Sunday, June 27, 2004

இரண்டாம் ஜாமங்களின் கதை - 4

சல்மா

சொஹ்ராவுக்குத் தன்னை ஒரு அப்பாவியாக எல்லோரும் நம்பிக்கொண்டிருப்பதை நினைத்து ரொம்பவும் ஆசுவாசமாக இருந்தது. தனது பெரும்பாலான உணர்ச்சிகளைத் தனக்குள்ளாகப் புதைத்து வைத்துக்கொள்ளவும், யாரும் தன்னைக் கிளறிவிடாமல் இருக்கவும் இந்த பிம்பம் அவளுக்குத் துணையாக இருந்தது. எப்பொழுதுமே அவள் தனது மனத்திலுள்ள எண்ணங்களை எளிதில் யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டாள். பிர்தவ்ஸைப்போல. பிர்தவ்ஸ் எதையும் உடனுக்குடன் போட்டு உடைப்பது போல வெளிப்படுத்திவிடுவாள். அதனால்தானே தனது வாழ்க்கையையும் இப்படி சீரழித்துக் கொண்டாள். யாரிடம் பகிர்ந்து என்னவாகப் போகிறது என்று நினைத்துத் தன் மனத்திற்குள் வைத்துக்கொள்வாள் எதையுமே.

தந்தை இஸ்மாயிலின் மவுத்திற்குப் பிறகும் நன்றாக இருந்த தன் குடும்பத்திடம் தனது திருமணத்திற்குப் பிறகு தன் கணவனால் நிகழ்ந்துகொண்டிருந்த அத்துமீறலான ஊடுருவல் குறித்து அவளுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லாமல்போயிற்று. தனது தாயும் தங்கையும் மென்று விழுங்கிக்கொண்டிருக்கும் வேதனை புரிந்தாலும், தன்னைக் கட்டிப்போட்டிருந்த இயலாமை அவளைச் செயலற்றவளாக ஆக்கியிருந்தது. அக்குடும்பத்திற்கென ஒரு பொறுப்பான ஆண்துணை இல்லாததால்தான் தன் கணவனிடமிருந்து அவர்களை விலக்கவோ, அவனது உதவிகளை மறுக்கவோ இயலாத நிலை உருவாகியிருந்தது. பிர்தவ்ஸ§க்கு மாப்பிள்ளை பார்த்தது, திருமணம் முடிந்தது, சீர் செய்தது என்றெல்லாம் நிறையக் கடமைகளும் செலவும் இருந்தன. இதையெல்லாம் வேறு யார் பார்க்கப்போகிறார்கள் இவனை விட்டால்? அதே சமயம் அவனிடம் எவ்வளவு நாள் அழுதிருக்கிறாள்: "நீங்க அங்கெ போய் வர்றது நல்லாவா இருக்கும்?", "தகப்பனில்லாத பிள்ளைக்குத் தகப்பனா இருக்கக்கூடாதா?", "வெளியில் தெரிந்தால் யார் அவளைக் கல்யாணம் செய்ய வருவாங்க" என்றெல்லாம்.

அவன் எதைத்தான் காதில் வாங்கியிருக்கிறான்! "நீயும் உன்னோட அம்மா வீட்டுல போய் இருந்துக்கறதா இருந்தா எனக்கு சரிதான்!’" என்று அலட்சியமாகச் சொல்லிவிடுவான்.

ஆனால் இவள் தனக்கு எதுவுமே தெரியாத மாதிரித்தான் தங்கையிடமும் தாயிடமும் இருந்து கொண்டிருந்தாள். நடந்து முடிந்த இந்தத் திருமணத்தின் சகல நோக்கங்களையும் இவளும் அறிவாள். இந்த மாப்பிள்ளையை முடிக்க இவள் ஒத்துக்கொள்ளவேயில்லை. கொஞ்சமாவது பொருத்தம் வேண்டாமா என்று அழுது தவித்துப்பார்த்தாள். "உங்க குடும்ப நிலைமைக்கு இவன் ஒத்துக்கிட்டதே பெரிய சங்கதி. உன் வேலையைப் பார். பொருத்தம் பாக்குறாளாம். பொருத்தம்" என்று சொல்லி விட்டான்.

பெண்ணாகப் பிறந்துவிட்ட பிறகு தன் சொல்லுக்கு யாரும் இங்கே மதிப்பு வைக்கப்போவதில்லை என்ற நிலையில் அவள் மௌனமாக இருக்க வேண்டியதாயிற்று. அதன்பிறகு நடந்தவை எல்லாம் அவசர கதியில் நடந்து முடிய, சொஹ்ரா ரொம்பவுமே மனம் ஒடுங்கிப்போய்விட்டாள் என்பதே உண்மை.

அந்த மாலை நேரம் கடுமையான வெப்பத்தைக் கொண்டதாயிருந்தது. பள்ளியிலிருந்து திரும்பிய ராபியாவுக்கு மற்றெந்த நாளையும்விட இன்று மிக முக்கியமானதாக இருந்தது. எல்லாப் பிள்ளைகளுக்கும்தான். ஏன் பெரியவர்களுக்கும் அப்படித்தான். இன்னும் சிறிது நேரத்தில் இருள் கவியத் தொடங்கிவிடும். அப்பொழுதுதான் வானில் ரமலான் பிறை தோன்றும். அதன் பிறகு அடுத்த ஒருமாத காலத்திற்கு ஒரே கொண்டாட்டம்தான். இந்த ரமலான் மாதத்தில் செத்துப்போவதற்கும் கூட கொடுத்துவைத்திருக்க வேண்டுமாம். நேரடி சொர்க்கம் நிச்சயமாம். இதெல்லாம் அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறாள். அதோடு தினமும் வீடுகளில் தின்பதற்குத் தீனி நிறையக் கிடைக்கும். இவையெல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் இம்மாதத்தில் அல்லா பேய்களை வானத்தில் கட்டிப்போட்டு வைத்துவிடுவான் என்பதுதான். குழந்தைகளுக்கு இதைவிட சந்தோஷம் தரும் விஷயம் வேறெதுவும் இருக்க முடியாது இல்லையா?

சாயங்காலத்திலிருந்தே அவளும் மதினாவும் இன்னும் சில பிள்ளைகளுமாக அவளது வீட்டுக்கருகிலிருந்த காலியிடத்தில் ஆளுக்கொரு கல்லைத் தூக்கிப்போட்டுக்கொண்டு அதில் குத்தவைத்து உட்கார்ந்திருந்தார்கள். ராபியாவின் கெண்டைக்காலில் கொசுக்கடிக்க ஆரம்பிக்க, பல்லைக் கடித்தபடி சொறிந்துகொண்டிருந்தவாறு மதினா கேட்டாள், "ஏன் ராபியா இன்னிக்கு அவசியம் பிறை வருமில்ல" என்று. அவளுக்கு ஏதோ சந்தேகமாக இருந்தது. அது தங்களை ஏமாற்றிவிடுமோ என்று. அவளது நீளமான முகத்தில் ஏமாற்றத்தின் சாயல் படர்ந்திருந்ததைக் கவனித்த ராபியா அவளுக்காகவேனும் இன்றே பிறை தெரிந்துவிட வேண்டும் என விரும்பினாள். அவளது முக வாட்டத்தைத் தற்சமயத்திற்காவது போக்க வேண்டுமென்கிற நினைப்பில், "வரும், கட்டாயம் வரும்" என்றவள், "அப்படித் தெரியலைன்னாலும் கூட சிலோன் ரேடியாவுல சொல்வாங்க இல்ல" என்றாள். ஆறுதல் சொல்கிற தோரணையோடு.

"ஆமா உங்க வீட்டுல மாவு இடிச்சாச்சா?" என்று கேட்டாள் மதினா. "உம் இடிச்சாச்சே. உங்க வீட்டுல இடிச்சதுக்கு மறுநாள் அதைக்கூட மறந்துட்டியா" வியப்பு மேலிடக் கேட்டாள் ராபியா.

"அடடா, மறந்தேபோயிட்டேன் பாரு" என்று தன் நெற்றியில் லேசாகத் தட்டிக்கொண்டாள் மதினா.

அதன்பிறகு அவர்கள் மௌனமாக இருந்து வானத்தைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். ராபியாவுக்கு மாவு இடிப்பது பற்றி ஞாபகம் வந்தது. ரம்ஜான் துவங்க ஒருமாதம் முன்பே அதற்கு முன்னேற்பாடாக வீடுகளில் மாவு இடிக்கத் துவங்கிவிடுவார்கள்.

ராபியாவுக்கு ரொம்பவே கொண்டாட்டமாக இருக்கும். அந்த வேலை உண்டு பண்ணுகிற பண்டிகை ஞாபகங்கள் இவளுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும். முன்னாடியே அம்மாவும் பெரியம்மாவும் நெல் அரைக்க ஏற்பாடு செய்வார்கள். முதலில் ஆள்விட்டு நெல்லைப் புடைப்பார்கள். பிறகு அதை அரைத்து வரும்படி செய்து, தேவையான அளவு மாவுக்கு எடுத்துக்கொண்டு, மீதியை மறுபடி மிஷினில் கொடுத்து இரண்டாக உடைத்து வர அனுப்புவார்கள். அதை நோன்புக் கஞ்சிக்கென ஒதுக்கி வைத்துவிடுவார்கள். முதல் நாளிலிருந்தே ராபியா பக்கத்து வீடுகளுக்குச் சென்று உலக்கைகள், மாவு சல்லடைகள் உட்காரும் பலகை, மாவு வறுக்கும் ஓடு எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்ப்பாள். ஒவ்வொன்றிலும் பத்து, பத்து வேண்டியிருக்கும். மறுநாள் அதிகாலையிலேயே பண்ணையார் முதல் நாளே சொல்லி வைத்திருந்து வரச்சொல்லியிருந்த கூலிப்பெண்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள். அம்மாவும் பெரியம்மாவும் காலை மூன்று மணிக்கே எழுந்து அரிசியை அண்டாக்களில் கொட்டிக் களைய ஆரம்பிப்பார்கள். களைந்த அரிசியை நீர் வடிய கூடைகளில் அள்ளிப் போட்டுவிட்டு கழனித் தண்ணியை மாடுகளுக்கென்று குழுதாடியில் நிரப்பிவிட்டு மறுபடி மறுபடி அரிசி வெள்ளை வெளேரென மாறும்வரை களைந்து ஊறவைத்துவிடுவார்கள்.

