Wednesday, April 26, 2006

வேஷங்கள்

- சந்திரவதனா -

காலைப்பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது. சிக்னலுக்காக காரில் காத்துக் கொண்டிருந்த உமாவின் மனது மட்டும் அந்தக் காலைக்குச் சிறிதும் பொருந்தாது புழுங்கிக் கொண்டிருந்தது. கோபத்தில் தகித்தது என்று கூடச் சொல்லலாம்.

"எப்படி அவனால் முடிந்தது...! எப்படித் துணிந்து சொன்னான்...!" காலையில் சந்துரு சொன்ன செய்தியில் கொதிப்படைந்த அவள் கோபத்தை அக்சிலேட்டரில் காட்டினாள்.

சந்துரு வேறு யாருமல்ல. அவள் கணவன்தான். 15வருடத் திருமண வாழ்க்கை. அன்புக்குச் சின்னமாக நிலாவினி அவர்களின் செல்ல மகள்.

"நேற்று இரவுவரை அன்பாகத்தானே இருந்தான்...! நடித்தானா...?" காலையில் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுவான் என அவள் கனவில் கூட நினைக்கவில்லை.

"உமா உம்மோடை நான் கொஞ்சம் கதைக்கோணும்." காலையில் தேநீருடன் சென்ற உமா, படுக்கையிலிருந்த அவனை எழுப்பிய போது குழைந்தான்.
அவனது வார்த்தையின் பரிவில் நெகிழ்ந்து, அப்படியே அவனருகில் கட்டில் நுனியில் அமர்ந்து, அவன் மார்பின் சுருண்ட கேசங்களைக் கோதிய படி
"சொல்லுங்கோ" என்றாள் மிக அன்பாக.

"நீ அழக் கூடாது."

"சும்மா சொல்லுங்கோ."

சில கணங்கள் நிதானித்து
"உமா நான் இண்டையிலையிருந்து முன்சனில் தங்கப் போறன்."

"ஏன்....?"
மிகவும் திடுக்கிட்டவளாய்

"ஒவ்வொருநாளும் பயணஞ் செய்யிறது சரியான கஸ்டமாயிருக்கு."

"இவ்வளவு நாளும் செய்தனிங்கள்தானே! இப்ப மட்டும் என்ன வந்தது..?"

"பார்த்தீரே..! இப்பவே ரென்சன் ஆகிறீர். நான் இன்னும் விசயத்துக்கே வரேல்லை. "

" ....... "
சந்துருவின் புதிருக்கு மௌனமாக தனக்குள் விடை தேடினாள்.

"உமா உமக்குத் தெரியுந்தானே என்னோடை அந்தச் சக்கி என்ற செக்கொஸ்லாவியப் பொம்பிளை வேலை செய்யிறது..?"

"ஓமோம். புருசன்காரன் விட்டிட்டுப் போயிட்டான் எண்டு சொன்னனிங்கள். அவள்தானே......! பாவம்...... அவளின்ரை மகன் எப்பிடி இருக்கிறான்?"

"அது வந்து...... உமா..! அவளின்ரை மகன் சரியான சுகமில்லாமல் இருக்கிறான். அவளுக்கு என்ரை உதவி தேவைப் படுது. அதுதான் என்னை வந்து.... "

"வந்து...... "

"தன்னோடை இருக்கச் சொல்லிக் கேட்கிறாள். "

"அதுக்கு.....! "

"அதுதான் அவளோடை போய் கொஞ்ச நாளைக்கு இருப்பமெண்டு தீர்மானிச்சிருக்கிறன்."

விக்கித்துப் போன உமா விருட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து விட்டாள். ஒரு கணம் துடிக்க மறந்த அவளது இதயம் மீண்டும் அவசரமாகத் துடிக்கத் தொடங்கியது. வார்த்தைகள் வெளி வர மறுத்தன.

"யோசிக்காதையும். நான் உம்மட்டையும் வந்து வந்து போவன். உமக்கென்ன குறை இஞ்சை இருக்கு. ஊரிலை போலை அடுப்பை ஊதி... உடுப்பைக் கல்லிலை அடிச்சுத் தோய்ச்சு... இப்பிடி ஒரு கஸ்டமும் இல்லைத்தானே... எல்லா வசதிகளும் இருக்குத்தானே. "

"இதெல்லாம் நீங்களாகுமோ..? நீங்கள் அவளை விரும்பிறீங்களோ...?"

"இல்லை... இல்லை... அவள்தான் என்னை உயிருக்குயிராய் விரும்புறாள். நான் இல்லையெண்டால் அவளுக்கு ஒரு துணையும் இல்லை. "

"நானும் அம்மா அப்பா சகோதரங்களையெல்லாம் விட்டிட்டு வந்திருக்கிறன். இந்தப் பெரிய ஜேர்மனியிலை உங்களையும் நிலாவினியையும் விட்டால் எனக்கும் வேறை ஆர் இருக்கினம்?" இப்போது அவளிடம் அழுகை பொங்கியது.

"ஏன் இப்ப அழூறீர்? நான் உம்மட்டையும் வருவன்தானே. நீர் படிச்ச பொம்பிளை இதை அனுசரிச்சுப் போகோணும். ஊருலகத்திலை நடக்காத விசயமே இது...!"

"நோ... என்னாலை ஒரு நாளும் இதுக்கு ஒப்புக் கொள்ளேலாது."

உமா கோபமாக முன்னேறி மூர்க்கத்தனமாக அவனது மார்பில் குத்தினாள். நுள்ளினாள். முகமெல்லாம் பிறாண்டினாள். அவன் அவளைத் தள்ளி விட்டு "பொம்பிளை மாதிரி நடந்து கொள்ளும்." என்று கத்தினான். அவனது இடது கன்னத்தில் இவளது நகம் பட்டு இரத்தம் துளிர்த்து நின்றது. வலியோடு அதைத் தடவியவன் கையில் பட்ட இரத்தத்தை அவளிடம் காட்டி, "இங்கை பாரும் எனக்கு இரத்தக் காயம் வர்ற அளவுக்கு பிறாண்டியிருக்கிறீர். இதுக்கு மேலை என்னைத் தொட்டீரோ..! நடக்கிறது வேறை. நானும் சும்மா இருக்க மாட்டன். என்ரை முடிவு முடிவாகீட்டுது. ஒத்துப் போனீர் எண்டால் உமக்கும் நல்லது. எனக்கும் நல்லது. நிலாவினிக்கும் நல்லது. இல்லாட்டி நீர்தான் கஸ்டப் படுவீர். நிலாவினிக்கு இதொண்டும் தெரியத் தேவையில்லை. "

உமாவுக்கு மலைப்பாக இருந்தது. தனது மூர்க்கத் தனமான செய்கையில் எரிச்சலாகவும், வெட்கமாகவும் இருந்தது. "என்னவெல்லாம் இவன் சொல்கிறான்" என்று கலக்கமாகவும் இருந்தது. சக்கியைப் பற்றி சந்துரு ஏற்கெனவே சொல்லியிருக்கிறான். அவளுக்காக உமாவும் பரிதாபப் பட்டிருக்கிறாள். அதுக்காக சந்துருவே போய் சக்கிக்கு வாழ்க்கை கொடுப்பதென்பது எந்த வகையில் நியாயமானது? "இவன் சொல்வதெல்லாம் உண்மைதானா அல்லது தன்னைச் சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறானா" என்று குழம்பினாள்.

நிலாவினியும் வீட்டில் இல்லை. பாடசாலை ரூர் என்று போய் விட்டாள். திரும்பி வர இன்னும் எட்டு நாட்களாகும்.

"நீங்கள் சும்மா பகிடிக்குத்தானே சொல்லுறிங்கள்...?" ஒரு நப்பாசையோடு கேட்டாள்.

"இல்லை உமா. சீரியஸாத்தான் சொல்லுறன். எனக்கு உம்மையும் விருப்பம்தான். ஆனால் இப்ப சக்கிக்கு என்ரை உதவி தேவை. "

இயலாமை என்ற ஒன்று இப்போ உமாவை ஆக்கிரமித்தது. "ஓ....." வென்று குழறினாள்.

