Friday, October 24, 2008

சுமை

குரு அரவிந்தன் - கனடா
(கனடியத் தமிழ் வானொலி (CTR) சர்வதேசரீதியாக நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற சிறுகதை இது.)

இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப் போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப் பட்டதும், கூச்சம் தாங்காமல் அவை தானாகவே இறுக மூடிக் கொண்டன. இமைகள் மூடிக் கொண்டாலும் காது மடல்கள் விரிந்து நெருங்கி வரும் கனமான பூட்ஸின் அதிர்வுகளை மௌனமாக உள்வாங்கிக் கொண்டன. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதற்கான எதிர்பார்ப்பில், இதயம் ஏனோ வேகமாகப் படபடவென்று அடித்துக் கொண்டது. மிக அருகே அதிர்வுகள் நிசப்தமாகிப் போனதால், பயத்தில் இதயம் இன்னும் வேகமாக அடித்துக் கொள்ள, தூங்குவது போலப் பாசாங்கு செய்ய முனைந்தான்.

'எழுந்திருடா' பூட்ஸ் கால் ஒன்று விலாவில் பட்டுத் தெறித்தது.

துடித்துப் பதைத்துக் கைகளை ஊன்றி எழுந்திருக்க முயற்சி செய்தான். 'சுள்' என்று முழங்கால் மூட்டு வலித்தது. அடிக்கு மேல் அடிவாங்கிய அந்த உடம்பிற்கு, எங்கே வலிக்கிறது என்பதைக்கூட உணர முடியாமல் இருந்தது. வீங்கிப்போன கால்கள் எழுந்து நிற்கமுடியாமல் துவண்டு சரிந்தன. வந்தது யாராய் இருக்கும் என்று ஊகித்ததில் நிமிர்ந்து பார்க்கவே பயமாக இருந்தது.
'வெளியே வாடா நா..!' தொண்டை கிழிய அவன் கூச்சல் போட்ட போது அவனது குரலை இவனால் இனம் காண முடிந்தது. அவனது கண்களில் இவன் படும் போதெல்லாம் இப்படித்தான் கொச்சைத் தமிழில் கூச்சல் போட்டுக் கத்துவான். ஒரு போதும் அவனது வாயிலிருந்து நல்ல சொற்கள் உதிர்ந்ததை இவன் கேட்டதில்லை.

தள்ளாடியபடியே வெளியே வந்து, அச்சத்துடன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சப்பாத்துக் கால்களைப் பின் தொடர்ந்தான். இரும்புக் கதவுகள் பல திறந்து, மூடப்பட்டு இறுதியில் ஒரு அறைக்குள் இருந்த அதிகாரி முன் நிறுத்தப் பட்டான். இந்தச் சிறைக்கு மாற்றப்பட்ட நாளில் இருந்து யாரையுமே நிமிர்ந்து பார்க்க அவனுக்குப் பயமாக இருந்தது.

'நீ நடேசுதானே..?'

எப்போவோ மறந்துபோன அவனது பெயர் நினைவுவர மெல்ல தலை நிமிர்த்திக் குரல் வந்த திசை நோக்கிப் பார்வையைச் செலுத்தினான். அவனைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய ஆவணமாய் இருக்கலாம், அந்த அதிகாரிக்கு முன்னால் மேசையில் விரித்து வைக்கப்பட்டிருந்தது. அதுவும் இவனது கடந்த கால நிலையற்ற வாழ்க்கைபோல, மின்விசிறிக் காற்றில் அடிபட்டுத் துடித்துக் கொண்டிருந்தது.

எதுவும் பேசாது தலையாட்டிக் காளைபோல, இவன் தன்னிச்சையாய் தலை அசைத்தான்.

'உனக்கு விடுதலை, கையொப்பம் போட்டு விட்டு நீ போகலாம்..!'

அவனுக்குத் திக்கென்றது. விடுதலையா? எனக்கா? அவன் ஒருபோதும் விடுதலை வேண்டும் என்று கேட்கவே இல்லையே..? விடுதலை என்று கையொப்பம் போட்ட பல தமிழ் இளைஞர்கள் வீடுபோய்ச் சேரவில்லை என்பது இவனுக்குத் தெரியும். இவனைக் கொண்டே அப்படிப் பலரின் சடலங்களைப் புதைத்தால் என்றாவது தெரியவருமென்று, அடையாளம் தெரியாமல் எரிக்கப் பண்ணியிருக்கிறார்கள்.

கையிலே ஒரு பையைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். கையெழுத்துப் போட்டுவிட்டு பிரித்துப் பார்த்தான். இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் இவன் கைதானபோது அணிந்திருந்த வேட்டியும், சேட்டும் இவன் நினைவுகளைப் போலவே அவையும் கசங்கி மங்கிப்போய்க் கிடந்தன. சேட்டை உதறி மாட்டிப் பார்த்தான். தொளதொளத்துப் போயிருந்தது. தாடியும், பரட்டைத் தலையும் தெருப் பிச்சைக்காரனை அவனுக்கு ஞாபகமூட்டியது.
பலியாடு போலப் பின்தொடர, இராணுவ தடை முகாமிற்கு வெளியே உள்ள வீதியில் அவனைக் கொண்டு வந்து விட்டார்கள். இவனது இளமைக் காலத்தை முற்றாகக் கொள்ளையடித்த அந்த இராணுவ முகாமை வெறுப்போடு திரும்பிப் பார்த்துக் கொண்டே உயிர் வாழும் ஆசையில் அந்த இடத்தை விட்டு வேகமாய் நடந்தான்.

இனி எங்கே போவது? யாரிடம் போவது? உள்ளே இருக்கும்வரை இல்லாத பிரச்சனை இப்போ பூதாகரமாய் தலை தூக்கி நின்றது. காலையில் இருந்து பட்டினி கிடந்ததால் பசி வயிற்றைக் கிண்டியது. உள்ளே இருந்திருந்தால் ஒருவேளை கஞ்சியாவது கிடைத்திருக்கும். உடலும் உள்ளமும் சோர்ந்து போக அப்படியே தெருவோர மரத்தடியில் உட்கார்ந்தான்.

மழை வரும்போல, ஆங்காங்கே வானம் கறுத்திருக்க குளிர் காற்று சில்லிட்டது. சூடாக ஏதாவது குடித்தால் இதமாக இருக்கும்போல் தோன்றிற்று. யாரோ பாதி குடித்துவிட்டுக் கீழே போட்டு நசுக்கிவிட்ட பீடித்துண்டு ஒன்று குழி விழுந்த தெருவில் அரை உயிரோடு இழுப்பு வந்ததுபோல இழுத்துக் கொண்டு கிடந்தது. அதை எடுத்து அதில் ஒட்டியிருந்த மண் துகள்களை ஊதித் தள்ளிவிட்டு வாயில் வைத்து உதட்டைக் குவித்து ஒரு இழுப்பு இழுத்தான். இழுத்த இழுப்பில் இதமான சூடு உள்ளே உடம்பெல்லாம் பரவ, நரம்புகள் புடைத்து நிற்பதை இவன் உணர்ந்தான். அந்த பீடித்துண்டு கொடுத்த உட்சாகத்தோடு மீண்டும் எழுந்து தள்ளாடியபடி நடந்தான்.

எங்கே போவது என்று தெரியாமல் கால்போன திசையில் விச்ராந்தியாக நடந்தான். கனமான பூட்ஸ் கால்கள் பதிந்த இடமெல்லாம் திட்டுத் திட்டாய் வீங்கிப் போயிருந்தன. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் வேதனை தாங்காது 'விண் விண்' என்று மூட்டுக்கள் வலித்தன. காலாகாலமாய் முடிவின்றி நடந்ததுபோல கால்கள் துவண்டு போயின. இன்னும் எவ்வளவு தூரம்..?

எப்படியோ யாரையோ எல்லாம் கெஞ்சி மன்றாடி, மாடுகள் சோடைபிடித்துப் போவதுபோல கடைசியில் இவனும் தான் பிறந்த மண்ணுக்கு வந்து சேர்ந்தான். இருபத்திரண்டு வருடங்களுக்குமுன் இருந்த கிராமம் எப்படியோ எல்லாம் மாறிப்போயிருந்தது. பெட்டிக்கடை மளிகைக் கடையாய் மாறி இருப்பதை அதிசயமாய்ப் பார்த்தான். குழந்தை பசியிலே வீரிட்டதைத் தாங்கமுடியாமல் ஊரடங்குச் சட்டத்தையும் பொருட்படுத்தாமல் தெருவைக் கடந்து பின்பக்கத்தில் இருந்த பெட்டிக் கடைக்குப் பால்மா வாங்கச் சென்ற பொழுதுதான் இவன் இராணுவத்தால் பிடிக்கப்பட்டான். அப்புறம் வேண்டாத குற்றமெல்லாம் இவன்மீது சாட்டி இவனையும் கும்பலோடு கும்பலாகக் கொண்டு போனார்கள். ஒவ்வொரு முகாமாக இவனைக் கொண்டு திரிந்து, அலைக்கழித்து இவனது குடும்பத்திற்கு கண்ணாமூச்சி காட்டினார்கள். பணவசதியோ செல்வாக்கோ இல்லாததால் இவனை வெளியே கொண்டுவர இத்தனை காலமாகியும் இவனது குடும்பத்தால் எதுவுமே செய்ய முடியாமல் போய்விட்டது.

யார்யாரையோ எல்லாம் விசாரிக்க, கடைசியில் கடைக்கு முன்னால் உள்ள மரத்தடியில் கண்ணாடியோடு உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த வயோதிபர்தான் அவனை யார் என்று அடையாளம் கண்டு கொண்டார். 'தன் கணவன் உயிரோடு இருக்கிறான்' என்ற ஒரு நல்ல வார்த்தையைக் கேட்பதற்காக ஒவ்வொரு முகாமாக இவன் மனைவி அலைந்து திரிந்து உயிர் உருக அரசிடம் யாசித்தது அவர் மனக்கண்முன் நிழலாய் வந்தது.
நடேசு தனது குடும்பத்தைப் பற்றி அவரிடம் விசாரித்தான். அவர் கொடுத்த தகவலின்படி அவனது மனைவி இறந்து போனதும், மகள் பாட்டியோடு வளர்ந்து வந்ததும், இப்போ திருமணமாகி அந்த ஊரிலேயே தங்கி இருப்பதும் தெரியவந்தது.

''நீ திரும்பி வருவாய் என்று நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை நடேசு!'' அவனது மகள் குடியிருக்கும் ஒதுக்குப் புறமான ஒரு குடிசைக்கு அவனை அவர் அழைத்துச் செல்லும் போது அவர் ஆச்சரியமாய்ச் சொன்னார்.

வாசலில் சொறி நாய் ஒன்று கண்மூடிப் படுத்திருந்தது. நாயைச் சுற்றி ஈக்கள் வட்டமிட்டு மொய்த்துக் கொண்டிருக்க, மெல்லிய உறுமலோடு தலை நிமிர்த்திப் பார்த்துவிட்டு மீண்டும் சுருண்டு படுத்துக் கொண்டது. அறிமுகம் இல்லாத இவனைப் பார்த்துக் குரைக்காமல் விட்டதே இவனுக்கு மிகப்பொரிய ஆறுதலாக இருந்தது.

'சரசு..!' என்று பெரியவர் வெளியே நின்றபடி குரல் கொடுத்தார்.

இருபத்திமூன்று, அல்லது இருபத்திநாலு வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி வெளியே வந்தாள். அவளின் முந்தானையைப் பிடித்தபடி நாலு, ஐந்து வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றும் தொடர்ந்து வந்தது.

நடேசு ஆச்சரியத்தோடு வெயியே வந்த அந்தப் பெண்ணைப் பார்த்தான். இருபத்திரண்டு வருடங்களுக்குமுன் மனைவியைப் பார்த்த ஞாபகம் சட்டென்று வந்தது.

'சரசு, இது யார் என்று தெரியுதா..?'

அவள் நடேசுவைச் சலனமற்ற ஒரு பார்வை பார்த்துவிட்டு 'தெரியாது' என்பது போலத் தலையசைத்தாள்.

'இதுதான் உன்னோட அப்பா, நடேசு..!'

அவள் அந்த வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. அவளது முகபாவத்தில் இருந்து அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவள் இல்லை என்பது இவனுக்குப் புரிந்து போயிற்று. அவளோ வேண்டாத சந்தேகத்தோடு நடேசுவைப் பார்த்தாள்.

'அவர்தான் செத்துப் போயிட்டாரே..?' புதிதாக ஒருவனை ஏற்கமுடியாத நிலையில் வார்த்தைகள் இழுபட்டன.

'இல்லை சரசு, தொலைந்து போனவன், செத்துப் போயிட்டான் என்றுதான் நாங்க எல்லோரும் நினைச்சு கருமாதி எல்லாம் செய்திட்டோம். ஆனால் இத்தனை வருடமாய் மாறிமாறி ஒவ்வொரு தடைமுகாமிலையும் இருந்திருக்கிறான். இப்பதான் நாட்டிலே சமாதானம் என்று சொல்லி இவனை விடுதலை செய்தார்களாம்.'

அவள் இடையிலே வந்த இந்தப் புதிய உறவை ஏற்றுக் கொள்ள முடியாதவளாய், இந்தக் கதை எல்லாம் எனக்கு வேண்டாம் என்பது போலப் பிடிவாதமாய், அவரது கூற்றை மறுப்பதுபோலத் தலையசைத்தாள்.
'அப்பா என்கிற உறவே என்ன என்று தெரியாமல் நான் இத்தனை வருசமாய் வளர்ந்திட்டேன்;. பாட்டி போனதுக்கப்புறம் வேளாவேளைக்குச் சாப்பிடக்கூட வழியில்லை. கூலி வேலை செய்து இந்தக் குழந்தையை வளர்த்து எடுக்கவே என்பாடு சங்கடமாய் இருக்கு. இப்போ புதிதாய் இந்த வயதிலே அப்பா என்று இவர் உறவு முறை சொல்லிக் கொண்டு வந்தால் நான் என்ன செய்ய..? இருக்கிற சுமையே எனக்குப் போதும் சாமி, இனி என்னாலே புதிதாய் வேறு ஒரு சுமையையும் தாங்கமுடியாது!'

இது போலக் கௌரவமாக வாழ்ந்த இப்படி எத்தனை ஆயிரம் குடும்பங்கள் அந்த மண்ணிலே சிதைக்கப்பட்டு அவர்களின் எதிர்காலக் கனவுகள் எல்லாம் பெரும்பான்மை இனத்தவர்களால் கொள்ளை அடிக்கப் பட்டிருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்க நடேசுவுக்கு ஓவென்று அழவேண்டும் போலிருந்தது. ஆழமாக நினைவுமுள் கிழித்த வேதனையில் காலில் இருந்த வலி மறந்துபோக, தன் எதிர்காலம் குறித்த கவலை இப்போது அவனைப் பிடித்துக் கொண்டது.

'பாட்டிக்கு என்னாச்சு..?' பெரியவர் கேட்டார்.

'பாட்டி போனவருடம் செத்துப் போயிட்டா.' என்றாள் சரசு.

'அப்போ உன் புருசன்..?'

