Tuesday, June 15, 2004

இரண்டாம் ஜாமங்களின் கதை - 1

சல்மா

மழை விழுவதை வகுப்பறை சன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தாள் ராபியா. வகுப்பறைக்குச் சற்றுத் தள்ளி விளையாட்டு மைதானத்தை ஒட்டியிருந்த ஆசாரி குளத்தின் உயர்வான மண் மேட்டின் மீதிருந்து மழைநீர் இறங்கி வழிவதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. குளத்தின் உட்புறம் வழியும் நீர் குடிதண்ணீராக இருந்தபோது வெளிப்புறத்தில் விழுந்து ஓடும் நீர் சாக்கடையில் கலந்து கொண்டிருந்தது. இடையிடையே வீசிய காற்று ஜன்னல் வழியே அவளது முகத்தில் மழையை வாரி இறைத்தது தாங்க இயலாத உற்சாகத்தை உண்டாக்கிற்று. ‘அம்மாவின் பேச்சைக் கேட்டு இன்று ஸ்கூலுக்கு வராமல் இருந்திருந்தால். . .’ மழைவரும் நாளன்று பள்ளியில் ஆசிரியரோ ஆசிரியைகளோ வகுப்புகளுக்கு பாடம் நடத்த வருவதில்லை என்பது வழக்கமான விஷயம். "ஒரு பீரியடை முடித்துவிட்டு அடுத்த கிளாஸ் ரூமுக்குப் போவதற்குள் நனைந்துவிடுவோம் என்ற பயம் டீச்சர்களுக்கு" என்று ராபியாவும் மற்ற பிள்ளைகளும் கிண்டலாகப் பேசிச் சிரித்துக்கொள்வார்கள். அவர்களது சோம்பல் இவர்களுக்கு அன்றைய தினத்தை அதிக குதூகலமிக்கதாக மாற்றிவிடும். பாட்டுப் போட்டியும் கதைகளும் சொல்லிக் கொண்டு ஜோராக நேரத்தைக் கழிப்பார்கள்.

"ஏய் ராபியா!" யாரோ தன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது காதில் விழ திடுக்கிட்டுத் திரும்பினாள். வகுப்பறையின் லீடர் உமா, "உன்னைத் தேடி ஆள் வந்திருக்கு இல்ல, பார்" என்றாள். யாராக இருக்கும் என்கிற யோசனையுடனும் எதற்காக என்கிற கேள்வியுடனும் எழுந்து பிள்ளைகளைத் தாண்டி வாசற்படிக்கு வந்தாள். கார் டிரைவர் முத்துதான் குடைக்குள் ஒடுங்கி நின்று கொண்டிருந்தான்.

"என்ன முத்தண்ணே" என்று கேட்டவளிடம், "அம்மா உன்னை கூட்டி வரச் சொன்னாங்க" என்றான். "ஏன்" என்றாள் ராபியா புரியாமல்.

"தெரியல்லை. வா போகலாம்" என்றான் அவசரப்படுத்தும் குரலில். அவளுக்கு இந்த மழை நேரத்து வகுப்பறையை விட்டுப்போக சுத்தமாக விருப்பமில்லை. "அதெல்லாம் உடனே வரமுடியாது முத்தண்ணே. நான் டீச்சர்கிட்ட கேட்டுட்டு வர்றேன். குடையை மட்டும் குடுத்துட்டுப் போங்க" என்றாள்.

"அதெல்லாம் இல்லெ. நீ உடனே கேட்டுட்டுவா. அம்மா என்னய திட்டுவாங்க. இப்பவே வா. கேட்டுட்டுப் போகலாம்" என்றவனிடம், "இல்லெ எனக்கு கொஞ்சம் எழுத வேண்டியது இருக்கு. எழுதாம டீச்சர் அனுப்ப மாட்டாங்க. நீங்க போங்க" என்றாள் பிடிவாதமாக.

முத்துவுக்கு வேறு வழி தெரியவில்லை. போக மனமில்லாமல் "சரி" என்று சொல்லி குடையை மட்டும் இவளிடம் தந்து விட்டுப் போனான்.

ராபியாவுக்கு அப்பாடா என்றிருந்தது. சிறிது நேரம் கழித்து நடந்தே போகலாம், மழையில் நனைந்து கொண்டு. அதோடு வழியில் தேங்கிக் கிடக்கும் மழைநீரை கால்களால் உதைத்து வி¬ளையாடியபடி எல்லோரோடும் சேர்ந்தே நடந்து போகலாம் என்பதை நினைத்தபோது சந்தோஷமாக இருந்தது.

உமா கேட்டாள். "எதுக்காக உன்னை கார் அனுப்பி கூப்பிட்டிருப்பாக? எதாச்சும் முக்கியமான விஷயமா இருக்காது?" அவள் முகத்தில் லேசான வருத்தம் தெரிவது போலிருப்பதை ராபியா கவனித்தாள்.

"அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. மழையில நனைஞ்சு போயிருவேன்னு கூப்பிட்டு விட்டிருப்பாங்க" என்று அலட்சியமாக சொல்லி விட்டு தன் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

வகுப்பறையிலிருந்த அத்தனை மாணவிகளுமே தன்னையே கவனிப்பதையும் இவளைக் கூப்பிட கார் வந்து திரும்பிப்போன ஆதங்கம் முகங்களில் தெரிவதையும் கவனித்த அவளுக்குப் பெருமையாக இருந்தது. ரமேஷ் தன்னைக் கவனிக்கிறானா என்று ஓரக் கண்ணால் பார்த்தாள். அவன் கவனிக்காமலிருப்பது சற்று ஏமாற்றமாக இருந்தது.

"நல்லவேளை நீ மாட்டேன்னு சொன்ன. நாம நடந்தே போகலாம் ஜாலியா" என்றாள் இவளுக்கருகில் அமர்ந்திருந்த மதினா.

"ஆமாம். அதுக்காகத்தான நான் வரலைன்னு சொல்லி அனுப்பிட்டேன்" என்ற ராபியா மறுபடியும் வகுப்பறைக்கு வெளியே கொட்டும் மழையை பார்க்க ஆரம்பித்தாள். அவளுக்கு நேரெதிரே இருந்த பன்னீர் மரத்திலிருந்து மழைநீர்பட்டு பூக்கள் கொட்டிக்கொண்டிருப்பதைப் பார்க்க அழகாக இருந்தது. போகும் பொழுது அந்தப் பூவையெல்லாம் பொறுக்கி பையில் போட்டுக் கொண்டு போக வேண்டும். இந்தப் பள்ளியிலேயே அவளுக்கு மிகவும் பிடித்தமான இடம் இந்த பன்னீர்ப்பூ மரம் தான். அந்த மரத்தின் நிழலில் அமர்ந்து படிக்கத்தான் ரொம்பவும் பிடிக்கும். எவ்வளவு பெரிய மரம் என்று அதைப் பார்க்கும் பொழுதெல்லாம் தனக்குள்ளே சொல்லி வியந்து கொள்வாள். இந்த மரம் ஏன் இந்த ஊரில் வேறெங்கேயுமே இல்லை என்று அம்மாவிடம் அடிக்கடி கேட்பாள். "எனக்கென்னடி தெரியும், இல்லைன்னா இல்லைதான்" என்று ஒரு வார்த்தையில் முடித்துக் கொள்வாள். தனக்குத் தெரிவதில் பாதி கூட அம்மாவுக்குத் தெரிவதில்லை என்று சமயங்களில் ராபியாவுக்கு பெருமையாக இருக்கும். இன்றைக்கு இந்தக் கேள்வியை பெரியம்மாவிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். ‘பெரியம்மா டவுனிலிருந்து வந்ததனால் நிறைய விஷயம் தெரியும். அம்மா மாதிரி பட்டிக்காடு இல்லை’

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து சேர்ந்த பொழுது குடைக்குள்ளிருந்தாலும் முழுவதுமாக நனைந்திருந்தாள். இவளைப் பார்த்த நொடியிலேயே சொஸ்ராவுக்கு ஆத்திரம் பொங்கியது. அவளுக்குக் கோபத்தைக் காட்ட கத்தவோ திட்டவோ தெரியாது என்றாலும் முகத்தின் சிடு சிடுப்பை வைத்து அவளது கோபம் புரிந்தது.

"ஏன் நாங்க கூப்பிட்டு விட்டா வர மாட்டியோ? அப்படி என்னா படிச்சிக்கிட்டு இருந்தே, உன் சனியனால நாங்களும் போகாம நிக்கிறோம்" என்றபடி ராபியாவின் பக்கத்தில் வந்தவள் அவளது தோற்றத்தைப் பார்த்து அப்படியே திகைத்து நின்று விட்டாள்.

வெள்ளைநிறத்தில் ராபியா அணிந்திருந்த பிளவுஸ் மழையில் நனைந்து அவளது உடம்பின் உள் பகுதியை அப்படியே வெளித்தெரியச் செய்திருந்தது. வயதுக்கு மீறிய வளர்ச்சியைவிடக் கூடுதலாகத் தெரிந்த அவளது மார்புகள் அப்பட்டமாக வெளித் தெரிந்து அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கிற்று. ராபியாவின் தோளைத் தொட்டு எதுக்காக நனைஞ்சே என்று உலுக்கியவள் "இந்தக் கோலத்துலதான் பள்ளிக்கூடத்திலிருந்து வர்றியா? அட அல்லாவே, அம்புட்டுப்பேரும் வேடிக்கை பார்த்திருப்பாங்களே. பொம்பளைப் புள்ளைக்கு கொஞ்சமாச்சம் கூச்சம் வேணாம். இதைக்கூட யாரும் கத்துத் தரணுமா" என்று புலம்பியபடியே அவள் தலையைத் துவட்டி விடத் துவங்கினாள்.

அம்மாவின் புலம்பலின் அர்த்தம் ராபியாவுக்கு சரியாகப் புரியவில்லை. எதற்காக இப்படிச் சொல்கிறாள் என்று அவள் குனிந்து தன்னைத்தானே பார்த்துக்கொண்டாள். தண்ணீரில் நனைந்ததனால் உடலின் மேடிட்ட மார்புப்பகுதி அப்படியே வெளித்தெரிந்தது. அதைப் பார்த்ததும் இவளுக்கும் சிறிது கூச்சமாக இருந்தது.

தலையை துவட்டி முடித்து சொஹ்ரா இவளிடம் "போ. போயி துணியை மாத்திட்டு கௌம்பு. நாம இப்ப குப்பி வீட்டுக்குப் போறோம். வீட்டுல நாங்க போயிட்டா நீ வந்து தனியா இருப்ப அப்பிடின்னுதான் ஒன்னயையும் கூடக் கூட்டிப் போயிரலாம்னு வரச் சொன்னா இப்பிடியா செய்வ?" என்று முணுமுணுத்துக் கொண்டே அடுப்படிக்குப் போனாள்.

ராபியாவுக்கு சந்தோஷம் மறுபடி தலை தூக்கியது. நாமும் வெளியே போகப் போகிறோம் என்பதனால் இன்று மாலை படிக்கத் தேவையில்லை. மதரஸாவுக்கும் போகத் தேவையில்லை என்ற பெருமையோடு குடுகுடுவென ஓடிப்போய் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டு உடைமாற்றத் தொடங்கினாள்.

nanatri - ulagathmizh