Wednesday, November 13, 2013

ஆழ நட்ட வாழை

- பசுந்திரா

11 வயது நிரம்பிய கரனைப் பார்ப்பவர்கள் எட்டு வயதே மதிப்பார்கள். ஆனால் அவனோ அந்த 18 ,19 வயது இளைஞர்கள் மூவரின் பின்னால் கையில் ஒரு தடியை பாதையெங்கும் இழுத்துக் கோடு போட்ட படி நடந்துகொண்டு இருந்தான்.

அவனுக்கு நினைவு தெரிந்த இத்தனை வருடத்தில் இதுவே முதல் தடவையாக வேலைக்குப் புறப்பட்டு இருக்கிறான். பெரிதாக ஒன்றும் வெட்டிப் புடுங்கும் வேலை இல்லை. இது ஒரு எட்டிப் புடுங்கும் வேலை. புடுங்குவதும் தேங்காய் மாங்காய் இல்லை. வெறும் பூ. அவன்  இந்த வேலைக்குப் போக பல காரணங்கள் உண்டு. ஆனால் ஒரு தகுதியும் இல்லை.

ஊரில் இருக்கும் போது அவனது தந்தை வாழை நாட்டுவதற்காக ஆழமான கிடங்கு வெட்டி நடுவே வாழைக்குட்டியை வைத்து இவனைப் பிடித்துக் கொள்ளும் படி கூறி மண்ணைப்  போட்டு மூடுவார் .
வாழைக் குருத்து அவனது வண்டியோடு முண்டிக்கொண்டு நிற்கும். புதிதாக வரும் குருத்துக்களை  விரியமுன்  கிழித்து விடுவதில் பேரானந்தம் அடைவான்.

ஒரு நாள்  “ ஏனப்பா இவ்வளவு ஆழமாக கிடங்கு வெட்டி நடுகிறீர்கள், சின்னச் சின்ன கிடங்கு வெட்டி நடலாமே ?” என்று கேட்டதற்கு   - “ வாழை ஆழ நடு தென்னை தெரிய நடு” – என்று தந்தை கூறிய வேத வாக்கை நம்பி இந்த வாழைப் பொத்தி பிடுங்கும் வேலைக்குச் சேர்ந்து கொண்டான். ஆனாலும் வாழையை நினைக்க வயிற்றைக் கலக்கிக் கொண்டு வந்தது.
அப்பாவிற்குத் தெரிந்தது இங்குள்ளவர்களுக்கும் தெரிந்து இவர்களும் வாழையை ஆழ நட்டிருந்தால் மட்டுமே வாழைப் பொத்தி இவனுக்கு எட்டும். ‘ஒரு வேளை வாழைப் பொத்தி எனக்கு எட்டாவிட்டால் என்ன செய்வது எதற்கும் முன்னே போகும் ஒருவரிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டால் என்ன.’ என்று எண்ணுகையில் தம்பி றமாவின் வாடிய முகம் கண்முன் தோன்றியது.

‘பெரிதாக என்ன வந்து விடப்போகிறது – ஒன்றில்  “சீ..... நீ இந்த வேலைக்குத் சரி வர மாட்டாய், போய் கொஞ்சம் வளர்ந்தாப்பிறகு  வா “ என்று சொல்லுவார்கள். அல்லது  “இந்தத் சின்னப் பயலை ஏனடா கூட்டிவந்தனீங்கள் “ என்று இதோ முன்னுக்குப் போகிறார்களே இவர்களுக்கு பேச்சு விழும் அவ்வளவுதான். ஆனால் அவர்களோ அதுபற்றி எந்த கவலையும் கொண்டதாக தெரியவில்லை. என்னையும் அவர்களில் ஒருவனாக நினைத்து வேலைத்தலம் நோக்கி நடந்து கொண்டு இருக்கிறார்கள். நானாக ஏன் குட்டையை குழப்புவான்’ என்று மௌனமாக இருந்து விட்டான்.

முன்பு தந்தையின் விரலைப் பிடித்துக்கொண்டு நடக்கும் போது சிறிது தூரம் நடந்தாலே   “கால் நோகுதா ? “ என்று கேட்டு விட்டு தூக்கித் தோளில் சுமந்து கொண்டு நடப்பார். அது எல்லாம் என்றோ ஊரோடு முடிந்து விட்டது.

