Saturday, March 06, 2004

எதிர்வினை

படுதலம் சுகுமாரன்

அர்ச்சனா, வீட்டுக்குள் நுழையும்-போதே, ராம்பிரசாத்தின் கழுகுப் பார்வை, அவள் கொண்டு வந்த துணிப்பை மீது விழுந்தது. அவள் முழுவதுமாக உள்ளே வருவதற்குள் கேள்வி தோட்டா சீறியது.

""என்ன பையில?...''

""புடவை'' என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள் அர்ச்சனா.

பின்னாடியே விரட்டிக் கொண்டு வந்தான்.

""யாருக்கு?...''

""இதென்ன கேள்வி.... புடவையை யார் கட்டுவாங்க?...''

""இந்த எதிர்கேள்வியெல்லாம் வேண்டாம். கேட்டதுக்கு பதில். இப்ப தீபாவளியுமில்ல, புத்தாண்டுமில்லை. பொங்கலும் முடிஞ்சிருச்சி. ஒரு விசேஷமுமில்லாத நேரத்துல புடவை எதுக்கு?...''

என்று கேட்டபடி, பையிலிருந்து புடவையை எடுத்து, விலை வில்லையை பார்த்தவன் கண்களை விரித்தான்.

""எழுநூற்றைம்பதா?...'' என்று பாய்ந்து அவளை மறித்துக் கொண்டு நின்றான்.

""எட்டு மணி நேரம் ஆபீஸ்ல மாரடிச்சுட்டு வந்து நிக்கறேன். களைச்சுப் போய் வந்திருக்கேன். புடவை மாத்திகிட்டு, முகம் கழுவிகிட்டு வந்துடறனே....

அவசரமா ஒண்ணுக்கு போகணும் நான்...''

கோபமும் வெறுப்பும் பின்ன, கணவனை ஏறிட்டு கேட்டுக் கொண்டு உள் அறைக்குள் போனாள் அர்ச்சனா.

"என்ன நினைச்சுகிட்டுருக்கிறாள் அவள். மாசக் கடைசி. பெட்ரோலுக்கும் காசில்லாமல், நானே கம்பெனிக்கு சைக்கிள்ல போய்ட்டு வந்து-கிட்டிருக்கேன். ஏதுங்கெட்ட நேரத்துல இவளுக்கு எழுநூற்று ஐம்பது ரூபாய்ல புதுப்புடவை கேட்குதோ.... வரட்டும்...''

என்று நாற்காலி முனையில் உட்கார்ந்து, பதட்டமாய் நகம் கடித்தான் பிரசாத்.

அஞ்சு நிமிஷம் கழித்து, முகம் அலம்பி, புடவை மாற்றிக் கொண்டு டீ போட்டுக் கொண்டு வந்த அர்ச்சனா.... ஒரு கோப்பையை ராம்பிரசாத்துக்கு கொடுத்தாள்.

அதை அவன் வாங்காமலே,

""இதுக்கு முதல்ல பதில் சொல்லு...'' என்று துணிப்பையைக் காட்டினான்.

""என்னங்க.... ஒரு புடவையை வீட்டுக்குள்ள கொண்டு வந்ததுக்கு இவ்வளவு கலாட்டா பண்ணணுமா?... கொஞ்சம் பெருந்தன்மையா நடந்துக்கக் கூடாதா! நானே சொல்ல மாட்டேனா.... பூனைக்குட்டியை கழுத்தைப் பிடிச்சுத் தூக்கினாப்ல நெருக்கறீங்களே.....''

""லுக்... இந்த பெருந்தன்மைங்கிற வார்த்தையை உடைப்பில போடு. உங்க வம்சத்துக்கே பொருந்தாத வார்த்தை அது. உங்கப்பா கல்யாணத்துக்கு முன்ன இதைத் தர்ரேன், அதைத் தர்ரேன்னு வாக்கு கொடுத்துட்டு, கழுத்துல தாலி ஏறினதும் கையை விரிச்சிட்டான். கடைசில, பொண்ணு வேலைக்குப் போகுது. மாசம் எண்ணாயிரம் வீதம், வருஷத்துக்கு போனசும் சேர்த்து லட்சத்துக்கு மேல சம்பாதிக்கிறாளே.... இதுக்கு மேல என்ன வேணும் மாப்பிள்ளை?'னு அல்வா கொடுத்தாரு. உங்க குடும்பத்து பெருந்தன்மை அது... எனக்கு பெருந்தன்மை பத்திச் சொல்ல வந்துட்டியா?...''

""எங்க குடும்பத்தை ஏன் இழுக்கறீங்க. எங்க அப்பா சொன்னதுல என்ன தப்பு. நான் சம்பாதிச்சுத் தரலையா என்ன?''

""நல்லா சம்பாரிச்சே.... சம்பளப் பட்டியல்லதான் கணக்கு எட்டாயிரம். கைக்கு வர்றதென்னவோ... பாதிகூட இல்லை....''

""மீதியை நான் விழுங்கறேனா... அல்லது எங்க குடும்பத்துக்கு அனுப்பறேனா.... சம்பளம் வாங்கினதும் முதல் காரியமாய் நீங்கள் வாங்கின மோட்டார் சைக்கிளுக்கும், உங்க பேர்ல போட்டிருக்கிற இன்சூரஸ் பாலிசிக்கும் உங்க பேர்ல வங்கியில உள்ள ரெகரிங் டெபாசிட்டுக்கும் தவணை கட்டிட்டுத்தானே வீட்டுக்கு வர்ரேன்.... அதெல்லாம் என்னவாம்?...''

""அது ஒண்ணு போதுமா.... மாசா மாசம் பவுடருக்கும், பொட்டுக்கும், வளையல் அந்த தைலம் பவுடர். இந்த எண்ணெய்னு கணிசமா ஒரு தொகை போய்கிட்டிருக்கே. மாசத்துக்கு ஒரு ஜோடி செருப்பு, வருஷத்துக்கு நாலு வானிடிபேக், பண்டிகை தப்பாம புதுப்புடவை... போதாக்குறைக்கு வயித்தெரிச்சல்... எளநி சாப்பிட்டேன். வெயில் தாங்கலை... கூல் ட்ரிங்ங்ஸ் சாப்பிட்டேன், டயம் ஆயிருச்சு ஆட்டோவுல போனேன்னு தினசரி பேட்டா வேற....''

அவன் அடுக்கிக் கொண்டே போக, அர்ச்சனாவுக்கு அவமானமாக இருந்தது.

""என்னங்க பண்றது. நான் வீட்டோடு இருக்கிறவளாயிருந்தால் இந்த செலவுக்கு அவசியமே இருக்காது. தலையெழுத்து. வேலைக்கு போக வேண்டியிருக்கு. நாலுபேருக்கு மத்தியில வேலை செய்யும்போது கொஞ்சம் நாகரீகமாய் இருக்க வேணாமா....''

""யார் வேணாம்னது. அதுக்காக மாசம் ஒரு புடவை வாங்கணுமா? டி.வி.ல நியூஸ் வாசிக்கிறவகிட்டகூட இத்தனை வெரைட்டி இருக்காது. ஆஃப்ட்ரால், குமாஸ்தா வேலை பாக்குற உனக்கு பதினெட்டு புடவை...''

அர்ச்சனா வெடித்தாள்.

""கணக்கு பார்த்து வச்சாச்சா... எண்ணிக்கை புடவைக்கு மட்டும்-தானா. ஜாக்கெட், உள்ளாடை-களுக்குமா?....''

""ஏன்.... அதெல்லாம் காசு போட்டு வாங்கினதுதானே...'' என்ற பிரசாத், ""சொல்லு.... இப்ப.... எதுக்கு புதுப்புடவை?'' என்றான் விடாப்-பிடியாய். ""பிடிக்கலைனா கொளுத்திப் போடுங்க. நாளைக்கு இந்த பாவிக்குப் பிறந்த நாள். ஆபீஸ்ல ஒவ்வொருத்-தியும் அவளவள் பிறந்த நாளைக்கு விதம் விதமா உடுத்தறாங்க. அவங்க புருஷன்மார் அன்பாவும், பாசமாவும் வாங்கித் தர்ராங்க. புடவை மட்டுமில்லே... நகை, பரிசு பொருள்னு பலதும் வாங்கித் தர்றாங்க. அதைப் போட்டுட்டு வந்து பெருமைப் பட்டுக்கறாங்க. "என் புருஷன் மத்தவங்களைப் போýல்லை.... வித்யாசமானவரு. பரிசை பொருளாய் கொடுத்தால் அது கால ஓட்டத்துல பழசாய்ப் போயிரும்னு... தன் இதயத்தையே கொடுத்திருக்கார்னு' சொல்ýக்க முடியுமா. என் கெüரவத்தை காப்பாத்திக்க உங்களை பெருமையாய் சொல்ýக்க வச்சி-ருக்கேனே... அதற்காகவாவது, நானாகவே ஒன்னை உடுத்திக்கிட்டு போக வாணாமா?...''

என்று கண்களில் நீர் திரள, அர்ச்சனா சொன்னபோதும்,

""இந்த பிறந்த நாள் கொண்டாடறதெல்லாம் நம்ம கலாச்சாரத்திலேயே கிடையாது. வாங்கிப் பூட்டிக்க இதெல்லாம் ஒரு சாக்கு'' என்றான் ராம் பிரசாத், புடவை பார்சலை விட்டெறிந்து.

அர்ச்சனாவுக்கு, இரவெல்லாம் தூக்கமே வரவில்லை. முள் படுக்கை-யில் விழுந்தது போல் இருந்தது.

வேதனை, பிடுங்கித் தின்றது.

என்ன புருஷன் இவன்...

கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும், மரத்திலும் நெகிழ்வு இருக்கும்.

இவன் வறண்டு வெடித்த பாலையாய், எரிமலைக் கரியாய் இருக்கிறானே.

இரண்டு வருட தாம்பத்யமே இப்படி வேம்பாய் கசக்க வைக்கிறானே...

மனைவியின் பிறந்த நாளை நினைவில் வைத்துக்கொள்ளாத கல்நெஞ்சன்.

தன் கையால் புடவை.... வேண்-டாம்... ஒரு முழம் பூகூட வாங்கித் தந்து அறியாதவன். மனைவி தானே ஒரு புடவை.... ஆசைப்பட்டுக் கூட அல்ல.... அவசியத்தை முன்னிட்டு ஒரு புடவை வாங்கி வந்தால், கொஞ்சம்-கூட புரிந்து கொள்ளாமல், இங்கித-மின்றிப் பேசுபவனை என்ன செய்ய...?

""பையனுக்கு அப்பாவோ அம்மாவோ இல்லை. உறவுன்னு இருக்கிறது அண்ணன் மட்டும்தான். அவரும் பம்பாய்ல குடும்பத்தோடு செட்டிலாய்ட்டாராம். புகுந்த வீட்டில், உனக்கு ஒரு தொல்லையும் இருக்காது'' என்று தப்புக் கணக்குப் போட்ட அப்பாவை இப்போது கட்டி வைத்து கேள்வி கேட்கணும் போýருந்தது.

மாமியார் இல்லாத வீடு....

நாத்தனார் இல்லாத வீடு....

உறவுகள் இல்லாத வீடென்றால்.... மகள் சுகமாயிருந்துவிடுவாள் என்று எதன் அடிப்படையில் தீர்மானிக்கி-றீர்கள் பெற்றோர்களே...

அவர்கள் மட்டும்தான் கொடுமைப்படுத்துவார்களா?

அன்பற்ற, புரிதல் இல்லாத புருஷன் வாய்த்துவிட்டால், ஒரு பெண்ணுக்கு அதைவிடக் கொடுமை வேறென்ன வேண்டும்.

கொண்டவன் சரியாக இருந்தால் கூரை ஏறிச் சண்டையிடலாம்.

மனைவியை, அதுவும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாய், சம்பளமில்லாத வேலைக்காரியாக மட்டும் பார்க்கும் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டுப் பெண், என்ன சுகம் பெறுவாள்..... என்று இராவெல்லாம் கண்களில் சுடுநீர் விட்டு கவலைப்பட்டவள், விடியலில் ஒரு தீர்மானத்திற்கு வந்திருந்தாள். காலையில் ராம்பிரசாத், கம்பெனிக்கு கிளம்புகையில் அவனிடம் ஒரு கவரைக் கொடுத்து, ""இதை என் ஆபீஸ்ல கொடுத்திடுங்க...'' என்றாள்.

