Saturday, March 20, 2004

சுவாலை

- ஞானம் -

பானுதேவன் தன் கொடிய கதிர்களால் புவி மக்களின் பசிய உடம்பைக் கருக்கி விளையாடிக் கொண்டிருந்தான். வாயுதேவன் அப்பக்கம் எட்டிப் பார்க்கவே தயங்கி எங்கோ ஓடி ஒழிந்து விட்டான். வெம்மை தாங்காமல் பறவைகள் கூட அகப்பட்ட அரும்பொட்டு நிழல்களில் பதுங்கிக் கொண்டன.

புனிதா காலையிலேயே ஊறவைத்த, கணவனதும் குழந்தைகளதும் அழுக்கான உடுப்புக்களைக் கிணற்றில் நாலு வாளி தண்ணீர் அள்ளித் தொட்டியுள் ஊற்றி, அவற்றை அலசிக் கழுவிக் கொடியில் உலர்த்திவிட்டு வீட்டுத் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தாள். குழந்தை முகுந்தன் வயிறு நிறையப் பால் குடித்த திருப்தியில் உள்ளே நல்ல நித்திரை.

'நேர்சரி' போகத் தொடங்கியிருக்கும் முரளி அத்திண்ணையில் குப்புறப்படுத்துக் கொப்பியில் கலர்ப் பென்சில்களால் தன் மனதுக்குள் எட்டியவற்றைச் சித்திரம் என்ற பெயரில் கிறுக்கிக் கொண்டிருந்தான்.

தினமும் குளிக்கும் நீர் வாய்க்கால் வழியே வந்து திண்ணயையொட்டி வளர்ந்துள்ள வேப்பமரத்தின் கால்களைச் சுற்றிவருவதால் இலைகள் உதிராமல் குளிர்மையாக மரம் இருந்தது.

வெப்பத்தின் களைப்புக்கு அந்தத் திண்ணைச் சுவரில் சாய்ந்திருப்பது புனிதாவுக்கு இதமாக இருந்தது.

சில நாட்களுக்கு முன்பு அவ்வூர்ப் பாடசாலையில், நகரப்பகுதியில் இயங்கிவரும் 'பெண்கள் அமைப்பு" நடத்திய பெண்கள் முன்னேற்றக் கருத்தரங்கிற்கு அவளும் சென்றிருந்தாள். பிரதான பேச்சாளர் முன்வைத்த கருத்து புனிதாவின் மனதில் ஆழமாகப் பதித்திருந்தது. அது இன்னும் அவள் காதில் ஒலிப்பது போல......

'ஆணாதிக்க சமூக அமைப்பில், குடும்ப நிறுவனத்தில் பெண்ணிற்குரிய கடமைகளை வலியுறுத்துகிறார்களே தவிர மனைவியைச் சமமாக, உயிரும் உணர்வுகளுமுள்ள சகமனுஷியாக நடத்தாமல், வீட்டு வேலைக்கார அடிமைபோல, பிள்ளைபெறும் யந்திரம்போல நடத்தும் ஆண் நாயகப்போக்கு சமுதாயத்திலிருந்து ஒழியும்வரை, ஒழிக்கப்படும்வரை விடிவேயில்லை. திருமணம் பேசப்படும்போது பெண்ணின் விரும்பம் மதிக்கப்படுவதில்லை. அவள் விருப்பத்துக்கு மாறாகவே செய்யப்படுகிறது. இன்று நிலவிவரும் சமூக அமைப்பில் திருமண வாழ்க்கை குடும்பம் என்பவை பற்றிய கருத்தாங்கங்கள் மாற்றமடையாவிடில், சமூக அமைப்பு மாற்றப்படாதவரை பெண்களுக்கு விடிவேயில்லை".

தன்னுடைய வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்ற சத்திய வாசகம் என ஏக்கத்துடன் அவள் விட்ட பெருமூச்சு உஷ்ணத்துடன் கரைந்தது.

புனிதா, க.பொ.த.சாதாரணப் பரீட்சையில் சிறப்புச் சித்திபெற்றுவிட்டாள் என்பதை அறிந்தபோது பாராட்டுத் தெரிவிப்பதற்குப் பதிலாக 'படித்தது இனிப் போதும்' என்று பெற்றோர்கள் கூறினார்.

'அவள் கெட்டிக்காரி படிப்பைத் தொடரட்டும்' என ஆசிரியர்கள் வலியுறுத்தியபடியால் ஒப்பாசாரமாக உயர் தரம் ஓராமாண்டில் தொடர்ந்து படிக்க அனுப்பியபோதியலும் தாயும் தகப்பனுமாகக் 'குசுகுசு'வெனப் பேசித் தமக்குள்ளே ஒரு கணக்குப்போட்டுக் கொண்டனர்.
.
'இவள் பெரிய படிப்புப் படிச்சால் அவளுக்குப் பொருத்தமான மாப்பிள்ளையைத் தேடிக் கட்டிக் குடுக்க எங்களிடம் என்ன வசதியிருக்கு? இளைவளும் பெரியவாகிற வயதுக்கு வந்து கொண்டிருக்கிறாள். இவளின்ரை காரியத்தை இழுபடவிட்டால் பிறகு இருகுமரையும் எப்படிச் சுமத்து?

புனிதா உயர்தரம் இறுதிப்ப பரீட்சை எழுதுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே உறவுக்காரப் பையன் ஒருவனைக் கூட்டி வந்து காட்டி, அடுத்த முகூர்த்தநாளில் இவளின் விருப்பத்தைக் கேளாமல் அவனைத் தாலிகட்ட வைத்தனர். பாவம் புதனிதாவின் தாய் தகப்பனுக்கு மகள் மீது பாசமில்லாம் இல்லை. மண் வெட்டியையும் தோட்டத்தையும் நம்பிப் பிழைக்கிற குடும்பம், படிப்பறிவுமில்லை, எத்தனையோ கோவில்களைச் சுற்றி வந்தும் ஒரு ஆண்குழந்தை கூட அவர்களுக்குப் பிறக்கவில்லை. பெற்றது இரண்டும் பெட்டைக் குஞ்சுகள். அதனால் இந்த அவசரமும் எரிச்சலும்!

இறுக்கமாக மிச்சம் பிடித்துச் சேகரித்த பணத்தில் மகளின் கழுத்துக்கும் கைகளுக்கும் நகைகளைப் போட்டுக் கலியாணம் முடித்து மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பிவிட்ட திருப்தி அவர்களுக்கு!

திருமணம் முடிந்து ஒருவாரம் கழியும் முன்பே 'சிவனேசா, இது சிறிய வீடு நாலுபேருக்கும் காணாது. அதனால் நாங்கள் இனி உன் அக்காவீட்டில் இருக்கப்போகிறோம்" எனச் சொல்லிவிட்டு அவளின் பெற்றோர் தமது பெட்டி படுக்கைகளுடன் புறப்பட்டுப் போய் விட்டனர்.

முன் அறிமுகமோ பழக்கமோ இல்லாதவனுடன் படுத்தெழும்புவது ஆரம்ப நாட்களில் அருவருப்பாயிருந்த போதிலும் புவனாவின் இளமையின் உணர்வு அவனை ஏற்றுச் சகித்துக் கொள்ளச் செய்தது.

அயல் வீட்டுப்பெண்கள் பகல் வேளைகளில் அவன் இல்லாத நாட்களில் புதுப் பெண்ணைப் பார்க்க வந்த சாட்டில், அவனைப் பற்றிச் சொன்னவை அவளுக்குப் பெரும் ஏமாற்றத்தையும் அழுகையையும் ஏற்படுத்தின. எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திப் போட்டு காவாலியாக ஊர் சுற்றித் திரிந்தவனாம். அவனின் அட்டகாசம் பொறுக்கமுடியாமல் அவனது தாய் தகப்பன் ஒரு ஜஸ்கிறீம் கடையில் எடுபிடி வேலைக்குச் சேர்த்து விட்டிருந்தவையாம்.