"ஏனப்பா இப்படிக் குழறுறீர்? பக்கத்து வீட்டுச் சனத்துக்கெல்லாம் கேட்கப் போகுது. என்ன நினைக்குங்குள். ஊரெண்டு நினைச்சீரே. ஏதோ மூண்டாந்தர குடும்பங்கள் மாதிரிக் கத்திறீர்!"

"ஆர் என்ன நினைச்சாலும் எனக்குப் பரவாயில்லை. நீங்கள் செய்யத் துணிஞ்சது மட்டும் முதலாந்தரமா இருக்கோ..?"

வார்த்தைகள் மிகச் சூடாக அநாகரிகமாக நீண்டு... ஒன்றோடொன்று மோதி.. உமாவுக்கு, சந்துரு முரட்டுத்தனமாக அடிக்க, உமா தன்னைக் காத்துக் கொள்ள எண்ணி, இழுத்துப் பறித்து கதவில் இருந்த திறப்பையும் இழுத்து எடுத்துக் கொண்டு வெளியில் ஓடினாள். கொஞ்ச நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றவள்... காரையும் எடுத்துக் கொண்டு இலக்குத் தெரியாமல் ஓடி.. சிவப்பு லைற்றில் தரித்து நின்றாள்.

சிக்னல் பச்சையாக, பின்னிருந்த காரோட்டி கோன் அடித்து "தூங்குகிறாயா...?" என்று சைகை காட்டிச் சினக்க.. சிந்தனையிலிருந்து தற்காலிகமாக விடுபட்டு..... மீண்டும் பலம் கொண்ட மட்டும் அக்சிலேட்டரை அழுத்தி சீறிக் கொண்டு பறந்தாள்.

ஒரு பாடசாலையின் முன் ஒரு குழந்தை வீதியைக் கடப்பதை கடைசி செக்கனில் கண்டு அவசரமாக பிறேக்கை அழுத்தினாள். "கடவுளே...! நான் என்ன செய்கிறேன். அந்தப் பிள்ளை அடிபட்டிருந்தால்...?" என்று முனகினாள். அப்படியே போனவள் வழியில் உள்ள மைக்கல் தேவாலயத்தின் அருகில், காரை நிறுத்தி விட்டு தேவாலயத்துக்கான படிகளில் ஏறி ஓரிடத்தில் அமர்ந்தாள். அடக்க முடியாமல் அழுதாள். திடீரென்று நிர்க்கதியாகப் போய் விட்டது போல உணர்ந்தாள். பைத்தியம் பிடித்தவள் போல அரற்றினாள். யோசிக்க முடியாமல் மூளைப்பகுதி நொந்தது. கண்களின் முன்னே மெல்லிய புகைமண்டலம் போல எதுவோ மறைத்தது. எதையும் சரியாகச் சிந்திக்க முடியாமல் திண்டாடினாள்.

சந்துருவுக்கும் அவளுக்கும் இடையில் அடிக்கடி சின்னச் சின்னச் சண்டைகள் சச்சரவுகள் என்று வரத் தவறுவதில்லைத்தான். சண்டைகள் கருத்து வேறுபாடுகள் இல்லாத குடும்பங்களா..? சில சமயங்களில் சந்துருவின் மேல் சந்தேகங்களும் வந்து பொங்கியிருக்கிறாள்தான். அவையும் சந்துரு கூறும் பொய்ச் சமாதானங்களில் பொங்கிய வேகத்தில் அடங்கியும் போயிருக்கின்றன. ஆனால் இந்தளவுக்கு தன்னை அப்படியே விட்டு விட்டுப் போய் இன்னொருத்தியுடன் வாழத் துணிந்த அவன் துணிவும், அதை மிகச் சாதாரண விடயம் போல அவள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற அவன் வேண்டுகோளும், இவளை நிலைகுலைத்து விட்டன. தன்னவன் இன்னொருத்திக்குச் சொந்தம் என்று தெரிந்தால் எந்தப் பெண்ணால்தான் நிலைகுலையாமல் இருக்க முடியும்.

தேவாலயம் உயர்ந்து கம்பீரமாக நின்றது. உல்லாசப் பிரயாணிகள் உள்ளே சென்று அதன் உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தார்கள். சிலர் உச்சியில் நின்று நகரின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். இவளுக்கும் ஒரு விபரீத ஆசை வந்தது. தானும் போய் ஏறினாள். அதிக எண்ணிக்கையான வளைந்து வளைந்து செல்லும் படிகளில், ஒவ்வொன்றாக ஏறும் போது மனச்சோர்வுடன் உடற் சோர்வும் சேர்ந்து கால்கள் தடுமாறின. தலை சுற்றியது. ஆனாலும் ஏறி விட்டாள். மூச்சு வாங்கியது. மேலே நின்று பார்த்தாள். எதுவும் தெளிவில்லாமல் ஏதோ ஒரு மெல்லிய புகைமண்டலம் முன்னே தெரிந்தது. பச்சை மரங்கள் கூட புகை போர்த்தி வெண்மை பேர்ந்த பச்சைகளாகத் தெரிந்தன. யாரும் எதிர் பார்க்காத ஒரு கணத்தில் எம்பிக் குதித்தாள்.

அங்கு நின்ற எல்லோருமே அதிர்ச்சியில் அவலக்குரல் எழுப்ப அவள் இரத்தமும் சதையுமாய் தேவாலயத்தின் படிகளில் சிதறினாள். ஒரு கணம் ஸ்தம்பித்து நின்ற அந்த இடத்தை பொலிஸ்வாகனங்களும் அம்புலன்ஸ் வண்டியும் அல்லோல கல்லோலப் படுத்தின. சிவப்பும் வெள்ளையும் கலந்த தடுப்பு நாடாக்கள் கட்டப்பட்டு அந்த வீதியிலான போக்குவரத்துக்களும் மக்கள் நடமாட்டமும் தடைப்படுத்தப் பட்டது.

இது மூன்றாவது சாவு. முதலில் 14வயது நிரம்பிய ஒரு யேர்மனிய மாணவி. அடுத்து ஒரு இந்தியத் தமிழ்ப்பெண். இப்போ இலங்கைத் தமிழ்ப்பெண். தேவாலயஉச்சிக்கு இனி யாருமே ஏற முடியாது என்ற அறிவித்தலோடு தேவாலயத்தினுள்ளே இருந்த உச்சிக்கு ஏறும் படிகளை மறித்து கேற் போட்டு பெரிய மாங்காய்ப்பூட்டு போடப் பட்டது.

விசாரணைகள் தொடர்ந்து... சாக்கில் அள்ளிக் கட்டப் பட்ட உமாவின் உடல் என்று சொல்லப் பட்ட சதைத் துண்டுகள் அடக்கம் செய்யப்பட்டு இரண்டு கிழமைகள் ஓடி விட்டன. சந்துருவைத் துக்கம் விசாரிக்க உறவினர்கள் என்ற பெயரில் சிலரும், நண்பர்களும் வந்து வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

சந்துரு சோகமாய் தாடியை மழிக்காமல் தேவதாஸ் வேடம் போட்டிருந்தான். யார் வீட்டுக்கு வந்தாலும் ஒரு சோகப் பாட்டுள்ள இசைத்தட்டை சுழல விட்டு தன் சோகத்தை இன்னும் பலமாக மற்றவர்களுக்குக் காட்டினான். அழுவாரைப் போல இருந்து "அவ பாருங்கோ சரியானநல்லவ. ஆனால் யேர்மனியிலை இருக்கிற எல்லாப் பொம்பிளையளுக்கும் உள்ள அதே பிரச்சனைதான் அவவுக்கும். தனிமைதான் எல்லாத்துக்கும் காரணம். தாய் தகப்பன் ஊரிலை. சொந்தம் எண்டு சொல்லிக் கொள்ள ஒருவரும் பக்கத்திலை இல்லை. நானும் வேலையோடை. மகள் நிலாவினி பள்ளிக்கூடம் ரூர் எண்டு திரிவாள். இவ நாள் முழுக்க வீட்டிலை தனியத்தானே. அதுதான் அவவுக்கு சரியான மனஅழுத்தம். எப்பவும் சும்மா இருந்து அழுறதும்....." அலுக்காமல் சலிக்காமல் சொல்லிக் கொண்டே இருந்தான்.

சந்திரவதனா
ஜேர்மனி
7.3.2005

http://www.selvakumaran.de/index2/kathai/vechankal.html

21 comments:

துளசி கோபால் said...

வதனா,

ஏன் இப்படி முடிச்சுட்டீங்க? இதை உங்ககிட்டே இருந்து நான் எதிர்பார்க்கலை.
மத்தவங்க செய்யற அநியாயத்துக்கு நாம் தற்கொலை செஞ்சுக்கணுமா?
இல்லே தற்கொலைதான் எல்லாத்துக்கும் தீர்வா?
அப்படி ஒரு தற்கொலை கதையில் கட்டாயம் வேணூமுன்னா, அந்த சந்துரு
செஞ்சுக்கக்கூடாதா?
ஏன் உமாவை ஒரு தைரியசாலியாக் காட்டி இருக்கக்கூடாது?

என்னவோ எனக்குத் தோணியதைச் சொல்லிட்டேன்.

barathee|பாரதி said...

கதையா நிஜமாக நடந்ததா இது. தற்கொலை என்பது முட்டாள்தனம், கோழைத்தனம் என்றெல்லாம் சொன்னாலும், அந்த முடிவை எடுக்கும் மனப்பொருமலுக்குப் பதில் சொல்வது மிகக் கஷ்டம்தானே. நமக்கிருக்கும் சொந்தங்கள் வேஷமாகிப்போகும்போது, நாட்களைக் கடத்துவது மிகக் கஷ்டமே. கடினமான முடிவு. இது கதையாகவே இருந்துவிட வேண்டும்.

barathee|பாரதி said...

கடைசில ரெண்டுபேரும் சண்டை போட்டு, அவள் செத்துப்போயாச்சு. அவன் அடுத்த வழிதேடியாச்சு. நிலாவினிக்கு யார் பதில் சொல்வது?? அப்பனின் ஏத்தத்துக்கும், அம்மாவின் அவசரமுடிவுக்கும் இவள் என்ன செய்வாள்?

tamil said...

கதை நன்றாக இருக்கின்றது.
முடிவை மனம் ஒப்பவில்லை.

Chandravathanaa said...

துளசி, பாரதி, ஷண்முகி

உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி.
இது ஒரு உண்மைச் சம்பவத்தின் தழுவலே.

துளசி
ஒரு விடயத்துக்கு தற்கொலை முடிவல்ல என்பதைக் காட்டும் முக்கிய நோக்குடனேயே இதை எழுதினேன். உமாவின் தற்கொலை உமாவுக்கு எந்தத் தீர்வையும் கொடுக்கவில்லை. துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அதுவல்ல தீர்வு. அவளின் அந்த முடிவு சந்துருவுக்குச் சாதகமானதாகவே அமைந்துள்ளது. அவளது துயர் பேசப் படவில்லை. அவள்தான் பேசப் பட்டாள்.

மனஅழுத்தம், தனிமை, வெளிநாட்டு மோகம்... என்ற சொற்களுக்குள் இப்படியாகப் பல தற்கொலைகள் மறைக்கப் பட்டு விடுகின்றன. இன்னொரு பெண் தற்கொலை செய்ய நினைக்கும் போது, தான் இறந்தாலும் தனக்கு இப்படியொரு பட்டந்தான் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள, தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட... இக்கதை உதவலாம் என்ற நம்பிக்கை எனக்கு.

Chandravathanaa said...

பாரதி,
இப்படியான பல தற்கொலைகள் ஜேர்மனியில் நடந்துள்ளன. தற்கொலைக்காகத் தேர்வு செய்யப் பட்ட முறைகள் மாறியிருந்தன. காரணங்கள் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருந்தன. அவர்களின் இறப்புக்குப் பின் பேசப் பட்டவைகளும் தனிமை, மனஅழுத்தம், வெளிநாட்டு வாழ்க்கை.. என்பதான கதைகளே. அதன்பின்னான அந்தக் கணவனின் செய்கையும் முழுக்க முழுக்க உண்மையான ஒன்றே.