""என்ன இது லீவ் லெட்டரா.... உடம்புக்கு என்ன.... நல்லாத்தானே இருக்கே. தேவையில்லாத நேரத்துல எதுக்கு லீவு போடணும். அனாவ-சியமா ஒருநாள் சம்பளம் கட்டாகுமே....'' என்றான்.

""இது லீவ் லெட்டர் இல்லைங்க...''

""பின்னே?''

""ராஜினாமா கடிதம்....''

""ரா...ஜி...னா...மா... கடிதமா?... உனக்-கென்ன பைத்தியமா?'' ராம்பிரசாத் திகைத்துப் போய்க் கேட்டான். அர்ச்சனா, நிதானமாய் பதில் சொன்னாள். ""நான் நல்லா யோசித்துதான் இந்த முடிவுக்கு வந்தேன். பெண்கள் வேலைக்குப் போறதே, அவர்களது தேவைகளுக்கு யாரையும் எதிர்-பார்க்காமல், சுதந்திரமாய்த் தன் காýல் நிற்கறதுக்குதான். சம்பாதிச்சும், ஒரு புடவை எடுக்க, பொட்டு, பவுடர், வளையல் வாங்கவும்கூட பேராட வேண்டியிருக்குன்னா... அதுக்கு ஏன் சம்பாத்யம். வீட்ல இருக்குற பெண்களுக்கு இதைவிட அதிகமாய் கேட்காமலே கிடைக்குது. நான் ஏன் மெனக்கெட்டு உழைச்சும், உங்ககிட்ட நல்ல பேர் வாங்க முடியாம, வேதனைப் படணும். வேலைக்குப் போறதாலதான நாலுவகை புடவையும் இன்னும் பல செüகர்யமும் தேவைப்படுது. வீட்ல இருந்துவிட்டால் ஏதோ நீங்க வாங்கித் தந்ததைக் கட்டிக்கிட்டு, பொங்கிப் போட்டுக்கிட்டு, டி.வி. பார்த்துக்கிட்டு, அக்கம்பக்கம் கதை பேசிகிட்டு, நிம்மதியா இருப்பேன் பாருங்க. உங்களுக்கும் என்னோடு சண்டை சச்சரவு பண்ண வேண்டிய அவசியம் இல்லை பாருங்க... அதான் இந்த முடிவு.... லெட்டரைக் கொடுத்துட்டு, பி.எஃப்., கிராஜ÷விட்டி எப்ப கிடைக்கும்னு விசாரிச்சுட்டு வாங்க....'' என்று உள்ளே போனாள்.

ராம்பிரசாத்துக்கு, கால்கள் துவண்டது. உடம்பு நடுங்கியது. விரல்கள் படபடத்தது. எதிர்காலமே இருண்டது போலாகிவிட்டது. அவள் மட்டும் வேலைக்குப் போகா-விட்டால்,

இன்சூரன்ஸ் தவணை, பைக் வாங்கின தவணை, வங்கித் தவணை, ப்ளாட் வாங்க போட்டிருக்கும் திட்டம்.... மேலும் அன்றாடச் செலவுக்குப் பணம்.... என் ஒற்றைச் சம்பளம் எந்த மூலைக்கு காணும்.... கடவுளே.... இதென்ன விபரீதம்.... சைக்கிளைப் போட்டுவிட்டு, ""அர்ச்சனா.... அர்ச்சனா.... ப்ளீஸ்.... இதென்ன அபத்தமான முடிவு.... ஆப்ட்ரால் ஒரு புடவை பிரச்சனைக்கு இவ்வளவு கோபப்படணுமா... நான் ஏதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிக்கக் கூடாதா... நானே இன்னைக்கு இன்னொரு புடவை எடுத்து தரலாம்னு இருந்தேன் தெரியுமா.... அர்ச்சனா.... அர்ச் கண்ணு...'' என்று கெஞ்சிகொண்டு வீட்டுக்குள் ஓடினான் ராம்பிரசாத்.

Nantri - Kalachuvadu

No comments: