Wednesday, November 29, 2006

என் பெயர் அகதி

- தமிழ்நதி -

கதைக்குள் நீங்கள் நுழைவதன் முன் எங்களைத் தெரிந்துகொள்வது நல்லது.

நான் ஆனந்தி. வயது இருபத்தி ஐந்து. சொந்த இடம்: யாழ்ப்பாணத்திலுள்ள-இந்தக் கதைக்குத் தேவையற்ற- ஏதோவொரு கிராமம்.

கட்டிலில் படுத்திருப்பவளின் பெயர் வினோதினி. எனது சிநேகிதி. வயது இருபத்தி இரண்டு.
தொலைக்காட்சியில் யாராலோ உந்தப்பட்டவன்போல காட்சிகளை மாற்றிக்கொண்டேயிருப்பவனின் பெயர் பரணி. வினோதினியின் தம்பி. எங்கள் மூவருடைய தற்போதைய கவனம் - புதிய நிலத்தில் ஒட்டிக்கொண்டு உயிரோடு இருப்பது.

ஆனால் நாங்கள் நினைத்திருந்தது போல அது அத்தனை சுலபமாக இல்லை. எங்களுக்கு வாசிக்கக் கிடைத்த ஆனந்தவிகடன், குமுதத்தில் வெளிவந்த கதைகள் காட்டிய சென்னையிலிருந்து நாங்கள் பார்த்த சென்னை வேறுபட்டிருந்தது.

பெரிய பெரிய பாலங்கள். விர் விர்ரென விரையும் வாகனங்கள். சாலை விதிகளைச் பொருட்படுத்தாமல் இருந்தாற்போல பாய்ந்து வீதியைக் கடக்கும் சனங்கள். கார்களுக்குள் பளபளக்கும் முகங்களையுடைய பணக்காரர்கள். சாலையோரங்களில் மெலிந்த கறுத்த உரக்கப் பேசுகிற ஆண்-பெண்கள். வீதியோர பிச்சைக்காரர்களது இறைஞ்சுதலைக் கவனிக்காமல் அல்லது புறக்கணித்து விரைகிற நாகரீக மனிதர்கள்…. கைத்தொலைபேசியில் எப்போதும் யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும் இளைஞர்கள்…. புதியவர்களாகிய எங்கள் முன் அவிழ்க்க முடியாத புதிர்போன்று விரிந்துகிடந்தது சென்னை.

வீடு தேடுவதில் தொடங்கியது வினை.

இருபதுகளிலுள்ள மூவர், அதிலும் இருவர் பெண்கள். திறந்த கதவுகள் சந்தேகம் கலந்த நிராகரிப்புடன் பூட்டப்பட்டன. சிலர் வெளிப்படையாகவே சொன்னார்கள்.

“சிலோன்காரங்களுக்கு வீடு வாடகைக்கு விடுறதில்லை”

“திரும்பிப் போய்விடலாம்”வினோதினி சொன்னாள். நிராகரிப்பின் துக்கம் அவள் முகத்தில் படிந்திருந்தது.

“அவர்களுடைய பயம் நியாயமானது”

“எங்களைப் பார்த்தால் குண்டு வைக்க வந்தவர்கள் மாதிரியா இருக்கிறது”பரணி கோபப்பட்டான்.

“குண்டு வைப்பவர்களுக்கென்று ஒரு தனிமுகம் இருக்கிறதா என்ன…?”வினோதினி அதே கோபத்தோடு கேட்டாள்.

“படகில் வந்திருந்தாலாவது தங்குவதற்கு ஒரு இடம் கிடைத்திருக்கும்”

“வரிசையில் நின்று கழிப்பறைக்குப் போக உன்னால் முடியுமா…?”

பரணி மௌனமாகிவிட்டான். ஊரில் இருந்தபோது பரணியைச் சிரிப்பில்லாமல் பார்த்ததில்லை. நண்பர்களோடு சைக்கிளில் சிட்டுக்குருவிபோல பறந்து திரிந்த அவனை மீண்டும் தொடங்கிய போர் வீட்டுக்குள் முடக்கியது. துப்பாக்கிகள் வீதிகளை ஆள ஆறுமணிக்குள் ஊரடங்கியது. ஒரு சிறு உரசலில் பற்றிக்கொள்ளக்கூடிய கந்தகத்தைக் காற்றில் தூவிவிட்டாற்போலிருந்தது. பயம் எய்ட்சைப்போல ஆட்கொல்லி நோயாயிற்று.

அன்றைய தினம் நான் வினோதினியின் வீட்டிலிருந்தேன். அவர்களுடைய பாட்டியின் ஆண்டுத்திவசம். நாய்கள் ஆரவாரமாகக் குரைத்து பின்னடைவதைக் கண்டதும் புரிந்துவிட்டது.

அவர்கள் வந்துவிட்டார்கள்!

“சீசர்! சத்தம் போடாதே…!”நாயை அதட்டியபடி வினோதினியின் அப்பா அவர்களை எதிர்கொண்டார்.

“வீட்டைச் சோதனையிட வேண்டும்”

கரும் பச்சைச் சீருடையணிந்து துப்பாக்கிகளை தயார்நிலையில் ஏந்தியிருந்த அவர்கள் கணப்பொழுதில் வீட்டைச் சூழ்ந்திருந்தார்கள். எந்த வழியாகப் பின்புறம் சென்றார்கள் என்ற கேள்வி அத்தனை பயத்திலும் எனக்குள் எழுந்தது. அனைவரும் வீட்டின் முன்புறம் வரும்படி பணிக்கப்பட்டோம். அதற்குள் வினோதினியின் அம்மா அழத்தொடங்கியிருந்தா. எங்களுக்குள் அவர்கள் பரணியைத் தேர்ந்தெடுத்து முன்னே வரும்படி சைகை காட்டினார்கள்.

அப்போதுதான் மீசை அரும்பத் தொடங்கியிருந்த அவன் முகத்தில் பயத்தைவிடவும் வேறொன்று தெரிந்தது. அது… வெறுப்பும் கோபமும் இயலாமையும் கலந்த ஏதோவொன்று.

“அவனுக்கு ஒன்றும் தெரியாது. மாணவன்” அம்மாவின் குரல் பிரலாபித்தது.

துப்பாக்கிக் கட்டையால் பரணியின் முகத்தை ஒருவன் உயர்த்தினான். மற்றொருவன் காற்சட்டைப் பைகளைத் துளாவினான். கைகளை உயர்த்தியபடி நின்ற அவன் எங்கள் விழிகளைத் தவிர்க்க வானத்தைப் பார்த்தான்.

மற்றொருவனின் கவனம் ஒன்றாக நின்றிருந்த இளவயதுப் பெண்களாகிய எங்கள் நால்வரிலும் குவிந்தது. அவனது அடர் பச்சை நிறக் கண்கள் வெறியுடன் ஒளிர்ந்தன.

“விசாரிக்க வேண்டும். பெரியவர்கள் உள்ளே போகலாம்”உடைந்த தமிழில் வயதானவர்களை உள்ளே விரட்டினான்.

“அக்கா! போகவேண்டாம்”

சற்று உரத்த குரலில் பரணி சொன்ன அடுத்த கணமே துப்பாக்கிக் கட்டையால் முழங்காலில் தாக்கப்பட்டு நிலத்தில் விழுந்தான். வினோதினியின் அம்மா பதறி உரத்த குரலெடுத்து அழுதபடி பரணியின் பக்கத்தில் ஓடினா. சித்தி தலையைக் குனிந்தபடி விசும்பினா. அப்பா கைகளை நெஞ்சில் இறுக்கக் கட்டி வெறித்த பரர்வையோடிருந்தார்.

துப்பாக்கியின் பின்புறத்தால் பெண்கள் நால்வரும் வீட்டினுள் செலுத்தப்பட்டோம். எங்களோடு உள்ளே வரமுயன்ற அப்பாவின் கன்னத்தில் ஒருவன் அறைந்து நிறுத்தினான். ஆச்சி பிடிவாதமாக எங்களைத் தொடர “வயதானவர்களைச் சோதனையிட மாட்டோம்”என்ற ஒருவன் அவரைக் கதவுக்கு வெளிப்புறம் தள்ளிவிட்டான்.

வினோதினியின் கன்னத்தைத் தடவிய ஒருவன் “தமிழ்ப்பெண்கள் அழகு”என்றான். மற்றவன் என்னைத் தொடக்கூடாத இடத்தில் தொட்டு “நாம் கல்யாணம் செய்துகொள்ளலாம்”என்றான். சோதனை என்ற பெயரில் இழிவுசெய்யப்பட்டபோது நான் மதிலில் படுத்திருந்த பூனையைப் பார்த்தபடியிருந்தேன். வினோதினியின் தங்கை என்னோடு ஒட்டிக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க முடியவில்லை. துப்பாக்கியைப் பறித்து அவர்களைச் சுடலாமென்று நினைத்ததாக சின்னவள் பின்பொருநாளில் என்னிடம் சொன்னாள். ஆனால், அவளுக்குச் சுடத் தெரிந்திருக்கவில்லை.

வீட்டின் ஒவ்வொரு அறையிலும் சப்பாத்துத் தடங்கள் பதிந்தன.

“ஒத்துழைப்பிற்கு நன்றி” என்றொருவன் கண்சிமிட்டிச் சிரித்தான்.

சில நிமிடங்களின் பின் அவர்கள் வெளியேறிய பிறகு ஆச்சி மண்ணை வாரி இறைத்துத் திட்டினார்.
“கடவுள் கேட்கட்டும்… கடவுள் கூலி கொடுப்பார்”

அதுவரை அடங்கியிருந்த நாய்கள் ஆரவாரமாகக் குரைத்து தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தின.

“நான் இயக்கத்திற்குப் போகிறேன்… இவர்களைக் கொல்ல வேண்டும்”பரணி அன்று முழுவதும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தான். அவனுடைய முழங்கால் வீங்கிச் சிவந்திருந்தது. மலங்கழிக்க குந்தியிருப்பது அவனுக்குச் சிரமமாக இருந்ததாக பின்பு வினோதினி சொன்னாள். அப்பா எங்களைக் காணுந்தோறும் தலையைக் குனிந்துகொண்டார்.

அதன் பிறகு வந்த பகல்கள் குறுகி இரவுகள் நீண்டன. சந்தியில், வீதியோரத்தில் முகம் சிதைக்கப்பட்ட பிணங்கள் கிடந்தன. அடையாள அட்டை இல்லாதவர்கள் காணாமல் போனார்கள். சிலசமயம் அடையாள அட்டை வைத்திருந்தவர்களும் கூட. நாங்கள் அறிந்த பல குடும்பங்கள் படகேறிப் போனார்கள். நாங்கள் விமானமேறி வந்திறங்கினோம். வினோதினியின் தங்கையும் மைத்துனியும் எங்களோடு வர மறுத்து அங்கேயே தங்கிவிட்டார்கள்.

எட்டுக்கு எட்டடி ‘ஹோட்டல்’அறையில் முதல்நாள் முழுவதும் அடைந்து கிடந்தோம். அங்கு வரவேற்பாளராகக் கடமையாற்றியவர் எங்கள் கதை கேட்டுக் கலங்கிப்போனார். அவர் மூலம் அந்த விளம்பரப் பத்திரிகையைப் பெற்றுக்கொண்டோம்.

வீடு தேடும் படலம் தொடங்கியது.

விருப்புடன் தொடங்கும் உரையாடலின் போக்கு நாங்கள் இலங்கை என்றதும் திசைதிரும்பிவிடும். பின்பு எங்களைத் தட்டிக்கழிப்பதற்கான காரணங்கள் முன்வைக்கப்படும். வீடு தர இயலாமைக்கான வருத்தங்களை வருத்தத்தோடு ஏற்றுக்கொண்டோம். அன்றைய தினம் மூவருமே களைத்துப் போயிருந்தோம்.

“நீங்கள் கேரளாவா…?”

“இல்லை… இலங்கையிலிருந்து வந்திருக்கிறோம்”

“ம்…!” வீட்டுக்காரரின் முகம் இருண்டது.

“இங்கு ஏன் வந்தீர்கள்…?”

“உயிர் பிழைத்திருக்க”

கூறியபின்னர்தான் அந்த வாக்கியத்திலிருந்த சூடு என்னைத் தாக்கியது.

வீட்டுக்காரர் எங்களை இப்போது பார்த்த பார்வையில் கொஞ்சம் இரக்கம் தெரிந்தது.

“நான் பல்கலைக்கழகத்திலும் எனது தம்பி பாடசாலையிலும் படித்துக்கொண்டிருந்தோம். எனது சிநேகிதி பத்திரிகையொன்றில் வேலை செய்துகொண்டிருந்தா” வினோதினி இறைஞ்சுவதுபோல சொன்னாள். நான் திரும்பிவிடலாமென்று கண்களால் உணர்த்தியும் அவள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

“வாடகை எப்படிக் கட்டுவீர்கள்…?”

“ஜேர்மனியிலிருந்து பணம் வரும்”

‘ஜேர்மனி’என்ற சொல் அவரை ஈர்த்திருக்க வேண்டும். வினோதினி இனி அலைவதில்லை என்பதில் தீர்மானமாக இருந்தாள். அந்த வீட்டுக்காரரை எப்படியாவது சம்மதிக்க வைக்க பிரயத்தனப்பட்டாள். தவிர, வீடும் விசாலமாக இருந்தது. யன்னல் வழியாகத் தெரிந்த கடலின் நீலமும் மௌனமும் எனக்கும் பிடித்திருந்தது. பத்திரிகைகளைச் சலித்து இந்தியத் தமிழ் பேசி விவரமறிந்து அலைவதில் நானும் சோர்ந்துவிட்டிருந்தேன்.

“ஐம்பதினாயிரம் முற்பணம்… உங்களால் கட்டமுடிந்தால் நாளை வாருங்கள்”
முற்பணம் அதிகந்தான். ஆனால், வீடு கிடைத்துவிட்டது.

“கடவுளுக்கு நன்றி”

மூச்சு முட்டும் அந்த ‘ஹோட்டல்’அறைக்கு வந்ததும் குப்புறப் படுத்துக்கொண்டு வினோதினி அழுதாள். எனக்கும் கண்ணீர் வரும் போலிருந்தது. பரணி தொலைக்காட்சிப்பெட்டியிலிருந்து கண்களை எடுக்கவில்லை. ஆனால், அதை அவன் பார்த்துக்கொண்டிருக்கவுமில்லை.

அடுத்து வந்த இரண்டு நாட்களுள் துடைப்பம், சமையற் பாத்திரம், குக்கர், பால் பக்கெற் இன்ன பிறவற்றுடன் புதுவீடு போனோம். இரண்டு அறைகளில் ஒன்றை நானும் மற்றதை பரணியும் வினோதினியும் நிரப்பினோம். கடல் நீலப்படிகமாக பரந்திருப்பதை எழுதும் மேசையிலிருந்து பார்க்க முடிந்ததில் எனக்குத் திருப்தி. நண்பர்களற்ற தனிமை பரணியை அலைக்கழிப்பதை உணரமுடிந்தது. அடிக்கடி பல்கனிப் பக்கம் போய் வீதியைப் பார்த்துக்கொண்டிருப்பதை வினோதினியும் நானும் அவதானித்தோம். எவ்வளவு முயன்றும் அவனது பழைய சிரிப்பை எங்களால் மீட்டுவர முடியவில்லை.

வீதியில் கடைத்தெருவில் எதிர்ப்படும் எந்த முகமுமே அறிமுகமற்றது என்பது எங்களை வெகுவாக உறுத்தியது. பின்பு பழகிவிட்டது. கடற்கரையில் எப்போதாவது இலங்கைத்தமிழ் கேட்க நேரும்போதெல்லாம் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொள்வோம். அதில் உயிர் இருக்காது.

இருந்திருந்துவிட்டு வினோதினிக்கு ஊர் ஞாபகம் வந்துவிடும். “கண்ணை மூடிக்கொள்”என்பாள்.

“இது கிணற்றடி. குளிக்கும் தொட்டி விளிம்பில் நானும் நீயும் அமர்ந்திருக்கிறோம். சின்னவள் உன் மடியில் படுத்திருக்கிறாள். கூடத்தில் பரணி பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறான். அம்மா தேநீர் தர எங்களை அழைக்கிறாள். ஆச்சி…”

“வேண்டாம் இந்த குழந்தைகள் விளையாட்டு”நான் அவள் கனவுகளைத் துண்டித்துவிடுவேன்.

“தயவுசெய்து எங்களை முழுப் பைத்தியமாக்காதே அக்கா”பரணி சிரிப்பில்லாமல் கேட்டுக்கொள்வான்.

“எங்களுக்கு விசா முடியப்போகிறது”வினோதினி ஒருநாள் நினைவுபடுத்தியபோது அயர்ச்சியாக இருந்தது.

இரண்டு புகைப்படங்கள், கடவுச்சீட்டு நகல், விசாவை நீடித்துத் தரும்படியான வேண்டுகோள் அடங்கிய கடிதம், நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம் இவற்றுடன் சென்ற நாங்கள் ஏமாற்றத்துடன் திரும்பினோம்.

“நீங்கள் வந்திருப்பது உல்லாசப் பிரயாணிகளுக்கான விசாவில்… நீடிக்க முடியாது”என்று இறுக்கமான முகமுடைய அதிகாரி பதிலளித்தார்.

“ஊருக்குப் போவோம் அக்கா…!”பரணி சொன்னான்.

“உன்னைப் பிடித்துக்கொண்டு போவார்கள். நகத்தைப் பிடுங்குவார்கள். தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு மிளகாய்த் தூள் போட்ட புகையைச் சுவாசிக்க விட்டு அடிப்பார்கள். விரும்பினால் போ”வினோதினி வெடித்தாள்.

“நான் போகமாட்டேன்…”அவளுக்கு அன்றைய நாள் நினைவில் வந்திருக்க வேண்டும்.
அவளது கன்னத்தைத் தடவிய அவனது விரல்களை நினைத்துப் பார்த்திருப்பாள்.

“நாங்கள் என்ன பிழை செய்தோம் ஆண்டவரே….! எங்கள் வாழ்வை ஏன் இவ்விதம் சபித்தீர்…?”

“காவல் நிலையத்தில் பதிந்துவிட்டு இருக்கலாம்”வீட்டுக்காரம்மா சொன்னா.
போனோம்.

“இன்று ஏட்டு இல்லை. நாளை வாருங்கள்”

“ஏழு மணிக்குப் பின்னர் வாருங்கள்”

“திங்கட்கிழமை வந்தால் ஏட்டைச் சந்திக்கலாம்”

“இன்று கூட்டம் நடக்கிறது. பாதுகாப்புக் கடமைகளுக்காகப் போய்விட்டார்கள். நாளை சனி… திங்கள் வாருங்கள்”

திங்கள், செவ்வாய், வெள்ளி… வரச்சொன்ன நாட்களெல்லாம் போய் தவங்கிடந்தபின் ஈற்றில் அவர் வந்தார். ஒல்லியான அவர் பெரிய மீசை வைத்திருந்தார். பெரும்பாலான பொலிஸ்காரர்களைப் போல இவரும் தொந்தியோடிருந்தார். ஒல்லியான உடலில் தொந்தி துருத்திக்கொண்டிருப்பது வினோதமாக இருந்தது.

நாங்கள் இருந்த இடத்தில் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்த மற்றுமொரு பொலிஸ்காரரை ஓரக்கண்ணால் பார்த்தார். பக்கத்திலிருந்த அறைக்கு அழைத்துப்போனார். இருட்டான அந்த அறையில் கோப்புகள் நிறைந்திருந்தன.

“ஒருவருக்குப் பதிய ஆயிரத்து ஐந்நூறு ரூபா. மூன்று பேருக்கும் நான்காயிரத்து ஐந்நூறு… இருக்கிறதா…?”

“பதிவதற்கு பணம் கட்ட வேண்டுமென்ற விபரமே எங்களுக்குத் தெரியாது”அதிர்ந்துபோய்ச் சொன்னேன்.

“எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை ஐயா! நாங்கள் அகதிகள்”வினோதினியின் ‘அகதி’என்ற வார்த்தை என்னை மிகவும் பாதித்தது.

“எனக்கா கேட்கிறேன்… நிறையப் பேருக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்”

“நாங்கள் உயிர் தப்பியிருக்க இங்கு வந்திருக்கிறோம் ஐயா…! ஒருவருக்கு ஐந்நூறு ரூபா தருகிறோம்”

“ஆயிரத்து ஐந்நூறுக்கு ஒரு பைசா குறைக்க முடியாது. கடிதம் வேண்டுமானால் நாளை பணத்தோடு வாருங்கள்”

நாங்கள் திகைப்போடு வெளியில் வந்தோம். பொலிஸ்காரர்களைப் பற்றி திரைப்படங்கள் மிகைப்படுத்திப் பேசுவதாக நாங்கள் நினைத்திருந்தது தவறெனப் புரிந்தது. வெயில் அனலை வாரியிறைத்தது. உண்ட களைப்பில் உறங்கிக்கிடந்தது மதியம்.

கொதிக்கும் அந்த மதியத்தில் அந்த வீதியில் அவ்வளவு விசனத்துடன் காலகாலமாக நடந்துகொண்டிருப்பது போலொரு எண்ணம் தோன்றி மறைந்தது.

“விசா இன்னும் முடியவில்லை. போய்விடலாம்”பரணி ஆரம்பித்தான்.

“போடா…! போடா…! செத்துப் போ” வினோதினி வீதி என்பதை மறந்து போனவளாக உரத்துக் கத்தினாள். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். பழக்கடையிலிருந்த பெண் எங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பியிருந்தாள்.

“இப்படியெல்லாம் உயிர் பிழைத்திருப்பதற்கு… ச்சே…!”

பரணி எங்களைவிட்டு விலகி விரைந்து நடந்தான். ஆளற்ற சாலையில் தனியனாக அவன் நடந்துபோனது வருத்தமாக இருந்தது.

“இது அநியாயம் ஆனந்தி” தளர்ந்துபோன குரலில் சொன்னாள்.

“கொடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்பது உனக்குப் புரிகிறதா…?”

அவளுக்குப் புரிந்தது. வழியில் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. வீட்டிற்குப் போனதும் வினோதினிக்குப் பிடிக்கும் அந்தப் பாட்டைப் போட்டேன். என்ன கவலையாக இருந்தாலும் அந்த வரிகள் அவளது தலைதடவித் தேற்றிவிடும்போலும். சில நிமிடங்களில் சிரிப்புக்குத் திரும்பிவிடுவாள்.

“கடவுள் தந்த அழகிய வாழ்வு…உலகம் முழுதும் அவனது வீடு”

எழுந்தோடி நிறுத்தினாள்.

“பொய்…! பொய்! எல்லாம் எல்லோரும் பொய்…!”

“பைத்தியம்…”அருகில் அமர்ந்தேன்.

“அதுவும் விரைவில் பிடிக்கத்தான் போகிறது…”

“பேச்சுவார்த்தை தொடங்கவிருக்கிறது…நாம் விரைவில் ஊருக்குப் போவோம்”

எனது வார்த்தைகளை நானே நம்பவில்லை.

“போடீ! நான் சின்னக் குழந்தை இல்லை”என்றாள் வெடுக்கென்று.

மிகுந்த களைப்பாக இருந்தது. உயிர் பிழைத்திருப்பதற்கு இத்தனை பிரயத்தனப்பட வேண்டாமே என்று தோன்றியது. ‘உயிர் மட்டுமா…?’ என்ற கேள்வி கூடவே உறுத்தியது. “நாம் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம்”என்று என்னை அவன் நெருங்கியபோது உடலில் பாம்பு ஊர்வதைப்போல பல்லைக் கடித்துகொண்டிருந்ததும் மதிலில் படுத்திருந்த பூனையும் நினைவில் வந்தன. “எமது விருப்பின்றி ஒருவனைத் தொட அனுமதிப்பதென்பது மரணத்திற்குச் சமானம்”என்று நானும் வினோதினியும் என்றோ ஒருநாள் பேசிக்கொண்டதை நினைத்துக்கொண்டேன்.

அம்மாவுக்கு கடிதம் எழுதவேண்டும்போலிருந்தது.

