என்று அறிவதற்காக.... அவர்களுடன் இடம் பெயர்ந்துதான் இருந்தார்கள்.

"ஆமி நிக்கிறானெண்டு தெரிஞ்சு கொண்டும்.... கூலிக்காக அவனை அனுப்பிச் சாகடிச்சனி.. பிறகேன் இஞ்ச வந்தனி?.. போய் எங்கையெண்டாலும் எச்சில் இலை பொறுக்கு...?"

அந்த வார்த்தைகளின் கூர் அவள் இதயத்தைக் குத்திக் கிழித்தது. அவனின் அண்ணன்தான் சொன்னான். தன்னுடைய தம்பி இறந்துவிட்டானே என்கிற ஆதங்கத்தில் அந்த வார்த்தைகள் அவசரமாய்ப் பிறந்திருக்கலாம் என அவள் சமாதானங்கொள்ள முயன்றாலும்... மனது பட்டகாயத்திலிருந்து மீள மறுத்தது.

'என்ர இந்தக் கையளால எச்சில் இலை பொறுக்க மாட்டன்.. என்ன கடினமான வேலையெண்டாலும் செய்து.. என்ர பிள்ளையளைப் பாப்பன்..." வைராக்கியத்தோடு திரும்பி நடந்தாள்.

அகதிக் குடியிருப்பில் பல பெண்கள் கூலிவேலைக்குப் போனார்கள். அவர்களுடன் அவளும் போனாள்.சிறிதளவு கூலிதான். சமாளித்துக் கொண்டாள். கைகளிலும் கால்களிலும் புதியபலம் புகுந்தது. மண்வெட்டி பிடித்தாள். மண் சுமந்தாள்.. கல் அரிந்தாள்... நான்கு வருடங்கள் அவளின் உறுதியோடு கழிந்தன.

மீண்டும் சொந்த இடத்துக்கு வரக்கூடிய வாய்ப்பு... தெருவுக்குத் தெரு சந்திக்குச் சந்தி.. குருதி சிந்தி.. உயிரைவிதைத்து... வணக்கத்துக்குரியவர்கள் இடங்களை மீட்டுத் தந்தார்கள்.. மீட்ட இடங்களில் பல மனிதர்களின் எச்சசொச்சங்கள்... எலும்புக்கூடுகளில் அவனும் இருக்கலாம் என்று எண்ணி... காவல் நிலையங்களில் எலும்புக்கூடுகளைப் பார்த்து வந்தாள். அவனின் இருப்புக்கு உறுதியில்லை. அவள் தான் தனித்துப்போனதை உள்ளூர உணர்ந்து கொண்டுவிட்டாள். அவன் போகும்போது ஆறுமாதக் குழந்தையாக இருந்த அகலிகாவுக்கு இப்போது ஆறுவயது. ஆண்டு ஒன்றில் படிக்கிறாள். ஐஸ்வர்யா உருவத்தில் மட்டுமன்றி சில செயற்பாடுகளிலும் தகப்பனைப் போலவே இருந்தாள்...

அவள் சொந்த இடத்துக்குத் திரும்பினாள். காணிக்குரிய வேலிகளை ஒழுங்காக அமைத்துக்கொண்டாள். அவளின் கைகளிலும் கால்களிலும் போதியளவு பலனிருந்தது. காணியைத் துப்பரவு செய்து சிறிய கொட்டில் அமைத்தாள்.

அருகே அவனுடைய அண்ணனுடைய வீடு. வாழ்ந்து காட்டவேண்டும் என்ற வைராக்கியம் அவளுக்குள் நிலையாயிருந்தது. பகலில் கூலிவேலைக்குப் போனாள்.. இரவில் காணிக்குள் நின்று உழைத்தாள். கடைக்கார மூர்த்தியண்ணர் வீட்டில்தான் தண்ணீர் அள்ளுவாள். கூலிவேலையால் வந்தவுடன் பிளாஸ்ரிக் குடங்களை எடுத்துப்போய் தண்ணீர் சுமந்து வருவாள்.

ஒருநாள்.. ஏதோ அலுப்பில் தண்ணீர் எடுக்கவில்லை. விடிய எழுந்ததும் குடத்தோடு மூர்த்தி அண்ணர் வீட்டுக்குப் போனாள். மூர்த்தியண்ணை ஏதோ அலுவலாக வெளியேபோக சயிக்கிளை உருட்டிக்கொண்டு படலையடிக்கு வந்தவர்.. அவளைக் கண்டதும் முகம் மாறிப்போனார். படலைக்கு அருகில் சயிக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே போனார். அவள் நேராகக் கிணற்றடிக்குப் போய் தண்ணீர் அள்ளினாள்.

"இஞ்ச கமலி..."
அவள் திரும்பிப் பார்த்தாள். மூர்த்தியண்ணரின் மனைவி.

"என்னக்கா?..."

"மனுசன் ஆரையோ சந்திக்கவெண்டு போகவந்தது... உன்னைக் கண்டவுடனை திரும்பி வந்திட்டுது.. நீ புருசன் இல்லாதனி.. இனிமேல் விடிய வெள்ளண முழுவியளத்துக்கு இஞ்ச வராதை.. பின்னேரத்திலை வந்து.. தண்ணி அள்ளிக்கொண்டு போயிடு.."

அவள் ஒரு கணம் ஆடிப்போனாள். அவன் இறந்துவிடவில்லை. இறந்து போனதாக எந்தத் தடயமும் இல்லை. பொருட்களை ஏற்றப்போன இடத்தில் பிடிபட்டு.. எங்காவது உயிருடன் இருப்பான். என்றோ ஒருநாள் அவன் வருவான் என்றே அவள் காத்திருக்கிறாள். அவன் இறந்ததாக யாரும் உறுதிசெய்யாதபோது இவர்கள் தன்னை விதவையாகப் பார்க்கிறார்களே என்று அவள் மனது அழுதது.

ஆனால்.. அவள் கைகளுக்கும் கால்களுக்கும் வலுவிருந்தது. வீட்டின் வடகிழக்கு மூலையில் நிலையம் பார்த்து கிணறு வெட்டத் தொடங்கினாள். பகலில் கூலிவேலை இரவில் கிணறு வெட்டினாள். நிலவும் நட்சத்திரங்களும் அவளுக்குத் துணையாய் நின்றன. மூன்றுமாதகால அயராத உழைப்பு. கிணற்றில் ஐந்து அடிமட்டத்துக்குத் தண்ணீர்...

"ஏன் இப்ப தண்ணி அள்ள வாறேல்லை..."
அவள் அவர்களுக்கு தன் புன்னகையை மட்டுமே பதிலாய்க் காட்டினாள்...

அவளுக்குள் நம்பிக்கைகள் முளைத்தன. வீடிருக்கும் காணிக்குள்ளேயே தோட்டம் செய்ய ஆரம்பித்தாள். பிள்ளைகளைப் படிக்கவைக்கவேண்டும் என்பது மட்டும் அவள் மனதில் குறியாயிருந்தது. இதுவரை பட்ட நோவுகளும் காயங்களும் அவமானங்களும் அவளை வருத்தமுறச் செய்தாலும்.. அவற்றை அவள் பொருட்படுத்தவில்லை.

ஐஸ்வர்யாவுக்கு இப்போது வயது எட்டு. மூன்றாவது வகுப்பில் படிக்கும் அவளுக்கு தைமாதம்தான் சிறிய தோடுகள் வாங்கிப்போட முடிந்தது.

அவனுடைய அடையாள அட்டை இருந்தது. அதைக்கொடுத்து பெரிதாக்கி படம் வைக்குமாறு சிலர் கூறினார்கள். அவள் மறுத்துவிட்டாள்.
"அவர் எங்கையெண்டாலும் உயிரோட இருப்பார்... எப்பெண்டாலும் ஒரு நாள் வருவார்..."

கடின உழைப்பால் அவளின் உடல் முதிர்ச்சியடைந்திருந்தது. முன் நெற்றியில் கொஞ்சம் நரைமுடி கால்களில் சேற்று மண்ணின் படிவு காய்த்துப் போன கைகள்.. அவளுக்கு தன்னைப்பற்றி எதுவித கவலையுமில்லை. ஐஸ்வர்யா இல்ல விளையாட்டுப்போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றுவந்தபோது, பெருமையோடு அவளைக் கட்டியணைத்து மகிழ்ந்தாள்.

பிள்ளைகள் அப்பாவுக்கு என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தை அவள் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தினாள். அவளைப் பொறுத்த வரைக்கும் அவளுடைய வாழ்க்கையில் பிசிறில்லை. கடந்தமுறை பெய்த சிறுமாரிக்குக் கூரை ஒழுகியது. இரண்டு வாரங்கள் அவளின் கைகளும் கால்களும் மிளகாய்த் தோட்டத்தில் இயந்திரமாகின.. வீட்டின் பழைய ஓலைகளைப் பிடுங்கிவிட்டு புதிய தகரங்களை அவள் போடுவித்தாள்... பிள்ளைகள் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காய் அவளின் வியர்வை வீட்டுக் கூரையாய்... குழந்தைகள் மகிழ்ந்தார்கள்.

காலையில் எழுந்து அவள் கிணற்றடியில் பல் விளக்கிக்கொண்டிருந்தாள். பிள்ளைகளுக்கும் வாளிகளில் தண்ணீர் நிரப்பவேண்டும். அடுத்தவீடு அவனுடைய அண்ணன் வீடு நிறைய வாழை நட்டிருந்தார்கள். வளவு சோலையாயிருந்தது. பேச்சுக்குரல்கள் கேட்டன. அண்ணன்காரனும் மனைவியும், "கமலி வீட்டுக்கு புதுசா கூரைபோட்டிருக்கிறாள்.. இவ்வளவு காசு எப்பிடி உவளுக்குக் கிடைக்குது..."

"உதுகூட விளங்கேல்லையே உனக்கு?... மிளகாய்த் தோட்டக்காரன்தான் அள்ளி அள்ளிக்குடுக்கிறான்.. இவளும் அவன் காணாமற்போயிட்டானெண்ட கவலையில்லாமல் தோட்டக்காறனோட இருக்கிறாள்..." அவள் ஒருகணம் ஆடிப்போனாள்.

"என்ர உடம்பை வருத்தி.. என்ர வியர்வையை ஊத்தி நான் உழைச்ச உழைப்புத்தான் இது..." அவள் இரு கைகளாலும் தலையைப் பிடித்துக்கொண்டு கீழே இருந்தாள்.

உதவிகேட்டபோது உதவாமல் அவமானப்படுத்தியவர்கள்-தான் கடினப்பட்டு உழைத்து உயர்ந்தபோது பாராட்டவும் முடியாமல், நயவஞ்சகத்தனமாய் பேசுவது அவளுக்கு வேதனையளித்து.

ஆனால்.. இரவு முழுவதும் ரணமாய் வலித்த அந்தச் சொற்கள் பொழுது புலர்ந்தபோது.. அவளை வருத்தவில்லை. வழமைபோன்று அவளுக்குள்ளிருந்த வைராக்கியம் அவளை உஷாராக்க... அவள் புது மனுஷியாய்.. காய்த்துப்போன கைகளை வீசி நடந்தாள்.

ஆதிலட்சுமி சிவகுமார்
Quelle - Erimalai Feb 2005