நீங்கள் சொல்வது போல
தற்கொலை என்பது முட்டாள்தனம், கோழைத்தனம் என்றெல்லாம் சொன்னாலும், அந்த முடிவை எடுக்கும் மனப்பொருமலுக்குப் பதில் சொல்வது மிகக் கஷ்டம்தானே. நமக்கிருக்கும் சொந்தங்கள் வேஷமாகிப்போகும்போது,...

எல்லாம் வேஷமாகிப் போகும் போது என்ன செய்வதென்று தெரியாத நிலை வந்து விடுவது தவிர்க்க முடியாததே.

ஷண்முகி,
ஒவ்வொரு முறையும் எங்கோ ஒரு தமிழ்ப்பெண் இப்படி வாழ்வை முடித்துக் கொண்ட போது, அந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் கலங்கியதுதான் உண்மை.

Chandravathanaa said...

இந்தக் கதைக்காக யாழ் இணையத்தளத்தில் வந்த கருத்துக்களையும் இங்கு பதிகிறேன்.

ஏனெனில் காரோட்டத் தெரிந்த பெண்ணை தனிமை வாட்டுவது வித்தியாசமாக இருக்கிறது என நண்பர் ஒருவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

காரோட்டத் தெரிந்த பெண்ணை தனிமை வாட்டாதா?

Chandravathanaa said...

இவை யாழ் இணையத்தளத்தில் எழுதப்பட்ட கருத்துக்கள்

very good story., Jul 12, 2005
எழுதியவர்: .kuganesan .k from montreal,canada.

I am glad to read this short story, This story seems to be a real incidents.I read your other stories like "rajakumaran,ivargal margandayer' are alsovery good stories.good luck.

---------------

so bad decision, Jul 30, 2005
எழுதியவர்: pera from jaffna, now in india

i read this story twice.the language and the smoothness is make me to read twice. but i cant agree with the end. you should give some reasonable decision for this srory. those who are reading this story can have an idea of suiside as when they are getting a moment like this. whatever it is i read a story after long time. thank you to made me read.

------------------

காலத்திற்கேற்ற கதை., Sep 19, 2005
எழுதியவர்: M.T.Selvarajah from United Kingdom

சந்திரவதனாவுக்கு எனது பாராட்டுக்கள். கதையின் நடை நன்றாக இருக்கின்றது. கரோட்டத் தெரிந்த பெண்ணைத் தனிமை வாட்டுவது என்பது சற்று வித்தியாசமாக இருக்கின்றது. ஒவ்வொரு கதைகளும் எமது சமுதாயத்திலிருந்து தவறுபவர்களுக்கு அறிவுரை கூறுவதாக அமைதல் வேண்டும். கதையின் முடிவை மாற்றி இறப்பதற்கு முன் இப்படியான மனப்பான்மையுள்ள ஆண்களுக்கு ஒரு சவுக்கடி கொடுப்பதுபோல அவரின் விபரீத ஆசைகளை அம்பலப்படுத்தியிருக்கலாம் அல்லது தனது கால்களில் நின்று மகளுடன் தனியே வாழ முற்பட்டிருக்கலாம். ஆனால் மாறாகத் தற்கொலை செய்துகொண்டது கணவருக்குச் சாதகமாக அமைந்தது போலவும்ää பெண்ணின் கோழைத்தனத்தை எடுத்துக் கூறுவதுபோலவும் இருக்கின்றது. ஒரு புலம் பெயர்ந்த நாட்டில் வாழும் தற்காலப் பெண் இதுபோன்ற முடிவை இலகுவில் எடுக்கமாட்டார் என்பதே என் எண்ணம்.

theepa said...

First of all, I would like to tell you, I really enjoyed reading this short
story. Well done.