அன்புள்ள அம்மா மற்றும் அனைவருக்கும் அன்புடன் எழுதிக்கொள்வது.

நானும் வினோவும் பரணியும் இங்கு நல்ல சுகம். நினைத்து வந்ததைப் போல வாழ்க்கை இங்கு சிரமமாக இல்லை. நல்லதொரு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறோம். யன்னல் வழியாகப் பார்த்தால் கடல் தெரிகிறது. வீதிகள் பெரிய பெரிய மரங்களுடன் அழகாக இருக்கின்றன. மாலையில் கடற்கரைக்குப் போய் வருகிறோம். இங்குள்ளவர்களின் தமிழ் வித்தியாசமாக இருக்கிறது. என்றாலும் புரிந்துகொள்ள முடிவதில் மகிழ்ச்சி.

பரணியை கம்பியூட்டர் வகுப்பில் சேர்த்துவிட எண்ணியுள்ளோம். வினோவும் நானும் ஆங்கிலம் படிக்கப்போகிறோம். வினோ இங்கு கல்லூரியில் சேர்வதற்கு முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறாள். பின்னேரங்களில் நாங்களெல்லோரும் முற்றத்தில் இருந்து பேசுவதை நினைத்துக்கொள்வதுண்டு. உங்களை அடிக்கடி கனவில் காண்கிறேன். பூனைக்குட்டிகளுக்கு ஒழுங்காக சாப்பாடு போடவும். சீசர் எப்படியிருக்கிறது? மல்லிகை பூக்கிறதா…? வீட்டின் பின்புறம் இருக்கும் அடுக்கு நந்தியாவட்டைக்கும் மறக்காமல் தண்ணீர் ஊற்றவும்.

அம்மா! பேச்சுவார்த்தை சரிவந்தால் நாங்கள் வந்துவிடுவோம். உங்கள் கையால் சாப்பிட வேண்டும் போலிருக்கிறது. வினோவும் உங்களுக்கு எழுதவேண்டுமென்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

அன்பு மகள்ஆனந்தி

அந்தக் கடிதத்தின் மீது தலைவைத்துப் படுத்துக்கொண்டேன். வீட்டில் சாமியறை யன்னல் வழியே வேம்பின் சலசலப்பை ஏந்திவரும் காற்றின் மடியில் படுத்திருப்பது போலிருந்தது.


பிற்குறிப்பு: இதைக் கதையென்றும் சொல்லலாம்.

Quelle - இளவேனில்...

Wednesday, April 26, 2006

வேஷங்கள்

- சந்திரவதனா -

காலைப்பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது. சிக்னலுக்காக காரில் காத்துக் கொண்டிருந்த உமாவின் மனது மட்டும் அந்தக் காலைக்குச் சிறிதும் பொருந்தாது புழுங்கிக் கொண்டிருந்தது. கோபத்தில் தகித்தது என்று கூடச் சொல்லலாம்.

"எப்படி அவனால் முடிந்தது...! எப்படித் துணிந்து சொன்னான்...!" காலையில் சந்துரு சொன்ன செய்தியில் கொதிப்படைந்த அவள் கோபத்தை அக்சிலேட்டரில் காட்டினாள்.

சந்துரு வேறு யாருமல்ல. அவள் கணவன்தான். 15வருடத் திருமண வாழ்க்கை. அன்புக்குச் சின்னமாக நிலாவினி அவர்களின் செல்ல மகள்.

"நேற்று இரவுவரை அன்பாகத்தானே இருந்தான்...! நடித்தானா...?" காலையில் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுவான் என அவள் கனவில் கூட நினைக்கவில்லை.

"உமா உம்மோடை நான் கொஞ்சம் கதைக்கோணும்." காலையில் தேநீருடன் சென்ற உமா, படுக்கையிலிருந்த அவனை எழுப்பிய போது குழைந்தான்.
அவனது வார்த்தையின் பரிவில் நெகிழ்ந்து, அப்படியே அவனருகில் கட்டில் நுனியில் அமர்ந்து, அவன் மார்பின் சுருண்ட கேசங்களைக் கோதிய படி
"சொல்லுங்கோ" என்றாள் மிக அன்பாக.

"நீ அழக் கூடாது."

"சும்மா சொல்லுங்கோ."

சில கணங்கள் நிதானித்து
"உமா நான் இண்டையிலையிருந்து முன்சனில் தங்கப் போறன்."

"ஏன்....?"
மிகவும் திடுக்கிட்டவளாய்

"ஒவ்வொருநாளும் பயணஞ் செய்யிறது சரியான கஸ்டமாயிருக்கு."

"இவ்வளவு நாளும் செய்தனிங்கள்தானே! இப்ப மட்டும் என்ன வந்தது..?"

"பார்த்தீரே..! இப்பவே ரென்சன் ஆகிறீர். நான் இன்னும் விசயத்துக்கே வரேல்லை. "

" ....... "
சந்துருவின் புதிருக்கு மௌனமாக தனக்குள் விடை தேடினாள்.

"உமா உமக்குத் தெரியுந்தானே என்னோடை அந்தச் சக்கி என்ற செக்கொஸ்லாவியப் பொம்பிளை வேலை செய்யிறது..?"

"ஓமோம். புருசன்காரன் விட்டிட்டுப் போயிட்டான் எண்டு சொன்னனிங்கள். அவள்தானே......! பாவம்...... அவளின்ரை மகன் எப்பிடி இருக்கிறான்?"

"அது வந்து...... உமா..! அவளின்ரை மகன் சரியான சுகமில்லாமல் இருக்கிறான். அவளுக்கு என்ரை உதவி தேவைப் படுது. அதுதான் என்னை வந்து.... "

"வந்து...... "

"தன்னோடை இருக்கச் சொல்லிக் கேட்கிறாள். "

"அதுக்கு.....! "

"அதுதான் அவளோடை போய் கொஞ்ச நாளைக்கு இருப்பமெண்டு தீர்மானிச்சிருக்கிறன்."

விக்கித்துப் போன உமா விருட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து விட்டாள். ஒரு கணம் துடிக்க மறந்த அவளது இதயம் மீண்டும் அவசரமாகத் துடிக்கத் தொடங்கியது. வார்த்தைகள் வெளி வர மறுத்தன.

"யோசிக்காதையும். நான் உம்மட்டையும் வந்து வந்து போவன். உமக்கென்ன குறை இஞ்சை இருக்கு. ஊரிலை போலை அடுப்பை ஊதி... உடுப்பைக் கல்லிலை அடிச்சுத் தோய்ச்சு... இப்பிடி ஒரு கஸ்டமும் இல்லைத்தானே... எல்லா வசதிகளும் இருக்குத்தானே. "

"இதெல்லாம் நீங்களாகுமோ..? நீங்கள் அவளை விரும்பிறீங்களோ...?"

"இல்லை... இல்லை... அவள்தான் என்னை உயிருக்குயிராய் விரும்புறாள். நான் இல்லையெண்டால் அவளுக்கு ஒரு துணையும் இல்லை. "

"நானும் அம்மா அப்பா சகோதரங்களையெல்லாம் விட்டிட்டு வந்திருக்கிறன். இந்தப் பெரிய ஜேர்மனியிலை உங்களையும் நிலாவினியையும் விட்டால் எனக்கும் வேறை ஆர் இருக்கினம்?" இப்போது அவளிடம் அழுகை பொங்கியது.

"ஏன் இப்ப அழூறீர்? நான் உம்மட்டையும் வருவன்தானே. நீர் படிச்ச பொம்பிளை இதை அனுசரிச்சுப் போகோணும். ஊருலகத்திலை நடக்காத விசயமே இது...!"

"நோ... என்னாலை ஒரு நாளும் இதுக்கு ஒப்புக் கொள்ளேலாது."

உமா கோபமாக முன்னேறி மூர்க்கத்தனமாக அவனது மார்பில் குத்தினாள். நுள்ளினாள். முகமெல்லாம் பிறாண்டினாள். அவன் அவளைத் தள்ளி விட்டு "பொம்பிளை மாதிரி நடந்து கொள்ளும்." என்று கத்தினான். அவனது இடது கன்னத்தில் இவளது நகம் பட்டு இரத்தம் துளிர்த்து நின்றது. வலியோடு அதைத் தடவியவன் கையில் பட்ட இரத்தத்தை அவளிடம் காட்டி, "இங்கை பாரும் எனக்கு இரத்தக் காயம் வர்ற அளவுக்கு பிறாண்டியிருக்கிறீர். இதுக்கு மேலை என்னைத் தொட்டீரோ..! நடக்கிறது வேறை. நானும் சும்மா இருக்க மாட்டன். என்ரை முடிவு முடிவாகீட்டுது. ஒத்துப் போனீர் எண்டால் உமக்கும் நல்லது. எனக்கும் நல்லது. நிலாவினிக்கும் நல்லது. இல்லாட்டி நீர்தான் கஸ்டப் படுவீர். நிலாவினிக்கு இதொண்டும் தெரியத் தேவையில்லை. "

உமாவுக்கு மலைப்பாக இருந்தது. தனது மூர்க்கத் தனமான செய்கையில் எரிச்சலாகவும், வெட்கமாகவும் இருந்தது. "என்னவெல்லாம் இவன் சொல்கிறான்" என்று கலக்கமாகவும் இருந்தது. சக்கியைப் பற்றி சந்துரு ஏற்கெனவே சொல்லியிருக்கிறான். அவளுக்காக உமாவும் பரிதாபப் பட்டிருக்கிறாள். அதுக்காக சந்துருவே போய் சக்கிக்கு வாழ்க்கை கொடுப்பதென்பது எந்த வகையில் நியாயமானது? "இவன் சொல்வதெல்லாம் உண்மைதானா அல்லது தன்னைச் சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறானா" என்று குழம்பினாள்.

நிலாவினியும் வீட்டில் இல்லை. பாடசாலை ரூர் என்று போய் விட்டாள். திரும்பி வர இன்னும் எட்டு நாட்களாகும்.

"நீங்கள் சும்மா பகிடிக்குத்தானே சொல்லுறிங்கள்...?" ஒரு நப்பாசையோடு கேட்டாள்.

"இல்லை உமா. சீரியஸாத்தான் சொல்லுறன். எனக்கு உம்மையும் விருப்பம்தான். ஆனால் இப்ப சக்கிக்கு என்ரை உதவி தேவை. "

இயலாமை என்ற ஒன்று இப்போ உமாவை ஆக்கிரமித்தது. "ஓ....." வென்று குழறினாள்.

"ஏனப்பா இப்படிக் குழறுறீர்? பக்கத்து வீட்டுச் சனத்துக்கெல்லாம் கேட்கப் போகுது. என்ன நினைக்குங்குள். ஊரெண்டு நினைச்சீரே. ஏதோ மூண்டாந்தர குடும்பங்கள் மாதிரிக் கத்திறீர்!"

"ஆர் என்ன நினைச்சாலும் எனக்குப் பரவாயில்லை. நீங்கள் செய்யத் துணிஞ்சது மட்டும் முதலாந்தரமா இருக்கோ..?"

வார்த்தைகள் மிகச் சூடாக அநாகரிகமாக நீண்டு... ஒன்றோடொன்று மோதி.. உமாவுக்கு, சந்துரு முரட்டுத்தனமாக அடிக்க, உமா தன்னைக் காத்துக் கொள்ள எண்ணி, இழுத்துப் பறித்து கதவில் இருந்த திறப்பையும் இழுத்து எடுத்துக் கொண்டு வெளியில் ஓடினாள். கொஞ்ச நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றவள்... காரையும் எடுத்துக் கொண்டு இலக்குத் தெரியாமல் ஓடி.. சிவப்பு லைற்றில் தரித்து நின்றாள்.

சிக்னல் பச்சையாக, பின்னிருந்த காரோட்டி கோன் அடித்து "தூங்குகிறாயா...?" என்று சைகை காட்டிச் சினக்க.. சிந்தனையிலிருந்து தற்காலிகமாக விடுபட்டு..... மீண்டும் பலம் கொண்ட மட்டும் அக்சிலேட்டரை அழுத்தி சீறிக் கொண்டு பறந்தாள்.

ஒரு பாடசாலையின் முன் ஒரு குழந்தை வீதியைக் கடப்பதை கடைசி செக்கனில் கண்டு அவசரமாக பிறேக்கை அழுத்தினாள். "கடவுளே...! நான் என்ன செய்கிறேன். அந்தப் பிள்ளை அடிபட்டிருந்தால்...?" என்று முனகினாள். அப்படியே போனவள் வழியில் உள்ள மைக்கல் தேவாலயத்தின் அருகில், காரை நிறுத்தி விட்டு தேவாலயத்துக்கான படிகளில் ஏறி ஓரிடத்தில் அமர்ந்தாள். அடக்க முடியாமல் அழுதாள். திடீரென்று நிர்க்கதியாகப் போய் விட்டது போல உணர்ந்தாள். பைத்தியம் பிடித்தவள் போல அரற்றினாள். யோசிக்க முடியாமல் மூளைப்பகுதி நொந்தது. கண்களின் முன்னே மெல்லிய புகைமண்டலம் போல எதுவோ மறைத்தது. எதையும் சரியாகச் சிந்திக்க முடியாமல் திண்டாடினாள்.

சந்துருவுக்கும் அவளுக்கும் இடையில் அடிக்கடி சின்னச் சின்னச் சண்டைகள் சச்சரவுகள் என்று வரத் தவறுவதில்லைத்தான். சண்டைகள் கருத்து வேறுபாடுகள் இல்லாத குடும்பங்களா..? சில சமயங்களில் சந்துருவின் மேல் சந்தேகங்களும் வந்து பொங்கியிருக்கிறாள்தான். அவையும் சந்துரு கூறும் பொய்ச் சமாதானங்களில் பொங்கிய வேகத்தில் அடங்கியும் போயிருக்கின்றன. ஆனால் இந்தளவுக்கு தன்னை அப்படியே விட்டு விட்டுப் போய் இன்னொருத்தியுடன் வாழத் துணிந்த அவன் துணிவும், அதை மிகச் சாதாரண விடயம் போல அவள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற அவன் வேண்டுகோளும், இவளை நிலைகுலைத்து விட்டன. தன்னவன் இன்னொருத்திக்குச் சொந்தம் என்று தெரிந்தால் எந்தப் பெண்ணால்தான் நிலைகுலையாமல் இருக்க முடியும்.

தேவாலயம் உயர்ந்து கம்பீரமாக நின்றது. உல்லாசப் பிரயாணிகள் உள்ளே சென்று அதன் உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தார்கள். சிலர் உச்சியில் நின்று நகரின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். இவளுக்கும் ஒரு விபரீத ஆசை வந்தது. தானும் போய் ஏறினாள். அதிக எண்ணிக்கையான வளைந்து வளைந்து செல்லும் படிகளில், ஒவ்வொன்றாக ஏறும் போது மனச்சோர்வுடன் உடற் சோர்வும் சேர்ந்து கால்கள் தடுமாறின. தலை சுற்றியது. ஆனாலும் ஏறி விட்டாள். மூச்சு வாங்கியது. மேலே நின்று பார்த்தாள். எதுவும் தெளிவில்லாமல் ஏதோ ஒரு மெல்லிய புகைமண்டலம் முன்னே தெரிந்தது. பச்சை மரங்கள் கூட புகை போர்த்தி வெண்மை பேர்ந்த பச்சைகளாகத் தெரிந்தன. யாரும் எதிர் பார்க்காத ஒரு கணத்தில் எம்பிக் குதித்தாள்.

அங்கு நின்ற எல்லோருமே அதிர்ச்சியில் அவலக்குரல் எழுப்ப அவள் இரத்தமும் சதையுமாய் தேவாலயத்தின் படிகளில் சிதறினாள். ஒரு கணம் ஸ்தம்பித்து நின்ற அந்த இடத்தை பொலிஸ்வாகனங்களும் அம்புலன்ஸ் வண்டியும் அல்லோல கல்லோலப் படுத்தின. சிவப்பும் வெள்ளையும் கலந்த தடுப்பு நாடாக்கள் கட்டப்பட்டு அந்த வீதியிலான போக்குவரத்துக்களும் மக்கள் நடமாட்டமும் தடைப்படுத்தப் பட்டது.

இது மூன்றாவது சாவு. முதலில் 14வயது நிரம்பிய ஒரு யேர்மனிய மாணவி. அடுத்து ஒரு இந்தியத் தமிழ்ப்பெண். இப்போ இலங்கைத் தமிழ்ப்பெண். தேவாலயஉச்சிக்கு இனி யாருமே ஏற முடியாது என்ற அறிவித்தலோடு தேவாலயத்தினுள்ளே இருந்த உச்சிக்கு ஏறும் படிகளை மறித்து கேற் போட்டு பெரிய மாங்காய்ப்பூட்டு போடப் பட்டது.

விசாரணைகள் தொடர்ந்து... சாக்கில் அள்ளிக் கட்டப் பட்ட உமாவின் உடல் என்று சொல்லப் பட்ட சதைத் துண்டுகள் அடக்கம் செய்யப்பட்டு இரண்டு கிழமைகள் ஓடி விட்டன. சந்துருவைத் துக்கம் விசாரிக்க உறவினர்கள் என்ற பெயரில் சிலரும், நண்பர்களும் வந்து வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

சந்துரு சோகமாய் தாடியை மழிக்காமல் தேவதாஸ் வேடம் போட்டிருந்தான். யார் வீட்டுக்கு வந்தாலும் ஒரு சோகப் பாட்டுள்ள இசைத்தட்டை சுழல விட்டு தன் சோகத்தை இன்னும் பலமாக மற்றவர்களுக்குக் காட்டினான். அழுவாரைப் போல இருந்து "அவ பாருங்கோ சரியானநல்லவ. ஆனால் யேர்மனியிலை இருக்கிற எல்லாப் பொம்பிளையளுக்கும் உள்ள அதே பிரச்சனைதான் அவவுக்கும். தனிமைதான் எல்லாத்துக்கும் காரணம். தாய் தகப்பன் ஊரிலை. சொந்தம் எண்டு சொல்லிக் கொள்ள ஒருவரும் பக்கத்திலை இல்லை. நானும் வேலையோடை. மகள் நிலாவினி பள்ளிக்கூடம் ரூர் எண்டு திரிவாள். இவ நாள் முழுக்க வீட்டிலை தனியத்தானே. அதுதான் அவவுக்கு சரியான மனஅழுத்தம். எப்பவும் சும்மா இருந்து அழுறதும்....." அலுக்காமல் சலிக்காமல் சொல்லிக் கொண்டே இருந்தான்.

சந்திரவதனா
ஜேர்மனி
7.3.2005

http://www.selvakumaran.de/index2/kathai/vechankal.html

Monday, March 06, 2006

அவள்

நடுரோட்டில் நின்றவள் என்னைக் கண்டதும் ஓடி வந்து கையைப் பிடித்தாள். தனது கணவனை ஜெயிலில் இருந்து விடுவித்துத் தரும்படி மன்றாடினாள். அவள் யாரென்பதையே அவளைக் கேட்டுத்தான் தெரிந்து கொண்டேன். அடையாளமே தெரியாமல் உரு மாறிப் போயிருந்தாள். உதடுகள் வெடித்துக் காய்ந்து கருமை பேர்ந்திருந்தன. கண்கள் சோபை இழந்து சோகத்துக்குச் சொந்தமாகியிருந்தன. கன்னங்கள் ஒட்டி உலர்ந்திருந்தன. பன்னிரண்டு வருடங்களின் முன் நான் சந்தித்த மதுதான் இவளென்பதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது.

அழகிய ஓவியம் போல, அன்று என்னைத் தனது நான்கு வயது மகளுடன் சந்தித்தவள் இன்று ஏன் இப்படிக் காய்ந்த சருகு போலானாள் என்ற கேள்வி என்னுள் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. திடீரென சனநாடமாட்டம் மிக்க தெருவென்றும் பாராது உரத்து அழத் தொடங்கி விட்டாள். கன்னங்களில் பொலபொலவென்று வழிந்த கண்ணீர் என்னையும் கலங்க வைத்தது.

"அழாதைங்கோ. என்னெண்டு சொல்லுங்கோ. நான் ஹெல்ப் பண்ணுறன்."

"எனக்கு அவரைப் பார்க்கோணும். எல்லாருமா என்னை ஏமாத்தி கையெழுத்து வேண்டிப் போட்டு அவரை ஜெயிலிலை போட்டிட்டினம். எல்லாரும் பொய். எனக்கு அவரைப் பார்க்கோணும். அவர் அப்பிடிச் செய்திருக்க மாட்டார். குமுறினாள். குழறினாள்."

எனக்கு சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்ப்பது போன்றதான உணர்வு. என்ன நடந்திருக்கும்..? ஏன் இப்படிப் பேசுகிறாள். எப்படி சாருகன் ஜெயிலுக்குப் போயிருப்பான்? நாட்டிலிருந்து ஆட்களை வெளிநாட்டுக்கு அழைத்து வரும் ஏஜென்சி வேலை பார்த்திருப்பானோ?

எதுவானாலும் பேசுவதற்கு இதுவல்ல இடம். போவோரும் வருவோரும் என்னையும் அவளையும் ஒரு தினுசாகப் பார்த்துக் கொண்டு சென்றார்கள். என்னைத் தெரிந்த சிலர், முகங்களில் கேள்விக்குறி தொக்க பார்வைகளை ஏளனம் கலந்து வீசிச் சென்றார்கள். இன்னும் சிலரோ இரக்கமாகப் பார்த்துச் சென்றார்கள்.

"வாங்கோ நாங்கள் அந்தக் தேநீர்க்கடைக்குள் போயிருந்து கதைப்பம்."

"எனக்குக் தேநீரும் வேண்டாம். ஒண்டும் வேண்டாம்."

"இஞ்சை பாருங்கோ. எல்லாரும் ஒரு மாதிரி எங்களைப் பார்க்கினம். கொஞ்சம் குளிராயும் இருக்கு. உள்ளை போயிருந்து ஆறுதலாக் கதைப்பம்." அவளது கையைப் பிடித்து இழுக்காத குறையாக அந்தத் தேநீர்க்கடைக்குள் அழைத்துச் சென்றேன். கூடவே அவளது நான்கு வயது மகனும் அவளது சுவெற்றரைப் பிடித்தபடி உள் நுழைந்தான். அவனது வாயைச் சுற்றி அவன் காலையில் சாப்பிட்ட சாப்பாடு வெண்மையாகப் படிந்து காய்ந்து போயிருந்தது. பார்ப்பதற்கு துப்பரவின்றி இருந்த அவனது தோற்றத்தை யேர்மனியர்கள் முகத்தைச் சுளித்த படி பார்த்தார்கள்.

கபேற்றறியாவின் உள்ளே ஒரு மூலையில் இடம் பிடித்துக் கொண்டேன். மது இப்படிப் பட்டவள் அல்ல. பன்னிரண்டு வருடங்களின் முன் சந்தித்த போது மகளை மிகவும் நேர்த்தியாக வைத்திருந்தாள். இப்போ என்ன நடந்தது? என் வீட்டுக்குக் கூட ஓரிரு தடவைகள் மகளோடு வந்திருக்கிறாள். பட்டுப் போல இருந்த அந்தக் குழந்தைக்கு இப்போ பதினாறு வயதாகியிருக்கும். அவள் எங்கே? கணப்பொழுதுக்குள் மனசுக்குள் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் எழுந்தன.

மது எங்கோ வெறித்துப் பார்ப்பதுவும், மீண்டும் மீண்டுமாய் அழத் தொடங்குவதுமாய் இம்சைப் படுத்தினாள். பார்க்கப் பாவமாய், பரிதாபமாய்த் தெரிந்தாள். அவளை ஆசுவாசப் படுத்தி சரியான முறையில் கதைக்கத் தொடங்குவதற்கிடையில் எனக்குப் போதும் போதுமென்றாகி விட்டது.

"என்ன நடந்தது? ஏன் சாருகன் ஜெயிலுக்குப் போனவர்?"

"அவர் சரியான குடி. குடிச்சால் அவருக்குக் கண்மண் தெரியிறேல்லை.
குடிச்சுப் போட்டு எனக்கு அடிக்கிறதாலை...

"அடிக்கிறது பிழைதான். அதுக்கு இங்கை தண்டனையும் கிடைக்கும். ஆனால் இவ்வளவு காலத்துக்கு ஜெயில்லை போட மாட்டங்களே..? அடிக்கிறதெண்டு நீங்களோ பொலிசுக்கு அறிவிச்சனிங்கள்?"

"இல்லை... அவர் ஒருக்கால் அடிச்ச பொழுது எனக்கு காது வெடிச்சு நான் சாகக் கிடந்தனான். ஆஸ்பத்திரியிலை இரண்டு மாதத்துக்கு மேலை இருக்க வேண்டி வந்திட்டுது. அதுதான்...... மற்றது எங்கடை பக்கம் அக்கம் வீட்டு டொச் சனங்களும் பொலிசுக்கு அறிவிச்சிட்டுதுகள்."

"அதுக்கு ஒரு நாளும் ஆறு வருசம் தண்டனை குடுக்க மாட்டாங்கள்.
வேறையென்ன நடந்தது என்று சரியாச் சொன்னால்தான் நான் ஏதும் உதவி செய்யலாம்."

"அந்த டொச் சனத்துக்கு விசர். இவர் எங்கடை மகளோடை பிழையாப் பழகிறதெண்டும் சொல்லிப் போட்டுதுகள்."

"பிழையா எண்டு....."

"பள்ளிக்கூட ரூர் ஒண்டுக்கும் விடுறதில்லை. பள்ளிக்கூட நீச்சல் வகுப்புக்கு விடுறதில்லை. பள்ளிக்கூடம் தவிர்ந்த வேறையெந்த இடத்துக்கும் விடுறேல்லை. சினேகிதப் பிள்ளையளோடை பழக விடுறதில்லை......"

"அது பிழைதான். அதுக்காண்டி..."

"அதோடை அவர் பிள்ளையோடை பாலியல் தொடர்பு வைச்சிருக்கிறாரெண்டும் பொய் சொல்லிப் போட்டுதுகள். அதை அறிக்கையா எழுதி என்ரை மகளட்டையும் சைன் வாங்கி யூகன்ட்அம்ற்றிலை (Youth wellfare office) குடுத்திட்டுதுகள்."

"அவர் சொந்தத் தகப்பன்தானே..."

"ஓம்."

"அப்படியெண்டால் ஏன் அந்தச் சனங்கள் அப்பிடி எழுதினதுகள். சில நேரத்திலை அவர் பிள்ளையை வெளியிலை விடாமல் இருக்கிறதாலை அதுகளுக்கு அப்பிடியொரு சந்தேகம் வந்திட்டுதோ தெரியாது. உப்பிடி சில நேரத்திலை நடக்கிறதுதான். ஒண்டும் நடக்காமலே நடந்தது மாதிரியான சந்தேகங்களில் வழக்குகள் வாறதுதான். இதாலை பிள்ளையளைப் பெற்றோரிட்டையிருந்து பிரிச்செடுக்கிற அவலங்களும் நடந்திருக்கு. எங்கையாவது ஒரு சொந்தத் தகப்பன் தன்ரை மகளோடை பிழையா நடப்பானோ? நீங்கள் யோசிக்காதைங்கோ. எப்பிடியாவது லோயரோடை கதைச்சு அப்பீல் எடுத்தால் இதிலை வெல்லலாம். இது ஒரு பிழையான வழக்கு."

இப்போது அவள் முகத்தில் ஒரு சிறிய மாற்றம். எனது பேச்சில் இருந்து.. கணவர் அப்படியொரு அநியாயமான தப்பைச் செய்திருக்க மாட்டாரென்ற பேருவகை. அவர் விடுவிக்கப் பட ஏதாவது ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கை.

எல்லாம் சில கணங்களுக்குத்தான். சடாரென்று அவள் கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது. "அவரை நான் பார்க்கோணும். ஒரு வருசத்துக்கு மேலையா அவரைப் பார்க்கேல்லை. விடமாட்டினமாம். கடைசியா நடந்த வழக்குக்குக் கூட என்னை உள்ளை விடேல்லை. லோயர்தான் போனவர்." சத்தமெடுத்து அழுதாள். தேநீர்க்கடையில் இருந்த அனைவரது தலைகளும் ஒரு தரம் எம்பக்கம் திரும்பி மீண்டன.

"எங்கை உங்கடை அந்த மகள்? அவ குழந்தைப்பிள்ளையில்லையே! அவவுக்கு 16 வயது. அவ தன்ரை அப்பா தன்னோடை அப்பிடிப் பிழையா நடக்கேல்லை எண்டு கோர்ட்டிலை சொன்னால் பிரச்சனை முடிஞ்சுதுதானே...?"

"அவவிட்டை அந்த விசர்ச் சனங்கள் கையெழுத்து வேண்டிக் குடுத்துட்டுதுகள். இதாலை அவவுக்கும் கெட்ட பெயர். தமிழ்ச்சனங்களுக்கு முன்னாலை தலை காட்டேலாதாம். அதுதான் அந்த நகரத்தையே விட்டிட்டு இங்கை வந்திட்டம். இப்ப அவ பள்ளிக் கூடத்துக்குப் போட்டா."

அப்படி ஏன் அந்த யேர்மனியச் சனங்கள் செய்யப் போகுதுகள்? என்ற கேள்வி எனது மூளையின் ஒரு புறத்தைப் பிறாண்டிக் கொண்டே இருந்தது. இருந்தாலும் மதுவைச் சமாளித்து என்னாலான உதவிகளைச் செய்வதாக வாக்குறுதியளித்து அனுப்புவதற்கிடையில் நான் களைத்து விட்டேன்.

வீட்டுக்கு வந்த பின்னும் மனசுக்குள் நினைவுகள் புரண்டு கொண்டே இருந்தன. யேர்மனியக் குடும்பங்களில் இப்படியான வழக்குகள் சில தடவைகள் வந்திருக்கின்றனதான். ஆனால் எமது தமிழ் சமூகத்தில் இது புதிய வழக்கு. ஒரு தந்தையால் தனது விந்திலிருந்து உருவான தனது குழந்தையை இப்படிப் பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு உட்படுத்த முடியுமா..?

இந்தக் கேள்விக்கு விடை தேடுமுகமாக எனக்குத் தெரிந்த பல அப்பாக்களை ஒப்பிட்டுப் பார்த்தேன். தம்பியின் மனைவியை, அண்ணனின் மகளை, மனைவியின் தங்கையை... என்று சபலப்படும் ஆண்கள் பலர் இருக்கிறார்கள்தான். ஆனால் சொந்த மகளையே....! முடியாது ஒரு நாளும் ஒரு தந்தையால் இது முடியாது. இது பிழையான வழக்கு. அநியாயமாக சாருகன் குற்றஞ் சாட்டப் பட்டிருக்கிறான். அவனை எப்படியும் ஜெயிலிலிருந்து விடுவிக்க வேண்டும்.

தெரிந்த ஒரு யேர்மனிய வழக்கறிஞரோடு இது பற்றிப் பேசினேன். இப்படியானதொரு வழக்கு அவருக்குப் புதிதாக இருக்கவில்லை. ஆனாலும் நான் தமிழ்த் தந்தையின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை அவரை யோசிக்க வைத்தது. அப்படியொரு தவறை அந்தத் தந்தை செய்யாத பட்சத்தில், சரியான முறையில் முயற்சி செய்தால் மீட்கலாம் என்றார்.

ஒருவித நம்பிக்கையோடு மதுவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கு சம்பந்தமான கடிதங்கள், கோர்ட் தீர்ப்புகள் எல்லாவற்றையும் கொண்டு எனது வீட்டுக்கு வரச் சொன்னேன். வந்தாள்.. அதே வாட்டம். அதே ஏக்கம். எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டதான சோகம். மகன் மட்டும் கொஞ்சம் துப்பரவாக வெளிக்கிடுத்தப் பட்டிருந்தான்.

இருக்க வைத்து தேநீர் தயாரித்துக் கொடுத்து கதைப்பதற்குள் பலமுறை ஒப்பாரி வைத்து விட்டாள். அவள் கொண்டு வந்த பேப்பர் கட்டுக்குள்ளிருந்து யூகன்ட்அம்ற்றிலிருந்து (Youth wellfare office) வந்த 12 பேப்பர்கள் ஒன்றாகப் பின் பண்ணப் பட்டிருந்த ஒரு கடிதத்தை எடுத்துப் பார்த்தேன். அது பதினொரு மாதங்களின் முன் சாருகனின் வழக்கின் தீர்வையொட்டி எழுதப் பட்ட ஒரு கடிதம். படிக்கத் தொடங்கினேன்.

"இலங்கையைச் சேர்ந்த சாருகன், மதுமிதா தம்பதிகள் இங்கு யேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார்கள். இவர்களது அரசியற் தஞ்சக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டதின் காரணமாக இவர்களுக்கு யேர்மனியில் வதிவிட அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

தற்போது 15வயதுடைய இவர்களின் மகள் சகானா, கருச்சிதைவு செய்து கொள்வதற்காக, இரண்டு தடவைகள் அவளது தந்தை சாருகனால் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளாள். மருத்துவருக்கும் அங்கு உள்ள மற்றைய உதவியாளர்களுக்கும் இது சம்பந்தமாகப் பலத்த சந்தேகம் ஏற்படவே கருவிற்கு யார் தந்தை என்ற டி.என்.ஏ(DNA) பரிசோதனையை மேற் கொண்டுள்ளார்கள். (இந்தச் சோதனைக்கான ஒரு தரத்துச் செலவு 750யூரோக்கள்.) இச் சோதனையின் போது சகானாவின் வயிற்றில் உள்ள கருவுக்குத் தந்தை அவளின் தந்தையாகிய சாருகன் என்பது நிரூபணமாகியுள்ளது. அதனாலேயே சாருகன் தற்போது சிறையில் வைக்கப் பட்டுள்ளார்."

சரியான ஆதாரம் இருந்தும் கூட திருமதி சாருகன் இதை ஏற்றுக் கொள்கிறாரில்லை. ஒரு சட்டபூர்வமான உண்மையை ஓப்புக் கொள்ள மறுக்கும் சுபாவம் கொண்டவராக திருமதி சாருகன் இருப்பது பொலிஸ் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. இதனால் சகானாவின் பாதுகாப்புக்குப் பெரும் பங்கம் ஏற்பட்டுள்ளது.

சகானா தனது தந்தையாலேயே பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு உள்ளாக்கப் பட்டுள்ளாள். அதனால் மனஉளைச்சல் பட்டுக் கொண்டிருக்கும் அவளை அரவணைக்க வேண்டிய அவளது தாய் மதுமிதா, மகளுக்குத் தாயாக மகளின் பக்கம் நிற்காது, கணவனுக்கு மனைவியாக நின்று கணவனை நியாயமுள்ளவனாகக் காட்ட முனைவது பெரும் விசனத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இத்தனைக்கும் சாருகன் தனது மனைவியான மதுமிதாவை வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறுமளவுக்கு மூர்க்கத்தனமாகப் பல தடவைகள் தாக்கியிருக்கிறார். எந்தக் கட்டத்திலும் மதுமிதாவை யேர்மனிய மொழி கற்றுக் கொள்ள சாருகன் அனுமதிக்கவில்லை. இத்தனை வருடங்கள் யேர்மனியிலிருந்தும் யேர்மனிய மொழியை ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ள முடியாதவராகவே மதுமிதா இருக்கிறார்......."

எனக்கு மேற்கொண்டு வாசிக்க முடியாமல் இருந்தது. அந்த அறிக்கையில் எழுதப் பட்ட வாசகங்கள் ஒவ்வொன்றும் என்னை அதிர வைத்தன. நிமிர்ந்து மதுவைப் பார்த்தேன். அவள் "அவர் அப்படிச் செய்திருக்க மாட்டார்." என்பதை ஒரு மந்திரம் போல உச்சாடனம் பண்ணிக் கொண்டிருந்தாள்.

புத்தி பேதலித்தவள் போலப் புலம்பிக் கொள்ளும் இவளிடம் போய் "டீ.என்.ஏ(DNA) பரிசோதனை மூலம் உனது மகளின் கருவுக்கான காரணி உனது கணவன்தான் என்பது நிரூபணமாகியிருக்கும் போது இனி இவ்வழக்கில் வெல்வதற்கு எதுவும் இல்லை" என்பதையும் "உனது கணவனுக்குச் சரியான இடம் அதுதான். அவன் அங்கேயே இருக்கட்டும்." என்பதையும் எப்படிச் சொல்வது..?

யோசனை மேலிட, அந்தக் கடிதத்தை நான் அப்படியே மேசையில் வைத்து விட்டேன். அவள் மீண்டும் பொல பொலவென்று கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட "அவரை நான் பார்க்கோணும். ஒரு வருசத்துக்கு மேலையா அவரைப் பார்க்கேல்லை. அவர் அப்படிச் செய்திருக்க மாட்டார். அவரட்டை நேரே பார்த்து "அப்பிடிச் செய்தனிங்களோ...?" எண்டு கேட்கப் போறன்......" புலம்பிக் கொண்டிருந்தாள்.

சந்திரவதனா
யேர்மனி
15.11.2004

Wednesday, November 30, 2005

நூல் ஏணி

ஆர். நீலா

பெண்ணே நீ: ஓட்டல் ஆகாஷ் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை.

பொன்னுத்தாய்க்கு ரத்தம் கொதித்தது. கொழுந்தன்காரனை எரித்துவிடுவது போல் பார்த்தாள்.

"பாவிப்பய.... என்னமா நம்புற மாதிரி பேசுறான்...?'

இப்பவும் நமட்டுச் சிரிப்போடு அவளையே பார்க்கிறான். கண்களில் அவளுக்கு மட்டுமே தெரிந்த ஒரு குள்ளநரித்தனம்!

அவள் ஒரு பொருட்டே இல்லை என்பதுபோல் அவன் தொடர்கிறான்.... ""ஆமாப்பா.... அந்த மூர்த்தி ஒரு பொம்பள பொறுக்கி.... அங்க என்ன பாடமா நடத்துறான்...? ஒரே பாட்டும் கூத்தும்தான். அவனுக்கிட்டே இதுகளுக்கு என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு...''

பொன்னுத்தாய்க்குக் கண்களில் மளுக்கென்று நீர் எட்டிப் பார்த்தது. ""நேத்து பேஞ்ச மழயிலே மொளச்ச காளான்.... எப்படியெல்லாம் எடுத்துக்கட்டி பேசுறான்...? நான் மாலையும் கழுத்துமா இந்த வீட்டு வாசப்படி மிதிச்ச மக்கா நாளே "அத்தாச்சி.... ஆய கழுவி விடு...'ன்னு வந்து நின்ன வாண்டு.... இன்னிக்கி வளந்துட்டானாம்.... என்ன வேணாலும் பேசுவானாம்... அவுக ஆயி அப்பன் அதக்கேட்டு பூரிச்சுப் போவாகளாம்.... நான் கேனமாரி கேட்டுக்கிட்டு நிக்கணுமாம்... இருக்கறவுக இங்க இருந்தா இப்படியெல்லாம் நடக்குமா?''

அவள் எண்ண ஓட்டம் புரிந்ததுபோல் மாமனாரின் குரல் வந்தது. ""அவன் என்ன சொல்லீட்டான்னு இப்ப நீலீக்கண்ணீர் வடிக்கிறே? அவன் சொன்னாலும் சொல்லாட்டியும் நாஞ்சொல்றேன்.... இனிமேட்டுக்கு நீ அங்க போகக்கூடாது.... மீறிப் போகணுமின்னா நடையக் கட்டிக்க.... நாங்களும் சொல்ற எடத்திலே சொல்லிக்கிறோம்....''

பிறவிக் குருடனுக்கு ஒருநாள் பார்வை வந்து மறுநாளே பறிபோனது போல் துடித்துப் போனாள்.

"இங்கேருந்து கூப்புடு தூரத்திலே இருக்கற எடத்துக்கு படிக்கப் போனது இவ்வளவு பெரிய குத்தமா...?'

இரண்டு மாதங்களுக்கு முன்னால் மருதாயி மதினி களையெடுக்கும் இடத்தில்தான் அதைச் சொன்னாள்.

"ஊரே கொள்ளுன்னு கிடக்குடி... பொம்பளையெல்லாம் கூடிக் கூடிப் பேசிக்காளுக... போயி ரெண்டு நாளைக்கி ஒக்காந்தா போதுமாம்.... அம்புட்டு படிப்பையும் படிச்சிரலாமாம்.... ஒரு மாத்தையிலே கடிதாசி கிடிதாசியெல்லாம் எழுதலாமாம்....''

பொன்னுத்தாய்க்கு எழுத்து சுலபமாக வசப்பட்டது. சொல்ýக்கொடுக்க வந்த மூர்த்தியே அவளின் அறிவுப்பசி பார்த்து அசந்து போனான்.

இரண்டு மூன்று எழுத்துகளை ஒன்று சேர்க்கும்போது அது ஒரு உருவம் பெற்றுவருவது புதுமையாகவும், விளையாட்டாகவும் இருந்தது. மளிகை மடித்து வந்த காகிதங்களோடு அவள் மல்லுக்கு நின்றாள். சுவரொட்டிகளெல்லாம் அவளோடு சொந்தம் கொண்டாடியது. மனசின் மர்மப் பிரதேசங்களில் எல்லாம் விளக்கெரிந்தது. சதா குத்தம் சொன்ன வீடுகூட அவளுக்கு இப்பொழுது சொர்க்கபுரியாகிவிட்டது. சுவரில் கோடு போட்டு வைத்திருந்த பால்கணக்கை நோட்டில் எழுத முயன்றாள்... வீட்டின் சுவரிலெல்லாம் பொன்னுத்தாய்..... முத்துச்சாமி... மயிலி... என்று கரிக்கட்டை எழுத்துகளால் கோணல் மாணலாய் எழுதப்பட்டிருந்தது. சதா உர்ரென்று ஒரு மாமனார்.... எதைச் சொன்னாலும் குத்தம் சொல்லியே பழக்கப்பட்ட கொழுந்தன்... இந்த வயசிலும் மாமனாரைப் பார்த்து பயப்படும் மாமியார்.... எதையாவது "லவட்டிக்' கொண்டு போவதற்காகவே வரும் கட்டிக்கொடுத்த நாத்தனார்....

"மூணாப்பு' படிக்கும் மகள் மயிலி இருந்தாளோ அவள் பிழைத்தாளோ? எல்லோருடைய குற்றங்குறைகளும் பொன்னுத்தாய்க்கு மறந்தே போனது.... பின்னே என்ன.... முன்னே மாதிரி வீட்டு வேலையப் போட்டுப் போட்டு பத்துப் பதினோரு மணி வரைக்கும் பாக்க முடியுமா? எட்டு மணிக்கு வகுப்பு... அதற்குள் எல்லா வேலையையும் முடிக்க வேணாமா?

பொன்னுத்தாய் ஓடி ஓடி வேலை செய்தாள். ஆறு மணிக்கெல்லாம் மாலைச் சமையல் முடிந்துவிடும். ஏழு மணிக்குள் கோழி கவுத்து மாடு தண்ணி காட்டி வைக்கோல் போட்டு வீடுகூட்டி எட்டு மணிக்கெல்லாம் எல்லோருடைய வயித்தையும் ரொப்பி.... முதல் ஆளாய்ப் போய் உட்கார்ந்து விடுவாள். அவளுக்குப் பின்தான் ஒவ்வொருவராய் "படிக்க' வருவார்கள்.

கணவன் முத்துச்சாமி வந்தால் கிடைக்கும் வீட்டு அன்னியோன்யம் அவளுக்கு அந்த இடத்தில்தான் கிடைத்தது. அவன் வந்துவிட்டுப் போகும் ஓரிருமாதங்கள் பட்டாம்பூச்சியாய்த் திரிவாள்.... அவன் மறுபடி கிளம்பிப் போய்விட்டால் அடுத்து அவன் வரும்வரை அவன் வருகைக்கான தவம்....

அவன் சம்பாத்தியத்தில்தான் நாத்தனாரை நல்லாச் செஞ்சு கட்டிக்கொடுக்க முடிந்தது.... காடுகரைகளை வாங்க முடிந்தது..... மகள் மயிýக்கென்று ஓரிரண்டு நகை சேக்க முடிந்தது...

எங்கோ தூரதேசத்தில் தன் கணவன் உடம்பைக் கடம்பாய் அடித்து வேலை செய்கையில் அவளுக்கு சிரிப்பு எங்கிருந்து வரும்? திருமணமாகி ஆறாம் மாதமே அவன் பிழைப்புக்காக வெளிநாடு போய்விட்டான்.... அங்கு என்ன கலெக்டர் உத்யோகமா? கப்பலில் சரக்கு ஏற்றும் சாதாரண கூலி.... வாயக்கட்டி வயித்தக்கட்டி தன் குடும்பத்திற்காக உழைத்தான்....

நல்லவன்தான்.... கொஞ்சம் சங்கோஷி.... திருமணமான இந்த பத்து வருடங்களில் பொன்னுத்தாயிடம் எத்தனை வார்த்தை பேசியிருப்பான் என்று எண்ணி விடலாம்.... வீட்டுக்கு எழுதும் கடிதங்களிலும் எல்லோருக்கும் போல பொன்னுத்தாய், மயிலி சுகமா? என்று ஒரேயொரு வார்த்தைதான்....

அவளுக்கோ அவனிடம் சொல்ல ஆயிரமாயிரம் சேதிகள் இருந்தது.

எல்லாவற்றையும் மானசீகமாக அவனோடு பேசிக் கொண்டிருப்பாள்... அவனிடம் நேரில் சொல்ல வேண்டுமென்று மனசு பரபரத்துக் கிடந்தது மயிýயை "உண்டாகி' இருந்த பொழுதுதான்.... அப்பொழுதுதான் அவன் முதன்முறையாய் போயிருந்தான். அவன் கிளம்பும்போது மெய்யோ பொய்யோவென்றிருந்தது. வயிற்றில் உதைக்கும் பிஞ்சுக் கால்களின் குளுமை, ஆணா பெண்ணா என்ற செல்லச்சண்டை, பேரு வைப்பதில் போட்டி....

எல்லாவற்றையும் கணவனிடம் கற்பனையிலேயே பகிர்ந்து கொண்டாள். அவன் நேரில் வரும்போது குழந்தைக்கு வயது ரெண்டரை! அது மட்டுமா? தீபாவளிக்கு வரிசை கொண்டு வந்த அண்ணனை மோதிரம் கொண்டுவரவில்லையென்று மானங்கண்ணியாய் பேசி அண்ணாவை கை நனைக்காமலேயே அனுப்பிவிட்ட மாமனாரின் பவிசை புருஷனிடம் சொல்ல எப்படித் துடித்திருப்பாள்?

நல்ல வசதியான வீட்டில் வாக்கப்பட்டு போனாலும் அப்பப்போ வந்து ஏதாவது சாக்குச் சொல்லி ஆயிரம், ரெண்டாயிரமுன்னு புடுங்கற நாத்தனாரைப் பத்தி யாரிடம் சொல்ல? அவளின் எல்லா ஏக்கங்களுக்கும் வடிகாலாய் அந்த அறிவொளி மையம்தான் இருந்தது. தான் கற்றுக்கொண்டதை கணவனிடம் காண்பிக்க வேண்டுமே.... எடுத்தாள் ஒரு காகிதம்.... தப்பும் தவறுமாய் எழுதினாள் ஒரு கடிதம்..... என்ன ஆச்சரியம்!

அந்தக் கடிதமும் அவனுக்குப் போய்ச் சேர்ந்து பதிலும் எழுதிவிட்டானே.... அது மட்டுமல்ல.... அவள் கடிதம் எழுதியதை ரொம்பவும் சிலாகித்து எழுதியிருந்தான்... பொன்னுத்தாய் கூத்தாடாத குறைதான்.... கடிதத்தில் ஆங்காங்கே அவளின் ஆனந்தக்கண்ணீர் பட்டு எழுத்துகளே உருமாறி இருந்தது.

கொழுந்தன் தன் சிம்மாசனமே பறிபோய் விட்டதாய் சோர்ந்து போனான். இதுவரை வந்த கடிதமெல்லாம் அவன் பெயருக்குத்தான் வரும்.... வந்தவுடன் உடனே படிக்கமாட்டான்.... கண்களாலேயே கெஞ்சும் அண்ணியின் பார்வையை அலட்சியப்படுத்தி மனசுக்குள்ளேயே படித்துவிட்டு பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு ஊர்சுத்தப் போய்விடுவான்.... அவனிடமிருந்து கடிதச் செய்தியை கறப்பதற்குள் அவளுக்குப் போதும் போதுமென்றிருக்கும்... அவர்கள் வாழ்க்கைச் சரித்திரத்தில் முதன்முறையாய் அவளுக்கு லெட்டர்!

இப்பொழுதும் அவள் எழுதியிருப்பாள் என்று அவன் நம்பவில்லை. யாரையோ எழுதச் சொல்லி அனுப்பி இருக்கிறாள் என்றுதான் நம்பினான்.... அந்த "யாரோ' அவள் போகும் தெருமுனைக் கூட்டத்தில்தான் இருக்க வேண்டும் என்று நம்பினான்.

அவன் குறுக்கு மூளை உடனடியாக வேலை செய்தது... அங்கே எல்லோருமே பெண்கள்..... அடுப்பு நோண்டிகள்... அரைகுறைகள்.... எல்லோருக்கும் சொல்ýக் கொடுக்கிறேன் பேர்வழி என்று பேர் பண்ணிக் கொண்டிருக்கும் மூர்த்தி மட்டும்தான் கடிதம் எழுதுமளவிற்குப் படிப்பாளி...

அவனுக்கும் ஊரையே தன் தோளில் தாங்குவது போல ஒரு நினைப்பு... அப்பா திடீரென்று செத்ததும் குடும்பத்தைக் காப்பாத்த படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு ஒரு வீடியோ கடைக்கு வேலைக்குப் போனவன்....

பார்க்கும் நேரமெல்லாம் எதையாவது படித்துக் கொண்டே இருப்பான்.... பேச்சில் கலெக்டர் கெட்டான் போங்கள்... அவனைச் சுத்தி அவன் பேச்சையும் கேக்க ஒரு கூட்டம்.... சதா கெக்கே பிக்கே என்று சிரித்துக் கொண்டே இருக்கும்.... அவனோடு பேசும்.... சிரிக்கும்.... சண்டை போடும்.... சிக்குத்தலையும், வியர்வை நாத்தமும், கிழிந்த ஆடைகளுமாய் அந்தப் பரதேசிக் கூட்டத்திற்கு இவர்தான் ஏகபோக மகாராஜா!

அவனிடம் மாட்டிக் கொண்டால் போச்சு..... சிகரெட் பிடிக்காதே.... தண்ணி அடிக்காதே.... ஒரே அட்வைஸ் மழைதான். இவன் அரிச்சந்திரனா இருந்தா எனக்கென்ன? அதுக்காக ஊரு பொம்பளைகளையெல்லாம் சொல்ýக் கொடுக்கிறேன் பேர்வழின்னு தூண்டி விடுறதா?

என்ன செய்யலாம்...? என்ன செய்யலாம்...?

தெருமுக்கில் வரும்போது மறைந்திருந்து ஒரு கல்லை வீசினால் என்ன? ஒருவேளை மாட்டிக் கொண்டால்...? மூர்த்தியின் ஆஜானுபாகுவான உடம்பு ஒரு கணம் மின்னி மறைந்தது. எப்படி எப்படியோ யோசித்தும் ஒரு வழியும் கிடைக்கவில்லை. ஒரே வாரத்தில் அந்த சந்தர்ப்பம் வந்தது. அந்தக் கூட்டத்துக்குள் ஒரு பொண்ணுக்கும் மூர்த்திக்கும் "இது'வாம்... அவனுக்குத் தோதாய் அது வளர்ந்தது... கண், காது ஒட்டவைத்து கோள்மூட்ட ஒரு காரணம் கிடைத்துவிட்டது. "மூர்த்தி ஒரு பொம்பள பொறுக்கி....' எப்படியோ குறுக்குச்சால் ஓட்டி தன் காரியத்தை சாதித்து விட்டான்.

அவளை மையத்திற்குச் செல்லவிடாமல்தான் தடுக்க முடிந்ததேயொழியே, தன் பசிக்கு அவள் வீட்டுக்குள்ளேயே இரை தேடிக் கொண்டது அவனுக்குத் தெரியாது. மகள் மயிலியின் பாடப்புத்தகங்கள் பொன்னுத்தாயின் விரல்களால் புனிதம் பெற்றது.

கணவனுக்கு மற்றொரு கடிதத்தையும் எழுதி அனுப்பிவிட்டாள். இதற்கிடையில் முத்துச்சாமி தெரிந்த இரு நண்பர்கள் மூலமாக இரண்டு கைக்கடிகாரங்களை அனுப்பியிருந்தான். ஒன்று தம்பிக்காம்... இன்னொன்று அவளுக்காம்....

ஆனந்தத்தில் அவள் திக்குமுக்காடிப் போனாள்! "பெரிய பெரிய டீச்சரம்மாக்களும், பெரிய வூட்டுப் பிள்ளைகளும் போடுற அந்த தங்கக்கலர் கெடியாரம் எனக்கே எனக்கா?'

கையில் மேலாக வைத்து அழகு பார்த்தாள். இருண்ட வானில் நிலவைப் போல அவளின் கறுத்த கையில் ஜொலித்தது! குழந்தையைப் போல குதூகýத்தாள். மயிýயை விட்டு பெட்டிக்கடையிலிருந்து கலர் வாங்கிவரச் சொன்னாள். அப்போதுதான் கறந்து வந்திருந்த பாலில் காபியும் போட்டாள்.

வந்திருந்தவர்கள் எதைக் குடிப்பது என்று முழித்தாலும் அவளின் உற்சாகம் அவர்களை புன்னகைக்க வைத்தது. புதிய கடிகாரத்தை இயக்கும் விதம் பற்றி சொல்லிக் கொடுத்ததோடு கையில் கட்டவும் உதவி புரிந்தார்கள். இரவு சாப்பிட்டு விட்டுத்தான் போகவேண்டுமென்று எல்லோரும் வற்புறுத்தியதில் மறுக்கத் தோன்றாமல் இசைந்தார்கள். சாதம் வைக்கும்போதும் குழம்பு ஊற்றும் போதும்கூட கெடிகாரத்தை அவள் கழற்றவேயில்லை.

சதா அவள் உதடுகளில் சிரிப்பு தவழ்ந்து கொண்டே இருந்தது. தலையில் இடித்துக் கொண்டதற்கு கூட சிரித்தாள். கொழுந்தன் குரோதம் வழிய முறைத்தான். ஒரு வழியாக இருவரும் கிளம்பினார்கள். மாமனாருக்கும் மாமியாருக்கும் அவர்களைவிடவே மனசில்லை. அவளுக்கும்தான். வாசல்படியில் நின்று அவள் பிரியாவிடை கொடுத்தாள். அவர்கள் நாலெட்டு நடக்கும்போது சட்டையை மாட்டிக்கொண்டே போன கொழுந்தன் சொன்னான்.

"எட்டு மணிக்குத்தான் பஸ்.... நிதானமா நடக்கலாம்...''

""இப்ப மணி என்ன?'' ஒருவர் கேட்க இன்னொருவர் மணிக்கட்டைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார்.

இருட்டில் தெரியவில்லை போலும்....

கொழுந்தன்காரனின் குரல் வாசல்படியில் நிற்கும் பொன்னுத்தாயை நோக்கி நக்கலும் குத்தலுமாய் வந்தது....

""அத்தாச்சி மணி என்ன?''

பொன்னுத்தாயி நடுங்கிப் போனாள்.

"நானா? என்னையா மணி கேட்கிறான்...?'

பரிகாசமாய் சொல்வது போல் அவன் குரல் கலகலவென்று வந்தது.

""இது என்ன ஜிமிக்கி கொலுசுன்னு நினைப்பா போட்டு அழகு பாக்க.... கெடிகாரமத்தாச்சி.... போட்டா மணி பாக்கத் தெரியணும்....''

பொன்னுத்தாயி அவனை உறுத்து விழித்தாள். அவன் விழிகளில் தெரிந்த நக்கல்.... நையாண்டி....

இம்மாதிரி சந்தர்ப்பங்களில் சட்டென்று குளம் கட்டும் கண்ணீர் ஏனோ வரவில்லை. இறுகிய உதடுகளில் வன்மம். மணிக்கூண்டு கடிகாரம் அவளுள் படமாய் விரிந்தது. மணிக்கூண்டின் ஒவ்வொரு எண்ணும் அவளுடைய கைக்குள் அடைக்கலமாகி கோடுகளாய் விரிந்தது.

மந்திரம் போல் அவள் வாய் அட்சர சுத்தமாய் சொன்னது.

"ஏழு மணி.... முப்பது நிமிடம்.... அதான் ஏழரை மணி....''

சொல்லிவிட்டு சட்டென்று கொழுந்தனைப் பார்த்தாள். அவளின் கம்பீரத் தலைநிமிர்வில் அவன் தலை கவிழ்ந்தான்.

ஐந்தே வினாடிகளில் இழந்த சிரிப்பை அவள் உதடுகள் மீண்டும் பெற்றது.

ஆர். நீலா
Quelle - பெண்ணே நீ

Friday, July 22, 2005

உதிராத சருகுகள்

- ஆதிலட்சுமி சிவகுமார் -

வானத்தில் கருமுகில்கள் கூட்டம் கூட்டமாய் நகர்ந்து கொண்டிருந்தன. மழையும் மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. மூன்றடி ஒழுங்கைக்குள் ஒற்றையடிப்பாதை தவிர இருமருங்கிலும் புற்கள் மூடி இருந்தன. புஸ்பராசா வீட்டு மதில்கரை ஓரங்கள் மட்டும் புற்கள் செதுக்கப்பட்டு அழகாகத் தெரிந்தது.

மழை பெரிதாகப் பெய்வதற்குள் வீட்டுக்குத் திரும்பிவிடவேண்டும் என்ற நினைப்போடு முத்துராசா சயிக்கிளை இறுக்கி மிதித்தான். பிரதான சாலையில் ஏறியதும்.... வாகனப் போக்குவரத்துகள் அதிகமாயின பாடசாலைப் பிள்ளைகளும் கூட்டம் கூட்டமாய் போய்க் கொண்டிருந்தார்கள்.

"நல்ல மரக்கறியாப்பார்த்து வேண்டிக்கொண்டு வாங்கேப்பா.... இவ்வளவு நாளும் இருந்து போட்டு .... தம்பியும் விரதநாளில வந்திருக்கிறான்....."

மனைவி கூறிவிட்ட வார்த்தைகள் திரும்ப ஞாபகத்துக்கு வந்தன. சயிக்கிளை பாதுகாப்பு கொட்டிலுக்குள் நிறுத்திவிட்டு மரக்கறி வாங்கும் பையை சயிக்கிளில் இருந்து கழற்றிக் கொண்டு திரும்பினான் முத்துராசா ‘முத்து’.....

திரும்பிப் பார்த்தான். நாகராசா நின்றான். "விடிய வெள்ளண எங்ககையடா இந்தப்பக்கம்?.....’"

"தம்பி லீவிலை வந்துநிக்கிறானடா.... அதுதான் நல்ல மரக்கறியா ஏதும் பாப்பமென்டு...’"

"என்னடா.... லீவிலை வந்துநிக்கிறவனுக்கு மரக்கறியோ சாப்பாடு..."

"மனிசியும் மூத்தவளும் கவுரிவிரதமடா.... அதுகளின்ர விரதத்தை நாங்கள் ஏன் குழப்புவான்?..."

"அதுகும் சரிதான்.... அதோடை எங்கடை வைரநாதனெல்லே இத்தாலியிலை இருந்து வந்திருக்கிறான்.... உனக்குத்தெரியுமா....’"

‘தெரியாது..... எப்பவந்தவன்?.....
‘மூண்டாந்திகதி வந்ததெண்டு சொன்னவன்.... ரெண்டு கிழமை நிற்பான்போல.... உன்னையும் எப்படியிருக்கிற தெண்டு விசாரிச்சவன்?...’ நெஞ்சுக்குள் ஏதோபாரம் ஏறினமாதிரி இருந்தது.

‘வேற என்ன?.... வரட்டே...’
நாகராசா சயிக்கிள் பாதுகாப்பிடத்துக்குப் போனான். சந்தைக்குள் மரக்கறிகளை இப்போதுதான் வெளியே எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள். வழமையாக அந்த அம்மமவிடம் தான் முத்துராசா மரக்கறி வாங்குவான். அவவின் கணவர் யாழ்ப்பாணத்தில் விமானக்குண்டு வீச்சில் இறந்துவிட்டார். இடம் பெயர்ந்து பல துன்பங்களுக்கு மத்தியில் சுந்தையில் மரக்கறி வியாபாரம் செய்யும் அவளிடம் தான் முத்துராசா வாழ்க்கையாக வாங்குவான். சில வேளைகளில் கையில் காசு தட்டுப்பாடாய் இருக்கிற பொழுதுகளிலும் கடனாக மரக்கிறகள் வாங்குவான். முத்துராசாவின் மனைவி மாமிசம் உண்பதில்லை. பிள்ளைகளுக்கும் அவனுக்கும் மட்டும் சமைத்துத் தருவாள்.

கலியாணம் செய்த புதிதில் இறைச்சி அது இது என்று சாப்பிடா விட்டாலும் சிறிய மீன், முட்டை என்று சாப்பிட்டுவந்தான். மூத்தவன் வீட்டைவிட்டுப் போனபிறகு அததையும் அவள் சாப்பிடுவதில்லை. ‘நீ சாப்பிடாட்டி பிறகென்னத்துக்கு எனக்கு?...’
அவனும் மறுத்துப்பார்த்தான்.

‘நீங்கள் உடம்பை முறிச்சு வேலை செய்யிறநீங்கள்.... இதையும் விட்டா பிறகென்ன?.....

அதற்குப்பிறகு. அவன் எதுவும் சொல்வதில்லை. கொடுப்பதை வாங்கிச்சாப்பிட்டுவிட்டுப் போய்விடுவான்...... ஆனாலும் சாப்பிடுகிறவேளைகளில் உள்ளே ஏதோ உணர்வு மாறும்.

பிரதானவீதியில் ஏறமுயன்ற பாரஊர்தி ஒன்று எழுப்பிய அவலஒலியில்.... நடுங்கிப்போய் முத்துராசாவின் சிந்தனைகள் அறுபட்டன. பாரஊர்தி அவனை விலத்திக்கொண்டு விரைந்தது.

இப்போது அவன் மனதை இத்தாலியிலிருந்து வந்திருக்கும் வைரவநாதனின் நினைவுகள் ஆக்கிரமித்தன.

வைரநாதனும் முத்துராசாவும், நாகராசாவும் ஒன்றாகப் படித்தவர்கள். முத்துராசாவுக்கும், நாகராசாவுக்கும் குடும்பத்தில் வறுமை கோலேசியது.

நாகராசா ஒன்பதாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டு வயலுக்குள் இறங்கிவிட்டான். முத்துராசா இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டு பல்லைக்கடித்து க.பெ.த உயர்தரம் வரை படிப்பை இழுத்துப் பார்த்தான். அதற்குமேல் முடியாதென்று தோன்றியது....குமாரசுவாமி என்கிற பிரபல கட்டிட ஒப்பந்தகாரருடன் நாட்கூலியில் சோந்து கொண்டான்.

வைரவநாதன் க.பொ.த உயர்தரச் சோதினையை மூன்றுதரமும் எடுத்து விட்டு... இரண்டு வருடங்கள் சவுதியில் போய் நின்றான். அங்கிருந்து வந்தபிறகுதான் திருமணம் செய்தான். திருமணம் செய்த இடமும் பெரும் வசதியான இடமென்று சொல்லிவிட முடியாது. இவனுடைய கையை அவர்களும் எதிர்பார்த்தார்கள்.

தெரிந்தவார்கள், நண்பர்கள், பழக்கமானவர்கள் என்று எல்லோரிடமும் கடன்பட்டடான். பொய்கள் தாராளமாய்பிறந்தன. வாங்கிய கடனின் வட்டி சுமையானது.

எப்படியோ வைரவநாதன் கொழும்புக்குபோய் யாரையோ பிடித்து இத்தாலிக்குப் போய்விட்டான். அவனுடைய நான்கு பிள்ளைகளும்.... மனைவியும் இரண்டுவருடங்கள் சொல்லொணாத் துன்பப்பட்டார்கள். பிறகு வைரநாதன் காசனுப்பித் தொடங்கி விட்டான். மளமளவென்று கடன்கள். அழிந்தன. வீடு உயர்ந்தது. வீட்டைச்சுற்றி மதில் எழுந்தது.

மூத்த பெண் பெரியவளானள். ஊர் முழுவதையும் அழைத்து விருந்து போட்டு பெரிதாக சாமத்திய வீடு செய்தார்கள். முத்துராசாவும் வேலையால் வந்து குளித்து – மகளையும் கூட்டிக் கொண்டு போய் சாப்பிட்டுவிட்டு வந்தான். மூன்று நாட்களாக போன எல்லோரையும் வீடியோப்படம் பிடித்தார்களாம்.

இப்போது பதின்நான்கு வருடங்கள் கழித்து வைரவநாதன் ஊருக்கு வந்திருக்கிறான் பெரும் தனவந்தனாக.

ஊரில் பிள்ளையார்கோயில் கோபுரத்தை இடித்து புதிதாக உயர்த்திக் கட்டுகிறார்கள். திருப்பணிகள் இன்னமும் முடியவில்லை. இந்த கட்டிட நிதிக்கு வைரவநாதன் இரண்டு லட்சம் கொடுத்திருக்கிறானாம்.

பதின்நான்கு வருடங்களுக்குப் பிறகு ஊருக்கு வந்திருக்கிறவன் அதுவும் ஊரிலே பெரிய பணக்காரன் தன்னை விசாரித்ததாக நாகராசா சொன்ன நம்ப முடியாமலுமிருந்தது முத்துராசாவுக்கு முத்துராசாவின் மனைவி கோயிலில் வைரவநாதனின் மனைவியைக் காண்பதாக கூறுவதுண்டு. ஆனால் கதைபேச்சு என்று ஒன்றுமில்லை சிலவேளைகளில் முத்துராசாவும் வழிதெருவில் அவளைக் கண்டிருக்கிறான். அவள் சிரித்ததில்லை. ஒருவேளை புருசன் ஊரில் இல்லாதபோது அவனுடைய நண்பர்களைப் பார்த்து ஏன் சிரிக்க வேண்டும் முத்துராவின் மனதில் வைரவநாதனைப் பார்க்கவேண்டுமென்ற உந்துதல் இருந்தாலும்....அன்றாடவேலை நெருக்கடிகள் அதற்கு இடம்தரவில்லை. மூத்தவளுக்கு திருமணம் பேசி வந்தது. ஒன்று விட்ட சகோதரியின் மகன் தான். ஆனால் அவர்கள் எதிர்பார்கும் ‘ஏதோ முடிஞ்சளவு கொஞ்சமென்றாலும்’ கூட கொடுக்க வசதியில்லாமல் இருந்தது.

அடுத்தவனுக்கு வவுனியா கல்வியயற் கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்தது. அவனுடைய படிப்புச் செலவுக்கு என்னசெய்யலாம் என்று மனம் துடித்துக்கொண்டிருந்தது.

கடைக்குட்டி சோபிதா ஒன்பதாமாண்டு படித்துக்கொண்டிருந்தாள். அவளையும் எப்படியாவது படிப்பித்துவிடவேண்டுமென்ற ஆசை இருந்தது.

சனிக்கிழமை தலைமுடி அளவுக்கு மிஞ்சி வளர்ந்துவிட்டதாகவும்.....அதை எப்படியாவது ஒழுங்காக்குமாறும் முத்துராசாவை மனைவி சிலநாட்களாய் நச்சரித்துக் கொண்டிருந்தாள். இன்றைக்கு தலைமுடியை வெட்டியபிறகே என்னவேலையென்றாலும் செய்வது என முத்துராசா முடிவெடுத்து... புறப்பட்டான். கடையில் அவ்வளவாக ஆட்களில்லை.

யாரோ ஒருவயதானவருக்கு முடிவெட்டி முடிந்திருந்தது. அவர் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

‘அண்ணை வாங்கோ...’
இப்போது முத்துராசாவின் முடிவெட்டப்பட்டுக் கொண்டிருந்தது. முடி வெட்டிக்கொண்டிருந்த போது தான் வடிவாக தன் முகத்தை கண்ணாடியில் பார்தான் முத்துராசா.... சொக்கைகள் இரண்டும் உள்ளிறங்கி தலையிலும் நரை அதிகரித்திருந்தது. கண்களும் சாடையாக உள்ளே போனமாதிரி......

சம்பந்தமில்லாமல் மனைவியின் நினைப்பும்வந்தது. மனைவி பேரழகி என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் மிகுந்த சகிப்புத்தன்மை உள்ளவள் என்ற ரீதியில் அவள் உயர்ந்வள் என நினைத்துக்கொண்டான்.

முத்துராசா காசைக் கொடுத்துவிட்டு வெளியேவந்தான். சயிக்கிளை எடுத்து ஏறமுன்றபோது அருகே யாரோ நடந்து வருவது தெரிந்து. திரும்பிப்பார்த்தான். சட்டென்று அடையாளம் தெரிந்துது. ‘வைரவநாதன்...’

தன்னையும் அறியாமல் முத்துராசாவின் குரல் உயர்ந்தது.
‘ஓ... நீ... முத்தெல்லே....’

இரண்டுகைகளையும் பற்றி இழத்து..... கட்டி அணைத்தான்.

‘எப்பிடி இருக்கிறாய்?....’

‘எனக்கென்னடா... நான் நல்லாத்தான் இருக்கிறன்.....’
‘வீட்டைவாவன்...’

‘இப்பிடிச்சும்மா வாரக்கூடாது.... பிறகொருநாளைக்குவாறன்.... உன்னைக் கண்டவுடனை நிறையக் கதைக்கவேணும் போல கிடக்கு....’ கண்களிற் சிவப்புத் தெரிந்தது.

‘எங்கேயோ குடித்துவிட்டு வருகிறானோ...’ ஊடுருவிப்பார்த்தான். பார்வையை அவன் புரிந்துகொண்டானோ என்னவோ.

‘என்னடாப்பா அப்பிடிபாக்கிறாய்...கோயிலடியால போவம்.....மடத்திலை இருந்து கொஞ்சநேரம் கதைச்சிட்டு போவம்...’

இருவரும் மௌனமாக நடந்து கொண்டிருந்தார்கள். ‘இப்ப என்ன வேலை செய்கிறாய்?....’

‘எங்கடை ஆக்களோடைதான்... இப்ப சண்டையில்லைத்தானே... படம் நடிக்கிறன்...நாடகம் நடிக்கிறன்....பாடுகிறன்...ஏதோ முடிஞ்ச எல்லாம் செய்யிறன்......’

உதடுகள் சொல்லிக்கொண்டாலும்.... மனம் சுவர்கரைந்த வீட்டையும்..... கிழிந்தசட்டையைத் தைத்து அணிந்திருக்கும் மனைவியையும் சடாரென்று ஒருகணம் நினைத்தது.

‘நீ குடுத்து வைச்சனியெடாப்பா.....’

‘எங்கடை நாடகங்கள்...... கூத்துக்கள் எல்லாம் பாக்கிறனியோ அங்க...... வீடியோவில வெளிநாடுகளுக்கெல்லாம் வாறது.......’

அவன் தலையைக் குனிந்து கொண்டு தலையை ஆட்டினான். அவனிடமிருந்து பெருமூச்சொன்று விடுதலை பெற்றது.

மடத்தடி வெறிச்சோடிக்கிடந்தது. பெரிய வேப்பமரத்திலிருந்து நியையப் பச்சை இலைகள் உதிர்ந்து விழுந்து கிடந்தன.

வைரவநாதனும் முத்துராசாவும் முதற்படியிலேயே அமர்ந்துகொண்டார்கள். குரங்குகள் சில நான்கு கால்களில் நடந்து போய்க்கொண்டிருந்தன. ‘நான் உண்மையைச் சொல்லவிரும்புறன்....’


‘இவன் என்னத்தைச் சொல்ல விரும்புகிறான்...ம்...’ மௌமனயாயிச் சில கணங்கள் கழிந்தன.

‘அங்கை எங்கட வாழ்க்கை எப்பிடியிருக்குமெண்டு நீ அறிய விரும்புவாயெண்டு நினைக்கிறன்....’

‘.........’

‘வேலை.... வேலை...வேலை..... இதத்தவிர சத்தியமா எனக்கொண்டும் தெரியாது.....’

காற்று குளிர்iiயாய் வீசியது. மரத்திலிருந்து இலைகள் உதிர்ந்து நான்கு திசைகளும் பரவின. மழை எந்தக்கணத்திலும் கொட்டலாம், எங்கோ பார்த்துக் கொண்டிருந்த முத்துராசா வைரவநாதனைப் பார்த்தானர். மெல்லிய மஞ்சள் நிறம்..... கருகருவென்ற முடியும் மீசையும் . கைவிரல்கள் இரண்டில் பெட்டி மோதிரங்கள்...... தொப்பைவிழுந்த உடம்பு... ‘உண்மையா முத்து...விடிய எழும்பினா ரயிலைப் பிடிச்சு வேலைக்கு ஓடோணும்..... வேலையில இறங்கினா எதுவும் நினைக்க வராது.... சமைச்சு சாப்பிட்டுப் போட்டு...... மிச்சத்தை பிறிச்சுக்குள்ள தள்ளிப்போட்டு.... படுப்பன். பிறகு விடிய....’ நிறுத்தி விட்டு முத்துராசாவைப்பார்த்தான்.

‘..........’

‘இப்பிடி ஓடிஓடித் தான்ராப்பா வீட்டுக்கு காசு அனுப்புறம்....’
அவனின் கண்களில் நீர் நிறைந்தது. முத்துராசா அவனின் முதுகில் தட்டினான். ‘நீங்கள் எங்களை ஏற்றுக்கொள்ளுவியளோ எண்ட குற்ற உணர்விலை..... குனிஞ்சு கொண்டுதான் வந்தனான்......ஆனா... எங்களில நீங்கள் காட்டுற கரிசனை...’
தலையை ஆட்டி பற்களை உதடுகளால் கடித்தான். அவன் தொடந்து வார்த்தைகளற்றுச் சிரமப்படுவது புரிந்தது. அது இவனுக்குள் ஒருவித உற்சாகத்தை தந்த மாதிரி இருந்தது.
‘எழும்பு மச்சான்...... வீட்டைபோவம்.....’
இருவரும் எழுந்தார்கள். மழைத்தூறல் விழ ஆரம்பித்தது. அதைப் பொருட்படுத்தாமல் இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.

nantri-erimalai-april-2005

Friday, June 03, 2005

சரியான தீர்ப்பு...

கொஞ்சம் அதிகப்படியாக...
- ராகவ் -

‘‘ப்ளிஸ் ஜெயந்தி, கோபப்படாம நான் சொல்றத கேளு’’ சொன்ன சுரேஷ்ஸின் வார்த்தையை மதிக்காமல் பேசினாள் ஜெயந்தி. முகத்தில் நிறைய கோபம் வைத்திருந்தாள்.

‘‘கேட்கமாட்டேன், இந்த ஒரே ஒரு தடவை என் பேச்சுக்கு மதிப்பு கொடுங்க சுரேஷ். இப்ப என்னோட எங்க வீட்டுக்கு நீங்க வரணும் வர்றிங்க.’’

‘‘என்ன ஜெயந்தி நீ. நான் சொல்றது புரிஞ்சுக்காம சின்ன குழந்தையாட்டம் அடம்பிடிக்கிற. எனக்கு எத்தனையோ வேலை இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு உன்னோட வரணும்கிறியே? முடியுமா? ப்ளிஸ் ஜெயந்தி, நீ இப்ப வீட்டுக்கு போ. நாளைக்கு நிச்சயமா, தவறாம உங்க அப்பாவ வந்து சந்திக்கிறேன்’’.

‘‘சுரேஷ் உங்களுக்கு எத்தனையோ அவசரமான வேலை இருக்கலாம். ஆனா அதவிட அவசரமானது, முக்கியமானது என் விஷயம் ஏன்னா...? நம்ம காதல் விஷயமும், நான் கர்ப்பமா இருக்கிற விஷயமும் எங்க அப்பாவுக்கு தெரிஞ்சு போயிட்டு அரிவாள் எடுத்து வெட்ட வந்திட்டாரு. சுரேஷ் நல்லவர், ஏமாத்த மாட்டாருன்னு சொல்லி சமாதானப்படுத்தி, உங்களை அழைச்சிட்டு வர்றதா சொல்லி வந்திருக்கேன். நீங்க இல்லாம நான் தனியா வீட்டுக்கு போனா, அப்புறம் என்னை உயிரோட பார்க்க முடியாது. நீங்களும் நாளைக்கு வரமாட்டிங்க முரண்டு பிடிக்காம இப்பவே வாங்க’’ பிடிவாதமாக பேசினால் ஜெயந்தி.

‘‘உங்க அப்பாவ பார்த்து நான் என்ன சொல்லணுங்-கிற?’’ இவ்வளவு சொல்லியும், கேட்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாளே என்ற எரிச்சலில் கேட்டாள்.

‘‘என்ன சுரேஷ், இவ்வளவு விளக்கமா என்னோட சூழ்நிலையை எடுத்து சொன்ன பிறகும் இப்படி ஒரு கேள்வி கேட்கிறிங்க. எங்க அப்பாவ பார்த்து, அவர் சமாதானம் அடையற மாதிரி சில வார்த்தைகள் ஜெயந்தியோட காதலன் நான்தான். ஏதோ ஒரு வேகத்தில தப்பு பண்ணிட்டோம். பலனா வளர்ற குழந்-தைக்கு நான்தான் தகப்பன். அப்படின்னு அவர் திருப்தி அடையற மாதிரி சில வார்த்தைகள் நீங்க சொல்லணும். அவ்வளவுதான்’’

‘‘அதாவது பொய் சொல்லணுங்கிற?’’

‘‘சுரேஷ்...’’ அதிர்ந்தாள்.

‘‘ஜெயந்தி, நான் உன்னோடு பழகினது, உன் சிவப்பு உடம்புக்காகதான். மத்தபடி உன்னை கல்யாணம் பண்ணிக்கணுங்கிற எண்ணமெல்லாம் எனக்கு கிடை-யாது. வேணுன்னா சொல்லு, நான் சொல்ல வேண்டிய வசனத்தை வேற எவனையாவது சொல்ல சொல்றேன். என்ன?’’ அவனின் அலட்சியமான பேச்சு ஜெயந்திக்கு இன்னும் அதிர்ச்சியை தர ஏற்பட்ட கோபத்தை, ஏமாற்றத்தை வெளிப்படுத்தாமல் பொறுமையாக பேசினாள்.

‘‘நீங்க அப்படி பழகி இருக்கலாம் சுரேஷ். ஆனா நான் அப்படி பழகல உங்க மேல உயிரையே வச்சிருக்-கேன். சகலமும் நீங்கதான்னு உங்கள பத்தி ரொம்ப உயர்வா நினைச்சுகிட்டு இருக்கேன். அதனாலதான் இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில மாட்டிகிட்டு தவிச்சுகிட்டு இருக்கேன். தயவு செய்து உங்க மனச மாத்திகிட்டு, என்னோட வந்து எங்க மானத்த காப்பத்துங்க. நீங்க வரலையின்னா...? நான், அப்பா, அம்மா மூணு பேரும் தற்கொலை பண்ணிக்கிறத தவிர வேற வழியில்லை’’ கெஞ்சியபடியே பேசினாள் ஜெயந்தி.

‘‘ஜெயந்தி நீ ரொம்ப எதிர்பார்க்கிற அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்ல. நான் பழகின பெண்களிலேயே அதிக நாள் பழகினது உன்னோடதான். இதில விசே-ஷம் என்ன தெரியுமா..? இன்னும் கூட நீ அலுக்கல. அந்த அளவுக்கு நீ என்னை பாதிச்சிருக்க. அதனால-தான் என்னோட பொன்னான நேரம் வீணா போறத பத்தி கூட கவலைப்படாம உன்னோட அத்தனை கேள்விக்கும் பொறுமையா பதில் சொன்னேன். எனக்கு இந்த கல்யாணம்ன்னாலே அலர்ஜி. காரணம் அது ஒரு ஆணோட சுதந்திரத்தை கட்டுபடுத்தற விஷயம். அதனால கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்-தாத நடந்தது நடந்திட்டு. அதுக்காக தற்கொலை முடிவுக்கு போறது முட்டாள்தனம். சின்னதா ஒரு அபார்ஷன் செய்துக்க. எல்லாம் சரியாயிடும், இதுக்கு போயி...’’ பேசிக் கொண்டே வாசலுக்கு பார்வையை ஓடவிட்டவன் அதிர்ந்தான். வாசலில் வக்கீல் ஒருவரு-டன் சுரேஷ்ஸின் அப்பா நின்றிருந்தார். பார்வையில் தீ இருந்தாலும் கிண்டலுடன் பேச ஆரம்பித்தார்.

‘‘உன்னை என்னோட மகன்னு சொல்லிக்கிறதுக்கு நான் ரொம்பவும் பெருமைபடுறேன். எப்படிடா இது மாதிரி திறமையான காரியங்கள உன்னால செய்ய முடியுது?’’

‘‘அப்பா இவ சொல்றத நம்பாதீங்க. எல்லாம் பொய், என்கிட்ட இருந்து பணம் பறிக்கிறதுக்காக இப்படி ஒரு பொய் சொல்றா’’ யாருக்கு தெரியக் கூடாது என்று நினைத்தோமோ, அவருக்கு தெரிந்து விட்டதே என்ற படபடப்பில் பேச ஆரம்பித்த சுரேஷ்ஷை சட்டென்று அடக்கிவிட்டு பேசினார்.

‘‘நீ சொல்றத நம்பி இருப்போம். நீங்க பேசினத கேட்காம இருந்திருந்தா... நாங்க இங்க வந்தது. நீ செய்த தப்ப நியாயப்படுத்த சொல்லப் போற பொய்ய கேட்கிறதுக்கு இல்ல. நியாயமான தீர்ப்பு வழங்குகிறதுக்குதான். அதனால, நீ இப்ப எங்களோட ரிஜிஸ்டர் ஆபிஸ்க்கு வந்து, உன்னால் பாதிக்கப்பட்ட இவள, உன் மனைவியா ஆக்கிக்கிற... என்ன...?’’

‘‘என்னப்பா நீங்க. நம்மளோட வசதியை யோசிக்காம பேசுறீங்க. கல்யாணத்தையே வெறுக்கிறவன் நான். என்னைப் போய் கல்யாணம் செய்துக்க சொல்லி... அதுவும் இவள வேணாம்ப்பா சத்தியமா என்னாள இவள கல்யாணம் செய்துக்க முடியாது. எதாவது அளெண்ட் கொடுத்து செட்டில் பண்ணிடுங்க’’ மிகவும் அலட்சியமாக பேசினான்.

‘‘செட்டில் செய்யணுமா...? ரொம்ப சாதரணமா சொல்ற... அது சரி... எவ்வளவு கொடுக்கப் போற... அத எப்படி கொடுக்கப் போற...?’’

‘‘என்னப்பா இப்படி கேட்கறிங்க. எவ்வளவு தொகைங்கிறது அவளோட விருப்பத்த பொறுத்தது. அந்த தொகையை நீங்கதான் கொடுக்கணும்’’

அவன் அப்படி சொல்லி முடித்ததும், அட்டகாச-மான சிரிப்பு ஒன்றை வெளிப்படுத்திவிட்டு பேச ஆரம்பித்தார் சுரேஷ்ஷின் அப்பா.

‘‘எந்த உரிமையில நான் பணம் கொடுக்கணும்னு சொல்றியோ... அது அப்படியே நிலைக்கணும்னா... நான் சொல்றபடி கேட்கணும்...’’

‘‘புரியலைப்பா நீங்க சொல்றது.’’

‘‘அப்படியா... சரி தெளிவாவே சொல்லிடுறேன். நீ இவள மனைவியா ஒத்துக்கலையின்னா... என்னோட சொத்துக்கு நீ வாரிசா இருக்க முடியாது. அதுக்காகதான் வக்கீலையும் கையோட அழைச்சிட்டு வந்திருக்கேன் யோசிச்சு சொல்லு...’’

சுரேஷ் அதிர்ந்தான். இப்படியரு எதிர்பார்க்காத திருப்பம் ஏற்படுமென்று எதிர்பார்க்காததால்.

யோசித்தான் அப்பா சொல்வதை செய்யக்கூடியவர். சொத்தை இழந்து பராரியாக திரிவதைவிட, இணங்குவது போல் நடிப்பதுதான் தற்சமயத்திற்கு சிறந்தது. ஜெயந்தி ஒரு தூசு. அவளை தவிர்ப்பது சுலபம். மனதுக்குள் கணக்கு போட்டுவிட்டு... மெதுவாக சொன்னான்.

‘‘சரிப்பா... உங்க விருப்பத்துக்காக சம்மதிச்சு, இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிறேன்.’’

‘‘என்னம்மா... உனக்கு சம்மதம்தானே...?’’ மகள் ஒத்துக் கொண்ட சந்தோஷத்தில் ஜெயந்தியிடம் கேட்டார்.

‘‘சார் எனக்காக, நான் சொன்னத நம்பி இந்த அளவுக்கு முயற்சி எடுத்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி. ஆனா இவர் கல்யாணத்துக்கு சம்மதிச்சதுக்கு, என்னால சந்தோசப் பட முடியல சார். இவர் கல்யாணத்துக்கு சம்மதிச்ச காரணம்... உங்க மேல உள்ள மதிப்போ, என் மீது உள்ள காதலோ கிடையாது. நீங்க சேர்த்து வைச்சிருக்கிற அந்த ஏராளமான சொத்துதான். ஏதோ சொல்லுவாங்கல்ல, பத்து பேர் சேர்ந்து குதிரையை தண்ணி தொட்டிக்கிட்ட கொண்டு போகலாம். ஆனா எத்தனை பேர் சேர்ந்தாலும் அத தண்ணி குடிக்க வைக்க முடியாது. அது மாதிரிதான் இவரு கதையும்.

சொத்துக்காக கல்யாணம் செய்துக்கறவரு... என்னோட அன்பா... காதலா வாழ்க்கையை நடத்த-மாட்டாரு இப்ப எப்படி இருக்கிறாரோ... அப்படி-யேதான் பிளேபாய் மாதிரி இருப்பாரு. எந்தப் பொண்ணை ஏமாத்தலாம்ன்னு எதிர்பார்த்துகிட்டு. அத-னால நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேன். அதுக்காக என்னை நீங்க மன்னிச்சுடுங்க’’ சொல்லிக் கொண்டே தன் பர்ஸை திறந்தாள். சிறிய பாட்டிலை எடுத்தாள்.

மூவரும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சுரேஷ் அலறிக் கொண்டே விழுந்து துடிக்க ஆரம்பித்தாள்.

‘‘என்னாச்சு...’’ பதறினார்கள் இருவரும்.

ஜெயந்தி மிகவும் அமைதியாக பேசினாள்.

‘‘பயப்படாதீங்க. உயிருக்கு ஆபத்தில்ல. இவரு ஆட்டம் போட காரணம் அழகு. அத அசிங்கப்-படுத்திட்டா? அடங்கிகிடப்பாருல்ல. அதான் ஆசிட் ஊத்திட்டேன். இனிமேல் எனக்கு மட்டுமே சொந்தமா இருப்பாரு’’ என்றபடியே அருகில் இருந்த தொலைபேசி மூலம், புகழ் பெற்ற மருத்துவமனையின் மருத்துவரை தொடர்பு கொள்ள ஆரம்பித்தாள்.

- ராகவ் -
Quelle-Yarlmanam

Friday, May 06, 2005

புதிய மனுசி

- ஆதிலட்சுமி சிவகுமார் -

நிலவின் ஒளியில் கூரைத்தகரங்கள் பளபளத்தன. அவள் தன் உள்ளங்கைகளை ஒருதரம் தடவிப் பார்த்தாள். கரகரப்பாய் காய்த்தபடி கைகள். தன் கைகளால் மண்வெட்டியும் பிக்கானும் பிடித்து அவள் உழைத்த உழைப்பின் அறுவடைதான் இந்தக் தகரங்கள் என நினைத்துப் பெருமைப் படுபவளாய்.. அவள் முகம்.. 'இந்தப் பிஞ்சுகள் ரெண்டும்.. மழையிலையும்.. குளிரிலையும் விறைக்கக் குடாது.." குழந்தைகளைத் திரும்பிப் பார்த்தாள். பாயைவிட்டு விலகிப்போய் ஓரமாய் தூங்கிக்கொண்டிருந்தார்கள்... மூத்தவள் ஐஸ்வர்யா அச்சில் வார்த்த மாதிரி தகப்பனையே போன்று அகலிகா கொஞ்சம் கறுப்பு. ஆனால் இவளைப்போல கம்பி கம்பியாய் நீளமான தலைமுடி.

"மூத்தபிள்ளை சரியாய்த் தேப்பனையே மாதிரி... நல்ல நேரம் பொம்பிளைப் பிள்ளையாய்ப் போச்சு... இல்லாட்டி.. தேப்பனை முடிச்சுப்போடும்..."
ஐஸ்வர்யா பிறந்திருந்தபோது உறவினர்கள் சொன்னார்கள். ஆனால் என்ன விதியோ.. அவன் இல்லாமற்தான் போய்விட்டான். மனது கனத்தது.

மற்றைய நாட்களில் என்றால் கூலிவேலைக்குப் போய்விட்டு வரும் அவள் பாயிற் சரிந்தவுடனேயே தூங்கிப்போவாள். இன்றைக்கு அவளால் முடியாமலிருந்தது. ஆறு வருடங்களாய் ஒதுக்கித்தள்ளிவிட்டு வேகமாய் முன்னேறிய துன்பங்கள் எல்லாமாக ஒன்று திரண்டு தன்னைத் துன்புறுத்துவதாக அவள் உணர்ந்தாள். அழக்கூடாது என்கிற வைராக்கியத்தோடு இறுகிப் போயிருந்த அவளின் விழிகள் ஈரலித்தன.
அவள் தான் வைராக்கியமானவள் என்பதைப் பல தடவைகள் உணர்த்தியவள்.. அவள் அவனைக் காதலித்தபோது.. உற்றம் சுற்றம் ஒன்றாகி அவர்களின் உறவை எதிர்த்தபோது - அந்த எதிர்ப்புக்களை எல்லாம் உதறி அவனையே திருமணம் செய்துகொண்டது முதல் வைராக்கியம். அவள் வீட்டில் நான்காவது பெண்பிள்ளை. மூத்தவர்கள் மூவரும் திருமண வாய்ப்பின்றி முதிர்ந்துகொண்டிருந்தார்கள். அவனுடைய வீட்டில் மூன்று பெண்கள். இரண்டு ஆண்களில் இவன் இளையவன். இருவரும் தாமாகவே தம் வாழ்வைத் தீர்மானித்துக் கொண்டார்கள். மூத்தவள் ஐஸ்வர்யா பிறந்து... அகலிகாவும் பிறந்து.... அகலிகா ஆறுமாதக் குழந்தையாயிருந்தபோதுதான் அந்தப் புயல் மையங்கொண்டது.

'சத்ஜெய.." கிளிநொச்சி மீதான பெரும்படையெடுப்பு. ஒரு மையிருட்டுப் படர்ந்திருந்த சாமப்பொழுதில்.. ஊரோடு சேர்ந்து இடம்பெயர்ந்து... ஸ்கந்தபுரத்தில் ஒதுங்கினார்கள்... முருகன் கோயில்.. இரண்டாம் பாடசாலை.. அகதிக்குடியிருப்பு என்று நாட்கள் நகர்வடைந்தன.

ஒரு அதிகாலைப்பொழுது அவன் காலை நீட்டி கப்போடு சாய்ந்து அமர்ந்திருந்தான். அவன் முகம் ஒட்டி உலர்ந்து.. உதடுகளும் காய்ந்து தெரிந்தன. கன்னங்களில் வளர்ந்து சுருண்டிருந்த உரோமங்கள்.. அவள்கூட மெலிந்து போய்விட்டாள். சரியாகச் சாப்பிட முடியாதிருந்தது. பிள்ளைகளுக்கு மட்டும் ஒரு நேரச் சாப்பாடு எப்படியோ கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவன் வேலைசெய்த மில் முதலாளி வீட்டுக்கு வந்திருந்தார்.

"மிசின் பெட்டி ஒண்டு ஒழுங்கு செய்திருக்கிறன் ராசன்.. ஒருக்கா அங்க உள்ள சாமானுகளை ஏத்த வேணும்..."

"ரவுண் முழுக்க ஆமி நிக்கிறானெண்டு கதைக்கினம்..."

"உதெல்லாம் கட்டுக்கதை.. ரவுணுக்கை பெடியள் தான் நிக்கிறான்கள்.. நேற்றும் முருகேசற்றை வீட்டுச்சாமான்கள் ஏத்தி வந்தவையாம்..."

மரத்தின் கீழ் அடுப்பெரித்துக்கொண்டிருந்த அவளுக்கு உரையாடல் கேட்டது.

"என்ன கமலி.. மனுஷன் விட்டிட்டுப் போகாது போல..."
அவளிடம் வந்து அவளுக்கு மட்டும் கேட்கக்கூடியதாகக் கேட்டான்.

"அந்த மனுசனும் எங்கடை கலியாணத்துக்கு உதவினது.. ஏதோ யோசிச்சு செய்யுங்கோவன்..."

அவன் மரக்கொப்பில் கொழுவியிருந்த சேர்ட்டை எடுத்து உதறிப்போட்டான். ஓலைத் தட்டியில் செருகிக்கிடந்த சீப்பை எடுத்து தலை வாரினான்.

"பாணும் சம்பலும் கிடக்கு... தரட்டே..."

"இல்லா.. அந்தாள் பாத்துக்கொண்டிருக்குது... போட்டுவாறன்.."
கால்களுக்குச் செருப்புக்கூட இல்லாமற்தான் போனான்.

அன்றுமுழுவதும் அவன்வரவில்லை. அவள் பதறிப்போய் அவனைத் தெரிந்த எல்லோரிடமும் விசாரித்தாள். அவனுக்கு என்ன நடந்ததென்று தெரியாமலே போய்விட்டது. பிள்ளைகளை அணைத்துக்கொண்டு இரவுபகலாய் அழுதாள்.
உறவினர்கள் யாரும் ஏனென்று கேட்கவில்லை.

அவனுடைய அண்ணன் வீடு கொஞ்சத்தூரத்தில் இருந்தது. அவள் இரண்டு குழந்தைகளையும்கொண்டு ஒருநாள் அங்கு போனாள்... உதவிக்காக அல்ல. அவனைப்பற்றி ஏதாவது அறிந்தீர்களா என்று அறிவதற்காக.... அவர்களுடன் இடம் பெயர்ந்துதான் இருந்தார்கள்.

"ஆமி நிக்கிறானெண்டு தெரிஞ்சு கொண்டும்.... கூலிக்காக அவனை அனுப்பிச் சாகடிச்சனி.. பிறகேன் இஞ்ச வந்தனி?.. போய் எங்கையெண்டாலும் எச்சில் இலை பொறுக்கு...?"

அந்த வார்த்தைகளின் கூர் அவள் இதயத்தைக் குத்திக் கிழித்தது. அவனின் அண்ணன்தான் சொன்னான். தன்னுடைய தம்பி இறந்துவிட்டானே என்கிற ஆதங்கத்தில் அந்த வார்த்தைகள் அவசரமாய்ப் பிறந்திருக்கலாம் என அவள் சமாதானங்கொள்ள முயன்றாலும்... மனது பட்டகாயத்திலிருந்து மீள மறுத்தது.

'என்ர இந்தக் கையளால எச்சில் இலை பொறுக்க மாட்டன்.. என்ன கடினமான வேலையெண்டாலும் செய்து.. என்ர பிள்ளையளைப் பாப்பன்..." வைராக்கியத்தோடு திரும்பி நடந்தாள்.

அகதிக் குடியிருப்பில் பல பெண்கள் கூலிவேலைக்குப் போனார்கள். அவர்களுடன் அவளும் போனாள்.சிறிதளவு கூலிதான். சமாளித்துக் கொண்டாள். கைகளிலும் கால்களிலும் புதியபலம் புகுந்தது. மண்வெட்டி பிடித்தாள். மண் சுமந்தாள்.. கல் அரிந்தாள்... நான்கு வருடங்கள் அவளின் உறுதியோடு கழிந்தன.

மீண்டும் சொந்த இடத்துக்கு வரக்கூடிய வாய்ப்பு... தெருவுக்குத் தெரு சந்திக்குச் சந்தி.. குருதி சிந்தி.. உயிரைவிதைத்து... வணக்கத்துக்குரியவர்கள் இடங்களை மீட்டுத் தந்தார்கள்.. மீட்ட இடங்களில் பல மனிதர்களின் எச்சசொச்சங்கள்... எலும்புக்கூடுகளில் அவனும் இருக்கலாம் என்று எண்ணி... காவல் நிலையங்களில் எலும்புக்கூடுகளைப் பார்த்து வந்தாள். அவனின் இருப்புக்கு உறுதியில்லை. அவள் தான் தனித்துப்போனதை உள்ளூர உணர்ந்து கொண்டுவிட்டாள். அவன் போகும்போது ஆறுமாதக் குழந்தையாக இருந்த அகலிகாவுக்கு இப்போது ஆறுவயது. ஆண்டு ஒன்றில் படிக்கிறாள். ஐஸ்வர்யா உருவத்தில் மட்டுமன்றி சில செயற்பாடுகளிலும் தகப்பனைப் போலவே இருந்தாள்...

அவள் சொந்த இடத்துக்குத் திரும்பினாள். காணிக்குரிய வேலிகளை ஒழுங்காக அமைத்துக்கொண்டாள். அவளின் கைகளிலும் கால்களிலும் போதியளவு பலனிருந்தது. காணியைத் துப்பரவு செய்து சிறிய கொட்டில் அமைத்தாள்.

அருகே அவனுடைய அண்ணனுடைய வீடு. வாழ்ந்து காட்டவேண்டும் என்ற வைராக்கியம் அவளுக்குள் நிலையாயிருந்தது. பகலில் கூலிவேலைக்குப் போனாள்.. இரவில் காணிக்குள் நின்று உழைத்தாள். கடைக்கார மூர்த்தியண்ணர் வீட்டில்தான் தண்ணீர் அள்ளுவாள். கூலிவேலையால் வந்தவுடன் பிளாஸ்ரிக் குடங்களை எடுத்துப்போய் தண்ணீர் சுமந்து வருவாள்.

ஒருநாள்.. ஏதோ அலுப்பில் தண்ணீர் எடுக்கவில்லை. விடிய எழுந்ததும் குடத்தோடு மூர்த்தி அண்ணர் வீட்டுக்குப் போனாள். மூர்த்தியண்ணை ஏதோ அலுவலாக வெளியேபோக சயிக்கிளை உருட்டிக்கொண்டு படலையடிக்கு வந்தவர்.. அவளைக் கண்டதும் முகம் மாறிப்போனார். படலைக்கு அருகில் சயிக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே போனார். அவள் நேராகக் கிணற்றடிக்குப் போய் தண்ணீர் அள்ளினாள்.

"இஞ்ச கமலி..."
அவள் திரும்பிப் பார்த்தாள். மூர்த்தியண்ணரின் மனைவி.

"என்னக்கா?..."

"மனுசன் ஆரையோ சந்திக்கவெண்டு போகவந்தது... உன்னைக் கண்டவுடனை திரும்பி வந்திட்டுது.. நீ புருசன் இல்லாதனி.. இனிமேல் விடிய வெள்ளண முழுவியளத்துக்கு இஞ்ச வராதை.. பின்னேரத்திலை வந்து.. தண்ணி அள்ளிக்கொண்டு போயிடு.."

அவள் ஒரு கணம் ஆடிப்போனாள். அவன் இறந்துவிடவில்லை. இறந்து போனதாக எந்தத் தடயமும் இல்லை. பொருட்களை ஏற்றப்போன இடத்தில் பிடிபட்டு.. எங்காவது உயிருடன் இருப்பான். என்றோ ஒருநாள் அவன் வருவான் என்றே அவள் காத்திருக்கிறாள். அவன் இறந்ததாக யாரும் உறுதிசெய்யாதபோது இவர்கள் தன்னை விதவையாகப் பார்க்கிறார்களே என்று அவள் மனது அழுதது.

ஆனால்.. அவள் கைகளுக்கும் கால்களுக்கும் வலுவிருந்தது. வீட்டின் வடகிழக்கு மூலையில் நிலையம் பார்த்து கிணறு வெட்டத் தொடங்கினாள். பகலில் கூலிவேலை இரவில் கிணறு வெட்டினாள். நிலவும் நட்சத்திரங்களும் அவளுக்குத் துணையாய் நின்றன. மூன்றுமாதகால அயராத உழைப்பு. கிணற்றில் ஐந்து அடிமட்டத்துக்குத் தண்ணீர்...

"ஏன் இப்ப தண்ணி அள்ள வாறேல்லை..."
அவள் அவர்களுக்கு தன் புன்னகையை மட்டுமே பதிலாய்க் காட்டினாள்...

அவளுக்குள் நம்பிக்கைகள் முளைத்தன. வீடிருக்கும் காணிக்குள்ளேயே தோட்டம் செய்ய ஆரம்பித்தாள். பிள்ளைகளைப் படிக்கவைக்கவேண்டும் என்பது மட்டும் அவள் மனதில் குறியாயிருந்தது. இதுவரை பட்ட நோவுகளும் காயங்களும் அவமானங்களும் அவளை வருத்தமுறச் செய்தாலும்.. அவற்றை அவள் பொருட்படுத்தவில்லை.

ஐஸ்வர்யாவுக்கு இப்போது வயது எட்டு. மூன்றாவது வகுப்பில் படிக்கும் அவளுக்கு தைமாதம்தான் சிறிய தோடுகள் வாங்கிப்போட முடிந்தது.

அவனுடைய அடையாள அட்டை இருந்தது. அதைக்கொடுத்து பெரிதாக்கி படம் வைக்குமாறு சிலர் கூறினார்கள். அவள் மறுத்துவிட்டாள்.
"அவர் எங்கையெண்டாலும் உயிரோட இருப்பார்... எப்பெண்டாலும் ஒரு நாள் வருவார்..."

கடின உழைப்பால் அவளின் உடல் முதிர்ச்சியடைந்திருந்தது. முன் நெற்றியில் கொஞ்சம் நரைமுடி கால்களில் சேற்று மண்ணின் படிவு காய்த்துப் போன கைகள்.. அவளுக்கு தன்னைப்பற்றி எதுவித கவலையுமில்லை. ஐஸ்வர்யா இல்ல விளையாட்டுப்போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றுவந்தபோது, பெருமையோடு அவளைக் கட்டியணைத்து மகிழ்ந்தாள்.

பிள்ளைகள் அப்பாவுக்கு என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தை அவள் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தினாள். அவளைப் பொறுத்த வரைக்கும் அவளுடைய வாழ்க்கையில் பிசிறில்லை. கடந்தமுறை பெய்த சிறுமாரிக்குக் கூரை ஒழுகியது. இரண்டு வாரங்கள் அவளின் கைகளும் கால்களும் மிளகாய்த் தோட்டத்தில் இயந்திரமாகின.. வீட்டின் பழைய ஓலைகளைப் பிடுங்கிவிட்டு புதிய தகரங்களை அவள் போடுவித்தாள்... பிள்ளைகள் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காய் அவளின் வியர்வை வீட்டுக் கூரையாய்... குழந்தைகள் மகிழ்ந்தார்கள்.

காலையில் எழுந்து அவள் கிணற்றடியில் பல் விளக்கிக்கொண்டிருந்தாள். பிள்ளைகளுக்கும் வாளிகளில் தண்ணீர் நிரப்பவேண்டும். அடுத்தவீடு அவனுடைய அண்ணன் வீடு நிறைய வாழை நட்டிருந்தார்கள். வளவு சோலையாயிருந்தது. பேச்சுக்குரல்கள் கேட்டன. அண்ணன்காரனும் மனைவியும், "கமலி வீட்டுக்கு புதுசா கூரைபோட்டிருக்கிறாள்.. இவ்வளவு காசு எப்பிடி உவளுக்குக் கிடைக்குது..."

"உதுகூட விளங்கேல்லையே உனக்கு?... மிளகாய்த் தோட்டக்காரன்தான் அள்ளி அள்ளிக்குடுக்கிறான்.. இவளும் அவன் காணாமற்போயிட்டானெண்ட கவலையில்லாமல் தோட்டக்காறனோட இருக்கிறாள்..." அவள் ஒருகணம் ஆடிப்போனாள்.

"என்ர உடம்பை வருத்தி.. என்ர வியர்வையை ஊத்தி நான் உழைச்ச உழைப்புத்தான் இது..." அவள் இரு கைகளாலும் தலையைப் பிடித்துக்கொண்டு கீழே இருந்தாள்.

உதவிகேட்டபோது உதவாமல் அவமானப்படுத்தியவர்கள்-தான் கடினப்பட்டு உழைத்து உயர்ந்தபோது பாராட்டவும் முடியாமல், நயவஞ்சகத்தனமாய் பேசுவது அவளுக்கு வேதனையளித்து.

ஆனால்.. இரவு முழுவதும் ரணமாய் வலித்த அந்தச் சொற்கள் பொழுது புலர்ந்தபோது.. அவளை வருத்தவில்லை. வழமைபோன்று அவளுக்குள்ளிருந்த வைராக்கியம் அவளை உஷாராக்க... அவள் புது மனுஷியாய்.. காய்த்துப்போன கைகளை வீசி நடந்தாள்.

ஆதிலட்சுமி சிவகுமார்
Quelle - Erimalai Feb 2005

Wednesday, April 20, 2005

தகப்பன் சாமி

நிலா - பிரித்தானியா

பூம்பாவூருக்குச் செல்வதானால் எனக்குக் கொள்ளைப் பிரியம். அந்த ஊரின் புழுதியோடு புழுதியாய் புரண்டு வளர்ந்தவளாயிற்றே! மரகதப் போர்வையை விரித்தது போல் பசேலென்று தென்காசிக்கும் குற்றாலத்துக்குமிடையே அம்சமாய் அமர்ந்திருக்கும் என் ஊர். பொதிகைத் தென்றலும், குற்றாலச் சாரலும், பாசம் பொங்கும் மனிதர்களுமாய்... பூம்பாவூர் ஒரு சுகமான தாலாட்டு போலத்தான் எனக்கு.

ஆனால் ஊருக்குப் போவதில் ஒரே ஒரு தயக்கம் உண்டு எனக்கு. அம்மாவின் நிலைமையைப் பார்த்தால் எனக்கு ஆத்திரம் கொப்பளிக்கும். ஒருவித இயலாமையில் மனசு மறுகும். அம்மாவின் மேல் எனக்குப் பெரிய பரிதாபம் உண்டு. அறிவு, திறமை என எல்லாம் இருந்தும் அப்பாவைப் பொறுத்தவரை அவள் ஒரு அடிமைதான். அப்பாவின்
கையில் சாட்டை இல்லாதது மட்டும்தான் குறை. ஆனால் வார்த்தைகளிலேயே ஏகத்துக்கும் அம்மாவை ஆட்டி வைத்துவிடும் வல்லமை இருந்தது அப்பாவுக்கு. இவ்வளவுக்கும் அம்மா படிக்காத பேதை ஒன்றுமில்லை. பள்ளி ஆசிரியையாக 35 வருடம் வேலை பார்த்து ஓய்வு பெற்றவள்.

"நீதாம்மா அப்பாவைக் கெடுத்து வைச்சிருக்கே. சுடுதண்ணி கூட தானா போட்டுக்கத் தெரியலை. உட்கார்ந்த இடத்தில எல்லாத்தையும் குடுத்துப் பழக்கிட்டே" என்று நான் குற்றம் சாட்டும் போதெல்லாம், "அடிப் போடி. என் போராட்டம் இந்திய சுதந்திரப் போராட்டத்தை விடப் பெரிசு. ஆனா நான் தோத்துப் போயிட்டேன். அதுதான் வித்தியாசம். இது இப்படித்தான்னு எனக்கு விதிச்சிருக்கு" என்பாள். வார்த்தைகளில் கசப்பும் விரக்தியும் வழியும்.

அப்பாவுக்கு அவர் வசதி முக்கியம். மற்றெதெல்லாம் அப்புறம்தான். வழக்கம்போலக் காலையில் எழுந்து கருவேலங்குச்சியில் பல்விளக்கி, எங்கள் வயல் பம்பு செட்டில் குளிக்க வேண்டும். குளித்துவிட்டு வரும்போது வீட்டில் சூடாய் இட்டிலியும் சட்னியும் மணக்கவேண்டும். பின்பு கணக்கு வழக்குகளைப் பார்த்துவிட்டு, ஊரில் பஞ்சாயத்து
பண்ணிவிட்டு மதிய சாப்பாடு சரியாய் ஒரு மணிக்கு சாப்பிட்டாக வேண்டும். அதன் பின் அவரது பிரத்யேகத் தேக்குக் கட்டிலில் ஒரு மணி நேரமாவது தூங்கியாக வேண்டும். இதில் எதில் குறை வந்தாலும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் ஒழிந்தார்கள்; மாட்டியவர்களை கடித்துத் துப்பிவிடுவார். "ஊர்ல எல்லாப்பயலும் நம்மளக் கண்டா அலறுவான்ல" என்று அவரின் கோபத்தில் அவருக்கு மகா பெருமை வேறு.

இரண்டு அண்ணன்களுக்குப் பின் வீட்டில் ஒரே பெண் என்பதால் எனக்கு வீட்டில் கொஞ்சம் செல்லம், சலுகை. அப்பா என் மீது உயிரையே வைத்திருப்பதாக அம்மா அடிக்கடி சொல்லுவாள்.

அம்மா சந்தோஷமாக இருந்து நான் பார்த்ததே இல்லை. எப்போதும் ஒரு வித வெறுப்பு, விரக்தி. யாரிடமும் நட்பாய் அவள் பழகியதில்லை. பள்ளிக் கூடம் போகும்போது மட்டும் முகம் தெளிவாய் இருக்கும். 'அந்தப் பிஞ்சு முகங்களைப் பார்த்தா எனக்கு உலகமே மறந்து போகும்' என்று காரணமும் சொல்வாள்.

ஓய்வு பெற்ற பிறகு அதுவும் போயிற்று. வீட்டுக்குள் அப்பாவுக்குப் பணிவிடைகள் புரிந்து கொண்டு அவரின் அரட்டல் மிரட்டல்களுக்கு ஈடு கொடுத்துக் கொண்டு ஒரு கூட்டுக்குள் வாழ்வது மாதிரி சுருங்கிக் கொண்டுவிட்டாள். அதனாலேயே நான் வாரம் தவறாமல் சென்னையிலிருந்து தொலைபேசியில் ஒரு அரை மணி நேரமாவது பேசிக் கொண்டிருப்பேன். வாரம் முழுவதும் ஒட்டு மொத்தமாய்ச் சேர்த்து வைத்ததெல்லாம் கொட்டுவாள்.

"இந்த வருஷ திருவிழாவுக்காவது தாத்தா ஊர்ல போய் ஒரு நாலஞ்சுநாள் இருந்துட்டு வர்றேன்னு கேட்டேன் பாப்பா. 'மனுஷன் சோத்துக்கு என்ன செய்வான்'னு கேக்கறாரு உங்கப்பா"
"பாப்பு டீச்சரைப் பார்த்துட்டு வரலாம்னு தெக்குத் தெரு வரைக்கும் போயிட்டு வாரேன்னு கேட்டதுக்கு சிடுசிடுன்னு விழுந்தாரு. எதுக்கு வம்புன்னு பேசாமெ இருந்திட்டேன்"

"உனக்கு ஞாபகம் இருக்கா பாப்பா, என் டியரஸ்ட் பிரண்டுன்னு சொல்லுவேனே ஜெயசீலி, நாற்பது வருஷம் கழிச்சி அட்ரஸ் கண்டுபிடிச்சு வந்தா புதன் கிழமை. கோயம்புத்தூர்ல இருக்காளாம். போன் நம்பர் கூட குடுத்துட்டுப் போனா. எங்க, எஸ்.டி.டி எல்லாம் நம்ம இஷ்டத்துக்குப் பண்ணினா அப்பறம் யாரு உங்கப்பாகிட்ட வாங்கிக் கட்டிக்கறது"

"நம்ம ரஞ்சிதம் டீச்சர் பொண்ணு ஜோதிக்குப் பொறந்த நாளுன்னு நேத்து சாக்லேட் கொடுக்க வந்திருந்திச்சு. கையில ஏதாவது கொடுத்தனுப்பலாம்னா அப்பா வீட்டில இல்ல. அந்தச் சின்னப் பிள்ளைய வெறுங்கையோட அனுப்ப வேண்டியதாப்போச்சு. என் கையில ஒரு அம்பது நூறு குடுத்து வைக்கலாமில்லை?"

அம்மா இப்படிக் கதைகதையாய்ச் சொல்லும் போதெல்லாம் எனக்கு கண்ணில் நீரும் நெஞ்சில் கோபமும் அரும்பும். ஒரு முறை பொறுக்காமல் அப்பாவுக்குக் கடிதம் எழுதிக்கூடப் பார்த்தாயிற்று. 'சின்னக் கழுதை எனக்கு புத்தி சொல்லுது' என்று அம்மாவிடம் உறுமியதுடன் மூன்று மாதம் என்னிடம் அவர் பேசாமல் இருந்ததுதான் மிச்சம். ஒன்றும் மாறியதாகக் காணோம். இந்த முறை அதற்கொரு முடிவு கட்டியாக வேண்டும்.

"என்னப்பா தூங்கிட்டியா? வீடு வந்திருச்சு" என் கணவரின் குரல் என்னைக் கலைத்தது. காரிலிருந்து என் கணவர் பெட்டிகளை இறக்க, நான் என் மூன்று வயது மகள் நிவேதிதாவை காரிலிருந்து இறக்கி விட்டேன். அப்பா வீட்டுக்குள்ளிருந்து பிரகாசமாய் வெளிப்பட்டார். "வாடா ராசாத்தி" என்று நிவியைத் தூக்கிக் கொண்டு சம்பிரதாயமாய்
என் கணவரைப் பார்த்து, "வாங்க மாப்பிள்ளை" என்றார். என் கணவர் சிடுசிடுவென்ற முகத்துடன் 'ம்' என்று தலையசைத்ததும் அப்பாவுக்கு முகம் சிறுத்துப் போனது.

அப்பாவின் ஈகோவும் கோபமும் ஊர் அறிந்ததே. தனது மரியாதைக்குக் கடுகளவு பங்கம் வந்தாலும் ஒரு பிரளயத்தை ஏற்படுத்திவிடுவார். நான் சற்றே பயத்துடன் அவரையே பார்க்க, நிவி, "தாத்தா, ஹேப்பி பொங்கல் டு யூ" என்று நிலைமையை மாற்றினாள்.

அம்மா மெலிந்து கறுத்திருந்தாள். கண்ணில் அடர்த்தியாய் சோகம் கவிழ்ந்திருந்தது. நான் என் கணவரை மாடி அறையில் செட்டில் பண்ணிவிட்டு கீழிறங்கி வந்தேன். அப்பா ஹாலில் பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா வழக்கம் போல சமையலறையில் போராடிக்கொண்டிருந்தாள். நான் சமையலறை வாசலருகில் அமர்ந்து வெங்காயத்தை உரிக்க ஆரம்பித்தேன். ஏழு மாத வயிற்றுப் பிள்ளையோடு சிரமப்பட்டு அமர்ந்ததைப் பார்த்து, "இப்படி கஷ்டப்படறியே பாப்பா. பக்கத்திலர்ந்தா அப்பப்ப வந்து பாக்கலாம். மெட்ராஸ் நெனச்சா வர்ற தூரத்திலயா இருக்கு?" என்றாள் அம்மா ஒரு வித இயலாமையுடன்.

"அதை ஏன் கேக்கற. ரொம்ப வெறுத்துப் போகுது. உங்க மருமகன் ரொம்ப மாறிட்டார். முன்னப் போல இல்லை. வீட்டில எந்த உதவியும் கிடையாது. இருந்த இடத்தில எல்லாம் வேணும். நிவியோட சேர்ந்து இப்ப அவரையும் கவனிச்சுக்க வேண்டி இருக்கு. ஆஃபீஸ்லயும் வேலை பின்னுது. எப்படித்தான் இன்னொரு குழந்தைய சமாளிக்கப்
போறேனோன்னு மலைப்பா இருக்கு" என்றேன் மெல்லிய குரலில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மட்டும் கேட்கும் விதமாக. அப்பா லேசாகத் தலை நிமிர்ந்து பார்த்துவிட்டு பேப்பரில் ஆழ்ந்தார்.

"மருமகனா அப்படிப் பண்றாரு? ஆச்சர்யமால்ல இருக்கு? நிவி வயித்தில இருக்கும்போது உன்னை எப்படிப் பார்த்துக்கிட்டார், எவ்வளவு உதவி பண்ணுவார்" என்றாள் அம்மா வருத்தத்துடன்.

"அதானே எனக்கும் புரியமாட்டேங்குது. யார்கிட்டருந்து இந்த மாதிரி கத்துக்கிட்டார்னே தெரியலைம்மா. ஆனா எதுக்கெடுத்தாலும் 'உங்கம்மா செய்யலை?' அப்படின்னு உன்னத்தான் இழுக்கிறார்"

"நானும் நீயும் ஒண்ணா?" என்றாள் அம்மா ஆற்றாமையுடன்

"இதே கேள்வியை நானும் கேட்டேனே! 'உங்கம்மா வேலைக்குப் போயிக்கிட்டே 3 பிள்ளைகளை வேலைக்காரி கூட இல்லாமத்தான சமாளிச்சாங்க. இங்க வேலைக்காரி இருக்கா. கிராமத்தில இல்லாத ஏகப்பட்ட வசதி இருக்கு. உனக்கு மட்டும் ஏன் முடியாது'ங்கறார். அவரை இத்தனை நாள் நான் மொளகா அரைச்சுட்டேனாம். இப்பத்
தான் கண் திறந்திருக்காம் அவருக்கு" நான் கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.

என் கணவருக்குக் காய்ச்சலாக இருப்பதாக நிவி வந்து சொன்னாள். நான் மகா சிரமத்துடன் எழுந்து மாத்திரையைத் தேடி எடுத்துக் கொண்டு மாடி ஏறினேன். பின்பு வெந்நீருக்காக, தைலத்துக்காக, போர்வைக்காக என நான் பலமுறை மூச்சு வாங்க ஏறி இறங்கியதை அப்பா கடுகடுவென்று பார்த்துக் கொண்டிருந்தார்.

அம்மா பொறுக்க மாட்டாமல், "ஏன் பாப்பா, மருமகனுக்கு இறங்கி வர முடியாத அளவுக்கா உடம்பு முடியலை?" என்றாள்

"அதெல்லாம் இல்லைம்மா. உடம்பு லேசா கதகதப்பா இருக்கு. அதுக்குத்தான் இப்படிப் படுத்தறார். நான் சொல்லலை?" என்றேன் என் புலம்பலுக்கு உரம் சேர்க்கும் விதமாய்.

அண்ணன்மார் இருவரும் குடும்பத்துடன் வந்த பிறகும் என் கணாவரின் சிடுசிடுப்பு தொடர, அப்பா லேசாய் முணுமுணுக்க ஆரம்பித்தார். அம்மா தனிமையில், "உனக்கும் என்னையப் போலவே வாழ்க்கை அமைஞ்சிருச்சேடி" என்று கண்ணீர் விட்டாள்.

அத்தனை பேருக்கும் மூன்று வேளைக்கும் சமைத்து, வீட்டைச் சுத்தம் செய்து, பேரக் குழந்தைகளை விசேஷமாய்க் கவனித்து அம்மா பம்பரம் போலச் சுற்றிக் கொண்டிருந்தாள். மூன்று முறை வயிற்றில் ஆபரேஷன் ஆன பிறகும் அம்மாவுக்கு எங்கிருந்துதான் இந்த சக்தி கிடைக்கிறதோ. இத்தனைக்கும் ஆபரேஷனுக்குப் பிறகு பிள்ளைகள் வீட்டிலோ அல்லது பிறந்த வீட்டிலோ அம்மாவை அதிக நாள் ஓய்வெடுக்க விட்டது கிடையாது அப்பா. ஑அங்கே இவ வந்து இருந்தா போதும். மற்றெதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். மனுசனால வீட்டில தனியா இருக்க முடியலைஒ என்று வீராப்புடன் கூட்டி வந்துவிடுவாரே ஒழிய அம்மா தலைய்஢ல்தான் அத்தனை வேலையும் விடியும்.
அதெல்லாவற்றையும் விட ஹெரினியா என்று சென்னையில் ஆபரேஷன் செய்யும் போது கூட அப்பா கூட இல்லாததுதான் அம்மாவுக்கு என்றைக்கும் வருத்தம். ஑அவருக்கு ஒண்ணுன்னா நமக்கு இப்படிப் பதறுதே. ஆபரேஷனுக்குக் கூட இருக்கணும்னு அவருக்குத் தோணலையே. பிள்ளைக நீங்கதான் ஓடி ஓடிப் பாத்தீங்கஔ என்று அம்மா பலமுறை சொல்லி அழுதிருக்கிறாள். பாவம் அம்மா!

கிளம்புகிற நாளும் வந்தாயிற்று. மதிய சாப்பாட்டுக்குப் பின் கிளம்ப வேண்டியதுதான். அம்மா எங்கள் பயணத்துக்கும் சேர்த்து சாப்பாடு தயார் செய்து கொண்டிருந்ததில் சமையல் கொஞ்சம் தாமதமாகிக் கொண்டிருந்தது.

அப்பா சமையலறையில் எட்டிப்பார்த்து, "என்ன?" என்றார் அதிகாரமாய்.
"இன்னும் ஒரு பத்து நிமிசத்தில முடிஞ்சிரும்" அம்மாவின் குரலில் பயம் தொனித்தது.
"மனுசனைப் பட்டினி போடுக் கொல்றதே உனக்குப் பொழைப்பாப் போச்சு"
அம்மா பதில் சொல்லாமல் வேலையில் ஆழ்ந்தாள்.

ஒரு வழியாய் சமையலை முடித்து எல்லோரையும் அமரவைத்துப் பரிமாறி விட்டு என் கணவரிடம் அம்மா மெதுவாய், "பாப்பா ரொம்ப கஷ்டப்படறா. கூட ஒரு ரெண்டு மாசம் லீவு போனா போகுதுன்னு சீக்கிரமே இங்க கொண்டு வந்து விட்டுடுங்களேன்" என்றாள் மெல்லிய குரலில்

என் கணவர் விசுக்கென்று நிமிர்ந்து என்னைப் பார்த்து, "உன் வேலையா?" என்றார் இளக்காரமாய். "அய்யோ... இல்லீங்க" என்றேன் நான் அவசரமாய்.

அவர் அம்மாவிடம், "அதெல்லாம் சரிப்படாது, அத்தை. எனக்கு நிவியை விட்டுட்டு அவ்வளவு நாள் இருக்க முடிய ஡து" என்றார் கறாராய்.
"எப்படியும் 3 மாசம் இங்கதான் இருக்கப் போறாங்க. கூட ஒரு ரெண்டுமாசம்தானே.ஔ அம்மாவின் குரலில் கெஞ்சல் இருந்தது.
என் கணவர் மனமிரங்காமல், ஓஇந்தத் தடவை டெலிவரி சென்னையிலதான்ஔ என்றார்.

அம்மா திடுக்கிட்டது போல அப்பாவைப் பார்த்தாள். அப்பாவின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. அப்பா பதில் ஒன்றும் சொல்லாததைக் கண்டு அம்மாவே தொடர்ந்து, ஓஇங்கேன்னா எல்லார்க்கும் வசதி..ஔ என்று இழுத்தாள்

ஓஎல்லார்க்கும்னா உங்க எல்லாருக்குமா? நானெல்லாம் மனுஷனில்லையா? மனுசன் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவான்?ஔ என்று வெடித்தார் என் கணவர்.

஑ஆகா.. இது அப்பாவின் டயலாக் ஆயிற்றேஒ நான் பதற்றத்தோடு அப்பாவைப் பார்த்தேன். அண்ணன்மார் இருவரும் செய்வதறியாது ஒருவரை ஒருவர் மௌனமாய்ப் பார்த்துக் கொண்டனர்.

அப்பா கடுகடுவென்று, ஓஇங்கே கொண்டு வந்து விட்டா நல்லா கவனிச்சுக்கிறோம். மெட்ராஸ் வந்தெல்லாம் டெலிவரி பார்க்க தோதுப்படாதுஔ என்றார்.

என் கணவர் என்னைப் பார்த்து, ஓஉன் மேல உங்க வீட்ல எவ்வளவு அக்கறைன்னு இப்பவாவது தெரிஞ்சுக்கோஔ என்றார் ஏளனமாய்.

அவ்வளவுதான் அப்பா என்கிற எரிமலை வெடித்துக் கிளம்பியது. பாதிச் சாப்பாட்டில் கை கழுவிவிட்டு தண்ணீர் டம்ளரை வீசி எறிந்தார். ஓஒரு மூணு மாசம் சமாளிக்க முடியலை. நீயெல்லாம் ஒரு மனுஷன்ஔ என்றார் என் கணவரைப் பார்த்து.

என் கணவர் இதை எதிர்பார்த்தவர் போல், ஓஅதை நீங்க சொல்லாதீங்க. இந்த வயசில உங்க வொய்ஃபை விட்டுட்டு ஒரு ரெண்டு நாள் இருக்கமுடியலைஔ என்று காரசாரமாய்த் திருப்பித் தாக்கினார்.

பதில் சொல்ல முடியாமல் திணறிய அப்பா உக்கிரத்தின் உச்சிக்கே போனார். ஓ என் வீட்டில வந்து என்னையே அவமானப்படுத்தறியா. வெளிய போடாஔ என்றார் என் கணவரைப் பார்த்து.

அதையும் எதிர்பார்த்தது போலவே என் கணவர் விசுக்கென்று நிவியை இழுத்துக் கொண்டு வெளியேற, நான் நெஞ்சு பொறுக்காமல் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தேன். பெரியண்ணன் என் கணவரையும் சின்னண்ணன் அப்பாவையும் சமாதானம் செய்ய முயன்று தோற்றனர். நான் அழுது கொண்டே பெட்டிகளை எடுத்துக் கொண்டு காருக்கு நடந்தேன்.


ஒரு மாதம் சென்றிருக்கும். நானும் தொலைபேசவில்லை. வீட்டிலிருந்தும் யாரும் அழைக்கவில்லை. கல் நெஞ்சுக்காரர்கள். எனக்கு அம்மாவின் கவலைதான் அரித்துக் கொண்டிருந்தது. யாரிடம் புலம்புவாள், பாவம்!

என் கணவரும் அடிக்கடி, ஓஉங்கம்மா பாவம், செல்லம். உன்னை விட்டா யார்கிட்ட பேசுவாங்க? தனியா கெடந்து அழுதுக்கிட்டிருப்பாங்க. உங்கப்பா இல்லாத நேரமா கூப்பிட்டு உண்மையைச் சொல்லிருஔ என்று நினைவுபடுத்திக் கொண்டிருந்தார்.

அப்பா வழக்கமாய் வாக்கிங் செல்லும் நேரத்துக்காய்க் காத்திருந்து போன் அடித்தேன். வெகு நேரத்துக்கப்பிறகு அம்மா எடுத்தாள். எடுத்ததும் என் குரலை இனம் கண்டு, ஓபாப்பா, எப்படிடா இருக்க? உடம்புக்கெல்லாம் நல்லா இருக்கில்ல?ஔ என்றாள் குரல் கம்ம.

ஓநான் நல்லா இருக்கேன். முதல்ல உன் மருமகன் உன்கிட்ட தன் சார்பா மன்னிப்பு கேட்கச் சொல்றார்ஔ என்றேன்.

அம்மா என்ன சொல்வதென்று தெரியாமல் சற்று நேரம் மௌனம் சாதித்தாள். பின் ஓஎன்கிட்ட மன்னிப்பு கேக்கறதுக்கு என்ன இருக்கு? உன்னை நல்லா வச்சுக்கிட்டா சரிதான்ஔ என்றாள் பெருமூச்சோடு

நான் சத்தாமாய் சிரித்து, ஓ அவர் என்னை நல்லாதான் வைச்சிருக்கார். அவரை நான் நல்லா வைச்சிருக்கேனான்னுதான் தெரியலை.ஓ என்றேன்

அம்மா குழம்பியது தெரிந்து ஓஊர்ல உனக்காகத்தான் ஒரு டிராமா போட்டோ ம். அப்பா உனக்குப் பண்றதை இவர் எனக்குப் பண்ணினா அப்பா உணர மாட்டாரான்னு ஒரு நப்பாசை.ஔ

"சும்மா பூசி மெழுகாதே பாப்பா" என்றாள் அம்மா நம்பாமல்

"நெஜம்மாத்தாம்மா. அப்பா உன்ன ட்ரீட் பண்றதைப் பாத்து நான் இங்கே புலம்பிக்கிட்டே இருப்பேன். அதுக்கு உங்க மருமகன்தான் இந்த ஐடியா சொன்னார். அப்பாவுக்கு என் மேல உயிர்னு நீதானே அடிக்கடி சொல்லுவே. அதான் உனக்கு நடக்கற மாதிரி எனக்கு நடந்தா அவர் உணருவாருன்னுதான் முன்னமே பேசி வச்சுக்கிட்டு இப்படிப் பண்ணினோம். ஆனா கொஞ்சம் ஓவர் ஆக்ஷனா போயிருச்சி" என்றேன்.

அம்மா சில விநாடிகள் மௌனத்துக்குப் பின், "மருமகன் பெரிய ஆளுதான். மாமனாரை நல்லாத்தான் புரிஞ்சு வச்சிருக்கார். உங்கப்பா இந்த ஒரு மாசமா ரொம்ப மாறித்தான் இருக்கார். காலைல காஸ் ஸ்டவ் பத்தவைச்சு காபி போட்டுட்டுத்தான் என்னைய எழுப்பறார்; தண்ணி பிடிச்சுத்தறார். காய்கறி நறுக்கித் தறார். எனக்கே நம்ப முடியலைடி. நீ சொன்ன பிறகுதான் காரணம் புரியுது" அம்மாவின் குரலில் வியப்பும் சந்தோஷம் தெறித்தன.

தொடர்ந்து, "எனக்கே இப்படி கீழ உக்காந்து காய்கறி நறுக்க குறுக்கு வலிக்குதே. மூணு ஆபரேஷன் ஆகியிருக்கு. உனக்கு ரொம்பத்தான் கஷ்டமா இருந்திருக்கும்கறார் ஒருநாள். "

"உலக அதிசயமால்ல இருக்கு!" என்றேன் நான்.

"அது மட்டுமில்ல. மாமா ரெண்டு நாள் முன்னால் போன் பண்ணி திருவிழாவுக்குக் கூப்பிட்டான். 'உங்கக்காவை நான் கொண்டு வந்து விட்டுட்டு வந்திர்றேன். ஒரு வாரம் கழிச்சி நீங்க கொண்டு வந்து விட்ருருங்க'ன்னார். எனக்கு வாயடைச்சுப் போச்சு. சாப்பட்டுக்கு என்ன பண்ணுவீங்கன்னேன். 'அதான் இப்ப காஸ் ஸ்டவ் பத்த வைக்கத் தெ
ரிஞ்சிருச்சில்ல. சமாளிச்சுக்குவேன். நீ தோசை மாவு மட்டும் அரைச்சு வச்சுட்டுப் போ'ன்றார்"

அம்மா தொடர்ந்து அருவி மாதிரி பேசிக் கொண்டே இருந்தாள்.

என் தாயின் விலங்குகளை நெகிழ்த்திவிட்ட ஆனந்தம் என் கன்னத்தில் நீராய் வழிந்தது.

Quelle - Thisaigal-March2005

Friday, March 11, 2005

ராஜகுமாரனும் நானும்..

சுமதி ரூபன்

இரவு அடங்கிப் போகும் நேரம். காற்றின் ஒலி மட்டும் கேட்டது. மல்லிகை மணந்தால் எப்படியிருக்கும்?

நான் கிறங்கினேன். ஒன்று இரண்டு வாகன ஒலி மட்டும் கேட்டபோது எனக்குக் கோபம் வந்தது. குழம்பொலி எங்கே? எனக்கு வேண்டியது அதுதான்.

தனிமை.. தனிமையால் வதைபடுகின்றேன்.. எங்கே என் ராஜகுமாரன்? இன்று வரமாட்டானோ.. மனம் வலித்தது.. வருவான். நிச்சயம் வருவான். அவனில் எனக்கு நம்பிக்கை இருந்தது. நேரம் போகப்போக குழப்பத்துடன் கூடிய கோபம் வந்தது.. வருவான் அவன் வருவான்.. நம்பிக்கையுடன் உடைகளைத் தளர்த்தி விட்டேன்.. கண்மூடிச் சிறிது சோகித்து.. கண் திறந்த போது அவன் நின்றுகொண்டிருந்தான்.. என் ராஜகுமாரன். அதே கம்பீரம் கலந்த குறும்புச் சிரிப்பு. நான் சிரிக்கவில்லை.. முகத்தை உம்மென்று தூக்கி வைத்துக் கொண்டேன்.
“கோபமா?”
நான் பேசவில்லை
“என் கண்மணிக்கு என் மேல் கோபமா?” குழைந்தான்.
என் வயிற்றில் புளி கரைந்தது. இருந்தும் நான் மசியவில்லை.
“என் கண்ணம்மா” நெற்றியில் முத்தமிட்டான்.
நான் கரைந்து போனேன். “ம் நேற்று ஏன் வரவில்லை?” கேட்டேன்
தலை குனிந்தான்.
என் கோபம் தலைக்கு ஏறியது. “அப்படியென்றால் நீ வேறு யாருடனாவது?” நான் முடிக்கவில்லை.
“ஐயோ என்ன இது” தன் இரும்புக் கரம் கொண்டு என் இதழ் பொத்தினான். எனக்கு வலித்தது. சுகமாகவும் இருந்தது. நான் அவன் விரல் நனைத்தேன். புன்னகைத்தான். மீண்டும் கேட்டேன்.
“நேற்று ஏன் வரவில்லை?”
அவன் கண்கள் கலங்கிற்று. இறுக்கமாகத் தன் இதழ் கடித்தான். நான் துடிதுடித்துப் போனேன்.
“மன்னித்துவிடு நான் கேட்கவில்லை நீ காரணம் சொல்ல வேண்டாம்”
“நான் வந்திருந்தேன் ஆனால்” அவன் நா பிரண்டது.
“வந்திருந்தாயா? எப்போது? நான் குழம்பிப் போனேன். “வந்திருந்தால் ஏன் என்னிடம் நீ பேசவில்லை?”
“நான் வந்திருந்தேன் ஆனால் நீ பல் கடித்துக் கண்ணீர் விட்டபடியிருந்தாய் என்னால் சகிக்க முடியவில்லை. போய்விட்டேன்”.
நான் விக்கி விக்கி அழத்தொடங்கினேன்.
"என் செல்லக் கண்ணம்மா என் ராசாத்தி எதற்காக வதைபடுகின்றாய் போய் விடு. ஓடிவிடு இங்கிருந்து. என்னால் தாங்கமுடியவில்லை." விம்மினான்
"உன் மாளிகையில் எனக்கு இடமுண்டா?"
"நிச்சயமாக வந்துவிடு என்னுடன்"
"நான் மட்டுமா? இல்லை குழந்தைகளையும் அழைத்து வரவா?"
"இது என்ன கேள்வி. உன் குழந்தைகள் எனக்கும் குழந்தைகள் தானே".
மாளிகை எப்படியிருக்கும்? இது கனடா மாளிகை கற்பனைக்குக் கொஞ்சம் கஷ்டப்பட்டேன்.

"என்ன அதுக்கிடேலை படுத்திட்டியே?" வில்லன் குரல். என் கற்பனை கலைந்தது. நான் அவசரமாக மூச்சை இழுத்துவிட்டேன். சிறிது குறட்டை விட முயன்றேன் முடியவில்லை.
"ஓரு பிசாசு ஒண்டு வந்து வாச்சிருக்கு. எனக்கு ஒண்டுக்கும் லாக்கில்லை. எப்ப பாத்தாலும் மூசி மூசி நித்திரை கொள்ளத்தான் தெரியும்". பியர் வாடை கப்பென்றடித்தது.
ராஜகுமாரன் போயிருப்பான். அவனால் இதையெல்லாம் சகிக்கமுடியாது. எனக்குள் பெருமூச்சு எழுந்தது. இருந்தும் நித்திரை போல் நடிப்பதில் குறியா இருந்தேன். பின்னால் எதுவோ ஊர்ந்தது. எனக்கு அருவருத்தது. சிறிது விலகிக் கொண்டேன்.
"வாடி இஞ்ச" அணைக்க முயன்றான். அவன் முரட்டுக் கரம் பட்டு விழித்தது போல் நடித்தேன்.
"எனக்கு நித்திரை வருகுது நாளைக்கு வேலைக்குப் போகவேணும்".
"ஏன் நானும் தான் வேலைக்குப் போகவேணும். இவ மட்டும்தான் உலகத்திலேயே வேலைக்குப் போறா". நக்கலாய்க் கூறிய படியே இதழ் தேடினான்.
"எனக்கு வயித்துக்க நோகுது என்னால இண்டைக்கு ஏலாது" தள்ளிப்படுத்தேன்.
"உனக்கு எப்பதான் ஏலும்? இதைத்தானே நெடுகலும் சொல்லுறாய்" அவன் கை உடல் அளைந்தது. முழங்கை கொண்டு அவன் நெஞ்சில் இடிக்கத் தோன்றியது. கட்டுப்படுத்திக் கொண்டேன். அவசரப்பட்டால் காயப்படப்போவது நான்தான்.
"என்னால ஏலாது நேற்றைய நோவே இன்னும் போகேலை" விலகிக் கொண்டேன். அவன் ஏளனமாச் சிரித்தான்.
"நேற்றோ! நேற்று என்னடி செய்தனி மரக்கட்டை மாதிரிக் கிடந்து போட்டு. ஏண்டி உனக்கு வேற யாரோடையாவது சினேகிதமே" தொடங்கி விட்டான். இனி அவன் பேசும் பேச்சுக்கள் காது கொண்டு கேட்க முடியாமல் இருக்கும்.
"என்ன கேக்கிறன் பேசாமல் கிடக்கிறாய்? சொல்லு. வேலைக்குப் போறன் எண்டிட்டு யாரிட்டையாவது போய் மேஞ்சு போட்டு வாறாய்?"
"சும்மா இருக்கிறீங்களே ஏன் இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்கள்?"
"அப்ப என்னோடையும் படுக்க மாட்டன் எண்டுறாய் வேறு ஒருத்தரோடையும் தொடர்பில்லை எண்டால். என்ன நீ...?"
"ஐயோ என்ன இது". நான் காதுகளைப் பொத்திக் கொண்டேன். என் கண்கள் கலங்க மங்கலாக அவன் தெரிந்தான். ராஜகுமாரன் போகவில்லை இங்கேதான் நிற்கிறான்.
"ராஜகுமாரா! ராஜகுமாரா!" நான் புலம்பினேன். ஓடிவந்து என் தலை வருடி விட்டான்.
"கூறிவிடு! என்னைப்பற்றி அவனுக்குக் கூறிவிடு" என்னை அணைத்துக் கொண்டான்.
"இல்லை ராஜகுமாரா, சொன்னால் உன்னையும் என்னிடமிருந்து பிரித்து விடுவான் என் வாழ்வில் எனக்குத் துணையாக இருக்கும் ஒரே ஜீவன் நீதான். உன்னை நான் இழக்க மாட்டேன்".
குறட்டை கேட்டது. அப்பாடா அவன் தூங்கிவிட்டான்.
"என்னுடன் வந்துவிடு" ராஜகுமாரன் கேட்டான்.
"எப்படி?" கண்ணால் வெளியே காட்டினான். எட்டிப்பார்த்தேன். வெள்ளைக் குதிரை வாலை ஆட்டியபடி நின்றது.
"சரி" என்றேன். என்னை வாரி எடுத்துக் குதிரையில் இருத்தினான். அவன் மாளிகை என் வீடு போலவே இருந்தது. பொருட்கள் எல்லாம் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தது.
"இன்று ஓவர் ரைம் செய்து வீட்டி வேலை எல்லாம் செய்து களைத்திருப்பாய் இதைக் குடி“ நீட்டினான். ஆவி பறக்கும் தேன் கலந்த பால். குடித்தேன்.
"காலை வேலைக்குச் செல்ல வேண்டும் படுத்துக் கொள்“
"நீ“
"நானும் தான்“ என்னை இழுத்து முத்தமிட்டு "குட்நைட“; என்றான். நான் மனம் நிறைந்து போக நித்திரையானேன்.
"நித்திரை கொண்டது காணும். போ! போய் ஒரு தேத்தண்ணி போட்டுக் கொண்டு வா“ நான் விழித்துக் கொண்டேன். பம்பரமானேன். வழமை போல. வெறுத்தது. வாழ்வு வெறுத்தது. எங்கே என் ராஜகுமாரன். தேனீர் கலக்கும் போது பின்னால் நின்று அணைத்துக் கொண்டான்.
"நான் தேனீர் கலக்கிறன் நீ குழந்தைகளின் வேலையைப் பார்“ என்றான். முரட்டுப்பிடியைத் தளர்த்தாது.
"ச்சீ! என்னடா இது பட்டப்பகலில“ நான் நெகிழ்ந்தேன்.
"என் கண்ணம்மாவை நான் எப்போது வேண்டுமானாலும் அணைத்துக் கொள்வேன்“ பிடி மேலும் இறுகியது.
"ஆ“
"என்னடி தேத்தண்ணி கேட்டாக் குசினிக்க நிண்டு தானாக் கதைக்கிறாய்“
"ச்சீ போ“ நான் ராஜகுமாரனின் பிடி விலக்கி விரைந்தேன். ராஜகுமாரன் போய் விட்டான். வருவான். இன்று இரவு மீண்டும் வருவான். பகல் வேளை ஒரு பிசிறு மாறாமல் ஒவ்வொருநாளும் ஒரே மாதிரி முடிந்து போனது. நான் களைத்துப் போனேன். குழந்தைகளைப் படுக்க வைத்து விட்டு கட்டிலுக்கு வந்தேன். வழமை போல் அவன் இல்லை. வருவான் பாதி இரவில் பாதி போதையில் வருவான். நான் அவனை என் நினைவிலிருந்து அகற்றினேன். இது ராஜகுமாரனின் நேரம். அவனுக்காக நான் காத்திருக்கும் நேரம். நான் உடைகளைத் தளர்த்திக் கொண்டேன். ராஜகுமாரன் வந்தான். நான் அவன் முகம் தேடினேன். போனவாரம் திரையில் பார்த்த ஜாடை கொஞ்சம். மூன்று நாட்கள் முன்பு வீடியோவில் பார்த்த முகம் கொஞ்சம். நண்பி வீட்டிற்கு வந்து போன இளைஞனின் முகம் கொஞ்சம். சரியாக முடிவெடுக்க என்னால் முடியவில்லை. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஆனால் பிடித்திருந்தது.
"என்ன?’ நான் குழைந்தேன்.
"நீ அழகாக இருக்கிறாய்“ என்றான்
"ஆ! நீயும் தான்“ என் உடல் உஷ்ணம் உணர்ந்தேன். அருகே வந்தான். நான் இருகை நீட்டினேன். அவன் முகம் நோக்கி. கதவு திறந்து கொண்டது. தள்ளாடியபடியே அவன் வந்தான். வில்லன். என் உடலின் உஷ்ணம் அடங்கிக் கொண்டது. கண் மூடினேன். அவசரமாக தொம் என்று கட்டிலில் விழுந்தான். இறுக என்னை அணைத்துக் கொண்டான். நான் விலக முயன்றேன். முடியவில்லை. நான் திணறினேன்.
"ராஜகுமாரா! ராஜகுமாரா காப்பாற்று என்னை“ புலம்பினேன். ஓடிவந்து என் தலை வருடியபடியே
"காலால் உதைத்து விடு“ கத்தினான். முயன்றேன் நான். முயன்றேன். முடியவில்லை. செய்வதறியாது தடுமாறினான் ராஜகுமாரன்.
"என் கண்ணே என் ராசாத்தி“ என் நெற்றியில் முத்தமிட்டான். நான் நான் பரிதாபமான அவனைப் பார்த்தேன். என்னை இறுக அணைத்துக் கொண்டான். அவனின் ஸ்பரிசம் சுகமாக இருந்தது. நானும் அவனை அணைத்துக் கொண்டேன். ராஜகுமாரன் தன் இதழ் கொண்டு என் உயிர் குடிக்க நான் கிறங்கிப் போனேன்.

சுமதி ரூபன்
உயிர்நிழல் -2000

Tuesday, March 01, 2005

அமானுஷ சாட்சியங்கள்..

- சுமதி ரூபன் -

"ஏதோ ஒரு வெளியில் விடுபட்டவளாய் கைகளை அகல விரித்துப் பறந்து கொண்டிருக்கிறேன். இது சுதந்திரத்தின் குறியீடு அல்ல இருக்கைக்கும் இறத்தலுக்குமான போராட்டம். வானுக்கும் மண்ணுக்குமான இடைவெளி. ஆரம்பத்திற்கும் முடிவுக்குமான தத்தளிப்பு. சிந்தனைகள் மாறிமாறி மோதி என்னைக் குழப்பதிற்குள் தள்ளி விட.. வெறுமனே பறந்த வண்ணம் நான்.."

என்ர பெயர் நளாயினி. எல்லாரும் என்னை நளா நளா எண்டு கூப்பிடுவீனம். வயது 18. உயரம் 5’6.5”. கனேடிய உடுப்பு சைஸ் 8க்குள்ள என்ர உடம்பு கச்சிதமாகப் புகுந்து கொள்ளும். நீண்ட தலைமயிரை தூக்கி துணி ரப்பரால இறுக்கித் தொங்க விட்டிருப்பன். புதுசா ஏதாவது அலங்காரம் செய்ய ஆசை இருக்கு கூட கொஞ்சம் தயக்கமும் இருக்கு. கனடா வந்து மூன்று மாதங்கள். முழுநேரப் படிப்பு. பகுதி நேர வேலை எண்டு நேரத்தை ஓடிப் பிடிச்சுக் கொண்டிருக்கிறன். என்னக் காசு கட்டிக் கனடாவிற்கு கூப்பிட்ட அண்ணாக்கும் அக்காவுக்கும் காசைக் கெதியாத் திருப்பிக் குடுத்து விடவேணும் எண்ட வெறி எனக்குள்ள. (அவர்கள் கேட்காவிட்டாலும்)

அக்கான்ர ஒப்பாரி கேட்டு முடிய அண்ணர் எனக்கு போன் அடிச்சு தன்மையா நிதானமா
“என்ன நளா இது.. ஏன் இப்பிடியெல்லாம் செய்யிறா.. அக்கா உனக்காக எவ்வளவு எல்லாம் செய்திருக்கிறா” நான் குறுக்கிட்டன்
“அப்ப நான் என்ன செய்ய? உன்னோட வந்து இருக்கட்டே”.
“என்னடி விளக்கமில்லாமல் கதைக்கிறாய் என்ர வீட்டில எங்க இடமிருக்கு நானே என்ன செய்யிறதெண்டு தெரியாமல்..” நான் திரும்பவும் குறுக்கிட்டன்.
“அப்ப என்ன அண்ணா செய்யிறது? வேலை செய்யிறன் தானே தனியப் போய் எங்கையாவது இருக்கட்..”
“என்னடி எங்கள எல்லாம் அவமானப்படுத்தவெண்டே அங்கையிருந்து இஞ்ச வெளிக்கிட்டு வந்திருக்கிறா நீ வரமுதல் எவ்வளவு நிம்மதியா, சந்தோஷமா நானும் அக்காவும் இருந்தனாங்கள் தெரியுமே? இப்ப நீ வந்தாப் பிறகு எப்ப பாத்தாலும் பிரச்சனை. எங்கள நிம்மதியா இருக்க விட மாட்டியே” குரல் உயந்தது.
“நானென்னண்ண பொய்யே சொல்லுறன்”
குரலின் கடினம் கரைய கனிவு கலந்து “இல்லை நளா.. நான் அப்பிடிச் சொல்லேலை ஆம்பிளைகள் கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் இருப்பினம்..இஞ்சத்தையான் ஆக்கள மாதிரி உடுப்புகளைக் கண்டபடி போடாத, கொஞ்ச நாளைக்குப் பல்லக் கடிச்சுக் கொண்டு கண்டும் காணத மாதிரி இரு அம்மாவும், அப்பாவும் கெதியா வந்திடுவீனம் பிறகு எல்லாம் ஓ.கேயாயிடும். அதுக்கிடேலை சின்ன விஷயத்தைப் பெரிசாக்கி எங்கட குடும்ப மானத்தைக் கப்பலேத்திப் போடாத”
“சரி அண்ண அப்பிடியெண்டா ஒண்டு செய்வமே?”
“சொல்லம்மா..”
“இல்லையண்ண உனக்கும் பதின்மூண்டு வயசில பொம்பிளப்பிள்ளை பெஞ்சாதி எல்லாம் இருக்கீனம் தானே அவேலில ஒராள கொஞ்ச நாளைக்கு அத்தானோட கொண்டு வந்து விடன் நான் நிம்மதியா இருப்பன்”

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”


எனக்கான சிறை என்னால் வடிவமைக்கப் பட்டது. பல வகை ஆணிகள் பூட்டுக்களால் அறைக்கதவு இறுகிக் கொண்டது. வெளியில் சாப்பிட்டு அறைக்குள் ரீ குடித்து எனக்கான தொலைபேசி எனக்கான தொலைக்காட்சி என்று என்னை நானே அடைத்துக் கொண்டேன்.
அக்கா பிள்ளைகள் கதவைத் தட்டும் “சித்தி சித்தி” எண்டு குரல் கேக்கும். கொடூரமாக எனைக் கொச்சைப் படுத்திச் செல்லும் அக்காளின் குரல். “சரக் சரக்” கெண்ட சப்பாத்துச் சத்தத்துடன் ஆண்மை வீரியத்தைத் தூக்கி நிற்கும் “பெர்பியூம்” வாசனையுடன் நிதானமாய் வேலைக்குச் சென்று திரும்பும் அத்தான் உருவமாய். தன் கணவனின் ஆண்மையில் திருப்தியும் பெருமையும் காணும் அக்காள்.

சம்பளக் காசு வந்தவுடன வாடைக்கும் சாப்பாட்டுக்கும் எண்டு கொஞ்சத்தை அக்காட்டக் குடுத்தாள் நளா
“உன்னைக் கொண்டு உழைப்பிச்சுக் காசு சேக்கத்தானே இஞ்ச கூப்பிட்டனாங்கள் இஞ்ச எங்க சாப்பிடுறா எண்டு சாப்பாட்டுக் காசு தாறாய். உங்களுக்கெல்லாம் கொழுப்படி”
“எனக்குச் சும்மா ஒரு வீட்டில இருக்க விருப்பமில்லை”
“ஓ உங்களுக்கு கனடா வந்தவுடனயே பிளான் பிடிபட்டிட்டுது ஆ.. காலமடி”

வாடைக்காசை மேசையில வைச்சிட்டு நளா போனாள். அது தொடப்படாமல் மேசையில் பல நாட்களாகக் கிடந்தது.

விரிந்து கிடந்த கனேடியக் கரிய வானத்தில் இலைகளைத் தொலைத்த குச்சி மரங்கள் பல் நிற பல்புகளாய்ப் பூத்து வழி காட்ட அத்தான் அவசரமில்லாது காரை ஓட்டினார். நளாவின் கைகளைத் தனக்குள் புதைத்து “அம்மா அப்பா எப்பியெடி இருக்கீனம் அவையளும் வந்திட்டாப் பிரச்சனை தீந்திட்டும்” அக்கா வார்த்தைகளால் குறுக்கிட கண்களை வெளியே அலையவிட்ட நளாவின் கனவில் பரந்து கிடந்தது எதிர்காலம். குளிரும் உடலின் சிறிய உதறல் மகிழ்ச்சி தர அக்கா பிள்ளைகளை இழுத்து மடியில் போட்டாள்.
“நல்லாப் படிக்க வசதியிருக்காம் முடிஞ்சா கொஞ்ச நேரத்துக்கு ஏதாவது வேலையும் செய்தியெண்டா உன்ர செலவுக்கு உதவும் நாங்களும் கெதியா வந்திடுவம்” அம்மாவின் குரல் அடிக்கடி ஒலித்தது.
அண்ணா தூர இருக்கிறார். நளாவின் அனைத்து வேலைகளையும் சிரித்த முகத்தோடு தன் பக்கம் எடுத்துக் கொண்டார் அத்தான். காரில் முன்னால் இருத்தி ‘இமிகிரேஷன்’ பள்ளிக்கூட ‘அட்மிஷன்’ இத்யாதி இத்யாதி. குளிர் காற்றடிக்க காரின் யன்னல் சாத்திய முழங்கை நளாவின் மார்போடு தேய்த்துச் சென்றது. நளா உடலை ஒடுக்கிக் கொண்டாள்.
இரவு கட்டிலில் புரண்டு “ச்சீ அத்தான் அப்பிடிப் பட்டவரில்லை” சமாதானமாய் நித்திரை கொண்டாள். அக்கா வேலையால் வருமுன்னே நளாவும் அத்தானும் சமையல் முடித்து வைத்தார்கள். கைகள் இடறுப்படும் போது “சொறி” என்றவாறு பார்வையைத் தாழ்த்திக் கொண்ட போது நளாவிற்கு நிம்மதியாக இருந்தது. குளிக்கும் போதும் உடை மாற்றும் போதும் கதவோரத்தில் நிழல் ஆடியது. வேலையால் அடிக்கடி வெள்ளண வீட்டுக்கு வரத்தொடங்கிய அத்தானின் பார்வைகள் நிறம் மாறிப் போயிருந்தன. நளா வேலை எடுத்துக் கொண்டாள். பாடசாலை வேலை என்று அக்காவிற்கு முன்னால் சென்று பின்னால் வீட்டிற்கு வரப் பழகிக் கொண்டாள். எல்லாமும் சமாதானமாயிற்று.

பஸ்சிற்கு நிண்டவளை கடந்து சென்ற கார் சிறிது தூரம் போய்ச் சுற்றி வந்து அழைத்தது. மறுக்கும் துணிவின்றி மீண்டும் சமாதானமாகி ஏறிக்கொண்டாள். படிப்பு வேலை பற்றி யதார்த்தமா மிக யதார்த்தமாக வார்த்தைகளை வீசிய படியே பார்வையை தூர ஊடுவ விட்ட அத்தான் மேல் நளாவிற்கு நம்பிக்கையும் மதிப்பும் ‘ஸ்யரிங்கை” மாற்றும் போது நளாவின் துடையை விரல்கள் உரஞ்சிச் செல்லும் வரை இருந்தது. கால்களை இழுத்துக் கொண்டாள். பேச்சுக்கள் தடைப்பட்டது. மௌனம் ஊடுவியது.
வேலைத் தளத்தில் இறக்கி விடும் போது பார்வையில் நிஷ்டூரம்.

இருமி இருமிக் களைத்துப் போன அக்காள் மகளை தன்னோடு அணைத்துக் கதை சொல்லிப் படுக்க வைக்க முனைந்து கொண்டிருந்த நளாவின் அறைக்குள் திடீரென புகுந்த அத்தான், மகளின் தலை தடவி “எப்பிடி இருக்கடா” என்றவாறு நளாவின் ஒற்றை மார்பை இறுக்கிப் பிடித்துப் பிசைந்து விலகிச் செல்ல திடுக்கிட்டு உடல் உதற விறைத்துப் போனாள்.

“என்னடி சொல்லுறாய்? என்னடி சொல்லுறாய்? பிள்ளை மாதிரி நினைச்சு எல்லாம் ஓடியோடிச் செய்யிற எங்கட வாழ்க்கையைக் கெடுக்க வந்த பாவியடி நீ. நீ இப்பிடிச் சொன்னனீ எண்டு தெரிஞ்சா மனுசன் துடிதுடிச்சுப் போயிடும். “காட்அட்டாக்” வந்து செத்துப் போயிடும்”

பனி படர்ந்த வெளியில் பஸ்சிற்காகக் காத்திருந்த போது வந்து நின்ற காரைத் துச்சம் செய்து விறைத்து நின்றாள் நளா. கார் மறைந்து போனது.

ஒருநாள் -
பல்கனி கம்பியில் சாய்ந்த படியே சாம்பல் பூத்த இரவில் “செல்” போனில் சிரித்த படி நின்றவனை யாரும் பார்க்காத கணம் ஒன்றில் வேகம் கொண்டு தள்ளி விட்டு வீறிட்டுக் கதறி சாய்ந்து விழும் அவன் உருவம் உடைந்து சிதைய மட்டும் பார்த்துக் கொண்டு நின்றாள் நளா

இன்னுமொரு நாள் -

“பாஸ்ரா” அவியப் போடத் துள்ளிக் குதித்துக் கொதிக்கும் தண்ணீரைப் பாத்திரத்துடன் தூக்கி சுவரோரம் சாய்ந்த படி அவளையே வெறித்து நிற்கும் அவன் முகம் நோக்கி வீசி ஊத்தினாள் நளா

இன்னும் இன்னும் ஒருநாள் -

போத்திலை உடைச்சுத் துகளாக்கி சாப்பாட்டுக்குள் கலந்து கொடுத்தாள் நளா

நாட்கள் நகர்ந்தது இன்னும் இன்னும் பல நாட்கள் கனவுகளில் அவள் தொடர்ந்தாள்..

தொலைக்காட்சியில் வேண்டாததற்கெல்லாம் வெற்றுடம்போடு வந்து போனார்கள் அழகிகள்.
அண்ணியின் முகம் தூக்கிய முகச்சுளிப்பில் மொத்தத்தையும் தெரிந்து கொண்டாள். அண்ணா பார்வையைத் தவிர்த்துக் கொண்டான்.
அம்மா அப்பா வரும் நாளை கணக்கிட்டுக் கணக்கிட்டு நாள்காட்டியில் கட்டம் போட்டாள்.

சோதனைக்காகப் படித்தவற்றை இரைமீட்டு இரைமீட்டு மனதில் நிம்மதியுடன் நித்திரையாகிப் போனவள் கனவில் இப்போதெல்லாம் வெறுமை.

இருப்பிற்கும் இறத்தலுக்குமான இடைவெளியின் ஊஞ்சலாடும் இரவுகளின், எண்ணிக்கையைத் தள்ளி விடியும் பொழுது பெருமூச்சாகக் கழியும்.

ஆழ்ந்த நித்திரையில் அவள். மூச்சு சீராக வடிந்து கொண்டிருந்தது. புற அசைவுகள் இம்சிக்காத சமவெளியில் நீச்சலாய்.. ஒலிகள் செவிப்பறையைத் தாக்காத நிசப்தம். தொடைகள் குளிர புழுப்போல் எதுவோ ஊர்ந்து ஊர்ந்து.. வீரிய மூச்சு காதோரம் கூடேற்ற.. பலம் கொண்டு இரு கைகளாலும் தள்ளி உடையை இழுத்து விட்டு.. “அக்கா அக்கா” என்று குரலெடுத்துக் கத்தியவளின் தொண்டை கட்டிப் போயிருந்தது. கதவுகள் அகலத்திறந்து மூடியது.
நடுச்சாமம் சுடு நீரில் அழுதழுது முழுகினாள். நித்திரையற்று இரவைக் கழித்து வெளிச்சம் காணுமுன் உடுத்து கதவை இறுக்கப் பூட்டி வெளியேறினாள். சோதினைப் பேப்பரில் கேள்விகள் நித்திரையற்ற அவள் கண்களுக்குப் புழுவைப்போல் நெழிந்தன. தன் உடலை அருவருப்போடு பார்த்துக் கொண்டாள். கண்களுக்குத் தண்ணீர் தெளித்து முடிந்தவரை பதிலளித்து வெளியே வந்து குளிர்ந்து போன சீமெந்து இருக்கையில் இருந்து சத்தமில்லாது வாய் விட்டழுதாள். இது என்ன விதி? அவளுக்குப் புரியவில்லை.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டும் அறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி”


உறைந்த குளிருக்குள் வாயால் புகை போக்கி போல் மூச்சு விட்டபடி வேகமாகக் கடந்து செல்லும் ஆண்களின் உடல்களில் “அந்த” பகுதியில் அவள் கண்கள் நிலைத்து நின்றது. எல்லா ஆண்களுக்குமே காம வேட்டைக்கு அலைவது போல் துருத்திக்கொண்டு நின்றது “அந்த” இடம்.
வீட்டிற்கு வந்த போது இருட்டிவிட்டிருந்தது. அக்காள் கண்டும் காணாது சமையலில் இருந்தாள். பிள்ளைகள் ரீவியில் மூழ்கிப் போய் இருந்தார்கள். எல்லோரும் தமக்கான வாழ்கையில் லயித்திருந்தார்கள். பூட்டைத் திறந்து அறைக்குள் வந்தாள். உறவுகள் இல்லாத உலகொன்றில் தனித்து விடப்பட்டவள் போல் தவிப்பு. கண்கள் சொருகிச் சொருகி வந்தன. கட்டிலில் சரிந்து கண்களை மூடினாள். அத்தானின் ஆண் வீரியம் கலந்த “பெஃர்பியூம்: வாசனை மூக்கைத் தாக்கியது. திடுக்கிட்டெழுந்தாள். அறையை ஒருமுறை சுற்றிப் பார்த்தான். பொருட்கள் அசையாது அப்படியே இருந்தன. எழும்பி போய் பூட்டைப் பார்த்தாள். இறுக்கமாக இருந்தது. நேற்று அவள் தோய்த்து “ஹீற்ரறில்” காயப்போட்ட அவள் “அண்டவெயார்” “பிரா” இரண்டையும் காணவில்லை. திடுக்கிட்டவளாய் உடுப்பு வைக்கும் லாச்சியைத் திறந்து பார்த்தாள். உள்ளே “அதுகள்” அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தன. நிம்மதிப்பெருமூச்சோடு விரலால் தனது உடைகளை அழைந்தவள் கையோடு ஒட்டிக்கொண்டு வந்தது ஆண்களின் “அண்டவெயார்” ஒன்று
“இல்லை நளா நான் சொல்லுறதைக் கேள்”
“ஐயோ கடவுளே இவளுக்கேன் புத்தி இப்பிடிப் போகுது”
அண்ணாவுக்கு நன்றிக் கடன். தன்னைக் கனடாவுக்கு கூப்பிட்டு விட்ட அத்தானில நன்றிக் கடன். தன்னிலும் பத்து வயசு மூத்த அத்தானை நிமிந்து பாத்துக் கேள்வி கேட்கப் பயம். அக்கா பிள்ளைகள் பற்றிய அங்கலாய்ப்பு. “பொறுத்துக் கொள்ளடி அம்மா,அப்பா வரமட்டும்”

“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்”


அனைத்தையும் விலத்தி விறைத்துப் பொறுத்துக் கொண்டாள்.
அம்மா, அப்பாவும் வந்து விட்டார்கள் இனித் தனியாக ஒரு இடம் பார்த்து மூன்று பேருமாக.. நிம்மதிப் பெருமூச்சு.
வீடு சந்தோஷக் களை கட்டியது. சொந்தங்கள் வந்து போயின. அக்கா அவள் முகம் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினாள். அண்ணா படிப்பைப் பற்றி விசாரித்தான். தன்னையும் கலகலப்பாக்க முனைந்து அத்தான் வேலையால் வீட்டிற்கு வரும் போது மட்டும் அறைக்குள் அடைந்து.
வீடு முட்டச் சனம். சமையல், சாப்பாடு ஊர்க்கதைகள் எண்டு நீண்ட ஒரு இரவில் அனைத்தையும் மறந்து போயிருந்த நளாவை “பெடியன் அழுறானடி ஒருக்கா என்னெண்டு பார்” அம்மா சொல்ல பாதியில் விட்ட ஊர்க்கதையைக் கேட்கத் துடிக்கும் அவசரத்தில் “வாறனப்பு” என்ற படியே ஓடி அறைக்கதவைத் திறக்க அரை குறை நித்திரையில் அழும் மகனைத் தட்டி விட்ட படியே தனது சாரத்தைத் தளர்த்தி மறு கையால் புடைத்து நிற்கும் தனது குறியை தடவிய அத்தானின் பசளை படர்ந்த பார்வையைத் தழுவிய நளா போன வேகத்தில் அறையை விட்டோடி தனது அறைக்குள் புகுந்து கொண்டு கதவைப் பூட்டிக் கொண்டாள்.
அம்மா, அப்பாவுடன் தனியா இடம் பார்த்து சென்ற பின்னரே மீண்டும் நளா மூச்சு விடத் தொடங்கினாள்.
“என்ன உனக்கும் அக்காக்கும் ஏதும் பிரச்சனையே. ரெண்டு பேரும் முகத்தைத் தூக்கிக் கொண்டு அலையிறியள்” அம்மா கேட்டா
இப்ப நிம்மதியா இருக்கிறன். அத்தானில அம்மாக்கு நிறம்பவே மதிப்பு இருக்கு அதைக் கெடுப்பானேன்.
“ச்சீ ஒண்டுமில்லையம்மா”
படுக்கையில் புரண்ட போது ஒருநாள் அம்மா அப்பாவிடம் சொன்னது நளாவின் காதில் விழுந்தது. “அந்தாளைப் போல ஒரு நல்ல பெடியன் எங்கட நளாக்கும் கிடைச்சிட்டிது எண்டா நிம்மதியா இருக்கும்”
கனேடியச் சட்டம் பெண்களுக்கு எத்தனையோ சலுகைகளைச் செய்து வைத்திருக்கின்றது. பாலியல் துன்புறுத்தல் என்பது இங்கே மிகப் பாரதூரமாக குற்றமாக கணிக்கப்பட்டு குற்றவாளியாக காணப்படுபவருக்கு பல ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது.
இங்கே எனது விட்டுக்குடுப்பு எதற்குள் சேர்த்தி. அக்காள் எண்ட பாசமா? குடும்பமானமா? கடைசிக்காலத்தில் அப்பா, அம்மாவை நிம்மதியாக இருக்க விட வேண்டும் என்ற எண்ணமா?
“அக்காவும் பிள்ளைகளும் இப்பதான் வந்திட்டு போகீனம் கொஞ்சம் வெள்ளண வந்திருந்தாச் சந்திச்சிருப்பாய்”
ஒரு சின்ன யோசினைக்குப் பிறகு “அத்தான் வரேலையோ?”
“பின்ன அந்தாள் வராமல்..” பெருமையான சிரிப்பு முகத்தில் வடிய “எனக்கும் அப்பாக்கும் சுவெட்டர் எல்லே கொண்டு வந்தவர் இந்தா உனக்கு ஒரு சொக்லேட் பெட்டி தந்தவர்”
கறுப்பு சொக்லேட்டின் உள்ளிருந்து வெண்நிறத்தில் வழியும் பாணியின் படம் போட்ட பெட்டி அவளிற்கு அருவருப்பூட்ட அம்மாவிற்குத் தெரியாமல் குப்பைத் தொட்டிக்குள் போட்டு விட்டு தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்.
அவளின் கனவுகள் இப்போது குரூரத்தைத் தவிர வேறொண்டையும் கொண்டிருப்பதில்லை.

Quelle - கறுப்பி