றைமா பெரியம்மா, "ராபியா மாதிரி அரிசி பளீர் வெள்ளையா மாறணும்" என்று சொல்லி சிரிப்பாள். இவளுக்குப் பெரியம்மா சும்மா தனக்காகச் சொல்கிறாள் எனத் தோன்றும். இரவெல்லாம் அம்மாவைத் தூங்கவிடாமல் ராபியா கெஞ்சிக்கொண்டிருப்பாள். அரிசி களைய எழுந்திருக்கும்பொழுது தன்னையும் எழுப்பிவிடச் சொல்லி. அம்மா ஒத்துக்கொள்ள மாட்டாள். காலையில மூணு மணிக்கி எந்திரிச்சு என்ன செய்யப்போறே நீ என்று. அவளை றைமா பெரியம்மாதான் எழுப்பி விடுவாள்.

அதிகாலை ஐந்து மணிக்குப் பக்கத்து ஊர்களிலிருந்து கூலிக்கு வரும் பெண்கள் வெயில் வரும் முன் உலக்கையால் அரிசியைக் குத்த ஆரம்பிப்பார்கள். வீடெல்லாம் அதிரும். மூச்சை தம் பிடித்து நான்கு நான்கு பேராக இடிக்கத் துவங்க, மற்றவர்கள் சலிக்க ஆரம்பிப்பார்கள். சலித்த பச்சை மாவை முற்றத்தில் வெயில் இல்லாத இடத்தில் அடுப்பு மூட்டி ஒருத்தி வறுப்பாள். பிறகு வறுத்த மாவை அடுப்படிக்குள் பாயில் கொட்டி ஆறவைப்பார்கள். வீடே போர்க்களமாக மாறியிருக்கும். புகையும் தூசியும் கண்ணைப் பிழிந்தெடுக்க, வீட்டுக்குள்ளேயே ஓடிக்கொண்டிருப்பாள் ராபியா, பச்சை மாவை அள்ளித் தின்றுகொண்டு. வயித்துக்குப் பச்சை மாவு ஒத்துக்கொள்ளாது என்று அம்மா அவளை அதட்டியதும், வறுத்த மாவைத் தின்றுகொண்டிருப்பாள். வீட்டில் ஒவ்வொருவருக்கும் செய்ய ஒரு வேலை இருந்து கொண்டேயிருக்கும். அத்தனை கூலிப் பெண்களுக்கு மத்தியில் மாவு இடிக்கவரும் ஒரே ஆண் சாத்தப்பன் மட்டும்தான். அவனைப் பார்த்தால் பெண் மாதிரிதான் தெரியும் இவளுக்கு. தனது உடம்பைப் பெண்ணைப் போலவே அசைத்து மாவு இடித்தபடி இடையிடையே பாட்டுப்படித்து ஆடிக்காட்டி எல்லோருக்கும் உற்சாக மூட்டுவான்.

சாயங்காலம்வரை நடந்துகொண்டிருக்கும் வேலைகளுக்கிடையில் அதிரசம் சுடுவதற்காக மாவு கிண்டத் தயார் செய்வார்கள். அம்மாவும் பெரியம்மாவும். நோன்பில் ஆடிப்போகும் பாக்கிஹாவுக்கு அதிரசமும் வைத்து ஓதவேண்டும். வெல்லம் போட்ட அதிரசமாவும் சீனி போட்ட அதிரசமாவும் தனித்னியே கிண்டி, வேடு கட்டி அறைக்குள் வைப்பார்கள். சூடாக அதிரச மாவு தின்பதற்கு இவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். அதற்கும் அம்மா அதட்டுவாள், சீக்கிரம் உக்காரப்போறே என்று. வீடெங்கும் மாவுத்தூசியால் நிறைந்து போயிருக்கும் இவளும் மாவு இடிக்க வந்த பெண்களும் பெரியம்மா, அம்மா அத்தனை பேருடைய உருவமும் பார்க்கையிலேயே சிரிப்பு பொங்கும் இவளுக்கு.