'மூன்று வருடமாச்சு, இவனுக்கு சாப்பிட ஏதாவது கடையிலே வாங்கிக் கொண்டு வர்றேன் என்று சொல்லிவிட்டு கடைப்பக்கம் போனவர்தான் அப்புறம் திரும்பி வரவே இல்லை..!' என்றாள்.

எங்கே போயிருப்பான் என்பதுதான் எப்போதுமே விடை தெரியாக் கேள்வியாய்த் தொக்கி நிற்கிறது. தன்னைப் போலவே தொலைந்து போனவர்களின் பட்டியலில் அவனது பெயரும் எங்கேயாவது எழுதப்பட்டிருக்கலாம் என இவன் நினைத்தான். இன்று நாட்டில் இருக்கும் சூழ்நிலையில் அவன் உயிரோடு இருப்பானோ என்பதுகூட இவனுக்குச் சந்தேகமாய் இருந்தது.

'ஏதோ பெற்றெடுத்த கடமைக்காக என்றாலும் காய்ச்சிற கஞ்சியோ, கூழோ மிச்சம் இருக்கிறதைக் கொடுத்தால் போதும் சரசு, உனக்கு ஒருகாலும் நடேசு பாரமாய் இருக்கமாட்டான்.' வேலி ஓலையில் பிய்த்து எடுத்த ஈக்குச்சியால் பல்லைக் குடைந்து கொண்டிருந்த நடேசுவிற்காகப் பெரியவர் பரிந்துரைத்தார்.

கனவு கண்டுகொண்டு வாசலில் படுத்திருந்த நாய் திடீரென எழுந்து தன் இருப்பை உறுதி செய்ய ஒரு உசுப்பல் உசுப்பி சோம்பல் முறித்தது. நடேசுவைக் கண்டு கொள்ளாமல், ஒரு பாய்ச்சல் பாய்ந்து எதிர் வீட்டுக் கோழியை விரட்டிக் கொண்டு ஓடியது. வாசலின் வெறுமையில் கலைந்துபோன ஈக்கள் எல்லாம் இப்போ நடேசுவைச் சுற்றி மொய்க்கத் தொடங்கின.

குரு அரவிந்தன்
கனடா

நன்றி : கனடிய தமிழ் வானொலி

புல்லுக்கு இறைத்த நீர்..!

குரு அரவிந்தன் - கனடா

தவிர்க்க முடியாமல் போயிருக்கலாம். எப்படியோ அவனை நேருக்கு நேரே சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது.
எதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும் தர்மசங்கட நிலை ஏற்படும்போது சிலர் தெரியாதமாதிரி, கண்டும் காணாததுபோல முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டு அந்த இடத்தை விட்டு மெல்ல நழுவி விடுவதும் உண்டு. சிலர் வேறு வழியில்லாமல் ''சார் எப்படி இருக்கிறீங்க, சௌக்கியமா..?'' என்று பட்டும் படாமலும் குசலம் விசாரித்து விட்டு விலகிச் செல்வதும் உண்டு. இன்னும் சிலர் உண்மையாகவே குரு பக்தியோடு, நலம் விசாரிப்பதில் அக்கறையோடு நின்று நிதானமாக பேசுவதும் உண்டு.
'இத்தனை வருடங்களுக்குப் பின்னும் என்னுடைய பெயரை ஞாபகம் வைச்சிருக்கிறீங்களே, எப்படி சார்..?' என்று வேறுசிலர் ஆச்சரியப்படுவதும் உண்டு.

'உங்கவீட்டிற்கு குடும்பத்தோடு ஒரு நாளைக்கு வரணும் சார், உங்களைப் பற்றி தினமும் வீட்டிலே சொல்லுவேன், இது நீங்க கொடுத்த வாழ்க்கை.' கைகளைப் பற்றிக் கொண்டு டாக்டர் சுந்தர் சென்றவாரம் கண்கலங்கச் சொன்னபோது எனக்கும் கண்கள் கலங்கிவிட்டன.

வீட்டைவிட்டு வெளியே உலாவந்தால் என்னிடம் படித்த மாணவர்கள் நிறையவே தென்படுவார்கள். இப்படி என்னிடம் படித்த எத்தனையோ மாணவர்கள் இன்று டாக்டகளாகவோ, அல்லது உயர் பதவி வகிப்பவர்களாகவோ இருந்து கொண்டு சென்ற இடமெல்லாம் என்னிடம் நலம் விசாரிக்கும்போது, இந்த சமுதாயத்திற்கு முடிந்த அளவு நல்லதொரு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கிக் கொடுத்த எனது கடந்தகால வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருப்பதாக எனக்குள் ஒரு பெருமிதம் தோன்றும். என்னுடைய மாணவன் என்று சொல்லிக் கொள்வதில், அறிமுகம் செய்வதில் மனசெல்லாம் பூரித்துப் போகும். இவன் மட்டும் எந்த வகையிலும் சேராமல் வித்தியாசமாய், மரியாதையின் நிமிர்த்தம் சட்டென்று வாயிலே இருந்த சிகரட்டை எடுத்து பின்னால் மறைத்துக் கொண்டு நின்றான். வாய்க்குள் இருந்த புகையைக் கஸ்டப்பட்டு மென்று விழுங்குவது தொண்டைக் குழி அசைவில் தெரிந்தது. பார்ப்பதைத் தவிர்த்திருக்கலாம். தர்மசங்கடமான அந்த நிலையில் தன்னைத்தானே மாட்டிக் கொண்டு விழித்தான். அந்த இறுக்கத்தைத் தணிக்க, எதிர்த்தாற்போல் நின்ற அவனிடம் 'எப்படி இருக்கிறாய்,..?' என்று குசலம் விசாரித்தேன்.

என்னுடைய கல்லூரி வாழக்கையில் வந்துபோன பலரில் இவனும் ஒருத்தனாய் இருந்தான். நல்ல நிறமாய், மிக நேர்த்தியாக உடை அணிந்து இருப்பான். அன்று மாணவனாய் இருக்கும் போது பார்த்த அதே அலட்சிய் பார்வை. உருவம் மட்டும் கொஞ்சம் மாறி இருந்தது. புத்தகமும் கையுமாய் அதே மூக்குக் கண்ணாடியோடும், கீழ்க்கண் பார்வையோடும் காட்சி தந்தான். வெகுநாட்களாகத் தூங்காதவன் போல முகம் களைத்திருந்தது.
'சார் நல்லா இருக்கிறீங்களா..?' என்று ஒரு சொல்லாவது அவன் கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. எனக்கேன் இந்த ஆசை என்பது எனக்கே புரியவில்லை. எதையுமே நிலையாக உள்வாங்கிக் கொள்ளும் நிலையில் அவன் தற்போது இல்லை என்பது அவனை அருகே பார்த்தபோது புரிந்தது. தள்ளாத வயதில் எதிர்பார்புகள் அதிகமாக இருக்குமோ?

மேளனத்தின் இடைவெளியைத் தவிர்ப்பதற்காக,
'என்ன இந்தப் பக்கம்..?' என்றேன்.

'சும்மா.. லைபிரரிக்கு..!'

அந்த ஒற்றைச் சொல்லுக்கு மேலே அவன் எதுவும் சொல்லவில்லை.
அந்த ஒற்றைச் சொல்லை வைத்துக் கொண்டு இவனைப் பற்றிய முழுவதுமான எந்த ஒரு முடிவிற்கும் என்னால் வர முடியாமல் இருந்தது.
காற்றின் சுழற்சியில் சிகரட் புகை மேலே எழும்பி முதுகைத் தாண்டி தலைக்குமேலால் சுருண்டு போனது. விரல் இடுக்கில் இதுவரை பின்னால் மறைத்து வைத்திருந்த சிகரட் விரலைச் சுட்டிருக்க வேண்டும். அப்படியே கீழே நழுவவிட்டான். விழுந்த இடத்தைப் பார்க்காமலே வெகுலாவகமாக குறி வைத்துச் செருப்புக் காலால் மெல்ல நசித்து விட்டான். அது நசுங்கிய வேகத்தில் வித்தியாசமான ஒருவித மணம் பரப்பி வண்டிச் சக்கரம்பட்ட தேரைபோல இறுதி மூச்சை விட்டுப் பிதுங்கிப் போனது. என் மீது இருந்த பார்வையை எடுக்காமலே தன்னிச்சையாகவே அத்தனையையும் செய்து முடித்தான்.

ஒருவேளை இவனது கடந்தகால வாழ்க்கையும் இப்படித்தான், புரியாத தெரியாத காரணங்களால் அடிபட்டு நசுங்கிப் போயிருக்குமோ..?
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, இவன் முதன் முதலாக அட்மிஷன் கேட்டு வந்தபோது அவனது தாயும் கூடவே வந்திருந்தாள். கேட்டதற்கு மட்டும் இவன் தலையசைத்தான், பாரம் நிரப்புவது முதற்கொண்டு மிகுதி யாவற்றையும் தாயே செய்து முடித்தாள். போகும்போது 'என் பையன் டாக்டராகணும், அது உங்க பொறுப்பு என்று வேறு சொல்லிவிட்டுச் சென்றாள். மகனை எப்படியாவது டாக்டர் ஆக்கிவிட வேண்டும் என்ற ஆதங்கம் அவள் பேச்சிலும் செய்கையிலும் தெரிந்தது.

அவனுக்கு கணிதம் நன்றாகவே வந்தது. ஆனால் விஞ்ஞானம் புரியவே மாட்டேன் என்றது. பொறியியல் துறையில் அவனுக்கு இருந்த ஆர்வம் விலங்கியல் துறையில் வரவேயில்லை. ஆனாலும் எப்போதும் புத்தகமும் கையுமாய் படித்துக் கிழிப்பவன் போல் வெறும் பாவனை செய்வான்.
தாயின் கனவுகள் வெறும் பகற்கனவாய்ப் போகப் போகிறது என்பது எனக்குச் சீக்கிரமே புரிந்து போயிற்று. காலத்தை விரயமாக்க வேண்டாம், அவனுக்குப் பிடித்தமான துறையில் அவனைச் செல்ல விடும்படி ஜாடைமாடையாக தாயிடம் சொல்லிப் பார்த்தேன். கேட்பதாக இல்லை. மகனை டாக்டராக்கிப் பார்ப்பதைத் தவிர வேறு லட்சியமே தனக்கு இல்லை என்பது போல, நான் சொன்னது எதையுமே அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கடைசியில் காலம்தான் பதில் சொன்னது. தாயின் கனவு கலைந்தபோது, அவன் எதுவுமே இல்லாமல் வெறும் பூஜ்யமாய் இருந்தான்.

'உன் அம்மா..?' சட்டென்று தாயின் ஞாபகம் வரவே விசாரித்தேன்.
'அம்மாவிற்கென்ன என்னை தனியே நடுத்தெருவில் விட்டிட்டு மகாராசியாப் போயிட்டா.' சட்டென்று சுதாரித்துக் கொண்டு, கைகளை உயர்த்தி மேலே காட்டிச் சொன்னான். பார்வை எங்கோ வெறித்தது.

'ஐயாம் சொறி..!' அனுதாபப்பட்டு ஆறுதல் கூறினேன்.

கனவுகளை யதார்த்தம் என்று நம்பி ஏமாந்தவள் இவனின் தாய். இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றவள் மகாராசியாய் எப்படிப் போயிருக்க முடியும், பரிதவித்துத்தான் போயிருப்பாள் என்று, அவனது பதில் என்னை எண்ண வைத்தது.

என்னுடைய கடந்தகால ஆசிரியர் தொழில் அனுபவத்தில், இப்படி எத்தனையோ திறமை மிக்க மாணவர்கள் பெற்றோரின் வீண் பிடிவாதத்தால், தவறான பாதையில் வழிகாட்டப்பட்டு கடைசியில் ஒன்றுமே இல்லாமற் போவதைப் பார்த்திருக்கிறேன். இவன் மட்டும் என்ன விதிவிலக்கா?
கொஞ்சக் காலம் என்னிடம் படித்தவன் என்ற முறையில், அவனது இந்த நிலைக்கு நானும் ஒருவிதத்தில் காரணமோ என்று மனசு சங்கடப்பட்டது.
'நேரம் இருந்தால் எங்க வீட்டுப் பக்கம் ஒரு நடை வாவேன்' என்றேன்.
'எங்கே இருக்கிறீங்க..? முகவரியைக் கொஞ்சம் கொடுங்களேன்' என்றான்.
முகவரியைச் சொன்னேன். பவ்வியமாய் ஒரு துண்டுப் பேப்பரில் குறித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான்.

'கட்டாயம் வரணும் சரியா?' என்றேன்.

'கட்டாயம் வர்றேன், ஆனால் நீங்க யார் என்று இன்னமும் சொல்லவே இல்லையே..?' என்றான்.

அவனது காலடியில் கிடந்த நசிக்கப்பட்ட சிகரட் துண்டு என் பார்வையில் பட்டது. அந்த சிகரட் புகையின் நாற்றம் என் உடம்பு முழுவதும் சட்டென்று படிந்து விட்டது போல ஏனோ என் உணர்வு சங்கடப்பட்டது.

குரு அரவிந்தன்
கனடா
நன்றி : ஆனந்தவிகடன்

ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்!

- குரு அரவிந்தன் - கனடா -

இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. ஒன்று அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்த டி.என்.ஏ ரிப்போட், மற்றது அழகாக குண்டு குண்டாக அவருக்கு நன்கு பழக்கப்பட்ட கையெழுத்தில் முகவரி எழுதப்பட்டிருந்தது. ஊட்டி கான்வென்ட் ஹாஸ்டலிலிருந்டது எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தைத்தான் முதலில் பிரித்துப் படித்தார்.

'அன்புள்ள அப்பா'
பதினைந்து வயது நிரம்பிய மகள் திவ்யாவிடம் இருந்து கடிதம் வந்திருந்தது. ஆர்வத்துடன் தொடர்ந்து வாசித்தார்.

'அப்பா இனிமேல் உங்களை உரிமையோடு 'அப்பா' என்று என்னால் அழைக்க முடியுமோ தெரியாது. ஆனாலும் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் டி.என்.ஏ ரிப்போர்ட் உங்கள் கையிற்கு வருமுன் எனக்கும் உங்களுக்கும் இடையே இருந்த உறவைப் பற்றி மனம் விட்டுப் பேசவிரும்புகின்றேன்.

அப்பா என்றால் பாசம், அப்பா என்றால் அன்பு, எனக்கு எல்லாமுமாய் நீங்கள் தான் இருந்திருக்கிறீர்கள். அம்மாவின் அலட்சியமும், அசட்டையும், உதாசீனமும் என்னை அம்மாவிடம் இருந்து தூரவிலகிப்போக வைத்ததாலோ என்னவோ, உங்கள் மீது அதிகம் ஈடுபாடு கொள்ள வைத்தது. அன்பையும் பாசத்தையும் என் இதயத்தில் விதைத்து விட்டு உங்கள் இதயத்தை மட்டும் எப்படி அப்பா உங்களால் கல்லாக்கிக் கொள்ள முடிந்தது?

அம்மாவிற்கும் உங்களுக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் பூதாகரமாய் வளர்ந்து இப்படி விவாகரத்தில் முடியுமென்று நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. 'இவளுக்கு அப்பா நீங்கள் அல்ல' என்று அம்மா ஆவேசமாகக் கத்திக் கூச்சல் போட்ட போது கூட நான் அதைப் பெரிது படுத்தவில்லை. ஆனால் 'நீ என் பெண்தானா?' என்ற கேள்விக் குறியோடு என்னை நீங்கள் நிமிர்ந்து பார்த்தீர்களே அதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.
பெற்றோருக்குள் ஏற்படும் பிரச்சனைகளால் பிஞ்சுமனங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றன என்பதை ஏன்தான் பெற்றவர்கள் உணர்ந்து கொள்ள மறுக்கிறார்களோ தெரியாது. என் எதிர் காலத்தை நினைக்க எனக்கே பயமாக இருக்கிறது. எல்லோர் பார்வையிலும் நான் ஒரு கேள்விக் குறியாய்த் தெரிகிறேன். என்னைப் பொருத்தவரை எனக்கேற்பட்ட இந்தப் பாதிப்பு ஒரு மாறாத ரணமாய் என் மனதில் பதிந்து விட்டது.

அப்பா கடைசியாக உங்களிடம் ஒரு வேண்டுகோள்! விஞ்ஞானம் முன்னேறி விட்டது. அம்மா சொன்னது உண்மை என்றால் டி.என்.ஏ ரிப்போட் வந்ததும் நான் உங்கள் பெண் அல்ல என்பது நிரூபணமாகிவிடும். அந்த நிமிடமே நான் உங்களை விட்டு அன்னியப்பட்டு விடுவேன். அப்படி ஒரு நிலைமை ஏற்படுமுன் கடைசியாக ஒரு முறை உங்களைச் சந்திக்க விரும்புகின்றேன். எனக்கென்னவோ உங்கள் தோளில் முகம் புதைத்து மனதில் இருப்பதை எல்லாம் உங்களிடம் அழுது கொட்டித் தீர்க்க வேண்டும் போல இருக்கிறது! உங்கள் பிடிவாதத்தை கைவிட்டு என்னைப் பார்க்க ஒரே ஒரு முறையாவது வருவீர்களா?'

அந்தக் கடிதத்தை வாசித்ததும் அவர் இடிந்து போய்விட்டார். கணவன் - மனைவி பூசல் காரணமாக ஒன்றுமறியாக் குழந்தை வீணாகத் தண்டிக்கப் படுகிறாளே என்று நினைத்தார். விவாகரத்துக் கோரும் அளவிற்கு அவர் என்ன தான் தப்புச்செய்தார்?

கல்யாணமான புதிதில் அவருக்கு ஏற்றமாதிரி நடந்து கொண்ட மனைவி காலப் போக்கில் தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினாள். சிறிது சிறிதாக அவர்களுக்குள் தொடங்கிய பிரச்சனை குழந்தை பிறந்த பின்பும் தொடர்ந்து விசுவரூபம் எடுத்தது.

அவரிடம் பணம் இருந்தது, அவளிடம் அழகும் இளமையும் இருந்தன. அவளது விருப்பம் இல்லாமல் அவளது குடும்பத்தின் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் இந்தக் கல்யாணம் நடந்தது என்பது அவளாகச் சொல்லும் வரை அவருக்குத் தெரியாது. ஆனாலும் தனது குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு அவரிடம் உள்ள வசதிகளை அனுபவிப்பதற்காக அவளும் இவ்வளவு காலமும் மௌனமாய் அவரோடு ஒத்துப் போயிருக்கிறாள்.
'உனக்கு விருப்பம் இல்லாமலா இந்தக் கல்யாணம் நடந்தது?'
'ஆமா! என்னை ஒரு பெண்ணாய் யாருமே மதிக்கலே! உங்களுடைய பணத்தைக் குறிவைத்து என் ஆசைகளை, என் காதலை, கடந்த காலத்தை எல்லாவற்றையுமே எங்க அப்பா அடமானம் வைத்து விட்டாரே!' அவள் விசும்பி விம்மலாய் வெடித்தாள்.

'காதலா.......?'

'ஆமாம் காதல்தான்! என் காதலனைத் திருமணம் செய்யப்போவதாக நினைத்துத் தான் அவனோடு நான் நெருங்கிப் பழகினேன். ஆனால் விதி தான் உங்கள் உருவத்தில் வந்து விளையாடி விட்டதே! இனிமேலாவது எனக்கு விவாகரத்து மூலமா விடுதலை கொடுங்க...'

'அப்போ இத்தனை காலமும் என்னோட வாழ்ந்ததெல்லாம்......?'

'வாழ்ந்தது இந்த மீனாவோட உடம்பு மட்டும் தான், மனசல்ல! இனியும் போலியாய் என்னை நானே ஏமாற்றிக் கொண்டு உங்களோடு வாழ என்னாலே முடியாது. எனக்கு இந்த நரகத்தில் இருந்து விடுதலை வேணும்!'
'பிரிஞ்சு போகத்தான் வேண்டும் என்றால் அதை யாராலும் தடுக்க முடியாது, ஆனால் நம்ம பெண்ணோட கதி?''

'நம்ம பெண்ணா? யார் சொன்னது அவ உங்க பெண் என்று?'

'நீ... என்ன சொல்கிறாய்?'

'ஆமாம்! திவ்யாவிற்கு அப்பா நீங்க இல்லை!'

''இந்தா பார்! நம்ம குடும்ப வாழ்கையோட விளையாடாதே!'

'நான் விளையாடலே, ஆனால் அதுதான் உண்மை!'

இடி ஒன்று தாக்கியது போல அவர் அதிர்ந்து போனார்.
'அப்போ திவ்யா என்னோட பெண் இல்லையா?'

'இல்லை.

'பொய்..! என்னை அவமானப்படுத்த பொய் சொல்றே.. பிரியணும்னா போய்த் தொலை.. எதுக்காக இப்படி சித்திரவதை பண்றே..'

'இப்போ திவ்யா உங்க பெண்ணு இல்லைன்னு நிரூபிக்கணும் இல்லியா..?'

'கடவுளே!...

'நிரூபிச்சுக் காட்டறேன்

மனித மனத்தில் விழும் ஏமாற்றப் பள்ளங்கள் குரூரமாக வக்கிரங்களால் நிரம்பிவிடும் போலும்... அவள் அவனை அவமானப்படுத்தவே சதி தீட்டினாள். லீவுக்கு வந்த திவ்யாவைக் கட்டாயப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தி...

ஹாஸ்டல் விருந்தினர் அறைவாசலில் எதிர்பாராமல் அவரைக் கண்டதும் ஒரு கணம் திகைத்துப் போய் நின்று விட்டாள் திவ்யா. அப்புறம் சமாளித்துக் கொண்டு, 'நான் உங்களுக்கு ஒரு கடிதம் போட்டேனே கிடைத்ததா?' என்றாள்.

'கிடைச்சதும்மா...'

'டி.என்.ஏ ரிப்போட் இன்னும் வரல்லையா?'

'வந்திடிச்சு!'

'வந்திடிச்சா?'
அவள் முகத்தில் ஏமாற்றமும், அதே நேரத்தில் அதன் முடிவை அறிந்து கொள்ளும் தவிப்பும் தெரிந்தன.

'நினைச்சேன், நீங்க தயங்கி நிற்கும்போதே உங்களுக்கு உண்மை தெரிஞ்சிருக்கும் என்று நினைச்சேன்!'

'தெரியும்!'

'அப்போ அம்மா சொன்னது அத்தனையும் உண்மை தானே?'

'இல்லை, அம்மா சொன்னதில் உண்மையில்லை! அம்மாவிற்கு என்னோடு வாழப்பிடிக்கலை, அதனாலே எனக்குக் கோபமூட்டி என்னிடம் இருந்து விவாகரத்து வாங்கத்தான் அம்மா அப்படிச் சொல்லியிருக்கா!'

'அப்பா! நீங்க என்ன சொல்லுறீங்க?'

'டி.என்.ஏ ரிப்போட்டைப் பார்த்தேன்! நீ என்னோட பெண்தான்!'

'உண்மையாவா...?'

'ஆமாம்! யார் என்ன சொன்னாலும் நீ என்னோட மகள்தான்!'

'அப்......பா!' அந்த ஒரு சொல்லுக்காகவே காத்திருந்தது போல அவள் பாய்ந்து வந்து அவரைக் கட்டி அணைத்து மார்பிலே முகம் புதைத்து விக்கி விக்கி அழுதாள். இன்னும் பெரிதாக நெஞ்சு வெடிக்க ஓலமிட்டு அழவேண்டும் போல அவளுக்கு இருந்தது.

'அழாதே அம்மா!' அவர் பாசத்தோடு கண்ணீரைத் துடைத்து விட்டார். சட்டென்று அழுவதை நிறுத்தி, அவள் அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

'இனிமேல் நான் அழமாட்டேன், எனக்கும் அப்பா இருக்கிறார்!' அவள் சந்தோஷமிகுதியால் அவர் கைகளுக்குள் முகத்தைப் புதைத்து வாய்விட்டுச் சிரித்தாள்.

மகளைத் திருப்திப் படுத்திய சந்தோஷத்தோடு அவர் வீடு திரும்பினார். வீடு வந்ததும் முதல் வேலையாக பிரித்துப் படிக்கப்படாத அந்த டி.என்.ஏ ரிப்போட்டை அப்படியே கவரோடு சேர்த்துக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டார். மனம் அமைதியாக இருந்தது. இந்த அமைதிக்காக அவர் கொடுத்த விலைகூட அதிகமாகத் தோன்றவில்லை. மீனா கோரிய விவாகரத்தில் பரஸ்பர சம்மதம் என்று மறுபேச்சின்றி கையெழுத்து போட்டுக் கொடுத்திருந்தார்.

பதிலுக்கு அவளும் டி.என்.ஏ அறிக்கை முடிவை திவ்யாவிடம் வெளியிடுவதில்லை என்று வாக்குறுதி அளித்திருந்தாள். விவாகரத்து வழக்கு முடிய சிறிது காலம் ஆகலாம்... ஆனால் திவ்யாவின் நிம்மதி ஆயுட்காலத்திற்கும் நீடிக்கும்.

- குரு அரவிந்தன் - கனடா -
(நன்றி – கல்கி)