Monday, February 02, 2004

இரை

செம்பருத்தி

இன்றைய விடியலில் வானம் சற்றுத் தெளிவாய் இருப்பதுபோலத் தோன்றியது. பூமியைக் குளிரவைத்து திருப்திப் பட்டதோ என்னவோ கொட்டும் மழை நின்று மெல்லிய தூறல்கள் மட்டும் ஆங்காங்கே நனைந்துபோன பூமி குளிர்காயவென சூரியன் முகிற்போர்வையை விலக்கத் தொடங்கியிருந்தது. நான் மெதுவாக எனது வீட்டிலிருந்து எட்டிப் பார்க்கின்றேன்.

வானமும் பூமியும் புதிதாகப் பிறந்ததுபோல் இருந்தது. நான் வாழும் இந்த வனாந்தரம் அழுக்குகள் நீங்கக் குளித்திருந்தது. 'ஓ என்னை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தவில்லையே. நான்தான் நாதன்' பாம்புகள் இனத்தைச் சேர்ந்தவன். கடந்த நான்கு நாட்களாகப் பெய்த அடைமழை என்னை வீட்டோடு கட்டிப்போட்டிருந்தது. இப்போது பசி என் வயிற்றைக் கிள்ளுகின்றது. மழை மறுபடி தொடங்குமோ, என்னவோ நான் அதற்கிடையில் என் வயிற்றை நிரப்பியாக வேண்டும். என் புற்றிலிருந்து வெளியே வருகின்றேன். அப்பப்பா, இந்தத் தரை எப்படி ஜில்லென்றிருக்கிறது! குளிர்ந்த காற்று என் முகத்தில் உரச, என்னைப் புது உற்சாகம் தொற்றிக்கொள்ளுகின்றது. விரைவாக ஊர்ந்து என் இரையைத் தேடிப்போய்க் கொண்டிருக்கிறேன்.

இளங்காலை சூரியன் மெதுவாக என் இமைகளைத் தட்டியபோதுதான் விடிந்தது எனக்குப் புரிந்தது. அடடே இன்று வானம் சற்று வெளிறி இருக்கிறதே. நான் மெதுவாக எழுந்து சோம்பல் முறித்துக்கொள்கின்றேன். ஒருதடவை என் உடம்பை உலுப்பி உதறும்போது உரோமங்கள் சில்லிட்டு மீண்டும் அடங்குகின்றது. ஒட்டிப்போன எனது வயிற்றைப் பார்க்கிறேன். சே. சரியாகச் சாப்பிட்டு நான்கு நாட்களாகிறது. எப்படியும் வயிற்றை நிரப்பியாகவேண்டும். நான் வழக்கமாகச் சாப்பிடும் சாப்பாட்டுக் கடைப்பக்கம் போகிறேன். ம் கூம் யாரையும் அங்கு காணவில்லை. மெதுவாகக் குரலை உயர்த்தி 'வள் வள்.' என சத்தமிடுகிறேன். இனி யாராவது சாப்பிட வந்து அவர்கள் போடும் எச்சில் இலை விழும்வரை என் வயிற்றுக்குப் பொறுமையில்லை. ஊர்மனைக்குச் செல்வோம் எனத் தீர்மானித்தபடி செல்கிறேன். என்னைப்பற்றிய விபரத்திலிருந்து என்னைப் புரிந்துகொள்வீர்கள்தானே.

ம்.. ஆம்.. ஆ எனது கடைசிக் குழந்தையின் வீரிட்டு அழுத குரல்கேட்டு விழித்து எழுகிறேன். என்னருகில் வாடிய முகத்துடன் என் மனைவி. அவள் மடியில் எனது கடைக்குட்டி. அவனது அழுகையை நிறுத்த முயன்று கொண்டிருந்தாள் அவள். பாவம் அவளுடைய சமாதானம் ஒன்றும் எடுபடவில்லை. பசியால் அழும் குழந்தைக்கு என்ன சமாதானம் சொன்னால் கேட்கும்? அவள் இயலாமையுடன் என்னைப்பார்க்க கசிந்த என் கண்களை வேறு ஓர் பக்கம் திருப்பிக்கொள்கிறேன். எனது ஆறு வயது மகனும், நான்கு வயது மகளும் குளிருக்கு அடக்கமாக, பழைய சேலையைப் போர்த்தி அதே பாயில் சுருண்டிருந்தார்கள். தூங்கும் அவர்களது முகத்திலும் அப்பட்டமாகப் பசிக்களை. சொந்த மண்ணைவிட்டு நீங்கிய கணத்திலிருந்து பசிக்கு நாங்கள் பழக்கப்பட்டுவிட்டோம். ஆனால், இந்தப் பிஞ்சுகள். சோர்வுடன் எழுந்து நிற்கிறேன். எனது உடம்பிலும் தளர்ச்சி, முற்றத்திலிருந்த பானையிலிருந்து நீரைமொண்டு எனது முகத்தை அலம்பிக் கொள்கிறேன். உள்ளே வந்து மேற்சட்டை போட்டுக்கொண்டு எனது விறகு கட்டும் சைக்கிளை எடுக்கிறேன். 'கொஞ்சம் இடைவெளிவிட்டிருக்கு இதற்கிடையில் போய் ஏதேனும் விறகு கட்டி வித்திட்டு வாறன் என்ன' என்று கூறி மனைவியிடம் விடைபெறுகிறேன். அவள் என் கண்களை ஆழமாகப் பார்த்தவாறே 'கவனம் நீங்களும் இரண்டு நாளாய் வடிவாய் சாப்பிடேல' என்றாள். அவள் குரல் கம்மியது, விழியில் நீர் திரையிட்டது. 'அட நாங்கள் அனுபவிக்காததே, நீ கவலைப்படாதே' அவளைச் சமாதானப்படுத்திவிட்டு சைக்கிளில் ஏறுகிறேன்.

நானும் ஊர்ந்து ஊர்ந்து இரைக்காக அலைந்து களைத்துவிட்டேன். ம். ஒரு சிறு புழுக்கூட என் கண்களில் அகப்படவில்லை. பசியால் என் கண்கள் பஞ்சடைகின்றது. இனி ஏதாவது இரை என்னைத்தேடி வரும்வரை இந்த மரத்தில் இருந்தபடியே ஒரு குட்டித்தூக்கம் போடுவோம் என்று நினைத்தபடியே பாதையோரமாக உள்ள இந்த மரத்தில் படுத்திருக்கிறேன். தூக்கமும்வரவில்லை. என் பாம்புச் செவியை நீட்டியபடியே ஒரு இரையின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்.

ஊர்மனையாவும் குளிரிலிருந்து இன்னும் விடுபடவில்லை. இங்கொன்றும், அங்கொன்றுமாக இப்போதுதான் மனிதத் தலைகள் தெரிகின்றது. எந்த வீட்டிலிருந்தாவது புகைவராதா என்று ஏக்கத்துடன் அலைகிறேன். கடவுளே என் வயிறு கொதித்துக்கொண்டிருக்கிறது. இருப்பினும், என் முயற்சியைக் கைவிடாது தொடர்ந்தும் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கிறேன், இடையிடையே குலைத்தவாறு.

என்னால் சைக்கிள் மிதிக்க முடியவில்லை, என்றுமில்லாதவாறு ஒரு பலவீனம் என்னை ஆட்கொண்டிருக்கிறது. இருப்பினும் பசியால் வாடும் என் குழந்தைகளின் முகமே என் சிந்தையில் இருந்தபடியால் எனது சோர்வைப் பொருட்படுத்தாது விரைகிறேன். பின்னாலுள்ள கத்தி, கோடரி, கயிறு என்பன இப்போது எனக்குப் பலத்த சுமையாக இருக்கிறது. கடவுளே! எப்படித்தான் விறகு கட்டப்போகிறேனோலு} ஒருவாறு காட்டை அடைந்துவிட்டேன். சைக்கிளைவிட்டு இறங்கி காட்டிற்குள் செல்லும் ஒற்றையடிப்பாதையில் விரைந்து கொண்டிருக்கிறேன். பாதையோரமாக சற்றுத்தள்ளி இருந்த ஒரு காய்ந்த மரம் என் கண்களில் படுகிறது. அதனருகே சென்று வெட்டத் தொடங்குகிறேன். காய்ந்த மரம்தான் இருப்பினும் தண்ணீர் ஊறி இருப்பதால் வெட்டக் கஸ்டப்படுகிறேன். இப்போதைக்கு இது போதும் வெட்டிய விறகுக் கட்டைகளை சைக்கிளில் ஏற்றிக் கட்டுகிறேன். சுமையுடன் சைக்கிளை உருட்டுவது மிகக் கஸ்டமாக இருக்கிறது. என் உடலிலிருந்து இந்தக் குளிரிலும் வியர்வை ஆறாகப்பெருக்கெடுக்கிறது. ஆழமான மூச்சுகள் எடுத்தவாறே வீதிக்கு வருகிறேன். மனதில் ஒரு திருப்தி மெதுவாக வீதியில் சைக்கிளை மிதிக்கிறேன்.

உர்.. ஊ ல். அட கடவுளே! வானத்தில் ஒரு பெரிய இயந்திரக் கழுகு சுற்றத் தொடங்கியிருந்தது. எனக்கு ஒருபுறம் கோபமும், ஒருபுறம் வேதனையாகவும் இருந்தது. மழைவிட்ட சிறிது நேரத்தில்கூட வந்துவிட்டானே பாவி என்று மனதிற்குள் சபித்தவாறே சைக்கிளை பாதையோரமாக இருந்த மரத்தில் சாத்திவிட்டு மறைவிடம் தேடி விரைகிறேன்.

இரைக்காக நான் காத்திருந்தபோது, விண்ணில் ஒரு சத்தம். அட மனிதர்களைக் கொல்லும் இயந்திரக் கழுகு வந்துவிட்டதுபோல் இருக்கிறது. ஒரு விறகு வெட்டி பயத்துடனே தனது சைக்கிளை நான் இருந்த மரத்தில் சாத்திவிட்டு மறைவிடம் நோக்கி விரைய, நான் அலுப்புடன் கண்களை நாலாபுறமும் சுழற்றியபோது அது எனது கண்களில் படுகிறது. அட, எனக்குச் சற்று அதிஸ்டம் இருக்கிறது போலிருக்கிறதோ! விறுவிறுவென மரத்திலிருந்து இறங்கி அங்கு விரைகிறேன்; ஆம் அந்த விறகுவெட்டியின் சைக்கிளில் இருந்த விறகின் பட்டையில் சில தவளைகள் ஒட்டிக்கொண்டிருந்தன. அவை பொய்க்கோலம் பூண்டிருந்தாலும், எனது இரையை நான் அறியமாட்டேனா என்ன? ஆவலுடன் விறகுக்கட்டில் புகுந்து ஆவலுடன் அவற்றை வேட்டையாடத் தொடங்குகிறேன்.

எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. உடல் தளர்ந்து கண்கள் இருட்டத் தொடங்கியிருந்தது. வானத்தில் இப்போது திட்டுத்திட்டாக நீலம். பறவைகள் ஆரவாரித்தபடியே பறந்து கொண்டிருந்தது. பூக்கள் எல்லாம் குளித்து முடிந்து காற்றில் தலை துவட்டிக்கொண்டிருந்தது. ஆனால் நான் இதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லை. வயிற்றுக்கு விருந்து இல்லாதபோது புலனுக்கு விருந்து இருந்தென்ன? விட்டென்ன? தெருவில் மூலையில் கிடக்கும் குப்பை மேடுகளை ஆராய்ந்தபடியே ஓடிக்கொண்டிருக்கிறேன்.

அப்பாடா எனக்கு இப்போதுதான் மூச்சு வந்தது. மிகத்தூரத்தில் எங்கோ குண்டுகளை உமிழ்ந்துவிட்டு அந்த விண் அரக்கன் போய்விட்டான். நான் எனது மறைவிடத்தைவிட்டு வெளியே வருகிறேன். மீண்டும் எனது குழந்தைகளின் முகம் என் நினைவில் வரவே, புதுவேகத்துடன் சைக்கிளை எடுத்து மிதிக்கத் தொடங்குகின்றேன். சற்று நேரத்திற்கெல்லாம் விறகுச் சிராய் போலும் என் முதுகில் குத்தியது. சீ. என்ன இது என்று முதுகை நெளித்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் சைக்கிளை மிதிக்கிறேன். சிறிது தூரம் பயணித்த பின்னர் மீண்டும் அதே சிராய் குத்தியது. எனக்கு எரிச்சலாக வந்தது. நான் சைக்கிளைச் சாத்திவிட்டு, மறைவிடத்தில் ஒதுங்கியபோது கட்டுத் தளர்ந்துவிட்டது போலும் திரும்பவும் நிறுத்தி இறுக்கிக் கட்டலாம் என்று யோசித்தேன்.

இன்னும் கொஞ்சத்தூரம்தானே அதற் கிடையில் என்ன நடந்துவிடப்போகிறது என்று தொடர்ந்தும் போய்க்கொண்டு இருக்கிறேன். சற்றைக்கெல்லாம் அதே சிராய் மீண்டும் சற்று வேகத்துடன் குத்தியது. சரி இனியும் தாங்காது இறங்கி யோசித்தபோது, கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு பெண் என்னைக் கைகாட்டி அழைப்பது தெரிந்தது. ஒருவாறு சமாளித்தபடியே சைக்கிளை அவளருகே கொண்டு செல்கிறேன். என்ன விலை என்று விறகைப் பார்த்துக் கேட்கிறாள். எழுபத்தைந்து ரூபாய் என்றேன். ஐம்பது ரூபாய்தான் தருவேன் சரியா எனக் கேட்டாள். நான் இப்போது அவளுடன் பேரம் பேசும் நிலையில் இல்லை. அத்துடன், இந்த மழைநேரம் அதிக தூரம் போகவும் முடியாது; சரி என்று சொல்லிவிட்டு விறகைப் பறித்துவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டேன்.

அப்பாடா. இப்போதுதான் என் வயிறு குளிர்ந்தது. நான் தவளை வேட்டை நடத்தி முடிக்கும் கணத்தில் அந்த விறகுவெட்டி மீண்டும் சைக்களை எடுத்து ஓடத் தொடங்கினான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிறிது நேரம் விறகுக்கட்டின்மேலும் கீழுமாக ஓடித்திரிந்தேன். எனக்கு உடனடியாக கீழே இறங்கவேண்டும் போல் இருந்தது. வயிறு நிரம்பியிருந்ததால் மேலிருந்து கீழே குதிக்கவும் விரும்பவில்லை. அந்த விறகுவெட்டி சைக்கிளை நிறுத்துவான் எனக் காத்திருந்தேன். ம் கூம் அவன் நிறுத்தவில்லை. என் பொறுமை எல்லை கடந்தது. மெதுவாக என் நாக்கால் அவனைத் தீண்டினேன். ஆனால், அவனோ என்னை சட்டை செய்யாது தொடர்ந்தும் ஓடிக்கொண்டு இருந்தான். இது என் கோபத்தை அதிகரித்தது. எனவே மீண்டும் சற்று தீண்டினேன். அவன் இந்த முறை மெதுவாக திரும்பிப் பார்த்துவிட்டு ஒருகையால் சரிந்திருந்த விறகுக்கட்டை சரிசெய்துவிட்டு, மீண்டும் ஏதோ வெறிபிடித்தவன் போல் ஓடத்தொடங்கினான். என்கோபம் உச்சத்திற்கு ஏறியது. எனது பலமெல்லாம் திரட்டி வேகமாக தீண்டினேன். இந்தமுறை அவன் இறங்க உத்தேசித்திருக்க வேண்டும். சைக்கிளின் வேகத்தை குறைத்தான். ஆனால், அதேநேரம் ஒரு பெண் அவனை மறித்ததால் அவ விடம் சென்றபின்னரேயே நிறுத்தினான். நான் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாக இருந்தேன். அப்பாடா சைக்கிள் ஒருமாதிரி நின்றது. அவன் அந்தப் பெண்ணுடன் பேரம் பேசிக்கொண்டிருந்தபோதே நான் வேகமாக நழுவி விடுகிறேன்.

நாய் அலைச்சல் என்று இதைத்தான் சொல்வார்களோ..! இதுபோல எந்த ஒரு நாளும் நான் அலைந்ததில்லை. என் கால்கள் நிற்கச் சொல்லிக் கெஞ்சியது. என் வயிறு ஓடச்சொல்லி மன்றாடியது. நான் இரண்டிற்கும் இடையில் ஊசலாடிக்கொண்டு இருந்தேன். நான் தளர்ந்துபோய் அலைந்து கொண்டு இருந்தேன். அட அப்போதுதான் அது என் கண்களில் பட்டது. பாதையோரமாக விழுந்து கிடந்தது. ஆம் அது ஒரு பாண்பொதி ஆவலுடன் அதைத் தின்று என் வயிற்றை நிரப்பிக்கொள்கிறேன். வயிறு நிரம்பிய களிப்பில் நான் வந்த வழியே திரும்பி ஓடுகிறேன்.

அந்தப் பெண்ணிடம் பணத்தை வாங்கிக்கொண்டு மிகவேகமாக விரைகிறேன். எனக்கு இப்போது நன்றாகத் தலை சுற்றியது. புதுத் தளர்ச்சி என் உடலில் எங்கும் வேகமாகப் பரவியது. ஒரு கடையில் நிறுத்தி பாண் வாங்கிக்கொள்கிறேன். என் கண்மணிகளின் பசியால் வாடிய முகம் வரவர என் நினைவை கூடுதலாக வியாபிக்கத் தொடங்கியது. ஐயோ இது என்ன என்னால் எதையும் பார்க்கமுடியவில்லையே. கண்கள் இருண்டுவிட்டது. உடல் மிகவும் தளர்ந்து போகிறது. கடவுளே என் சைக்கிள் என் கையைவிட்டு நழுவி எங்கோ விழுகிறது. நான் தூக்கி எறியப்படுவது மட்டும் எனக்கு இப்போது புரிந்தது. வெளி ஒலிகள் ஏதும் எனக்கு இப்போது கேட்கவில்லை. நான் எங்கோ இருட்டான பாழும் கிணற்றில் மிக ஆழமாகப் போய்க் கொண்டிருக்கிறேன். ஐயோ கடவுளே! என் குழந்தைகளின் பசியை எப்படித் தீர்ப்பேன் என் குழந்தைகளினதும், மனைவியினதும் பசியால் வாடிய முகங்கள் எனது நினைவில் இறுதியாக மங்கலாகத் தெரிந்தது. என் கடைக்குட்டி வீரிட்டு அழும் ஒலி என் காதில் கடைசியாக ஒலித்துக்கொண்டிருந்தது.

- செம்பருத்தி -

No comments: