Tuesday, June 01, 2004

எதிர்ப்பு

ஈழநாதன்

"...இந்தக் கதைக்கும் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல..."

காட்டிலே கூடியிருந்த மரங்களிலிருந்து தனியாக,கிளையும் கொப்புமாக பரப்பி பசுமையோடு நின்றிருந்தது அந்த மரம்.

அதனைக் கடந்து போகும் பறவைக் கூட்டங்கள் கூட சிறிது நேரம் தங்கிப் போக விரும்பின அந்தளவு வனப்பும் வளமும் கொண்டு விளங்கியது அந்த மரம் காலங்காலமாக பலவித பறவைக் கூட்டங்கள் கிளைகளில் கூடமைத்துத் தங்கின,கிளைகளின் உச்சியில் கூட்டமாக வாழ்ந்து வந்த காகம்,மரப் பொந்துகளில் வசித்த ஆந்தை இவை தவிர சிறு குருவிகள் அணில்கள் எல்லாவற்றிற்கும் மரம் நிழலும் பழமும் கொடுத்தது.

காகங்களின் கூடு மரத்தின் உச்சியில் ஓரமாக இருந்தது,அதில் பலவிதமான காகங்கள் குடியிருந்தன,அவற்றிற்கிடையே பல நேரங்களில் சச்சரவு கிளம்பும்,உணவுக்கும் இடத்துக்கும் தத்தமக்கிடையே அடித்துக் கொள்ளும்,ஆனாலும் அவை மரத்தை விட்டுப் போகவில்லை,கிழட்டுக் காகங்களின் சமரசத்தில் ஓரளவு ஒற்றுமையாக வாழ்ந்தன.

இதே நிலவரம் தான் மரத்தின் நடுப்பகுதியில் பொந்துகளில் வாழ்ந்து வந்த ஆந்தைகளுக்கும்,பொந்துகளின் தலைமைப் பதவிக்கு காலம் காலமாக சச்சரவு நடக்கும் ஒன்றை ஒன்று அடித்துக் கொள்ளும் கிழக்கோட்டான்களின் மத்தியஸ்தத்தில் அவையும் ஒற்றுமை பேணின.

காகங்களுக்கும் ஆந்தைகளுக்கும் இடையில் இடப்பிரச்சனையில் என்றுமே நல்லுறவு இருந்ததில்லை,காலம் காலமாக அந்த மரத்தின் நிழலையும் வளத்தையும் பங்கு போட்டுக் கொள்வதில் இரு பகுதிக்குமே பிரச்சனைதான்,இரண்டு பக்கத்திலுமிருக்கும் முதியவர்களால் நிலமை கட்டுக்குள் இருந்தது.

காலப்போக்கில் இருபகுதியிலும் இனப்பெருக்கத்தால் உறுப்பினர் எண்ணிக்கை பெருகியது,குடும்பங்கள் புதிதாக உருவாகின மரம் கொடுத்து வந்த பழங்கள் போதாமல் பிற மரங்களையும் நாடவேண்டிய தேவை ஏற்பட்டது.

இந்த நேரத்தில் தான் ஆந்தைகள் மத்தியில் புதிய எண்ணம் முளைவிட்டது அந்த மரம் காலம் காலமாக ஆந்தைகளுக்குச் சொந்தமெனவும்,காகங்கள் இடையில் வந்து உச்சியை ஆக்கிரமித்துக் கொண்டனவெனவும் கிழட்டு ஆந்தைகள் ஆந்தைக் குஞ்சுகளுக்குப் போதித்தன,ஆந்தைக் குஞ்சுகளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது தங்களுக்கு சொந்தமான வளத்தை காகங்கள் சுரண்டுவதாக எண்ணின,இரவு நேரங்களில் காகங்கள் தூங்கியதும் அவர்களது கூடுகளைக் கலைப்பதும் முட்டைகளைத் திருடுவதுமாக தொல்லை கொடுக்க ஆரம்பித்தன,சில ஆந்தைகள் இன்னும் மேலே போய் உச்சிப்பகுதிகளில் இருந்த சிறு பொந்துகளை துளை செய்து தமது குடியிருப்புகளாக்கிக் கொண்டன.தடுக்கவேண்டிய வயதான ஆந்தைகள் கைகட்டி வேடிக்கை பார்த்தன

வயதில் இளைய காகங்களுக்கு பொறுமை காக்க முடியவில்லை அவை இரவுகளில் விழித்திருந்து முட்டைகள் களவு போகாமலும் கூடுகள் கலையாமலும் காவலுக்கிருந்தன,இன்னும் சில உச்சியில் வந்து கூடு கட்டிக் கொண்ட ஆந்தைகளுடன் சண்டைக்குப் போயின,வயதான காகங்களுக்கு இது பிடிக்கவில்லை மரம் இருவருக்கும் பொது இருவரும் சண்டையிடாமல் வாழ்ந்தால் அம்மரத்தின் பலனை இன்னும் பலகாலம் பயன்படுத்தலாம் என்பது அவர்களது வாதம்,ஆந்தைகள் என்ன செய்தாலும் சண்டைக்குப் போவதை அவை விரும்பவில்லை பொறுமை காக்கும்படி குஞ்சுகளுக்கு அறிவுறுத்தின.

இது ஆந்தைக் குஞ்சுகளுக்கு வாய்ப்பாகியது நாளுக்கு நாள் காகக் குஞ்சுகளை சீண்டி வேடிக்கை பார்த்தன,இவற்றைப் பொறுக்க முடியாத கிழக்காகங்கள் ஆந்தைத் தலைவர்களிடம் முறையிட்டன இனி இப்படி நடக்காது என்று உறுதிமொழி கிடைத்தாலும் அதை நம்புவதற்கு காகக்குஞ்சுகள் தயாராக இருக்கவில்லை,இது எங்கள் மரம் நீங்கள் வந்தேறு குடிகள் என்ற ஆந்தைக் குஞ்சுகளின் கூச்சல் அவற்றை சீற்றமடைய வைத்திருந்தது.

காகங்கள் கூடி ஆலோசித்தன இப்படியே போனால் விரைவில் அம்மரம் தங்களிடமிருந்து பறிபோய் விடும் என்று குஞ்சுகள் வாதிட்டன கிழக்காகங்களும் நிலைமையின் தாக்கத்தைப் புரிந்து கொண்டதால் மௌனம் காத்தன,குஞ்சுகள் தீர்மானம் மேற்கொண்டன இனி அவர்கள் தாக்கினால் நாங்களும் திருப்பித் தாக்குவோம் வயதில் இளைய குஞ்சுகள் முழங்குவதைக் கேட்க கிழக்காகங்கள் கவலை கொண்டன என்ன மாதிரி அமைதியாக இருந்த மரம் இனி அங்கே அமைதி நிலைக்குமா என்ற கவலை கிழக்காகங்களுக்கு,அவை இன்னும் ஆந்தைகளுடன் சமரசமாகப் போய்விடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தன.

குஞ்சுக்காகங்கள் தீர்மானத்தைச் செயற்படுத்த முனைந்தன மரத்தின் ஒருபக்கத்தில் வளர்ந்து செழித்திருந்த பனைமரத்திலிருந்து தும்புகளையும் ஓலைகளையும் கொண்டுவந்து தங்கள் கூடுகளை பலப்படுத்தின,இரவுகளில் முறை வைத்துக் காவல் காத்தன,பனைமரம் பலவிதங்களிலும் காகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவிருந்தது.

இந்தத் தகவல்கள் ஆந்தைகளுக்கு எட்டியபோது இளைய ஆந்தைகள் கோபத்தில் குதித்தன காகங்களை பூண்டோடு அழித்து மரத்தை மீட்போமென சபதமிட்டன,விடயம் கிழக்கோட்டானுக்குப் போனது ஆந்தைகளிடத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்கவும்,காகங்களை அழித்து மரத்தை முற்றாகத் தம்வசப்படுத்தவும் இளைய ஆந்தைகளின் கோபத்தைப் பயன்படுத்திக் கொள்வதுதான் வழி என்று கிழக்கோட்டான் எண்ணமிட்டது.

இரவிரவாக ஆந்தைகள் கூடின,நிலவொளியில் கூடி காகங்களை அழிக்கும் வழிவகைகளை ஆராய்ந்தன கிழக்கோட்டான் தலைமை வகித்தது,காகங்கள் மீது ஆந்தைகள் எல்லாம் கூடித் தாக்குதல் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது,இந்த நேரம் அறிவாளி ஆந்தையொன்று ஒரு யோசனை கூறியது மரத்தின் ஓரமாக வளர்ந்துள்ள பனைமரமே காகங்களைப் பலமுள்ளவர்களாக மாற்றியுள்ளது,சகலவிதத்திலும் அவற்றைப் பனைமரமே வளர்க்கின்றது எனவே அதனை அழித்துவிட்டால் காகங்களின் வளர்ச்சி தடைப்படும் எப்போதும் ஆந்தைகளுக்கு அடிமையாக இருக்கும் என்று அது கூறியது இளைய ஆந்தைகளுக்கு மட்டுமல்ல கிழக்கோட்டானுக்கும் அது நல்ல யோசனையாகவே பட்டது.

இரவிரவாக ஆந்தைகள் பனைமரத்தை முற்றுகையிட்டன,கொலைவெறிதாண்டவமாட தும்புகள் ஓலைகளைக் கிழித்தன அப்படியும் ஆத்திரம் தணியாமல் கிழித்தவற்றை மேலே போட்டு பனைமரத்தைக் கொழுத்தின கொழுத்தி முடிந்ததும் சுவாலை விட்டெரியும் பனைமர வெளிச்சத்தில் அவை காகக் கூடுகளுக்குள் பாய்ந்தன எதிர்ப்பட்ட காகங்களைக் குதறின,இந்நேரம் காகஙக்ளும் அலறியடித்துக் கொண்டு எழுந்தன இவ்வளவுநாளும் தங்களுக்கு படிமுறை வளர்ச்சி தந்த பனை மரம் தீயில் கருகிக் கொண்டிருப்பதை அவற்றால் தாங்கமுடியவில்லை போதாக்குறைக்கு காகக் கூடுகள் பல சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தன உயிரிழந்த காகங்கள் மரத்தின் அடியில் விழுந்து கிடந்தன.

இளைய காகங்கள் ஆத்திரத்தில் துடித்தன "இப்படியே போனால் எதுவுமே எஞ்சாது" இளைய காகம் ஒன்று குரல்கொடுத்தது "வாருங்கள் என்னோடு" காகக் குஞ்சுகள் எழுந்தன பறக்கும் அந்த இளைய காகத்தைத் தொடர்ந்தன எரிந்து கொண்டிருக்கும் பனை மரத்தை வட்டமிட்டது அந்த காகம் பாதி எரிந்து கொண்டிருந்த ஓலைத் துண்டொன்றை வாயில் கவ்வியது பறந்து போய் ஆந்தைகளின் பொந்தொன்றில் போட்டது,காகக் குஞ்சுகள் கோபத்தில் ஆர்ப்பரித்தன "இதுதான் வழி" "இதுதான் வழி" "எங்களைப் பணிய வைக்கமுடியாதென்று உணர்த்துவோம்" இளைய காகத்தைத் தொடர்ந்து மற்றக் குஞ்சுகளும் எரியும் கொள்ளிகளைப் பொறுக்கி வந்து ஆந்தைகளின் பொந்தில் போடத்தொடங்கின.வயதான காகங்கள் தடுக்க முயற்சி செய்யவில்லை,கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன.

விடிந்தபோது மரம் புகைகக்கியபடி எரிய ஆரம்பித்திருந்தது

பி.கு:- இந்தக் கதைக்கும் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல

ஈழநாதன்
nantri-Sooriyan.com