Wednesday, November 29, 2006

என் பெயர் அகதி

- தமிழ்நதி -

கதைக்குள் நீங்கள் நுழைவதன் முன் எங்களைத் தெரிந்துகொள்வது நல்லது.

நான் ஆனந்தி. வயது இருபத்தி ஐந்து. சொந்த இடம்: யாழ்ப்பாணத்திலுள்ள-இந்தக் கதைக்குத் தேவையற்ற- ஏதோவொரு கிராமம்.

கட்டிலில் படுத்திருப்பவளின் பெயர் வினோதினி. எனது சிநேகிதி. வயது இருபத்தி இரண்டு.
தொலைக்காட்சியில் யாராலோ உந்தப்பட்டவன்போல காட்சிகளை மாற்றிக்கொண்டேயிருப்பவனின் பெயர் பரணி. வினோதினியின் தம்பி. எங்கள் மூவருடைய தற்போதைய கவனம் - புதிய நிலத்தில் ஒட்டிக்கொண்டு உயிரோடு இருப்பது.

ஆனால் நாங்கள் நினைத்திருந்தது போல அது அத்தனை சுலபமாக இல்லை. எங்களுக்கு வாசிக்கக் கிடைத்த ஆனந்தவிகடன், குமுதத்தில் வெளிவந்த கதைகள் காட்டிய சென்னையிலிருந்து நாங்கள் பார்த்த சென்னை வேறுபட்டிருந்தது.

பெரிய பெரிய பாலங்கள். விர் விர்ரென விரையும் வாகனங்கள். சாலை விதிகளைச் பொருட்படுத்தாமல் இருந்தாற்போல பாய்ந்து வீதியைக் கடக்கும் சனங்கள். கார்களுக்குள் பளபளக்கும் முகங்களையுடைய பணக்காரர்கள். சாலையோரங்களில் மெலிந்த கறுத்த உரக்கப் பேசுகிற ஆண்-பெண்கள். வீதியோர பிச்சைக்காரர்களது இறைஞ்சுதலைக் கவனிக்காமல் அல்லது புறக்கணித்து விரைகிற நாகரீக மனிதர்கள்…. கைத்தொலைபேசியில் எப்போதும் யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும் இளைஞர்கள்…. புதியவர்களாகிய எங்கள் முன் அவிழ்க்க முடியாத புதிர்போன்று விரிந்துகிடந்தது சென்னை.

வீடு தேடுவதில் தொடங்கியது வினை.

இருபதுகளிலுள்ள மூவர், அதிலும் இருவர் பெண்கள். திறந்த கதவுகள் சந்தேகம் கலந்த நிராகரிப்புடன் பூட்டப்பட்டன. சிலர் வெளிப்படையாகவே சொன்னார்கள்.

“சிலோன்காரங்களுக்கு வீடு வாடகைக்கு விடுறதில்லை”

“திரும்பிப் போய்விடலாம்”வினோதினி சொன்னாள். நிராகரிப்பின் துக்கம் அவள் முகத்தில் படிந்திருந்தது.

“அவர்களுடைய பயம் நியாயமானது”

“எங்களைப் பார்த்தால் குண்டு வைக்க வந்தவர்கள் மாதிரியா இருக்கிறது”பரணி கோபப்பட்டான்.

“குண்டு வைப்பவர்களுக்கென்று ஒரு தனிமுகம் இருக்கிறதா என்ன…?”வினோதினி அதே கோபத்தோடு கேட்டாள்.

“படகில் வந்திருந்தாலாவது தங்குவதற்கு ஒரு இடம் கிடைத்திருக்கும்”

“வரிசையில் நின்று கழிப்பறைக்குப் போக உன்னால் முடியுமா…?”

பரணி மௌனமாகிவிட்டான். ஊரில் இருந்தபோது பரணியைச் சிரிப்பில்லாமல் பார்த்ததில்லை. நண்பர்களோடு சைக்கிளில் சிட்டுக்குருவிபோல பறந்து திரிந்த அவனை மீண்டும் தொடங்கிய போர் வீட்டுக்குள் முடக்கியது. துப்பாக்கிகள் வீதிகளை ஆள ஆறுமணிக்குள் ஊரடங்கியது. ஒரு சிறு உரசலில் பற்றிக்கொள்ளக்கூடிய கந்தகத்தைக் காற்றில் தூவிவிட்டாற்போலிருந்தது. பயம் எய்ட்சைப்போல ஆட்கொல்லி நோயாயிற்று.

அன்றைய தினம் நான் வினோதினியின் வீட்டிலிருந்தேன். அவர்களுடைய பாட்டியின் ஆண்டுத்திவசம். நாய்கள் ஆரவாரமாகக் குரைத்து பின்னடைவதைக் கண்டதும் புரிந்துவிட்டது.

அவர்கள் வந்துவிட்டார்கள்!

“சீசர்! சத்தம் போடாதே…!”நாயை அதட்டியபடி வினோதினியின் அப்பா அவர்களை எதிர்கொண்டார்.

“வீட்டைச் சோதனையிட வேண்டும்”

கரும் பச்சைச் சீருடையணிந்து துப்பாக்கிகளை தயார்நிலையில் ஏந்தியிருந்த அவர்கள் கணப்பொழுதில் வீட்டைச் சூழ்ந்திருந்தார்கள். எந்த வழியாகப் பின்புறம் சென்றார்கள் என்ற கேள்வி அத்தனை பயத்திலும் எனக்குள் எழுந்தது. அனைவரும் வீட்டின் முன்புறம் வரும்படி பணிக்கப்பட்டோம். அதற்குள் வினோதினியின் அம்மா அழத்தொடங்கியிருந்தா. எங்களுக்குள் அவர்கள் பரணியைத் தேர்ந்தெடுத்து முன்னே வரும்படி சைகை காட்டினார்கள்.

அப்போதுதான் மீசை அரும்பத் தொடங்கியிருந்த அவன் முகத்தில் பயத்தைவிடவும் வேறொன்று தெரிந்தது. அது… வெறுப்பும் கோபமும் இயலாமையும் கலந்த ஏதோவொன்று.

“அவனுக்கு ஒன்றும் தெரியாது. மாணவன்” அம்மாவின் குரல் பிரலாபித்தது.

துப்பாக்கிக் கட்டையால் பரணியின் முகத்தை ஒருவன் உயர்த்தினான். மற்றொருவன் காற்சட்டைப் பைகளைத் துளாவினான். கைகளை உயர்த்தியபடி நின்ற அவன் எங்கள் விழிகளைத் தவிர்க்க வானத்தைப் பார்த்தான்.

மற்றொருவனின் கவனம் ஒன்றாக நின்றிருந்த இளவயதுப் பெண்களாகிய எங்கள் நால்வரிலும் குவிந்தது. அவனது அடர் பச்சை நிறக் கண்கள் வெறியுடன் ஒளிர்ந்தன.

“விசாரிக்க வேண்டும். பெரியவர்கள் உள்ளே போகலாம்”உடைந்த தமிழில் வயதானவர்களை உள்ளே விரட்டினான்.

“அக்கா! போகவேண்டாம்”

சற்று உரத்த குரலில் பரணி சொன்ன அடுத்த கணமே துப்பாக்கிக் கட்டையால் முழங்காலில் தாக்கப்பட்டு நிலத்தில் விழுந்தான். வினோதினியின் அம்மா பதறி உரத்த குரலெடுத்து அழுதபடி பரணியின் பக்கத்தில் ஓடினா. சித்தி தலையைக் குனிந்தபடி விசும்பினா. அப்பா கைகளை நெஞ்சில் இறுக்கக் கட்டி வெறித்த பரர்வையோடிருந்தார்.

துப்பாக்கியின் பின்புறத்தால் பெண்கள் நால்வரும் வீட்டினுள் செலுத்தப்பட்டோம். எங்களோடு உள்ளே வரமுயன்ற அப்பாவின் கன்னத்தில் ஒருவன் அறைந்து நிறுத்தினான். ஆச்சி பிடிவாதமாக எங்களைத் தொடர “வயதானவர்களைச் சோதனையிட மாட்டோம்”என்ற ஒருவன் அவரைக் கதவுக்கு வெளிப்புறம் தள்ளிவிட்டான்.

வினோதினியின் கன்னத்தைத் தடவிய ஒருவன் “தமிழ்ப்பெண்கள் அழகு”என்றான். மற்றவன் என்னைத் தொடக்கூடாத இடத்தில் தொட்டு “நாம் கல்யாணம் செய்துகொள்ளலாம்”என்றான். சோதனை என்ற பெயரில் இழிவுசெய்யப்பட்டபோது நான் மதிலில் படுத்திருந்த பூனையைப் பார்த்தபடியிருந்தேன். வினோதினியின் தங்கை என்னோடு ஒட்டிக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க முடியவில்லை. துப்பாக்கியைப் பறித்து அவர்களைச் சுடலாமென்று நினைத்ததாக சின்னவள் பின்பொருநாளில் என்னிடம் சொன்னாள். ஆனால், அவளுக்குச் சுடத் தெரிந்திருக்கவில்லை.

வீட்டின் ஒவ்வொரு அறையிலும் சப்பாத்துத் தடங்கள் பதிந்தன.

“ஒத்துழைப்பிற்கு நன்றி” என்றொருவன் கண்சிமிட்டிச் சிரித்தான்.

சில நிமிடங்களின் பின் அவர்கள் வெளியேறிய பிறகு ஆச்சி மண்ணை வாரி இறைத்துத் திட்டினார்.
“கடவுள் கேட்கட்டும்… கடவுள் கூலி கொடுப்பார்”

அதுவரை அடங்கியிருந்த நாய்கள் ஆரவாரமாகக் குரைத்து தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தின.

“நான் இயக்கத்திற்குப் போகிறேன்… இவர்களைக் கொல்ல வேண்டும்”பரணி அன்று முழுவதும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தான். அவனுடைய முழங்கால் வீங்கிச் சிவந்திருந்தது. மலங்கழிக்க குந்தியிருப்பது அவனுக்குச் சிரமமாக இருந்ததாக பின்பு வினோதினி சொன்னாள். அப்பா எங்களைக் காணுந்தோறும் தலையைக் குனிந்துகொண்டார்.

அதன் பிறகு வந்த பகல்கள் குறுகி இரவுகள் நீண்டன. சந்தியில், வீதியோரத்தில் முகம் சிதைக்கப்பட்ட பிணங்கள் கிடந்தன. அடையாள அட்டை இல்லாதவர்கள் காணாமல் போனார்கள். சிலசமயம் அடையாள அட்டை வைத்திருந்தவர்களும் கூட. நாங்கள் அறிந்த பல குடும்பங்கள் படகேறிப் போனார்கள். நாங்கள் விமானமேறி வந்திறங்கினோம். வினோதினியின் தங்கையும் மைத்துனியும் எங்களோடு வர மறுத்து அங்கேயே தங்கிவிட்டார்கள்.

எட்டுக்கு எட்டடி ‘ஹோட்டல்’அறையில் முதல்நாள் முழுவதும் அடைந்து கிடந்தோம். அங்கு வரவேற்பாளராகக் கடமையாற்றியவர் எங்கள் கதை கேட்டுக் கலங்கிப்போனார். அவர் மூலம் அந்த விளம்பரப் பத்திரிகையைப் பெற்றுக்கொண்டோம்.

வீடு தேடும் படலம் தொடங்கியது.

விருப்புடன் தொடங்கும் உரையாடலின் போக்கு நாங்கள் இலங்கை என்றதும் திசைதிரும்பிவிடும். பின்பு எங்களைத் தட்டிக்கழிப்பதற்கான காரணங்கள் முன்வைக்கப்படும். வீடு தர இயலாமைக்கான வருத்தங்களை வருத்தத்தோடு ஏற்றுக்கொண்டோம். அன்றைய தினம் மூவருமே களைத்துப் போயிருந்தோம்.

“நீங்கள் கேரளாவா…?”

“இல்லை… இலங்கையிலிருந்து வந்திருக்கிறோம்”

“ம்…!” வீட்டுக்காரரின் முகம் இருண்டது.

“இங்கு ஏன் வந்தீர்கள்…?”

“உயிர் பிழைத்திருக்க”

கூறியபின்னர்தான் அந்த வாக்கியத்திலிருந்த சூடு என்னைத் தாக்கியது.

வீட்டுக்காரர் எங்களை இப்போது பார்த்த பார்வையில் கொஞ்சம் இரக்கம் தெரிந்தது.

“நான் பல்கலைக்கழகத்திலும் எனது தம்பி பாடசாலையிலும் படித்துக்கொண்டிருந்தோம். எனது சிநேகிதி பத்திரிகையொன்றில் வேலை செய்துகொண்டிருந்தா” வினோதினி இறைஞ்சுவதுபோல சொன்னாள். நான் திரும்பிவிடலாமென்று கண்களால் உணர்த்தியும் அவள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

“வாடகை எப்படிக் கட்டுவீர்கள்…?”

“ஜேர்மனியிலிருந்து பணம் வரும்”

‘ஜேர்மனி’என்ற சொல் அவரை ஈர்த்திருக்க வேண்டும். வினோதினி இனி அலைவதில்லை என்பதில் தீர்மானமாக இருந்தாள். அந்த வீட்டுக்காரரை எப்படியாவது சம்மதிக்க வைக்க பிரயத்தனப்பட்டாள். தவிர, வீடும் விசாலமாக இருந்தது. யன்னல் வழியாகத் தெரிந்த கடலின் நீலமும் மௌனமும் எனக்கும் பிடித்திருந்தது. பத்திரிகைகளைச் சலித்து இந்தியத் தமிழ் பேசி விவரமறிந்து அலைவதில் நானும் சோர்ந்துவிட்டிருந்தேன்.

“ஐம்பதினாயிரம் முற்பணம்… உங்களால் கட்டமுடிந்தால் நாளை வாருங்கள்”
முற்பணம் அதிகந்தான். ஆனால், வீடு கிடைத்துவிட்டது.

“கடவுளுக்கு நன்றி”

மூச்சு முட்டும் அந்த ‘ஹோட்டல்’அறைக்கு வந்ததும் குப்புறப் படுத்துக்கொண்டு வினோதினி அழுதாள். எனக்கும் கண்ணீர் வரும் போலிருந்தது. பரணி தொலைக்காட்சிப்பெட்டியிலிருந்து கண்களை எடுக்கவில்லை. ஆனால், அதை அவன் பார்த்துக்கொண்டிருக்கவுமில்லை.

அடுத்து வந்த இரண்டு நாட்களுள் துடைப்பம், சமையற் பாத்திரம், குக்கர், பால் பக்கெற் இன்ன பிறவற்றுடன் புதுவீடு போனோம். இரண்டு அறைகளில் ஒன்றை நானும் மற்றதை பரணியும் வினோதினியும் நிரப்பினோம். கடல் நீலப்படிகமாக பரந்திருப்பதை எழுதும் மேசையிலிருந்து பார்க்க முடிந்ததில் எனக்குத் திருப்தி. நண்பர்களற்ற தனிமை பரணியை அலைக்கழிப்பதை உணரமுடிந்தது. அடிக்கடி பல்கனிப் பக்கம் போய் வீதியைப் பார்த்துக்கொண்டிருப்பதை வினோதினியும் நானும் அவதானித்தோம். எவ்வளவு முயன்றும் அவனது பழைய சிரிப்பை எங்களால் மீட்டுவர முடியவில்லை.

வீதியில் கடைத்தெருவில் எதிர்ப்படும் எந்த முகமுமே அறிமுகமற்றது என்பது எங்களை வெகுவாக உறுத்தியது. பின்பு பழகிவிட்டது. கடற்கரையில் எப்போதாவது இலங்கைத்தமிழ் கேட்க நேரும்போதெல்லாம் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொள்வோம். அதில் உயிர் இருக்காது.

இருந்திருந்துவிட்டு வினோதினிக்கு ஊர் ஞாபகம் வந்துவிடும். “கண்ணை மூடிக்கொள்”என்பாள்.

“இது கிணற்றடி. குளிக்கும் தொட்டி விளிம்பில் நானும் நீயும் அமர்ந்திருக்கிறோம். சின்னவள் உன் மடியில் படுத்திருக்கிறாள். கூடத்தில் பரணி பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறான். அம்மா தேநீர் தர எங்களை அழைக்கிறாள். ஆச்சி…”

“வேண்டாம் இந்த குழந்தைகள் விளையாட்டு”நான் அவள் கனவுகளைத் துண்டித்துவிடுவேன்.

“தயவுசெய்து எங்களை முழுப் பைத்தியமாக்காதே அக்கா”பரணி சிரிப்பில்லாமல் கேட்டுக்கொள்வான்.

“எங்களுக்கு விசா முடியப்போகிறது”வினோதினி ஒருநாள் நினைவுபடுத்தியபோது அயர்ச்சியாக இருந்தது.

இரண்டு புகைப்படங்கள், கடவுச்சீட்டு நகல், விசாவை நீடித்துத் தரும்படியான வேண்டுகோள் அடங்கிய கடிதம், நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம் இவற்றுடன் சென்ற நாங்கள் ஏமாற்றத்துடன் திரும்பினோம்.

“நீங்கள் வந்திருப்பது உல்லாசப் பிரயாணிகளுக்கான விசாவில்… நீடிக்க முடியாது”என்று இறுக்கமான முகமுடைய அதிகாரி பதிலளித்தார்.

“ஊருக்குப் போவோம் அக்கா…!”பரணி சொன்னான்.

“உன்னைப் பிடித்துக்கொண்டு போவார்கள். நகத்தைப் பிடுங்குவார்கள். தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு மிளகாய்த் தூள் போட்ட புகையைச் சுவாசிக்க விட்டு அடிப்பார்கள். விரும்பினால் போ”வினோதினி வெடித்தாள்.

“நான் போகமாட்டேன்…”அவளுக்கு அன்றைய நாள் நினைவில் வந்திருக்க வேண்டும்.
அவளது கன்னத்தைத் தடவிய அவனது விரல்களை நினைத்துப் பார்த்திருப்பாள்.

“நாங்கள் என்ன பிழை செய்தோம் ஆண்டவரே….! எங்கள் வாழ்வை ஏன் இவ்விதம் சபித்தீர்…?”

“காவல் நிலையத்தில் பதிந்துவிட்டு இருக்கலாம்”வீட்டுக்காரம்மா சொன்னா.
போனோம்.

“இன்று ஏட்டு இல்லை. நாளை வாருங்கள்”

“ஏழு மணிக்குப் பின்னர் வாருங்கள்”

“திங்கட்கிழமை வந்தால் ஏட்டைச் சந்திக்கலாம்”

“இன்று கூட்டம் நடக்கிறது. பாதுகாப்புக் கடமைகளுக்காகப் போய்விட்டார்கள். நாளை சனி… திங்கள் வாருங்கள்”

திங்கள், செவ்வாய், வெள்ளி… வரச்சொன்ன நாட்களெல்லாம் போய் தவங்கிடந்தபின் ஈற்றில் அவர் வந்தார். ஒல்லியான அவர் பெரிய மீசை வைத்திருந்தார். பெரும்பாலான பொலிஸ்காரர்களைப் போல இவரும் தொந்தியோடிருந்தார். ஒல்லியான உடலில் தொந்தி துருத்திக்கொண்டிருப்பது வினோதமாக இருந்தது.

நாங்கள் இருந்த இடத்தில் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்த மற்றுமொரு பொலிஸ்காரரை ஓரக்கண்ணால் பார்த்தார். பக்கத்திலிருந்த அறைக்கு அழைத்துப்போனார். இருட்டான அந்த அறையில் கோப்புகள் நிறைந்திருந்தன.

“ஒருவருக்குப் பதிய ஆயிரத்து ஐந்நூறு ரூபா. மூன்று பேருக்கும் நான்காயிரத்து ஐந்நூறு… இருக்கிறதா…?”

“பதிவதற்கு பணம் கட்ட வேண்டுமென்ற விபரமே எங்களுக்குத் தெரியாது”அதிர்ந்துபோய்ச் சொன்னேன்.

“எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை ஐயா! நாங்கள் அகதிகள்”வினோதினியின் ‘அகதி’என்ற வார்த்தை என்னை மிகவும் பாதித்தது.

“எனக்கா கேட்கிறேன்… நிறையப் பேருக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்”

“நாங்கள் உயிர் தப்பியிருக்க இங்கு வந்திருக்கிறோம் ஐயா…! ஒருவருக்கு ஐந்நூறு ரூபா தருகிறோம்”

“ஆயிரத்து ஐந்நூறுக்கு ஒரு பைசா குறைக்க முடியாது. கடிதம் வேண்டுமானால் நாளை பணத்தோடு வாருங்கள்”

நாங்கள் திகைப்போடு வெளியில் வந்தோம். பொலிஸ்காரர்களைப் பற்றி திரைப்படங்கள் மிகைப்படுத்திப் பேசுவதாக நாங்கள் நினைத்திருந்தது தவறெனப் புரிந்தது. வெயில் அனலை வாரியிறைத்தது. உண்ட களைப்பில் உறங்கிக்கிடந்தது மதியம்.

கொதிக்கும் அந்த மதியத்தில் அந்த வீதியில் அவ்வளவு விசனத்துடன் காலகாலமாக நடந்துகொண்டிருப்பது போலொரு எண்ணம் தோன்றி மறைந்தது.

“விசா இன்னும் முடியவில்லை. போய்விடலாம்”பரணி ஆரம்பித்தான்.

“போடா…! போடா…! செத்துப் போ” வினோதினி வீதி என்பதை மறந்து போனவளாக உரத்துக் கத்தினாள். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். பழக்கடையிலிருந்த பெண் எங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பியிருந்தாள்.

“இப்படியெல்லாம் உயிர் பிழைத்திருப்பதற்கு… ச்சே…!”

பரணி எங்களைவிட்டு விலகி விரைந்து நடந்தான். ஆளற்ற சாலையில் தனியனாக அவன் நடந்துபோனது வருத்தமாக இருந்தது.

“இது அநியாயம் ஆனந்தி” தளர்ந்துபோன குரலில் சொன்னாள்.

“கொடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்பது உனக்குப் புரிகிறதா…?”

அவளுக்குப் புரிந்தது. வழியில் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. வீட்டிற்குப் போனதும் வினோதினிக்குப் பிடிக்கும் அந்தப் பாட்டைப் போட்டேன். என்ன கவலையாக இருந்தாலும் அந்த வரிகள் அவளது தலைதடவித் தேற்றிவிடும்போலும். சில நிமிடங்களில் சிரிப்புக்குத் திரும்பிவிடுவாள்.

“கடவுள் தந்த அழகிய வாழ்வு…உலகம் முழுதும் அவனது வீடு”

எழுந்தோடி நிறுத்தினாள்.

“பொய்…! பொய்! எல்லாம் எல்லோரும் பொய்…!”

“பைத்தியம்…”அருகில் அமர்ந்தேன்.

“அதுவும் விரைவில் பிடிக்கத்தான் போகிறது…”

“பேச்சுவார்த்தை தொடங்கவிருக்கிறது…நாம் விரைவில் ஊருக்குப் போவோம்”

எனது வார்த்தைகளை நானே நம்பவில்லை.

“போடீ! நான் சின்னக் குழந்தை இல்லை”என்றாள் வெடுக்கென்று.

மிகுந்த களைப்பாக இருந்தது. உயிர் பிழைத்திருப்பதற்கு இத்தனை பிரயத்தனப்பட வேண்டாமே என்று தோன்றியது. ‘உயிர் மட்டுமா…?’ என்ற கேள்வி கூடவே உறுத்தியது. “நாம் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம்”என்று என்னை அவன் நெருங்கியபோது உடலில் பாம்பு ஊர்வதைப்போல பல்லைக் கடித்துகொண்டிருந்ததும் மதிலில் படுத்திருந்த பூனையும் நினைவில் வந்தன. “எமது விருப்பின்றி ஒருவனைத் தொட அனுமதிப்பதென்பது மரணத்திற்குச் சமானம்”என்று நானும் வினோதினியும் என்றோ ஒருநாள் பேசிக்கொண்டதை நினைத்துக்கொண்டேன்.

அம்மாவுக்கு கடிதம் எழுதவேண்டும்போலிருந்தது.

அன்புள்ள அம்மா மற்றும் அனைவருக்கும் அன்புடன் எழுதிக்கொள்வது.

நானும் வினோவும் பரணியும் இங்கு நல்ல சுகம். நினைத்து வந்ததைப் போல வாழ்க்கை இங்கு சிரமமாக இல்லை. நல்லதொரு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறோம். யன்னல் வழியாகப் பார்த்தால் கடல் தெரிகிறது. வீதிகள் பெரிய பெரிய மரங்களுடன் அழகாக இருக்கின்றன. மாலையில் கடற்கரைக்குப் போய் வருகிறோம். இங்குள்ளவர்களின் தமிழ் வித்தியாசமாக இருக்கிறது. என்றாலும் புரிந்துகொள்ள முடிவதில் மகிழ்ச்சி.

பரணியை கம்பியூட்டர் வகுப்பில் சேர்த்துவிட எண்ணியுள்ளோம். வினோவும் நானும் ஆங்கிலம் படிக்கப்போகிறோம். வினோ இங்கு கல்லூரியில் சேர்வதற்கு முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறாள். பின்னேரங்களில் நாங்களெல்லோரும் முற்றத்தில் இருந்து பேசுவதை நினைத்துக்கொள்வதுண்டு. உங்களை அடிக்கடி கனவில் காண்கிறேன். பூனைக்குட்டிகளுக்கு ஒழுங்காக சாப்பாடு போடவும். சீசர் எப்படியிருக்கிறது? மல்லிகை பூக்கிறதா…? வீட்டின் பின்புறம் இருக்கும் அடுக்கு நந்தியாவட்டைக்கும் மறக்காமல் தண்ணீர் ஊற்றவும்.

அம்மா! பேச்சுவார்த்தை சரிவந்தால் நாங்கள் வந்துவிடுவோம். உங்கள் கையால் சாப்பிட வேண்டும் போலிருக்கிறது. வினோவும் உங்களுக்கு எழுதவேண்டுமென்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

அன்பு மகள்ஆனந்தி

அந்தக் கடிதத்தின் மீது தலைவைத்துப் படுத்துக்கொண்டேன். வீட்டில் சாமியறை யன்னல் வழியே வேம்பின் சலசலப்பை ஏந்திவரும் காற்றின் மடியில் படுத்திருப்பது போலிருந்தது.


பிற்குறிப்பு: இதைக் கதையென்றும் சொல்லலாம்.

Quelle - இளவேனில்...