தலைமுடி உடம்பெல்லாம் மாவு பூசி பூச்சாண்டியைப் போல இருக்கும். எவ்வளவு தட்டி விட்டாலும் தலைமுடி நரைத்தது போலிருப்பது போகாது. இக்கோலத்தோடு தெருவில் போய் தன்னைத் தன்தோழிகளிடம் காட்ட ஆசைதான் என்றாலும் அன்றைய நாள் முழுக்க வீட்டுக் கதவு பூட்டப்பட்டே இருக்கும், வெளியாட்கள் உள்ளே வர முடியாதபடிக்கு. அம்மா சொல்வாள் "யாராவது இத்தனை மாவு காயிறதைப் பார்த்தால் திருஷ்டி வெச்சிடுவாங்க" என்று.

அதன் பிறகு வீடெல்லாம் கழுவி முடித்து அவர்களுக்குக் கூலியைக் கொடுத்து அனுப்பிவிட்டு இவர்களும் குளித்து முடிக்க இரவாகிவிடும். அன்று மட்டும் அத்தாவும் பெரியத்தாவும் சாப்பிட வீட்டுக்கு வராமல் கடையிலிருந்துகொண்டு கேட்டு அனுப்புவார்கள். இரவெல்லாம் கால் வலி தாங்காமல் அம்மாவும் பெரியம்மாவும் முனகிக்கொண்டிருப்பார்கள். இவளுக்குக் கஷ்டமாக இருக்கும். "எதுக்காக இவ்வளவு பாடுபட்டு மாவு இடிக்கணும்" என்று அம்மாவிடம் கேட்பாள்.

"நோன்பு திறந்திட்டு ஆம்பளைங்களுக்கு சாப்பிட இடியாப்பம் சுடணும் இல்லெ அதுக்காகத்தான்" என்பாள் அம்மா.

ரம்ஜான் மாதம் ஆரம்பமாவதற்கு முதல் மாதத்திலேயே அனேகமாக ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மாவு இடிக்கும் ஓசை ஒருவித ராகத்துடன் ஊரெங்கும் சுற்றிச் சுற்றி ஒலித்தபடி இருக்கும், ரம்ஜானை வரவேற்கத் தயாராக.

அவர்கள் நெடுநேரமாகவே வானை அண்ணாந்து பார்த்து சோர்ந்து போய்விட்டார்கள். பிறை தெரிந்தவுடன்தான் சஹருக்கான ஏற்பாடுகளில் இறங்க வேண்டும். வீட்டில் சமைக்க ஆரம்பிக்க, இவள்தான் கடைக்குப் போய் வாழைப்பழமும் முட்டையும் வாங்கி வர வேண்டும், சஹருக்காக.

ராபியா அலுப்புடனும் வருத்தத்துடனும் எழுந்துகொண்டு பாவாடையின் பின்புறத்தைத் தட்டி மணலை உதிரச் செய்தாள். "நான் சாப்பிடப்போறேன், பசிக்குது" என்று மதினாவிடம் சொன்னபடி நடக்க ஆரம்பித்தாள். "அப்ப பிறை வந்த விபரம் ரேடியோவுல கேட்டு சொல்லுவ இல்ல" - பின்னாடியிருந்து கத்தினாள் மதினா.

அவள் தன்னிடம் மதிப்பு வைத்துக் கேட்டது ராபியாவுக்குத் தாங்க முடியாத சந்தோஷத்தை உண்டாக்க, மற்ற பிள்ளைகளுக்கு மத்தியில் தான் ஒரு முக்கியமான ஆளாக இருப்பதுபோல உணர்ந்தாள். அதுவும் பக்கத்தில் அஹமது வேறு இருந்தான்.

"ஓ, சொல்றேன்" என்றாள் கர்வமாக. அஹமது தன்பாட்டுக்கு இருக்காமல், "நீ என்ன சொல்றது. இன்னும் கொஞ்ச நேரத்துல பள்ளிவாசல் மைக்குல மோதினார் பாவா சொல்லிருவாருல்ல, சும்மா எம்முன்னால பீத்திக்கிறான்" என்று.

மதினாவுக்கும், ராபியாவுக்கும் அவன் பேச்சு கடும் கோபத்தை உண்டுபண்ணினாலும் பதில் சொல்லாமல் வீட்டை நோக்கிப் போகத் துவங்கினார்கள்.

முதல் நோன்பு என்பதால் ராபியாவும் மதினாவும் நோன்பு வைத்திருந்தார்கள். அவர்களால் முப்பது நோன்பும் வைக்க முடியாது என்பதால், முதலாவது பதினைந்தாவது, இருபத்தி ஏழாவது, முப்பதாவது என்று விசேஷமான நோன்புகளைத்தான் வீட்டில் வைக்க அனுமதிப்பார்கள். காலையில் சாப்பிடும் வேலையும் இல்லை மதரஸாவும் இல்லை என்பதால் அவர்களிருவரும் சீக்கிரமாகவே ஸ்கூலுக்கு வந்துவிட்டார்கள், உமா இனிமேல்தான் வருவாள். பள்ளிக்கு இன்னும் ஒரு ஆசிரியர்கூட வந்திருக்கவில்லை. பள்ளியே வெறிச்சோடிக் கிடந்தது. வகுப்பறைக்கு வெளியில் பின்புறமாக இருந்த மாமர நிழலில் இருவரும் நின்றுகொண்டிருந்தார்கள். தரையோடு தாழ்ந்திருந்த கிளையில் தாவி ஏறி உட்கார்ந்த ராபியாவுக்கு, அம்மா இதைப் பார்த்தால் என்ன சொல்வாள் என்பது ஞாபகத்துக்கு வந்து சிரிப்புண்டாக்கியது. தனக்குள் சிரித்தபடி தான் அணிந்திருந்த பச்சை நிற சீருடையின் பின்பகுதியை லேசாகக் கை வைத்து அழுத்திப்பார்த்தாள். பிறகு மன நிம்மதியோடு கையை எடுத்து மரக்கிளையின் மீது வைத்து அதனை மெதுவாக ஆட்டிவிட்டுக்கொண்டாள். இவளைத் தொடர்ந்து மரக்கிளையில் ஏறி உட்கார்ந்த மதினா இவளது செயலின் அர்த்தம் புரியாமல் ராபியாவின் முகத்தை உற்றுப் பார்த்தாள். அவளது வட்ட முகம் ஏதோ கவலையினால் இருப்பது போலத் தோன்றிற்று.

"ஏன் ராபியா, இன்னைக்கு உங்க வீட்டுல ஸஹருக்கு என்ன சாப்பாடு?" என்றாள் மதினா.

சிறிது நேரம் யோசனை செய்வது போலிருந்துவிட்டு, "முதல் ஸஹருல்ல? அதனால பருப்பானமும். கறியும்தான்" என்றவள், "உங்க வீட்டுல" என்றாள்.

"எங்க வீட்டுலயும்தான்" என்ற மதினா, "நீ எத்தினி மணிக்கு எந்திரிச்சே சாஹர் நேரம்?" என்றாள்.

"நான் மூணுமணிக்கே எந்திரிச்சிட்டேன் தெரியுமா" என்றாள் ராபியா பெருமையாக. "சஹர் பொஸார நீ பாக்கலையா என்ன?" என்றாள்.

"ப்சி, நான் நாலுமணிக்குத்தான்" என்றாள் வருத்தத்துடன் மதினா. "ஆமா அப்பவே முழிச்சு என்ன செய்வியாம்?"

"எங்க அம்மா இரண்டரை மணிக்கே அலாரம் வச்சு எழுந்திரிச்சுருவாங்க, அந்த சத்தத்துல நானும் எழுந்திரிச்சிருவேன் இல்ல."

"அப்பவே எழுந்திரிச்சு உங்கம்மா என்ன செய்வாங்க?" கண்களை அகலத் திறந்து ஆச்சர்யமாகக் கேட்டாள் மதினா.

"அப்ப எழுந்தாத்தானே சரியா இருக்கும்? முதல்ல அடுப்பு மூட்டி சோறு ஆக்குவாங்க. சோறு வேகுறப்போ ஏலுச் செய்துட்டு தஜஜ்ஜத் தொழுவாங்க. அப்புறம் மத்த வேலைகளப் பாக்கறதுக்குள்ள நாலு மணி ஆயிரும் இல்ல" என்று தான் பார்த்தவற்றைப் பெரிய மனுஷத்தன்மையுடன் விவரித்தாள் ராபியா.

கொஞ்ச நேரம் இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. மதினாவுக்கு ஆதங்கமாக இருந்தது, சஹர் முஸாபரைப் பார்க்க முடியவில்லையே என்று. காற்று இதமாக வீசியது. மாமரத்திலிருந்து பூக்கள் உதிர்ந்து தரையில் விழுவதைக் கவனித்துக்கொண்டிருந்த ராபியா திடீரென நினைவு வந்ததுபோல, "ஆமா நீ வீட்டுப்பாடம் எழுதிட்டியா?" என்றாள்.

"இல்லை" அலட்சியமாக பதில் சொன்னாள் மதினா.

"ஏன், சார் அடிக்க மாட்டாங்க?" தன் பயத்தை வெளிப்படுத்தினாள் ராபியா.

"நான்தான் நோன்பு வச்சிருக்கேன் இல்ல, சார் அடிக்க மாட்டாங்களே" என்ற மதினா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிக்க அவளோடு சேர்ந்துகொண்டாள் ராபியாவும்.

ரம்ஜான் மாதத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் சிறு சலுகை ஆசிரியர்கள் யாரும் அடிக்கமாட்டார்கள் என்பதுதான். அந்தப் பெருமை எல்லாக் குழந்தைகளுக்குமே உண்டு.

மதினாவின் தலையில் செல்லமாகக் குட்டிய ராபியா, "நீ சரியான ஆளு" என்றவளின் குரலில், தான் மட்டும் வீட்டுப்பாடத்தைக் கை வலிக்க எழுதி விட்டோமே என்கிற ஆதங்கம் நிறையவே இருந்தது.

- தொடரும்

nantri - Ulagathamizh

இரண்டாம் ஜாமங்களின் கதை - 5

சல்மா

நடு இரவில் திடுக்கிட்டுக் கண் விழத்தாள் ஆமினா. அவளது கை அவளையறியாமலேயே அருகில் பாயைத் துழாவிற்று. பிர்தவ்ஸின் கதகதப்பான உடல் கையில் தட்டுப்பட்டவுடன் நிம்மதியடைந்தவள் ‘துவோய் யா அல்லாஹ்’ என முனகினாள். பிர்தவ்ஸை இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படி வயிற்றுக்குள் போட்டுப் படுத்திருக்கப் போகிறோமோ என்கிற நினைவு எழுந்து, பெரும் துக்கமாக மாறி தொண்டையை அடைத்தது. சொஹ்ராவின் கணவன் கரீமிடமிருந்து அவளைப் பாதுகாத்த காலம் போய், இன்று மனசொடிந்த நிலையில் என்னமும் செய்துகொண்டு உயிரைப் போக்கிக்கொள்வாளோ என்கிற பயம் ஆமினாவை தூங்க விடாமல் செய்துகொண்டிருந்தது.

அவளுக்குத் தன் திருமணம் நடந்த விதமும் தன் தாய், தந்தை, தங்கை ஞாபகமும் ஏனோ வந்தது. தன் தந்தை கனி ராவுத்தர் நிறம் தொட்டுப் பொட்டு வைத்துக்கொள்ளலாம் போலக் கறுப்பு. அம்மாதான் எத்தனை வெண்மையாக அழகாக இருப்பாள். அவள் ஒரு அறைக்குள் உட்கார்ந்திருந்தாள் என்றால் ஒரு மின்னல் கீற்று உள்ளேயிருப்பது போல பிரகாசமாக இருக்கும். விளக்காங் குழியிலிருக்கும் சிம்னி விளக்கின் ஒளியில் அவள் நிறம் தகதகப்பதுபோல இருக்கும். அம்மாவுக்கும் அத்தாவுக்கும் எப்போதாவது சண்டை வந்திருக்குமாவென ஞாபகப்படுத்திப்பார்த்தாலும் நினைவுக்குள் அப்படி ஒரு விஷயமே நிகழ்ந்ததில்லை என்றுதான் இருந்தது.

கனி ராவுத்தர் தனது வியாபாரத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பினாரென்றால் ஏதோ ஆர்ப்பாட்டமாகத்தானிருக்கும். தான் கொண்டு வந்த பணத்தினை வைத்து தடபுடலாகச் செலவு செய்து ஊரைக் கலக்கிக்கொண்டிருப்பார். ஒரே நேரத்தில் கறிக்கார நைனார் கடையில் போய் நான்கு ஆட்டுத் தலையை வாங்கி தெருவில் அனைவரும் பார்க்கும்படி இரண்டு கைகளிலும் இரண்டிரண்டாகக் காதைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு வருவார். தெருப் பெண்கள் பேசிக்கொள்வார்கள், "இவருக்கு எதுக்கு இத்தினி பவுசு" என்று.

பொழுதுபோகாத நேரத்தில் பஞ்சாயத்துக் கல்லில் அமர்ந்து சீட்டாடத் தொடங்குவார். அப்படிச் சீட்டாடும் பொழுதுதான் இஸ்மாயிலும்கூட வந்து ஆடத் துவங்கியதும். ஒரு நாள் விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்த இஸ்மாயில் கனியிடம் "பணம் வெச்சு விளையாடப் புடிக்கலே மாமு, எங்கிட்டே இல்லாததா" என்று சொல்லி எழுந்திருக்க.

"பிறகு என்ன வச்சு வெளையாட மாப்பிள்ளை சொல்லு" என்று குஷியாக ராவுத்தர் கேட்க.

"உங்க பொண்ணை வச்சு ஆடலாம். நான் ஜெயிச்சா அவளைக் கட்டிக்கிர்றேன்" என்று இஸ்மாயில் சொல்ல அவரும் உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

"உனக்குப் பொண்ணுக் குடுக்க எனக்குக் கசக்குதா. இருந்தாலும் வெளையாடிப் பாத்துடுவோம்" என்று ஆட்டத்தை ஆரம்பிக்க அன்று மாலை ஆமினா பள்ளியிலிருந்து திரும்பிய பிறகு, ஒரே சந்தோஷமும் பாட்டுமாக வந்தவர், தெருவில் நின்று எதையோ சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆமினாவை "ஏண்டி பொண்ணு இங்கனெ வா" என்று கூப்பிட்டார். குடுகுடுவென ஓடிவந்து அவர் மடியில் உட்கார்ந்து கொண்டு என்ன என்கிற மாதிரி அவர் முகத்தை நிமிந்து பார்த்தாள்.

"ஏய் கத்துஜா, வா இங்கே" என்று உற்சாகமாகக் கூப்பிட்டவர். உம் மகளுக்குக் கல்யாணம் பேசிட்டு வந்திருக்கேன் ஓடி வா" என்று அடுப்படியை நோக்கி தலையை எட்டிப் பார்த்துவிட்டுத் தன் மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டார்.

அறைகுறையாகக் காதில் விழுந்த விஷயத்தைத் தெளிவாக்கிக்கொள்ளும் பொருட்டு தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்தாள் கத்துஜா. அவளுக்கு சிறு வயதில் காலில் அம்மி விழுந்து நைத்து விட்டதால், நடை நேராக வராது. இழுத்து வைத்துத்தான் நடப்பாள்.

அவரது அருகில் வந்தவள் தரையில் விரித்திருந்த தடுக்கில் அமர்ந்தபடி, "என்ன சொன்னீங்க" என்றாள் ஆர்வமாக.

"பெரிய வீட்டு இஸ்மாயில் இல்ல. அவன் ஒம் பொண்ணை கட்டிக்குடுன்னு கேட்டான். சரி கட்டிக்கடான்னு சொல்லிட்டேன்" என்று சொல்லி சத்தம்போட்டு சிரித்தார், எப்படி என் சாமர்த்தியம் என்பதுபோல.

அவர் எதிர்பார்த்தபடி கத்திஜாவின் முகத்தில் பெரிய சந்தோஷம் எதுவும் தோன்றாதது அவருக்கு ஏமாற்றமாக இருக்க அதனை மறைத்துக்கொண்டபடி, "ஏன் ஒண்ணும் சொல்ல மாட்டிகளோ" எனக் கிண்டலாகக் கேட்டு அவளைக் கூர்ந்து நோக்கினார்.

"அதுக்கில்லேங்க" என்றவள் "இவளுக்கு இப்போதான் பத்து வயசு முடிஞ்சிருக்கு, என்ன அவசரம்னுதான். அந்த இஸ்மாயிலும்கூட மொதத் தாரம் கட்டி இழந்து வயசும் முப்பதத் தாண்டிக் கெடக்குமுல்ல" என்று தயக்கத்துடன் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியவள், அவரது பதிலை எதிர் நோக்கி உட்கார்ந்திருந்தாள்.

"இம்புட்டுத்தானாக்கும். நான்கூட என்னவோ ஏதோன்னுல்ல நெனைச்சேன். போடி போ. இதெல்லாம் ஒரு காரணமா?" என்றவர் "ஊர் உலகத்துல இல்லாததச் செய்ற மாதிரியில்ல சலிச்சுக்கிர்ற. நான் வாக்குக் குடுத்தாச்சு. அடுத்த வாரத்துல ஜிம்மாவுல நிக்கா" என்று சொல்லிவிட்டு "சரி சரி, போய் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணி வெச்சுக் குடு" என்று சொல்லியவாறே துண்டை உதறித் தோளில் சுற்றிப் போட்டபடி மிடுக்காக நடந்து திண்ணைக்குப் போனார்.

அடுத்த சில நாட்களில் திருமணம் நடந்தபொழுது ஆமினாவுக்கு அது பற்றிய எந்த புரிதலும் இல்லை. ஊரெல்லாம் ஆச்சரியப்படும் விதத்தில் சாப்பாடும் குதிரை ஆட்டமும் நடந்தது. கனி ராவுத்தர் புளியங்கொம்பு பார்த்துப் பிடித்ததையே ஊரெல்லாம் பேசிப் பொறாமைப்பட்டது. அதே கனி ராவுத்தர் தன் இரண்டாவது பெண் மைமூதுக்குத் தன் வியாபாரத் தொடர்புகள் மூலம் மாப்பிள்ளை பார்த்து முடித்தபிறகுதான் அவரது சந்தோஷமும் உற்சாகமும் பறிபோனது. மணமான இரண்டே மாதத்தில் வீடு வந்து சேர்ந்தாள் மைமூன். அவனோடு வாழவே மாட்டேன் என்றபடி வீட்டின் மச்சு அறையில் நெற்குதிரை ஒட்டி ஒடுங்கிப்போய் அமர்ந்திருந்த அவளிடம் ஆமினாவும் கதிஜாவும் புத்திமதி சொல்லித் திருப்பி அனுப்பிவிட எவ்வளவோ முயற்சித்தும் மன்றாடிப்பார்த்தும் அவள் அசைந்து கொடுக்கவேயில்லை. "முடியாது" என்று மட்டும் சொல்லியபடியேயிருந்தாள். சிம்னி விளக்கின் ஒளி பட்டுத் தெறித்த அவளது பிஞ்சு முகத்திலிருந்த பிடிவாதத்தையும் வைராக்கியத்தையும் இவர்களால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. யாரும் இனி இது குறித்துப் பேசக்கூடாது என்கிற கட்டளையும் அதிலிருக்கவே செய்தது.

தன் குடும்பத்திற்கு நேர்ந்த அவமானம் கதிஜாவைக் காட்டிலும் கனி ராவுத்தரை ரொம்பவே பாதித்தது. தனது சிரிப்பு, பாட்டு, கிண்டல் அனைத்தையும் மறந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்க ஆரம்பித்தார் அவர். கதிஜா அழுததெல்லாம் "நாமதான் பொட்டச்சிக வீட்டுக்குள்ள கிடக்கறோம். அவரு ஆம்பளை நாலு இடம் போக, கொள்ள, கடைத்தெரு போகக்கூட வழியில்லாமப் போயிருச்சே" என்று தான்.

கனி ராவுத்தருக்கு ஆமினாவைப் பார்க்கும் பொழுதெல்லாம் கண்ணீர் கோர்க்கும். "என் பிள்ளை," என்று தனக்குள் முனகிக்கொள்வார். தான் சொன்ன மாப்பிள்ளையை ஒரு மறுப்பும் சொல்லாமல் கட்டிக் கொண்ட தியாகியாகத்தான் அவர் அவளை நினைத்துக்கொள்வார். இப்போதெல்லாம் வெளி உலகத்திற்கோ வியாபாரத்திற்கோ போகாத நிலையில் ஆமினா இஸ்மாயில் தயவில்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. அவன் எத்தனை தங்கமானவன் என தன் மாமனை நினைத்துப் பூரித்துப்போவார். அவர் முன்பு மாதிரி வெளியில் வியாபாரத்திற்க்குப் போவதில்லை என்றாலும் ஏதோ வீட்டிலிருந்தேனும் கொஞ்சம் வருமானத்திற்க்கு வழிபார்ப்போமென நினைத்திருந்ததினால் தினமும் காலை உணவுக்குப்பின் உட்காரும் பலகையை எடுத்துப் போட்டு முற்றத்தில் அமர்ந்துகொள்வார். வெளியிலிருந்து மொத்த விலைக்கு வாங்கி வந்து வைத்திருக்கும் ஊதுபத்திக் கட்டைக் கவிழ்த்து நான்கு நான்காகப் பிரித்துக் கைகளில் எடுத்துக்கொள்வார். பிறகு தனது சிறிய மரப்பெட்டியிலிருக்கும் சென்ட் குப்பிகளை வரிசையாக எடுத்துத் தரையில் அடுக்கி பிறகு ஒவ்வொன்றாகத் திறந்து முகர்ந்து பார்த்து ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு சில துளி அத்தரை உள்ளங்கையில் விட்டு ஒன்றாக்கிக்கொள்வார். பிறகு அதை நான்கு ஊதுபத்திகளின் மீதும் மிருதுவாகத் தடவித்தடவி விடுவார். பிறகு வாசனை சரியாக இருக்கிறதாவென முகர்ந்து முகர்ந்துபார்த்துக்கொண்டிருப்பார். அவருக்கு திருப்தி வரும்பொழுது அதனை ஒரு முறத்தில் அடுக்கிவைத்து முற்றத்து வெயிலில் காயவைப்பார். நாள் முழுக்க அத்தர் பூசிய ஊதுபத்திகளை ரோஸ் வண்ண ஜரிகைக் காகிதங்களில் பத்துப் பத்தாக அடுக்கி வைத்து சுருட்டி நுனி வரை சுருட்டி மடித்து ஒரு அட்டைப் பெட்டியில் அடுக்கத் துவங்குவார். யாருடைய ஒத்தாசையையும் அவர் விரும்புவதில்லை. மிகச் சன்னமான குரலில் தனக்குள்ளாகவே ஒரு பைத்தை முணு முணுத்தபடி வேலை செய்து கொண்டிருப்பார். யாரும் இடையூறு செய்யவோ பேசவோ தயங்கும் விதத்தில் அக்குரலில் வருத்தம் தோய்ந்து நெஞ்சைப் பிழிவதாக இருக்கும். பிறகு அவரே மரப்பெட்டியில் அத்தர் பாட்டில்களை வரிசையாக அடுக்கத் துவங்குவார். ஆமினாவுக்கு அந்தப் பாட்டில்களை பார்க்கப் பார்க்க ஆசையாக இருக்கும். விதவிதமான வடிவங்களில் கலை நயமிக்கதாக இருக்கும். மூடிகளும் மிக அழகழகான வடிவத்தில் இருக்கும். நடுங்கும் தன் கரங்களில் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து இறுக அடைத்திருக்கிறதாவென சரிபார்த்து பத்திரப்படுத்துவார். ஒரு சில நாட்களில் யாரேனும் ஒரு வியாபாரி வந்து ஊதுபத்திக் கட்டுகளை பணம் கொடுத்துப் பெற்றுச் செல்வான்.

- தொடரும்

nantri - Ulagathamizh