Secondly, I would like to comment to the review Mr Selverajah gave: Just
because a woman can drive a car does not mean she stops being a woman. The
woman who has been described in this story has been brought up in Sri Lanka, so certain perspectives of life to her could be in a very traditional and
old fashioned manner. At the same time this does not mean that a Tamil or
Asian woman brought up in a Western country, or even a Western woman would
not behave the same way.I have seen with my own eyes woman behaving in rather ridiculous ways when
their husbands/partners leave them or cheat on them. Before I married, I
used to find it difficult to understand these kind of woman and was furious
why they dind't stand up for themselves and move on with their life. I have seen my own friends, German, English and Tamil girls behaving insane
and could not find an explanation at that time for their behaviours. But now where I am married I see the whole thing from a different perspective.
Not that I agree with behaviour like this but I think I can understand what
drives certain people to act insane. Whether woman or man, Western or
Eastern, one enters a marriage believing it will last till only death will
separate them. So people with this strong believe will find it difficult
when testing times in a marriage, like the one in the above story, will
appear in their life. How do you deal with a situation in your life where
in one spare second everything you every believed in has been taken away?
Where do you go from there? How do you manage your life without the other
part of you? So I believe it is easy to contemplate or even act on
suicide for anyone in that given circumstances, especially for weak people,
no matter where you from, how well you educated and how modern you are.
It's just human nature. Some of us are a bit stronger and wiser, but not
everyone is the same.

Of course the ending suggestions you made are the right decision to be made
in a given situation like this, but tell me, is life always that easy?
Does everyone think straight at a time like this? Given she had more time in a saver environment, with time she might have taken different direction in life. But people act stupidly when emotional and certain acts can't be reversed or corrected.

Oodam said...

கதை நன்றாக இருக்கின்றது

பொன்ஸ்~~Poorna said...

என்னங்க.. இப்படி முடித்து விட்டீங்க.. நான் என்னவோ உமாவும் ஏதாவது செய்து திருத்துவாங்கன்னு பார்த்தேன்..

Radha N said...

சந்துருவை போலிஸ் சந்தேகிக்காதா? ஓருவேளை அந்த அலுவலக பெண்ணை அவன் திருமணம் செய்து கொண்டால், சந்துருவின் குழந்தையின் கதி?


சந்துரு மாதிரி ஆட்கள் நிறையபேர்கள் ந ம்முடம் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றா ர்கள்.

சாதாரண நபர்கள் சந்துரு மாதிரி மாறா மல் இருக்க என்னவெல்லாம் செய்யலாம்?

அலுவலகத்தில் எதிர் பாலினரிடத்திடம் பழகுதலை ஒரு எல்லையோடு நிறுத்தவேண்டும். ந மது வேலை இது, மற்றவர் வேலை இது என்ற அளவில் நமது அலுவலக நட்பு இருக்கவேண்டும். அலுவல் விசாரணையைத்தவிர தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய விசாரணை மேற்கொள்ளக்கூடாது. குறைந்தபட்சம் ஓருநாளைக்கு ஒருவேளையாவது, குடும்பத்தின் அனைத்து உறுப்பினரும் அமர்ந்து சாப்பி டவேண்டும், அது இரவு உணவாக இருந்தால் ந லம். சாப்பிடும் போது தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கக்கூடாது. சாப்பிடும் போது, ஒவ்வொ ரும், ஒவ்வொருடைய அன்றாட நிகழ்வுகளைப் பற்றி பேசவேண்டும், தமிழ்பிளாக்கர்ஸ் மாதிரி மற்றவர்கள் அதனை விமர்சனம் செய்தல் வேண்டும். இப்படி ஒட்டுமொத்த குடும்ப உறுப்பி னர்கள் கலந்து பேசும் போது குடும்பத்தி னுடைய நெருக்கம் (୦அமில்ய் bond) அதிகரிக்கும்.

இந்திய கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் அடித்தளமே இந்த family bond தான். ஆனாலும், தற்போதைய புதிய புதிய வேலைகளின் பரிணாமவளர்ச்சி, இத்தகைய பேமிலி பாண்டின் நரம்புகளை ஒவ்வொன்றாக உருவி வெளித்தள்ளும். அதனை நாம் எவ்வாறு கையாள்கின்றோம் என்பதனை பொ றுத்தே, நமது குடும்பம் கட்டுக்கோப்பாக விளங்கும்.

rahini said...

vaalththukkal santhiravathana...
eluthugkal ennum nalla kathaikal ithe pool.
anpudan
rahini
germany

Chellamuthu Kuppusamy said...

படிக்க ஆரம்பித்த கணத்திலேயே ஒரு வேளை உண்மைக் கதையாக இருக்குமோவென யூகித்தேன். எல்லா கதைகளும் மகிழ்ச்சியாகத்தான் முற்றுப்பெற வேண்டுமென்ற கட்டாயம் ஏதுமில்லை. அதுவும் உண்மையான நிகழ்வின் தழுவலாக அமையும் போது கேட்கவே தேவையில்லை. மற்றபடி தற்கொலைகள் மணித்துளி நேரத்தில் எடுக்கப்படும் முட்டாள் தனமான முடிவுகளால் நடப்பது நிறைய.

உங்களது ஏனைய எழுத்துக்களை அதிகம் நான் படித்ததில்லை. இருந்தாலும் உங்களது பெயரைப் போலவே இதமான 'நிலாவினி' என்னும் தமிழ்ப்பெயர் என்னைக் கவர்ந்தது என்பதைச் சுட்டிக் காட்ட விழைகிறேன். சிங்கப்பூர் விமான நிலையத்தில் பணியாற்றும் ஒரு பெண்ணின் பெயரை 'மின்னொளி' எனக் கண்டிருக்கிறேன். இதுவரை தமிழ்நாட்டில் அந்தப் பெயர் படைத்த எந்தப் பெண்ணையும் பார்த்ததில்லை.

- குப்புசாமி செல்லமுத்து

chinthamani said...

என்னங்க இப்படி முடிச்சிட்டீங்க?

chinthamani said...

என்னங்க இப்படி முடிச்சிட்டீங்க?

சுதாகர் said...

கதை நன்றாக இருந்தாலும், முடிவை மனம் ஒப்பவில்லை.

எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை ஒரு தீர்வு ஆகாது என்ற உங்கள் பின்னூட்டம் சரியே. ஆனால், உங்கள் கதை முடிவு ஒரு குழந்தையின் எதிர்காலத்தையே கேள்வி குறியாக்கி விட்டது.

அவ்வாறு செய்யும் கணவன் மார்கள், இக் கதையினைப் படித்து விட்டு அவ்வாறு செய்யாமலிருந்தால் நலமே.

Chandravathanaa said...

வில்லண்டம பொன்ஸ், நாகு, ராகினி,
உங்கள் கருத்த்துக்களுக்க்கு நன்றி.

நாகு
சந்துருவை பொலிஸ் சந்தேகித்ததுதான். ஆனாலும் தப்பித்துக் கொண்டார்.
நீங்கள் சொல்வது போல நடந்து கொண்டால் குடும்பங்களில் புரிந்துணர்வும் பரஸ்பர உறவும் நன்றாக அமையும் என்பதை மறுப்பதற்கில்லை.நடக்க வேண்டுமே!

Chandravathanaa said...

குப்புசாமி செல்லமுத்து,

உங்கள் வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

நீங்கள் சொன்ன இந்தக் கருத்து மிகவும் சரியானது.

"மற்றபடி தற்கொலைகள் மணித்துளி நேரத்தில் எடுக்கப்படும் முட்டாள் தனமான முடிவுகளால் நடப்பது நிறைய."

Chandravathanaa said...

சுதாகர்
குழந்தையின் எதிர்காலம் இந்த நிலையில் கண்டிப்பாகக் கேள்விக் குறியாகும்.
இது பற்றிச் சிந்திக்க வேண்டியவர்கள் தாய் தந்தை இருவருமே. தாயின் மனநிலையில் குழந்தையைப் பற்றிச் சிந்திக்த் தவறி விட்டார். தந்தை...

anies said...

Dear, Sis Vatana
I am a new user to this side and from Malaysia.

When i read the story i feld so sad and sometimes we cant avoid this happend to our women.

thanks
anies