Wednesday, November 13, 2013

பிரிவு....!

- Athanas Jesurasa

அது அற்புதமாக இருந்தது. நிச்சயமாக எனக்குத் தெரியும், 8.30க்கு ‘மூர்’ றோட்டில் தண்டவாளத்தின் ஓரமாக என்னைக் கடந்துபோகும் அந்தச் சிங்களப் பெட்டையை வைத்தே, அச் சிறுகதைஎழுதப்பட்டிருக்க வேண்டும்.

கையில் குடையோடும், சிந்தனை தேங்கிய முகமாயும் மெல்ல நடந்துபோகும் அவள்,சோகம் நிறைந்தவளாக  மனோரம்மியமான நடையில் பாத்திரமாகி இருந்தாள்.

யாரோ‘மூர்’ றோட்டிற்கும் ஸ்ரேஷனிற்குமிடையில் இருந்து 8.35 ட்றெயினுக்குப் போகும் ஒருவரே, அதை எழுதியிருக்கவேண்டும். எழுதியவரை அறிய நான் ஆவலாயிருந்தேன். அது‘வீரகேசரி’யில் வந்து, இரண்டு மூன்று கிழமைகளும் கழிந்துவிட்டன. 2
 அதுஎதிர்பாராமல் நிகழ்ந்தது. ‘சரஸ்வதி மண்டபத்’தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாமுடிந்து திரும்பிக்கொண்டிருந்தபோது, ஞானலிங்கம் அவரை அறிமுகப்படுத்தினான்.

“இவர்தான் சுப்பிரமணியன். நீர் முந்திச்சொன்ன ‘உறவுகள் பிரியும்’ கதையைஎழுதினவர்.”

சந்தியில் ஞானலிங்கம் விடைபெற்றுக் கொள்ளுப்பிட்டிக்குச் சென்றான். நாங்கள்வெள்ளவத்தைக்குக் கதைத்தபடி நடந்தே வந்தோம்.

அந்த வீரகேசரிக் கதையை நான் பாராட்டியபோது, அவர் நன்றி தெரிவித்தார். “கடற்கரையால போகிற, அந்தச் சிங்களப் பெட்டையைத் தானே அதில் எழுதியிருக்கிறீர்” எனநான் கேட்டபோது சிறிது தாமதித்துவிட்டு, தன் நண்பரைப் பார்த்து,

“நீரும் அந்தப் பெட்டையைக் கண்டிருக்கிறீர்தானே? உமக்கு அதைத்தான் எழுதியிருக்கிறனெனத்தெரிய இல்ல! நீர் ஒண்டும் அதப்பற்றிச் சொல்ல இல்ல” என்றபடி என்னைப் பார்த்து,

“நீர்தான் ஐசே சரியாய்ப் பிடிச்சிருக்கிறீர்!” என்று, மெல்லிய வெட்கச்சிரிப்புடன் சொன்னார். தொடர்ந்தும் கதைத்தபடி இருந்தார். அவரோடு கதைப்பதிலும்ஆவலாக இருந்தது.

இடுப்பளவில் உயர்த்தப்பட்ட இடது கையும் சிறிது சாய்ந்த தலையுமாக, கிறுகிறெனச் சிறிய கவடுகள் பதித்து நடந்தபடி அவர் கதைப்பது, விசித்திரமாய்த்தான் இருக்கும்.

பேச்சிடையே, தன்னைப்பபற்றிய விஷயங்களிற்கூட “இருக்கும், சில வேளை எழுதியிருப்பன், எழுதாமலும் இருந்திருப்பன்.... எனக்குத்தெரியாது....” எனத் தன்னைப்பற்றித் தனக்கே நினைவில்லாததைப்போல அவர் கதைத்தபோது, எனக்கு விசித்திரமாக இருந்தபோதும், அதனாலேயே தொடர்ந்தும் அவரோடு தொடர்புகொள்ள ஆவல்ஏற்பட்டது.

3
அதன் பின்னால் ‘ஸ்ரேஷனி’ல் நாங்கள் சந்தித்துக்கொள்வோம்.அந்த 8.35 ஸ்லோ ட்றெயின் கோட்டையை அடையும் வரை, அந்தப் பதினைந்து நிமிடங்களில் நாங்கள் கலை இலக்கிய விடயங்களைப் பற்றிக் கதைத்துக் கொள்வோம். சிலவேளை மௌனமாக அது கழியும். அவர் ரயிற் பெட்டியின் வெளிக்கம்பியைப் பிடித்தபடி, கடலையே இலயிப்பாகப் பார்த்தபடி நின்றுகொண்டிருப்பார். அந்த மௌனமும் அற்புதமாக இருக்கும்.

கோட்டையில் ‘பூந்தோட்ட வீதி’யில் அவர் என்னைப் பிரிந்து தன்னுடைய ‘ஒவ்வீசு’க்குப் போவார்.

அந்நாட்களில் ‘ஈழம்’ தினசரியின் சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளிவந்திருந்தன. சுப்பிரமணியனின் ‘விசரர்கள்’ அதில் பாராட்டைப் பெற்றிருந்தது.

உள்ளடக்கம் எனக்குப் பிடிக்கவில்லைத்தான். மனக்கோளாறு கொண்ட பாத்திரங்களின் இயக்கங்கள்.... .... ஆனால், அதில் கையாளப்பட்டிருந்த நடை .... .... ! அது அற்புதமானது.அவரது எழுத்து நடையில் எனக்கு ஒரே இலயிப்பு.

நான் சொன்னேன், “உள்ளடக்கத்தில கவனஞ்செலுத்தினால் உம்மட அருமையான நடைக்கு பிரமிக்கத்தக்க சிறுகதைகளை நீர் எழுதலாம்.” ஆனால் அவர்,
“நான் என்ன செய்யிறது ஐசே, இந்த உலகமே அழகான காட்சிகளால, இனிய சோகங்களால நிறைஞ்சிருக்கிறதைப்போல .... என்ர மனசுக்குள்ள கிடந்து பினையிற உணர்ச்சிகளையெல்லாம் அப்பிடியே சொல்லவேணும் போலக் கிடக்கு. அதத்தான் எழுதிறன். எழுதினா ஒரு திருப்தி.”

‘மௌனி’யும் ‘லா.ச.ரா.’வுமென்றால் அவருக்கு ஒரே இலயிப்பு.  “எவ்வளவு அழகு! நுணுக்கம் நுணுக்கமான உணர்ச்சிகளையெல்லாம் என்னமாதிரி எழுதுகினம்! எல்லாராலயும் இப்பிடி எழுத ஏலாது ஐசே. இவையின்ர தாக்கத்தாலதான், எனக்கும் எழுத விருப்பம்.”

இடையிடையில், தான் எழுதிய சிறுகதைகளையும் காட்டுவார். அவருக்கு அவற்றை எழுதியதே திருப்தி. பத்திரிகைகளுக்கு அனுப்புவதிலும் அக்கறையில்லை.

‘மோனக்குரல்’ , ‘குளிர்ந்துபோன நிராசைகள்’, ‘ஆத்மாவின் வறுமை’, ‘ஓ! இந்தஅழகுகள்!’ என்பவையெல்லாம் அவர் காட்டிய சிறுகதைகளே.

மழைதூறற் பொழுதில் தனிமையாய்க் கிடக்கும் பஸ் தரிப்பிடங்கள், பனிப்புகாரில் தோய்ந்த மலைத்தொடர்கள், நிறைவேறாத ஆசைகள், விசரர்களைப்போல் இயங்குகின்ற பாத்திரங்கள், ரயிலின் கூ .... என நீண்ட சோகக்குரல்.... எல்லாம், சுற்றிச் சுற்றி அவற்றில் தலைகாட்டும்.

அவரது அழகியல் நோக்கின் வெளிப்பாடுகளை, மனோரம்யமான அந்த நடையை நான் வியந்துபாராட்டுவேன். ஆனால் அந்த விசர்ப் போக்கான பாத்திரங்களை, திரும்பத் திரும்ப எழுதும் மனமுறிவுகளைப் பற்றிக் கதைக்கும்போது நாம் கருத்து வேறுபடுவோம். அவ்வேளைகளில் விட்டுக்கொடுக்காதபடி அவர் எதை எதையோவெல்லாம் கதைப்பார்.

சமீபத்தில் ‘ஓர் தனி உலகம்’ என்ற அவரது சிறுகதை வெளிவந்திருந்தது. அதில்வருகின்ற இளைஞன் வேலை செய்யவே பஞ்சிப்படுகிறான். வேலை ஒன்றுமில்லாமல் இந்த உலகத்தின் அழகை இரசிக்கவே ஆசைப்படுகிறான்.

அதைப்பற்றிக் கதைத்தபோது, அவரிடம் சொன்னேன், “சுப்பிரமணியம், இப்பிடிச் சும்மா உலகத்தில இருக்க ஏலாது.... அழக இரசிக்கத்தான் வேணும் .... ஆனா வேலையுஞ் செய்யத்தான் வேணும். புற உலகத்திலயிருந்தும் வாழ்க்கையில இருந்தும், நாங்கள் ஓட ஏலாது.”

ஆனால் , “எங்களுக்குப் புற உலகத்தப் பற்றிக் கவலையில்ல. எங்கட உலகம்எங்களுக்குள்ளேயே இருக்கு. அதிலேயே எங்களுக்குத் திருப்தி. அதிலயே எங்களுடைய வாழ்க்கை முடிஞ்சுபோகும்” என்று திருப்பிச் சொன்னார்.

“இதெல்லாம், வசதியான ஒரு கும்பலின்ர சிந்தனைப் போக்குகள். பெரும்பாலான மக்கள் இப்பிடி வாழ ஏலாது. ஏன், உம்மட குடும்ப நிலைக்கும் இது ஏலாது. உமக்குத் தங்கச்சிகள் இருக்கு. அப்பருக்கும் வயது போயிற்றுது. அப்ப இதெல்லாம் நீர்தானே பாக்கவேணும். இந்த உப்புப் புளிப் பிரச்சினைகள் எனக்கு முக்கியமில்லை எண்டு, நீர்சொல்ல ஏலாது.” – நான் சொன்னேன்.

“அவையவையின்ர பாட்டை அவையவையள் பாத்தாலென்ன? நாங்க ஏன், அவையின்ர பொறுப்பைத் தலையில சுமக்க வேணும்? எங்களுக்கு, எங்கட மனத்திருப்திதான் முக்கியம். இல்லையெண்டுஅவையள் ஆரும் வற்புறுத்தினால்.... நான் செத்துப் போவன்.”
நான் அதிர்ச்சியில் மௌனமாகிப்போனேன்.

4
அடுத்த மாதம் முழுவதும் நான் அவரைச் சந்திக்கவில்லை. காலையிலும் மத்தியானத்திலும் இரவிலுமாக என்னுடைய வேலைநேரம் மாறிமாறி அமைந்தது. ‘போஸ்ற்ஒவ்வீஸ்’ என்றால் அப்படித்தானே! இடையிடையில் ‘ஓவர்ரைமு’ம் செய்யவேண்டியிருந்தது. இயைபற்ற வேலைநேரத்திலும் இயந்திர உழைப்பிலும் மனம் வெறுப்படைந்திருந்த போதிலும், வாழ்வின் சுமை காரணமாக அதில் கலந்து போனேன். சுப்பிரமணியனும் என்னைச் சந்திக்கவில்லை.

அந்த மாதம் வறட்சியாகவே ஓடிமறைந்தது.

5
இந்த மாதம் முழுவதும் 9.00 மணி நேர வேலை. முதலாம் திகதி 8.30க்கு ஸ்ரேஷனுக்கு வந்தபோது ட்றெயினில் சுப்பிரமணினைச் சந்தித்தேன். ஆனால், இரண்டொரு பேச்சுக்களோடு அவர் மௌனங்கொண்டார். வெளிக்கம்பியைப் பிடித்தபடி, அடிவானத்தில் எதையோ தேடுகிறவரைப்போல கடற்பக்கத்தையே வெறித்து நோக்கியபடி நின்றார். ‘பூந்தோட்ட வீதி’யில் பிரிந்து செல்லும்வரை அவர் ஒன்றுமே கதைக்க வில்லை.

அதன் பின்னால் ஒரு கிழமைவரை நான் அவரைச் சந்திக்கவில்லை. அந்தப் பிரிவு, எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

அடுத்த ‘போயா’விற்கு மற்ற நாள் ஸ்ரேஷனில் நின்றுகொண்டிருந்த  போது, சிறிது தள்ளி யாருடனோ கதைத்துக் கொண்டிருந்த பேரம்பலம் என்னைக் கண்டுவிட்டுக் கெதியாக வந்து, ஓர்அதிர்ச்சியான செய்தியைச் சொன்னான்.

“இஞ்சேற்றாப்பா, சுப்பிரமணியன் தற்கொலை செய்திற்றானாம். தெல்லிப்பளையில தங்கட வீட்டுக்கருகில ட்றெயினுக்கு முன்னால பாஞ்சானாம். ரெண்டு நாளுக்கு முந்தித்தான் இது நடந்திது. காலம ஊரால வந்த ஒரு பெடியன்தான்சொன்னான்.”

என் நெஞ்சம் அதிர்ந்தது.

அந்த அதிர்ச்சியில், நான் மௌனத்தில் புதைந்து போனேன். நம்ப முடியாதது நடந்து முடிந்தும் விட்டதையறிய, மனது துயர்கொண்டது.
 ‘ஓ! சுப்பிரமணியனை இனிச் சந்திக்க ஏலாது .குறுக்குக் கம்பியைப் பிடித்தபடி – ரயிலில் கதைக்கும் அந்த அருமையான நேரங்களும், இனிமேல் வரப்போவதில்லை....’

 ‘எல்லாம் முடிந்துபோனது.’

கணங்கள், ஊர்ந்து கொண்டிருந்தன. கல்கிசைக்குப் போகும் ‘கரிக்கோச்சி’ கூ .... .... எனநீளமாய்க் கூக்குரலிட்டபடி ஓடியது.

‘துயரத்தில் புதைந்துபோன ஒரு பெண்ணின் சோகக் குரலைப் போல ....’ என அக்கூவலை ஒருகதையில் சுப்பிரமணியன் எழுதியிருந்தது, உடனே நினைவுக்கு வந்தது.

அது பெண்ணின் குரலோ என்னவோ .... எனக்கும்சோகக் குரலாகவே, அது இருக்கிறது!

தை 1970

மகத்தான துயரங்கள்....!

- Athanas Jesurasa    

ண்பனோடு சும்மா உலவித்திரியலாமென வந்தவனின் கண்ணில் தொலைவில் அவள் பார்வைகொண்டதில் பழைய நினைவுகள் கிளர, தனது வாழ்க்கையின் சாரமே துயரம்தானோவென உணர்வுகொண்டான்.
    சூனியங் கவிந்ததெனக் கழிந்த இரு ஆண்டுகளிற்குப் பிறகு காண்பதில் எவ்வாறு எதிர்கொள்வதெனத் திகைப்புக்கொண்டவன், நண்பனோடு கதைகொண்டதைப்போல அவளைக் கடக்கையில்,
     “எங்களையெல்லாம் மறந்திற்றீங்கள் போல....” எனக் குரல் கேட்டதில் திடீரென நிற்பாட்டிச் சைக்கிளைத் திருப்பினான்.
    குழந்தையின் கையில் இழுபட்டபடி கிடந்த தாலியைக் கண்டதில் ‘உன்னையா?’ என உருகிக் கேட்க வந்த வார்த்தைகளும் பதுக்கங்கொள்ள, “அப்பிடியில்ல.... கதைப்பிராக்கில கவனிக்க இல்ல” என வெளியிட்டான்.
    அவளோடு  தான் அந்நியங்கொள்ள  நேர்ந்ததும் இந்தத் தாலியால்தானே என்பது உறுத்த, மௌனமாய் அதனை வெறித்த பார்வை கொண்டான்.
    ‘இது’ இந்தக் கழுத்தில் ஏறியதை உணர்த்த வந்ததென லோகநாதனின் தந்தி கிடைத்ததில், இரைந்தபடி கிடந்த கடலை வெறித்துத் திரிந்த நாட்களும் முகங்காட்டக் கண்டான்.
     நிர்ப்பந்தமாய்க் கழிந்த காலை மாலை ரயிற் பயணங்களிடையிலும்  ‘பார்சல் ஒவ்வீசின்’ தூசி நிறைந்த இரைச்சல்களிடையிலும் தனது வாழ்க்கை சாரமற்றுப் போனதென்பது பெரிதாய் உறுத்தச் சலிப்புக் கொண்டவன், ஒரு  மாறுதல் காணலாமெனப்  பேராதனைக்குப் போய் சில நாட்கள் தங்கினான்.
    தொங்கு பாலத்தின் அசைவில் ஆடியபடி, காலடியில் ‘மாவலி’யை வெறித்துப்பார்த்து நின்றதில், இப்படித்தான் துயரங்களும்  தன்னை ஆட்டுகின்றனவோவெனப் பிரமைகொண்டான். அடர்பச்சை மூங்கிற்கரையைப் போல்தான் தன் வாழ்க்கை  ஜீவநாதத்தை இழந்து மௌனங்கொண்டதெனவும்; வெயில் விழாதபடி அடர்ந்து நின்றதில் நிழல்கள் பரப்பி நின்றதான மரங்களிடையில் – புற்களின் நடுவில் தனியாய்க் கிடந்ததான தரிப்பு விடுதியைப் போற்றான் தானும் தனிமைகொண்டானெனவும்  தோன்றியதில், நின்று பெருமூச்செறிந்தான்.
    இரண்டு மாதங்களின் முன்னால்தான் அவளைச் சந்திக்கவந்து, இறுதிப் பரீட்சை நன்றாய் முடிந்த களிப்பில் மிதந்தவளோடு  இந்தப் புற்றரையின் தரிப்பு விடுதி ; தொங்கு பாலம்; மூங்கிற்கரையருகில் நடத்தல் எனத் திரிந்தபோது வசீகரங்கொண்டதெனத்  தோற்றிய வாழ்க்கை இன்று சூனியங்கொண்டதே என்று உணர்ந்தவனின் கண்கள், எதிரில் விரிந்துகிடந்த பெருவட்டப்  புற்றரையை  வெறித்தன.
    ‘றஜவத்தை’யில் துரைராசாவின் அறையில், ஜன்னலுக்கூடாக நின்று நோக்கியதில் தொலைவில்  ‘வாசிற்றி’ பார்வைகொள்ள, அதனுள் நுழையும் வாய்ப்பும் இழக்கப்பட்டதான பழைய நினைவும் வர, ‘தன் வாழ்க்கையே நீண்ட இழப்புக்களைக்கொள்ள வந்ததுதானோ’ என, நினைவுகொண்டான்.
     கொழும்பு திரும்பியதில் ‘வவசெற் பிளேசின்’ நாற்பத்தோராம் இலக்க அறைக்குள்ளும் பார்சல் ஒவ்வீசுக்குமாகக் கழிந்த சாரமற்ற வாழ்க்கையிடையிலும், அவளிடமிருந்து ஒரு கடிதத்தையாவது  எதிர்பார்த்திருந்தான்.
    இரண்டு  மூன்று மாதங்கள் கழிந்ததிலும் ஒன்றையும் காணாததில் துயர்கொண்டவன் மனது, நம்பிக்கை இழந்ததில் சலிப்புக்கொண்ட  வேளை, அவள் பீ. ஏ.யில் பாசாகியதைத் தெரிவித்த லோகநாதனின் கடிதம் கிடைத்ததில் இறுதிப்  பரீட்சை முடிந்த களிப்புத் துள்ள தன்னோடு திரிந்த அவளது நினைவு மின்னலிட, நம்பிக்கை துளிர்த்ததெனக் காத்திருந்தான்.
    காலங் கழிந்ததிலும் ஒன்றையுங் காணாதவனின் கண்ணில், தொடுவானமும்; தொலைதூர நட்சத்திரங்களும்  பார்வைகொண்டு உறுத்தின.
    ‘பிரபஞ்ச வெளியின் தனித்த கிரகங்களைப்போல்தான் நாமும் தனித்துப்போனோமோ’வென நினைத்தவன் மனது யாழ்ப்பாணத் தொலைவை கிரக இடைவெளித்தூரமெனக் கற்பித்ததில் விரக்திகொண்டு, இனி ஒருபோதும் யாழ்ப்பாணம் செல்வதில்லையெனக் கொழும்பிலேயே சாரமற்று  உழன்றுகொண்டிருந்தான்.
   எச்சில்தொட்டு  எழுதியதில் ஊறி விளிம்புகட்டிய காபன் பென்சில் எழுத்துக்களில், ஏதோ என்னவோ எனப் பயந்து கடிதம்மேற் கடிதமாய் அம்மா உருகி எழுதியதில்,  தள்ளாத வயதில் அவளிற்கேன் இந்தத் துயரமெனத் தோன்ற  யாழ்ப்பாணம் வந்தவேளை.... இவளையும் காணநேர்ந்ததே என்பது தோன்ற, மனது  துயர்கொள்ள நின்றான்.
    “என்ன யோசிக்கிறீங்க ....” என அவள் கேட்டதில் விழிப்புக்கொண்டவன்,  “இல்ல.... பழைய நினைவுகள்....” என மெதுவாய்ச் சொல்லியபடி அவளைப் பார்த்தான். யோசனைகள் முகத்தில் நிழலிட்ட தென, அவள் நின்றாள் ; அவளும் பழைய நினைவுகளைக் கொண்டாள்போலும்!
    படிக்கையில், மத்தியானம் ஊரிற்குச் சென்று அவசரமாய்த்  திரும்புகிறவனை எதிர்பார்த்துக் காத்து மெல்ல நடந்து போகையில், அவனும்  வர இதே ஒழுங்கையால் கதைத்தபடிபோன நாட்களை நினைத்திருக்கலாம்.
     காலையில் செபம் விரைவில் முடிந்துபோனபோதும் மறுபுறத்தில் ‘நமச்சிவாய வாழ்க ....’ என நீண்டுசெல்லும் சிவபுராணத்தைத் தொடரும் சைவச் சொற்பொழிவு முடியும்வரை, பத்தோ பதினைந்து  வேதக்காரப்  பிள்ளைகளாய்க் காத்திருந்த வேளைகளில்...., அந்நிய மதச் சூழலில் – மதம் தந்த நெருக்கங்காரணமாய் கதைத்திருந்த பொழுதுகள்....!
    free periods இல், லைபிறறியில்.... ; பேராதனையின் ‘அந்த  மனோகர நாட்களை’யும் நினைத்திருக்கலாம்.
    முகம் இருள்கொண்டதென நின்றவளின் கண்ணில் நீர்முத்துத் திரண்டதெனக் கண்டவன், வாய்விட்டு அழுதுவிடுவாளோ எனத் தோன்ற, ‘இரண்டு  வருஷமாய் ஒரு கடிதமும் போடாததைக்’ கேட்க நினைந்ததையும் கைவிட்டுத் தலையைத் திருப்பி மறுபுறத்தைப் பார்த்தான்.
    சைக்கிள் ‘பாரில்’ சாய்ந்தபடி, தெளிவாய்க் காலடியில் எதையோ உற்றுப் பார்த்ததென நின்ற லோகநாதனைத்  தவிர, அந்த ஒழுங்கையே தனிமை கொண்டதென வெறிச்சிட்டுக் கிடந்தது. மதியம் நெருங்கிய பொழுதில் வேலியோரச் சிறுநிழல்கள் தவிர வெயிலில் வறண்டு கிடந்ததைக் கண்டதில் இதுபோல்தானேயென, தனது வாழ்க்கையினையும் நினைத்துக் கொண்டான்.
    “நல்லாய் மெலிஞ்சுபோனீங்க...., உடம்பப் பாக்கிறதுக்கென்ன....” எனக் கேட்டு, “என்ர வாழ்க்கையில என்ன சந்தோஷமிருக்கு?” எனப் பதில்சொன்னதில்,
     “எல்லாந்தான் முடிஞ்சுபோச்சே....” என்றவள் சேலைத் தலைப்பை வாயில் அடக்கியபடி விம்மினாள்.
     “மலர்! இதென்ன றோட்டில....” என்றவன் கதையை மாற்ற முயன்று, “இப்ப எங்க போக வெளிக்கிட்டனீர்?” எனக்  கேட்டான்.
     “ஆஸ்பத்திரிக்குப் போகவேணும்” என அவள் பதில் சொல்லியதில், “அப்ப, நேரம் போகுதே....!”  என்றவனுக்கு,
     “ஓம், கச்சேரியடியில பஸ் எடுக்கவேணும்” என விம்மற் குரலில் மெல்லச் சொல்லியவள், சிறிதே சுறுசுறுப்புக் கொண்டாள்.
     அவள் விரைவிற் போகட்டுமென, அவன் மௌனங்கொண்டு நின்றபோது....
     “கொழும்புக்குப்  போறதுக்கிடையில ஒருக்கா வீட்ட  வாருங்க....” எனக் குரல் கேட்டு,
     “பாப்பம்....” என இழுத்தபடி சைக்கிளைத் திருப்பினான்.
     “பாப்பமெண்டால்....? கட்டாயம் வாருங்க ....,எவ்வளவு நாளாய்க்  காணஇல்ல....”  என்றபடி சேலைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்தபடி அவள் நின்றதைக் கண்டதில், பழைய ‘இழைவு’ மின்னலிட்டதெனத்  தோன்ற மௌனமாய்  நிலைத்தபார்வையோடு  “ஓம்” எனத் தலையாட்டினான்.
     அவள், நடந்து  போனாள்.
     தோளிற் கிடந்த குழந்தை அவனைப் பார்த்துக் கையைத் தூக்கித்தூக்கிக் கீழே போட்டபடி சென்றதைக் கண்டவன்,
     வாழ்வின் வசந்தங்களும், கையசைத்தபடி இவ்வாறுதான் தன்னைவிட்டும் எந்நேரமும் செல்கின்றனவோ என உணர்வுகொண்டதில் மனது வெறுமைகொள்ள, ‘தனது வாழ்க்கையின் சாரமே துயரந்தானேயெனச்’ சலிப்புக்கொள்ள நின்றவனின் காதில், “யேசு....போவமா?”  என லோகநாதன் கேட்டதென்ற ஒலிகள், ஈனஸ்வரத்தில் தடவிச் சென்றன....

 -   மாசி 1971

Friday, October 24, 2008

சுமை

குரு அரவிந்தன் - கனடா
(கனடியத் தமிழ் வானொலி (CTR) சர்வதேசரீதியாக நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற சிறுகதை இது.)

இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப் போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப் பட்டதும், கூச்சம் தாங்காமல் அவை தானாகவே இறுக மூடிக் கொண்டன. இமைகள் மூடிக் கொண்டாலும் காது மடல்கள் விரிந்து நெருங்கி வரும் கனமான பூட்ஸின் அதிர்வுகளை மௌனமாக உள்வாங்கிக் கொண்டன. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதற்கான எதிர்பார்ப்பில், இதயம் ஏனோ வேகமாகப் படபடவென்று அடித்துக் கொண்டது. மிக அருகே அதிர்வுகள் நிசப்தமாகிப் போனதால், பயத்தில் இதயம் இன்னும் வேகமாக அடித்துக் கொள்ள, தூங்குவது போலப் பாசாங்கு செய்ய முனைந்தான்.

'எழுந்திருடா' பூட்ஸ் கால் ஒன்று விலாவில் பட்டுத் தெறித்தது.

துடித்துப் பதைத்துக் கைகளை ஊன்றி எழுந்திருக்க முயற்சி செய்தான். 'சுள்' என்று முழங்கால் மூட்டு வலித்தது. அடிக்கு மேல் அடிவாங்கிய அந்த உடம்பிற்கு, எங்கே வலிக்கிறது என்பதைக்கூட உணர முடியாமல் இருந்தது. வீங்கிப்போன கால்கள் எழுந்து நிற்கமுடியாமல் துவண்டு சரிந்தன. வந்தது யாராய் இருக்கும் என்று ஊகித்ததில் நிமிர்ந்து பார்க்கவே பயமாக இருந்தது.
'வெளியே வாடா நா..!' தொண்டை கிழிய அவன் கூச்சல் போட்ட போது அவனது குரலை இவனால் இனம் காண முடிந்தது. அவனது கண்களில் இவன் படும் போதெல்லாம் இப்படித்தான் கொச்சைத் தமிழில் கூச்சல் போட்டுக் கத்துவான். ஒரு போதும் அவனது வாயிலிருந்து நல்ல சொற்கள் உதிர்ந்ததை இவன் கேட்டதில்லை.

தள்ளாடியபடியே வெளியே வந்து, அச்சத்துடன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சப்பாத்துக் கால்களைப் பின் தொடர்ந்தான். இரும்புக் கதவுகள் பல திறந்து, மூடப்பட்டு இறுதியில் ஒரு அறைக்குள் இருந்த அதிகாரி முன் நிறுத்தப் பட்டான். இந்தச் சிறைக்கு மாற்றப்பட்ட நாளில் இருந்து யாரையுமே நிமிர்ந்து பார்க்க அவனுக்குப் பயமாக இருந்தது.

'நீ நடேசுதானே..?'

எப்போவோ மறந்துபோன அவனது பெயர் நினைவுவர மெல்ல தலை நிமிர்த்திக் குரல் வந்த திசை நோக்கிப் பார்வையைச் செலுத்தினான். அவனைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய ஆவணமாய் இருக்கலாம், அந்த அதிகாரிக்கு முன்னால் மேசையில் விரித்து வைக்கப்பட்டிருந்தது. அதுவும் இவனது கடந்த கால நிலையற்ற வாழ்க்கைபோல, மின்விசிறிக் காற்றில் அடிபட்டுத் துடித்துக் கொண்டிருந்தது.

எதுவும் பேசாது தலையாட்டிக் காளைபோல, இவன் தன்னிச்சையாய் தலை அசைத்தான்.

'உனக்கு விடுதலை, கையொப்பம் போட்டு விட்டு நீ போகலாம்..!'

அவனுக்குத் திக்கென்றது. விடுதலையா? எனக்கா? அவன் ஒருபோதும் விடுதலை வேண்டும் என்று கேட்கவே இல்லையே..? விடுதலை என்று கையொப்பம் போட்ட பல தமிழ் இளைஞர்கள் வீடுபோய்ச் சேரவில்லை என்பது இவனுக்குத் தெரியும். இவனைக் கொண்டே அப்படிப் பலரின் சடலங்களைப் புதைத்தால் என்றாவது தெரியவருமென்று, அடையாளம் தெரியாமல் எரிக்கப் பண்ணியிருக்கிறார்கள்.

கையிலே ஒரு பையைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். கையெழுத்துப் போட்டுவிட்டு பிரித்துப் பார்த்தான். இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் இவன் கைதானபோது அணிந்திருந்த வேட்டியும், சேட்டும் இவன் நினைவுகளைப் போலவே அவையும் கசங்கி மங்கிப்போய்க் கிடந்தன. சேட்டை உதறி மாட்டிப் பார்த்தான். தொளதொளத்துப் போயிருந்தது. தாடியும், பரட்டைத் தலையும் தெருப் பிச்சைக்காரனை அவனுக்கு ஞாபகமூட்டியது.
பலியாடு போலப் பின்தொடர, இராணுவ தடை முகாமிற்கு வெளியே உள்ள வீதியில் அவனைக் கொண்டு வந்து விட்டார்கள். இவனது இளமைக் காலத்தை முற்றாகக் கொள்ளையடித்த அந்த இராணுவ முகாமை வெறுப்போடு திரும்பிப் பார்த்துக் கொண்டே உயிர் வாழும் ஆசையில் அந்த இடத்தை விட்டு வேகமாய் நடந்தான்.

இனி எங்கே போவது? யாரிடம் போவது? உள்ளே இருக்கும்வரை இல்லாத பிரச்சனை இப்போ பூதாகரமாய் தலை தூக்கி நின்றது. காலையில் இருந்து பட்டினி கிடந்ததால் பசி வயிற்றைக் கிண்டியது. உள்ளே இருந்திருந்தால் ஒருவேளை கஞ்சியாவது கிடைத்திருக்கும். உடலும் உள்ளமும் சோர்ந்து போக அப்படியே தெருவோர மரத்தடியில் உட்கார்ந்தான்.

மழை வரும்போல, ஆங்காங்கே வானம் கறுத்திருக்க குளிர் காற்று சில்லிட்டது. சூடாக ஏதாவது குடித்தால் இதமாக இருக்கும்போல் தோன்றிற்று. யாரோ பாதி குடித்துவிட்டுக் கீழே போட்டு நசுக்கிவிட்ட பீடித்துண்டு ஒன்று குழி விழுந்த தெருவில் அரை உயிரோடு இழுப்பு வந்ததுபோல இழுத்துக் கொண்டு கிடந்தது. அதை எடுத்து அதில் ஒட்டியிருந்த மண் துகள்களை ஊதித் தள்ளிவிட்டு வாயில் வைத்து உதட்டைக் குவித்து ஒரு இழுப்பு இழுத்தான். இழுத்த இழுப்பில் இதமான சூடு உள்ளே உடம்பெல்லாம் பரவ, நரம்புகள் புடைத்து நிற்பதை இவன் உணர்ந்தான். அந்த பீடித்துண்டு கொடுத்த உட்சாகத்தோடு மீண்டும் எழுந்து தள்ளாடியபடி நடந்தான்.

எங்கே போவது என்று தெரியாமல் கால்போன திசையில் விச்ராந்தியாக நடந்தான். கனமான பூட்ஸ் கால்கள் பதிந்த இடமெல்லாம் திட்டுத் திட்டாய் வீங்கிப் போயிருந்தன. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் வேதனை தாங்காது 'விண் விண்' என்று மூட்டுக்கள் வலித்தன. காலாகாலமாய் முடிவின்றி நடந்ததுபோல கால்கள் துவண்டு போயின. இன்னும் எவ்வளவு தூரம்..?

எப்படியோ யாரையோ எல்லாம் கெஞ்சி மன்றாடி, மாடுகள் சோடைபிடித்துப் போவதுபோல கடைசியில் இவனும் தான் பிறந்த மண்ணுக்கு வந்து சேர்ந்தான். இருபத்திரண்டு வருடங்களுக்குமுன் இருந்த கிராமம் எப்படியோ எல்லாம் மாறிப்போயிருந்தது. பெட்டிக்கடை மளிகைக் கடையாய் மாறி இருப்பதை அதிசயமாய்ப் பார்த்தான். குழந்தை பசியிலே வீரிட்டதைத் தாங்கமுடியாமல் ஊரடங்குச் சட்டத்தையும் பொருட்படுத்தாமல் தெருவைக் கடந்து பின்பக்கத்தில் இருந்த பெட்டிக் கடைக்குப் பால்மா வாங்கச் சென்ற பொழுதுதான் இவன் இராணுவத்தால் பிடிக்கப்பட்டான். அப்புறம் வேண்டாத குற்றமெல்லாம் இவன்மீது சாட்டி இவனையும் கும்பலோடு கும்பலாகக் கொண்டு போனார்கள். ஒவ்வொரு முகாமாக இவனைக் கொண்டு திரிந்து, அலைக்கழித்து இவனது குடும்பத்திற்கு கண்ணாமூச்சி காட்டினார்கள். பணவசதியோ செல்வாக்கோ இல்லாததால் இவனை வெளியே கொண்டுவர இத்தனை காலமாகியும் இவனது குடும்பத்தால் எதுவுமே செய்ய முடியாமல் போய்விட்டது.

யார்யாரையோ எல்லாம் விசாரிக்க, கடைசியில் கடைக்கு முன்னால் உள்ள மரத்தடியில் கண்ணாடியோடு உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த வயோதிபர்தான் அவனை யார் என்று அடையாளம் கண்டு கொண்டார். 'தன் கணவன் உயிரோடு இருக்கிறான்' என்ற ஒரு நல்ல வார்த்தையைக் கேட்பதற்காக ஒவ்வொரு முகாமாக இவன் மனைவி அலைந்து திரிந்து உயிர் உருக அரசிடம் யாசித்தது அவர் மனக்கண்முன் நிழலாய் வந்தது.
நடேசு தனது குடும்பத்தைப் பற்றி அவரிடம் விசாரித்தான். அவர் கொடுத்த தகவலின்படி அவனது மனைவி இறந்து போனதும், மகள் பாட்டியோடு வளர்ந்து வந்ததும், இப்போ திருமணமாகி அந்த ஊரிலேயே தங்கி இருப்பதும் தெரியவந்தது.

''நீ திரும்பி வருவாய் என்று நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை நடேசு!'' அவனது மகள் குடியிருக்கும் ஒதுக்குப் புறமான ஒரு குடிசைக்கு அவனை அவர் அழைத்துச் செல்லும் போது அவர் ஆச்சரியமாய்ச் சொன்னார்.

வாசலில் சொறி நாய் ஒன்று கண்மூடிப் படுத்திருந்தது. நாயைச் சுற்றி ஈக்கள் வட்டமிட்டு மொய்த்துக் கொண்டிருக்க, மெல்லிய உறுமலோடு தலை நிமிர்த்திப் பார்த்துவிட்டு மீண்டும் சுருண்டு படுத்துக் கொண்டது. அறிமுகம் இல்லாத இவனைப் பார்த்துக் குரைக்காமல் விட்டதே இவனுக்கு மிகப்பொரிய ஆறுதலாக இருந்தது.

'சரசு..!' என்று பெரியவர் வெளியே நின்றபடி குரல் கொடுத்தார்.

இருபத்திமூன்று, அல்லது இருபத்திநாலு வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி வெளியே வந்தாள். அவளின் முந்தானையைப் பிடித்தபடி நாலு, ஐந்து வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றும் தொடர்ந்து வந்தது.

நடேசு ஆச்சரியத்தோடு வெயியே வந்த அந்தப் பெண்ணைப் பார்த்தான். இருபத்திரண்டு வருடங்களுக்குமுன் மனைவியைப் பார்த்த ஞாபகம் சட்டென்று வந்தது.

'சரசு, இது யார் என்று தெரியுதா..?'

அவள் நடேசுவைச் சலனமற்ற ஒரு பார்வை பார்த்துவிட்டு 'தெரியாது' என்பது போலத் தலையசைத்தாள்.

'இதுதான் உன்னோட அப்பா, நடேசு..!'

அவள் அந்த வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. அவளது முகபாவத்தில் இருந்து அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவள் இல்லை என்பது இவனுக்குப் புரிந்து போயிற்று. அவளோ வேண்டாத சந்தேகத்தோடு நடேசுவைப் பார்த்தாள்.

'அவர்தான் செத்துப் போயிட்டாரே..?' புதிதாக ஒருவனை ஏற்கமுடியாத நிலையில் வார்த்தைகள் இழுபட்டன.

'இல்லை சரசு, தொலைந்து போனவன், செத்துப் போயிட்டான் என்றுதான் நாங்க எல்லோரும் நினைச்சு கருமாதி எல்லாம் செய்திட்டோம். ஆனால் இத்தனை வருடமாய் மாறிமாறி ஒவ்வொரு தடைமுகாமிலையும் இருந்திருக்கிறான். இப்பதான் நாட்டிலே சமாதானம் என்று சொல்லி இவனை விடுதலை செய்தார்களாம்.'

அவள் இடையிலே வந்த இந்தப் புதிய உறவை ஏற்றுக் கொள்ள முடியாதவளாய், இந்தக் கதை எல்லாம் எனக்கு வேண்டாம் என்பது போலப் பிடிவாதமாய், அவரது கூற்றை மறுப்பதுபோலத் தலையசைத்தாள்.
'அப்பா என்கிற உறவே என்ன என்று தெரியாமல் நான் இத்தனை வருசமாய் வளர்ந்திட்டேன்;. பாட்டி போனதுக்கப்புறம் வேளாவேளைக்குச் சாப்பிடக்கூட வழியில்லை. கூலி வேலை செய்து இந்தக் குழந்தையை வளர்த்து எடுக்கவே என்பாடு சங்கடமாய் இருக்கு. இப்போ புதிதாய் இந்த வயதிலே அப்பா என்று இவர் உறவு முறை சொல்லிக் கொண்டு வந்தால் நான் என்ன செய்ய..? இருக்கிற சுமையே எனக்குப் போதும் சாமி, இனி என்னாலே புதிதாய் வேறு ஒரு சுமையையும் தாங்கமுடியாது!'

இது போலக் கௌரவமாக வாழ்ந்த இப்படி எத்தனை ஆயிரம் குடும்பங்கள் அந்த மண்ணிலே சிதைக்கப்பட்டு அவர்களின் எதிர்காலக் கனவுகள் எல்லாம் பெரும்பான்மை இனத்தவர்களால் கொள்ளை அடிக்கப் பட்டிருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்க நடேசுவுக்கு ஓவென்று அழவேண்டும் போலிருந்தது. ஆழமாக நினைவுமுள் கிழித்த வேதனையில் காலில் இருந்த வலி மறந்துபோக, தன் எதிர்காலம் குறித்த கவலை இப்போது அவனைப் பிடித்துக் கொண்டது.

'பாட்டிக்கு என்னாச்சு..?' பெரியவர் கேட்டார்.

'பாட்டி போனவருடம் செத்துப் போயிட்டா.' என்றாள் சரசு.

'அப்போ உன் புருசன்..?'

'மூன்று வருடமாச்சு, இவனுக்கு சாப்பிட ஏதாவது கடையிலே வாங்கிக் கொண்டு வர்றேன் என்று சொல்லிவிட்டு கடைப்பக்கம் போனவர்தான் அப்புறம் திரும்பி வரவே இல்லை..!' என்றாள்.

எங்கே போயிருப்பான் என்பதுதான் எப்போதுமே விடை தெரியாக் கேள்வியாய்த் தொக்கி நிற்கிறது. தன்னைப் போலவே தொலைந்து போனவர்களின் பட்டியலில் அவனது பெயரும் எங்கேயாவது எழுதப்பட்டிருக்கலாம் என இவன் நினைத்தான். இன்று நாட்டில் இருக்கும் சூழ்நிலையில் அவன் உயிரோடு இருப்பானோ என்பதுகூட இவனுக்குச் சந்தேகமாய் இருந்தது.

'ஏதோ பெற்றெடுத்த கடமைக்காக என்றாலும் காய்ச்சிற கஞ்சியோ, கூழோ மிச்சம் இருக்கிறதைக் கொடுத்தால் போதும் சரசு, உனக்கு ஒருகாலும் நடேசு பாரமாய் இருக்கமாட்டான்.' வேலி ஓலையில் பிய்த்து எடுத்த ஈக்குச்சியால் பல்லைக் குடைந்து கொண்டிருந்த நடேசுவிற்காகப் பெரியவர் பரிந்துரைத்தார்.

கனவு கண்டுகொண்டு வாசலில் படுத்திருந்த நாய் திடீரென எழுந்து தன் இருப்பை உறுதி செய்ய ஒரு உசுப்பல் உசுப்பி சோம்பல் முறித்தது. நடேசுவைக் கண்டு கொள்ளாமல், ஒரு பாய்ச்சல் பாய்ந்து எதிர் வீட்டுக் கோழியை விரட்டிக் கொண்டு ஓடியது. வாசலின் வெறுமையில் கலைந்துபோன ஈக்கள் எல்லாம் இப்போ நடேசுவைச் சுற்றி மொய்க்கத் தொடங்கின.

குரு அரவிந்தன்
கனடா

நன்றி : கனடிய தமிழ் வானொலி

புல்லுக்கு இறைத்த நீர்..!

குரு அரவிந்தன் - கனடா

தவிர்க்க முடியாமல் போயிருக்கலாம். எப்படியோ அவனை நேருக்கு நேரே சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது.
எதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும் தர்மசங்கட நிலை ஏற்படும்போது சிலர் தெரியாதமாதிரி, கண்டும் காணாததுபோல முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டு அந்த இடத்தை விட்டு மெல்ல நழுவி விடுவதும் உண்டு. சிலர் வேறு வழியில்லாமல் ''சார் எப்படி இருக்கிறீங்க, சௌக்கியமா..?'' என்று பட்டும் படாமலும் குசலம் விசாரித்து விட்டு விலகிச் செல்வதும் உண்டு. இன்னும் சிலர் உண்மையாகவே குரு பக்தியோடு, நலம் விசாரிப்பதில் அக்கறையோடு நின்று நிதானமாக பேசுவதும் உண்டு.
'இத்தனை வருடங்களுக்குப் பின்னும் என்னுடைய பெயரை ஞாபகம் வைச்சிருக்கிறீங்களே, எப்படி சார்..?' என்று வேறுசிலர் ஆச்சரியப்படுவதும் உண்டு.

'உங்கவீட்டிற்கு குடும்பத்தோடு ஒரு நாளைக்கு வரணும் சார், உங்களைப் பற்றி தினமும் வீட்டிலே சொல்லுவேன், இது நீங்க கொடுத்த வாழ்க்கை.' கைகளைப் பற்றிக் கொண்டு டாக்டர் சுந்தர் சென்றவாரம் கண்கலங்கச் சொன்னபோது எனக்கும் கண்கள் கலங்கிவிட்டன.

வீட்டைவிட்டு வெளியே உலாவந்தால் என்னிடம் படித்த மாணவர்கள் நிறையவே தென்படுவார்கள். இப்படி என்னிடம் படித்த எத்தனையோ மாணவர்கள் இன்று டாக்டகளாகவோ, அல்லது உயர் பதவி வகிப்பவர்களாகவோ இருந்து கொண்டு சென்ற இடமெல்லாம் என்னிடம் நலம் விசாரிக்கும்போது, இந்த சமுதாயத்திற்கு முடிந்த அளவு நல்லதொரு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கிக் கொடுத்த எனது கடந்தகால வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருப்பதாக எனக்குள் ஒரு பெருமிதம் தோன்றும். என்னுடைய மாணவன் என்று சொல்லிக் கொள்வதில், அறிமுகம் செய்வதில் மனசெல்லாம் பூரித்துப் போகும். இவன் மட்டும் எந்த வகையிலும் சேராமல் வித்தியாசமாய், மரியாதையின் நிமிர்த்தம் சட்டென்று வாயிலே இருந்த சிகரட்டை எடுத்து பின்னால் மறைத்துக் கொண்டு நின்றான். வாய்க்குள் இருந்த புகையைக் கஸ்டப்பட்டு மென்று விழுங்குவது தொண்டைக் குழி அசைவில் தெரிந்தது. பார்ப்பதைத் தவிர்த்திருக்கலாம். தர்மசங்கடமான அந்த நிலையில் தன்னைத்தானே மாட்டிக் கொண்டு விழித்தான். அந்த இறுக்கத்தைத் தணிக்க, எதிர்த்தாற்போல் நின்ற அவனிடம் 'எப்படி இருக்கிறாய்,..?' என்று குசலம் விசாரித்தேன்.

என்னுடைய கல்லூரி வாழக்கையில் வந்துபோன பலரில் இவனும் ஒருத்தனாய் இருந்தான். நல்ல நிறமாய், மிக நேர்த்தியாக உடை அணிந்து இருப்பான். அன்று மாணவனாய் இருக்கும் போது பார்த்த அதே அலட்சிய் பார்வை. உருவம் மட்டும் கொஞ்சம் மாறி இருந்தது. புத்தகமும் கையுமாய் அதே மூக்குக் கண்ணாடியோடும், கீழ்க்கண் பார்வையோடும் காட்சி தந்தான். வெகுநாட்களாகத் தூங்காதவன் போல முகம் களைத்திருந்தது.
'சார் நல்லா இருக்கிறீங்களா..?' என்று ஒரு சொல்லாவது அவன் கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. எனக்கேன் இந்த ஆசை என்பது எனக்கே புரியவில்லை. எதையுமே நிலையாக உள்வாங்கிக் கொள்ளும் நிலையில் அவன் தற்போது இல்லை என்பது அவனை அருகே பார்த்தபோது புரிந்தது. தள்ளாத வயதில் எதிர்பார்புகள் அதிகமாக இருக்குமோ?

மேளனத்தின் இடைவெளியைத் தவிர்ப்பதற்காக,
'என்ன இந்தப் பக்கம்..?' என்றேன்.

'சும்மா.. லைபிரரிக்கு..!'

அந்த ஒற்றைச் சொல்லுக்கு மேலே அவன் எதுவும் சொல்லவில்லை.
அந்த ஒற்றைச் சொல்லை வைத்துக் கொண்டு இவனைப் பற்றிய முழுவதுமான எந்த ஒரு முடிவிற்கும் என்னால் வர முடியாமல் இருந்தது.
காற்றின் சுழற்சியில் சிகரட் புகை மேலே எழும்பி முதுகைத் தாண்டி தலைக்குமேலால் சுருண்டு போனது. விரல் இடுக்கில் இதுவரை பின்னால் மறைத்து வைத்திருந்த சிகரட் விரலைச் சுட்டிருக்க வேண்டும். அப்படியே கீழே நழுவவிட்டான். விழுந்த இடத்தைப் பார்க்காமலே வெகுலாவகமாக குறி வைத்துச் செருப்புக் காலால் மெல்ல நசித்து விட்டான். அது நசுங்கிய வேகத்தில் வித்தியாசமான ஒருவித மணம் பரப்பி வண்டிச் சக்கரம்பட்ட தேரைபோல இறுதி மூச்சை விட்டுப் பிதுங்கிப் போனது. என் மீது இருந்த பார்வையை எடுக்காமலே தன்னிச்சையாகவே அத்தனையையும் செய்து முடித்தான்.

ஒருவேளை இவனது கடந்தகால வாழ்க்கையும் இப்படித்தான், புரியாத தெரியாத காரணங்களால் அடிபட்டு நசுங்கிப் போயிருக்குமோ..?
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, இவன் முதன் முதலாக அட்மிஷன் கேட்டு வந்தபோது அவனது தாயும் கூடவே வந்திருந்தாள். கேட்டதற்கு மட்டும் இவன் தலையசைத்தான், பாரம் நிரப்புவது முதற்கொண்டு மிகுதி யாவற்றையும் தாயே செய்து முடித்தாள். போகும்போது 'என் பையன் டாக்டராகணும், அது உங்க பொறுப்பு என்று வேறு சொல்லிவிட்டுச் சென்றாள். மகனை எப்படியாவது டாக்டர் ஆக்கிவிட வேண்டும் என்ற ஆதங்கம் அவள் பேச்சிலும் செய்கையிலும் தெரிந்தது.

அவனுக்கு கணிதம் நன்றாகவே வந்தது. ஆனால் விஞ்ஞானம் புரியவே மாட்டேன் என்றது. பொறியியல் துறையில் அவனுக்கு இருந்த ஆர்வம் விலங்கியல் துறையில் வரவேயில்லை. ஆனாலும் எப்போதும் புத்தகமும் கையுமாய் படித்துக் கிழிப்பவன் போல் வெறும் பாவனை செய்வான்.
தாயின் கனவுகள் வெறும் பகற்கனவாய்ப் போகப் போகிறது என்பது எனக்குச் சீக்கிரமே புரிந்து போயிற்று. காலத்தை விரயமாக்க வேண்டாம், அவனுக்குப் பிடித்தமான துறையில் அவனைச் செல்ல விடும்படி ஜாடைமாடையாக தாயிடம் சொல்லிப் பார்த்தேன். கேட்பதாக இல்லை. மகனை டாக்டராக்கிப் பார்ப்பதைத் தவிர வேறு லட்சியமே தனக்கு இல்லை என்பது போல, நான் சொன்னது எதையுமே அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கடைசியில் காலம்தான் பதில் சொன்னது. தாயின் கனவு கலைந்தபோது, அவன் எதுவுமே இல்லாமல் வெறும் பூஜ்யமாய் இருந்தான்.

'உன் அம்மா..?' சட்டென்று தாயின் ஞாபகம் வரவே விசாரித்தேன்.
'அம்மாவிற்கென்ன என்னை தனியே நடுத்தெருவில் விட்டிட்டு மகாராசியாப் போயிட்டா.' சட்டென்று சுதாரித்துக் கொண்டு, கைகளை உயர்த்தி மேலே காட்டிச் சொன்னான். பார்வை எங்கோ வெறித்தது.

'ஐயாம் சொறி..!' அனுதாபப்பட்டு ஆறுதல் கூறினேன்.

கனவுகளை யதார்த்தம் என்று நம்பி ஏமாந்தவள் இவனின் தாய். இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றவள் மகாராசியாய் எப்படிப் போயிருக்க முடியும், பரிதவித்துத்தான் போயிருப்பாள் என்று, அவனது பதில் என்னை எண்ண வைத்தது.

என்னுடைய கடந்தகால ஆசிரியர் தொழில் அனுபவத்தில், இப்படி எத்தனையோ திறமை மிக்க மாணவர்கள் பெற்றோரின் வீண் பிடிவாதத்தால், தவறான பாதையில் வழிகாட்டப்பட்டு கடைசியில் ஒன்றுமே இல்லாமற் போவதைப் பார்த்திருக்கிறேன். இவன் மட்டும் என்ன விதிவிலக்கா?
கொஞ்சக் காலம் என்னிடம் படித்தவன் என்ற முறையில், அவனது இந்த நிலைக்கு நானும் ஒருவிதத்தில் காரணமோ என்று மனசு சங்கடப்பட்டது.
'நேரம் இருந்தால் எங்க வீட்டுப் பக்கம் ஒரு நடை வாவேன்' என்றேன்.
'எங்கே இருக்கிறீங்க..? முகவரியைக் கொஞ்சம் கொடுங்களேன்' என்றான்.
முகவரியைச் சொன்னேன். பவ்வியமாய் ஒரு துண்டுப் பேப்பரில் குறித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான்.

'கட்டாயம் வரணும் சரியா?' என்றேன்.

'கட்டாயம் வர்றேன், ஆனால் நீங்க யார் என்று இன்னமும் சொல்லவே இல்லையே..?' என்றான்.

அவனது காலடியில் கிடந்த நசிக்கப்பட்ட சிகரட் துண்டு என் பார்வையில் பட்டது. அந்த சிகரட் புகையின் நாற்றம் என் உடம்பு முழுவதும் சட்டென்று படிந்து விட்டது போல ஏனோ என் உணர்வு சங்கடப்பட்டது.

குரு அரவிந்தன்
கனடா
நன்றி : ஆனந்தவிகடன்

ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்!

- குரு அரவிந்தன் - கனடா -

இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. ஒன்று அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்த டி.என்.ஏ ரிப்போட், மற்றது அழகாக குண்டு குண்டாக அவருக்கு நன்கு பழக்கப்பட்ட கையெழுத்தில் முகவரி எழுதப்பட்டிருந்தது. ஊட்டி கான்வென்ட் ஹாஸ்டலிலிருந்டது எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தைத்தான் முதலில் பிரித்துப் படித்தார்.

'அன்புள்ள அப்பா'
பதினைந்து வயது நிரம்பிய மகள் திவ்யாவிடம் இருந்து கடிதம் வந்திருந்தது. ஆர்வத்துடன் தொடர்ந்து வாசித்தார்.

'அப்பா இனிமேல் உங்களை உரிமையோடு 'அப்பா' என்று என்னால் அழைக்க முடியுமோ தெரியாது. ஆனாலும் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் டி.என்.ஏ ரிப்போர்ட் உங்கள் கையிற்கு வருமுன் எனக்கும் உங்களுக்கும் இடையே இருந்த உறவைப் பற்றி மனம் விட்டுப் பேசவிரும்புகின்றேன்.

அப்பா என்றால் பாசம், அப்பா என்றால் அன்பு, எனக்கு எல்லாமுமாய் நீங்கள் தான் இருந்திருக்கிறீர்கள். அம்மாவின் அலட்சியமும், அசட்டையும், உதாசீனமும் என்னை அம்மாவிடம் இருந்து தூரவிலகிப்போக வைத்ததாலோ என்னவோ, உங்கள் மீது அதிகம் ஈடுபாடு கொள்ள வைத்தது. அன்பையும் பாசத்தையும் என் இதயத்தில் விதைத்து விட்டு உங்கள் இதயத்தை மட்டும் எப்படி அப்பா உங்களால் கல்லாக்கிக் கொள்ள முடிந்தது?

அம்மாவிற்கும் உங்களுக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் பூதாகரமாய் வளர்ந்து இப்படி விவாகரத்தில் முடியுமென்று நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. 'இவளுக்கு அப்பா நீங்கள் அல்ல' என்று அம்மா ஆவேசமாகக் கத்திக் கூச்சல் போட்ட போது கூட நான் அதைப் பெரிது படுத்தவில்லை. ஆனால் 'நீ என் பெண்தானா?' என்ற கேள்விக் குறியோடு என்னை நீங்கள் நிமிர்ந்து பார்த்தீர்களே அதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.
பெற்றோருக்குள் ஏற்படும் பிரச்சனைகளால் பிஞ்சுமனங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றன என்பதை ஏன்தான் பெற்றவர்கள் உணர்ந்து கொள்ள மறுக்கிறார்களோ தெரியாது. என் எதிர் காலத்தை நினைக்க எனக்கே பயமாக இருக்கிறது. எல்லோர் பார்வையிலும் நான் ஒரு கேள்விக் குறியாய்த் தெரிகிறேன். என்னைப் பொருத்தவரை எனக்கேற்பட்ட இந்தப் பாதிப்பு ஒரு மாறாத ரணமாய் என் மனதில் பதிந்து விட்டது.

அப்பா கடைசியாக உங்களிடம் ஒரு வேண்டுகோள்! விஞ்ஞானம் முன்னேறி விட்டது. அம்மா சொன்னது உண்மை என்றால் டி.என்.ஏ ரிப்போட் வந்ததும் நான் உங்கள் பெண் அல்ல என்பது நிரூபணமாகிவிடும். அந்த நிமிடமே நான் உங்களை விட்டு அன்னியப்பட்டு விடுவேன். அப்படி ஒரு நிலைமை ஏற்படுமுன் கடைசியாக ஒரு முறை உங்களைச் சந்திக்க விரும்புகின்றேன். எனக்கென்னவோ உங்கள் தோளில் முகம் புதைத்து மனதில் இருப்பதை எல்லாம் உங்களிடம் அழுது கொட்டித் தீர்க்க வேண்டும் போல இருக்கிறது! உங்கள் பிடிவாதத்தை கைவிட்டு என்னைப் பார்க்க ஒரே ஒரு முறையாவது வருவீர்களா?'

அந்தக் கடிதத்தை வாசித்ததும் அவர் இடிந்து போய்விட்டார். கணவன் - மனைவி பூசல் காரணமாக ஒன்றுமறியாக் குழந்தை வீணாகத் தண்டிக்கப் படுகிறாளே என்று நினைத்தார். விவாகரத்துக் கோரும் அளவிற்கு அவர் என்ன தான் தப்புச்செய்தார்?

கல்யாணமான புதிதில் அவருக்கு ஏற்றமாதிரி நடந்து கொண்ட மனைவி காலப் போக்கில் தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினாள். சிறிது சிறிதாக அவர்களுக்குள் தொடங்கிய பிரச்சனை குழந்தை பிறந்த பின்பும் தொடர்ந்து விசுவரூபம் எடுத்தது.

அவரிடம் பணம் இருந்தது, அவளிடம் அழகும் இளமையும் இருந்தன. அவளது விருப்பம் இல்லாமல் அவளது குடும்பத்தின் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் இந்தக் கல்யாணம் நடந்தது என்பது அவளாகச் சொல்லும் வரை அவருக்குத் தெரியாது. ஆனாலும் தனது குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு அவரிடம் உள்ள வசதிகளை அனுபவிப்பதற்காக அவளும் இவ்வளவு காலமும் மௌனமாய் அவரோடு ஒத்துப் போயிருக்கிறாள்.
'உனக்கு விருப்பம் இல்லாமலா இந்தக் கல்யாணம் நடந்தது?'
'ஆமா! என்னை ஒரு பெண்ணாய் யாருமே மதிக்கலே! உங்களுடைய பணத்தைக் குறிவைத்து என் ஆசைகளை, என் காதலை, கடந்த காலத்தை எல்லாவற்றையுமே எங்க அப்பா அடமானம் வைத்து விட்டாரே!' அவள் விசும்பி விம்மலாய் வெடித்தாள்.

'காதலா.......?'

'ஆமாம் காதல்தான்! என் காதலனைத் திருமணம் செய்யப்போவதாக நினைத்துத் தான் அவனோடு நான் நெருங்கிப் பழகினேன். ஆனால் விதி தான் உங்கள் உருவத்தில் வந்து விளையாடி விட்டதே! இனிமேலாவது எனக்கு விவாகரத்து மூலமா விடுதலை கொடுங்க...'

'அப்போ இத்தனை காலமும் என்னோட வாழ்ந்ததெல்லாம்......?'

'வாழ்ந்தது இந்த மீனாவோட உடம்பு மட்டும் தான், மனசல்ல! இனியும் போலியாய் என்னை நானே ஏமாற்றிக் கொண்டு உங்களோடு வாழ என்னாலே முடியாது. எனக்கு இந்த நரகத்தில் இருந்து விடுதலை வேணும்!'
'பிரிஞ்சு போகத்தான் வேண்டும் என்றால் அதை யாராலும் தடுக்க முடியாது, ஆனால் நம்ம பெண்ணோட கதி?''

'நம்ம பெண்ணா? யார் சொன்னது அவ உங்க பெண் என்று?'

'நீ... என்ன சொல்கிறாய்?'

'ஆமாம்! திவ்யாவிற்கு அப்பா நீங்க இல்லை!'

''இந்தா பார்! நம்ம குடும்ப வாழ்கையோட விளையாடாதே!'

'நான் விளையாடலே, ஆனால் அதுதான் உண்மை!'

இடி ஒன்று தாக்கியது போல அவர் அதிர்ந்து போனார்.
'அப்போ திவ்யா என்னோட பெண் இல்லையா?'

'இல்லை.

'பொய்..! என்னை அவமானப்படுத்த பொய் சொல்றே.. பிரியணும்னா போய்த் தொலை.. எதுக்காக இப்படி சித்திரவதை பண்றே..'

'இப்போ திவ்யா உங்க பெண்ணு இல்லைன்னு நிரூபிக்கணும் இல்லியா..?'

'கடவுளே!...

'நிரூபிச்சுக் காட்டறேன்

மனித மனத்தில் விழும் ஏமாற்றப் பள்ளங்கள் குரூரமாக வக்கிரங்களால் நிரம்பிவிடும் போலும்... அவள் அவனை அவமானப்படுத்தவே சதி தீட்டினாள். லீவுக்கு வந்த திவ்யாவைக் கட்டாயப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தி...

ஹாஸ்டல் விருந்தினர் அறைவாசலில் எதிர்பாராமல் அவரைக் கண்டதும் ஒரு கணம் திகைத்துப் போய் நின்று விட்டாள் திவ்யா. அப்புறம் சமாளித்துக் கொண்டு, 'நான் உங்களுக்கு ஒரு கடிதம் போட்டேனே கிடைத்ததா?' என்றாள்.

'கிடைச்சதும்மா...'

'டி.என்.ஏ ரிப்போட் இன்னும் வரல்லையா?'

'வந்திடிச்சு!'

'வந்திடிச்சா?'
அவள் முகத்தில் ஏமாற்றமும், அதே நேரத்தில் அதன் முடிவை அறிந்து கொள்ளும் தவிப்பும் தெரிந்தன.

'நினைச்சேன், நீங்க தயங்கி நிற்கும்போதே உங்களுக்கு உண்மை தெரிஞ்சிருக்கும் என்று நினைச்சேன்!'

'தெரியும்!'

'அப்போ அம்மா சொன்னது அத்தனையும் உண்மை தானே?'

'இல்லை, அம்மா சொன்னதில் உண்மையில்லை! அம்மாவிற்கு என்னோடு வாழப்பிடிக்கலை, அதனாலே எனக்குக் கோபமூட்டி என்னிடம் இருந்து விவாகரத்து வாங்கத்தான் அம்மா அப்படிச் சொல்லியிருக்கா!'

'அப்பா! நீங்க என்ன சொல்லுறீங்க?'

'டி.என்.ஏ ரிப்போட்டைப் பார்த்தேன்! நீ என்னோட பெண்தான்!'

'உண்மையாவா...?'

'ஆமாம்! யார் என்ன சொன்னாலும் நீ என்னோட மகள்தான்!'

'அப்......பா!' அந்த ஒரு சொல்லுக்காகவே காத்திருந்தது போல அவள் பாய்ந்து வந்து அவரைக் கட்டி அணைத்து மார்பிலே முகம் புதைத்து விக்கி விக்கி அழுதாள். இன்னும் பெரிதாக நெஞ்சு வெடிக்க ஓலமிட்டு அழவேண்டும் போல அவளுக்கு இருந்தது.

'அழாதே அம்மா!' அவர் பாசத்தோடு கண்ணீரைத் துடைத்து விட்டார். சட்டென்று அழுவதை நிறுத்தி, அவள் அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

'இனிமேல் நான் அழமாட்டேன், எனக்கும் அப்பா இருக்கிறார்!' அவள் சந்தோஷமிகுதியால் அவர் கைகளுக்குள் முகத்தைப் புதைத்து வாய்விட்டுச் சிரித்தாள்.

மகளைத் திருப்திப் படுத்திய சந்தோஷத்தோடு அவர் வீடு திரும்பினார். வீடு வந்ததும் முதல் வேலையாக பிரித்துப் படிக்கப்படாத அந்த டி.என்.ஏ ரிப்போட்டை அப்படியே கவரோடு சேர்த்துக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டார். மனம் அமைதியாக இருந்தது. இந்த அமைதிக்காக அவர் கொடுத்த விலைகூட அதிகமாகத் தோன்றவில்லை. மீனா கோரிய விவாகரத்தில் பரஸ்பர சம்மதம் என்று மறுபேச்சின்றி கையெழுத்து போட்டுக் கொடுத்திருந்தார்.

பதிலுக்கு அவளும் டி.என்.ஏ அறிக்கை முடிவை திவ்யாவிடம் வெளியிடுவதில்லை என்று வாக்குறுதி அளித்திருந்தாள். விவாகரத்து வழக்கு முடிய சிறிது காலம் ஆகலாம்... ஆனால் திவ்யாவின் நிம்மதி ஆயுட்காலத்திற்கும் நீடிக்கும்.

- குரு அரவிந்தன் - கனடா -
(நன்றி – கல்கி)

Tuesday, January 29, 2008

மாண்டு போனவள் உயிர்த்தெழுந்து வருகையில்…

- அருட்பெருங்கோ -

மூன்று கால்கள் மட்டுமிருந்த அந்த நாற்காலிக்கு செங்கற்களை முட்டுக் கொடுத்து அதில் அவள் உட்காரவைக்கப்பட்டிருந்தாள். அவள் வயதுக்கு வந்தபோது உட்காரவைத்து சடங்கு செய்வதற்காக அவள் அப்பா குளித்தலை போய் வாங்கி வந்த நாற்காலியென முன்பொருமுறை சொன்னது நினைவிருக்கிறது. அவள் தாவணிப்பாவாடையணிந்து அந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கிற மாதிரி அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் கூட இன்னும் இருக்கிறது. எங்களுக்கு திருமணம் முடிந்து சென்னை வந்தபிறகு நைந்து போன அந்த கருப்பு வெள்ளைப்படத்தை ஏதோ பெரிய ரகசியம் போல தயங்கி தயங்கி தான் காட்டினாள். அந்தக் கதையெல்லாம் இப்போது எதற்கு நினைத்துப் பார்க்க வேண்டும்? ஆனால் மனைவி இறந்து போன நேரத்தில் இதை இதைத்தான் நினைக்க வேண்டுமென மனதுக்கு ஏதேனும் சட்டம் போடப்பட்டிருக்கிறதா என்ன? அப்படியே இருந்தாலும் சொன்னதைக் கேட்கிற மாதிரியான மனதா எல்லோருக்கும் வாய்த்துவிடுகிறது? நேற்றிரவு மாரடைப்பால் மரணமடைந்தவளைக் கொண்டு வந்து இந்த நாற்காலியில் உட்கார வைத்ததில் இருந்து அப்படியேதான் இருக்கிறாள். அப்போது இந்த திண்ணையில் சாய்ந்ததில் இருந்து நானும் இப்படியேதான் இருக்கிறேன். மனம் மட்டும் காலத்தை வருடக்கணக்கில் பின்தள்ளிக் கொண்டே இருக்கிறது. அவள் காலடியில் அழுதுகொண்டே இருக்கிற மகள், எரிந்து கொண்டிருக்கிற விளக்கை அவ்வப்போது தூண்டிவிடுவதுமாயிருக்கிறாள். இரவு முழுவதும் காரோட்டி வந்து சிவந்த போன கண்களில் வழிகிற கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சாய்ந்து அமரிந்திருக்கும் மகனை தாங்கியபடி நிற்கிறது இந்தப் பழையத் தூண்.

இந்தத் தூண் அப்போது இன்னும் அழகாய் இருந்தது. இந்தத் திண்ணையில் விரித்திருந்த பாயில்தான் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். நாங்கள் என்றால், நானும், என் குடும்பமும். அன்று இந்தத் தூண் வரைக்கும் வந்து நின்றுவிட்டு, நிமிர்ந்துகூட பார்க்காமல் மறைந்துவிட்டாள். சாதகம் எல்லாம் பொருந்தியிருந்தும் மகளைச் சென்னைக்கு அனுப்ப அவள் வீட்டில் எல்லோருக்குமே தயக்கம்தான். அவள் சொல்லுகிற போதெல்லாம் கண்டிப்பாக ஊருக்கு அழைத்து வந்துவிடுவதாய் நான் வாக்குக் கொடுத்துதான் எங்கள் திருமணம் நடந்தது. சென்னை வந்து விட்ட இத்தனை வருடங்களிலும் ‘எங்க மகிளிப்பட்டில…’ என்று ஆரம்பித்து தினமும் பத்து முறையாவது சொல்ல, அவளுக்கு ஆயிரம் விசயங்கள் இருந்தன இந்த ஊரில். முதன்முறையாக ஊரைவிட்டு வெளியே வந்திருந்தாலும், ஒன்பதாவது வரையிலும் படித்திருந்ததால் சென்னை நாகரிகத்திற்கு தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்வதில் அவளுக்குப் பெரிய சிரமம் இருந்திருக்கவில்லை. ஆனாலும் இந்த ஊரை மொத்தமாய் தன்னோடு சுருட்டிக் கொண்டு வந்துவிட்டதைப் போல எப்போதும் இதனோடு நெருக்கமாகவே இருந்தாள். திருமணத்திற்குப் பிறகு என்னைப் பிரிகிற சில நாட்களும்கூட துயரமென அவள் வருந்தியபோதும், என்னோடு அவள் சென்னையில் இருந்த காலங்களை விட, அவளோடு நான் மகிளிப்பட்டியில் இருந்த காலங்களிலேயே அவள் முழுமையான மகிழ்ச்சியில் இருந்திருக்கிறாள். சென்னையிலிருந்து வரும்போது லாலாப்பேட்டையில் இறங்கும்போதே அவளிடம் தெரியும் அந்த மாற்றத்தை உணர்ந்திருக்கிறேன்.

லாலாப்பேட்டையில் இருந்து வரும் அடுத்த மினி பஸ்சின் சத்தம் கேட்கிறது. வாய்க்கால் முக்கில் இறங்கிய சொந்தங்களில் அங்கிருந்தே ஒப்பாரியை ஆரம்பித்து விட்ட ஒரு கிழவியின் குரலைக் கேட்டு, இங்கு அழுதழுது ஓய்ந்திருந்த பெண்களுக்கு மீண்டும் கேவல் ஆரம்பித்தது. அழுதுகொண்டே ஓடிவந்த பெண்களோடு இங்கிருந்த வர்களும் சேர்ந்து கொண்டு அழ ஆரம்பிக்க திடீரென சத்தம் அதிகமாகி, நினைவுக்குள் எதையெதையோ உடுக்கையடிக்கிறது எனக்கு. எல்லாப் பெண்களும் வட்டமாய்க் கட்டிப்பிடித்துக் கொண்டு அசைந்து அசைந்து ஒப்பாரி வைக்க, யாரும் நாற்காலியைத் தட்டி விட்டு விடக்கூடாதே என்கிற பயமெனக்கு. ஆடுகிறவர்கள் எல்லாரும் அவள் கையை இடித்து இடித்து விட அவள் கையை எடுத்து உள்ளே மடித்து வைக்கப் பார்க்கிறேன். ஆனால் அது நாற்காலியோடு கட்டப்பட்டிருக்க, அவள் கையையேப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். மகன் அதனை வித்தியாசமாகப் பார்க்கிறான். அதற்குள்ளாகவே அவளைப் பிணம் என்று அவனால் உணர்ந்துகொள்ள முடிந்திருக்கிறது போல. என்னால் இன்னும் முடியவில்லை. அவள் இறந்து விட்டாள் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக கிரகித்துக் கொள்ள முயன்றாலும், இது எல்லாமே கனவாக மாறி திடீரென நான் தூக்கத்தில் இருந்து விழிப்பேன்; எப்போதும் போல என் மார்பில் கை போட்டு அவள் துங்கிக்கொண்டிருப்பாள் என்றே நான் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.

நேற்றிரவு கூட என் மார்பில் கைபோட்டுக்கொண்டு தூங்கியவள்தானே இவள். திருமணத்திற்கு முன்பு நிமிர்ந்து பார்ப்பதற்கே வெட்கப்பட்டவள் திருமணத்திற்குப் பிறகு பல சமயங்களில் என்னையே வெட்கப்பட வைத்திருக்கிறாள். பேசும்போது கண்களைப் பார்த்து பேசுவது மட்டுமே நெருக்கமாய் இருப்பதை உணர்த்துமென்று நம்பிக் கொண்டிருந்த எனக்கு, கைகளையோ, தோள்களையோப் பிடித்துக் கொண்டு இவள் பேசும்போது அது பொய்யென தோன்றியிருக்கிறது. தொடுதல் உணர்த்தும் அர்த்தங்கள் புரியவைத்தவள் அவள். இத்தனை வயசிலும் இரவுத் தூக்கம் ஒரே மெத்தையில் தான். கையைப் பிடித்துக் கொண்டோ, மார்பில் கைபோட்டபடியோதான் தூங்குவாள். இரண்டு பிரசவத்தின்போதும் பக்கத்திலிருக்க சொல்லி என் கைகளைத்தானே பிடித்துக் கொண்டிருந்தாள். முதல் கர்ப்பத்தின் போது என்ன குழந்தை வேண்டுமென்று அவள் கேட்டபோது, ஆண் என்று நான் சொன்னதும் ஆச்சர்யப்பட்டாள். மகன் அம்மாவிடம்தான் அன்பாயிருப்பான், மகள் தான் அப்பாவிடம் அன்பாயிருப்பாள் என்று, எனக்கு விளக்கமெல்லாம் சொன்னாள். என் மேல் பாசமாயிருக்கிற மகளை விட அவள் மேல் பாசமாயிருக்கிற மகன் தான் வேண்டுமென்று சொல்லி வைத்தேன். ஆனால் அப்போது பெண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்து விட்டுச் சிரித்தாள். இரண்டாவது பிரசவத்தில் தான் ஆண்குழந்தை பிறந்தான். நேற்று நடந்தது போலிருந்தாலும் எல்லாம் முடிந்து முப்பது வருடமாகி விட்டது.


ஆண்கள் வரிசையாக வர ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது நான் எழுந்து நின்று இரு உள்ளங்கைகளையும் நீட்டிக் கொண்டிருக்க வேண்டுமாம். ஒவ்வொருவராக அவர்கள் கைகளினால் என் உள்ளங்கை தொட்டு என் துக்கத்தைப் பகிர்ந்து கொள்வார்களாம். வேடிக்கையாக இருக்கிறது. வேதனையாகவும்தான். துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறார்களாம். அவர்களுக்கும் துக்கமாக இருக்கிறது என்று சொல்லட்டும். ஆனால் என் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டதாக சொல்லுவதுதான் வேதனை. இருக்கிற துக்கத்தை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து விட முடியுமென்றால் நன்றாகத்தான் இருக்கும். முடியுமா? எல்லோரும் அங்கங்கே அமர்ந்து கொண்டபிறகு மீண்டும் திண்ணையில் சாய்கிறேன். ‘என்னைய்யா அருவது வயசு ஆம்பள அழுவலாமா? சந்தோசமா பொண்டாட்டிய அனுப்பி வைப்பியா’ தடி ஊன்றி வருகிற எழுபத்தைந்து வயது பெரியவர் என் தோளைப் பிடித்துக் கொண்டு சொல்லி விட்டு அமர்கிறார். பத்து வருடங்களுக்கு முன்பு இவர் மனைவி இறந்தபோது சாராயத்தைக் குடித்துவிட்டு அழுது தீர்த்தவர், இப்போது எனக்கு அறிவுரை சொல்கிறார். அவர் சாராயம் குடித்து விட்டு அழுதார். நான் சாராயம் குடிக்காமல் அழுகிறேன். ஆணென்றால் அழக் கூடாதென்று யார் சொன்னது?

ஆண் அழக்கூடாதென்று அவள் சொல்லியிருக்கிறாள். பத்து வருடங்களுக்கு முன் அவளுக்கு முதல் மாரடைப்பு வந்தபோது மருத்துவமனையில் அவளைத் தேற்றி விட்டு வெளியே வந்து நான் அழுததை எப்படியோ தெரிந்துகொண்டு விட்டாள். அறுவை சிகிச்சையறைக்கு அவளை உள்ளே அனுப்பும்போது பயப்படாமல் இருக்க சொல்லி நான் தேற்ற, ‘நான் உள்ள போனதும் நீங்களும் இங்க அழாதீங்க. ஆம்பள அழக் கூடாது’ என்று என்னைத் தேற்றி விட்டுப் போனாள். அதற்கு முன்பெல்லாம் நோயென்றா, உடல்நிலை சரியில்லையென்றோ மருத்துவமனைக்கேப் போகாதவள். எப்போதாவது இரவு நேரத்தில் தலைவலிக்கிறதென சொல்லுவாள். கொஞ்சம் சுக்கு தட்டி போட்டு சூடாக ஒரு டம்ளர் காப்பி வைத்துக் கொடுத்தால் குடித்துவிட்டு படுத்துக் கொள்வாள். காலையில் எழுந்து எப்போதும் போல இயங்க ஆரம்பித்துவிடுவாள். கடைசி வரைக்கும் அவளுக்காக நான் செய்த ஒரே சமையல் சுக்கு காபி மட்டும் தான். அவள் மீதான அன்பை வெளிப்படுத்துவதற்கு எந்த வேலையை செய்வதற்கும் அவள் என்னை அனுமதித்ததில்லை. அந்த குற்றவுணர்ச்சியில் அவளை நான் கவனித்துக்கொள்வதற்காகவேனும் தலைவலியென்று அவள் படுத்துக் கொள்ளக்கூடாதா என்று சில சமயம் யோசிப்பேன்.

நாற்காலியிலிருந்து இறக்கி நீள பெஞ்சில் அவளைப் படுக்க வைத்து விட்டார்கள். பெண்கள் எல்லாம் சேர்ந்து புடவைகளைச் சுற்றிப் பிடித்து மறைப்பு கட்ட, குளிப்பாட்டித் தயார்படுத்துகிறார்கள். வேறு புடவை உடுத்தி, பெஞ்சோடு அவளைக் கொண்டு வந்து நடு வாசலில் வைத்து சடங்குகள் துவங்குகின்றன. என்னையும் அழைக்கிறார்கள். அவள் நெற்றியில் சந்தனத்தை தடவுகையில் எனக்கு கை நடுங்குகிறது. அதற்கு மேல் முடியாமல் மீண்டும் திண்ணையில் வந்து அமர்ந்து கொள்கிறேன். எல்லா சடங்குகளையும் முடித்து அவளைத் தேரில் தூக்கி வைக்கிறார்கள். தேருக்கு முன்னால் நடந்து செல்ல நானும் எழுந்து போக வேண்டும்.

சொர்க்கத்திற்கு யார் முன்னால் செல்வதென்று ஒருமுறை பேசிக்கொண்டிருந்தோம். இந்த உலகத்தில் அவளை விட்டுத் தனியாக எனக்கு இருக்க தெரியாதாம். அதனால் நான் தான் முதலில் போக வேண்டுமென்றும், என்னை அனுப்பி வைத்து விட்டு அவள் பிறகு வர விரும்புவதாகவும் சொன்னாள். ஒருவேளை அவளை முதலில் அனுப்பி வைக்க வேண்டிய சூழ்நிலை எனக்கு வந்தால் என்ன செய்வது என்று கேட்டேன். ‘எமன எப்படியாவது ஏமாத்திட்டு திரும்பி உங்ககிட்டயே வந்துடுவேன்ல’ என்று சொல்லி சிரித்தாள்.

தேரில் படுத்துக்கொண்டு இப்போது கண்களைத் திறந்து என்னைப் பார்த்து சிரிக்கிறாளே இது நிஜம்தானா? என்னைத் தவிர வேறு யாரும் அவளைப் பார்க்கவில்லையா? அவள் மெதுவாக எழுகிறாள். இப்போதுதான் மற்றவர்களும் கவனிக்கிறார்கள். அழுது கொண்டிருந்த சத்தம் அப்படியே நின்று போகிறது. தேரைத் தூக்கப் போனவர்கள் அப்படி அப்படியே சிலை போல நிற்கிறார்கள். அடித்துக் கொண்டிருந்த மேள சத்தம் கூட நின்றுவிட்டது. என்னால் இன்னும் என் கண்களை நம்பவே முடியவில்லை. எழுந்து உட்கார்ந்தவள், கட்டப் பட்டிருந்த கைகளை விடுவித்துக் கொள்கிறாள். யாருக்குமே அவளுக்கு உதவ வேண்டும் என்று தோன்றவில்லை. எல்லாருமே ஆச்சர்யத்தில் அப்படியே வாயடைத்து சிலை போல நிற்கிறார்கள். இல்லை பயமா என்றும் தெரியவில்லை. ஆனால் அவள் வெகு சாதாரணமாக தூங்கி எழுபவளைப் போல கட்டுகளை அவிழ்த்து விட்டு என்னை நோக்கி நடந்து வருகிறாள். எனக்கு மீண்டும் ஒரு சந்தேகம் வருகிறது. எல்லாமே கனவாகத்தான் இருக்குமோ? வீட்டிலிருக்கும் மெத்தையிலிருந்துதான் தூங்கியெழுந்து வருகிறாளா? சுற்றிலும் நன்றாக உற்றுப் பார்த்தேன். இல்லை. இல்லவே இல்லை. நேற்றிரவு மாரடைப்பு வந்து மருத்துவமனை கொண்டு செல்வதற்குள் அவள் இறந்ததும் உண்மை. இரவோடிரவாக இங்கு மகிளிப்பட்டிக்கு கொண்டு வந்ததும் உண்மை. அவளைத் தேரில் தூக்கி வைத்தபின் உயிர் பெற்று எழுந்து வந்து இதோ என் முன் எப்போதும் போல அழகாக சிரித்துக் கொண்டிருப்பதும் உண்மைதான். சொன்னது போலவே எமனை ஏமாற்றிவிட்டு வந்துவிட்டாளா? இதெல்லாம் சாத்தியமா? எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். எனக்கு அவள் திரும்பி வந்ததே போதும். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவளிடம் பேசுகிறேன். இன்னுமிந்த ஆச்சர்யத்திலிருந்து விடுபடமுடியாமல் சத்தமே இல்லாமல் வெளி வருகின்றன என் வார்த்தைகள் – ‘சொன்ன மாதிரியே திரும்பி வந்துட்டியாம்மா?’. கேட்டதும் சிரித்துக் கொண்டே சொல்கிறாள் – ‘இல்லீங்க… நீங்க தான் வந்துட்டீங்க’

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.


Quelle - அமராவதி ஆத்தங்கரை

Friday, December 01, 2006

கல்லட்டியல்

- சந்திரவதனா -

துகிலுரித்த மரங்களின் நிர்வாண அழகை ரசித்தது போதுமென்று நினைத்ததோ இயற்கை, மரங்களுக்கெல்லாம் பனிப்போர்வை போர்த்திக் கொண்டிருந்தது. நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்குமாங்கே பொசிவது போல், இயற்கையின் இந்தச் சொரிவில் வீடுகளின் ஓடுகளும் வீதிகளும் கூடப் பனிப் போர்வைக்குள் தம்மை ஒளித்துக் கொண்டன.

எங்கு பார்த்தாலும் வெண்மை. வானம், பூமி, மரங்கள், வீடுகள் எல்லாமே வெண்பனிப் போர்வையில் கண்களைக் கொள்ளை கொண்டன.

இந்த அழகையெல்லாம் ரசிக்க பெண்களுக்கெங்கே நேரம்! அழகிய வெண்பனிக் குவியலுக்குள் எழுந்து நிற்கும் வீடுகளுக்குள் எல்லாம் பெண்கள் அவசரமாய்த்தான் திரிவார்களோ?!

காலையின் கருக்கலைக் கூடத் துடைத்தெறிந்த பனியின் வெண்மையில் ஒளிர்ந்திருந்த ஜேர்மனியின் நகரங்களில் ஒன்றான ஸ்வெபிஸ்ஹாலின் மலைச்சரிவொன்றில் அமைந்திருந்த அந்தச் சாம்பல் நிற வீட்டுக்குள் லலிதா பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தாள்.

எல்லாப் பெண்களுக்குமுள்ள அதே அவசரம். அதே வேலைச் சுமைகள். ஊதிப் பற்ற வைத்த அடுப்பு மின்சாரத்தில் இயங்கினால் என்ன! ஆட்டுக்கல்லும், குளவியும் கிரைண்டர் ஆனால் என்ன! பெண்களுக்கு வேலைக்குக் குறைவில்லை.

சுந்தரேசனை மட்டும் இந்தக் காலைப் பரபரப்பு எதுவுமே செய்ததாகத் தெரியவில்லை. லலிதா போட்டுக் கொடுத்த தேநீரை உறிஞ்சி உறிஞ்சிச் சுவைத்த படி, அவன் அன்றைய பத்திரிகையை நிதானமாக வாசித்துக் கொண்டிருந்தான்.

ஒரு வேளை சுந்தரேசனுக்கு மனைவியாக லலிதா வாய்த்தது போல், லலிதாவுக்கும் ஒரு மனைவி வாய்த்திருந்தால் லலிதாவின் காலைகளும் நிதானமாக விடிந்திருக்குமோ?!

லலிதா, தேநீர், சாப்பாடு எல்லாவற்றையும் ஆயத்தப் படுத்தி மேசையில் வைக்கும் போதே பிள்ளைகளிகன் அறைகளில் அலாரங்கள் அலறின. அலாரங்கள் எப்படித்தான் அலறினாலும், லலிதா போகாமல் அவர்கள் எழும்ப மாட்டார்கள்.

லலிதா பிள்ளைகளின் அறைகளுக்குள் விரைந்தாள். மூத்தவன் மணிக்கூட்டின் அலார பட்டனை அழுத்தி விட்டு, மீண்டும் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தான். சின்னவனோ அலாரத்தின் அலறல் பற்றிய எந்த பிரக்ஞையும் இன்றி ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். நடுவனோ "அம்மா..! இன்னும் கொஞ்சம் படுக்கப் போறன்." என்று கெஞ்சினான்.

மூன்று பேரையும் எழுப்பிக் குளிக்க வைத்து, சாப்பாடு கொடுத்து, பாடசாலைக்கு அனுப்பி, சுந்தரேசனையும் வேலைக்கு அனுப்புவதற்கிடையில் லலிதாவுக்குப் போதும் போதுமென்றாகி விட்டது.

நேரமும் 7.30 ஐத் தொட்டு விட்டதால் அப்பாடா என்று அமரக் கூட முடியாமல் அவசரமாய் தலை சீவி, சப்பாத்தையும் போட்டு, ஜக்கெற்றையும் போட்டுக் கொண்டு, கைப்பையுடன் லலிதா படிகளில் ஓடி இறங்கினாள்.

வாயிற் கதவைத் திறந்ததும், ஜில்லென்ற குளிர்ந்த காற்று முகத்திலறைய, காது மடல்கள் விறைக்க வேறு வழியின்றி, லலிதா பனிக்குவியலுக்குள் காலை வைத்த போது, இடது பக்கமிருந்து வந்து கொண்டிருந்த றூடியுடன் மோதப் பார்த்தாள். ஆனால் மிகவும் பிரயத்தனப் பட்டு மோதுவதைத் தவிர்த்துக் கொண்டாள்.

ஓடி வந்த வேகத்தில் மூச்சிரைத்தபடி ஜக்கெற்றைக் கூடப் பூட்டாமல் விரையும் அவளைச் சிரிப்புடன் பார்த்த றூடி,
"உன்னோடு மோதியிருந்தால் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும். ஒரு இனிமையான நிகழ்வைத் தவிர்த்து விட்டாயே!" என்று சலிப்படைந்த பாவனையுடன் ஜேர்மனிய மொழியில் சொன்னார்.

63 வயது நிரம்பிய ஜேர்மனியரான றூடியின் குறும்பு எப்போதும் இப்படித்தான் இருக்கும். றூடியின் குறும்பு லலிதாவை என்றுமே கோபப் படுத்தியதில்லை. காரணம் லலிதாவின் அப்பாவின் வயதுதான் றூடிக்கும். `அப்பாவைப் போலவே எப்போதும் குறும்பு.´ நினைத்துக் கொண்டவள் சிரித்தாள். சற்று நேரத்துக்கு முன்பு வரை அவளுள் இருந்த இறுக்கமான நிலைமாறி மனசுக்குள் ஒரு மகிழ்வு ஓடியது.

காரில் குவிந்திருந்த பனியை வழித்தெறிந்து, இறுகப் படிந்திருந்த பனியைத் தேய்க்கும் போது, குளிரில் லலிதாவின் கைவிரல்கள் கொதித்தன. விரல்களை ஊதிவிட்டு, ஊதிவிட்டு பனியைச் சுரண்டியெறிந்து விட்டு காரினுள் ஏறினாள். ஹியரிங்கைப் பிடித்த போது ஏற்கெனவே குளிரில் கொதித்த விரல்களும் கைகளும் நடுங்கின. கார் கண்ணாடிகளைப் புகார் மறைத்தது. லலிதாவுக்கு எதுவுமே தெரியவில்லை. நெஞ்சுக்குள் குளிர்ந்தது.

"வேளைக்கே வெளிக்கிட்டு பஸ்சிலேயே போயிருக்கோணும். கராச் இல்லாமல் வின்ரரில் கார் சரி வராது." அவளின் மனசு முணுமுணுத்தது. குளிரில் உடம்பே நைந்து போனது போல இருந்தது. கைவிரல்களின் நுனிகள் வெடித்து இரத்தம் பீறிடத் தயாராக இருந்தது. இந்த வதைகளைத் தாங்க மாட்டாத லலிதா `என்ன வேலை அதுவும் இந்தக் குளிரிலை. பேசாமல் வீட்டிலை நிண்டு வானொலி கேட்டு, புத்தகங்களை வாசிச்சுச் சந்தோஷமாக வாழ முடியாமல் வேலை வேலையெண்டு... என்ன வாழ்க்கையோ..!´ மனதாரச் சலித்தாள்.

கார் கண்ணாடியைக் கீழே இறக்கி விட்டாள். றூடி நிதானமாகத் தனது பென்ஸ் காரைத் தேய்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் விடைபெற கையைக் கூடத் தூக்க முடியாத நிலையில் தலையை மட்டும் ஆட்டி விடை பெற்ற லலிதாவுக்குக் கார் ஓட்டுவதே கஷ்டமாக இருந்தது. குளிர் புகாராகக் கண்ணாடிகளை மறைத்தது. கார்வெப்பமூட்டியின் வெப்பத்தில் புகார் விலகி கார்க் கண்ணாடிகள் தெளிவாகும் வரை அவள் மிகுந்த சிரமப்பட்டு விட்டாள்.

தெளிந்த கார் கண்ணாடிகளினூடே பனிப்பூக்கள் பூத்த மரங்கள் மிகவும் அழகாகத் தெரிந்தன. லலிதாவின் மனமோ ஊரிலிருக்கும் அப்பாவிடம் தாவி மெல்லிய சோகத்துள் ஆழ்ந்து போனது.

ஸ்மார்ட்டாக காரின் பனியைத் தேய்த்துக் கொண்டிருந்த றூடியையும், முந்தநாள் தபாலில் வந்த புகைப்படத்தில் இருந்த அப்பாவின் தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்த்ததின் விளைவே லலிதாவின் சோகம்.

லலிதாவின் அப்பாவும் ஒரு காலத்தில் ஸ்மார்ட்டாகவும், குறும்பாகவும் இருந்தவர்தான். பெண்களைப் பெற்றதால் வாழ்க்கையின் வசந்தங்களைத் தொலைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. அவர் வாழ்க்கையை அநுபவிப்பதில் ஆசை கொண்டவர். ஆனால் பெண்களின் பிறப்பே, இன்னொருவனின் கையில் ஒப்படைக்கப் படுவதற்காகத்தான், என்று கருதும் சமுதாயத்தில், அவர் நான்கு பெண் பிள்ளைகளைப் பெற்றெடுத்தது அவர் செய்த தப்பு. அதற்குத் தண்டனையாக நகைக்கும், வீடு, வாசல்களுக்குமாய் பெண்களைப் பெற்ற எல்லா அப்பாமார்களையும் போல அவரும் தன்னையும் தன் தனித்துவமான ஆசைகளையும் கரைத்துக் கொண்டது நியம்.

இந்த நியம்தான் லலிதாவுக்குப் பிடிக்கவில்லை. சமுதாயக் கோட்பாடுகளில் நெரிபட்டவர்கள் பெண்கள் மட்டுந்தானா? பெண்களைப் பெற்றவர்களும்தான். சமூகத்தின் மேல் அவளுக்குக் கோபந்தான் ஏற்பட்டது.

லலிதாவுக்கு இப்பவும் நல்ல ஞாபகம். லலிதாவின் அப்பாவுக்கு சுற்றுலா என்றால் நிறையவே பிடிக்கும். இலங்கையின் எல்லாப் பாகங்களையும் மனைவி, குழந்தைகளுடன் சுற்றிப் பார்த்து விட்ட அவருக்கு இந்தியாவின் மகாபலிபுரம் போன்ற அழகிய இடங்களையும் மனைவி குழந்தைகளுடன் சுற்றிப் பார்த்து விட வேண்டுமென்ற அளவிலாத ஆசை.

அப்போ அவருக்கு சம்பளத்துடன் அரியஸ் ஆக ஒரு தொகைப் பணம் வந்திருந்தது. அப்பணத்தில் சுற்றுலாவை மேற்கொள்வதாய்த்தான் அவர் எண்ணியிருந்தார். அரியஸ் பணத்துடன் வீட்டுக்கு வரும்போதே அவர் முகத்தில் உற்சாகம் பொங்கியிருந்தது.

அந்த நேரம் பார்த்துத்தான் லலிதா பூப்பெய்த வேண்டுமா? வீட்டிலே நடந்த ஒரு சந்தோசத்தில் இன்னொரு சந்தோசம் கரைந்து விட்டது. பெரியவளாகி நிற்கும் லலிதாவையும், தொடர்ந்து வரிசையில் நிற்கும் மூன்று பெண் குழந்தைகளையும் காட்டி நகை, நட்டு, காணி, வீடு என்று அவர்களுக்கு சேர்க்க வேண்டிய கட்டாயத்தையும் கூறி லலிதாவின் அம்மா, அப்பாவின் சுற்றுலா ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டா.

லலிதாவின் அம்மாவின் விருப்பப்படி அப்பணத்தில் லலிதாவுக்குக் கல்லட்டியலும், மிகுதியில் தங்கைமாருக்குச் சில நகைகளும் செய்வதாகத் தீர்மானிக்கப் பட்டது.

சில நாட்களில் அப்பாவின் அரியஸ் பணம் சிவப்பு வெள்ளைக் கற்களுடன் அழகிய அட்டியலாகவும், சங்கிலிகளாகவும், காப்புகளாகவும் மாறிவிட்டது. லலிதா அட்டியலைப் போட்டுக் காட்டிய போது அவள் அப்பாவின் முகத்திலும் பூரிப்புத் தெரிந்தது. ஆனாலும் அப்பாவின் சுற்றுலா ஆசை அட்டியலுக்குள் தொலைந்து விட்டதே என்ற கவலை லலிதாவைப் பற்றிக் கொண்டது.

தொடர்ந்த காலங்களிலும் அப்பாவுக்கு வரும் பணமெல்லாம் காணி வாங்குவதில், வீடு கட்டுவதில், நகைகளில், ஒவ்வொரு பெண்ணினதும் கல்யாணச் செலவில் என்று கரைந்தது. வேலையும், ஊதியமும் கடமையாய், கட்டாயமாய் என்றாகி விட்டது.

லலிதா வேலை செய்யத் தொடங்கி வெகு நேரமாகியும் அப்பாவின் நினைவாகவே இருந்தாள். மாலை வேலை முடிந்து வீடு திரும்புகையிலும் அவளின் நினைவுகளின் ஓரத்தில் சோகம் இழைந்தோடிக் கொண்டிருந்தது.

நாங்களாவது பக்கத்திலிருந்திருந்தால் அப்பா பேரப் பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவி சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்திருப்பார். பொல்லாத நாட்டுப் பிரச்சனை, அதற்குக் கூட வழியில்லாது செய்து விட்டதே. பேதலித்த மனதுடன் காரை விட்டு இறங்கினாள்.

முன்னாலிருந்த சிறுவருக்கான விளையாட்டு மைதானத்தில், குளிரையும் பொருட்படுத்தாது, சில ஜேர்மனியக் குழந்தைகள் பனிகளைச் சேர்த்து பெரிய ஐஸ் மனிதன் ஒன்றைச் செய்து விட்டு சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள். இன்னும் சில குழந்தைகள் ஐஸ் கட்டிகளை உருட்டி, உருட்டி ஒருவரையொருவர் கலைத்துக் கலைத்து எறிந்தார்கள்.

அவர்களின் விளையாட்டில் லலிதா தன்னை மறந்து லயித்திருந்த அந்தக் கணத்தில் ஒரு சிறிய ஐஸ்கட்டி ஜில்லென்று அவளை உரசிச் சென்றது. திடுக்கிட்டுத் திரும்பினாள். றூடி ஒரு பெரிய ஐஸ் உருண்டையுடன் நின்று, லலிதாவுக்கு எறியப் போவது போலப் பாவனை காட்டினார்.

Nein... Nein.... (நோ.. நோ.. ) லலிதா சிரித்தவாறு கத்திக் கொண்டு வீட்டுக்குள் ஓடினாள்.

அவளுக்குள் இருந்த இறுக்கம் கலைந்து மீண்டும் அவள் மனசு இலேசாகியிருந்தது. அந்த உஷாருடன் வீட்டுக்குள் மீண்டும் பம்பரமாய் சுழலத் தொடங்கினாள்.


சந்திரவதனா
ஜேர்மனி
2000

Wednesday, November 29, 2006

என் பெயர் அகதி

- தமிழ்நதி -

கதைக்குள் நீங்கள் நுழைவதன் முன் எங்களைத் தெரிந்துகொள்வது நல்லது.

நான் ஆனந்தி. வயது இருபத்தி ஐந்து. சொந்த இடம்: யாழ்ப்பாணத்திலுள்ள-இந்தக் கதைக்குத் தேவையற்ற- ஏதோவொரு கிராமம்.

கட்டிலில் படுத்திருப்பவளின் பெயர் வினோதினி. எனது சிநேகிதி. வயது இருபத்தி இரண்டு.
தொலைக்காட்சியில் யாராலோ உந்தப்பட்டவன்போல காட்சிகளை மாற்றிக்கொண்டேயிருப்பவனின் பெயர் பரணி. வினோதினியின் தம்பி. எங்கள் மூவருடைய தற்போதைய கவனம் - புதிய நிலத்தில் ஒட்டிக்கொண்டு உயிரோடு இருப்பது.

ஆனால் நாங்கள் நினைத்திருந்தது போல அது அத்தனை சுலபமாக இல்லை. எங்களுக்கு வாசிக்கக் கிடைத்த ஆனந்தவிகடன், குமுதத்தில் வெளிவந்த கதைகள் காட்டிய சென்னையிலிருந்து நாங்கள் பார்த்த சென்னை வேறுபட்டிருந்தது.

பெரிய பெரிய பாலங்கள். விர் விர்ரென விரையும் வாகனங்கள். சாலை விதிகளைச் பொருட்படுத்தாமல் இருந்தாற்போல பாய்ந்து வீதியைக் கடக்கும் சனங்கள். கார்களுக்குள் பளபளக்கும் முகங்களையுடைய பணக்காரர்கள். சாலையோரங்களில் மெலிந்த கறுத்த உரக்கப் பேசுகிற ஆண்-பெண்கள். வீதியோர பிச்சைக்காரர்களது இறைஞ்சுதலைக் கவனிக்காமல் அல்லது புறக்கணித்து விரைகிற நாகரீக மனிதர்கள்…. கைத்தொலைபேசியில் எப்போதும் யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும் இளைஞர்கள்…. புதியவர்களாகிய எங்கள் முன் அவிழ்க்க முடியாத புதிர்போன்று விரிந்துகிடந்தது சென்னை.

வீடு தேடுவதில் தொடங்கியது வினை.

இருபதுகளிலுள்ள மூவர், அதிலும் இருவர் பெண்கள். திறந்த கதவுகள் சந்தேகம் கலந்த நிராகரிப்புடன் பூட்டப்பட்டன. சிலர் வெளிப்படையாகவே சொன்னார்கள்.

“சிலோன்காரங்களுக்கு வீடு வாடகைக்கு விடுறதில்லை”

“திரும்பிப் போய்விடலாம்”வினோதினி சொன்னாள். நிராகரிப்பின் துக்கம் அவள் முகத்தில் படிந்திருந்தது.

“அவர்களுடைய பயம் நியாயமானது”

“எங்களைப் பார்த்தால் குண்டு வைக்க வந்தவர்கள் மாதிரியா இருக்கிறது”பரணி கோபப்பட்டான்.

“குண்டு வைப்பவர்களுக்கென்று ஒரு தனிமுகம் இருக்கிறதா என்ன…?”வினோதினி அதே கோபத்தோடு கேட்டாள்.

“படகில் வந்திருந்தாலாவது தங்குவதற்கு ஒரு இடம் கிடைத்திருக்கும்”

“வரிசையில் நின்று கழிப்பறைக்குப் போக உன்னால் முடியுமா…?”

பரணி மௌனமாகிவிட்டான். ஊரில் இருந்தபோது பரணியைச் சிரிப்பில்லாமல் பார்த்ததில்லை. நண்பர்களோடு சைக்கிளில் சிட்டுக்குருவிபோல பறந்து திரிந்த அவனை மீண்டும் தொடங்கிய போர் வீட்டுக்குள் முடக்கியது. துப்பாக்கிகள் வீதிகளை ஆள ஆறுமணிக்குள் ஊரடங்கியது. ஒரு சிறு உரசலில் பற்றிக்கொள்ளக்கூடிய கந்தகத்தைக் காற்றில் தூவிவிட்டாற்போலிருந்தது. பயம் எய்ட்சைப்போல ஆட்கொல்லி நோயாயிற்று.

அன்றைய தினம் நான் வினோதினியின் வீட்டிலிருந்தேன். அவர்களுடைய பாட்டியின் ஆண்டுத்திவசம். நாய்கள் ஆரவாரமாகக் குரைத்து பின்னடைவதைக் கண்டதும் புரிந்துவிட்டது.

அவர்கள் வந்துவிட்டார்கள்!

“சீசர்! சத்தம் போடாதே…!”நாயை அதட்டியபடி வினோதினியின் அப்பா அவர்களை எதிர்கொண்டார்.

“வீட்டைச் சோதனையிட வேண்டும்”

கரும் பச்சைச் சீருடையணிந்து துப்பாக்கிகளை தயார்நிலையில் ஏந்தியிருந்த அவர்கள் கணப்பொழுதில் வீட்டைச் சூழ்ந்திருந்தார்கள். எந்த வழியாகப் பின்புறம் சென்றார்கள் என்ற கேள்வி அத்தனை பயத்திலும் எனக்குள் எழுந்தது. அனைவரும் வீட்டின் முன்புறம் வரும்படி பணிக்கப்பட்டோம். அதற்குள் வினோதினியின் அம்மா அழத்தொடங்கியிருந்தா. எங்களுக்குள் அவர்கள் பரணியைத் தேர்ந்தெடுத்து முன்னே வரும்படி சைகை காட்டினார்கள்.

அப்போதுதான் மீசை அரும்பத் தொடங்கியிருந்த அவன் முகத்தில் பயத்தைவிடவும் வேறொன்று தெரிந்தது. அது… வெறுப்பும் கோபமும் இயலாமையும் கலந்த ஏதோவொன்று.

“அவனுக்கு ஒன்றும் தெரியாது. மாணவன்” அம்மாவின் குரல் பிரலாபித்தது.

துப்பாக்கிக் கட்டையால் பரணியின் முகத்தை ஒருவன் உயர்த்தினான். மற்றொருவன் காற்சட்டைப் பைகளைத் துளாவினான். கைகளை உயர்த்தியபடி நின்ற அவன் எங்கள் விழிகளைத் தவிர்க்க வானத்தைப் பார்த்தான்.

மற்றொருவனின் கவனம் ஒன்றாக நின்றிருந்த இளவயதுப் பெண்களாகிய எங்கள் நால்வரிலும் குவிந்தது. அவனது அடர் பச்சை நிறக் கண்கள் வெறியுடன் ஒளிர்ந்தன.

“விசாரிக்க வேண்டும். பெரியவர்கள் உள்ளே போகலாம்”உடைந்த தமிழில் வயதானவர்களை உள்ளே விரட்டினான்.

“அக்கா! போகவேண்டாம்”

சற்று உரத்த குரலில் பரணி சொன்ன அடுத்த கணமே துப்பாக்கிக் கட்டையால் முழங்காலில் தாக்கப்பட்டு நிலத்தில் விழுந்தான். வினோதினியின் அம்மா பதறி உரத்த குரலெடுத்து அழுதபடி பரணியின் பக்கத்தில் ஓடினா. சித்தி தலையைக் குனிந்தபடி விசும்பினா. அப்பா கைகளை நெஞ்சில் இறுக்கக் கட்டி வெறித்த பரர்வையோடிருந்தார்.

துப்பாக்கியின் பின்புறத்தால் பெண்கள் நால்வரும் வீட்டினுள் செலுத்தப்பட்டோம். எங்களோடு உள்ளே வரமுயன்ற அப்பாவின் கன்னத்தில் ஒருவன் அறைந்து நிறுத்தினான். ஆச்சி பிடிவாதமாக எங்களைத் தொடர “வயதானவர்களைச் சோதனையிட மாட்டோம்”என்ற ஒருவன் அவரைக் கதவுக்கு வெளிப்புறம் தள்ளிவிட்டான்.

வினோதினியின் கன்னத்தைத் தடவிய ஒருவன் “தமிழ்ப்பெண்கள் அழகு”என்றான். மற்றவன் என்னைத் தொடக்கூடாத இடத்தில் தொட்டு “நாம் கல்யாணம் செய்துகொள்ளலாம்”என்றான். சோதனை என்ற பெயரில் இழிவுசெய்யப்பட்டபோது நான் மதிலில் படுத்திருந்த பூனையைப் பார்த்தபடியிருந்தேன். வினோதினியின் தங்கை என்னோடு ஒட்டிக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க முடியவில்லை. துப்பாக்கியைப் பறித்து அவர்களைச் சுடலாமென்று நினைத்ததாக சின்னவள் பின்பொருநாளில் என்னிடம் சொன்னாள். ஆனால், அவளுக்குச் சுடத் தெரிந்திருக்கவில்லை.

வீட்டின் ஒவ்வொரு அறையிலும் சப்பாத்துத் தடங்கள் பதிந்தன.

“ஒத்துழைப்பிற்கு நன்றி” என்றொருவன் கண்சிமிட்டிச் சிரித்தான்.

சில நிமிடங்களின் பின் அவர்கள் வெளியேறிய பிறகு ஆச்சி மண்ணை வாரி இறைத்துத் திட்டினார்.
“கடவுள் கேட்கட்டும்… கடவுள் கூலி கொடுப்பார்”

அதுவரை அடங்கியிருந்த நாய்கள் ஆரவாரமாகக் குரைத்து தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தின.

“நான் இயக்கத்திற்குப் போகிறேன்… இவர்களைக் கொல்ல வேண்டும்”பரணி அன்று முழுவதும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தான். அவனுடைய முழங்கால் வீங்கிச் சிவந்திருந்தது. மலங்கழிக்க குந்தியிருப்பது அவனுக்குச் சிரமமாக இருந்ததாக பின்பு வினோதினி சொன்னாள். அப்பா எங்களைக் காணுந்தோறும் தலையைக் குனிந்துகொண்டார்.

அதன் பிறகு வந்த பகல்கள் குறுகி இரவுகள் நீண்டன. சந்தியில், வீதியோரத்தில் முகம் சிதைக்கப்பட்ட பிணங்கள் கிடந்தன. அடையாள அட்டை இல்லாதவர்கள் காணாமல் போனார்கள். சிலசமயம் அடையாள அட்டை வைத்திருந்தவர்களும் கூட. நாங்கள் அறிந்த பல குடும்பங்கள் படகேறிப் போனார்கள். நாங்கள் விமானமேறி வந்திறங்கினோம். வினோதினியின் தங்கையும் மைத்துனியும் எங்களோடு வர மறுத்து அங்கேயே தங்கிவிட்டார்கள்.

எட்டுக்கு எட்டடி ‘ஹோட்டல்’அறையில் முதல்நாள் முழுவதும் அடைந்து கிடந்தோம். அங்கு வரவேற்பாளராகக் கடமையாற்றியவர் எங்கள் கதை கேட்டுக் கலங்கிப்போனார். அவர் மூலம் அந்த விளம்பரப் பத்திரிகையைப் பெற்றுக்கொண்டோம்.

வீடு தேடும் படலம் தொடங்கியது.

விருப்புடன் தொடங்கும் உரையாடலின் போக்கு நாங்கள் இலங்கை என்றதும் திசைதிரும்பிவிடும். பின்பு எங்களைத் தட்டிக்கழிப்பதற்கான காரணங்கள் முன்வைக்கப்படும். வீடு தர இயலாமைக்கான வருத்தங்களை வருத்தத்தோடு ஏற்றுக்கொண்டோம். அன்றைய தினம் மூவருமே களைத்துப் போயிருந்தோம்.

“நீங்கள் கேரளாவா…?”

“இல்லை… இலங்கையிலிருந்து வந்திருக்கிறோம்”

“ம்…!” வீட்டுக்காரரின் முகம் இருண்டது.

“இங்கு ஏன் வந்தீர்கள்…?”

“உயிர் பிழைத்திருக்க”

கூறியபின்னர்தான் அந்த வாக்கியத்திலிருந்த சூடு என்னைத் தாக்கியது.

வீட்டுக்காரர் எங்களை இப்போது பார்த்த பார்வையில் கொஞ்சம் இரக்கம் தெரிந்தது.

“நான் பல்கலைக்கழகத்திலும் எனது தம்பி பாடசாலையிலும் படித்துக்கொண்டிருந்தோம். எனது சிநேகிதி பத்திரிகையொன்றில் வேலை செய்துகொண்டிருந்தா” வினோதினி இறைஞ்சுவதுபோல சொன்னாள். நான் திரும்பிவிடலாமென்று கண்களால் உணர்த்தியும் அவள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

“வாடகை எப்படிக் கட்டுவீர்கள்…?”

“ஜேர்மனியிலிருந்து பணம் வரும்”

‘ஜேர்மனி’என்ற சொல் அவரை ஈர்த்திருக்க வேண்டும். வினோதினி இனி அலைவதில்லை என்பதில் தீர்மானமாக இருந்தாள். அந்த வீட்டுக்காரரை எப்படியாவது சம்மதிக்க வைக்க பிரயத்தனப்பட்டாள். தவிர, வீடும் விசாலமாக இருந்தது. யன்னல் வழியாகத் தெரிந்த கடலின் நீலமும் மௌனமும் எனக்கும் பிடித்திருந்தது. பத்திரிகைகளைச் சலித்து இந்தியத் தமிழ் பேசி விவரமறிந்து அலைவதில் நானும் சோர்ந்துவிட்டிருந்தேன்.

“ஐம்பதினாயிரம் முற்பணம்… உங்களால் கட்டமுடிந்தால் நாளை வாருங்கள்”
முற்பணம் அதிகந்தான். ஆனால், வீடு கிடைத்துவிட்டது.

“கடவுளுக்கு நன்றி”

மூச்சு முட்டும் அந்த ‘ஹோட்டல்’அறைக்கு வந்ததும் குப்புறப் படுத்துக்கொண்டு வினோதினி அழுதாள். எனக்கும் கண்ணீர் வரும் போலிருந்தது. பரணி தொலைக்காட்சிப்பெட்டியிலிருந்து கண்களை எடுக்கவில்லை. ஆனால், அதை அவன் பார்த்துக்கொண்டிருக்கவுமில்லை.

அடுத்து வந்த இரண்டு நாட்களுள் துடைப்பம், சமையற் பாத்திரம், குக்கர், பால் பக்கெற் இன்ன பிறவற்றுடன் புதுவீடு போனோம். இரண்டு அறைகளில் ஒன்றை நானும் மற்றதை பரணியும் வினோதினியும் நிரப்பினோம். கடல் நீலப்படிகமாக பரந்திருப்பதை எழுதும் மேசையிலிருந்து பார்க்க முடிந்ததில் எனக்குத் திருப்தி. நண்பர்களற்ற தனிமை பரணியை அலைக்கழிப்பதை உணரமுடிந்தது. அடிக்கடி பல்கனிப் பக்கம் போய் வீதியைப் பார்த்துக்கொண்டிருப்பதை வினோதினியும் நானும் அவதானித்தோம். எவ்வளவு முயன்றும் அவனது பழைய சிரிப்பை எங்களால் மீட்டுவர முடியவில்லை.

வீதியில் கடைத்தெருவில் எதிர்ப்படும் எந்த முகமுமே அறிமுகமற்றது என்பது எங்களை வெகுவாக உறுத்தியது. பின்பு பழகிவிட்டது. கடற்கரையில் எப்போதாவது இலங்கைத்தமிழ் கேட்க நேரும்போதெல்லாம் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொள்வோம். அதில் உயிர் இருக்காது.

இருந்திருந்துவிட்டு வினோதினிக்கு ஊர் ஞாபகம் வந்துவிடும். “கண்ணை மூடிக்கொள்”என்பாள்.

“இது கிணற்றடி. குளிக்கும் தொட்டி விளிம்பில் நானும் நீயும் அமர்ந்திருக்கிறோம். சின்னவள் உன் மடியில் படுத்திருக்கிறாள். கூடத்தில் பரணி பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறான். அம்மா தேநீர் தர எங்களை அழைக்கிறாள். ஆச்சி…”

“வேண்டாம் இந்த குழந்தைகள் விளையாட்டு”நான் அவள் கனவுகளைத் துண்டித்துவிடுவேன்.

“தயவுசெய்து எங்களை முழுப் பைத்தியமாக்காதே அக்கா”பரணி சிரிப்பில்லாமல் கேட்டுக்கொள்வான்.

“எங்களுக்கு விசா முடியப்போகிறது”வினோதினி ஒருநாள் நினைவுபடுத்தியபோது அயர்ச்சியாக இருந்தது.

இரண்டு புகைப்படங்கள், கடவுச்சீட்டு நகல், விசாவை நீடித்துத் தரும்படியான வேண்டுகோள் அடங்கிய கடிதம், நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம் இவற்றுடன் சென்ற நாங்கள் ஏமாற்றத்துடன் திரும்பினோம்.

“நீங்கள் வந்திருப்பது உல்லாசப் பிரயாணிகளுக்கான விசாவில்… நீடிக்க முடியாது”என்று இறுக்கமான முகமுடைய அதிகாரி பதிலளித்தார்.

“ஊருக்குப் போவோம் அக்கா…!”பரணி சொன்னான்.

“உன்னைப் பிடித்துக்கொண்டு போவார்கள். நகத்தைப் பிடுங்குவார்கள். தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு மிளகாய்த் தூள் போட்ட புகையைச் சுவாசிக்க விட்டு அடிப்பார்கள். விரும்பினால் போ”வினோதினி வெடித்தாள்.

“நான் போகமாட்டேன்…”அவளுக்கு அன்றைய நாள் நினைவில் வந்திருக்க வேண்டும்.
அவளது கன்னத்தைத் தடவிய அவனது விரல்களை நினைத்துப் பார்த்திருப்பாள்.

“நாங்கள் என்ன பிழை செய்தோம் ஆண்டவரே….! எங்கள் வாழ்வை ஏன் இவ்விதம் சபித்தீர்…?”

“காவல் நிலையத்தில் பதிந்துவிட்டு இருக்கலாம்”வீட்டுக்காரம்மா சொன்னா.
போனோம்.

“இன்று ஏட்டு இல்லை. நாளை வாருங்கள்”

“ஏழு மணிக்குப் பின்னர் வாருங்கள்”

“திங்கட்கிழமை வந்தால் ஏட்டைச் சந்திக்கலாம்”

“இன்று கூட்டம் நடக்கிறது. பாதுகாப்புக் கடமைகளுக்காகப் போய்விட்டார்கள். நாளை சனி… திங்கள் வாருங்கள்”

திங்கள், செவ்வாய், வெள்ளி… வரச்சொன்ன நாட்களெல்லாம் போய் தவங்கிடந்தபின் ஈற்றில் அவர் வந்தார். ஒல்லியான அவர் பெரிய மீசை வைத்திருந்தார். பெரும்பாலான பொலிஸ்காரர்களைப் போல இவரும் தொந்தியோடிருந்தார். ஒல்லியான உடலில் தொந்தி துருத்திக்கொண்டிருப்பது வினோதமாக இருந்தது.

நாங்கள் இருந்த இடத்தில் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்த மற்றுமொரு பொலிஸ்காரரை ஓரக்கண்ணால் பார்த்தார். பக்கத்திலிருந்த அறைக்கு அழைத்துப்போனார். இருட்டான அந்த அறையில் கோப்புகள் நிறைந்திருந்தன.

“ஒருவருக்குப் பதிய ஆயிரத்து ஐந்நூறு ரூபா. மூன்று பேருக்கும் நான்காயிரத்து ஐந்நூறு… இருக்கிறதா…?”

“பதிவதற்கு பணம் கட்ட வேண்டுமென்ற விபரமே எங்களுக்குத் தெரியாது”அதிர்ந்துபோய்ச் சொன்னேன்.

“எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை ஐயா! நாங்கள் அகதிகள்”வினோதினியின் ‘அகதி’என்ற வார்த்தை என்னை மிகவும் பாதித்தது.

“எனக்கா கேட்கிறேன்… நிறையப் பேருக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்”

“நாங்கள் உயிர் தப்பியிருக்க இங்கு வந்திருக்கிறோம் ஐயா…! ஒருவருக்கு ஐந்நூறு ரூபா தருகிறோம்”

“ஆயிரத்து ஐந்நூறுக்கு ஒரு பைசா குறைக்க முடியாது. கடிதம் வேண்டுமானால் நாளை பணத்தோடு வாருங்கள்”

நாங்கள் திகைப்போடு வெளியில் வந்தோம். பொலிஸ்காரர்களைப் பற்றி திரைப்படங்கள் மிகைப்படுத்திப் பேசுவதாக நாங்கள் நினைத்திருந்தது தவறெனப் புரிந்தது. வெயில் அனலை வாரியிறைத்தது. உண்ட களைப்பில் உறங்கிக்கிடந்தது மதியம்.

கொதிக்கும் அந்த மதியத்தில் அந்த வீதியில் அவ்வளவு விசனத்துடன் காலகாலமாக நடந்துகொண்டிருப்பது போலொரு எண்ணம் தோன்றி மறைந்தது.

“விசா இன்னும் முடியவில்லை. போய்விடலாம்”பரணி ஆரம்பித்தான்.

“போடா…! போடா…! செத்துப் போ” வினோதினி வீதி என்பதை மறந்து போனவளாக உரத்துக் கத்தினாள். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். பழக்கடையிலிருந்த பெண் எங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பியிருந்தாள்.

“இப்படியெல்லாம் உயிர் பிழைத்திருப்பதற்கு… ச்சே…!”

பரணி எங்களைவிட்டு விலகி விரைந்து நடந்தான். ஆளற்ற சாலையில் தனியனாக அவன் நடந்துபோனது வருத்தமாக இருந்தது.

“இது அநியாயம் ஆனந்தி” தளர்ந்துபோன குரலில் சொன்னாள்.

“கொடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்பது உனக்குப் புரிகிறதா…?”

அவளுக்குப் புரிந்தது. வழியில் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. வீட்டிற்குப் போனதும் வினோதினிக்குப் பிடிக்கும் அந்தப் பாட்டைப் போட்டேன். என்ன கவலையாக இருந்தாலும் அந்த வரிகள் அவளது தலைதடவித் தேற்றிவிடும்போலும். சில நிமிடங்களில் சிரிப்புக்குத் திரும்பிவிடுவாள்.

“கடவுள் தந்த அழகிய வாழ்வு…உலகம் முழுதும் அவனது வீடு”

எழுந்தோடி நிறுத்தினாள்.

“பொய்…! பொய்! எல்லாம் எல்லோரும் பொய்…!”

“பைத்தியம்…”அருகில் அமர்ந்தேன்.

“அதுவும் விரைவில் பிடிக்கத்தான் போகிறது…”

“பேச்சுவார்த்தை தொடங்கவிருக்கிறது…நாம் விரைவில் ஊருக்குப் போவோம்”

எனது வார்த்தைகளை நானே நம்பவில்லை.

“போடீ! நான் சின்னக் குழந்தை இல்லை”என்றாள் வெடுக்கென்று.

மிகுந்த களைப்பாக இருந்தது. உயிர் பிழைத்திருப்பதற்கு இத்தனை பிரயத்தனப்பட வேண்டாமே என்று தோன்றியது. ‘உயிர் மட்டுமா…?’ என்ற கேள்வி கூடவே உறுத்தியது. “நாம் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம்”என்று என்னை அவன் நெருங்கியபோது உடலில் பாம்பு ஊர்வதைப்போல பல்லைக் கடித்துகொண்டிருந்ததும் மதிலில் படுத்திருந்த பூனையும் நினைவில் வந்தன. “எமது விருப்பின்றி ஒருவனைத் தொட அனுமதிப்பதென்பது மரணத்திற்குச் சமானம்”என்று நானும் வினோதினியும் என்றோ ஒருநாள் பேசிக்கொண்டதை நினைத்துக்கொண்டேன்.

அம்மாவுக்கு கடிதம் எழுதவேண்டும்போலிருந்தது.

அன்புள்ள அம்மா மற்றும் அனைவருக்கும் அன்புடன் எழுதிக்கொள்வது.

நானும் வினோவும் பரணியும் இங்கு நல்ல சுகம். நினைத்து வந்ததைப் போல வாழ்க்கை இங்கு சிரமமாக இல்லை. நல்லதொரு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறோம். யன்னல் வழியாகப் பார்த்தால் கடல் தெரிகிறது. வீதிகள் பெரிய பெரிய மரங்களுடன் அழகாக இருக்கின்றன. மாலையில் கடற்கரைக்குப் போய் வருகிறோம். இங்குள்ளவர்களின் தமிழ் வித்தியாசமாக இருக்கிறது. என்றாலும் புரிந்துகொள்ள முடிவதில் மகிழ்ச்சி.

பரணியை கம்பியூட்டர் வகுப்பில் சேர்த்துவிட எண்ணியுள்ளோம். வினோவும் நானும் ஆங்கிலம் படிக்கப்போகிறோம். வினோ இங்கு கல்லூரியில் சேர்வதற்கு முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறாள். பின்னேரங்களில் நாங்களெல்லோரும் முற்றத்தில் இருந்து பேசுவதை நினைத்துக்கொள்வதுண்டு. உங்களை அடிக்கடி கனவில் காண்கிறேன். பூனைக்குட்டிகளுக்கு ஒழுங்காக சாப்பாடு போடவும். சீசர் எப்படியிருக்கிறது? மல்லிகை பூக்கிறதா…? வீட்டின் பின்புறம் இருக்கும் அடுக்கு நந்தியாவட்டைக்கும் மறக்காமல் தண்ணீர் ஊற்றவும்.

அம்மா! பேச்சுவார்த்தை சரிவந்தால் நாங்கள் வந்துவிடுவோம். உங்கள் கையால் சாப்பிட வேண்டும் போலிருக்கிறது. வினோவும் உங்களுக்கு எழுதவேண்டுமென்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

அன்பு மகள்ஆனந்தி

அந்தக் கடிதத்தின் மீது தலைவைத்துப் படுத்துக்கொண்டேன். வீட்டில் சாமியறை யன்னல் வழியே வேம்பின் சலசலப்பை ஏந்திவரும் காற்றின் மடியில் படுத்திருப்பது போலிருந்தது.


பிற்குறிப்பு: இதைக் கதையென்றும் சொல்லலாம்.

Quelle - இளவேனில்...

Wednesday, April 26, 2006

வேஷங்கள்

- சந்திரவதனா -

காலைப்பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது. சிக்னலுக்காக காரில் காத்துக் கொண்டிருந்த உமாவின் மனது மட்டும் அந்தக் காலைக்குச் சிறிதும் பொருந்தாது புழுங்கிக் கொண்டிருந்தது. கோபத்தில் தகித்தது என்று கூடச் சொல்லலாம்.

"எப்படி அவனால் முடிந்தது...! எப்படித் துணிந்து சொன்னான்...!" காலையில் சந்துரு சொன்ன செய்தியில் கொதிப்படைந்த அவள் கோபத்தை அக்சிலேட்டரில் காட்டினாள்.

சந்துரு வேறு யாருமல்ல. அவள் கணவன்தான். 15வருடத் திருமண வாழ்க்கை. அன்புக்குச் சின்னமாக நிலாவினி அவர்களின் செல்ல மகள்.

"நேற்று இரவுவரை அன்பாகத்தானே இருந்தான்...! நடித்தானா...?" காலையில் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுவான் என அவள் கனவில் கூட நினைக்கவில்லை.

"உமா உம்மோடை நான் கொஞ்சம் கதைக்கோணும்." காலையில் தேநீருடன் சென்ற உமா, படுக்கையிலிருந்த அவனை எழுப்பிய போது குழைந்தான்.
அவனது வார்த்தையின் பரிவில் நெகிழ்ந்து, அப்படியே அவனருகில் கட்டில் நுனியில் அமர்ந்து, அவன் மார்பின் சுருண்ட கேசங்களைக் கோதிய படி
"சொல்லுங்கோ" என்றாள் மிக அன்பாக.

"நீ அழக் கூடாது."

"சும்மா சொல்லுங்கோ."

சில கணங்கள் நிதானித்து
"உமா நான் இண்டையிலையிருந்து முன்சனில் தங்கப் போறன்."

"ஏன்....?"
மிகவும் திடுக்கிட்டவளாய்

"ஒவ்வொருநாளும் பயணஞ் செய்யிறது சரியான கஸ்டமாயிருக்கு."

"இவ்வளவு நாளும் செய்தனிங்கள்தானே! இப்ப மட்டும் என்ன வந்தது..?"

"பார்த்தீரே..! இப்பவே ரென்சன் ஆகிறீர். நான் இன்னும் விசயத்துக்கே வரேல்லை. "

" ....... "
சந்துருவின் புதிருக்கு மௌனமாக தனக்குள் விடை தேடினாள்.

"உமா உமக்குத் தெரியுந்தானே என்னோடை அந்தச் சக்கி என்ற செக்கொஸ்லாவியப் பொம்பிளை வேலை செய்யிறது..?"

"ஓமோம். புருசன்காரன் விட்டிட்டுப் போயிட்டான் எண்டு சொன்னனிங்கள். அவள்தானே......! பாவம்...... அவளின்ரை மகன் எப்பிடி இருக்கிறான்?"

"அது வந்து...... உமா..! அவளின்ரை மகன் சரியான சுகமில்லாமல் இருக்கிறான். அவளுக்கு என்ரை உதவி தேவைப் படுது. அதுதான் என்னை வந்து.... "

"வந்து...... "

"தன்னோடை இருக்கச் சொல்லிக் கேட்கிறாள். "

"அதுக்கு.....! "

"அதுதான் அவளோடை போய் கொஞ்ச நாளைக்கு இருப்பமெண்டு தீர்மானிச்சிருக்கிறன்."

விக்கித்துப் போன உமா விருட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து விட்டாள். ஒரு கணம் துடிக்க மறந்த அவளது இதயம் மீண்டும் அவசரமாகத் துடிக்கத் தொடங்கியது. வார்த்தைகள் வெளி வர மறுத்தன.

"யோசிக்காதையும். நான் உம்மட்டையும் வந்து வந்து போவன். உமக்கென்ன குறை இஞ்சை இருக்கு. ஊரிலை போலை அடுப்பை ஊதி... உடுப்பைக் கல்லிலை அடிச்சுத் தோய்ச்சு... இப்பிடி ஒரு கஸ்டமும் இல்லைத்தானே... எல்லா வசதிகளும் இருக்குத்தானே. "

"இதெல்லாம் நீங்களாகுமோ..? நீங்கள் அவளை விரும்பிறீங்களோ...?"

"இல்லை... இல்லை... அவள்தான் என்னை உயிருக்குயிராய் விரும்புறாள். நான் இல்லையெண்டால் அவளுக்கு ஒரு துணையும் இல்லை. "

"நானும் அம்மா அப்பா சகோதரங்களையெல்லாம் விட்டிட்டு வந்திருக்கிறன். இந்தப் பெரிய ஜேர்மனியிலை உங்களையும் நிலாவினியையும் விட்டால் எனக்கும் வேறை ஆர் இருக்கினம்?" இப்போது அவளிடம் அழுகை பொங்கியது.

"ஏன் இப்ப அழூறீர்? நான் உம்மட்டையும் வருவன்தானே. நீர் படிச்ச பொம்பிளை இதை அனுசரிச்சுப் போகோணும். ஊருலகத்திலை நடக்காத விசயமே இது...!"

"நோ... என்னாலை ஒரு நாளும் இதுக்கு ஒப்புக் கொள்ளேலாது."

உமா கோபமாக முன்னேறி மூர்க்கத்தனமாக அவனது மார்பில் குத்தினாள். நுள்ளினாள். முகமெல்லாம் பிறாண்டினாள். அவன் அவளைத் தள்ளி விட்டு "பொம்பிளை மாதிரி நடந்து கொள்ளும்." என்று கத்தினான். அவனது இடது கன்னத்தில் இவளது நகம் பட்டு இரத்தம் துளிர்த்து நின்றது. வலியோடு அதைத் தடவியவன் கையில் பட்ட இரத்தத்தை அவளிடம் காட்டி, "இங்கை பாரும் எனக்கு இரத்தக் காயம் வர்ற அளவுக்கு பிறாண்டியிருக்கிறீர். இதுக்கு மேலை என்னைத் தொட்டீரோ..! நடக்கிறது வேறை. நானும் சும்மா இருக்க மாட்டன். என்ரை முடிவு முடிவாகீட்டுது. ஒத்துப் போனீர் எண்டால் உமக்கும் நல்லது. எனக்கும் நல்லது. நிலாவினிக்கும் நல்லது. இல்லாட்டி நீர்தான் கஸ்டப் படுவீர். நிலாவினிக்கு இதொண்டும் தெரியத் தேவையில்லை. "

உமாவுக்கு மலைப்பாக இருந்தது. தனது மூர்க்கத் தனமான செய்கையில் எரிச்சலாகவும், வெட்கமாகவும் இருந்தது. "என்னவெல்லாம் இவன் சொல்கிறான்" என்று கலக்கமாகவும் இருந்தது. சக்கியைப் பற்றி சந்துரு ஏற்கெனவே சொல்லியிருக்கிறான். அவளுக்காக உமாவும் பரிதாபப் பட்டிருக்கிறாள். அதுக்காக சந்துருவே போய் சக்கிக்கு வாழ்க்கை கொடுப்பதென்பது எந்த வகையில் நியாயமானது? "இவன் சொல்வதெல்லாம் உண்மைதானா அல்லது தன்னைச் சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறானா" என்று குழம்பினாள்.

நிலாவினியும் வீட்டில் இல்லை. பாடசாலை ரூர் என்று போய் விட்டாள். திரும்பி வர இன்னும் எட்டு நாட்களாகும்.

"நீங்கள் சும்மா பகிடிக்குத்தானே சொல்லுறிங்கள்...?" ஒரு நப்பாசையோடு கேட்டாள்.

"இல்லை உமா. சீரியஸாத்தான் சொல்லுறன். எனக்கு உம்மையும் விருப்பம்தான். ஆனால் இப்ப சக்கிக்கு என்ரை உதவி தேவை. "

இயலாமை என்ற ஒன்று இப்போ உமாவை ஆக்கிரமித்தது. "ஓ....." வென்று குழறினாள்.

"ஏனப்பா இப்படிக் குழறுறீர்? பக்கத்து வீட்டுச் சனத்துக்கெல்லாம் கேட்கப் போகுது. என்ன நினைக்குங்குள். ஊரெண்டு நினைச்சீரே. ஏதோ மூண்டாந்தர குடும்பங்கள் மாதிரிக் கத்திறீர்!"

"ஆர் என்ன நினைச்சாலும் எனக்குப் பரவாயில்லை. நீங்கள் செய்யத் துணிஞ்சது மட்டும் முதலாந்தரமா இருக்கோ..?"

வார்த்தைகள் மிகச் சூடாக அநாகரிகமாக நீண்டு... ஒன்றோடொன்று மோதி.. உமாவுக்கு, சந்துரு முரட்டுத்தனமாக அடிக்க, உமா தன்னைக் காத்துக் கொள்ள எண்ணி, இழுத்துப் பறித்து கதவில் இருந்த திறப்பையும் இழுத்து எடுத்துக் கொண்டு வெளியில் ஓடினாள். கொஞ்ச நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றவள்... காரையும் எடுத்துக் கொண்டு இலக்குத் தெரியாமல் ஓடி.. சிவப்பு லைற்றில் தரித்து நின்றாள்.

சிக்னல் பச்சையாக, பின்னிருந்த காரோட்டி கோன் அடித்து "தூங்குகிறாயா...?" என்று சைகை காட்டிச் சினக்க.. சிந்தனையிலிருந்து தற்காலிகமாக விடுபட்டு..... மீண்டும் பலம் கொண்ட மட்டும் அக்சிலேட்டரை அழுத்தி சீறிக் கொண்டு பறந்தாள்.

ஒரு பாடசாலையின் முன் ஒரு குழந்தை வீதியைக் கடப்பதை கடைசி செக்கனில் கண்டு அவசரமாக பிறேக்கை அழுத்தினாள். "கடவுளே...! நான் என்ன செய்கிறேன். அந்தப் பிள்ளை அடிபட்டிருந்தால்...?" என்று முனகினாள். அப்படியே போனவள் வழியில் உள்ள மைக்கல் தேவாலயத்தின் அருகில், காரை நிறுத்தி விட்டு தேவாலயத்துக்கான படிகளில் ஏறி ஓரிடத்தில் அமர்ந்தாள். அடக்க முடியாமல் அழுதாள். திடீரென்று நிர்க்கதியாகப் போய் விட்டது போல உணர்ந்தாள். பைத்தியம் பிடித்தவள் போல அரற்றினாள். யோசிக்க முடியாமல் மூளைப்பகுதி நொந்தது. கண்களின் முன்னே மெல்லிய புகைமண்டலம் போல எதுவோ மறைத்தது. எதையும் சரியாகச் சிந்திக்க முடியாமல் திண்டாடினாள்.

சந்துருவுக்கும் அவளுக்கும் இடையில் அடிக்கடி சின்னச் சின்னச் சண்டைகள் சச்சரவுகள் என்று வரத் தவறுவதில்லைத்தான். சண்டைகள் கருத்து வேறுபாடுகள் இல்லாத குடும்பங்களா..? சில சமயங்களில் சந்துருவின் மேல் சந்தேகங்களும் வந்து பொங்கியிருக்கிறாள்தான். அவையும் சந்துரு கூறும் பொய்ச் சமாதானங்களில் பொங்கிய வேகத்தில் அடங்கியும் போயிருக்கின்றன. ஆனால் இந்தளவுக்கு தன்னை அப்படியே விட்டு விட்டுப் போய் இன்னொருத்தியுடன் வாழத் துணிந்த அவன் துணிவும், அதை மிகச் சாதாரண விடயம் போல அவள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற அவன் வேண்டுகோளும், இவளை நிலைகுலைத்து விட்டன. தன்னவன் இன்னொருத்திக்குச் சொந்தம் என்று தெரிந்தால் எந்தப் பெண்ணால்தான் நிலைகுலையாமல் இருக்க முடியும்.

தேவாலயம் உயர்ந்து கம்பீரமாக நின்றது. உல்லாசப் பிரயாணிகள் உள்ளே சென்று அதன் உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தார்கள். சிலர் உச்சியில் நின்று நகரின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். இவளுக்கும் ஒரு விபரீத ஆசை வந்தது. தானும் போய் ஏறினாள். அதிக எண்ணிக்கையான வளைந்து வளைந்து செல்லும் படிகளில், ஒவ்வொன்றாக ஏறும் போது மனச்சோர்வுடன் உடற் சோர்வும் சேர்ந்து கால்கள் தடுமாறின. தலை சுற்றியது. ஆனாலும் ஏறி விட்டாள். மூச்சு வாங்கியது. மேலே நின்று பார்த்தாள். எதுவும் தெளிவில்லாமல் ஏதோ ஒரு மெல்லிய புகைமண்டலம் முன்னே தெரிந்தது. பச்சை மரங்கள் கூட புகை போர்த்தி வெண்மை பேர்ந்த பச்சைகளாகத் தெரிந்தன. யாரும் எதிர் பார்க்காத ஒரு கணத்தில் எம்பிக் குதித்தாள்.

அங்கு நின்ற எல்லோருமே அதிர்ச்சியில் அவலக்குரல் எழுப்ப அவள் இரத்தமும் சதையுமாய் தேவாலயத்தின் படிகளில் சிதறினாள். ஒரு கணம் ஸ்தம்பித்து நின்ற அந்த இடத்தை பொலிஸ்வாகனங்களும் அம்புலன்ஸ் வண்டியும் அல்லோல கல்லோலப் படுத்தின. சிவப்பும் வெள்ளையும் கலந்த தடுப்பு நாடாக்கள் கட்டப்பட்டு அந்த வீதியிலான போக்குவரத்துக்களும் மக்கள் நடமாட்டமும் தடைப்படுத்தப் பட்டது.

இது மூன்றாவது சாவு. முதலில் 14வயது நிரம்பிய ஒரு யேர்மனிய மாணவி. அடுத்து ஒரு இந்தியத் தமிழ்ப்பெண். இப்போ இலங்கைத் தமிழ்ப்பெண். தேவாலயஉச்சிக்கு இனி யாருமே ஏற முடியாது என்ற அறிவித்தலோடு தேவாலயத்தினுள்ளே இருந்த உச்சிக்கு ஏறும் படிகளை மறித்து கேற் போட்டு பெரிய மாங்காய்ப்பூட்டு போடப் பட்டது.

விசாரணைகள் தொடர்ந்து... சாக்கில் அள்ளிக் கட்டப் பட்ட உமாவின் உடல் என்று சொல்லப் பட்ட சதைத் துண்டுகள் அடக்கம் செய்யப்பட்டு இரண்டு கிழமைகள் ஓடி விட்டன. சந்துருவைத் துக்கம் விசாரிக்க உறவினர்கள் என்ற பெயரில் சிலரும், நண்பர்களும் வந்து வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

சந்துரு சோகமாய் தாடியை மழிக்காமல் தேவதாஸ் வேடம் போட்டிருந்தான். யார் வீட்டுக்கு வந்தாலும் ஒரு சோகப் பாட்டுள்ள இசைத்தட்டை சுழல விட்டு தன் சோகத்தை இன்னும் பலமாக மற்றவர்களுக்குக் காட்டினான். அழுவாரைப் போல இருந்து "அவ பாருங்கோ சரியானநல்லவ. ஆனால் யேர்மனியிலை இருக்கிற எல்லாப் பொம்பிளையளுக்கும் உள்ள அதே பிரச்சனைதான் அவவுக்கும். தனிமைதான் எல்லாத்துக்கும் காரணம். தாய் தகப்பன் ஊரிலை. சொந்தம் எண்டு சொல்லிக் கொள்ள ஒருவரும் பக்கத்திலை இல்லை. நானும் வேலையோடை. மகள் நிலாவினி பள்ளிக்கூடம் ரூர் எண்டு திரிவாள். இவ நாள் முழுக்க வீட்டிலை தனியத்தானே. அதுதான் அவவுக்கு சரியான மனஅழுத்தம். எப்பவும் சும்மா இருந்து அழுறதும்....." அலுக்காமல் சலிக்காமல் சொல்லிக் கொண்டே இருந்தான்.

சந்திரவதனா
ஜேர்மனி
7.3.2005

http://www.selvakumaran.de/index2/kathai/vechankal.html

Monday, March 06, 2006

அவள்

நடுரோட்டில் நின்றவள் என்னைக் கண்டதும் ஓடி வந்து கையைப் பிடித்தாள். தனது கணவனை ஜெயிலில் இருந்து விடுவித்துத் தரும்படி மன்றாடினாள். அவள் யாரென்பதையே அவளைக் கேட்டுத்தான் தெரிந்து கொண்டேன். அடையாளமே தெரியாமல் உரு மாறிப் போயிருந்தாள். உதடுகள் வெடித்துக் காய்ந்து கருமை பேர்ந்திருந்தன. கண்கள் சோபை இழந்து சோகத்துக்குச் சொந்தமாகியிருந்தன. கன்னங்கள் ஒட்டி உலர்ந்திருந்தன. பன்னிரண்டு வருடங்களின் முன் நான் சந்தித்த மதுதான் இவளென்பதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது.

அழகிய ஓவியம் போல, அன்று என்னைத் தனது நான்கு வயது மகளுடன் சந்தித்தவள் இன்று ஏன் இப்படிக் காய்ந்த சருகு போலானாள் என்ற கேள்வி என்னுள் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. திடீரென சனநாடமாட்டம் மிக்க தெருவென்றும் பாராது உரத்து அழத் தொடங்கி விட்டாள். கன்னங்களில் பொலபொலவென்று வழிந்த கண்ணீர் என்னையும் கலங்க வைத்தது.

"அழாதைங்கோ. என்னெண்டு சொல்லுங்கோ. நான் ஹெல்ப் பண்ணுறன்."

"எனக்கு அவரைப் பார்க்கோணும். எல்லாருமா என்னை ஏமாத்தி கையெழுத்து வேண்டிப் போட்டு அவரை ஜெயிலிலை போட்டிட்டினம். எல்லாரும் பொய். எனக்கு அவரைப் பார்க்கோணும். அவர் அப்பிடிச் செய்திருக்க மாட்டார். குமுறினாள். குழறினாள்."

எனக்கு சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்ப்பது போன்றதான உணர்வு. என்ன நடந்திருக்கும்..? ஏன் இப்படிப் பேசுகிறாள். எப்படி சாருகன் ஜெயிலுக்குப் போயிருப்பான்? நாட்டிலிருந்து ஆட்களை வெளிநாட்டுக்கு அழைத்து வரும் ஏஜென்சி வேலை பார்த்திருப்பானோ?

எதுவானாலும் பேசுவதற்கு இதுவல்ல இடம். போவோரும் வருவோரும் என்னையும் அவளையும் ஒரு தினுசாகப் பார்த்துக் கொண்டு சென்றார்கள். என்னைத் தெரிந்த சிலர், முகங்களில் கேள்விக்குறி தொக்க பார்வைகளை ஏளனம் கலந்து வீசிச் சென்றார்கள். இன்னும் சிலரோ இரக்கமாகப் பார்த்துச் சென்றார்கள்.

"வாங்கோ நாங்கள் அந்தக் தேநீர்க்கடைக்குள் போயிருந்து கதைப்பம்."

"எனக்குக் தேநீரும் வேண்டாம். ஒண்டும் வேண்டாம்."

"இஞ்சை பாருங்கோ. எல்லாரும் ஒரு மாதிரி எங்களைப் பார்க்கினம். கொஞ்சம் குளிராயும் இருக்கு. உள்ளை போயிருந்து ஆறுதலாக் கதைப்பம்." அவளது கையைப் பிடித்து இழுக்காத குறையாக அந்தத் தேநீர்க்கடைக்குள் அழைத்துச் சென்றேன். கூடவே அவளது நான்கு வயது மகனும் அவளது சுவெற்றரைப் பிடித்தபடி உள் நுழைந்தான். அவனது வாயைச் சுற்றி அவன் காலையில் சாப்பிட்ட சாப்பாடு வெண்மையாகப் படிந்து காய்ந்து போயிருந்தது. பார்ப்பதற்கு துப்பரவின்றி இருந்த அவனது தோற்றத்தை யேர்மனியர்கள் முகத்தைச் சுளித்த படி பார்த்தார்கள்.

கபேற்றறியாவின் உள்ளே ஒரு மூலையில் இடம் பிடித்துக் கொண்டேன். மது இப்படிப் பட்டவள் அல்ல. பன்னிரண்டு வருடங்களின் முன் சந்தித்த போது மகளை மிகவும் நேர்த்தியாக வைத்திருந்தாள். இப்போ என்ன நடந்தது? என் வீட்டுக்குக் கூட ஓரிரு தடவைகள் மகளோடு வந்திருக்கிறாள். பட்டுப் போல இருந்த அந்தக் குழந்தைக்கு இப்போ பதினாறு வயதாகியிருக்கும். அவள் எங்கே? கணப்பொழுதுக்குள் மனசுக்குள் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் எழுந்தன.

மது எங்கோ வெறித்துப் பார்ப்பதுவும், மீண்டும் மீண்டுமாய் அழத் தொடங்குவதுமாய் இம்சைப் படுத்தினாள். பார்க்கப் பாவமாய், பரிதாபமாய்த் தெரிந்தாள். அவளை ஆசுவாசப் படுத்தி சரியான முறையில் கதைக்கத் தொடங்குவதற்கிடையில் எனக்குப் போதும் போதுமென்றாகி விட்டது.

"என்ன நடந்தது? ஏன் சாருகன் ஜெயிலுக்குப் போனவர்?"

"அவர் சரியான குடி. குடிச்சால் அவருக்குக் கண்மண் தெரியிறேல்லை.
குடிச்சுப் போட்டு எனக்கு அடிக்கிறதாலை...

"அடிக்கிறது பிழைதான். அதுக்கு இங்கை தண்டனையும் கிடைக்கும். ஆனால் இவ்வளவு காலத்துக்கு ஜெயில்லை போட மாட்டங்களே..? அடிக்கிறதெண்டு நீங்களோ பொலிசுக்கு அறிவிச்சனிங்கள்?"

"இல்லை... அவர் ஒருக்கால் அடிச்ச பொழுது எனக்கு காது வெடிச்சு நான் சாகக் கிடந்தனான். ஆஸ்பத்திரியிலை இரண்டு மாதத்துக்கு மேலை இருக்க வேண்டி வந்திட்டுது. அதுதான்...... மற்றது எங்கடை பக்கம் அக்கம் வீட்டு டொச் சனங்களும் பொலிசுக்கு அறிவிச்சிட்டுதுகள்."

"அதுக்கு ஒரு நாளும் ஆறு வருசம் தண்டனை குடுக்க மாட்டாங்கள்.
வேறையென்ன நடந்தது என்று சரியாச் சொன்னால்தான் நான் ஏதும் உதவி செய்யலாம்."

"அந்த டொச் சனத்துக்கு விசர். இவர் எங்கடை மகளோடை பிழையாப் பழகிறதெண்டும் சொல்லிப் போட்டுதுகள்."

"பிழையா எண்டு....."

"பள்ளிக்கூட ரூர் ஒண்டுக்கும் விடுறதில்லை. பள்ளிக்கூட நீச்சல் வகுப்புக்கு விடுறதில்லை. பள்ளிக்கூடம் தவிர்ந்த வேறையெந்த இடத்துக்கும் விடுறேல்லை. சினேகிதப் பிள்ளையளோடை பழக விடுறதில்லை......"

"அது பிழைதான். அதுக்காண்டி..."

"அதோடை அவர் பிள்ளையோடை பாலியல் தொடர்பு வைச்சிருக்கிறாரெண்டும் பொய் சொல்லிப் போட்டுதுகள். அதை அறிக்கையா எழுதி என்ரை மகளட்டையும் சைன் வாங்கி யூகன்ட்அம்ற்றிலை (Youth wellfare office) குடுத்திட்டுதுகள்."

"அவர் சொந்தத் தகப்பன்தானே..."

"ஓம்."

"அப்படியெண்டால் ஏன் அந்தச் சனங்கள் அப்பிடி எழுதினதுகள். சில நேரத்திலை அவர் பிள்ளையை வெளியிலை விடாமல் இருக்கிறதாலை அதுகளுக்கு அப்பிடியொரு சந்தேகம் வந்திட்டுதோ தெரியாது. உப்பிடி சில நேரத்திலை நடக்கிறதுதான். ஒண்டும் நடக்காமலே நடந்தது மாதிரியான சந்தேகங்களில் வழக்குகள் வாறதுதான். இதாலை பிள்ளையளைப் பெற்றோரிட்டையிருந்து பிரிச்செடுக்கிற அவலங்களும் நடந்திருக்கு. எங்கையாவது ஒரு சொந்தத் தகப்பன் தன்ரை மகளோடை பிழையா நடப்பானோ? நீங்கள் யோசிக்காதைங்கோ. எப்பிடியாவது லோயரோடை கதைச்சு அப்பீல் எடுத்தால் இதிலை வெல்லலாம். இது ஒரு பிழையான வழக்கு."

இப்போது அவள் முகத்தில் ஒரு சிறிய மாற்றம். எனது பேச்சில் இருந்து.. கணவர் அப்படியொரு அநியாயமான தப்பைச் செய்திருக்க மாட்டாரென்ற பேருவகை. அவர் விடுவிக்கப் பட ஏதாவது ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கை.

எல்லாம் சில கணங்களுக்குத்தான். சடாரென்று அவள் கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது. "அவரை நான் பார்க்கோணும். ஒரு வருசத்துக்கு மேலையா அவரைப் பார்க்கேல்லை. விடமாட்டினமாம். கடைசியா நடந்த வழக்குக்குக் கூட என்னை உள்ளை விடேல்லை. லோயர்தான் போனவர்." சத்தமெடுத்து அழுதாள். தேநீர்க்கடையில் இருந்த அனைவரது தலைகளும் ஒரு தரம் எம்பக்கம் திரும்பி மீண்டன.

"எங்கை உங்கடை அந்த மகள்? அவ குழந்தைப்பிள்ளையில்லையே! அவவுக்கு 16 வயது. அவ தன்ரை அப்பா தன்னோடை அப்பிடிப் பிழையா நடக்கேல்லை எண்டு கோர்ட்டிலை சொன்னால் பிரச்சனை முடிஞ்சுதுதானே...?"

"அவவிட்டை அந்த விசர்ச் சனங்கள் கையெழுத்து வேண்டிக் குடுத்துட்டுதுகள். இதாலை அவவுக்கும் கெட்ட பெயர். தமிழ்ச்சனங்களுக்கு முன்னாலை தலை காட்டேலாதாம். அதுதான் அந்த நகரத்தையே விட்டிட்டு இங்கை வந்திட்டம். இப்ப அவ பள்ளிக் கூடத்துக்குப் போட்டா."

அப்படி ஏன் அந்த யேர்மனியச் சனங்கள் செய்யப் போகுதுகள்? என்ற கேள்வி எனது மூளையின் ஒரு புறத்தைப் பிறாண்டிக் கொண்டே இருந்தது. இருந்தாலும் மதுவைச் சமாளித்து என்னாலான உதவிகளைச் செய்வதாக வாக்குறுதியளித்து அனுப்புவதற்கிடையில் நான் களைத்து விட்டேன்.

வீட்டுக்கு வந்த பின்னும் மனசுக்குள் நினைவுகள் புரண்டு கொண்டே இருந்தன. யேர்மனியக் குடும்பங்களில் இப்படியான வழக்குகள் சில தடவைகள் வந்திருக்கின்றனதான். ஆனால் எமது தமிழ் சமூகத்தில் இது புதிய வழக்கு. ஒரு தந்தையால் தனது விந்திலிருந்து உருவான தனது குழந்தையை இப்படிப் பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு உட்படுத்த முடியுமா..?

இந்தக் கேள்விக்கு விடை தேடுமுகமாக எனக்குத் தெரிந்த பல அப்பாக்களை ஒப்பிட்டுப் பார்த்தேன். தம்பியின் மனைவியை, அண்ணனின் மகளை, மனைவியின் தங்கையை... என்று சபலப்படும் ஆண்கள் பலர் இருக்கிறார்கள்தான். ஆனால் சொந்த மகளையே....! முடியாது ஒரு நாளும் ஒரு தந்தையால் இது முடியாது. இது பிழையான வழக்கு. அநியாயமாக சாருகன் குற்றஞ் சாட்டப் பட்டிருக்கிறான். அவனை எப்படியும் ஜெயிலிலிருந்து விடுவிக்க வேண்டும்.

தெரிந்த ஒரு யேர்மனிய வழக்கறிஞரோடு இது பற்றிப் பேசினேன். இப்படியானதொரு வழக்கு அவருக்குப் புதிதாக இருக்கவில்லை. ஆனாலும் நான் தமிழ்த் தந்தையின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை அவரை யோசிக்க வைத்தது. அப்படியொரு தவறை அந்தத் தந்தை செய்யாத பட்சத்தில், சரியான முறையில் முயற்சி செய்தால் மீட்கலாம் என்றார்.

ஒருவித நம்பிக்கையோடு மதுவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கு சம்பந்தமான கடிதங்கள், கோர்ட் தீர்ப்புகள் எல்லாவற்றையும் கொண்டு எனது வீட்டுக்கு வரச் சொன்னேன். வந்தாள்.. அதே வாட்டம். அதே ஏக்கம். எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டதான சோகம். மகன் மட்டும் கொஞ்சம் துப்பரவாக வெளிக்கிடுத்தப் பட்டிருந்தான்.

இருக்க வைத்து தேநீர் தயாரித்துக் கொடுத்து கதைப்பதற்குள் பலமுறை ஒப்பாரி வைத்து விட்டாள். அவள் கொண்டு வந்த பேப்பர் கட்டுக்குள்ளிருந்து யூகன்ட்அம்ற்றிலிருந்து (Youth wellfare office) வந்த 12 பேப்பர்கள் ஒன்றாகப் பின் பண்ணப் பட்டிருந்த ஒரு கடிதத்தை எடுத்துப் பார்த்தேன். அது பதினொரு மாதங்களின் முன் சாருகனின் வழக்கின் தீர்வையொட்டி எழுதப் பட்ட ஒரு கடிதம். படிக்கத் தொடங்கினேன்.

"இலங்கையைச் சேர்ந்த சாருகன், மதுமிதா தம்பதிகள் இங்கு யேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார்கள். இவர்களது அரசியற் தஞ்சக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டதின் காரணமாக இவர்களுக்கு யேர்மனியில் வதிவிட அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

தற்போது 15வயதுடைய இவர்களின் மகள் சகானா, கருச்சிதைவு செய்து கொள்வதற்காக, இரண்டு தடவைகள் அவளது தந்தை சாருகனால் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளாள். மருத்துவருக்கும் அங்கு உள்ள மற்றைய உதவியாளர்களுக்கும் இது சம்பந்தமாகப் பலத்த சந்தேகம் ஏற்படவே கருவிற்கு யார் தந்தை என்ற டி.என்.ஏ(DNA) பரிசோதனையை மேற் கொண்டுள்ளார்கள். (இந்தச் சோதனைக்கான ஒரு தரத்துச் செலவு 750யூரோக்கள்.) இச் சோதனையின் போது சகானாவின் வயிற்றில் உள்ள கருவுக்குத் தந்தை அவளின் தந்தையாகிய சாருகன் என்பது நிரூபணமாகியுள்ளது. அதனாலேயே சாருகன் தற்போது சிறையில் வைக்கப் பட்டுள்ளார்."

சரியான ஆதாரம் இருந்தும் கூட திருமதி சாருகன் இதை ஏற்றுக் கொள்கிறாரில்லை. ஒரு சட்டபூர்வமான உண்மையை ஓப்புக் கொள்ள மறுக்கும் சுபாவம் கொண்டவராக திருமதி சாருகன் இருப்பது பொலிஸ் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. இதனால் சகானாவின் பாதுகாப்புக்குப் பெரும் பங்கம் ஏற்பட்டுள்ளது.

சகானா தனது தந்தையாலேயே பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு உள்ளாக்கப் பட்டுள்ளாள். அதனால் மனஉளைச்சல் பட்டுக் கொண்டிருக்கும் அவளை அரவணைக்க வேண்டிய அவளது தாய் மதுமிதா, மகளுக்குத் தாயாக மகளின் பக்கம் நிற்காது, கணவனுக்கு மனைவியாக நின்று கணவனை நியாயமுள்ளவனாகக் காட்ட முனைவது பெரும் விசனத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இத்தனைக்கும் சாருகன் தனது மனைவியான மதுமிதாவை வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறுமளவுக்கு மூர்க்கத்தனமாகப் பல தடவைகள் தாக்கியிருக்கிறார். எந்தக் கட்டத்திலும் மதுமிதாவை யேர்மனிய மொழி கற்றுக் கொள்ள சாருகன் அனுமதிக்கவில்லை. இத்தனை வருடங்கள் யேர்மனியிலிருந்தும் யேர்மனிய மொழியை ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ள முடியாதவராகவே மதுமிதா இருக்கிறார்......."

எனக்கு மேற்கொண்டு வாசிக்க முடியாமல் இருந்தது. அந்த அறிக்கையில் எழுதப் பட்ட வாசகங்கள் ஒவ்வொன்றும் என்னை அதிர வைத்தன. நிமிர்ந்து மதுவைப் பார்த்தேன். அவள் "அவர் அப்படிச் செய்திருக்க மாட்டார்." என்பதை ஒரு மந்திரம் போல உச்சாடனம் பண்ணிக் கொண்டிருந்தாள்.

புத்தி பேதலித்தவள் போலப் புலம்பிக் கொள்ளும் இவளிடம் போய் "டீ.என்.ஏ(DNA) பரிசோதனை மூலம் உனது மகளின் கருவுக்கான காரணி உனது கணவன்தான் என்பது நிரூபணமாகியிருக்கும் போது இனி இவ்வழக்கில் வெல்வதற்கு எதுவும் இல்லை" என்பதையும் "உனது கணவனுக்குச் சரியான இடம் அதுதான். அவன் அங்கேயே இருக்கட்டும்." என்பதையும் எப்படிச் சொல்வது..?

யோசனை மேலிட, அந்தக் கடிதத்தை நான் அப்படியே மேசையில் வைத்து விட்டேன். அவள் மீண்டும் பொல பொலவென்று கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட "அவரை நான் பார்க்கோணும். ஒரு வருசத்துக்கு மேலையா அவரைப் பார்க்கேல்லை. அவர் அப்படிச் செய்திருக்க மாட்டார். அவரட்டை நேரே பார்த்து "அப்பிடிச் செய்தனிங்களோ...?" எண்டு கேட்கப் போறன்......" புலம்பிக் கொண்டிருந்தாள்.

சந்திரவதனா
யேர்மனி
15.11.2004

Wednesday, November 30, 2005

நூல் ஏணி

ஆர். நீலா

பெண்ணே நீ: ஓட்டல் ஆகாஷ் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை.

பொன்னுத்தாய்க்கு ரத்தம் கொதித்தது. கொழுந்தன்காரனை எரித்துவிடுவது போல் பார்த்தாள்.

"பாவிப்பய.... என்னமா நம்புற மாதிரி பேசுறான்...?'

இப்பவும் நமட்டுச் சிரிப்போடு அவளையே பார்க்கிறான். கண்களில் அவளுக்கு மட்டுமே தெரிந்த ஒரு குள்ளநரித்தனம்!

அவள் ஒரு பொருட்டே இல்லை என்பதுபோல் அவன் தொடர்கிறான்.... ""ஆமாப்பா.... அந்த மூர்த்தி ஒரு பொம்பள பொறுக்கி.... அங்க என்ன பாடமா நடத்துறான்...? ஒரே பாட்டும் கூத்தும்தான். அவனுக்கிட்டே இதுகளுக்கு என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு...''

பொன்னுத்தாய்க்குக் கண்களில் மளுக்கென்று நீர் எட்டிப் பார்த்தது. ""நேத்து பேஞ்ச மழயிலே மொளச்ச காளான்.... எப்படியெல்லாம் எடுத்துக்கட்டி பேசுறான்...? நான் மாலையும் கழுத்துமா இந்த வீட்டு வாசப்படி மிதிச்ச மக்கா நாளே "அத்தாச்சி.... ஆய கழுவி விடு...'ன்னு வந்து நின்ன வாண்டு.... இன்னிக்கி வளந்துட்டானாம்.... என்ன வேணாலும் பேசுவானாம்... அவுக ஆயி அப்பன் அதக்கேட்டு பூரிச்சுப் போவாகளாம்.... நான் கேனமாரி கேட்டுக்கிட்டு நிக்கணுமாம்... இருக்கறவுக இங்க இருந்தா இப்படியெல்லாம் நடக்குமா?''

அவள் எண்ண ஓட்டம் புரிந்ததுபோல் மாமனாரின் குரல் வந்தது. ""அவன் என்ன சொல்லீட்டான்னு இப்ப நீலீக்கண்ணீர் வடிக்கிறே? அவன் சொன்னாலும் சொல்லாட்டியும் நாஞ்சொல்றேன்.... இனிமேட்டுக்கு நீ அங்க போகக்கூடாது.... மீறிப் போகணுமின்னா நடையக் கட்டிக்க.... நாங்களும் சொல்ற எடத்திலே சொல்லிக்கிறோம்....''

பிறவிக் குருடனுக்கு ஒருநாள் பார்வை வந்து மறுநாளே பறிபோனது போல் துடித்துப் போனாள்.

"இங்கேருந்து கூப்புடு தூரத்திலே இருக்கற எடத்துக்கு படிக்கப் போனது இவ்வளவு பெரிய குத்தமா...?'

இரண்டு மாதங்களுக்கு முன்னால் மருதாயி மதினி களையெடுக்கும் இடத்தில்தான் அதைச் சொன்னாள்.

"ஊரே கொள்ளுன்னு கிடக்குடி... பொம்பளையெல்லாம் கூடிக் கூடிப் பேசிக்காளுக... போயி ரெண்டு நாளைக்கி ஒக்காந்தா போதுமாம்.... அம்புட்டு படிப்பையும் படிச்சிரலாமாம்.... ஒரு மாத்தையிலே கடிதாசி கிடிதாசியெல்லாம் எழுதலாமாம்....''

பொன்னுத்தாய்க்கு எழுத்து சுலபமாக வசப்பட்டது. சொல்ýக்கொடுக்க வந்த மூர்த்தியே அவளின் அறிவுப்பசி பார்த்து அசந்து போனான்.

இரண்டு மூன்று எழுத்துகளை ஒன்று சேர்க்கும்போது அது ஒரு உருவம் பெற்றுவருவது புதுமையாகவும், விளையாட்டாகவும் இருந்தது. மளிகை மடித்து வந்த காகிதங்களோடு அவள் மல்லுக்கு நின்றாள். சுவரொட்டிகளெல்லாம் அவளோடு சொந்தம் கொண்டாடியது. மனசின் மர்மப் பிரதேசங்களில் எல்லாம் விளக்கெரிந்தது. சதா குத்தம் சொன்ன வீடுகூட அவளுக்கு இப்பொழுது சொர்க்கபுரியாகிவிட்டது. சுவரில் கோடு போட்டு வைத்திருந்த பால்கணக்கை நோட்டில் எழுத முயன்றாள்... வீட்டின் சுவரிலெல்லாம் பொன்னுத்தாய்..... முத்துச்சாமி... மயிலி... என்று கரிக்கட்டை எழுத்துகளால் கோணல் மாணலாய் எழுதப்பட்டிருந்தது. சதா உர்ரென்று ஒரு மாமனார்.... எதைச் சொன்னாலும் குத்தம் சொல்லியே பழக்கப்பட்ட கொழுந்தன்... இந்த வயசிலும் மாமனாரைப் பார்த்து பயப்படும் மாமியார்.... எதையாவது "லவட்டிக்' கொண்டு போவதற்காகவே வரும் கட்டிக்கொடுத்த நாத்தனார்....

"மூணாப்பு' படிக்கும் மகள் மயிலி இருந்தாளோ அவள் பிழைத்தாளோ? எல்லோருடைய குற்றங்குறைகளும் பொன்னுத்தாய்க்கு மறந்தே போனது.... பின்னே என்ன.... முன்னே மாதிரி வீட்டு வேலையப் போட்டுப் போட்டு பத்துப் பதினோரு மணி வரைக்கும் பாக்க முடியுமா? எட்டு மணிக்கு வகுப்பு... அதற்குள் எல்லா வேலையையும் முடிக்க வேணாமா?

பொன்னுத்தாய் ஓடி ஓடி வேலை செய்தாள். ஆறு மணிக்கெல்லாம் மாலைச் சமையல் முடிந்துவிடும். ஏழு மணிக்குள் கோழி கவுத்து மாடு தண்ணி காட்டி வைக்கோல் போட்டு வீடுகூட்டி எட்டு மணிக்கெல்லாம் எல்லோருடைய வயித்தையும் ரொப்பி.... முதல் ஆளாய்ப் போய் உட்கார்ந்து விடுவாள். அவளுக்குப் பின்தான் ஒவ்வொருவராய் "படிக்க' வருவார்கள்.

கணவன் முத்துச்சாமி வந்தால் கிடைக்கும் வீட்டு அன்னியோன்யம் அவளுக்கு அந்த இடத்தில்தான் கிடைத்தது. அவன் வந்துவிட்டுப் போகும் ஓரிருமாதங்கள் பட்டாம்பூச்சியாய்த் திரிவாள்.... அவன் மறுபடி கிளம்பிப் போய்விட்டால் அடுத்து அவன் வரும்வரை அவன் வருகைக்கான தவம்....

அவன் சம்பாத்தியத்தில்தான் நாத்தனாரை நல்லாச் செஞ்சு கட்டிக்கொடுக்க முடிந்தது.... காடுகரைகளை வாங்க முடிந்தது..... மகள் மயிýக்கென்று ஓரிரண்டு நகை சேக்க முடிந்தது...

எங்கோ தூரதேசத்தில் தன் கணவன் உடம்பைக் கடம்பாய் அடித்து வேலை செய்கையில் அவளுக்கு சிரிப்பு எங்கிருந்து வரும்? திருமணமாகி ஆறாம் மாதமே அவன் பிழைப்புக்காக வெளிநாடு போய்விட்டான்.... அங்கு என்ன கலெக்டர் உத்யோகமா? கப்பலில் சரக்கு ஏற்றும் சாதாரண கூலி.... வாயக்கட்டி வயித்தக்கட்டி தன் குடும்பத்திற்காக உழைத்தான்....

நல்லவன்தான்.... கொஞ்சம் சங்கோஷி.... திருமணமான இந்த பத்து வருடங்களில் பொன்னுத்தாயிடம் எத்தனை வார்த்தை பேசியிருப்பான் என்று எண்ணி விடலாம்.... வீட்டுக்கு எழுதும் கடிதங்களிலும் எல்லோருக்கும் போல பொன்னுத்தாய், மயிலி சுகமா? என்று ஒரேயொரு வார்த்தைதான்....

அவளுக்கோ அவனிடம் சொல்ல ஆயிரமாயிரம் சேதிகள் இருந்தது.

எல்லாவற்றையும் மானசீகமாக அவனோடு பேசிக் கொண்டிருப்பாள்... அவனிடம் நேரில் சொல்ல வேண்டுமென்று மனசு பரபரத்துக் கிடந்தது மயிýயை "உண்டாகி' இருந்த பொழுதுதான்.... அப்பொழுதுதான் அவன் முதன்முறையாய் போயிருந்தான். அவன் கிளம்பும்போது மெய்யோ பொய்யோவென்றிருந்தது. வயிற்றில் உதைக்கும் பிஞ்சுக் கால்களின் குளுமை, ஆணா பெண்ணா என்ற செல்லச்சண்டை, பேரு வைப்பதில் போட்டி....

எல்லாவற்றையும் கணவனிடம் கற்பனையிலேயே பகிர்ந்து கொண்டாள். அவன் நேரில் வரும்போது குழந்தைக்கு வயது ரெண்டரை! அது மட்டுமா? தீபாவளிக்கு வரிசை கொண்டு வந்த அண்ணனை மோதிரம் கொண்டுவரவில்லையென்று மானங்கண்ணியாய் பேசி அண்ணாவை கை நனைக்காமலேயே அனுப்பிவிட்ட மாமனாரின் பவிசை புருஷனிடம் சொல்ல எப்படித் துடித்திருப்பாள்?

நல்ல வசதியான வீட்டில் வாக்கப்பட்டு போனாலும் அப்பப்போ வந்து ஏதாவது சாக்குச் சொல்லி ஆயிரம், ரெண்டாயிரமுன்னு புடுங்கற நாத்தனாரைப் பத்தி யாரிடம் சொல்ல? அவளின் எல்லா ஏக்கங்களுக்கும் வடிகாலாய் அந்த அறிவொளி மையம்தான் இருந்தது. தான் கற்றுக்கொண்டதை கணவனிடம் காண்பிக்க வேண்டுமே.... எடுத்தாள் ஒரு காகிதம்.... தப்பும் தவறுமாய் எழுதினாள் ஒரு கடிதம்..... என்ன ஆச்சரியம்!

அந்தக் கடிதமும் அவனுக்குப் போய்ச் சேர்ந்து பதிலும் எழுதிவிட்டானே.... அது மட்டுமல்ல.... அவள் கடிதம் எழுதியதை ரொம்பவும் சிலாகித்து எழுதியிருந்தான்... பொன்னுத்தாய் கூத்தாடாத குறைதான்.... கடிதத்தில் ஆங்காங்கே அவளின் ஆனந்தக்கண்ணீர் பட்டு எழுத்துகளே உருமாறி இருந்தது.

கொழுந்தன் தன் சிம்மாசனமே பறிபோய் விட்டதாய் சோர்ந்து போனான். இதுவரை வந்த கடிதமெல்லாம் அவன் பெயருக்குத்தான் வரும்.... வந்தவுடன் உடனே படிக்கமாட்டான்.... கண்களாலேயே கெஞ்சும் அண்ணியின் பார்வையை அலட்சியப்படுத்தி மனசுக்குள்ளேயே படித்துவிட்டு பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு ஊர்சுத்தப் போய்விடுவான்.... அவனிடமிருந்து கடிதச் செய்தியை கறப்பதற்குள் அவளுக்குப் போதும் போதுமென்றிருக்கும்... அவர்கள் வாழ்க்கைச் சரித்திரத்தில் முதன்முறையாய் அவளுக்கு லெட்டர்!

இப்பொழுதும் அவள் எழுதியிருப்பாள் என்று அவன் நம்பவில்லை. யாரையோ எழுதச் சொல்லி அனுப்பி இருக்கிறாள் என்றுதான் நம்பினான்.... அந்த "யாரோ' அவள் போகும் தெருமுனைக் கூட்டத்தில்தான் இருக்க வேண்டும் என்று நம்பினான்.

அவன் குறுக்கு மூளை உடனடியாக வேலை செய்தது... அங்கே எல்லோருமே பெண்கள்..... அடுப்பு நோண்டிகள்... அரைகுறைகள்.... எல்லோருக்கும் சொல்ýக் கொடுக்கிறேன் பேர்வழி என்று பேர் பண்ணிக் கொண்டிருக்கும் மூர்த்தி மட்டும்தான் கடிதம் எழுதுமளவிற்குப் படிப்பாளி...

அவனுக்கும் ஊரையே தன் தோளில் தாங்குவது போல ஒரு நினைப்பு... அப்பா திடீரென்று செத்ததும் குடும்பத்தைக் காப்பாத்த படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு ஒரு வீடியோ கடைக்கு வேலைக்குப் போனவன்....

பார்க்கும் நேரமெல்லாம் எதையாவது படித்துக் கொண்டே இருப்பான்.... பேச்சில் கலெக்டர் கெட்டான் போங்கள்... அவனைச் சுத்தி அவன் பேச்சையும் கேக்க ஒரு கூட்டம்.... சதா கெக்கே பிக்கே என்று சிரித்துக் கொண்டே இருக்கும்.... அவனோடு பேசும்.... சிரிக்கும்.... சண்டை போடும்.... சிக்குத்தலையும், வியர்வை நாத்தமும், கிழிந்த ஆடைகளுமாய் அந்தப் பரதேசிக் கூட்டத்திற்கு இவர்தான் ஏகபோக மகாராஜா!

அவனிடம் மாட்டிக் கொண்டால் போச்சு..... சிகரெட் பிடிக்காதே.... தண்ணி அடிக்காதே.... ஒரே அட்வைஸ் மழைதான். இவன் அரிச்சந்திரனா இருந்தா எனக்கென்ன? அதுக்காக ஊரு பொம்பளைகளையெல்லாம் சொல்ýக் கொடுக்கிறேன் பேர்வழின்னு தூண்டி விடுறதா?

என்ன செய்யலாம்...? என்ன செய்யலாம்...?

தெருமுக்கில் வரும்போது மறைந்திருந்து ஒரு கல்லை வீசினால் என்ன? ஒருவேளை மாட்டிக் கொண்டால்...? மூர்த்தியின் ஆஜானுபாகுவான உடம்பு ஒரு கணம் மின்னி மறைந்தது. எப்படி எப்படியோ யோசித்தும் ஒரு வழியும் கிடைக்கவில்லை. ஒரே வாரத்தில் அந்த சந்தர்ப்பம் வந்தது. அந்தக் கூட்டத்துக்குள் ஒரு பொண்ணுக்கும் மூர்த்திக்கும் "இது'வாம்... அவனுக்குத் தோதாய் அது வளர்ந்தது... கண், காது ஒட்டவைத்து கோள்மூட்ட ஒரு காரணம் கிடைத்துவிட்டது. "மூர்த்தி ஒரு பொம்பள பொறுக்கி....' எப்படியோ குறுக்குச்சால் ஓட்டி தன் காரியத்தை சாதித்து விட்டான்.

அவளை மையத்திற்குச் செல்லவிடாமல்தான் தடுக்க முடிந்ததேயொழியே, தன் பசிக்கு அவள் வீட்டுக்குள்ளேயே இரை தேடிக் கொண்டது அவனுக்குத் தெரியாது. மகள் மயிலியின் பாடப்புத்தகங்கள் பொன்னுத்தாயின் விரல்களால் புனிதம் பெற்றது.

கணவனுக்கு மற்றொரு கடிதத்தையும் எழுதி அனுப்பிவிட்டாள். இதற்கிடையில் முத்துச்சாமி தெரிந்த இரு நண்பர்கள் மூலமாக இரண்டு கைக்கடிகாரங்களை அனுப்பியிருந்தான். ஒன்று தம்பிக்காம்... இன்னொன்று அவளுக்காம்....

ஆனந்தத்தில் அவள் திக்குமுக்காடிப் போனாள்! "பெரிய பெரிய டீச்சரம்மாக்களும், பெரிய வூட்டுப் பிள்ளைகளும் போடுற அந்த தங்கக்கலர் கெடியாரம் எனக்கே எனக்கா?'

கையில் மேலாக வைத்து அழகு பார்த்தாள். இருண்ட வானில் நிலவைப் போல அவளின் கறுத்த கையில் ஜொலித்தது! குழந்தையைப் போல குதூகýத்தாள். மயிýயை விட்டு பெட்டிக்கடையிலிருந்து கலர் வாங்கிவரச் சொன்னாள். அப்போதுதான் கறந்து வந்திருந்த பாலில் காபியும் போட்டாள்.

வந்திருந்தவர்கள் எதைக் குடிப்பது என்று முழித்தாலும் அவளின் உற்சாகம் அவர்களை புன்னகைக்க வைத்தது. புதிய கடிகாரத்தை இயக்கும் விதம் பற்றி சொல்லிக் கொடுத்ததோடு கையில் கட்டவும் உதவி புரிந்தார்கள். இரவு சாப்பிட்டு விட்டுத்தான் போகவேண்டுமென்று எல்லோரும் வற்புறுத்தியதில் மறுக்கத் தோன்றாமல் இசைந்தார்கள். சாதம் வைக்கும்போதும் குழம்பு ஊற்றும் போதும்கூட கெடிகாரத்தை அவள் கழற்றவேயில்லை.

சதா அவள் உதடுகளில் சிரிப்பு தவழ்ந்து கொண்டே இருந்தது. தலையில் இடித்துக் கொண்டதற்கு கூட சிரித்தாள். கொழுந்தன் குரோதம் வழிய முறைத்தான். ஒரு வழியாக இருவரும் கிளம்பினார்கள். மாமனாருக்கும் மாமியாருக்கும் அவர்களைவிடவே மனசில்லை. அவளுக்கும்தான். வாசல்படியில் நின்று அவள் பிரியாவிடை கொடுத்தாள். அவர்கள் நாலெட்டு நடக்கும்போது சட்டையை மாட்டிக்கொண்டே போன கொழுந்தன் சொன்னான்.

"எட்டு மணிக்குத்தான் பஸ்.... நிதானமா நடக்கலாம்...''

""இப்ப மணி என்ன?'' ஒருவர் கேட்க இன்னொருவர் மணிக்கட்டைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார்.

இருட்டில் தெரியவில்லை போலும்....

கொழுந்தன்காரனின் குரல் வாசல்படியில் நிற்கும் பொன்னுத்தாயை நோக்கி நக்கலும் குத்தலுமாய் வந்தது....

""அத்தாச்சி மணி என்ன?''

பொன்னுத்தாயி நடுங்கிப் போனாள்.

"நானா? என்னையா மணி கேட்கிறான்...?'

பரிகாசமாய் சொல்வது போல் அவன் குரல் கலகலவென்று வந்தது.

""இது என்ன ஜிமிக்கி கொலுசுன்னு நினைப்பா போட்டு அழகு பாக்க.... கெடிகாரமத்தாச்சி.... போட்டா மணி பாக்கத் தெரியணும்....''

பொன்னுத்தாயி அவனை உறுத்து விழித்தாள். அவன் விழிகளில் தெரிந்த நக்கல்.... நையாண்டி....

இம்மாதிரி சந்தர்ப்பங்களில் சட்டென்று குளம் கட்டும் கண்ணீர் ஏனோ வரவில்லை. இறுகிய உதடுகளில் வன்மம். மணிக்கூண்டு கடிகாரம் அவளுள் படமாய் விரிந்தது. மணிக்கூண்டின் ஒவ்வொரு எண்ணும் அவளுடைய கைக்குள் அடைக்கலமாகி கோடுகளாய் விரிந்தது.

மந்திரம் போல் அவள் வாய் அட்சர சுத்தமாய் சொன்னது.

"ஏழு மணி.... முப்பது நிமிடம்.... அதான் ஏழரை மணி....''

சொல்லிவிட்டு சட்டென்று கொழுந்தனைப் பார்த்தாள். அவளின் கம்பீரத் தலைநிமிர்வில் அவன் தலை கவிழ்ந்தான்.

ஐந்தே வினாடிகளில் இழந்த சிரிப்பை அவள் உதடுகள் மீண்டும் பெற்றது.

ஆர். நீலா
Quelle - பெண்ணே நீ