Wednesday, November 13, 2013

மகத்தான துயரங்கள்....!

- Athanas Jesurasa    

ண்பனோடு சும்மா உலவித்திரியலாமென வந்தவனின் கண்ணில் தொலைவில் அவள் பார்வைகொண்டதில் பழைய நினைவுகள் கிளர, தனது வாழ்க்கையின் சாரமே துயரம்தானோவென உணர்வுகொண்டான்.
    சூனியங் கவிந்ததெனக் கழிந்த இரு ஆண்டுகளிற்குப் பிறகு காண்பதில் எவ்வாறு எதிர்கொள்வதெனத் திகைப்புக்கொண்டவன், நண்பனோடு கதைகொண்டதைப்போல அவளைக் கடக்கையில்,
     “எங்களையெல்லாம் மறந்திற்றீங்கள் போல....” எனக் குரல் கேட்டதில் திடீரென நிற்பாட்டிச் சைக்கிளைத் திருப்பினான்.
    குழந்தையின் கையில் இழுபட்டபடி கிடந்த தாலியைக் கண்டதில் ‘உன்னையா?’ என உருகிக் கேட்க வந்த வார்த்தைகளும் பதுக்கங்கொள்ள, “அப்பிடியில்ல.... கதைப்பிராக்கில கவனிக்க இல்ல” என வெளியிட்டான்.
    அவளோடு  தான் அந்நியங்கொள்ள  நேர்ந்ததும் இந்தத் தாலியால்தானே என்பது உறுத்த, மௌனமாய் அதனை வெறித்த பார்வை கொண்டான்.
    ‘இது’ இந்தக் கழுத்தில் ஏறியதை உணர்த்த வந்ததென லோகநாதனின் தந்தி கிடைத்ததில், இரைந்தபடி கிடந்த கடலை வெறித்துத் திரிந்த நாட்களும் முகங்காட்டக் கண்டான்.
     நிர்ப்பந்தமாய்க் கழிந்த காலை மாலை ரயிற் பயணங்களிடையிலும்  ‘பார்சல் ஒவ்வீசின்’ தூசி நிறைந்த இரைச்சல்களிடையிலும் தனது வாழ்க்கை சாரமற்றுப் போனதென்பது பெரிதாய் உறுத்தச் சலிப்புக் கொண்டவன், ஒரு  மாறுதல் காணலாமெனப்  பேராதனைக்குப் போய் சில நாட்கள் தங்கினான்.
    தொங்கு பாலத்தின் அசைவில் ஆடியபடி, காலடியில் ‘மாவலி’யை வெறித்துப்பார்த்து நின்றதில், இப்படித்தான் துயரங்களும்  தன்னை ஆட்டுகின்றனவோவெனப் பிரமைகொண்டான். அடர்பச்சை மூங்கிற்கரையைப் போல்தான் தன் வாழ்க்கை  ஜீவநாதத்தை இழந்து மௌனங்கொண்டதெனவும்; வெயில் விழாதபடி அடர்ந்து நின்றதில் நிழல்கள் பரப்பி நின்றதான மரங்களிடையில் – புற்களின் நடுவில் தனியாய்க் கிடந்ததான தரிப்பு விடுதியைப் போற்றான் தானும் தனிமைகொண்டானெனவும்  தோன்றியதில், நின்று பெருமூச்செறிந்தான்.
    இரண்டு மாதங்களின் முன்னால்தான் அவளைச் சந்திக்கவந்து, இறுதிப் பரீட்சை நன்றாய் முடிந்த களிப்பில் மிதந்தவளோடு  இந்தப் புற்றரையின் தரிப்பு விடுதி ; தொங்கு பாலம்; மூங்கிற்கரையருகில் நடத்தல் எனத் திரிந்தபோது வசீகரங்கொண்டதெனத்  தோற்றிய வாழ்க்கை இன்று சூனியங்கொண்டதே என்று உணர்ந்தவனின் கண்கள், எதிரில் விரிந்துகிடந்த பெருவட்டப்  புற்றரையை  வெறித்தன.
    ‘றஜவத்தை’யில் துரைராசாவின் அறையில், ஜன்னலுக்கூடாக நின்று நோக்கியதில் தொலைவில்  ‘வாசிற்றி’ பார்வைகொள்ள, அதனுள் நுழையும் வாய்ப்பும் இழக்கப்பட்டதான பழைய நினைவும் வர, ‘தன் வாழ்க்கையே நீண்ட இழப்புக்களைக்கொள்ள வந்ததுதானோ’ என, நினைவுகொண்டான்.
     கொழும்பு திரும்பியதில் ‘வவசெற் பிளேசின்’ நாற்பத்தோராம் இலக்க அறைக்குள்ளும் பார்சல் ஒவ்வீசுக்குமாகக் கழிந்த சாரமற்ற வாழ்க்கையிடையிலும், அவளிடமிருந்து ஒரு கடிதத்தையாவது  எதிர்பார்த்திருந்தான்.
    இரண்டு  மூன்று மாதங்கள் கழிந்ததிலும் ஒன்றையும் காணாததில் துயர்கொண்டவன் மனது, நம்பிக்கை இழந்ததில் சலிப்புக்கொண்ட  வேளை, அவள் பீ. ஏ.யில் பாசாகியதைத் தெரிவித்த லோகநாதனின் கடிதம் கிடைத்ததில் இறுதிப்  பரீட்சை முடிந்த களிப்புத் துள்ள தன்னோடு திரிந்த அவளது நினைவு மின்னலிட, நம்பிக்கை துளிர்த்ததெனக் காத்திருந்தான்.
    காலங் கழிந்ததிலும் ஒன்றையுங் காணாதவனின் கண்ணில், தொடுவானமும்; தொலைதூர நட்சத்திரங்களும்  பார்வைகொண்டு உறுத்தின.
    ‘பிரபஞ்ச வெளியின் தனித்த கிரகங்களைப்போல்தான் நாமும் தனித்துப்போனோமோ’வென நினைத்தவன் மனது யாழ்ப்பாணத் தொலைவை கிரக இடைவெளித்தூரமெனக் கற்பித்ததில் விரக்திகொண்டு, இனி ஒருபோதும் யாழ்ப்பாணம் செல்வதில்லையெனக் கொழும்பிலேயே சாரமற்று  உழன்றுகொண்டிருந்தான்.
   எச்சில்தொட்டு  எழுதியதில் ஊறி விளிம்புகட்டிய காபன் பென்சில் எழுத்துக்களில், ஏதோ என்னவோ எனப் பயந்து கடிதம்மேற் கடிதமாய் அம்மா உருகி எழுதியதில்,  தள்ளாத வயதில் அவளிற்கேன் இந்தத் துயரமெனத் தோன்ற  யாழ்ப்பாணம் வந்தவேளை.... இவளையும் காணநேர்ந்ததே என்பது தோன்ற, மனது  துயர்கொள்ள நின்றான்.
    “என்ன யோசிக்கிறீங்க ....” என அவள் கேட்டதில் விழிப்புக்கொண்டவன்,  “இல்ல.... பழைய நினைவுகள்....” என மெதுவாய்ச் சொல்லியபடி அவளைப் பார்த்தான். யோசனைகள் முகத்தில் நிழலிட்ட தென, அவள் நின்றாள் ; அவளும் பழைய நினைவுகளைக் கொண்டாள்போலும்!
    படிக்கையில், மத்தியானம் ஊரிற்குச் சென்று அவசரமாய்த்  திரும்புகிறவனை எதிர்பார்த்துக் காத்து மெல்ல நடந்து போகையில், அவனும்  வர இதே ஒழுங்கையால் கதைத்தபடிபோன நாட்களை நினைத்திருக்கலாம்.
     காலையில் செபம் விரைவில் முடிந்துபோனபோதும் மறுபுறத்தில் ‘நமச்சிவாய வாழ்க ....’ என நீண்டுசெல்லும் சிவபுராணத்தைத் தொடரும் சைவச் சொற்பொழிவு முடியும்வரை, பத்தோ பதினைந்து  வேதக்காரப்  பிள்ளைகளாய்க் காத்திருந்த வேளைகளில்...., அந்நிய மதச் சூழலில் – மதம் தந்த நெருக்கங்காரணமாய் கதைத்திருந்த பொழுதுகள்....!
    free periods இல், லைபிறறியில்.... ; பேராதனையின் ‘அந்த  மனோகர நாட்களை’யும் நினைத்திருக்கலாம்.
    முகம் இருள்கொண்டதென நின்றவளின் கண்ணில் நீர்முத்துத் திரண்டதெனக் கண்டவன், வாய்விட்டு அழுதுவிடுவாளோ எனத் தோன்ற, ‘இரண்டு  வருஷமாய் ஒரு கடிதமும் போடாததைக்’ கேட்க நினைந்ததையும் கைவிட்டுத் தலையைத் திருப்பி மறுபுறத்தைப் பார்த்தான்.
    சைக்கிள் ‘பாரில்’ சாய்ந்தபடி, தெளிவாய்க் காலடியில் எதையோ உற்றுப் பார்த்ததென நின்ற லோகநாதனைத்  தவிர, அந்த ஒழுங்கையே தனிமை கொண்டதென வெறிச்சிட்டுக் கிடந்தது. மதியம் நெருங்கிய பொழுதில் வேலியோரச் சிறுநிழல்கள் தவிர வெயிலில் வறண்டு கிடந்ததைக் கண்டதில் இதுபோல்தானேயென, தனது வாழ்க்கையினையும் நினைத்துக் கொண்டான்.
    “நல்லாய் மெலிஞ்சுபோனீங்க...., உடம்பப் பாக்கிறதுக்கென்ன....” எனக் கேட்டு, “என்ர வாழ்க்கையில என்ன சந்தோஷமிருக்கு?” எனப் பதில்சொன்னதில்,
     “எல்லாந்தான் முடிஞ்சுபோச்சே....” என்றவள் சேலைத் தலைப்பை வாயில் அடக்கியபடி விம்மினாள்.
     “மலர்! இதென்ன றோட்டில....” என்றவன் கதையை மாற்ற முயன்று, “இப்ப எங்க போக வெளிக்கிட்டனீர்?” எனக்  கேட்டான்.
     “ஆஸ்பத்திரிக்குப் போகவேணும்” என அவள் பதில் சொல்லியதில், “அப்ப, நேரம் போகுதே....!”  என்றவனுக்கு,
     “ஓம், கச்சேரியடியில பஸ் எடுக்கவேணும்” என விம்மற் குரலில் மெல்லச் சொல்லியவள், சிறிதே சுறுசுறுப்புக் கொண்டாள்.
     அவள் விரைவிற் போகட்டுமென, அவன் மௌனங்கொண்டு நின்றபோது....
     “கொழும்புக்குப்  போறதுக்கிடையில ஒருக்கா வீட்ட  வாருங்க....” எனக் குரல் கேட்டு,
     “பாப்பம்....” என இழுத்தபடி சைக்கிளைத் திருப்பினான்.
     “பாப்பமெண்டால்....? கட்டாயம் வாருங்க ....,எவ்வளவு நாளாய்க்  காணஇல்ல....”  என்றபடி சேலைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்தபடி அவள் நின்றதைக் கண்டதில், பழைய ‘இழைவு’ மின்னலிட்டதெனத்  தோன்ற மௌனமாய்  நிலைத்தபார்வையோடு  “ஓம்” எனத் தலையாட்டினான்.
     அவள், நடந்து  போனாள்.
     தோளிற் கிடந்த குழந்தை அவனைப் பார்த்துக் கையைத் தூக்கித்தூக்கிக் கீழே போட்டபடி சென்றதைக் கண்டவன்,
     வாழ்வின் வசந்தங்களும், கையசைத்தபடி இவ்வாறுதான் தன்னைவிட்டும் எந்நேரமும் செல்கின்றனவோ என உணர்வுகொண்டதில் மனது வெறுமைகொள்ள, ‘தனது வாழ்க்கையின் சாரமே துயரந்தானேயெனச்’ சலிப்புக்கொள்ள நின்றவனின் காதில், “யேசு....போவமா?”  என லோகநாதன் கேட்டதென்ற ஒலிகள், ஈனஸ்வரத்தில் தடவிச் சென்றன....

 -   மாசி 1971

No comments: