Wednesday, June 16, 2004

இரண்டாம் ஜாமங்களின் கதை - 2

"இப்பத்தான் வர்றியா ராபியா" என்றபடி அறைக்குள் எட்டிப்பார்த்த றைமா பெரியம்மாவை ஓடிப்போய்க் கட்டிக்கொண்டாள். "நாம இப்ப குப்பி வீட்டுக்கு எதுக்காகப் போறோம்" என்று அண்ணாந்து அவள் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.

"ஆமா, குப்பி மௌத்தாப் போயிட்டாங்க தெரியுமா, அதுக்காக," என்ற றைமா, "சரி சரி, நீ கௌம்பு. ஏற்கனவே ஒங்கம்மா கோபமா இருக்கா" என்றாள்.

குப்பியை ராபியாவுக்கு அவ்வளவாகப் பிடிக்காது. அதனால் அவளுக்கு விசேஷமாக ஒன்றும் தோன்றவில்லை. அவசர அவசரமாகப் பாவாடை சட்டையை பீரோவிலிருந்து உருவி எடுத்து உடுத்திக் கொண்டாள். சீப்பை எடுத்துத் தனக்குத்தானே தலைமுடியை ஒதுக்கிக்கொண்டாள். நீளமான தலைமுடி. ஈரம் காயாமல் நசநசத்தது. அம்மா பார்த்தால் நன்றாகத் திட்டுவாள் என நினைத்தபடி முடியை அறைகுறையாகப் பின்னி விட்டுக்கொண்டு ஓடிப்போய்த் தயாராக வாசல்படியை ஒட்டி நின்று கொண்டாள்.

"ராபியா!" மறுபடி அம்மா கூப்பிடும் குரல் கேட்டதும் அடுப்படிக்குள் ஓடினாள். "இந்தா, இந்த பால குடி. குடிச்சிட்டு இந்த தூக்குப் போணிய கையில எடுத்துக்க கிளம்பறதுக்கு. இந்தா நாங்களும் துப்பட்டிய போட்டுட்டு கௌம்புறோம்" என்றபடி அடுப்படியைத் தாழ்ப்பாள் போட்டாள்.

ராபியா பாலைக் குடித்துவிட்டு வாசற்படியில் போய் நின்றுகொண்டாள். மழை இன்னும் லேசாக தூறிக்கொண்டிருந்தது. எதிர் வீட்டு பரிதாக்கா ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துக் கேட்டாள். "ராபியா, எங்கெ போறிங்க? அடக்கம் பண்ணப் போறாங்களாக்கும்."

"ஆமா. குப்பி வீட்டுக்குத்தான்" என்றாள் ராபியா. வாசல்படியை ஒட்டி நிறுத்தியிருந்த காரிலிருந்து முத்து கீழே இறங்கி பரிதா வீட்டு ஜன்னலைப் பார்க்க திரும்பியதும் பரிதா விடுக்கென்று தலையை உள்ளுக்குள் இழுத்துக்கொண்டாள்.

முத்துவுக்குச் சிரிப்பு வந்தது. "ஏன் ராபியா நான் என்ன பேயா பிசாசா? ஏன் இப்படி பயந்து ஒளியுது" என்று கேட்டான். "அதெப்புடி? பரிதாக்கா வயசுக்கு வந்துட்டாங்க இல்லெ? பிறகெப்புடி ஆம்பளைங்க முகத்துல முழிப்பாங்க. அதெல்லாம் முழிக்கக்கூடாது தெரியுமா" என்றாள் பெருமை பொங்க.

அதற்குள்ளாக அம்மாவும் பெரியம்மாவும் வெளியில் வரவும், முத்து காரில் ஏறி டிரைவர் சீட்டில் உட்கார்ந்துகொள்ள, முதலில் காரில் ஏறப் போன ராபியாவிடம், "இந்தா இதைப் போட்டுக்க" என்றபடி சொஹ்ரா ஒரு தாவணியை அவள் கையில் கொடுத்தாள். இவள் அதைக் கையில் வாங்கியபடி மலங்க மலங்க விழித்தாள், இது எதுக்காக என்கிற மாதிரி.

"உஷ், நெஞ்சு தெரியுதுல்ல. மவுத்தான வீட்டுக்கு நாலு பேர் வருவாங்க. அசிங்கம் பிடிச்சாப்புல இப்படியா நிக்கப் போறே? பொண்ணா லச்சணமா இருக்க வேணாம். சொல்றத செய்யி" என்று கிசுகிசுத்தாள் சொஹ்ரா.

றைமா பெரியம்மாவுக்கு ஏனோ கோபம் வந்தது. "எதுக்காக நீ அவள இப்பிடி விரட்டுற? இப்ப என்ன அவ்வளவு பெரிய பொம்பளையாயிட்டா அவ, எப்பப் பாரு குத்தம் சொல்லிக்கிட்டு" என்று அவளை அதட்டியவள், ராபியாவிடம் "சும்மா இப்போதைக்கு இதை உடம்புல சுத்திக்கோ, உங்கம்மாவுக்காக" என்றாள்.

ராபியாவுக்கு சொஹ்ராவே தாவணியை சுத்தி விட்டாள். இருவரும் காரில் ஏறிக்கொண்டதும் கார் புறப்பட்டது. அம்மாவும் பெரியம்மாவும் வெள்ளை நிறத் துப்பட்டியினால் தங்கள் உடம்பை முழுவதுமாகச் சுற்றி மூடியிருக்க அவர்கள் இருவருக்கும் நடுவே ஒடுங்கிப்போய் உட்கார்ந்திருந்தாள் ராபியா.

இரண்டு தெரு தள்ளித்தான் மவுத்தான குப்பியின் வீடு இருந்தது. ஐந்தே நிமிடத்தில் போய்ச்சேர்ந்து விட்டார்கள். வாசலில் பெரிய பந்தல். நிறைய ஆண்கள் அங்கு கிடந்த சேர்களில் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். மணி ஐந்து தான் இருக்கும் என்றாலும், மழை பெய்ததால் வேகமாக இருட்டிக் கொண்டிருந்தது. காரிலிருந்து இறங்கிய அம்மாவும் பெரியம்மாவும் முகத்தைக் கண் மட்டும் தெரியும்படி மூடிக்கொண்டு வேகமாக நடந்து அங்கிருந்த ஆண்களைத் தாண்டிப்போய் வீட்டிற்குள் நுழைந்து கொள்ள, புதிதாகப் போட்டிருந்த தாவணி வெட்கத்தை உண்டு பண்ண, முன்னும் பின்னும் அதை இழுத்து சரிசெய்தபடி நடந்தாள் ராபியா.

வீட்டினுள்ளிருந்து கேட்ட அழுகைச் சத்தம் வேறு பயமாக இருந்தது என்றாலும் தயங்கியபடி வீட்டிற்குள் நுழைந்தாள். உள்ளே நுழைந்ததுமே குப்பென்று ஊதுபத்திப் புகை வாடை மூக்கில் ஏறி பயத்தை அதிகப்படுத்தியது. நாலா பக்கமிருந்தும் அழுகையலி கேட்கும் அந்த ஹாலின் நடுவில் செத்துப்போன குப்பியின் மையத்தைப் பெரிய பெஞ்சில் மேற்கு நோக்கி கால் நீட்டி படுக்க வைத்திருந்தார்கள். முழுக்க வெள்ளைத் துணியால் மூடியிருந்த உடல் இவளுக்கு நடுக்கத்தை உண்டு பண்ணியது. கையிலிருந்த தூக்கை நழுவவிட்டு விடுவோமோ என்கிற பயத்தில் அதனை இறுகப் பற்றித் தன் நடுக்கத்தை அதனுள் புதைக்க முயன்றாள்.

அம்மா இருக்கும் இடத்தை நோக்கி சுவர் ஓரமாகவே பதுங்கிப் பதுங்கி மெதுவாக நடந்து அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் நடுவில் உட்கார்ந்துகொண்டாள். நாற்காலிக்குக் கீழே ஒரு வட்ட டப்பியில் உப்பை நிரப்பி அதில் ஒரு கட்டு ஊதுபத்தியைச் சொருகி வைத்திருந்தார்கள். அதிலிருந்து திமுதிமுவென்று மேலெழும்பி வந்துகொண்டிருந்த புகையை உற்றுப் பார்த்தவளுக்கு குடலைப் புரட்டியது.

அம்மா, நபிஸா மச்சியைத் தன் மடியில் சாய்த்து, முதுகை தட்டிக் கொடுத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். "அழுகாதே நபிஸா. நமக்கு வகைஞ்சது அவ்வளவுதான். அழுகாதே."

நபிஸாவுக்கு அழுகை ஓயவில்லை. "என்னைப் பெத்த அம்மா என்னைய அனாதையா விட்டுட்டுப் போயிட்டியே. அத்தாவை இப்படி அனாதையா விட்டுட்டுப் போயிட்டியே, இனி எங்களுக்கு யாரு இருக்கா? அல்லா எம் மொகத்தப் பாக்கமாட்டேன்னுட்டியேடா" என்று உரத்த குரலில் கதறினாள்.

அவளது கத்தலின் துக்கம் பற்றிக்கொள்ள, இன்னும் ஒன்றிரண்டு பேர் அவள் கூட சேர்ந்து கொண்டு ஒப்பாரிவைக்க ஆரம்பித்தார்கள். நபிஸா மச்சியின் சிவந்த உருண்டை முகம் அழுதழுது வீங்கிப் போயிருந்தது. பிரிந்து கிடந்த தலைமயிர் நெற்றியிலும் முகத்திலும் வந்து விழுந்து முகத்தை மறைத்தது. அவளது கேவல் சத்தம் அம்மாவின் மடியிலிருந்து பெரிதாகக் கேட்டுக்கொண்டிருக்க, இந்தத் தூக்கைப் பெரியம்மா வாங்கிக்கொள்ள மாட்டாளா என்று அவள் முகத்தையே உற்றுப் பார்த்தாள் ராபியா. இதைக் கொடுத்த நிமிடமே ஒரே ஓட்டமா இங்கிருந்து வெளியே ஓடிவிட வேண்டும் என நினைத்தவள் மெதுவாக, "பெரியம்மா எனக்குப் பயமா இருக்கு. நான் வெளிய போய் உக்காரட்டுமா?" என்றாள்.

"சரி போ" என்று இவள் காதில் கிசுகிசுத்த றைமா இவள் கையிலிருந்த காப்பியை வாங்கிக்கொண்டாள். "மொத இதை நான் எல்லாருக்கும் ஊத்திக் குடுக்குறேன். . . ஏம்மா யாராவது இந்தக் காப்பியை ஒரு டம்ளர்ல ஊத்திக்கொண்டு வாங்களேன் இந்தப் பொம்பளைப் புள்ளைக்குக் குடுக்க" என்றவாறு நபிஸாவை சொஹ்ராவின் மடியிலிருந்து எழுந்து உட்கார வைக்க முயன்றாள்.

ராபியாவுக்கு பெரிய நிம்மதி. அங்கிருந்து எழுந்து மெதுவாக கூட்டத்தைக் கடந்து வெளியே வந்தவள், இனி உட்கார ஒரு சௌகரியமான இடம் தேட வேண்டும் என நினைத்தபடி கண்களை நாலாபுறமும் சுழற்றிப் பார்த்தாள். காலியாகக் கிடந்த ஒன்றிரண்டு சேர்களில் எதில் உட்காரலாம் என்று யோசித்து விட்டுக் கறுப்புக் கலர் சேரொன்றை சுவர் பக்கம் சத்தமில்லாதபடி தூக்கி வந்தாள். மழை பெய்து தரையெல்லாம் சேறும் சகதியுமாக இருந்ததால் பாவாடையைக் கெண்டைக் காலுக்கு மேலாக தூக்கிப் பிடித்தபடி சேரில் உட்கார்ந்தாள்.

அவளுக்குச் சற்றுத் தள்ளி குப்பியின் கணவர் கமால் மாமு உட்கார்ந்திருந்தார். அவர் அழுகிறாரா என்று அவர் முகத்தையே உற்றுக் கவனித்தாள். தலையைக் குனிந்தபடி வருத்தமாக உட்கார்ந்திருந்தாரே தவிர அழவில்லை. ஏன் அவருக்கு அழுகை வரவில்லை என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள். ஒரு நாள் அம்மாவிடம் கேட்டிருக்கிறாள், "ஏம்மா ஆம்பிளைங்களுக்கு அழுகையே வராதா" என்று.

"ஏன்?"

"இல்லெ, ஆம்பளைங்க அழுது நான் பார்த்ததேயில்லை. அவங்களுக்கு கண்ணுல தண்ணிய வச்சு அல்லா படைக்கலையா?"

அம்மா சொன்னாள், "மக்கு. ஆம்பளைங்க அழுகக் கூடாது. அழுகமாட்டாங்க. அவங்க பொம்பளைங்க மாதிரியில்ல."

அவளுக்குப் போரடித்தது. அஹமதுவை எங்கே காணவில்லை என்று கண்களாலேயே தேடத் துவங்கினாள். அவன் இருந்தாலாவது பேசிக்கொண்டிருக்கலாம்.

nanatri - ulagathmizh