'அவன் போக்குச் சரியில்லை. குடித்துவிட்டு வருவதால் வேலை ஒழுங்காக செய்வதில்லை' என சில மாசங்களிலேயே கடை உரிமையாளர் தகப்பனிடம் வந்து முணு முணுக்கத் தொடங்கி விட்டாராம்.

ஒரு கால் கட்டுப் போட்டால் சரியாகி விடுவான். வாறவள் திருத்திப் போடுவாள்' என அவனின் தாய் அடியெடுத்துக் கொடுக்க, தகப்பன் புனிதாவின் பெற்றோரிடம் பேசி, அவசரம் அவசரமாக செல்வி குமுதா திருமதி சிவனேசனாக்கப்பட்டிருக்கிறாள்.

'பொறாமை பிடித்த சனங்கள் அப்படி இருக்காது" என எண்ணி மனதைத் தேற்கிக் கொண்டாள்.

'புனிதா! நீர் நல்ல வடிவு. நாள் முழுவதும் ரோஜாமாதிரி உம்மைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்." என அவன் அவளைப் புகழ்ந்தபோது அவள் கன்னங்கள் ரோஜாவாகின.

'எனக்கு அவனின் கீழ் வேலை செய்யப் பிடிக்கேலை. இனி சுயதொழில் செய்து என் செல்லத்தைச் சந்தோஷமாக வைக்கப் போறன்" அவளின் கன்னத்தை வருடியபடி சொன்னான் சிவனேசன்.

'சுயதொழில் செய்ய கொஞ்சம் முதல்தேவை. கைநிறையச் சம்பாதிக்கலாம். உமது நகைகளைத் தந்தீரெண்டால் இதுமாதிரி இருமடங்கு நகைகளை மூண்டுநாலு மாசத்தில் செய்திடலாம்" அவன் தயங்கித் தயங்கி நைஸாகக் கேட்டான்.

அவனது சுயதொழில் ஆர்வம் சரியெனக் கருதிய புனிதா தனது சீதமான நகைளைக் கழற்கிக் கொடுத்தாள்.

அன்று மாலையே தகரத்தினால் செய்யப்பட்ட ஜஸ்கிறீம் உற்பத்திக்காரரிடம் வாங்கி நிரப்பிக் கொண்டு நாளைக்கு காலையிலிருந்தே என் வியாபாரத் திறமையைக் காட்டுறன் பார் புனிதா".

கொள்முதல் கடனைக் கொடுத்து விட்டு மறுநாள் மாலை 180 ரூபாவை அவளிடம் கொண்டு வந்து நீட்டியபோது அவளுக்குப் பூரிப்பாக இருந்தது. 'நாளைக்கு இன்னும் டபிளாக்கிக் காட்டுறன் பாரும்". சாப்பிட்டு கொண்டே சவால் போலக் கூறினான்.

அடுத்தநாள் வீடுவரும்போது ஜஸ்கிறீம் வண்டி தள்ளாடிக் கொண்டு வந்து.

'எடியே எடுத்து வை சோத்தை' மதுபோதையில் அவன் வாய் குழறியது. 70 ரூபாவை எடுத்து நீட்டினான்.

'என்ன! குடித்துவிட்டு வந்திரக்கிறியள்? ஏன் இந்த புதுப்பழக்கம்?"

'பகலெல்லாம் உழைத்துக் களைத்த அலுப்பில் குடித்தால் உனக்கென்னடி. குடி ஒண்டும் எனக்குப் புதிசில்லையடி"

புனிதாவின் உள்ளத்தில் கோபமும் ஏமாற்றமும் கொப்பளித்தன.

சாப்பாட்டைத் தட்டில் எடுத்து வைத்துவிட்டு அவள் போய்ப் படுத்து விட்டாள்.

அவள் சாப்பிட்டாளா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் சோற்றை அள்ளி வயிற்றில் அடைந்தவிட்டு, அவளருகே வந்து படுத்தவன் அவள்மீது கையைப் போட்டு இறுக்கி அணைத்தான்.

அவள் திமிறினாள்.

உடம்பைச் சுற்றிய பாம்பு அதன் வெறியைக் கக்கிய பின்பே பிடியைத் தளத்தியது.

மறுநாள், அதற்கும் மறுநாள் என அவள் கைக்கு வருவது 50,60 ரூபா மட்டுமே என்றாகியது.

ஒரு நாள் காலை வெறியில்லாமல் அவன் இருந்தபோது வருமானம் போதாததால், தனது படிப்புக்கேற்ற வகையில் தானும் ஏதாவது தொழில் தேடட்டுமா என அவனைக் கேட்டாள்.

'நீ படித்ததை உன்னோடை வைச்சுக் கொள். தொழில் பாக்கிறனெண்டு சொல்லிக்கொண்டு ஊர் மேய்ந்து திரிய வேண்டாம். பொம்பிளை உழைச்சு வீடு நிறையாது? நான் உழைக்கிற காசை வைச்சுக் சமாளிக்சுக் கொண்டு வீட்டிலே அடங்கியிரு. வீட்டு வேலையைப் ஒழுங்காய்ப் பார்"

அவனை எதிர்த்தால் அடி உதைகளையே வேண்டிக் கட்டிக்கொள்ள நேரிடும் என்பதால் அவள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.

பாடசாலை நாட்களில் கவிதை சிறுகதை என எழுதிப் பாராட்டுப் பெற்றவள். தனிமையாகப் பொழுதைப் போக்க படிப்பது எழுதுவது எனத் தொடங்கி எதியவற்றை முடிக்க முடியாமல் தலைசுற்றும் வாந்தியும் அடிக்கடி குறுக்கிட்டன.

அடிப் பெட்டிக்குள் அவற்றைப் போட்டு மூடிவைத்துவிட்டுப் வீடு துப்பரவாக்கல், சமைத்தல், பாத்திரம் கழுவுதல், உடுப்புத் தோய்த்தல் என்பவற்றோடு கர்ப்பமாதல், குழந்தை பெறுதல், பாலூட்டல், பராமரித்தல் என்ற வேலைகளும் அவளை இறுகிப் பிடித்துக் கொண்டன.

மாலையானதும் அவனது வழமையான தள்ளாட்டம். 'எடியே! சோத்தைப் போடடி? உறுமல் அது முடிய 'படுக்க வாடி பலவந்தமான கர்ச்சனை.

புனித 21 வயதுக்கிடையிலேயே இருபிள்ளைகளைப் பெற்று காய்ந்த ஒடியல் போலானாள்.

பல சரக்குக் கடையில் அரிசிவாங்கச் சென்ற போதுதான் அந்த விளம்பரத்தைப் பத்திரிகையில் பார்த்தாள். மாவட்ட கலாச்சாரப் பேரவை சிறுகதைப் போட்டி ஒன்றை நடந்துவதற்காக விளம்பரம் செய்திருந்தது.

மனதில் ஒரு ஆசை முளையிட்டது.

அடிப் பெட்டியில் போட்டிருந்த நிறைவு செய்யப்படாத கதையொன்றை எடுத்து அதைப்பூரணப்படுத்தி அனுப்புவதற்காக அவள்பட்ட பாடுகள்............

அவள் எழுதிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்த குழந்தை முகுந்தன் பாலுக்கழுதது. பால்கொடுத்து அதனைத் தூங்க வைத்து விட்டு எழுதத் துவங்கிய போது, எழுதிவைத்த தாள்களை மூத்தமகன் முரளி எடுத்துக் கசக்கிக் கப்பல் செய்து கொண்டிருந்தான். எரிச்சலில் அவன் முதுகில் இரண்டு வைக்க அவன் வீரிட்டழ திடுக்கிட்டெழுந்து தத்தி ஓடி வந்த சின்னன் கதை எழுதி வைத்திருந்த ஏனைய தாள்களிலும் சிறுநீர் கழித்துவிட... அவள் ஏசி உலுக்க இரண்டும் வீரிட்டுக் கதறிக் கச்சேரி பண்ணின. அவர்களைச் சமாதாப்படுத்துவதே போது போது மென்றாகிவிட்டது.

இனி,
.
சைக்கிளின் தள்ளாட்டம்

'எடியே! சோத்தைப் போடடி'
'கெதியாய்ப் படுக்கவாடி'
அடுத்த நாள்
காலைச் சாப்பாடு முடித்து ஜஸ்கிறீம் சைக்கிளை அனுப்பி விட்டுக் குழந்தைகளைக் குளிப்பாட்டி உணவூட்டி விளையாட விட்டுவிட்டு அவசர அவசரமாக உடுப்புகளைத் தோய்த்து உலரவிட்டபின் எழுதத் தொடங்க உட்கார்ந்தபோது....

முகந்தன் காற்சட்டையை நனைத்துப்போட்டு வீரிட்டுக் கதறினான். ஓடிப்போய் அவனைத்தூக்கிக் கழுவி உடுப்புமாற்றிப் பவுடர்போட்டுத் தொட்டலில் கிடத்தி ஆட்டிவிட்டுப் பேணையைத் தூக்கியபோது, வீட்டுச் சொந்தக்காரன் வாடகைப் பணத்தைத் தருமாறு தூஷண வார்த்தைகளால் அபிஷேகித்துத் தலைகுனிய வைத்தான்.

அவனைக் கெஞ்சி, தவணை சொல்லி அனுப்புவதே பெரும்பாடாகி விட்டது.

'ஏன், உன்ரை புருசன் உழைக்கிற காசு முழுவதும் குடிச்சுத் தூலைக்கிறாரோ? இல்லாட்டி வேறு வைப்பாட்டி இருக்கோ? வீட்டுக்காரன் என்ன கேள்வியெல்லாம்... சீ........... தூஷணம்கூடம் பேசிவிட்டுப் போறான். அயலட்டைச் சனம் சிரிக்குது"

பக்கத்து வீட்டு பார்வதிக் கிழவி விண்ணாணமாக விசாரித்து இன்னுமின்னும் எரிச்சலை மூட்டிவிட்டுப் போனாள்.

'இந்தக் குடிகாரனோடு நரக வாழ்க்கை வாழவேணுமென்பது என்ரை தலையெழுத்தாய்ப் போச்சு' வெளியே சொல்ல முடியாமல் அவள் மனம் குமைந்தது. அன்றும் கதையை எழுதி முடிக்க முடியவில்லை.

மாலையில் வழமைபோல சைக்கிள் தள்ளாட்டம்.

'பசி வயித்தைக் கிள்ளுது சோத்தைப் போடடி"

சோற்றுத் தட்டை அவன் முன்னே வைத்துவிட்டு வாடகைக் காசுக்காக வீட்டுக்காரன் வந்து ஏசிப்போனதைச் சொன்னாள் புனிதா.

'வாடகை கேட்க வந்தவனோ உன்னோடை சரசமாட வந்தவனோ?" வாய் உழற வார்த்தைகளைக் கொட்டினான்.

'சே! எளிய மனிசா! என்ன சொல்லுறாய்? வாடகை காசு கொடுக்க வக்கில்லை. உனக்கு வீடென்ன குடும்பமென்ன?" சீற்றத்துடன் புதிதா கத்தினாள்.

சாப்பாட்டுத் தட்டை வீசி எறிந்து விட்டுத்துள்ளி எழுத்தவன் அவள் கன்னங்களிலும் உடம்பிலும் கோபம் தீரும்வரை அறைந்தான். குழந்தைகள் வீரிட்டுக் கத்தின.

அவனது அட்டகாசத்தைக் கேட்ட அயலவர்களின் தலைகள் வேலிக்கு மேலாய் எட்டி விடுப்புப் பார்த்தன.

குழந்தைகளை அணைத்தபடி அவள் இரவு முழுவதும் விம்மிக் கொண்டேயிருந்தாள்.

நிறைவெறியில் அவன் உடுத்திருந்த சாரம் கழன்றது கூடத் தெரியாமல் அவன் உறங்கிப் போனான்.

காலையில் எழுத்து பார்த்தபோது சைக்கிளுடன் அவன் நேரகாலத்துடன் புறப்பட்டுச் சென்று விட்டான்.

விசுக்கோத்தையும் பாலையும் கொடுத்துப் பிள்ளைகளைச் சமாளித்து விட்டு உடம்பு வலிதீர அவள் நோ எண்ணெய் தடவி விட்டுப் படுத்துக் கிடந்தாள்.

மாலையில் சைக்கிள் நிதானமாக வந்து நின்றது. தள்ளாட்டமில்லை.

'முரளி நான் வெளியே சாப்பிட்டு விட்டன் உங்களுக்கு இடியப்பப் பார்சல் வாங்கியிருக்கு, 300 வைச்சிருக்கு நாளைக்கு வீட்டு வாடகையைக் குடுத்திடச் சொல்லு"

அவன் போய்ப் படுத்து உறங்கி விட்டான்.

இலக்கியப் போட்டி இறுதிநாளுக்கு இன்னும் மூன்று தினங்களே இருந்தன! எப்படியும் நாளைக்கு எழுதி முடித்து அனுப்புவதென்ற வைராக்கியத்துடன் குழந்தைகளை அணைத்தபடி அவளும் உறங்கிவிட்டாள்.

ரொட்டியையும் தேநீரையும் காலை உணவாக அவனுக்குக் கொடுத்து அனுப்பி விட்டு, பிள்ளைகளைக் குளிப்பாட்டி, முரளியை அயலிலுள்ள நேர்சரிக்கு அனுப்பிவிட்டு முகுந்தனுக்கு சோற்றைக் கரையல் செய்து ஊட்டித் தொட்டிலில் போட்டுவிட்டு, மத்தியானத்துக்கு முன்பே கதையை எழுதி முடித்துவிட்டாள். திரும்பித்திரும்பி இருதடவைகள் படித்துப் பார்த்தாள்.

மனதிற்குத் திருப்தியாக இருந்தது. அன்றே தபாலில் சேர்த்துவிட்டாள்.

'அம்மா, தபால் அங்கிள் வாசலில் நிற்கிறார்"

கிறுக்கிக் கொண்டிருந்த கலர்ப் பென்சில்களை வீசி எறிந்து விட்டுப் படலையை நோக்கி முரளி ஓடிச் சென்ற போதுதான் அவரின் நீண்ட சிந்தனை கலைந்தது.

வானத்தில் மப்பிட்ட மேகக் கூட்டங்களைக் கண்டதால் போலும் எங்கோ ஒரு குயில் கூக்கூ.........கூக்கூ...... என்று குதூகலித்தது.

வேப்பமரத்தில் அதுவரை முடங்கியிருந்த காகங்கள் கூட 'காகா" என்றபடி சிறகடித்துப் பறந்தன!

முரளி கொடுத்த கடிதத்தைப் பிரித்துப் படித்தபோது அவள் உள்ளத்தில் மகிழ்ச்சிப்பூ விரிந்து நிறைந்தது!

'முரளி! உன்ரை அம்மாவுக்கு முதற் பரிசெடா கண்ணே! என அவனை அணைத்து உச்சியெல்லாம் முத்தமிட்டுத் தனது ஆனந்தத்தைப் பகிர்ந்து கொண்டாள்.

அன்று மாலை வேதாளம் தள்ளாடிக் கொண்டு மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி நின்றது.

'சோத்தைப் போடடி"

தட்டில் சோறு கறியைப் பரிமாறி வைத்தாள்.

அருகே உட்கார்ந்தபடி தனக்குப் பரிசு கிடைத்திருக்கும் செய்தியையும், அடுத்த ஞாயிற்றுக்கிழமை அதனைப் பெற்றுக் கொள்வதற்காகப் பட்டணத்துக்குப் போக வேண்டும் என்பதையும் தயங்கித் தயங்கிச் சொன்னாள்.

'அதென்னடி பரிசு கிரிசென்று அலட்டுறாய்! அக்கறையின்றி உளறியவன் அடுத்துக் கேட்டான்.

'காசும் தருவாங்களோ?"

'ஓம்' என்றாள் அவள்.

'எவ்வளவு'

'அது தெரியாது

அப்படியே, அப்பசரி ஞாயிற்றுக் கிழமைதானே! பார்வதிக் கிழவியிடம் குழந்தையைப் பாத்துக்கொள்ளும்படி விடு: நீ மூத்தவனைக் கூட்டிக் கொண்டுபோ.

பக்குவமாக் காசை வாங்கிக் கொண்டு வா: காசு கவனம்" வெறியையும் மீறிக் கொண்ட அவனுக்குள் ஒரு சிரிப்பு!

விழா மண்டபத்தின் வாசலை நெருங்கியபோது, அது கலியாணக் களை கொண்டிருந்தது.

வாசலில் பழக்குலையோடு வாழை மரங்கள்!

மாவிலை தோரணம்!

கலாச்சாரப் பெருவிழா என்ற பதாகை. ஒலிபெருக்கியில் இதமான நாதஸ்வர இசை.

வாசலில் அழகிய கோலம் நிறைகுடம். சந்தனம் குங்குமம் கொடுத்து வரவேற்கும் இரு இளம் பெண்கள். அந்தப் பெண்களிடம் அழைப்பிதழைக் காட்டினாள்.

அவர்களில் ஒருத்தி புனிதாவைக் கூட்டிச் சென்று முதல்வரிசை ஆசனத்தில் இருத்தினாள்.

மேடையில் வரிசையாக இருபுறமும் பூஞ்சாடிகள். மண்டபத்துக்கு வண்ண வண்ணமாகக் கடதாசிக் சோடனைகள்! பலூன்கள்!

பிரதம விருந்தினரான மாவட்ட மந்திரி நேரத்துக்கே வந்துவிட்டதால், அழைப்பிதழில் குறிப்பிட்டபடி பகல் 10 மணிக்கே மங்கள விளக்கேற்றலுடன் விழாத் தொடங்கியது.

அரசாங்க அதிபர் வரவேற்புரை, பிரதம அதிதிஉரை சம்பிரதாயங்கள் முடிந்தவுடன் பரிசளிப்பு நிகழ்ச்சி ஆரம்பமானது.

'சிறுகதை - முதல் பரிசு திருமதி புனிதா"

அறிப்பாளரின் கம்பீரக்குரல் மண்டபமெங்கும் ஒலித்தது! இரு இளம் பெண்கள் அவளருகில் வந்து, மேளம் கொட்ட அவளை மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

புனிதாவுக்கு ஆகாயத்தில் பறப்பது போன்ற ஆனந்தப் படபடப்பு! சரஸ்வதி விருது, பரிசுப் பணம் ஜயாயிரம் ரூபா சான்றிதழ், பொன்னாடை, பூமாலை இவற்றைப் பெற்றுக் கொண்டபோது சபையில் எழுந்த கரகோஷப் பாராட்டு அவளைச் சிலிர்க்க வைத்தது!