கரனுக்கும் அவனது தம்பி றமாவிற்கும் ஏழு வயது வித்தியாசம் அதனால் கரனுடன் கூட விளையாடுவதற்கு வீட்டில் யாரும் இல்லை. சில சமயங்களில் மூன்று வயதான தம்பியையும் நாய்க்குட்டியையும் சேர்த்து விளையாடுவான். நாய் இவனைத் துரத்தும். பின் இடை நடுவில் நாய்க்குட்டி தம்பியைத் துரத்த அவன் விழுந்து எழும்பி வீரிட்டுக் கத்தி இறுதியில் அம்மா  தடியோடு இவனைத் துரத்தி வருவதுடன் அந்த விளையாட்டு முடிவுக்கு வரும்.

ஒரு வருடத்திற்கு முன் வவுனியா பூவரசங்குளத்தில் இருந்து நாட்டுப் பிரச்சனையால் இடம் பெயர்ந்து ஓமந்தைப் பாடசாலைக்கு வந்த போது கரனின் சந்தோசத்திற்கு அளவே இல்லை. எத்தனை நண்பர்கள். பலரது  பொயர்களைக்கூட ஞாபத்தில் வைத்திருக்க முடியவில்லை. பூவரசங்குளம் கிராமமே அந்தப் பாடசாலையில் தானே தஞ்சமடைந்து இருந்தது.

பாடசாலை, வீட்டுப்பாடம், சாப்பாடு, கொஞ்ச நேரம் விளையாட்டு என்ற வழக்கம் அகதி முகாமிற்கு வந்ததும் தலை கீழாக  மாறி,  விளையாட்டின் நடுவிலே ஓடிப்போய் சாப்பிட்டு விட்டு வந்து மீண்டும் விளையாட்டை முழுநேரமாகச் செய்து கொண்டு இருந்தான். வேறு எந்த வேலையும் இல்லை. இவ்வளவு ஏன் அம்மா அப்பா கூட அரை வாசி நேரம் வகுப்பறை வாசலில் இருந்தபடி இவர்களின் விளையாட்டைத்தானே பார்த்தக்கொண்டு இருந்தார்கள்.

ஆனால் அந்த வாழ்க்கையும் அப்பா  பூவரங்குளத்தில் இருந்த அவர்களது வீட்டைப் பார்க்கப்போய் திரும்பி வராமல் காணாமல் போனதில் இருந்து தொலைந்நு போனது. அன்றில்  இருந்து அம்மாவும் ஒடிந்து போய் அடிக்கடி நோயில் படுத்தார்.  தம்பியை இடுப்பில் வைத்தபடி மற்றவர்கள் விளையாடுவதை அவ்வப்போது எட்டிப் பார்ப்பான்.
 
ஓமந்தையிலும் இருக்கமுடியாமல் மீண்டும் இடம் பெயர்வு.  இடம் பெயர இடம் பெயர இருக்கும் பொருட்களும் ஒவ்வொன்றாக அவர்களை விட்டு இடம் பெயர்ந்தது. தந்தை  தூக்கி வந்த சில பாரமான பொருட்களை தாயால் கொண்டு வர முடியாமல் போக அங்கேயே விட்டு விட்டு கிளிநொச்சியில் உள்ள -கோணாவில் காந்திக் கிராமம் - எனப்படடும் இந்த அகதி முகாமிற்கு வந்து சேர்ந்து இரண்டு மாதம் ஆகிறது. இங்கே அகதி சாமான் என்று  அரிசியும் பருப்புமே தருவார்கள். மீதி எல்லாம் கடையிலேயே வாங்க வேண்டும் . வீட்டில் ஆம்பிளை உள்ளவர்கள் அயல் அட்டையில் வேலைக்குப் போவார்கள். அம்மாவும் அவ்வப்போது ஏதாவது வேலைக்குப் போய் வருவார். கடந்த ஒரு மாதமாக அவரால் முற்றாக முடியாமல் போய் விட்டது.

அம்மாவிற்கு அம்மாள் வருத்தம்.  உடல் நிலை மேலும் மோசமாகியது. தம்பி அம்மாவிற்குக் கிட்டையும் போக முடியாது. வருத்தம் தொத்தி விடுமாம்.  அவரால் எழுந்திருக்கவே முடியவில்லை. இதில் சமைப்பது எப்படி. வீட்டில் அரிசி சேடம் இழுக்க பருப்பு  உயிரை விட்டிருந்தது. அதனால் அம்மா சொல்லச் சொல்ல இவனே கஞ்சி காச்சுவான்.

அந்த வெறும் கஞ்சியிலேயே மூவரின் உயிரும் தங்கி நின்றது. கஞ்சி என்றால் தம்பி நல்லாக் குடிப்பான். ஆனால் ஒருக்கா மூத்திரம் போய் வந்து விட்டால் மீண்டும் அழ ஆரம்பித்து விடுவான் . அம்மாவும் அந்தக் கஞ்சியோடயே  நாள் முழுக்கப் பாயில் கிடப்பார். சில சமயம் காச்சல் வாய்க்கு குடித்த கஞ்சியையும் சத்தி எடுத்து விடுவார்.

ஒவ்வொரு நாளும் அம்மாவின் அம்மை வருத்தத்திற்கு முத்து மாரியம்மன் தாலாட்டு பாட வரும் நாலாம் கொட்டிலில் வசிக்கும் அருமைநாயகம் ஐயா ‘ஏதாவது நல்ல சாப்பாடாய் சாப்பிடு பிள்ளை’ என்று சொல்லி விட்டுப் போகிறார். ஆனால் அதற்கு கையில் காசு இருக்க வேண்டுமே.

முகாமிற்கு முன்னால் இருக்கிற கொட்டில் கடையில் பாண் பணிஸ் இடியப்பம் என பல வகை வகையான சாப்பாடுகள் வரும் அம்மாவையும் தம்பியையும் நினைத்த படி அவற்றை பார்த்துக் கொண்டு நின்று விட்டு வருவான் கரன் . தம்பிக்கு பணிஸ் என்றால் கொள்ளை பிரியம் யாரும் வேண்டிச் சாப்படுவதை கண்டு விட்டால் காட்டிக் காட்டி அழுவான். பணிசுக்குப் பதிலாக காக்கா ,குருவி ,அணில் போன்ற வற்றை தேடித் தேடிக் காட்டுவான் கரன்.  ஓடும் அணிலைப் பார்த்தால் சிரிப்பான் அது ஒரு இடத்தில் நின்று விட்டால் அழுவான் .

இந்த நிலையில் தான் கரன் தானும்  வேலைக்கு வருவதாக சேர்ந்து கொண்டான் . மண்ணில் வேலை என்றால் செய்யலாம் அனால் இது மரத்தில் வேலை அதுவும் கொப்பில்லாத மரத்தில் . இழுத்துக்கொண்டு வந்த தடியை மீண்டும் ஒருமுறை தூக்கிப் பார்த்துக்கொண்டான் . ஒரு வேளை இவன் பயந்தது போல வாழைப் பொத்தி எட்டாது போனால் இந்த தடியால் தட்டிப்பிடுங்கி விட வேண்டும் என்பது அவனது இன்னொரு திட்டம்.

கோணாவில் நல்ல செழிப்பான கிராமம் இந்த மண்ணில் எவ்வளவுதான் விழுந்து புரண்டாலும் உடலில் அழுக்கு பிரளாது வெள்ளை வெளேரென்ற மணல் மண். தோட்டத்திற்கு உகந்த மண் . அக்கராயன் குளத்து நீர் கோணாவில் கிராமத்தையும் சோலையாக்கிக் கொண்டு இருந்தது. நாலா புறமும் தென்னை ,பாக்கு, மா ,பிலா போன்றவற்றோடு வாழைத்தோட்டங்களும்  வயல்களுமாக பச்சைப் பசேல் என்று இருக்கும்.
அவ்வப்போது அங்குள்ள  வாழைதோட்டங்களில் பொத்தி , வாழைக்குலை , வாழையிலை பிடுங்கி ஸ்கந்தபுரம்  சந்தையில் விற்பதற்கு என பலர் அகதி முகாமில் உள்ளவர்களை வேலைக்கு அழைப்பது வழக்கம். அப்படி நாலு போர் வேண்டும் என்று கேட்டதாலேயே கரன் தானும்  வருவதாக கூறி வந்து விட்டான் .

முருகன் கோயில் தாண்டி இருந்த பெரிய வாழைத் தோட்ட சோலைக்குள் முன்னால் சென்ற மூவரும் நுழைந்தார்கள். கரனும் நுழைந்து படலையை சாத்திக் கொண்டான். படலையை தாண்டியதும் குறுக்காக ஒரு வாய்க்கால் சென்றது. இரவு அதனூடாக தண்ணீர் பாச்சியிருக்க வேண்டும் வாய்க்காலில் சேறு படிந்திருந்தது. கொண்டு வந்த தடியை வாய்க்கால் நடுவே ஊன்றி எம்பி குதித்து மறு கரைக்கு தாவினான்.

கம்பு குத்தியபடி நின்றது கரனை காணவில்லை முன்னால் போனவர்களில் ஒருவன் கரன்... கரன் ...”  என்று கூப்பிட்டான். உடம்பெங்கும் சேற்று மண்ணுடன் வாய்க்காலில் இருந்து எழும்பினான் கரன். அவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை

சும்மா கடக்கிற வாய்க்காலை ஏனடா கம்பு குத்திக்கடந்து விழுந்து எழும்புகிறாய்” என்று விட்டு உரப்பையை எடுத்துக்கொண்டு வாழை மரங்களை அண்ணாந்து பார்த்தபடி  ஆளுக்கு ஒரு திசையில் நடந்தார்கள்.

வாழைக்கயர் படும் என சேட்டு போடாமல் வந்ததால் கணிமண்ணில் இருந்து சோட்டு தப்பியது என எண்ணியபடி பெரும் கஸ்டத்தின் மத்தியில் குத்திய தடியை பிடுங்கி எடுத்துக்கொண்டு முடிந்தவரை மண்ணை துடைத்து விட்டு காவல் கொட்டிலில் இருந்து ஒரு பையை எடுத்துக்கொண்டு  வாழைப்பொத்திகளை தேடி நடந்தான் கரன்.

எந்த வாழை மரமும் அவனை வாழ வைப்பதாக தெரிய வில்லை. எட்டாத உயரத்தில் பொத்திகள் தொங்கின. ஒரு சில பொத்திகள் எட்டிய போதும் அவை பல காலங்களாக முறிக்காமல் விட்டு பூத்துக் கொட்டி  பொத்தியும் சூம்பி வாழைக்காய் அளவிலேயே  இருந்தது.  அவற்றை முறித்து எறிய  வேண்டுமே தவிர சந்தைக்கு கொண்டு செல்ல முடியாது.

அப்பா சொன்னது போல்  - இங்கே எந்த வாழையையும் ஆழ கிடங்கு வெட்டி நட்டதாக தொரிய வில்லை . கொண்டு வந்த தடியால் பொத்தியை குத்தி முறிக்கப் பார்த்தான் . பொத்தி மாட்டேன் என்று குலையோடு சேர்ந்து தலையை  ஆட்டியது .  வாழைக்குலையில் தடி குத்தி காயம் பட்டு காய் கண்ணீர் விட்டு அழுதது.

சற்றே சரிந்து நின்ற ஒரு மரத்தில் இருந்து பகீரதப்பிரயத்தனத்தின் பின் ஒரு பொத்தி பிடுங்கி விட்டான். குறைந்தது 20 பொத்தி பிடுங்கினால் தான் அந்த பை நிறையும்.

அந்த ஒரு பொத்தியுடன் பையை இழுத்துக்கொண்டு எட்டாத பொத்திகளுக்கு கொட்டாவி விட்டபடி எட்டும் உயரத்தில் பொத்தி தேடி அலைந்தான். ஆனால் மற்றைய மூவரும் அரை வாசி பையை நிரப்பிவிட்டார்கள்.

இந்த ஒரு பொத்திக்கு என்ன கூலி தருவார்கள் அதைக்கொண்டு ஒரு பணிசாவது  வாங்கிவிட முடியுமா என எண்ணியபடி நடந்தான். ஒருவன் அவனிடம் வந்து பையை பார்த்து சிரித்து விட்டு எத்தனை பொத்தி புடுங்கினாய் கரன் ? ” என்றான்.

“கனக்க பொத்தி கண்டு வச்சிருக்கிறேன் ஆனா ஒண்டுதான் புடுங்கினனான்” என்றான் தலையை பையினுள் ஓட்டி அந்த பொத்தியை பார்த்தபடி வந்தவன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான். பின்  “இனி என்ன செய்யப்போகிறாய் ? ” என்றான்.  “ என்னை தூக்கிப் பிடிச்சால் மள மளவென்று பிடுங்குவேன் “ என்றான். அப்பா தூக்கிப் பிடிக்க பப்பாப்பழம் பிடுங்கிய ஞாபகத்தில்.  வந்தவன் ஓடியே விட்டான் .

பையை கீழே போட்டு விட்டு அதன்மேல் இருந்தபடி ‘என்னண்டு இந்த பொத்திகளை புடுங்கலாம்’ என ஒரு அழகிய பொத்தியை பார்த்துக் கொண்டு யோசித்தான். அந்த பொத்தியின் ஒரு இதழ் மெல்ல விரிந்து இருந்தது. உள்ளே வாழைப்பூவில் இருந்த தேனை குடிக்க முடியாமல் ஒரு வண்டு சற்றிச் சுற்றிப் பறந்தது கொண்டிருந்தது . ஏதோ சிந்தனையில் தோன்ற திடீரென எழுந்து அந்த மூவரையும் தேடி ஓடினான்.

அவர்கள் மூட்டையை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு நடந்தார்கள்.
“உங்கள் மூவரினின் பைகளையும் ஓர் இடத்தில் வைத்துவிட்டு பொத்தியை பிடுங்கி என்னிடம் தாருங்கள் நான் ஓடி ஓடி அவரவர் பையில் போட்டு விட்டு வருகிறேன் நீங்கள் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை “ என்றான் மூச்சு வாங்கியபடி .

அவர்களுக்கும் அது நல்ல யோசனையாகவே பட்டது   ஆனால் அதற்காக இவனுக்கு என்ன கூலி கொடுப்பது என்று யோசித்தார்கள். இறுதியில் எந்த முடிவிற்கும் வராமலே அவனிடம் பொத்திகளை முறித்து கொடுத்தார்கள் அவனும் ஓடி ஓடி அவரவர் பையில் போட்டுவிட்டு வந்தான். கூடவே வழியில் கண்ட பொத்திகளை அவர்களுக்கு கூப்பிட்டுக் காட்டினான் . சற்று நேரத்திலேயே மூவரினதும் அந்த உரப் பை நிரம்பி விட்டது.

நேரம் மதியம் மூன்று மணியாகிக் கொண்டிருந்தது  அந்த மூவரையும் விட அவனே கழைத்து விட்டான் காலை குடித்த கஞ்சி செமித்து பசி எடுத்தது.
அவனது பை மட்டும் அந்த ஒரு பொத்தியுடன் தவம் கிடந்தது. மூவரில் ஒருவன் “இனி முறிக்கும் பொத்திகளை  உன் பையில் போடு” என்றான்.
கரனின் முகத்தில் முழுச் சந்திரன் பிரகாசித்தான். அவர்கள் முறித்து தந்த பொத்திகளை தனது பையினுள்  போட்டான். இருந்தும் என்ன பயன் தோட்டத்தில் இருந்த பொத்திகள் முழுவதும் பறிக்கப்பட்டு விட்டது.

“ இவ்வளவுதான் இனி இல்லை  வாங்கோ தோட்டக்காற  ஐயா வரும் வரைக்கும் அதில போய் இருப்போம்” என்றபடி ஒருவன் காவற்கொட்டிலை நோக்கி நடந்தான் . மற்றவர்களும் அவனை பின் தொடர்ந்து சென்றனர். கரன் ஒவ்வொரு வாழையாக அண்ணாந்து பார்த்தபடியே பின்னால் நடந்தான் .
ஒவ்வெருவரும் தத்தம் மூட்டைகளோடு முதலாளிக்காக காத்திருந்தார்கள். கரனின் பையில் ஆக எட்டு பொத்திகளே இருந்தது .

தோட்டக்காரரும் வந்தார் “எத்தனை மூட்டை ? ” என்று கேட்டார். அந்தக் குழுவின் தலைவன்  “ மூன்று மூட்டை “ என்றான். “அந்தப் பையில் எத்தனை?” என்று கரனை பார்த்துக் கேட்டார். உற்சாகமான குரலில்  “ எட்டு பொத்திகள் ஐயா ” என்றான் கரன்.

எல்லோருக்கும் பொதுவாக முப்பது ரூபாயை ஒருவனிடம் கொடுத்து விட்டு கரனின் பையில் இருந்த எட்டு பொத்திகளையும் ஆளுக்கு இவ்விரண்டாக பிரித்து எடுக்குமாறு  கூறி விட்டு தோட்டக்காரர் சென்று விட்டார்.
கரன் மாறி மாறி மூவரின் முகத்தையும் பார்த்தபடி நின்றான்.

“இந்த மூன்று மூட்டைக்கும் தான் முப்பது ரூபாய் தந்திருக்கிறார் . கரன் அந்த எட்டுப் பொத்தியையும் நீயே எடுத்துக் கொள் எங்களுக்கு வேண்டாம் நாங்கள் காசை பிரித்து எடுத்துக்கொள்கிறோம் ” என்றான்  குழுவின் தலைவன்.
கரனின் பணிஸ் கனவு மெல்ல கரைய ஆரம்பித்தது கண்கள் நீரரும்ப தொண்டை வரை துக்கம் முட்டியது ஓ என்று அழுது விட வேண்டும் போல் இருந்தது . எதையும் காட்டிக் கொள்ளாமல் சரி என தலையை ஆட்டி விட்டு அந்த எட்டுப் பொத்தியோடு வீடு வந்தான்.

களி மண் உடலெங்கும் புரண்டபடி வாழைப் பொத்தியுடன் வந்த மகனைப் பார்த்து படுக்கையில் கிடந்தபடியே கண்ணீர் வடித்தார் அம்மா.

அன்று முளுவதும் தம்பியை பார்த்துக்கொண்டு இருந்த பக்கத்து வீட்டு அக்காவிடம் ஒரு பொத்தியை கொடுத்தான். அம்மாவுக்காக மாரியம்மன் தாலாட்டு பாட வரும் ஐயாவுக்கும் ஒரு பொத்தியை கொடுத்தான் . இரண்டு பொத்திகளை வீட்டில் வைத்து விட்டு . மீதி நான்கு பொத்திகளுடனும் அந்த பெட்டிக் கடையை நோக்கி  ஓடினான் .

கடையில் இருந்த அந்த கண்ணாடிப் பெட்டியில் இன்னமும் மூன்று பணிஸ் மீதியாக இருந்தது . அந்த பெட்டியையும் தன் கையில் இருந்த பொத்தியையும் கடை முதலாளியையும் மாறி மாறி பார்த்தபடி நின்றான்.

“என்னடா வேணும் ? ” என்றார் முதலாளி.

எதுவும் பேசாது ஊமையாக நின்றான்.

மீண்டும் சற்று உரத்த தொனியில்  “என்னடா வேணும் ? ” என்றார்  முதலாளி.

அவரது பெறுமாத வண்டியை பார்த்த படியே “ உங்களுக்கு வாழைப்பொத்தி வேணுமா ? ” என்று கேட்டான்

“ எங்க காட்டு பாப்பம் “ என்றார்.   பையை எட்டிக் கொடுத்தான் .

“பறவாய் இல்லையே பொத்தி வாடாம நல்லாத்தான் இருக்கு இப்பதான் புடுங்கி இருக்குப்போல சரி என்ன விலை ? “ என்றார்.

அவன் அந்த கண்ணாடிப் பெட்டி பணிஸையே பார்த்தபடி நின்றான்.  நான்கு பொத்திகளையும் எடுத்து முட்டைக்கோவாவிற்கு அருகில் வைத்து விட்டு பையை அவனிடம் கொடுத்தார். பின் ஒரு பொத்திக்கு இரண்டு ரூபா வீதம் எட்டு ரூபா காசை மடித்து அவனின் உள்ளங் கையில் வைத்தார். அவனின் கண்கள் அந்த கண்ணாடிப் பெட்டியை விட்டு அகலவில்லை  காசோடு கையை மேசையில் வைத்தபடி  சிலையாய் நின்றான். முதலாளி அந்த மூன்று பணிசையும் ஒரு சரையில் சுத்தி அவனிடம் கொடுத்து விட்டு.

“ உன் பொத்திக்கு இதை விட நல்ல விலை யாரும் தர மாட்டார்கள் ” என்று கூறினார்.

பையை கமக்கட்டில் வைத்துக் கொண்டு இரு கையிலும் இருந்த பணிசையும் காசையும் மாறி மாறி பார்த்தபடி வீடு நோக்கி ஓடினான்.

- பசுந்திரா -

No comments: