Thursday, November 18, 2004

முறியாத பனை

- சந்திரா. ரவீந்திரன் -

நீண்ட வருடங்களாய் துருப்பிடித்துப் போயிருந்த தண்டவாளங்களில் மீண்டும் புதிதாய் பரபரப்பு, சுறுசுறுப்பு! ஒருநாளில் இருதடவைகள் யாழ்ப்பாணம் நோக்கி வரும் ரயில்வண்டிகளின் சத்தங்கள்! ஜனங்கள் அவசரம்அவசரமாய்க் கூடிப்பிரியும் குட்டிக் குட்டிக் காட்சிகள்!

சப்தங்கள் யாவும் ஓய்கிற போது பழையபடி எல்லாவற்றையும் மீறிக்கொண்டு வரும் கடலை நெய்யின் கமறலும், பூட்ஸ்களின் தோல் மணமும்!

சில சமயம் வயிற்றைக் குமட்டும்! பல சமயங்களில் அடிவயிற்றுக்குள் அப்பிக்கொண்டுவிடும் அச்சமோ, அருவருப்போ, கோபமோ என்று புரியாத ஒரு நெருடல் பந்தாக உருண்டு கொண்டே கிடக்கும்!

சூரியன் அஸ்தமிக்கும் பொழுதுகளில், ஓரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், பொதிகளற்ற வெற்று ரயில் பெட்டிகளினுள்ளேயிருந்து “ஐயோ….அம்…..மா…..!" என்ற மரண ஓலம் எதிரொலியாய் விட்டுவிட்டுக் கேட்கும்!

சில நிமிடங்களிற்கு எங்களின் தொண்டைக்குழிகள் அடைத்துப் போகும்! வீடு அசாதாரண அமைதியில் மூழ்கிக்கிடக்கும்! ஆனால் நாம் பயப்படவே தேவையில்லை! அப்படித்தான் அறிவு சொல்லியது. எத்தனை நம்பிக்கை, அவர்களிற்கு எங்கள் மேலிருந்தது. ரெயில்வே ஸ்ரேசனின் பெரிய பெரிய கட்டடப் பகுதிகளை இணைத்து, பிரதான முகாமாக்கியிருந்த அந்த இந்திய -சிங்- குகளுக்கு நிலையத்தின் தலைமை அதிபரான அப்பாவில் மட்டும் நிறைய மரியாதை!

தண்டவாளங்களோடு ஒட்டியிருந்த எங்கள் ரெயில்வே குவாட்டர்ஸ் மிகவும் அழகானது, வசதியானது! ஸ்ரான்லி வீதிப்பக்கமாயிருந்த, வீட்டின் முன்புறத்தில் முல்லையும் அடுக்கு மல்லிகையும் பந்தலிட்டு நின்றன. மணல் பரவிய நீண்ட முற்றம். இருபுறமும் பச்சைப்புற்கள். வேலி முழுவதும் பின்னிப் படர்ந்திருக்கும் பூங்கொடிகள் - அவை பெரிய பெரிய இலைகளைப் பரப்பி, வேலிக்கு மிகவும் பாதுகாப்பாய் இருந்தன. அவை “ரெயில்வே குவாட்டர்ஸ்- க்கே உரியவை போலத் தனித்துவமாயிருக்கும்! றோஜா நிறத்தில் கொத்துக்கொத்தாய்ப் பூத்துக் குலுங்கும்! ஆனால் வாசனையற்றவை! அவை சிங்களப் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டதால் “சிங்களக் கொடி என்று பெயர் சூட்டியிருந்தோம்.

வீட்டின் இடது புறமிருந்த நீளமான பெரிய வளவில், நெடுநெடுவென்று வளர்ந்திருந்த பத்துப்பன்னிரண்டு பனைமரங்களும், ஓரமாய் இரண்டு முருங்கை மரங்களும்! முருங்கைகள் ஏராளமாய்க் காய்க்கும்! வீட்டின் வலது பக்கமிருந்த சிறிய வளவிலும் இதரை வாழைகள், தென்னைகள், தூதுவளை, துளசி, பயிற்றங்கொடி, கரும்பு என்று பசுமையில் நிலம் செழித்துக் கிடந்தது!

இவற்றிற்கு நீர் பாய்ச்சுவதற்காய் நான் நீண்ட நேரம் நீராடுவது வேறு விடயம்!

பனை மரங்கள் எப்பவும் பேரிரைச்சலுடன் கம்பீரமாய் அசைந்து அசைந்து சலசலத்துக் கொண்டேயிருக்கும். படுக்கையறையின் விசாலமான ஜன்னலினூடாய் பனம்பூக்கள் பறந்து வந்து வாசனையோடு சிதறும்! வீட்டின் ஓரமெங்கும் மஞ்சள் பூப்பந்துகள் திரள் திரளாய் ஒதுங்கிக் கிடக்கும். வளவைப் பார்க்க எப்பவும் எனக்குப் பெருமையாயிருக்கும்!

பின்னால் ரெயில்வே ஸ்ரேசன் வளவில், எமது வீட்டுவேலியோடு ஒட்டியவாறு உயரமான ஒரு “சென்றிப்பொயின்ற்! பனங்கொட்டுகளும் மண்மூட்டைகளும் போட்டு வசதியாக அமைத்திருந்த “சென்றிப்பொயின்ற்!

அவர்கள் வெளியில் “ சென்றியில் ஈடுபடுவதைவிட வேலிக்கு மேலால், எமது வீட்டிற்குள் கண்மேய்ச்சல் விடுவதே அதிகம். கங்கு மட்டை, காய்ந்த ஓலை, பனங்காய், பன்னாடை என்று சடசடத்து விழும்போதெல்லாம், ஆரம்பத்தில் துடித்துப்பதைத்து வெற்றுவேட்டு வைத்து, கூச்சல்களோடும் அதட்டல்களோடும் பத்துப்பதினைந்து பச்சைத்தலைகள் வேலியின் மேலால் எட்டிப்பார்த்து ஆராயும்! போகப்போக, அது அவர்களிற்குப் பழக்கமாகி விட்டதால், பனைகளுக்குப் பாரிய பிரச்சினையேதும் ஏற்படவில்லை.

தண்டவாளங்களை நோக்கித் திறபடும் எமது பின்புறப் படலையை சங்கிலி போட்டுப் பூட்டக்கூடாது என்பது அவர்கள் கட்டளை! சாட்டாக நினைத்த நேரத்தில் உள்ளிட்டு விடுவார்களோ என்ற பயம் நமக்கு! ஆனால் அநாவசியமாக அவர்கள் உள்ளிட்டதில்லை என்பது நம்பமுடியாத உண்மை!

அப்பாவிற்கு, பின் படலையால் வேலைக்குப் போய் வருவது பெரிய சௌகரியமாய் இருந்தது. நேரம் கிடைக்கும் நேரங்களில் வந்து, தேநீர் அருந்தி, நொறுக்குத்தீனி சாப்பிட்டுவிட்டுப் போவார்.

சில சமயங்களில் அப்பாவுடன் சேர்ந்து கேர்ணல், மேஜர் என்று அலங்காரப்பட்டிகளுடன் கிந்திப்பட்டாளங்களும் வருவதுண்டு! அப்பா எச்சிலை மென்று விழுங்கியபடி இழுபட்டுக்கொண்டு வருவது எனக்கு விளங்கும். அவர்கள் கதையோடு கதையாய் வீடுமுழுவதும் கண்களால் கணக்கெடுத்துக் கொண்டு போவார்கள். போகும் போது நட்பாக விடைபெறுவார்கள்.

“ இங்கு எல்லோருக்கும் பெரிய பெரிய வீடுகள் இருக்கிறது. தண்ணீர் வசதியிருக்கிறது. இதைவிட வேறென்ன வேண்டும் உங்களுக்கு? எதுக்காக சண்டை போடுகிறார்கள்….” என்று ஒரு இந்தியக் கேர்ணல் அப்பாவிடம் கேட்டானாம். அவன் ராஜஸ்தானைச் சேர்ந்தவன். விளக்கம் கொடுக்க வேண்டிய வினாத்தான்! ஆனால் “இவன்களுக்கு இதெல்லாம் விளங்குமா? இந்தியப் பெரும்பான்மையினக் குடிமகன் இவன்! ஒரு காலத்தில் பெரும்பான்மையினமாக இருந்து..இப்போ சிறுபான்மையினமாக்கப்பட்டிருக்கும் இந்த இலங்கைத் தமிழனின் உரிமைப் பிரச்சனைகள், அரசியல் துரோகங்கள், நிரந்தர இழப்புகள், பரிதாபங்கள், ஏக்கங்கள்…..எல்லாம் சொன்னாலும்தான் இவனுக்குப் புரியுமா? - அப்படித்தான் அப்பா உடனே யோசித்தாராம். யோசனையின் விளிம்பிற்கு வரமுன்பே, அவன் இந்த மண்ணின் நாணம் மிக்க பெண்களைப் பற்றிச் சிலாகிக்கத் தொடங்கி விட்டானாம். அதன் பின்னர் அவன் பதில் சொல்லக் கூடிய கேள்வியெதுவுமே கேட்கவில்லையாம்!!

வீட்டு வளவிற்குள் கள்ளுச்சீவ வருபவன், வேலியோடு சென்றிப் பொயின்ற் வந்ததிலிருந்து பனையில் ஏறமாட்டேன் என்று பிடிவாதமாக நின்று விட்டான். ஒரு பனையில் அவன் கட்டிவிட்ட முட்டி கவிண்டபடி அப்படியே கிடந்தது. அதிலிருந்து கள்ளு நிரம்பி வழிகிறதோ என்று குமரியாகி நிற்கும் என் குட்டித்தங்கை, பனையோடு ஒட்டிநின்று அடிக்கடி அண்ணாந்து பார்ப்பாள். அவள் பனைமரங்களருகே போனால், சென்றிப்பொயின்ற் றிலிருந்து மெல்லிய விசிலடிப்பும் இனிமையான பாடலிசையும் கேட்கத்தொடங்கிவிடும்! அதனால் பனைகளருகே நின்று நாம் அனுபவிக்கும் சுகங்கள் படிப்படியாகக் குறைந்து கொண்டே போனது!

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் ஆசை தீர அள்ளிக்குளித்துவிட்டு, சின்னத் தூக்கத்திற்காய் படுக்கையறைக்குள் நுழைந்தால், முகாமிலிருந்து வரும் மும்முரமான சத்தங்கள் தூக்கத்தைக் கெடுக்கும்! அச்சமயங்களிலெல்லாம் ஜன்னலினூடாய், கரும்பனைகளில் சிதறிக்கிடக்கும் சின்னச்சின்னக் குழிகளையெல்லாம் ஏகாந்தமாய் எண்ணிப்பார்த்துக் கொண்டு படுக்கையில் கிடப்பேன்! அவர்கள் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த சில நாட்களில் வெறித்தனமாக ஏற்படுத்திய பேரழிவின் சிறு வடுக்கள் மட்டுமே இவை! இந்த வளவிற்குள் எந்தப் பனையும் இதனால் சாய்ந்து விழுந்து விடவில்லை! நிறைந்த வடுக்களோடும் நெடு நெடுவென்று கம்பீரமாய்த்தான் நிற்கிறது!

முன் கேற்றால் வீட்டினுள் நுழைபவர்களை சென்றிப் பொயின்ற் ல் இருப்பவன் முழுமையாகக் காணமுடியாது. ஆனால் வருபவர் வீட்டின் நடு இருப்பறைக்குள் நுழைந்து விட்டால், பின்வாசலூடாய் பைனாகுலர் மூலம் மிகத் தெளிவாய்க் காணலாம்.

என் சிநேகிதி அபி, பெரிய ஓலைத்தொப்பியும் கவர்ச்சியான உடையும் அணிந்துகொண்டு அழகான சைக்கிளில் வந்திறங்கிக் கதைத்துவிட்டுப் போவாள். அவளின் கைப்பையினுள் ஏகப்பட்ட கடுதாசிகள், குறிப்புகள் இருக்கும். உடம்பின் ஒரு பகுதியில் “சயனைட் குப்பி இருக்கும்! பின்புறம் சமையலறைப் பக்கமாய் அவள் வரும்போது “சென்றிப்பொயின்ற் றில் இருப்பவன் தலையை வெளியே நீட்டி கண்ணடித்துச் சிரிப்பான், களிப்பில் கையசைப்பான்!

எனக்கு இதயம் படபடத்துக் கொண்டேயிருக்கும்! அவள் வெகு சாதாரணமாய், அண்ணரின் கதையிலிருந்து ஆஸ்பத்திரிக் கதைவரை பரிமாறிவிட்டு, தேவையானவற்றைச் சேகரித்துக்கொண்டும் சிரித்தவாறே போய்விடுவாள்! “ போகிறாளே என்று மனதிற்குள் ஏக்கமாயும் இருக்கும். போனபின் ஏனோ ஆறுதலாயும் இருக்கும்.

வீடு வீடாகச் சோதனை நடக்கிற போதும் இந்த ரெயில்வே பகுதிக்குள் மட்டும் யாரும் சோதனை போட வருவதில்லை என்று இறுமாப்புடன் இருந்த எமக்கு ஒரு நாள் காத்திருந்தது!

அது ஒரு சுட்டெரிக்கும் வெயில் நாள்! “சென்றிப் பொயின்ற் நோக்கி யாரோ உற்றுப் பார்த்திருக்கிறார்கள். அடுத்த நிமிடம் அதற்கருகாக “கிறனைற் குண்டொன்று வெடித்திருக்கிறது! வந்தவனின் குறி தப்பிவிட்டது! வேலியோடு நின்ற சீனிப்புளி மரத்தின் கிளைகளுக்கு மட்டும் தான் சேதம்! ஸ்ரேசன் பகுதி முழுவதும் மிருகத்தனம் தலைதூக்குவதற்கு இது ஒன்று போதுமே! திபு திபு வென்று எமது பனம் வளவிற்குள் பச்சைப்புழுக்களாய் அவாகள்! சட சட வென்று காற்றைக் கிழிக்கும் இரைச்சலுடன் துப்பாக்கி வேட்டுக்கள்! வீதியால் போய்க்கொண்டிருந்த அப்பாவி மக்கள், பச்சையுடைப் பேய்களால் பன்னாடையாக்கப்டும் அகோரம், ஈனஸ்வரமாய் நீண்ட நேரம் கேட்டுக் கொண்டிருந்தது!

எல்லாம் ஓய்ந்த பின், ஜன்னலினூடாய் வளவைப் பார்த்தேன். மருந்து நெடி வீசியது! அடிவயிற்றுக்குள் இன்னமும் அச்சம் அப்பிக்கிடப்பதான உணர்வு! கரும் பனைகளில் புதிய குழிகள் தோன்றியிருந்தன. சன்னங்களின் பல வெற்றுக் கவசங்கள் மரங்களின் அடியில் ஆங்காங்கே சிதறியபடி! ஆயினும் அழகிய விசிறிகளென, வளவு முழுவதும் பசுமையைப் போர்த்தியிருக்கும் பனைகளெல்லாம் கெக்கலித்துச் சிரிப்பது போல் காற்றில் அழகாய் அசைந்து கொண்டுதானிருந்தன!

ஒரு உற்சாகமான வார இறுதி நாள், ரெயில்வே தொழிலாளிகளை அப்பா அழைத்திருந்தார். அவர்கள் புற்கள் நிறைந்த வளவைத் துப்புரவாக்கத் தொடங்கிவிட்டார்கள். வீடு முழுவதும் பச்சைப்புற்களினதும் காயம்பட்ட வடலி இலைகளினதும் மணம் பொங்கிப் பரவிக்கொண்டிருந்தது!

மேஜர் முக்தயர், ஏணிப்படிகளில் ஏறி நின்றவாறே வளவிற்குள் நின்ற அப்பாவுடன் வெகு சந்தோஷமாய் கதைத்துக் கொண்டிருந்தான். அப்பா, வளவைத் துப்புரவு செய்விப்பது அவனுக்குப் பெரு மகிழ்ச்சி என்று விளங்கியது. புற்களினூடாக வேலிவரை யாராவது தவழ்ந்து வந்து விடுவார்களோ என உள்ளுர ஊறிக்கிடந்த அச்சத்திற்கு அது பெரிய ஆறுதல் தானே!

துப்புரவு செய்யப்பட்ட வளவிற்குள், நிறையப் பனங்கொட்டைகள் ஆங்காங்கே புதைந்து, புதிதுபுதிதாய் முளைவிட்டிருப்பது தெரிந்தது. அப்பா அவற்றைப் பிடுங்கி எடுக்கச் சொல்லவில்லை. அவை நெடும்பனையாகும் அழகைக் கற்பனையில் நான் அடிக்கடி கண்டு களிப்பேன்.

வைகாசி மாதத்து முதல் நாள், நல்ல வெயிலும் கூடவே சுழன்றடிக்கிற காற்றுமாயிருந்தது! சைக்கிள் றிம் இல் சுரீர்சுரீரென்று மணற்புழுதி வந்து மோதிக்கொண்டிருந்தது. நான் அலுவலகத்தில் ரைப் செய்யவேண்டியிருந்த அனைத்துப் பிரதிகளையும் முழுமையாகச் செய்து முடித்து விட்ட திருப்தியுடன், ஆசுவாசமாய் சைக்கிளில் வந்திறங்கினேன். வீட்டினுள் பரபரப்பாக ஆளரவம்! வல்லைவெளி தாண்டி வந்த வடமராட்சி உறவினர்கள் சிலர் என்னைக் கண்டதும் எட்டிப்பார்க்கிறார்கள். ஏதோ வித்தியாசமாய்த்தான் இருந்தது!

அம்மா அழுத கண்ணீருடன் படியிறங்கி ஓடிவந்து என்னைக் கட்டியணைத்து விம்மினா! ஓசையை அடக்கி ஒப்பாரி வைத்தா! எனக்கு எல்லாம் விளங்கிவிட்டது!

“ ஊரில் என் தம்பி போரிட்டு மாண்டான் …. என்று மார்தட்டிப் புலம்பவோ, தலையைப் பிசைந்து குழறவோ ஊரைக்கூட்டி ஒப்பாரி வைக்கவோ முடியாத ஊமைச்சாபம் எங்களுக்கு! நடுஇருப்பறையைத் தாண்டி, பின்புறமாய் எம் அழுகுரல் போய்விடக் கூடாத அவலம் எமக்கு! கத்தி அழுது தீர்க்கமுடியாத அவஸ்தை எம்மை வதைத்து உருக்கியது!

எல்லா சுதந்திரங்களும் பறிக்கப்பட்டு, இப்போ அழுவதற்குரிய ஆகக் குறைந்த சுதந்திரமும் இரகசியமாய்ப் பறிக்கப்பட்டிருந்தது யாருக்குத் தெரியும்? யார் யாரைப் போய்த் தேற்றுவது?!

சில மாதங்கள், எமக்குள் எரியும் துன்பப்பெருநெருப்பை அமுக்கி..அமுக்கி.,.பின்னர் அவை வெறும் தணற் துண்டங்களாய் கனன்று பொசுங்கிக் கழிந்து கொண்டிருந்தது! நம்பமுடியவில்லை! நமது சின்னச் சின்னச் சந்தோஷங்களும் இத்தனை விரைவில் சீர்குலைந்து போகுமென்று நம்பவில்லை!

இலையுயதிர்காலம் தொடங்கி, சீனிப்புளி உருவியுருவி தன் இலைகளை வளவெல்லாம் கொட்டத் தொடங்கிய போது, ஒரு நாள் திடுதிப்பென்று அவர்கள் மூட்டை கட்டத் தொடங்கி விட்டார்கள்! ரெயில்வே ஸ்ரேசனுக்குரிய கட்டடங்களெல்லாம் அவசரம் அவசரமாய் விடுவிக்கப்பட்டு வெறிச்சோடிப் போய்விட்டது! அனைத்து வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன! மேஜர், கேர்ணல் என்ற பதவியிலிருந்தவர்கள், விடைபெற்றுப் போக வீட்டுக்கு வந்தார்கள். சிநேகமும் பண்பும் மிக்க எங்களைப் பிரிந்து போவதில் பெரிய மனவருத்தம் என்று கூறி விடைபெற்றுப் போனார்கள். சொந்த உடைமையைத் துறந்து போவது போன்ற துக்கம் அவர்களின் கண்களில்!

இரவு…ஈ, காக்கைகூட அங்கில்லை என்ற தெளிவான நம்பிக்கையில், இத்தனை நாள் அடக்கிவைத்திருந்த துக்கமெல்லாம் பீறிட்டெழ, நெஞ்சிலடித்து அம்மா கதறத் தொடங்கிவிட்டா!!

“ நாசமாய்ப் போவான்கள்…..என்ரை பிள்ளையையுமெல்லோ நாசமாக்கிப் போட்டுப் போறான்கள்! மகனே!.....நானினி உன்னை எங்கை போய்த் தேட…….எப்பவடா இனி உன்னோட நான் பேச…….. என்று பின்வளவில் குந்தியிருந்து அம்மா குழறிக்கொண்டேயிருந்தா!

எனக்கு கண்களிற்குள் நீர் முட்டிக்கொண்டு வந்து விட்டது! ஆயினும் யாரும் யாரையும் அழ வேண்டாமென்று தடுக்கவில்லை!!


எழுதியவர்:-
சந்திரா. ரவீந்திரன்.

(குறிப்பு:-இவ் உண்மைச் சம்பவம் சிறுகதையாக, லண்டனிலிருந்து வெளியாகும் “யுகம்மாறும் இதழில் 1999ம் ஆண்டு ஆனிமாதம் பிரசுரமாகியிருந்தது. பின்னர் ஈழமுரசு பத்திரிகையிலும் இக் கதை மறுபிரசுரமாக்கப்பட்டிருந்தது)

4 comments:

Anonymous said...

You have published my short story - Muriyaatha panai in your web site. thanks very much for your great work.

thanking you again
Chandr.Ravindran

Anonymous said...

chandra
Your posting is great.I am a tamil from india.
People like you supported ltte.Indian army treated you well.They came there for peace to give tamils their rights from singala.I can not accept indian army atrocities against tamil civilians.Naturally their anger will burst when one of thier colleague got killed by lungi clad civilian.I heard that LTTE attack indian army from by disguise as civilian( urchin , lungi clad boy).Any way your brothers wasted their life by joining LTTE.They are no more today.You people lost the good will of indian people including people from tamilnadu.
Just wondering what LTTE going to achieve with their war.Ultimately you get only one separate state not country.We know how to reciprocate the help got from others ( nandri endru tamilil solvarkal).But you (LTTE)
do not know about that word.Let us see what will happen
at the end.

Unknown said...

அன்புள்ள தமிழா உங்கள் ஆதரவுக்கு நன்றி. உங்கள் ஆதரவு இன்றும் என்றும் உண்டு.

உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்திய ராணுவம் எமது நலன்கருதி அங்கு வரவில்லை. அப்படி நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் அது தவறு. அதற்கு நிறைய ஆதாரங்கள் உண்டு. சாதாரண இந்தியத்தமிழன் உங்களைப்போல்தான் நினைத்துக்கொண்டுள்ளான். இராஜ தந்திரங்கள் நிறைந்த ஒரு காரணத்திற்காகவே அவர்கள் வந்தார்கள். ஆனால் இது சாதாரண மக்களுக்கு தொிய வாய்ப்பில்லை. அப்படி அவர்கள் எமக்கு உதவ வந்ததாக எடுத்துக்கொண்டால் கூட வேண்டாம் என்றதும் வெளியேற வேண்டியது தானே. எதற்காக எம்முடன் போாிடவேண்டும். எத்தனை ஆயிரம் மக்களைக்கொல்லவேண்டும்.

நீங்கள் வெறுப்பதற்குக் காரணம் இல்லை. இந்து போன்ற பத்திாிகைகள் உங்களை தவறான செய்திகள் கொடுத்து எமக்கு எதிரான கருத்தை வளர்த்துவிட்டுள்ளார்கள். அப்போது "அன்புவழி, வெற்றிமாலை" போன்ற வானொலி நிகழ்ச்சிகள் எப்படி பொய்ப்பிரச்சாரம் செய்தன என்பது எமக்குத்தான் தொியும். நாங்கள் என்றும் எம்ஜி ஆர் அவர்களுக்கும் தமிழ்நாட்டு சகோதரர்களுக்கும் கடமைப்பட்டுள்ளோம்.

அதற்காக என்றும் யாருக்கும் அடிமைப்படவில்லை. எதற்கும் தலையாட்ட நாங்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அல்ல. எங்கள் விடுதலையை வென்றெடுப்போம். கவலைவேண்டாம். உங்கள் ஆதரவும் அன்பும் என்றும் வேண்டும்.

Anonymous said...

இந்திய உறவே
சுருக்கமாக சில விளக்கங்கள்.
இந்திய இராணுவம் தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு ஏன் பயிற்சி குடுத்தது? அது இலங்கை இறையான்மைக்கு பங்கம் இல்லையா அல்லது அந்த காலத்தில் இலங்கைக்கு இறையான்மை இல்லையா?
பாக் போராளிகளுக்கு அமெரிக்கா என் பயிற்சி கொடுக்கிறன்றது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தமிழர்களுக்கு ஒரு மாதிரியும் திபத்தியர்களுக்கு ஒரு மாதிரியும் என் உள்ளது??? சிந்தியுங்கள். இந்திய மத்தியஅரசை நம்பி நாசமாக போக வேண்டாம். எங்களைப் போல உணர்ந்து கொள்ளுங்கள்.