மேடையிலிருந்து மகிழ்ச்சிபொங்க இறங்கிவந்து அவள் கீழே உட்கார்ந்து போது அவள் மகன் முரளி அவளது காதுக்குள் அச்சா அம்மா! கெட்டிக்காரி எனக்கு சரியான புழுகம்..........! 'என்றெல்லாம் தன் பிஞ்சு மொழியில் தாயை மேலும் குளிர வைத்தான்.

மகிழ்வால் அவள் பூரித்தாள்.

'அம்மா நான் இந்தச் சரஸ்வதி சாமியைப் படிக்கிற மேசையில் வைச்சு ஒவ்வொரு நாளும் விளக்குக் கொழுத்திக் கும்பிடப் போறன்". அந்தச் சின்ன உள்ளமும் கற்பனையில் மிதந்தது.

சரஸ்வதி தோற்றத்திலான அவ்விருதைத் தாயிடமிருந்து வாங்கி உற்று உற்றுப் பார்த்து ஆசையோடு அதனைத் தொட்டுத் தடவிக் கொண்டிருந்த அந்த பிஞ்சு உள்ளத்தின் பெருமை, புனிதாவைப் பரவசப்படுத்தியது.

பஸ்பிடித்து வீடுவந்து சேர 2 மணியாகிவிட்டது. இனித்தான் சமைக்க வேண்டும்.

திண்ணையில் சிகரெட் புகைத்தபடி இருந்த சிவனேசன், அவள் கொண்டு வந்த பையைப் பறித்துத் துளாவினான்.

'சரஸ்வதி விருது", சான்றிதழ், ஆகியவற்றை அலட்சியமாகத் திண்ணையில் போட்டுவிட்டு என்வலப்பை அவசரமாகப் பிரித்துப் பார்த்து 'ஓ! ஜயாயிரமோ நல்லதாய்ப்போச்சு! என்ரை வியாபாரத்தை விஸ்தரிக்க எனக்கு அவசரமாகத் தேவை" என்றபடி தனது சட்டைப் பையுள் திணித்துக் கொண்டான்.

'கெதியாய்ச் சமை நான் வெளியே போட்டுவாறான்" அவன் சைக்களில் புறப்பட்டுவிட்டான்.

திண்ணை அருகேயிருந்த வேப்பமரத்திலிருந்த ஒரு காகம் அனுங்கியபடி தொப்பெனக் கீழே விழுந்தது. அதைத் தூரத்தி வந்த கொழுத்த அண்டங்காகம், அதன் ஈனஸ்வரக் கத்தலையும் பொருட்படுத்தாமல் தடித்த கருஞ் சொண்டுகளால் கொத்திக் கொத்தி...........

முரளி அதைப்பார்த்துப் பயத்தால் சரஸ்வதி சிலையையும் சான்றிதழையும் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினான்.

புனிதா உடுப்பை மாற்றிக் கொண்டு சமைப்பதற்காக அடுப்பை மூட்டினாள்.

'ஆணாதிக்க சமூக அமைப்பில் குடும்ப நிறுவனத்தில் பெண்ணின் கடமைகளை வலியுறுத்துகிறார்களே தவிர மனைவியை உயிரும் உணர்வுள்ள சக மனுஷியாக அல்லாமல், வீட்டு வேலைக்கார அடிமைபோல நடத்தும் ஆண்நாயகப் போக்கு சமுதாயத்திலிருந்து ஒழிக்கப்படும்வரை பெண்களுக்கு விடிவேயில்லை."

கருத்தரங்கில் கேட்ட குரல் புனிதாவின் காதுகளில் மந்திரம் போல் மீண்டும் மீண்டும் ஒலித்தது!

அந்த அடுப்பு மெல்ல மெல்ல மூண்டு சுவாலை விட்டு எரியத் தொடங்கியது.

- ஞானம் -
நன்றி - சூரியன்.கொம்

No comments: