Tuesday, March 01, 2005

அமானுஷ சாட்சியங்கள்..

- சுமதி ரூபன் -

"ஏதோ ஒரு வெளியில் விடுபட்டவளாய் கைகளை அகல விரித்துப் பறந்து கொண்டிருக்கிறேன். இது சுதந்திரத்தின் குறியீடு அல்ல இருக்கைக்கும் இறத்தலுக்குமான போராட்டம். வானுக்கும் மண்ணுக்குமான இடைவெளி. ஆரம்பத்திற்கும் முடிவுக்குமான தத்தளிப்பு. சிந்தனைகள் மாறிமாறி மோதி என்னைக் குழப்பதிற்குள் தள்ளி விட.. வெறுமனே பறந்த வண்ணம் நான்.."

என்ர பெயர் நளாயினி. எல்லாரும் என்னை நளா நளா எண்டு கூப்பிடுவீனம். வயது 18. உயரம் 5’6.5”. கனேடிய உடுப்பு சைஸ் 8க்குள்ள என்ர உடம்பு கச்சிதமாகப் புகுந்து கொள்ளும். நீண்ட தலைமயிரை தூக்கி துணி ரப்பரால இறுக்கித் தொங்க விட்டிருப்பன். புதுசா ஏதாவது அலங்காரம் செய்ய ஆசை இருக்கு கூட கொஞ்சம் தயக்கமும் இருக்கு. கனடா வந்து மூன்று மாதங்கள். முழுநேரப் படிப்பு. பகுதி நேர வேலை எண்டு நேரத்தை ஓடிப் பிடிச்சுக் கொண்டிருக்கிறன். என்னக் காசு கட்டிக் கனடாவிற்கு கூப்பிட்ட அண்ணாக்கும் அக்காவுக்கும் காசைக் கெதியாத் திருப்பிக் குடுத்து விடவேணும் எண்ட வெறி எனக்குள்ள. (அவர்கள் கேட்காவிட்டாலும்)

அக்கான்ர ஒப்பாரி கேட்டு முடிய அண்ணர் எனக்கு போன் அடிச்சு தன்மையா நிதானமா
“என்ன நளா இது.. ஏன் இப்பிடியெல்லாம் செய்யிறா.. அக்கா உனக்காக எவ்வளவு எல்லாம் செய்திருக்கிறா” நான் குறுக்கிட்டன்
“அப்ப நான் என்ன செய்ய? உன்னோட வந்து இருக்கட்டே”.
“என்னடி விளக்கமில்லாமல் கதைக்கிறாய் என்ர வீட்டில எங்க இடமிருக்கு நானே என்ன செய்யிறதெண்டு தெரியாமல்..” நான் திரும்பவும் குறுக்கிட்டன்.
“அப்ப என்ன அண்ணா செய்யிறது? வேலை செய்யிறன் தானே தனியப் போய் எங்கையாவது இருக்கட்..”
“என்னடி எங்கள எல்லாம் அவமானப்படுத்தவெண்டே அங்கையிருந்து இஞ்ச வெளிக்கிட்டு வந்திருக்கிறா நீ வரமுதல் எவ்வளவு நிம்மதியா, சந்தோஷமா நானும் அக்காவும் இருந்தனாங்கள் தெரியுமே? இப்ப நீ வந்தாப் பிறகு எப்ப பாத்தாலும் பிரச்சனை. எங்கள நிம்மதியா இருக்க விட மாட்டியே” குரல் உயந்தது.
“நானென்னண்ண பொய்யே சொல்லுறன்”
குரலின் கடினம் கரைய கனிவு கலந்து “இல்லை நளா.. நான் அப்பிடிச் சொல்லேலை ஆம்பிளைகள் கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் இருப்பினம்..இஞ்சத்தையான் ஆக்கள மாதிரி உடுப்புகளைக் கண்டபடி போடாத, கொஞ்ச நாளைக்குப் பல்லக் கடிச்சுக் கொண்டு கண்டும் காணத மாதிரி இரு அம்மாவும், அப்பாவும் கெதியா வந்திடுவீனம் பிறகு எல்லாம் ஓ.கேயாயிடும். அதுக்கிடேலை சின்ன விஷயத்தைப் பெரிசாக்கி எங்கட குடும்ப மானத்தைக் கப்பலேத்திப் போடாத”
“சரி அண்ண அப்பிடியெண்டா ஒண்டு செய்வமே?”
“சொல்லம்மா..”
“இல்லையண்ண உனக்கும் பதின்மூண்டு வயசில பொம்பிளப்பிள்ளை பெஞ்சாதி எல்லாம் இருக்கீனம் தானே அவேலில ஒராள கொஞ்ச நாளைக்கு அத்தானோட கொண்டு வந்து விடன் நான் நிம்மதியா இருப்பன்”

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”


எனக்கான சிறை என்னால் வடிவமைக்கப் பட்டது. பல வகை ஆணிகள் பூட்டுக்களால் அறைக்கதவு இறுகிக் கொண்டது. வெளியில் சாப்பிட்டு அறைக்குள் ரீ குடித்து எனக்கான தொலைபேசி எனக்கான தொலைக்காட்சி என்று என்னை நானே அடைத்துக் கொண்டேன்.
அக்கா பிள்ளைகள் கதவைத் தட்டும் “சித்தி சித்தி” எண்டு குரல் கேக்கும். கொடூரமாக எனைக் கொச்சைப் படுத்திச் செல்லும் அக்காளின் குரல். “சரக் சரக்” கெண்ட சப்பாத்துச் சத்தத்துடன் ஆண்மை வீரியத்தைத் தூக்கி நிற்கும் “பெர்பியூம்” வாசனையுடன் நிதானமாய் வேலைக்குச் சென்று திரும்பும் அத்தான் உருவமாய். தன் கணவனின் ஆண்மையில் திருப்தியும் பெருமையும் காணும் அக்காள்.

சம்பளக் காசு வந்தவுடன வாடைக்கும் சாப்பாட்டுக்கும் எண்டு கொஞ்சத்தை அக்காட்டக் குடுத்தாள் நளா
“உன்னைக் கொண்டு உழைப்பிச்சுக் காசு சேக்கத்தானே இஞ்ச கூப்பிட்டனாங்கள் இஞ்ச எங்க சாப்பிடுறா எண்டு சாப்பாட்டுக் காசு தாறாய். உங்களுக்கெல்லாம் கொழுப்படி”
“எனக்குச் சும்மா ஒரு வீட்டில இருக்க விருப்பமில்லை”
“ஓ உங்களுக்கு கனடா வந்தவுடனயே பிளான் பிடிபட்டிட்டுது ஆ.. காலமடி”

வாடைக்காசை மேசையில வைச்சிட்டு நளா போனாள். அது தொடப்படாமல் மேசையில் பல நாட்களாகக் கிடந்தது.

விரிந்து கிடந்த கனேடியக் கரிய வானத்தில் இலைகளைத் தொலைத்த குச்சி மரங்கள் பல் நிற பல்புகளாய்ப் பூத்து வழி காட்ட அத்தான் அவசரமில்லாது காரை ஓட்டினார். நளாவின் கைகளைத் தனக்குள் புதைத்து “அம்மா அப்பா எப்பியெடி இருக்கீனம் அவையளும் வந்திட்டாப் பிரச்சனை தீந்திட்டும்” அக்கா வார்த்தைகளால் குறுக்கிட கண்களை வெளியே அலையவிட்ட நளாவின் கனவில் பரந்து கிடந்தது எதிர்காலம். குளிரும் உடலின் சிறிய உதறல் மகிழ்ச்சி தர அக்கா பிள்ளைகளை இழுத்து மடியில் போட்டாள்.
“நல்லாப் படிக்க வசதியிருக்காம் முடிஞ்சா கொஞ்ச நேரத்துக்கு ஏதாவது வேலையும் செய்தியெண்டா உன்ர செலவுக்கு உதவும் நாங்களும் கெதியா வந்திடுவம்” அம்மாவின் குரல் அடிக்கடி ஒலித்தது.
அண்ணா தூர இருக்கிறார். நளாவின் அனைத்து வேலைகளையும் சிரித்த முகத்தோடு தன் பக்கம் எடுத்துக் கொண்டார் அத்தான். காரில் முன்னால் இருத்தி ‘இமிகிரேஷன்’ பள்ளிக்கூட ‘அட்மிஷன்’ இத்யாதி இத்யாதி. குளிர் காற்றடிக்க காரின் யன்னல் சாத்திய முழங்கை நளாவின் மார்போடு தேய்த்துச் சென்றது. நளா உடலை ஒடுக்கிக் கொண்டாள்.
இரவு கட்டிலில் புரண்டு “ச்சீ அத்தான் அப்பிடிப் பட்டவரில்லை” சமாதானமாய் நித்திரை கொண்டாள். அக்கா வேலையால் வருமுன்னே நளாவும் அத்தானும் சமையல் முடித்து வைத்தார்கள். கைகள் இடறுப்படும் போது “சொறி” என்றவாறு பார்வையைத் தாழ்த்திக் கொண்ட போது நளாவிற்கு நிம்மதியாக இருந்தது. குளிக்கும் போதும் உடை மாற்றும் போதும் கதவோரத்தில் நிழல் ஆடியது. வேலையால் அடிக்கடி வெள்ளண வீட்டுக்கு வரத்தொடங்கிய அத்தானின் பார்வைகள் நிறம் மாறிப் போயிருந்தன. நளா வேலை எடுத்துக் கொண்டாள். பாடசாலை வேலை என்று அக்காவிற்கு முன்னால் சென்று பின்னால் வீட்டிற்கு வரப் பழகிக் கொண்டாள். எல்லாமும் சமாதானமாயிற்று.

பஸ்சிற்கு நிண்டவளை கடந்து சென்ற கார் சிறிது தூரம் போய்ச் சுற்றி வந்து அழைத்தது. மறுக்கும் துணிவின்றி மீண்டும் சமாதானமாகி ஏறிக்கொண்டாள். படிப்பு வேலை பற்றி யதார்த்தமா மிக யதார்த்தமாக வார்த்தைகளை வீசிய படியே பார்வையை தூர ஊடுவ விட்ட அத்தான் மேல் நளாவிற்கு நம்பிக்கையும் மதிப்பும் ‘ஸ்யரிங்கை” மாற்றும் போது நளாவின் துடையை விரல்கள் உரஞ்சிச் செல்லும் வரை இருந்தது. கால்களை இழுத்துக் கொண்டாள். பேச்சுக்கள் தடைப்பட்டது. மௌனம் ஊடுவியது.
வேலைத் தளத்தில் இறக்கி விடும் போது பார்வையில் நிஷ்டூரம்.

இருமி இருமிக் களைத்துப் போன அக்காள் மகளை தன்னோடு அணைத்துக் கதை சொல்லிப் படுக்க வைக்க முனைந்து கொண்டிருந்த நளாவின் அறைக்குள் திடீரென புகுந்த அத்தான், மகளின் தலை தடவி “எப்பிடி இருக்கடா” என்றவாறு நளாவின் ஒற்றை மார்பை இறுக்கிப் பிடித்துப் பிசைந்து விலகிச் செல்ல திடுக்கிட்டு உடல் உதற விறைத்துப் போனாள்.

“என்னடி சொல்லுறாய்? என்னடி சொல்லுறாய்? பிள்ளை மாதிரி நினைச்சு எல்லாம் ஓடியோடிச் செய்யிற எங்கட வாழ்க்கையைக் கெடுக்க வந்த பாவியடி நீ. நீ இப்பிடிச் சொன்னனீ எண்டு தெரிஞ்சா மனுசன் துடிதுடிச்சுப் போயிடும். “காட்அட்டாக்” வந்து செத்துப் போயிடும்”

பனி படர்ந்த வெளியில் பஸ்சிற்காகக் காத்திருந்த போது வந்து நின்ற காரைத் துச்சம் செய்து விறைத்து நின்றாள் நளா. கார் மறைந்து போனது.

ஒருநாள் -
பல்கனி கம்பியில் சாய்ந்த படியே சாம்பல் பூத்த இரவில் “செல்” போனில் சிரித்த படி நின்றவனை யாரும் பார்க்காத கணம் ஒன்றில் வேகம் கொண்டு தள்ளி விட்டு வீறிட்டுக் கதறி சாய்ந்து விழும் அவன் உருவம் உடைந்து சிதைய மட்டும் பார்த்துக் கொண்டு நின்றாள் நளா

இன்னுமொரு நாள் -

“பாஸ்ரா” அவியப் போடத் துள்ளிக் குதித்துக் கொதிக்கும் தண்ணீரைப் பாத்திரத்துடன் தூக்கி சுவரோரம் சாய்ந்த படி அவளையே வெறித்து நிற்கும் அவன் முகம் நோக்கி வீசி ஊத்தினாள் நளா

இன்னும் இன்னும் ஒருநாள் -

போத்திலை உடைச்சுத் துகளாக்கி சாப்பாட்டுக்குள் கலந்து கொடுத்தாள் நளா

நாட்கள் நகர்ந்தது இன்னும் இன்னும் பல நாட்கள் கனவுகளில் அவள் தொடர்ந்தாள்..

தொலைக்காட்சியில் வேண்டாததற்கெல்லாம் வெற்றுடம்போடு வந்து போனார்கள் அழகிகள்.
அண்ணியின் முகம் தூக்கிய முகச்சுளிப்பில் மொத்தத்தையும் தெரிந்து கொண்டாள். அண்ணா பார்வையைத் தவிர்த்துக் கொண்டான்.
அம்மா அப்பா வரும் நாளை கணக்கிட்டுக் கணக்கிட்டு நாள்காட்டியில் கட்டம் போட்டாள்.

சோதனைக்காகப் படித்தவற்றை இரைமீட்டு இரைமீட்டு மனதில் நிம்மதியுடன் நித்திரையாகிப் போனவள் கனவில் இப்போதெல்லாம் வெறுமை.

இருப்பிற்கும் இறத்தலுக்குமான இடைவெளியின் ஊஞ்சலாடும் இரவுகளின், எண்ணிக்கையைத் தள்ளி விடியும் பொழுது பெருமூச்சாகக் கழியும்.

ஆழ்ந்த நித்திரையில் அவள். மூச்சு சீராக வடிந்து கொண்டிருந்தது. புற அசைவுகள் இம்சிக்காத சமவெளியில் நீச்சலாய்.. ஒலிகள் செவிப்பறையைத் தாக்காத நிசப்தம். தொடைகள் குளிர புழுப்போல் எதுவோ ஊர்ந்து ஊர்ந்து.. வீரிய மூச்சு காதோரம் கூடேற்ற.. பலம் கொண்டு இரு கைகளாலும் தள்ளி உடையை இழுத்து விட்டு.. “அக்கா அக்கா” என்று குரலெடுத்துக் கத்தியவளின் தொண்டை கட்டிப் போயிருந்தது. கதவுகள் அகலத்திறந்து மூடியது.
நடுச்சாமம் சுடு நீரில் அழுதழுது முழுகினாள். நித்திரையற்று இரவைக் கழித்து வெளிச்சம் காணுமுன் உடுத்து கதவை இறுக்கப் பூட்டி வெளியேறினாள். சோதினைப் பேப்பரில் கேள்விகள் நித்திரையற்ற அவள் கண்களுக்குப் புழுவைப்போல் நெழிந்தன. தன் உடலை அருவருப்போடு பார்த்துக் கொண்டாள். கண்களுக்குத் தண்ணீர் தெளித்து முடிந்தவரை பதிலளித்து வெளியே வந்து குளிர்ந்து போன சீமெந்து இருக்கையில் இருந்து சத்தமில்லாது வாய் விட்டழுதாள். இது என்ன விதி? அவளுக்குப் புரியவில்லை.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டும் அறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி”


உறைந்த குளிருக்குள் வாயால் புகை போக்கி போல் மூச்சு விட்டபடி வேகமாகக் கடந்து செல்லும் ஆண்களின் உடல்களில் “அந்த” பகுதியில் அவள் கண்கள் நிலைத்து நின்றது. எல்லா ஆண்களுக்குமே காம வேட்டைக்கு அலைவது போல் துருத்திக்கொண்டு நின்றது “அந்த” இடம்.
வீட்டிற்கு வந்த போது இருட்டிவிட்டிருந்தது. அக்காள் கண்டும் காணாது சமையலில் இருந்தாள். பிள்ளைகள் ரீவியில் மூழ்கிப் போய் இருந்தார்கள். எல்லோரும் தமக்கான வாழ்கையில் லயித்திருந்தார்கள். பூட்டைத் திறந்து அறைக்குள் வந்தாள். உறவுகள் இல்லாத உலகொன்றில் தனித்து விடப்பட்டவள் போல் தவிப்பு. கண்கள் சொருகிச் சொருகி வந்தன. கட்டிலில் சரிந்து கண்களை மூடினாள். அத்தானின் ஆண் வீரியம் கலந்த “பெஃர்பியூம்: வாசனை மூக்கைத் தாக்கியது. திடுக்கிட்டெழுந்தாள். அறையை ஒருமுறை சுற்றிப் பார்த்தான். பொருட்கள் அசையாது அப்படியே இருந்தன. எழும்பி போய் பூட்டைப் பார்த்தாள். இறுக்கமாக இருந்தது. நேற்று அவள் தோய்த்து “ஹீற்ரறில்” காயப்போட்ட அவள் “அண்டவெயார்” “பிரா” இரண்டையும் காணவில்லை. திடுக்கிட்டவளாய் உடுப்பு வைக்கும் லாச்சியைத் திறந்து பார்த்தாள். உள்ளே “அதுகள்” அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தன. நிம்மதிப்பெருமூச்சோடு விரலால் தனது உடைகளை அழைந்தவள் கையோடு ஒட்டிக்கொண்டு வந்தது ஆண்களின் “அண்டவெயார்” ஒன்று
“இல்லை நளா நான் சொல்லுறதைக் கேள்”
“ஐயோ கடவுளே இவளுக்கேன் புத்தி இப்பிடிப் போகுது”
அண்ணாவுக்கு நன்றிக் கடன். தன்னைக் கனடாவுக்கு கூப்பிட்டு விட்ட அத்தானில நன்றிக் கடன். தன்னிலும் பத்து வயசு மூத்த அத்தானை நிமிந்து பாத்துக் கேள்வி கேட்கப் பயம். அக்கா பிள்ளைகள் பற்றிய அங்கலாய்ப்பு. “பொறுத்துக் கொள்ளடி அம்மா,அப்பா வரமட்டும்”

“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்”


அனைத்தையும் விலத்தி விறைத்துப் பொறுத்துக் கொண்டாள்.
அம்மா, அப்பாவும் வந்து விட்டார்கள் இனித் தனியாக ஒரு இடம் பார்த்து மூன்று பேருமாக.. நிம்மதிப் பெருமூச்சு.
வீடு சந்தோஷக் களை கட்டியது. சொந்தங்கள் வந்து போயின. அக்கா அவள் முகம் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினாள். அண்ணா படிப்பைப் பற்றி விசாரித்தான். தன்னையும் கலகலப்பாக்க முனைந்து அத்தான் வேலையால் வீட்டிற்கு வரும் போது மட்டும் அறைக்குள் அடைந்து.
வீடு முட்டச் சனம். சமையல், சாப்பாடு ஊர்க்கதைகள் எண்டு நீண்ட ஒரு இரவில் அனைத்தையும் மறந்து போயிருந்த நளாவை “பெடியன் அழுறானடி ஒருக்கா என்னெண்டு பார்” அம்மா சொல்ல பாதியில் விட்ட ஊர்க்கதையைக் கேட்கத் துடிக்கும் அவசரத்தில் “வாறனப்பு” என்ற படியே ஓடி அறைக்கதவைத் திறக்க அரை குறை நித்திரையில் அழும் மகனைத் தட்டி விட்ட படியே தனது சாரத்தைத் தளர்த்தி மறு கையால் புடைத்து நிற்கும் தனது குறியை தடவிய அத்தானின் பசளை படர்ந்த பார்வையைத் தழுவிய நளா போன வேகத்தில் அறையை விட்டோடி தனது அறைக்குள் புகுந்து கொண்டு கதவைப் பூட்டிக் கொண்டாள்.
அம்மா, அப்பாவுடன் தனியா இடம் பார்த்து சென்ற பின்னரே மீண்டும் நளா மூச்சு விடத் தொடங்கினாள்.
“என்ன உனக்கும் அக்காக்கும் ஏதும் பிரச்சனையே. ரெண்டு பேரும் முகத்தைத் தூக்கிக் கொண்டு அலையிறியள்” அம்மா கேட்டா
இப்ப நிம்மதியா இருக்கிறன். அத்தானில அம்மாக்கு நிறம்பவே மதிப்பு இருக்கு அதைக் கெடுப்பானேன்.
“ச்சீ ஒண்டுமில்லையம்மா”
படுக்கையில் புரண்ட போது ஒருநாள் அம்மா அப்பாவிடம் சொன்னது நளாவின் காதில் விழுந்தது. “அந்தாளைப் போல ஒரு நல்ல பெடியன் எங்கட நளாக்கும் கிடைச்சிட்டிது எண்டா நிம்மதியா இருக்கும்”
கனேடியச் சட்டம் பெண்களுக்கு எத்தனையோ சலுகைகளைச் செய்து வைத்திருக்கின்றது. பாலியல் துன்புறுத்தல் என்பது இங்கே மிகப் பாரதூரமாக குற்றமாக கணிக்கப்பட்டு குற்றவாளியாக காணப்படுபவருக்கு பல ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது.
இங்கே எனது விட்டுக்குடுப்பு எதற்குள் சேர்த்தி. அக்காள் எண்ட பாசமா? குடும்பமானமா? கடைசிக்காலத்தில் அப்பா, அம்மாவை நிம்மதியாக இருக்க விட வேண்டும் என்ற எண்ணமா?
“அக்காவும் பிள்ளைகளும் இப்பதான் வந்திட்டு போகீனம் கொஞ்சம் வெள்ளண வந்திருந்தாச் சந்திச்சிருப்பாய்”
ஒரு சின்ன யோசினைக்குப் பிறகு “அத்தான் வரேலையோ?”
“பின்ன அந்தாள் வராமல்..” பெருமையான சிரிப்பு முகத்தில் வடிய “எனக்கும் அப்பாக்கும் சுவெட்டர் எல்லே கொண்டு வந்தவர் இந்தா உனக்கு ஒரு சொக்லேட் பெட்டி தந்தவர்”
கறுப்பு சொக்லேட்டின் உள்ளிருந்து வெண்நிறத்தில் வழியும் பாணியின் படம் போட்ட பெட்டி அவளிற்கு அருவருப்பூட்ட அம்மாவிற்குத் தெரியாமல் குப்பைத் தொட்டிக்குள் போட்டு விட்டு தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்.
அவளின் கனவுகள் இப்போது குரூரத்தைத் தவிர வேறொண்டையும் கொண்டிருப்பதில்லை.

Quelle - கறுப்பி

Saturday, February 26, 2005

இழப்பு

- சல்மா -

மழையினால் நசநசத்துக் கிடக்கிறது வீடு. மொஸைக் தரையில் கால் வைக்க முடியாதபடி நெறுநெறுக்கிற மணல், பற்களைக் கூச வைப்பதாயிருக்கிறது. கூட்டத்தின் அடர்த்தியைச் சிரமத்துடன் விலக்கியபடி வெளியில் வந்து தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்கிறேன். இழப்பின் துயரத்தாலும் மனித நெரிசலின் இறுக்கத்தினாலும் புழுங்கிக்கிடந்த உடலும் மனமும் தெருக்காற்றின் குளிர்ச்சியில் சிலிர்த்துக்கொள்கின்றன என்றாலும் ஓர் அடிகூட எடுத்துவைக்க இயலாதபடிக்குக் கனத்து நடுக்கமுறுகிறது பாதம். ஒரு நிமிடமேனும் அங்கேயே நின்று ஆசுவாசம்கொள்ள விரும்பினாலும் அதற்குச் சாத்தியமில்லாதபடி அவ்விடத்தினூடாக நடமாடித் திரியும் கூட்டத்தினருடைய இருப்பு சங்கட முண்டாக்குவதாயிருக்க, வலுக்கட்டாயமாக வீட்டை நோக்கிக் கால்களை எடுத்துவைத்து நடக்கிறேன். பத்தடி தூரத்தில் இருக்கும் வீட்டை அடையக் கடும் பிரயத்தனம் கொள்ள வேண்டியிருக்கிறது.

வீடு தன்னை நெருங்கவிடாதபடிக்குத் தள்ளித் தள்ளிப் போவதான கற்பனை மனத்தில் ஓட இன்னும் தீவிரமாக எட்டி நடந்து நெருங்கிவிட முயற்சி செய்கிறேன். நீண்ட முயற்சிக்குப் பிறகே வீட்டை அடைவது சாத்தியமாகிறது. இந்த இரவின் முழுமையான இருளையும் தன்மீது போர்த்திச் சாந்தமாக அமர்ந்திருக்கிறது வீடு. தளர்ந்த நடையோடு கதவின் மீது சாய்ந்து ஒரு நொடி தாமதித்தவள், புடவையை விலக்கி இடுப்பின் பக்கவாட்டில் சொருகியிருந்த சாவியை உருவி எடுத்துப் பூட்டைத் திறக்க முயல்கிறேன். பூட்டின் துளை தட்டுப்படாது தடுமாறுகிறேன். "ப்ச்" என அலுத்துக் கொண்டபடி மறுபடியும் அதனைத் திறக்க முயற்சிக்கிறேன். சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகே பூட்டைத் திறக்க முடிகிறது என்றாலும், கனமான பித்தளைத் தாழ்ப்பாளை இழுத்துத் திறப்பது பெரும்பாடாக இருக்கிறது. தினமும் திறக்கும் தாழ்ப்பாளைத் திறக்க இன்று முழுபலத்தையும் திரட்ட வேண்டியிருக்கிறது.

கதவு திறந்து உள்ளே நுழைகிற என்னை எதிர்கொள்கிறது இன்னும் அதிக அடர்த்தியான இருள். "அக்கா நாளைக் காலையில வந்திடுவேன்" - அவனது குரல் இன்னும் செவியிலிருந்து நீங்காமலிருக்க, சுவற்றின் மீது சரிந்து நழுவித் தரையில் அமர்ந்துகொள்கிறேன். சில்லிட்டுக் கிடக்கும் தரையின் குளிர்ச்சி தாங்கமுடியாமல் நடுக்கமுறுகிறது பலவீனமான உடல். சற்று நேர ஓய்விற்குப் பிறகே அவ்விடத்திலிருந்து எழுந்துகொள்ள முடியும் எனத் தோன்றுகிறது. சற்று நேர ஆசுவாசத்திற்குப் பிறகும்கூட அவ்விடத்திலிருந்து எழுந்துகொள்ளக் கடும் பிரயத்தனம் தேவை யாகவேயிருக்கிறது. கைகளிரண்டையும் தரையில் ஊன்றிச் சிரமத்துடன் எழுந்து, அடுத்து என்ன செய்வது என்கிற தடுமாற்றம் உண்டாக, இலக்கில்லாதபடி இருளில் ஊடுருவி ஹாலின் குறுக்காக நடந்து சென்று அங்கிருக்கும் ஜன்னலை அடைகிறேன். கண்களுக்குப் பழகிவிட்ட இருள் பெரிதாகத் துன்புறுத்தாதது நிம்மதியைத் தருகிறது. திறந்திருக்கிற ஜன்னல் கதவிýருந்து உள் நுழைகிற காற்றில் படபடக்கும் திரையைத் தொட்டு நிறுத்தி ஜன்னலின் ஓர் ஓரமாக அதனை நகர்த்தி ஒதுக்குகிறேன். விரல்கள் பற்றும் ஜன்னல் கம்பியின் குளிர்ச்சியை உணர்ந்தபடி தெருவையும் அதனைத் தாண்டி எதிர்த் திசையில் இருக்கும் கபர்ஸ்தானையும் நோக்கிப் பார்வையைச் செலுத்துகிறேன்.

அவன் புதைக்கப்பட்ட இடம் எதுவாக இருக்கும் என்பதைப் பதற்றத்துடன் அவசரமாகத் தேடுகிற என் கண்களுக்கு மல்லிகைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புதைகுழி பளிச்செனப் பார்வையில் தட்டுப்படுகிறது. தெருவை ஒட்டிய சுற்றுச்சுவருக்கு அருகில் என் வீட்டு ஜன்னலுக்கு எதிராகவே அவன் புதைக்கப்பட்டிருப்பது தாங்க முடியாத அதிர்ச்சியாய் உருவெடுக்க, இனி எக்காலத்திலும் என்னால் இத்துக்கத்திýருந்து விடுபடவே முடியாதோ என்கிற பீதி பெரும் துயரமாய் எழுகிறது.

"நீ எத்தனை அடி உயரம்?" அவனது கட்டைக் குட்டையான உருவத்தைப் பார்த்துக் கேட்ட இவளிடம், "அஞ்சு அடிக்கா" கூச்சத்துடன் சொல்லித் தலைகுனிந்து கொண்ட அவனது முகம் நினைவில் மேலெழுகிறது. மழையினால் சொதசொதத்துக் கிடக்கும் ஆறடிக் குழிக்குள் அவ்வுடல் இன்று புதையுண்டு கிடக்கிறது. நேற்றிரவு வீட்டில் தனது படுக்கையில் சகல செüகர்யங்களுடன் படுத்து உறங்கியவனை இன்று பாம்புகள் ஊர்ந்து திரிகிற பாதுகாப்பற்ற இருளில் மூழ்கியிருக்கிற குழிக்குள் கிடத்தியிருப்பதன் யதார்த்தத்தை ஏற்கத் தயங்கும் மனத்தைச் சரிசெய்ய மிகுந்த பிரயாசை வேண்டியிருக்கிறது.

மரணம் எங்கே ஒளிந்துகொண்டிருந்து எங்கிருந்து வருகிறது? ஒரே பாய்ச்சலில் கொத்தித் தூக்கிக்கொண்டு எங்கே போகிறது? பதிலில்லாத கேள்விகளால் தலை வெடித்துவிடும் போலிருக்கிறது. அக்கேள்விகளிலிருந்து விடுபடத் தலையை இடவலமாக ஆட்டித் தன் நிலைக்கு வருகிறவளின் பார்வை, அவனது கபர்ஸ்தானிலிருந்து மீண்டு உள்புறமாகச் சென்று அலைந்து மெர்க்குரி விளக்கின் ஒளி வரிசையாய் அணி வகுத்து நிற்கும் தென்னை மரங்களின் மீது விழுகிறது. அதன் கிளைகள் தீட்டப்பட்ட ஓவியங்களைப் போலத் துளிக்கூட அசையாமல் மெüனித்திருக்கின்றன. ஏதோ ஒரு மரத்திலிருந்து ஒலிக்கும் பறவையொன்றின் ஒலி காதில் விழுகிறது. வழக்கமாக அவ்வொலி திகிலை உண்டுபண்ணுவதாயிருக்கும் என்றாலும் இன்று வெற்று ஒலியாய் மனத்தில் நிரம்புகிறது. வீடு இன்னும் இருளில் மூழ்கியிருக்கிறது. சுவிட்சைத் தட்டி விளக்கை எரியவிட வேண்டும் என்கிற எண்ணமே தோன்றாததால் தொடர்ந்து அங்கேயே நின்றுகொண்டு எதெதையோ யோசிக்க முற்படுகிறேன்.

"செத்துப்போறதுன்னா என்ன?" பகலில் குழந்தை என்னிடம் கேட்ட கேள்வி நினைவுக்கு வருகிறது. எனக்கு எத்தனை வயதிருக்கும்போது இதே கேள்வியை அம்மாவிடம் கேட்டேனெனக் கணிக்க முயல்கிறேன். ஐந்து அல்லது ஆறு? குழப்பமாக இருக்கிறது.

தாழ்வாரத்தில் கிடந்த கட்டிலில் அம்மாவின் மடிமீது தலைவைத்துப் படுத்துக்கொண்டு ஓட்டுச் சரிவிலிருந்து வழிந்து முற்றத்தில் கொட்டிக்கொண்டிருக்கிற மழை நீரிலிருந்து எழும் முட்டைகளைச் சத்தமாக எண்ணத் தொடங்குகிறேன். பதினாறோடு தடைப்படுகிற எண்ணிக்கை அம்மாவுக்குச் சிரிப்புண்டாக்குவதாயிருக்கிறது.

"என்னாச்சு அவ்வளவுதானா?" என்கிறாள். வெட்கம் பிடுங்கித் தின்ன அம்மாவின் மடியில் இறுக்கமாய்ப் புதைகிறது முகம்.

"பக்கத்து வீட்டுப் பானுவுக்கு அம்பது வரைக்கும் எண்ணத் தெரியும். நான் உனக்குச் சொல்ýத் தரட்டுமா?"

வேகமாக முகம் உயர்த்தித் தலையாட்டி அதனை ஆமோதித்தபடி "அவளுக்கு அவங்க ராதி சொல்ýத் தந்தாங்க. ஆனா எனக்கு ராதி ஏன் இல்லை?" ஆர்வமாக கேட்கிறேன்.

சற்று நேர அமைதிக்குப் பிறகு அம்மா சொல்கிறாள். "அவங்க நீ பொறக்கு முன்னே மெüத்தாப் போய்ட்டாங்க." முதன் முதலாகக் கேள்விப்படுகிற வார்த்தையின் அர்த்தம் புரியாத குழப்பத்துடன், "அப்டின்னா?" என்று விழித்தவளிடம், "அப்டின்னா செத்துப் போறது . . . அதாவது இறந்து போறது . . . அல்லாட்டப் போறது . . ." இவளுக்குப் புரியும் விதமாகச் சொல்லவியலாத வருத்தம் தொனிக்கும் அம்மாவின் குரலில் இனி எதுவும் கேட்கக்கூடாது என்கிற கண்டிப்பும் கலந்தே இருப்பது புரிய, மெüனமாக அது குறித்த யோசனைக்குள் ஆழ்ந்துபோகிறேன்.

அன்றில்லாமல் எல்லாக் காலத்திற்குமாகத் தன்னுள்ளாகப் பொதிந்துள்ள புதிரினைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதிலேயே அதன் வசீகரம் தேங்கியிருப்பதாக நினைத்தபடி நெடிய பெருமூச் சொன்றினை விடுவிக்கிறேன்.

"அம்மா" எனக் கத்தியபடி ஓடி வந்து இறுக்கிக் கட்டிக்கொள்ளும் யாஸர் என்னைத் தன் உணர்வுக்குக்கொண்டு வருகிறான். வீடே இருளில் மூழ்கியிருப் பதைக் கண்டு பதறியவள் அவனை இறுக அணைத்துப் பிடித்தபடி சுவிட்ச் இருக்கும் இடம் நோக்கி நகர்கிறேன். பயத்தில் உறைந்திருந்த குழந்தையின் முகம் வெளிச்சத்தில் இறுக்கம் தளர்ந்து பிரகாசம்கொள்கிறது என்றாலும் தாயின் முகத்தில் வெளிப்படும் கலக்கம் புரியாத தடுமாற்றத்துடன் ஓடிப்போய் சோபாவில் அமர்ந்து என் முகத்தையே உற்றுக் கவனிக்கிறான்.

அவனது பயத்தைப் போக்கும் விதத்தில் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்து இதமாகச் சிரிக்கிறேன். அச்சிரிப்பு துளிக்கூட என்னோடு ஓட்டவில்லை என்பது அவனுக்குத் தெளிவாகவே புரிகிறது என்பதை அறிந்தவளாக அவனருகே சென்று அமர்ந்து அவனை இறுக அணைத்துக்கொள்கிறேன். என் மடியின் மீது தனது பாதுகாப்பை உறுதி செய்தவனாகத் தூங்க ஆரம்பிக்கிற அவனது தலைமுடியை வருடிக்கொடுத்தவாறே அண்ணாந்து சுவர்க் கடிகாரத்தில் மணி பார்க்கிறேன். நேரம் பத்தைத் தொட்டிருக்கிறது. "பாவம் குழந்தை" என முணுமுணுத்தபடியே அவனைக் கொண்டுபோய்ப் படுக்கையில் விடுகிறேன். ஜரினாவின் வீட்டில் சாப்பிட்டிருப்பான் என்கிற நிம்மதியோடு அவனுக்கு அருகிலேயே படுத்துக்கொள்கிறேன்.

தூங்க முடியும் என்கிற நம்பிக்கை சுத்தமாக இல்லை என்றாலும் சும்மாவேனும் படுத்துக்கொண்டிருக்க விருப்பமுண்டாகிறது. மரணத்தை நெருக்கமாகப் பார்த்த பிறகு வாழ்க்கை எப்படி இத்தனை அர்த்தமற்றதாகவும் அபத்தமானதாகவும் மாறிவிடுகிறது என்கிற கேள்வி பீறிட்டு எழ, மரண வீட்டிýருந்து வந்த பிறகு, கை கால் முகம் கூடக் கழுவாதது நினைவுக்கு வருகிறது. இதைக் கூடச் செய்யாமல் அப்படி என்ன அலுப்பு எனத் தனக்குள்ளாக முனகிக் கொண்டவளுக்கு, அதற்குக் காரணம் அலுப்பு மட்டும்தானா என்கிற யோசனை எழுகிறது. உடுத்தியிருக்கும் புடவையெங்கும் யார் யாருடைய கண்ணீர்த் துளிகளோ தேங்கிக் கனப்பதாகத் தோன்றினாலும் கொஞ்சம்கூட அசூயை கொள்ளாமல் உடையைக்களையும் எண்ணத்தைப் புறக்கணிக்கிறேன். படுக்கையின் மீதான எனது இருப்பு துளியும் அசைவற்றிருக்கிறது.

இப்படியே தூங்கிவிட முடிந்தால் எத்தனை நன்றாயிருக்கும் என நினைத்தவளுக்கு உடனேயே அதிலுள்ள சாத்தியமின்மையையும் யோசிக்க முடிகிறது. இந்தத் துக்கத்திலிருந்து விடுபட எத்தனிப்பதில் உள்ள சுயநலத்தை எண்ணிக் கூச்சம் உண்டாகிறது.

தூங்கிக் கடக்கும் அளவுக்கு அற்பமானதா இந்த இழப்பு எனக் கேட்டுக் கொள்கிறவளுக்கு, ரொம்பவும்தான் அலட்டிக்கொள்கிறோமோ என அவமானமாக இருக்கிறது. எதையுமே நினைக்காமல் இருக்க முயற்சிக்கிறேன். அது மட்டும் சாத்தியமாகக் கூடியதா என்ன என நினைத்தபடி படுக்கையில் புரண்டு படுத்தவாறு கடிகாரத்தில் மணி பார்க்க முயல்கிறேன். இருளில் ஒன்றும் தெரியவில்லை என்றாலும், பரவாயில்லை, தெரிந்து என்ன செய்யப் போகிறேன் எனச் சமாதானம் செய்துகொள்கிறேன்.

வயிறு பசிப்பதான உணர்வு மேலிடக் காலையிலிருந்தே ஒன்றுமே சாப்பிடவில்லை என்பது நினைவுக்கு வருகிறது. சாப்பாடு மட்டுமா, தண்ணீர்கூடக் குடிக்கவில்லை என நினைத்தவளுக்கு வியப்பு உண்டாகிறது. என்றைக்காவது ஒரு நாள் இதுபோல முழுப் பட்டினி இருந்திருக்கிறோமா என யோசிக்கிறேன். அப்படி ஒரு நாள்கூட இருந்ததில்லை, ரம்ஜான் மாதத்தில்கூட என்பது நினைவுக்கு வர, பின்னர் அதுவே தீராத வியப்பாக மாறுகிறது. இது எப்படி சாத்தியமாயிற்று என்கிற கேள்வியோடு பெரிய சாதனையொன்றினைச் செய்தது போன்றதொரு பெருமித உணர்வுக்கு ஆட்பட்டவள் உடனே உடலைக் குலுக்கி அவ்வுணர்விலிருந்து விடுபடுகிறேன்.

பகலில் குழந்தையைச் சாப்பிட வைத்த பொழுது ஜரினா "இந்தா பார், நீயும் கொஞ்சம் சாப்பிட்டு வயித்தை நனைச்சு வை. நல்ல பையன்தான், பக்கத்து வீட்டுக்காரன்தான், பாசமாத் தான் இருப்பான் எல்லார்கிட்டேயும். வருத்தமாகத் தான் இருக்கு, என்ன செய்ய? அவன் அம்மா, பொண்டாட்டியே ஒரு முறைக்கு நாலுமுறை காப்பி குடிச்சுக்கிட்டாக. ஒனக்கென்ன?" சலிப்போடு கெஞ்சினாள். இவள்தான் பிடிவாதமாக மறுத்துவிட்டாள். ஓர் உயிர் அநியாயமாகப் போய்விட்ட நிலையில் பசியை உணர்வதும் சாப்பிடுவதும் பெரிய குற்றவுணர்ச்சியை உண்டு பண்ணுவதாயிருக்கிறது. கடுமையான பசியை உணர்கிற இந்த நேரத்தில் கூட அவ்வெண்ணம் வலுப் பெறவே செய்கிறது.

பசியும் தூக்கமும் மனித இயல்பு தானே? இதில் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது என்கிற கேள்வி எழ எனக்கே அந்த அசட்டுத்தனமான வாதத்தை நினைத்து சிரிக்கத் தோன்றுகிறது. என்றாலும் அவனது உடலை அடக்கம் செய்த கையோடு கறியும் சோறும் சாப்பிட உட்கார்ந்த கூட்டத்தைப் பார்த்துத்தான் பயந்து நடுங்கியதும் ஞாபகம் வருகிறது. ஜன்னலுக்கு வெளியே கொட்டும் மழையின் ஓசை கேட்கிறது. குளிர்ந்திருக்கிற இரவில் படுக்கையின் மெத்தென்ற இதமும் குழந்தையின் அருகாமையும் உறக்கம் தன்னை நெருங்குவதற்கான சாத்தியங்களை உறுதி செய்வதை நம்பியவளுக்கு இந்த மழையில் நனையும் குழிக்குள் அவனது உடல் கிடத்தப்ட்டிருப்பதும் நான் சொகு சாகப் படுக்கையில் படுத்திருப்பதும் தாங்கவியலாத துயரமாக உருவெடுக்கின்றன. இரவின் அனைத்துப் பக்கங்களின் மீதும் மரணத்தைப் பற்றிய அச்சுறுத்தல் நீக்கமற நிறைந்திருப்பதனை மறக்க முயன்றவளாக உறங்கிப் போகிறேன்.

****

பாதித் தூக்கத்தில் திடுக்கிட்டு விழித்தவளுக்குத் தொலைபேசியின் ஒலிதான் தன்னை எழுப்பியதோ என்கிற சந்தேகம் தோன்ற, பயத்துடன் உற்றுக் கவனிக்க, தொலைபேசி ஒலிக்கவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்துகொள்கிறேன். வழக்கமாக நடு இரவில் வரக்கூடிய தொலைபேசி அழைப்பு ஏன் இன்னும் வரவில்லை என்கிற கேள்வி விஸ்வரூபம் கொள்ள, இனிமேல் வரக்கூடும் என்கிற உறுதியோடு கவலையும் சூழ்கிறது.

"இதை நினைச்சு எதுக்காகக் கவலைப்படுற? நீ தனியா இருக்கிற இல்லெ, பொறுக்கி நாய் ஏதாவது வம்பு பண்ணும். பேசாம ரிஸீவரை எடுத்துக் கீழே போட்டுட்டுத் தூங்கு" என்று சொல்லும் ஜரினா, “ஆமாம் அதுவும் முடியாது இல்லெ. ஒம் புருஷன் சவுதியிலிருந்து ராத்திரி நேரந்தான ஒனக்குப் போன்ல பேசுவாரு” என்று அதன் சாத்தியமின்மைகளையும் சொல்லி அலுத்துக்கொள்வாள்.

பிறகு அவளே "ஆமாம், ஒரு வார்த்தையும் பேசித் தொலைக்க மாட்டேங்கிறான். அப்புறம் எதுக்குப் போன் பண்ணுறான் . . ." கெட்ட வார்த்தை சொல்லி நக்கலாகச் சிரித்துக்கொள்வாள்.

மறுபடியும் தூக்கம் வருமென்று தோன்றவில்லை. எனக்கென்னவோ இந்தத் தருணத்தில் எனது விழிப்பு இன்னும் வராத அந்தத் தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருப்பது போலிருந்தது சங்கட முண்டாக்குவதாயிருக்கிறது. படுக்கையிலிருந்து எழுந்துகொள்ள வேண்டுமென்கிற நிலை கொள்ளாத தவிப்பு மேலிடுகிறது. மெத்தையின் இதம் தரும் குற்றவுணர்வோடேயே என்னை அதனுள்ளாகப் புதைத்து அத்தவிப்பிலிருந்து விடுபட முயல்கிறேன்.

""ரொம்ப நாளா ஆசை இதே மாதிரி விலையுயர்ந்த கட்டில் மெத்தை வாங்கணும்னு, வாங்கிட்டேன்க்கா"" -பெருமை யோடு ஒýத்த அவனது குரல் திடீரென நினைவில் தட்டுப்பட, உடனேயே பழையபடி குற்றவுணர்வுக்குள் தள்ளப்படுகிறேன்.

கடந்துகொண்டிருக்கிற ஒவ்வொரு நொடியிலும் என் விழிப்பு தொலை பேசி அழைப்பிற்கான காத்திருத்தலாக மாறுகிறதோ என்கிற ஐயம் பெருகிக்கொண்டிருக்கிறது. இதுநாள்வரை நான் அவ்வழைப்பினை விரும்பியே எதிர்கொண்டு வந்திருக்கிறேனோ என்கிற கேள்வி உருவாகிவிடாமல் துரத்த பதற்றமுறுகிறது மனம். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்கிற கவலையூடே, நான் யாரென அறிந்துகொண்டுவிடக்கூடாதென்கிற பயமும் ஒன்றிணைய, குழப்பத்தில் ஆழ்கிறேன்.

ஒரு வார்த்தை பேசாவிட்டால் என்ன? அந்த அழைப்பில் மிகுந்திருப்பது எனக்கான வேட்கையும் விருப்பமும் தானே? தினமும் கலையும் தூக்கத்தினூடே மனத்தின் அமைதி அழிவதற்குப் பதிலாக ஓர் ஓரத்தில் தனக்குள்ளாகப் பெருமித உணர்வு துளிர்த்ததா இல்லையா? என்னை நோக்கியே என்னால் எழுப்பப்படுகிற கேள்வியினால் சிதைவுறும் என் பிம்பத்தை நேர் செய்யும் விதமாகத் தலையணையின் மீதாகத் தலையை இடவலமாகப் பலமாக ஆட்டிக் கொள்கிறேன்.

ஒவ்வொரு நாளுமே என்னை அழைப்பது யாராக இருக்கும் என்கிற கேள்வியும் அதனை அறிவதற்கான ஆர்வமும் என்னை எத்தனை துன்புறுத்தியிருக்கிறது? இன்றோ யார் என்கிற கேள்வியோடு இன்னும் வரவில்லை என்கிற வருத்தமும் தானே சேர்ந்திருக்கிறது. நினைக்க நினைக்கக் குழப்பம் மட்டும் மிச்சமாகப் படுக்கையிýருந்து எழுந்து அமர்கிறேன். வெற்று வயிறோடு இருப்பதுதான் இப்படித் தூக்கம் வராமல் சித்ரவதை செய்கிறது என யோசித்தவள், கட்டிலைவிட்டு எழுந்து தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்று சொம்பிýருந்த தண்ணீரை எடுத்து வேகவேகமாகக் குடிக்கிறேன்.

பசியினாலும் தாகத்தினாலும் ஒடுங்கிக் கிடந்த வயிற்றில் தண்ணீர் விழுந்த மறு நிமிடமே வýயுண்டாக, அடி வயிற்றைப் பிடித்தபடியே மறுபடியும் வந்து படுக்கையில் சரிகிறவளுக்கு, வழக்க மாக வரும் தொலை பேசி அழைப்பில் ஒரே ஒருமுறை தான் கேட்க நேர்ந்த பெண்ணின் குரல் நினைவிலாட, அன்று நிகழ்ந்த விஷயத்தை நினைவூட்டிக் கொள்வதன் வழியே, இந்த நாளின் இறுக்கத்தைச் சற்றேனும் தளர்த்திக்கொள்ள முடியும் என்கிற எண்ணம் உண்டாகிறது. அவள் தான் அன்று எத்தனை அற்புதமாகப் பாடினாள்! ரிஸீவரை எடுத்ததுமே என் காதில் விழுந்த பாடýன் வரிகள் அரை குறை விழிப்பில் புரியாத தடுமாற்றத்தை உண்டாக்குவதாயிருக்கிறது. ஒரு சில நொடியில் நிதானத்திற்கு வந்த பிறகே அது ஒரு மலையாளப் பாடல் என்பதும் கொஞ்சிக் குழையும் அக்குரýýருந்தே அது ஒரு காதல் பாடல் என்பதையும் என்னால் கணிக்க முடிகிறது. பாடலுக்கு இடையிடையே அவள் யாரையோ முத்தமிடுவதும் பிறகு பாடலைத் தொடர்வதுமாக சுவாரஸ்யம் கொள்கிறது அத்தருணம். அவளது குரலின் வசீகரம் மயக்க மூட்டுவதாய் இருக்க, அதனை ரசித்தபடியே தொடர்ந்து கவனமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன், என் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அக்குரலைக் கேட்டிருக்கிறோமா என்கிற தீவிர யோசனையோடு.

முழுப்பாடலையும் பாடி முடித்தவள், "உஸ். கிள்ளாதீங்க வலிக்குது" எனச் சிணுங்குகிறாள். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது புரிய, குழப் பத்திலும், பயத்திலும் நா வறண்டு போகிறது என்றாலும் அக்குரýன் வழியே எனக் குள்ளாக உருக்கொள்ளும் கூடýன் சித்திரம் அந்நேரத்தை சுவாரஸ்யம் மிக்கதாய் மாற்றுகிறது. அவள் மறுபடி ""ச்சீ போங்க"" எனச் செல்லமாய்க் கொஞ்சுகிறாள். பிறகு மலையாளத்தில் ஒரு வார்த்தை சொல்கிறாள். முத்தமிடுகிறாள். மறுபடியும் பாடத் துவங்குகிறாள். இம்முறை தமிழ் சினிமாவின் காதல் பாடல். நான் எத்தனையோ முறை அப்பாடலை ரேடியோவில் கேட்டிருந்தாலும், இன்று அவளது குரýல் அப்பாடல் அற்புதம் கொள்கிறது. காதýல் இன்புற்றிருக்கும் அக்குரýல் நனைந்திருக்கும் காதல் உணர்வு கூச்சத்தை உண்டுபண்ணக் கூடியதாயிருந்தாலும் ரசிக்கக் கூடியதாய் இருக்கிறது.

ஒரு சில நிமிடங்களிலேயே என்ன நடக்கிறது, இங்கே நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்கிற கேள்வி திடுமென எழ, அவமானத்தினால் குலுங்குகிறது உடல். யாருடைய படுக்கை அறைக்குள்ளோ தான் ஒளிந்துகொண்டுவிட்டதான அருவெறுப்பும், என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதும் இப்படி நடப்பதற்கான காரணமும் சட்டென உறைக்க, ஆத்திரமாக ரிஸீவரை வைக்கிறேன். என் நம்பரைக் கூப்பிட்டு படுக்கையினருகாக வைத்திருப்பவனது எண்ணத்தை, இத்தனை நேரமாகக் கேட்டுக்கொண்டிருந்ததன் வழியாக நான் பூர்த்தி செய்திருக்கிறேன் என்பது புரிய, ஆத்திரத்தில் பொங்கிப் பொங்கி எழுகிறது உடல்.

அவன்தான் அப்பெண்ணுக்கு எத்தனை பெரிய நம்பிக்கை துரோகத்தினைச் செய்திருக்கிறான். அவளை நினைத்துப் பரிதாபம்கொண்டாலும் ஒரு குற்றவுணர்வுமின்றி இத்தனை நேரமாக அவளது அந்தரங்க உணர்வுகளைக் கேட்டுக்கொண்டிருந்தது மட்டும் எவ்வகையில் நியாயமாயிருக்க முடியும்? அவன் அவளுக்குச் செய்ததற்கு எந்த விதத்திலும் குறைவானதில்லையே நான் செய்தது.

அதன் பிறகு எஞ்சிய இரவு நெடுக அப்பெண்ணின் குரல் என்னைச் சுற்றியே ஓடிக்கொண்டிருக்க, தூக்கம் எங்கோ ஓடி மறைந்தேவிடுகிறது.

நினைவுகளின் சுமையிýருந்து விடுபட்டவளாகப் படுக்கையில் அமர்ந்திருக்கிறேன். மனமும் உடலும் ஒருசேர அயர்ச்சிக்குள்ளாக, இருளையே வெறிக்கிறேன். உடனேயே தூங்க முடியாவிட்டால் பைத்தியமே பிடித்துவிடக்கூடுமென்கிற அச்சம் உண்டாக, ஒன்று இரண்டு மூன்று என மனதிற்குள்ளாக எண்ண ஆரம்பிக்கிறேன். இதுவரை எங்கோ ஒளிந்திருந்து போக்குக் காட்டியபடியிருந்த தூக்கம் ஒரு பறவையின் சிறகென என் மீதாகப் படர்ந்து என்னை அரவணைத்துக் கொள்கிற அற்புதம் நிகழாதா என்கிற ஆதங்கத்துடனே தொடர்கிறது எனது எண்ணிக்கை.

ஒரு பொழுது இத்தனை வெறுமையோடு விடியுமா என்பது போலத் தொடங்குகிறது இந்த அதிகாலை. அடி வயிற்றில் தசைகள் இறுக்கிப் பிடித்து வýப்பதை உணர்கிறேன். வறட்டுப் பிடிவாதத்தினாலும் குற்ற உணர்வினாலும் பட்டினி கிடந்ததன் விளைவைப் பற்களை இறுகக் கடித்து எதிர்கொள்கிறேன். சக்கையைப் போலப் படுக்கையின் ஓரத்தில் ஒதுங்கிக் கிடக்கிற உடல், எத்தனையோ ஆண்டுகளாக நோயுற்றுக் கிடப்பது போன்ற பலவீனத்தை அடைந்திருக்கிறது. என்னால் படுக்கையிýருந்து எழுந்துகொள்ள முடியுமா என்கிற பயம் பிடித்தாட்ட நான் இத்தனை தூரம் தன்னைத்தானே தண்டித்துக்கொள்வதன் முட்டாள்தனம் புரிய வெகுவான சிரமத்துடனேயே எழுந்துகொள்ள முடிகிறது.

அவ்வீட்டின் முன்பாகப் போடப்பட்டிருக்கிற பிரமாண்டமான பந்தல் அவனது மரணத்தை உறுதி செய்வதாய் இருக்க, எனக்குள்ளாக உருக்கொள்கிற பீதியையும் நடுக்கத்தையும் மறைக்க முயன்றவளாக வீட்டினுள்ளே நுழைபவளைப் பல்வேறு விதமான குரல்களுடனேயே அரவணைக்கிறது வீடு. வீடு முழுக்க நிரம்பியிருக்கிற மனிதக் கூட்டத்தினால் அது தன் சவக்களையை முற்றிலுமாக இழந்துவிட்டிருக்கிறது. மண வீட்டிற்கும் மரண வீட்டிற்குமிடையிலான இடை வெளியைக் காற்றில் மிதந்து வருகிற சுவையான உணவின் மணம் இட்டு நிரப்ப, சிறிது நேரக் குழப்பத்திற்கு ஆட்படுகிறேன்.

ஹாýன் ஒரு மூலையில் அமர்ந்திருக்கும் அவனுடைய தாய் தன்னைச் சுற்றி அமர்ந்திருக்கும் மற்ற பெண்களிடம் தன் மகனைப் பற்றிய நினைவுகளைக் கதைகளாகச் சொல்ýக் கொண்டிருக்கிறாள். இடையிடையே தனக்கு அருகாக இருக்கும் எச்சில் பணிக்கத்தை எடுத்து, தான் மென்று கொண்டிருக்கும் வெற்றிலை எச்சிலைச் சாவகாசமாகத் துப்பியபடி இருக்கிறாள். நான் யாராலும் கவனிக்கப்படாதது எனக்குப் பெரிய நிம்மதியைத் தருவதாக இருக்க, ஹாýன் வடக்குப்புறமாக எனக்கெதிராக இருக்கும் அறையை நோக்கி அவசரமாகவே நடக்கிறேன். அறையை மறைத்தபடி தொங்கும் பச்சை நிறத் திரைத்துணியை விலக்கி உள்நுழையும் தருணத்தில் அவனுடைய மனைவிக்கு ஆறுதல் சொல்லக்கூடிய நிலைக்கு என்னைத் தயார்படுத்திக்கொண்டேனா என்கிற கேள்வி எழுந்து அடங்க, திரைத் துணியை விலக்கி அறைக் குள்ளாக நுழைகிறேன்.

பாதத்தில் சற்று முன் கழுவிவிடப்பட்ட தரையின் ஈரமும் குளிர்ச்சியும் தட்டுப்படுகின்றன. வெளி வெளிச்சம் வராமல் அடைக்கப்பட்ட அறை விடிவிளக்கின் ஒளியினால் ஒளியூட்டப்பட்டதாயிருக்கிறது. அறை ரொம்பவும் சிறியதாக இருப்பது மூச்சு முட்டுவது போýருக்கிறது. சமீபத்தில் கட்டிய வீடு என்றாலும் இத்தனை பெரிய வீட்டில் இவ்வளவு சிறியதாகவா அறையிருக்கும் என யோசித்தபடி அப் பெண்ணை நோக்கிச் செல்கிறேன். தரையின்மீது விரிக்கப்பட்டிருக்கிற பிளாஸ்டிக் பாயின் மீது தலைகுனிந்தபடி அமர்ந்திருக்கிறாள் அவள். அவள் அமர்ந்திருக்கும் தோரணை யாரையோ எதிர்பார்த்திருப்பதைப் போýருக்கிறது. அறை நடுவே இருக்கும் தொட்டிýல் கிடக்கிறது குழந்தை. அவளருகே அமரும் முன்பாக அக்குழந்தையை ஒருமுறை பார்க்கலாமா என ஓர் அடி தொட்டிலை நோக்கி எடுத்துவைத்தவள் மனம் சகிக்காமல், நின்றுகொள்கிறேன். குழந்தையின் முகத்தைப் பார்த்ததும் துக்கத்தின் அழுத்தம் தாளாமல் கதறி விடுவோமோ என்கிற பயம் பிடித்துக்கொள்ள, அவ்வெண்ணத்தைக் கைவிட்டு அவளை நோக்கி நடந்து அவளருகே அமர்கிறேன்.

வந்திருப்பது யார் என அறியும் பொருட்டுத் தலைநிமிர்ந்து ஒரு நொடி என்னைப் பார்த்தவள் மறுபடியும் தலையைக் குனிந்துகொள்கிறாள். அந்த ஒரு நொடியிலேயே நான் வந்திருப்பது குறித்த திருப்தியை அவள் முகம் காட்டிவிடுவதைக் கவனிக்க முடிகிறது. இருவருக்குமிடையே நீடிக்கிற மெüனத்தைக் கலைக்கும் வழியறியாது அவள் முகத்தை உற்றுக் கவனிக்கிறேன். இருபது வயதிருக்குமா? நிச்சயமாக அதற்கும் குறைவாகத்தானிருக்கும் என்கிற முடிவுக்கு வருகிறேன்.

ரத்தமேயில்லாததுபோல வெளுத்துக் கிடக்கிறது அவளது முகம். நகைகளில்லாமல் மொட்டையாகக் கிடக்கும் கைகளும் காதும் மூக்கும் கழுத்தும் எனது அதிகபட்ச மனத் தைரியத்தை உறுதி செய்வதாயிருக்கின்றன. தலை முடியை வெளித்தெரியாதபடிக்கு முக்காடிட்டு மறைத்துப் புடவையைக் காதுகளுக்குப் பின்புறமாக ஒதுக்கியிருக்கிறாள். அது மேலும் அவளை விகாரப்படுத்துவதாகயிருக்கிறது. கைக்கு அடக்கமான சின்னஞ்சிறிய வட்டமான முகத்தின்மீது படுகிற என் பார்வை நழுவி நழுவிச் சரிய, அதனை மறுபடியும் நகர்த்தி அம்முகத்தின் மீதே பதியவைக்கத் தீவிரமாகவே முயன்றுதோற்கிறேன். அவளது கழுத்துக்குக் கீழே நிலைக்கும் என் பார்வையில்படுகின்றன தாய்மையினால் ததும்பும் கனத்த மார்பகங்களும் அதனை மறைக்க முயன்று தோற்கும் புடவையும். நிறமில்லாத புடவையின் மீது மார்பிýருந்து கசிந்த பாýன் கறை திட்டுத் திட்டாய்த் தேங்கியிருக்க அந்தப் பகுதியே விறைப்புத்தன்மையோடிருக்கிறது. இத்தனை நேரமில்லாமல் திடீரென எனது நாசியில் வந்து மோதுகிற பால் கவிச்சி காற்றில்லாத அறையின் உள்ளே அடைந்திருக்கும் மக்கிய வாடையோடு சேர்ந்து குடலைப் புரட்டுகிறது. அவள் இருக்கிற நிலையில் நான் அருவெறுப்புணர்வினை அடைவதன் நியாயமின்மையை மனத்தில் இருத்தி, குமட்டýன் வேகத்தை உள்ளுக்குள்ளேயே அடக்குகிறேன்.

என்னைப் போலவே அவளும் என்னையே கவனித்துக்கொண்டிருக்கிறாள். பேசவியலாதபடி மெüனத்திருக்கும் எனது நிலைக்கு இரங்குவது போýருக்கிறது அவளது பார்வை. மேலும் சற்று நேர அமைதிக்குப் பிறகு மெýதாக உதடு பிரியாமல் சிரித்து, ""இப்பதான் வர்றீங்களா"" என்கிறாள்.

அவளது இயல்பான சிரிப்பு எனது பதிலைத் தாமதப்படுத்துவதாயிருக்க, ""உம் இப்பதான், நேர உள்ளேயே வந்திட்டேன்"" என்கிறேன்.

""பாருங்க எங்க கதிய. எப்புடி நிர்க்கதியா நிக்கிறோம்னு"" கலக்கமின்றிக் கணீரென ஒýக்கிறது குரல். ""போதாக் குறைக்கு இந்தக் கிழடுக கிட்ட வேற மாரடிக்கணும், நான் பாட்டுக்கு நிம் மதியா இருந்தேன், நஸீபு இங்கெ இழுத்துப் போட்டிருச்சு.""

சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் அவளே, ""பாத்திங்களா அந்தப் பொம்பளை வெத்திலை போடுற அழகையும் பேச்சழகையும். வெனை காரி, துளியாச்சும் கலங்கியிருக்காளா பாருங்க. அவ சதையில மண்ணு விழுக."" கைவிரல்களை ஓன்று சேர்த்து நெட்டி முறித்தவள், ""எம் புருஷனுக்கே இந்தப் பொம்பளைன்னா ஆகாது. நான் என் புருஷன்கூடப் போய்க் குடித்தனம் பண்றது சகிக்காம, எதுக்குடா அவளை டவுண்ல கொண்டுபோய்க் குடித்தனம் வைக்கிற தண்டமா வீட்டு வாடகை குடுத்து. இங்கெ இவ்ளோ பெரிய வீடு சும்மா கிடக்குது விட்டுட்டுப் போ, எனக்கும் துணையா இருக்கும். வாரத்துல ஒரு நாளக்கி வந்துட்டுப் போவேயில்ல. ஊரு ஓலகத்துலப் பொண்டாட்டி புள்ளைய விட்டுட்டு சவுதியில போயி இருக்கறது இல்லன்னு எப்பொப் பாரு பொருமல். இப்ப ஒரேயடியா இங்கெயே வந்துட்டேன் இல்ல, இனிமேயாவது சந்தோஷமா இருக்கட்டும்"" மிகமிக அழுத்தமாக ஒýக்கிறது அவளது குரல்.

இத்தனை நேரமாக மிகுந்த பரிதாபத்துடன் கேட்டுக்கொண்டிருந்த என்னைத் திடுமென ஒருவிதமான பயம் பிடித்துக்கொள்ள வேறு எவரேனும் அறைக்குள் வந்துவிடுவார்களோ என்கிற பதற்றத்துடன் தலையைத் திருப்பி எனக்குப் பின் புறமாகப் பார்வையை அலையவிடுகிறேன். என் பார்வையில் தெரியும் ஜாக்கிரதை உணர்வையோ எனது தர்ம சங்கடமான நிலையையோ அவள் சிறிதேனும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற பாவனையை முகத்தில் இறுத்தியவளாக அவளை மறுபடியும் நிமிர்ந்து பார்க்கிறேன்.

அவளுக்கு எனது நிலை குறித்த கவனம் கொஞ்சமும் வாய்த்ததாகவே தெரியவில்லை என்பதைத் தொடர்கிற அவளது பேச்சு ஊர்ஜிதம் செய்வதாகவே இருக்கிறது.

""இப்ப நீங்களே இருக்கீங்க, யாரோ ஒரு மூணாவது ஆளு, உங்களுக்கு அவரு மேல எம்புட்டுப் பிரியம், அதுகூட இந்தப் பொம்பளக்கி அவரு மேல கிடையாது தெரியுமா? பணத்துக்காக எம்புள்ள எம்புள்ளன்னு ஒறவு கொண்டாடுனாச் சரியாப் போச்சா? ஒங்கள மாதிரித் தான் எம் புருஷனும். நீங்கன்னா ஒரு பிரியம். ஒங்களுக்கு ஞாபகமிருக்கா, எனக்குக் குழந்தை பிறந்ததும் எங்க வீட்டுக்கு வர்றதா சொல்ýயிருந்தீங்களே.""

எனது ஆமோதிப்புக்கெனப் பேச்சை நிறுத்துபவளிடம் ஒன்றும் புரியாத குழப்பத்துடன், ""ஆமாமாம் சொல்ýயிருந்தேன்"", என்கிறேன்.

""அவருக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா, சொன்னா நீங்க நம்பக்கூட மாட்டீங்க. அக்கா வரப்போறாங்கன்னு ஒரே சந்தோஷம். அக்காவுக்குத் தங்குறதுக்கு இந்தச் சின்ன வீடு வசதிப்படாது. பெரிய வீடா பார்த்துக் குடி போகணும்னு உடனே வீடு மாத்தினார். ஒரு நாள் வந்து தங்கறதுக்கு, எதுக்குங்க இந்த ஆடம்பரம், ஏற்கனவே உங்க அம்மாகிட்ட பேச்சு வாங்கிக்கிட்டு இருக்கறப்போன்னு நானும் எவ்வளவோ தடுத்தேன். கேட்டாதான? அதோட மறுநாளே காரை வாங்கி நிறுத்திட்டாரே மனுஷன்! பக்கத்து ஊர்ல இருக்கற தர்காவுக்கெல்லாம் உங்களக் கூட்டிப்போயிக் காட்டறதுக்காம் என்னுடைய நம்பிக்கையைப் பெறுகிற உத்வேகத்துடன் ஆர்வமாகச் சொல்ý நிறுத்தியவள், கடைசியில, "சாகிறதுக்குன்னுன்னு அந்த காரை வாங்கினாப்புல ஆயிருச்சு"" என வருத்தத்துடன் முடிக்கிறவளின் முகம் விரக்தியினால் சுண்டிப்போய்க் கிடக்கிறது.

எனக்குள் இன்னும்கூட என்ன செய்வதென்கிறக் குழப்பம் நீடிக்கிறது. ஏதோ ஒருவிதத்தில் எனது பேரில் தனக்கும் தன் கணவனுக்கும் உள்ள அதீதப் பிரியத்தைச் சொல்ýவிட முடிந்ததில் உண்டான நிம்மதியோடு சுவற்றில் சாய்ந்து அமர்ந்துகொள்கிற அவளிடம் தனக்கு ஆதரவான ஒரு நிலையை என்னிடத்தில் கோரும் தன்மையிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கென்னவோ, இது வரைக்குமில்லாதபடியான கருணை அவன் பேரில் ஊற்றெடுக்க, என்ன அற்பமான மனிதர்கள் என சýப்புண்டாகிறது. இங்கு வருவதற்கு முன்பிருந்த மனநிலைக்கும் இப்போதைய மன நிலைக்குமிடையேயான மாற்றத்தினை யோசிக்கிற எனக்கு அங்கிருந்து சென்றுவிட வேண்டுமென்கிற ஆவல் மிகுந்துகொண்டிருக்கிறது. எனது இருப்புக்கொள்ளவியலாத மனநிலையை அவள் அறிந்துகொண்டு விடக்கூடாதென்கிற கவனமுடனும் மூன்றாவது நபரான என்னிடம் அவள் வேண்டி நிற்கும் ஆதரவு எப்படிப்பட்டதாக இருக்க முடியும் என்கிற யோசனையுடனும் அமர்ந்திருக்கிறேன். எத்தனை நிராதரவான ஒரு நிலையிýருந்து இந்த வேண்டுகோள் வரக்கூடும் என்கிற அதிர்ச்சி மட்டுமே எஞ்சியிருக்கிறது.

அவளைத் தைரியப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தோடும் அவளது தொடர்ச்சியான பேச்சின் மீது குறுக்கீடொன்றை நிகழ்த்திவிட்டு அவ்விடத்திýருந்து தப்பிச் சென்றுவிட வேண்டுமென்கிற நிர்ப்பந்தத்துடனும், ""சரி நடந்தது நடந்து போச்சு. உன் குழந்தைக்காகவாவது நீ தைரியமா யிருக்கணும். நாங்கல்லாம் உனக்கு இல்லெ"" அவளது மெýந்த கையைப் பற்றியபடி ஆறுதல் சொல்கிற எனக்கே, அவ்வார்த்தைகள் ஒப்புக்குச் சொல்லப்படுவதாகவே இருக்கின்றன.

நான் சொல்கிற ஆறுதல் வார்த்தைகளில் உணரும் பாதுகாப்பை அனுப வித்தவளாகத் தனது கையை எனது கைக்குள்ளாக, மேலும் அழுத்தமாகவே பிணைத்துக் கொள்கிறாள்.

""எனக்குத் தாய் தகப்பன் இல்லாத குறையை நீங்கதான் போக்கணும்."" தனக்குள்ளாகச் சத்தமின்றி அழுகிறாள். ""ப்ச், சும்மாயிருங்கறேன் இல்லெ"" அவளது உள்ளங்கையை அழுத்திச் சமாதானம் செய்கிறேன்.

""அந்தக் காருதான் வெனையா இருந்துச்சு அந்த மனுஷனுக்கு. மலையாளி முண்டை தேவுடியா என்னா மருந்து போட்டாளோ அவ வீடே கெதியா கிடந்து, கடைசியில ஒரேயடியா போய்ச் சேர்ந்துட்டாரு. அவ வீட்டுக்குப் போறப்போதான ஆக்ஸிடெண்ட் ஆச்சு"" அழுகையினூடே ஆத்திரம் கொப்பளித்து வெடிக்க, சுர்ரென மூக்கை உறிஞ்சி எச்சிலைக் கூட்டிப் புளிச்செனப் பக்க வாட்டுச் சுவற்றின் மீது துப்புகிறாள்.

"மலையாளி!" எனக்குப் பொட்டில் அடித்தாற் போýருக்கிறது. அதற்கு மேல் எனக்குத் தெரிய வேண்டியது எதுவுமேயில்லாமல் போக, அதிர்ச்சியில் துடிக்கும் இதயத்தைக் கட்டுப்படுத்தும் வழியறியாது மார்பின் மீது கைவைத்து அழுத்திக்கொள்கிறேன். இந்த நிமிடத்தில் எனக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்கிற பயம் பிடித்துக்கொள்ள அப்படியே அசையாமல் அமர்ந்திருக்கிறேன்.

அதன் பிறகு எப்படி அவளது கையிýருந்து என்னுடைய கையை விடுவித்துக்கொண்டேன் என்பதோ வீடெங்கும் நிறைகிற பாத்திஹாவின் சப்தங்களோ சாம்பிராணி மணமோ எதுவுமே நினைவில் பதியாமல் கடந்துகொண்டிருக்க முதல் நாளைப் போன்றே நடுக்கமுறும் பாதங்களை வீட்டை நோக்கி நகர்த்திச் செல்கிறேன்.

எனக்குத் தெரியவில்லை அவனைப் பற்றிய நினைவுகளை இனி வெறுப்புடன் என்னால் ஸ்பரிசிக்க முடியுமா என. அவன்மீதான எனது பிரியத்தின் அளவு இனி வற்றிப்போகுமா என அவனது மரணம் குறித்த துக்கம் எனக்குள் இனி உலர்ந்தேவிடுமா என . . .

வீட்டில் நேற்றுப் பாதி இரவில் ஒலிக்காத தொலைபேசி அமைதியாக என்னை எதிர்கொள்ள, இனி ஒரு நாளும் குரலில்லாத அந்த அழைப்பு வரப்போவதில்லை என்பது உறுதியாக ஏனோ எனக்குள்ளாகப் பெருகுகிறது அழுவதற்கான வேட்கை.

Quelle -Kalachchuvadu

Thursday, November 18, 2004

முறியாத பனை

- சந்திரா. ரவீந்திரன் -

நீண்ட வருடங்களாய் துருப்பிடித்துப் போயிருந்த தண்டவாளங்களில் மீண்டும் புதிதாய் பரபரப்பு, சுறுசுறுப்பு! ஒருநாளில் இருதடவைகள் யாழ்ப்பாணம் நோக்கி வரும் ரயில்வண்டிகளின் சத்தங்கள்! ஜனங்கள் அவசரம்அவசரமாய்க் கூடிப்பிரியும் குட்டிக் குட்டிக் காட்சிகள்!

சப்தங்கள் யாவும் ஓய்கிற போது பழையபடி எல்லாவற்றையும் மீறிக்கொண்டு வரும் கடலை நெய்யின் கமறலும், பூட்ஸ்களின் தோல் மணமும்!

சில சமயம் வயிற்றைக் குமட்டும்! பல சமயங்களில் அடிவயிற்றுக்குள் அப்பிக்கொண்டுவிடும் அச்சமோ, அருவருப்போ, கோபமோ என்று புரியாத ஒரு நெருடல் பந்தாக உருண்டு கொண்டே கிடக்கும்!

சூரியன் அஸ்தமிக்கும் பொழுதுகளில், ஓரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், பொதிகளற்ற வெற்று ரயில் பெட்டிகளினுள்ளேயிருந்து “ஐயோ….அம்…..மா…..!" என்ற மரண ஓலம் எதிரொலியாய் விட்டுவிட்டுக் கேட்கும்!

சில நிமிடங்களிற்கு எங்களின் தொண்டைக்குழிகள் அடைத்துப் போகும்! வீடு அசாதாரண அமைதியில் மூழ்கிக்கிடக்கும்! ஆனால் நாம் பயப்படவே தேவையில்லை! அப்படித்தான் அறிவு சொல்லியது. எத்தனை நம்பிக்கை, அவர்களிற்கு எங்கள் மேலிருந்தது. ரெயில்வே ஸ்ரேசனின் பெரிய பெரிய கட்டடப் பகுதிகளை இணைத்து, பிரதான முகாமாக்கியிருந்த அந்த இந்திய -சிங்- குகளுக்கு நிலையத்தின் தலைமை அதிபரான அப்பாவில் மட்டும் நிறைய மரியாதை!

தண்டவாளங்களோடு ஒட்டியிருந்த எங்கள் ரெயில்வே குவாட்டர்ஸ் மிகவும் அழகானது, வசதியானது! ஸ்ரான்லி வீதிப்பக்கமாயிருந்த, வீட்டின் முன்புறத்தில் முல்லையும் அடுக்கு மல்லிகையும் பந்தலிட்டு நின்றன. மணல் பரவிய நீண்ட முற்றம். இருபுறமும் பச்சைப்புற்கள். வேலி முழுவதும் பின்னிப் படர்ந்திருக்கும் பூங்கொடிகள் - அவை பெரிய பெரிய இலைகளைப் பரப்பி, வேலிக்கு மிகவும் பாதுகாப்பாய் இருந்தன. அவை “ரெயில்வே குவாட்டர்ஸ்- க்கே உரியவை போலத் தனித்துவமாயிருக்கும்! றோஜா நிறத்தில் கொத்துக்கொத்தாய்ப் பூத்துக் குலுங்கும்! ஆனால் வாசனையற்றவை! அவை சிங்களப் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டதால் “சிங்களக் கொடி என்று பெயர் சூட்டியிருந்தோம்.

வீட்டின் இடது புறமிருந்த நீளமான பெரிய வளவில், நெடுநெடுவென்று வளர்ந்திருந்த பத்துப்பன்னிரண்டு பனைமரங்களும், ஓரமாய் இரண்டு முருங்கை மரங்களும்! முருங்கைகள் ஏராளமாய்க் காய்க்கும்! வீட்டின் வலது பக்கமிருந்த சிறிய வளவிலும் இதரை வாழைகள், தென்னைகள், தூதுவளை, துளசி, பயிற்றங்கொடி, கரும்பு என்று பசுமையில் நிலம் செழித்துக் கிடந்தது!

இவற்றிற்கு நீர் பாய்ச்சுவதற்காய் நான் நீண்ட நேரம் நீராடுவது வேறு விடயம்!

பனை மரங்கள் எப்பவும் பேரிரைச்சலுடன் கம்பீரமாய் அசைந்து அசைந்து சலசலத்துக் கொண்டேயிருக்கும். படுக்கையறையின் விசாலமான ஜன்னலினூடாய் பனம்பூக்கள் பறந்து வந்து வாசனையோடு சிதறும்! வீட்டின் ஓரமெங்கும் மஞ்சள் பூப்பந்துகள் திரள் திரளாய் ஒதுங்கிக் கிடக்கும். வளவைப் பார்க்க எப்பவும் எனக்குப் பெருமையாயிருக்கும்!

பின்னால் ரெயில்வே ஸ்ரேசன் வளவில், எமது வீட்டுவேலியோடு ஒட்டியவாறு உயரமான ஒரு “சென்றிப்பொயின்ற்! பனங்கொட்டுகளும் மண்மூட்டைகளும் போட்டு வசதியாக அமைத்திருந்த “சென்றிப்பொயின்ற்!

அவர்கள் வெளியில் “ சென்றியில் ஈடுபடுவதைவிட வேலிக்கு மேலால், எமது வீட்டிற்குள் கண்மேய்ச்சல் விடுவதே அதிகம். கங்கு மட்டை, காய்ந்த ஓலை, பனங்காய், பன்னாடை என்று சடசடத்து விழும்போதெல்லாம், ஆரம்பத்தில் துடித்துப்பதைத்து வெற்றுவேட்டு வைத்து, கூச்சல்களோடும் அதட்டல்களோடும் பத்துப்பதினைந்து பச்சைத்தலைகள் வேலியின் மேலால் எட்டிப்பார்த்து ஆராயும்! போகப்போக, அது அவர்களிற்குப் பழக்கமாகி விட்டதால், பனைகளுக்குப் பாரிய பிரச்சினையேதும் ஏற்படவில்லை.

தண்டவாளங்களை நோக்கித் திறபடும் எமது பின்புறப் படலையை சங்கிலி போட்டுப் பூட்டக்கூடாது என்பது அவர்கள் கட்டளை! சாட்டாக நினைத்த நேரத்தில் உள்ளிட்டு விடுவார்களோ என்ற பயம் நமக்கு! ஆனால் அநாவசியமாக அவர்கள் உள்ளிட்டதில்லை என்பது நம்பமுடியாத உண்மை!

அப்பாவிற்கு, பின் படலையால் வேலைக்குப் போய் வருவது பெரிய சௌகரியமாய் இருந்தது. நேரம் கிடைக்கும் நேரங்களில் வந்து, தேநீர் அருந்தி, நொறுக்குத்தீனி சாப்பிட்டுவிட்டுப் போவார்.

சில சமயங்களில் அப்பாவுடன் சேர்ந்து கேர்ணல், மேஜர் என்று அலங்காரப்பட்டிகளுடன் கிந்திப்பட்டாளங்களும் வருவதுண்டு! அப்பா எச்சிலை மென்று விழுங்கியபடி இழுபட்டுக்கொண்டு வருவது எனக்கு விளங்கும். அவர்கள் கதையோடு கதையாய் வீடுமுழுவதும் கண்களால் கணக்கெடுத்துக் கொண்டு போவார்கள். போகும் போது நட்பாக விடைபெறுவார்கள்.

“ இங்கு எல்லோருக்கும் பெரிய பெரிய வீடுகள் இருக்கிறது. தண்ணீர் வசதியிருக்கிறது. இதைவிட வேறென்ன வேண்டும் உங்களுக்கு? எதுக்காக சண்டை போடுகிறார்கள்….” என்று ஒரு இந்தியக் கேர்ணல் அப்பாவிடம் கேட்டானாம். அவன் ராஜஸ்தானைச் சேர்ந்தவன். விளக்கம் கொடுக்க வேண்டிய வினாத்தான்! ஆனால் “இவன்களுக்கு இதெல்லாம் விளங்குமா? இந்தியப் பெரும்பான்மையினக் குடிமகன் இவன்! ஒரு காலத்தில் பெரும்பான்மையினமாக இருந்து..இப்போ சிறுபான்மையினமாக்கப்பட்டிருக்கும் இந்த இலங்கைத் தமிழனின் உரிமைப் பிரச்சனைகள், அரசியல் துரோகங்கள், நிரந்தர இழப்புகள், பரிதாபங்கள், ஏக்கங்கள்…..எல்லாம் சொன்னாலும்தான் இவனுக்குப் புரியுமா? - அப்படித்தான் அப்பா உடனே யோசித்தாராம். யோசனையின் விளிம்பிற்கு வரமுன்பே, அவன் இந்த மண்ணின் நாணம் மிக்க பெண்களைப் பற்றிச் சிலாகிக்கத் தொடங்கி விட்டானாம். அதன் பின்னர் அவன் பதில் சொல்லக் கூடிய கேள்வியெதுவுமே கேட்கவில்லையாம்!!

வீட்டு வளவிற்குள் கள்ளுச்சீவ வருபவன், வேலியோடு சென்றிப் பொயின்ற் வந்ததிலிருந்து பனையில் ஏறமாட்டேன் என்று பிடிவாதமாக நின்று விட்டான். ஒரு பனையில் அவன் கட்டிவிட்ட முட்டி கவிண்டபடி அப்படியே கிடந்தது. அதிலிருந்து கள்ளு நிரம்பி வழிகிறதோ என்று குமரியாகி நிற்கும் என் குட்டித்தங்கை, பனையோடு ஒட்டிநின்று அடிக்கடி அண்ணாந்து பார்ப்பாள். அவள் பனைமரங்களருகே போனால், சென்றிப்பொயின்ற் றிலிருந்து மெல்லிய விசிலடிப்பும் இனிமையான பாடலிசையும் கேட்கத்தொடங்கிவிடும்! அதனால் பனைகளருகே நின்று நாம் அனுபவிக்கும் சுகங்கள் படிப்படியாகக் குறைந்து கொண்டே போனது!

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் ஆசை தீர அள்ளிக்குளித்துவிட்டு, சின்னத் தூக்கத்திற்காய் படுக்கையறைக்குள் நுழைந்தால், முகாமிலிருந்து வரும் மும்முரமான சத்தங்கள் தூக்கத்தைக் கெடுக்கும்! அச்சமயங்களிலெல்லாம் ஜன்னலினூடாய், கரும்பனைகளில் சிதறிக்கிடக்கும் சின்னச்சின்னக் குழிகளையெல்லாம் ஏகாந்தமாய் எண்ணிப்பார்த்துக் கொண்டு படுக்கையில் கிடப்பேன்! அவர்கள் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த சில நாட்களில் வெறித்தனமாக ஏற்படுத்திய பேரழிவின் சிறு வடுக்கள் மட்டுமே இவை! இந்த வளவிற்குள் எந்தப் பனையும் இதனால் சாய்ந்து விழுந்து விடவில்லை! நிறைந்த வடுக்களோடும் நெடு நெடுவென்று கம்பீரமாய்த்தான் நிற்கிறது!

முன் கேற்றால் வீட்டினுள் நுழைபவர்களை சென்றிப் பொயின்ற் ல் இருப்பவன் முழுமையாகக் காணமுடியாது. ஆனால் வருபவர் வீட்டின் நடு இருப்பறைக்குள் நுழைந்து விட்டால், பின்வாசலூடாய் பைனாகுலர் மூலம் மிகத் தெளிவாய்க் காணலாம்.

என் சிநேகிதி அபி, பெரிய ஓலைத்தொப்பியும் கவர்ச்சியான உடையும் அணிந்துகொண்டு அழகான சைக்கிளில் வந்திறங்கிக் கதைத்துவிட்டுப் போவாள். அவளின் கைப்பையினுள் ஏகப்பட்ட கடுதாசிகள், குறிப்புகள் இருக்கும். உடம்பின் ஒரு பகுதியில் “சயனைட் குப்பி இருக்கும்! பின்புறம் சமையலறைப் பக்கமாய் அவள் வரும்போது “சென்றிப்பொயின்ற் றில் இருப்பவன் தலையை வெளியே நீட்டி கண்ணடித்துச் சிரிப்பான், களிப்பில் கையசைப்பான்!

எனக்கு இதயம் படபடத்துக் கொண்டேயிருக்கும்! அவள் வெகு சாதாரணமாய், அண்ணரின் கதையிலிருந்து ஆஸ்பத்திரிக் கதைவரை பரிமாறிவிட்டு, தேவையானவற்றைச் சேகரித்துக்கொண்டும் சிரித்தவாறே போய்விடுவாள்! “ போகிறாளே என்று மனதிற்குள் ஏக்கமாயும் இருக்கும். போனபின் ஏனோ ஆறுதலாயும் இருக்கும்.

வீடு வீடாகச் சோதனை நடக்கிற போதும் இந்த ரெயில்வே பகுதிக்குள் மட்டும் யாரும் சோதனை போட வருவதில்லை என்று இறுமாப்புடன் இருந்த எமக்கு ஒரு நாள் காத்திருந்தது!

அது ஒரு சுட்டெரிக்கும் வெயில் நாள்! “சென்றிப் பொயின்ற் நோக்கி யாரோ உற்றுப் பார்த்திருக்கிறார்கள். அடுத்த நிமிடம் அதற்கருகாக “கிறனைற் குண்டொன்று வெடித்திருக்கிறது! வந்தவனின் குறி தப்பிவிட்டது! வேலியோடு நின்ற சீனிப்புளி மரத்தின் கிளைகளுக்கு மட்டும் தான் சேதம்! ஸ்ரேசன் பகுதி முழுவதும் மிருகத்தனம் தலைதூக்குவதற்கு இது ஒன்று போதுமே! திபு திபு வென்று எமது பனம் வளவிற்குள் பச்சைப்புழுக்களாய் அவாகள்! சட சட வென்று காற்றைக் கிழிக்கும் இரைச்சலுடன் துப்பாக்கி வேட்டுக்கள்! வீதியால் போய்க்கொண்டிருந்த அப்பாவி மக்கள், பச்சையுடைப் பேய்களால் பன்னாடையாக்கப்டும் அகோரம், ஈனஸ்வரமாய் நீண்ட நேரம் கேட்டுக் கொண்டிருந்தது!

எல்லாம் ஓய்ந்த பின், ஜன்னலினூடாய் வளவைப் பார்த்தேன். மருந்து நெடி வீசியது! அடிவயிற்றுக்குள் இன்னமும் அச்சம் அப்பிக்கிடப்பதான உணர்வு! கரும் பனைகளில் புதிய குழிகள் தோன்றியிருந்தன. சன்னங்களின் பல வெற்றுக் கவசங்கள் மரங்களின் அடியில் ஆங்காங்கே சிதறியபடி! ஆயினும் அழகிய விசிறிகளென, வளவு முழுவதும் பசுமையைப் போர்த்தியிருக்கும் பனைகளெல்லாம் கெக்கலித்துச் சிரிப்பது போல் காற்றில் அழகாய் அசைந்து கொண்டுதானிருந்தன!

ஒரு உற்சாகமான வார இறுதி நாள், ரெயில்வே தொழிலாளிகளை அப்பா அழைத்திருந்தார். அவர்கள் புற்கள் நிறைந்த வளவைத் துப்புரவாக்கத் தொடங்கிவிட்டார்கள். வீடு முழுவதும் பச்சைப்புற்களினதும் காயம்பட்ட வடலி இலைகளினதும் மணம் பொங்கிப் பரவிக்கொண்டிருந்தது!

மேஜர் முக்தயர், ஏணிப்படிகளில் ஏறி நின்றவாறே வளவிற்குள் நின்ற அப்பாவுடன் வெகு சந்தோஷமாய் கதைத்துக் கொண்டிருந்தான். அப்பா, வளவைத் துப்புரவு செய்விப்பது அவனுக்குப் பெரு மகிழ்ச்சி என்று விளங்கியது. புற்களினூடாக வேலிவரை யாராவது தவழ்ந்து வந்து விடுவார்களோ என உள்ளுர ஊறிக்கிடந்த அச்சத்திற்கு அது பெரிய ஆறுதல் தானே!

துப்புரவு செய்யப்பட்ட வளவிற்குள், நிறையப் பனங்கொட்டைகள் ஆங்காங்கே புதைந்து, புதிதுபுதிதாய் முளைவிட்டிருப்பது தெரிந்தது. அப்பா அவற்றைப் பிடுங்கி எடுக்கச் சொல்லவில்லை. அவை நெடும்பனையாகும் அழகைக் கற்பனையில் நான் அடிக்கடி கண்டு களிப்பேன்.

வைகாசி மாதத்து முதல் நாள், நல்ல வெயிலும் கூடவே சுழன்றடிக்கிற காற்றுமாயிருந்தது! சைக்கிள் றிம் இல் சுரீர்சுரீரென்று மணற்புழுதி வந்து மோதிக்கொண்டிருந்தது. நான் அலுவலகத்தில் ரைப் செய்யவேண்டியிருந்த அனைத்துப் பிரதிகளையும் முழுமையாகச் செய்து முடித்து விட்ட திருப்தியுடன், ஆசுவாசமாய் சைக்கிளில் வந்திறங்கினேன். வீட்டினுள் பரபரப்பாக ஆளரவம்! வல்லைவெளி தாண்டி வந்த வடமராட்சி உறவினர்கள் சிலர் என்னைக் கண்டதும் எட்டிப்பார்க்கிறார்கள். ஏதோ வித்தியாசமாய்த்தான் இருந்தது!

அம்மா அழுத கண்ணீருடன் படியிறங்கி ஓடிவந்து என்னைக் கட்டியணைத்து விம்மினா! ஓசையை அடக்கி ஒப்பாரி வைத்தா! எனக்கு எல்லாம் விளங்கிவிட்டது!

“ ஊரில் என் தம்பி போரிட்டு மாண்டான் …. என்று மார்தட்டிப் புலம்பவோ, தலையைப் பிசைந்து குழறவோ ஊரைக்கூட்டி ஒப்பாரி வைக்கவோ முடியாத ஊமைச்சாபம் எங்களுக்கு! நடுஇருப்பறையைத் தாண்டி, பின்புறமாய் எம் அழுகுரல் போய்விடக் கூடாத அவலம் எமக்கு! கத்தி அழுது தீர்க்கமுடியாத அவஸ்தை எம்மை வதைத்து உருக்கியது!

எல்லா சுதந்திரங்களும் பறிக்கப்பட்டு, இப்போ அழுவதற்குரிய ஆகக் குறைந்த சுதந்திரமும் இரகசியமாய்ப் பறிக்கப்பட்டிருந்தது யாருக்குத் தெரியும்? யார் யாரைப் போய்த் தேற்றுவது?!

சில மாதங்கள், எமக்குள் எரியும் துன்பப்பெருநெருப்பை அமுக்கி..அமுக்கி.,.பின்னர் அவை வெறும் தணற் துண்டங்களாய் கனன்று பொசுங்கிக் கழிந்து கொண்டிருந்தது! நம்பமுடியவில்லை! நமது சின்னச் சின்னச் சந்தோஷங்களும் இத்தனை விரைவில் சீர்குலைந்து போகுமென்று நம்பவில்லை!

இலையுயதிர்காலம் தொடங்கி, சீனிப்புளி உருவியுருவி தன் இலைகளை வளவெல்லாம் கொட்டத் தொடங்கிய போது, ஒரு நாள் திடுதிப்பென்று அவர்கள் மூட்டை கட்டத் தொடங்கி விட்டார்கள்! ரெயில்வே ஸ்ரேசனுக்குரிய கட்டடங்களெல்லாம் அவசரம் அவசரமாய் விடுவிக்கப்பட்டு வெறிச்சோடிப் போய்விட்டது! அனைத்து வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன! மேஜர், கேர்ணல் என்ற பதவியிலிருந்தவர்கள், விடைபெற்றுப் போக வீட்டுக்கு வந்தார்கள். சிநேகமும் பண்பும் மிக்க எங்களைப் பிரிந்து போவதில் பெரிய மனவருத்தம் என்று கூறி விடைபெற்றுப் போனார்கள். சொந்த உடைமையைத் துறந்து போவது போன்ற துக்கம் அவர்களின் கண்களில்!

இரவு…ஈ, காக்கைகூட அங்கில்லை என்ற தெளிவான நம்பிக்கையில், இத்தனை நாள் அடக்கிவைத்திருந்த துக்கமெல்லாம் பீறிட்டெழ, நெஞ்சிலடித்து அம்மா கதறத் தொடங்கிவிட்டா!!

“ நாசமாய்ப் போவான்கள்…..என்ரை பிள்ளையையுமெல்லோ நாசமாக்கிப் போட்டுப் போறான்கள்! மகனே!.....நானினி உன்னை எங்கை போய்த் தேட…….எப்பவடா இனி உன்னோட நான் பேச…….. என்று பின்வளவில் குந்தியிருந்து அம்மா குழறிக்கொண்டேயிருந்தா!

எனக்கு கண்களிற்குள் நீர் முட்டிக்கொண்டு வந்து விட்டது! ஆயினும் யாரும் யாரையும் அழ வேண்டாமென்று தடுக்கவில்லை!!


எழுதியவர்:-
சந்திரா. ரவீந்திரன்.

(குறிப்பு:-இவ் உண்மைச் சம்பவம் சிறுகதையாக, லண்டனிலிருந்து வெளியாகும் “யுகம்மாறும் இதழில் 1999ம் ஆண்டு ஆனிமாதம் பிரசுரமாகியிருந்தது. பின்னர் ஈழமுரசு பத்திரிகையிலும் இக் கதை மறுபிரசுரமாக்கப்பட்டிருந்தது)

Monday, October 25, 2004

அவர்கள்

- வி.உஷா -

அம்பையின் கதையில் படித்ததுதான் அவள் நினைவுக்கு வந்தது.

வயதான பெண் அவள். வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறாள். உடல் ஒடுங்கிப் போயிருந்தாலும் உள்ளம் பழைய தினங்களைக் கிளறிப் பார்த்தபடியே இருக்கிறது. இத்தனை வருடங்கள் நம் வாழ்க்கை எப்படி ஓடியது என்று அவள் யோசிக்கிறாள்.

கிலோ கிலோவாக கோதுமை மாவு பிசைந்தது, உருளைக்கிழங்கு வேகவைத்தது, வெங்காயம் நறுக்கியது... என்று ஒரே நினைவுகள்தான் மாறி மாறி வருகின்றன. சமையலறை தவிர வேறு எந்த எண்ணமும் அவளுடைய உள்ளுணர்வுகளில் பதிவாகவில்லை. ஸ்தம்பித்துப் போகிறாள்.

அம்பையில் கதையில் வந்த அந்தப் பெண்மணிக்கும் தனக்கும் என்ன வித்தியாசம் என்று அருணா நினைத்துப் பார்த்தாள்.

வலித்தது.

ஒரு வித்தியாசமும் இல்லை. சொல்லப்போனால் இன்னும் கூடுதல் சுமைகள் தூக்குகிற கழுதையாக ஆகிப் போயிருக்கிறாள். அந்தப் பெண்மணிக்காவது அவள் உழைப்பு சமையலறையுடன் முடிந்து போயிருந்தது. தனக்கு அப்படியல்ல என்று நினைத்தபோது சுயவிரக்கத்தாலும் அவமானத்தாலும் அவள் சிரம் தாழ்ந்தது.

‘‘அருணா...’’

சம்பத்தின் குரல் ஓங்கிக் கேட்டது.

முகத்தோடு சேர்த்து கலங்கிய விழிகளையும் துடைத்துக் கொண்டு அவள் அவனிடம் போனாள்.

‘‘என்ன இது?’’ என்றான் தட்டைக் காட்டி.

‘‘ஏன்..? ரவா உப்புமா..’’

‘‘எனக்குப் பிடிக்காதுன்னு தெரியுமில்லையா உனக்கு?’’

‘‘ஒருநாள் சாப்பிடக்கூடாதா? வெங்காயம், தக்காளின்னு சேர்த்து கிச்சடியாத்தானே செஞ்சிருக்கேன்?’’

‘‘சாப்பிட்டுதான் தீரணும்கிறியா?’’

‘‘ஜஸ்ட் ஒரு நாள்..’’

‘‘ஒருநாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்ங்கிறியா?’’

‘‘மாவு அரைக்க நேரமில்லே... இந்த வாரம் ஸண்டே முழுக்க விருந்தாளிகள்.. சமையல், டிபன், காப்பின்னு கிச்சனே கதின்னு கெடந்தேன்.. முந்தாநாள் அடை ஆச்சு.. நேத்திக்கு அரிசி உப்புமா.. இன்னிக்குதான் ரவா உப்புமா.. அதுவும் ரொம்ப நாள் கழிச்சு..’’

திடீரென்று அவன் எழுந்தான். கையை உதறினான். வாஷ் பேசினில் கை நீட்டி அலம்பிக் கொண்டான்.

அவளிடம் வந்து நின்றான்.

‘‘நிறுத்த மாட்டியா பேச்சை? பதிலுக்கு பதில் பேசிக்கிட்டேதான் இருப்பியா? வேணும்னேதானே இப்படி பண்ணறே? சொல்லு’’ என்றான்.

சடாரென்று முகம் சிவந்தது. பேசி முடிப்பதற்குள் உதடுகள் துடித்துவிட்டன.

அமைதியாக அவள் நின்றாள். உள்ளே வெப்பம் உருவாகிக் கொண்டிருந்தது. இந்த எட்டு வருடங்களாக இதே டைனிங் டேபிளில், இவனுக்கு எவ்வளவு ரொட்டிகளும் கூட்டுகளும் வத்தக்குழம்புகளும் சாம்பார்களும் செய்து சுடச்சுட பரிமாறியிருக்கிறாள்.? எத்தனை தேங்காய் துருவி, எவ்வளவு வறுத்து அரைத்து அத்தனையும் ருசிருசியாக.. சத்துள்ளதாக.. புத்தம்புதிதாக..

ஒரு நாள், ஒரே ஒரு நாளாவது பாராட்டு வந்திருக்குமா? ‘‘இந்த வெங்காய பஜ்ஜி பிரமாதம் அருணா!’’ என்று ஒரே ஒரு வரி அங்கீகாரமாவது கொடுத்திருப்பானா?

‘இப்படியெல்லாம் பிரமாதமாய் சமைத்துப்போட வேண்டியது உன் கடமை. ரசித்தாலும் அதை வெளிக்காட்டாமல் மவுனமாக சாப்பிட வேண்டியதுதான் என் வேலை. முடிந்தால் அதில் குற்றம் குறை கண்டுபிடித்துச் சொல்வேன். ஏன் தெரியுமா? மனைவிகளையெல்லாம் வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவேண்டும். இல்லையென்றால் நம் தலைமீது தேங்காய் உடைத்துவிடுவார்கள்!’

பெண்களைப் பற்றிய அவனுடைய முடிவான அபிப்ராயம் இது. மாற்றிக்கொள்ள விரும்பாத முரட்டுத்தனமான தீர்மானம்!

அழைப்பு மணியின் மெல்லிய குயிலோசை கேட்டது.

அவன் குளியலறையில் இருந்தான்.

ஈரக்கையைத் துண்டு எடுத்து துடைத்துவிட்டு அவள் வாசலுக்கு விரைந்தாள்.

திறந்தபோது மாதவன் நின்றிருந்தான்.

எதிர் ஃப்ளாட் இளைஞன். புதிதாக திருமணமாகி இளம் மனைவியுடன் குடித்தனம் செய்பவன்.

புன்னகையுடன், ‘‘யெஸ் மாதவன் சார், உள்ளே வாங்க..’’ என்றாள் அருணா.

அவனும் முறுவலித்துவிட்டு, ‘‘ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா மேடம்?’’ என்றான் மென்மையாக.

‘‘சொல்லுங்க..’’

‘‘சரிதா மார்க்கெட்டுக்குப் போயிருக்கா... எனக்கு ஒரு அர்ஜென்ட் கால் வந்ததால, நான் உடனே சைட்டுக்குப் போயாகணும்.. அவ வந்தா இந்த சாவியைக் கொடுத்துடுங்களேன்.. முடியுமா? ப்ளீஸ்..’’ என்றான் கெஞ்சுவதைப் போல.

‘‘இதென்ன மாதவன் சார் இவ்வளவு தயக்கம் உங்களுக்கு? ஆஃப்டர் ஆல், இட்ஸ் மை ட்யூட்டி ஆஸ் எ நெய்பர்.. குடுங்க...’’

‘‘தாங்க் யூ மேடம்.. வெரி கைன்ட் ஆஃப் யூ.. ஸீ யு.. பை பை..!’’ சிறுவனைப் போல் அவன் படிகளில் இறங்கி விரைகிற சுறுசுறுப்பைப் பார்த்தபடி புன்னகையுடன் அவள் திரும்பியபோது..

சம்பத் நின்றிருந்தான்.

‘‘எதுக்கு வந்தான்?’’ என்றான் காட்டமாக.

‘‘இதோ இதுக்காக..’’ அவள் விரல்கள் சாவியை எடுத்துக் காட்டின.

‘‘நீயே வாங்கிப்பியா? என்னைக் கூப்பிட மாட்டியா? எவன் வந்தாலும் நீயே இளிச்சுக்கிட்டுபேசுவியா... பெரிய......... நினைப்பா?’’

தோட்டாக்களைப் போல சீறி வந்த அந்த வார்த்தைகளின் வேகம் தாங்காது அவள் ஸ்தம்பித்துப் போய் நின்றாள்.

திகுதிகுவென்று சொக்கப்பனை போல உடல் எரிந்தது. மண்புழுவை விட அற்பமாக ஒரு பிறவியெடுத்து, அவன் கால்களுக்குக் கீழே நசுங்குகிற மாதிரி அவலமான உணர்வுடன் அவள் துடித்தாள். இன்னும் ஏன் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற ஒரே கேள்வி மட்டும் கத்தியின் முனை போல குத்திக் கொண்டிருந்தது.

சம்பத் இரு கைகளாலும் முகத்தை வேகமாக தேய்த்துக் கொண்டான். உஸ்ஸென்று சப்தத்துடன் மூச்சுவிட்டான்.

மிக நெருங்கி அவள் பக்கத்தில் நின்றான்.

அவள் விரல்களைப் பற்றியபடி ‘‘பொண்ணுன்னா பூ மாதிரி இருக்கணும் அருணா.. பூ கூட இல்லே, மொட்டு மாதிரி அவ்வளவு ஸாஃப்ட்டா இருக்கணும்.. குரலே வெளில கேக்கக்கூடாது.. நடந்தா பூமி அதிராம, சிரிச்சா பல்லு தெரியாம.. அதுதான் அழகுடி அருணா! அதுதான் எனக்குப் பிடிச்ச அழகு.. எங்க பாட்டி அப்படித்தான் இருந்தா, எங்க அம்மா அப்படித்தான் இருந்தா.. நீயும் அப்படி இரேண்டி அருணா! அப்படி இருந்தாத்தாண்டி எனக்குப் பிடிக்குது.. புரிஞ்சுதா? புரியணும்.. இத்தனை வருஷம் புரியலேன்னா இப்பவாவது புரிஞ்சுக்கோ..’’ என்றவன், அவள் கண்களை அழுத்தமாகப் பார்த்துவிட்டு விருட்டென்று திரும்பிப் போனான்.

அப்படி ஒரு சம்பவம் தன் வாழ்க்கையில் நடக்கும் என்று அருணா எதிர்பார்க்கவில்லை.

ராத்திரி சமையலுக்குக் கீரையை என்ன செய்யலாம், பூசணியை என்ன செய்யலாம் என்று யோசித்தபடி வேகமாக வீடு வரும் வழியில் திடீரென்று அந்த பைக் ஆள் எதிரில் வந்ததும், கத்தியைக் காட்டி மிரட்டியதும், செயினை கத்திமுனையில் பறித்துக் கொண்டு போனதும் கண்கட்டுவித்தை போல நடந்து முடிந்துவிட்டது!

ஏழு மணிக்குத்தான் சம்பத் வீட்டுக்கு வந்தான்.

அம்பு போல பாய்ந்து அவளிடம் நின்றான்.

‘‘செயின் திருடு போச்சாமே? பைக்ல வந்து மிரட்டி வாங்கிட்டுப் போனானாமே.. நிஜமாவா... நிஜமாவா?’’ என்றான் வியர்வை கொப்புளிக்க.

அமைதியுடன் நிமிர்ந்தவள் ‘‘ஆமாம்..’’ என்றாள் நிதானமாக..

‘‘என்ன பொண்ணு நீ?’’ என்றான் மிகவும் எரிச்சலுடன். ‘‘ஒவ்வொருத்தியும் ராக்கெட்ல போறா, ப்ளேன் ஓட்டறா... ஏன், நம்ம கிராமத்துப் பொண்ணு லாரியும் ட்ராக்டரும் ஓட்டுது.. இப்படியா கோழையா இருக்கறது... எதிர்ல வந்து நிக்கற திருடன்கிட்ட செயினை கழட்டி குடுத்துகிட்டு? ஆர் யு நாட் அஷேம்ட்?’’

அருணா அவனையே பார்த்தாள்.

மிக மென்மையான புன்னகை ஒன்று மிக நிதானமாக அவளுடைய அதரங்களிலிருந்து வெளிப்பட்டது.

- வி.உஷா -
Quelle-kumutham

Sunday, July 11, 2004

இரண்டாம் ஜாமங்களின் கதை - 6

சல்மா

திடீரென அன்று மைமூன் வாந்தி எடுக்கவும் கதீஜா ஓடிவந்து ஆமினாவை அவளது வீட்டிலிருந்து கூட்டிப் போனாள். வரும் வழியில் "நீ வந்து அவ கிட்டக் கேளு பாவிமக எதையுமே சொல்ல மாட்டேங்கிறா" என நடுக்கமுற்ற குரலில் சொல்லியபடி கையில் அரிக்கேன் விளக்கோடு அவர்கள் தெருவில் இறங்கி நடந்து செல்லும் பொழுது, தெருவெங்கும் இருள் கலந்து கிடந்தது. யாராவது பார்த்து "என்ன இந்நேரத்துல எங்கெ போற ஆமினா" என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என யோசித்தபடியே மெதுவாக அடியெடுத்து வைத்து நடந்துகொண்டிருந்தவளுக்குச் சலிப்பாக இருந்தது. இந்த வயதில் தான் பிள்ளை பெற்றுக் குடும்பம் நடத்துவதே பெரிய விஷயமாக இருக்கும்பொழுது இவளுடைய பிரச்சினைகளை வேறு தலையில் சுமக்க வேண்டியிருக்கிறதே என்று. கல்யாணம் முடிந்து விட்டால் அவனோடு வாழ்வதைத் தவிர வேறு நினைப்பு பெண்களுக்கு வருமா என்பதையே மைமூனிடமிருந்துதான் தெரிந்துகொண்டாள். ஊரில் தலைகாட்ட முடியாத கேவலத்தைத் தன் குடும்பத்திற்குத் தந்துவிட்ட பிறகு அவள் உயிரோடு இருக்கத்தான் வேண்டுமா என்றிருந்தது இவளுக்கு. வீட்டை நெருங்கிப் படலைத் திறந்து மெதுவாக உள்ளே நுழைந்தார்கள் இருவருமாக. அத்தாவுக்கு எதுவும் தெரியக் கூடாது, ரொம்பவே மனமொடிந்துபோவார் என்கிற கவலை வேறு அவளை அரித்தது. இவள் தலாக் வாங்கின ஒரு கேவலம் போதாது என்று இது வேறா என்று அவர் உயிர் போய்விடும். இந்த இக்கட்டிலிருந்து எப்படித் தப்பிப்பது என்கிற எண்ணம் வேறு சேர்ந்துகொண்டிருக்க, தெருவில் நாய் ஊளையிடும் சப்தம் பயத்தை உண்டுபண்ணிற்று. இந்நேரம் சொஹ்ரா தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு அழுதால் கணவனும் எழுந்து தன்னைத் தேடுவான் என நினைத்துக்கொண்டவள், விஷயம் தன் மாமியார் ஒருத்திக்கு மட்டும் தெரிந்தால் போதுமே, வேறு வினையே வேண்டாம் என்றெல்லாம் நினைத்தபடி மைமூன் படுத்திருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.

மறுநாள் மாலை வீட்டு மாட்டு வண்டியைப் பண்ணையாள் மருது மூலம் கட்டச் சொல்லியிருந்தாள். அவனுடைய மனைவி முருகி மூலமாகப் பக்கத்து ஊரிலிருக்கும் மருத்துவச்சியைப் பற்றித் தெரிந்துகொண்டு விட்டிருந்தார்கள். முருகி சொன்னாள் "அவளால ஆகாதது எதுவுமேயில்லை" என்று. தானே போய் மாட்டு வண்டியில் கையோடு கூட்டி வருவதாகவும் சொன்னாள். பக்கத்து ஊர் என்றாலும், இப்பொழுது போனால் வருவதற்கு இரவு பத்து மணிக்கு மேலாகும். அதுதான் சரியான நேரமும்கூட என்பதனால் மருதுவும் முருகியும் போயிருந்தார்கள். இருள் நாலாபுறமும் பரவ இரவு வந்து கொண்டிருந்தது. சொஹ்ராவுக்கு சீக்கிரமே உணவூட்டித் தூங்க வைத்திருந்தாள். இஸ்மாயில் வியாபார விஷயமாக ஊரிலில்லை என்பதால் தோதாக இருக்கும் என்று இந்த நாளைத் தேர்ந்தெடுத்திருந்தாள் என்றாலும் அவளது இளம் மனம் கட்டுக்கடங்காதபடிக்குப் பயம் கொண்டிருந்தது.

நடக்கவிருக்கும் செயலின் விபரீதம் முழுமையாக மனதில் படிய மறுத்தது. இதை விட்டாலும் வேறு வழி இந்தக் கிராமத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. தங்கையின் வயிற்றுப் பாரம் கரைந்தால் போதுமென்றிருந்தது. ஊரில் இவள் உண்டாகியிருப்பது தெரிய நேர்ந்தால் அதன் விளைவுகளை நினைக்கையிலேயே மனம் நடுங்கிற்று. அக்குழந்தையைப் பெற்றெடுக்க முடியாத நிலையில் இதைத்தான் செய்ய வேண்டும். அவளை வேறொரு இடத்தில் உடனடியாகக் கட்டிக் கொடுப்பதாக இஸ்மாயில் சொல்லியிருக்கிறான். தலாக் வாங்கின இத்தா மைமூனுக்கு முடியட்டுமென்றுதான் காத்திருந்தார்கள். அதற்கிடையில் இந்தக் குழந்தை எதற்காக வந்து ஜனிக்க வேண்டும் என்றெல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

ஊர் அடங்கிய பிறகு மெதுவாக தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினாள். நிலவொளி அதிகமில்லாதது வசதியாக இருந்தது. நடப்பதற்குச் சிரமமாக இல்லையெனினும் தரையைக் கூர்ந்து பார்த்தபடியே நடந்தாள், கையில் வெளிச்சத்திற்கென்று விளக்கு எதுவும் எடுத்து வரும் துணிவு இல்லை. யாராவது பார்த்துவிடக்கூடும் எனப் பயமாக இருந்தது. அடுத்த தெருதான் என்பதால் ஒன்றும் பிரச்சினையில்லை. வீட்டை அடைந்து படலைத் திறந்து கொல்லைப்புறத்தை நோக்கிப் போனாள். அங்கே பின்புறத் திண்ணையோடு இருளில் முருகியும் ஏழு வயதான பொண்ணும் குத்தவைத்து உட்கார்ந்திருந்தார்கள். இவளைப் பார்த்ததும் எழுந்து நின்று இவள் முகத்தைப் பார்த்தார்கள். இவள் தன் வாயில் கைவைத்து யாரும் பேச வேண்டாமென்பதுபோல சைகை செய்தாள். வீட்டின் பின்புறக் கதவு தாழிடப்படாமல் சும்மா சாத்தியிருந்தது. கதவைத் தள்ளியதும் உடனே திறந்துகொண்டது. இவள் முதலில் உள்ளே நுழைந்து திரும்பிப் பார்த்தாள் பிறகு இவர்களும் உள்ளே நுழைந்ததும் கதவைத் தாழிட்டுவிட்டு அம்மாவைத் தேடினாள்.

கதீஜா கூடத்தில் தூணில் உடலைச் சாய்த்து அமர்ந்திருந்தாள் இவர்கள் வருகையை எதிர்பார்த்தபடி. இவர்களைப் பார்த்ததும் தட்டுத்தடுமாறி எழுந்து தூணைப் பற்றிக்கொண்டாள். "அவ எங்கே?" என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டாள் ஆமினா. மச்சு மேலே என்று கை காட்டிவிட்டு, அதை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் கதீஜா. நடை தளர்வுற்று சோர்ந்திருந்தது. இப்பிடிப் பாதி ராத்திரியில பழிய எடுக்கிறாளே என தனக்குள் நொந்து கொண்டவளுக்கு ஆமினாவை நினைக்கையில் கண்ணில் நீர் கோர்த்தது. என்பொன்னுமக தங்க மக இந்த வயசுல இம்புட்டுக் காரியமா இருக்காளே என்று நினைத்தாள். அதே சமயத்தில் மைமூனின் வயதும் ஞாபகத்திற்கு வந்தது. "அவளுக்கு இந்த பிஞ்சு வயித்தில் இப்படி ஒரு பிள்ளைய ஏண்டா அல்லா உண்டாக்கினே" என்று அரற்றிக்கொண்டாள். அவர்கள் நால்வரும் ஒருவர்பின் ஒருவராக மரப்படிகளில் ஏறி மாடியை அடைந்தார்கள். அங்கே மெலிதான விளக்கொளியில் சுருண்டுபோய் படுத்திருந்தாள் மைமூன். "அல்லா இவள பாக்கையில ஏங்கொலையே புடிக்குதே" என்று சொல்லிப் பொங்கிவந்த அழுகையைச் சேலைத் தலைப்பை வாய்க்குள் வைத்து அடக்கினாள் கதீஜா. "சரி சரி அழாதீங்க" என்றபடி தன் தாயைத் தேற்றினாள் ஆமினா தன்னுள்ளிருந்த பயத்தை வெளிக்காட்டாதபடி. இவர்களுடைய அழுகையில் கண் விழித்தெழுந்த மைமூன் மிரளமிரள விழித்துக்கொண்டிருந்தாள். அவளது மெலிதான தேகம் மெதுவாக நடுங்கிக்கொண்டிருப்பதை விளக்கொளியில் பார்க்கமுடிந்தது.

ஆமினா இப்பொழுதுதான் மருத்துவச்சியை நேராகப் பார்த்தாள். அவளுக்கு நாற்பத்தைந்து வயதிருக்கும் என்று தோன்றியது. சட்டை போடாமல் சேலையைச் சுற்றிக் கட்டியிருந்தாள். காதுகளில் சிகப்புக் கல் வைரத்தோடு மின்னியது. கைகளிரண்டிலும் தேளின் படம் பச்சை குத்தியிருந்தது பொருத்தமானதாக இருந்தது. அவளது முகத்திலும் கண்களிலும் ஒருவிதமான அலட்சிய பாவமிருந்தது. இது தனக்கொன்றும் புதிதில்லை என்கிற மாதிரி. அவள் ஆமினாவையும் கதீஜாவையும் கேலி செய்யும் விதத்தில் பார்த்து முறுவலிப்பது போலிருந்தது. இதற்கெல்லாமா பயப்படுவீர்களென கேட்காதது தான் குறை. "சரி சரி நேரமாச்சு, நான் வந்த வேலையைப் பார்க்கறேன்" என்று தன் பாட்டுக்குச் சொல்லிவிட்டுத்தான் அக்குளில் இடுக்கியிருந்த பையை எடுத்துத் தரையில் வைத்து, அதிலிருந்து ஒரு எருக்கஞ்செடியின் தண்டை எடுத்து வெளியில் வைத்தாள். பிறகு ஒரு நூல் கண்டு, இறுதியாக ஒரு களிம்பு டப்பி. அவள் அதன் பிறகு செயல்பட்ட விதம் தம் அவள் கைதேர்ந்தவள் எனச் சொல்லக்கூடியதாக இருந்தது. மைமூன் அதனை வெறித்துப் பார்த்தபடியிருந்தாள். அவளிடமிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை. பயமும் வார்த்தைகளும் தனக்குள் இறுகிக் கிடக்க விரக்தியோடுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இலைகள் நீக்கிய எருக்கஞ்செடியின் தண்டின் ஒரு முனையில் தான் கொண்டுவந்திருந்த டப்பியிலிருந்து கருமையான களிம்பைத் தோய்த்தெடுத்தாள், மறு முனையில் நூல் கண்டிலிருந்து நூலைப் பிரித்தெடுத்து நன்கு இறுக்கிக் கட்டித் தன் விரலில் சுற்றிக்கொண்டாள். குச்சியின் அடிப்பகுதியோடு சேர்த்து நூல் அவள் விரல்களுக்குள் இறுக்கமாகப் பிடிக்கப்பட்டிருந்தது. தான் செயல்படலாமா என்கிற விதத்தில் அவள் இவர்களது முகத்தை ஏறிட்டுப் பார்க்க, ஆமினாவுக்குத் தன்னுள் இதயத்திலிருந்து ஏதோ ஒன்று நழுவி விழுவதைப் போலிருந்தது. அவ்வுணர்வு குற்றம் சார்ந்ததாகவோ இழப்பு சார்ந்ததாகவோ இல்லாமல், இயலாமையின் ஒட்டு மொத்த உணர்வாக அது மாறிக்கொண்டிருந்தது. கடவுளால் தான் கைவிடப்பட்டு விட்டதான ஒரு மனநிலையும் இனி என்னவும் நடக்கலாம் என்கிற அவநம்பிக்கையும் ஒன்றுசேர அவள் திடீரென தன் தங்கையை இறுகக் கட்டிக்கொண்டு அழத்தொடங்கினாள். ஒரு குழந்தையைப் போன்ற அவளது மேனியெங்கிலும் பரவிக்கொண்டிருந்த நடுக்கம் இவளையும் பற்றிக் கொள்ள மௌனமான, உள்நோக்கியதொரு கேவல் இருவரிடமிருந்தும் எழத் தொடங்கியது. மருத்துவச்சியின் கடினமான உரமேறிய கைகள் ஆமினாவின் தோளைப் பற்றி பலவந்தமாக இழுத்த பிறகு தன்நிலை உணர்ந்தவள், "பயப்படாதேம்மா, ஒண்ணும் இல்ல நான் ஏதோ ஒரு ஞாபகத்துல அழுதேன். இனி உனக்கு ஒண்ணும் இல்ல. எல்லாப்பிரச்னையும் முடிஞ்சுடும் என்னம்மா" என்று தங்கையின் முகத்தைத் தன் புடவைத் தலைப்பால் துடைத்துவிட்டு அவளை தைரியப்படுத்த முயற்சித்தாள். அது எத்தனை செயற்கையாகவும் கேலிக்கூத்தாகவுமிருந்தது என்பதை அங்கிருந்தவர்களால் உணர்ந்துகொள்ள முடிந்தது. "சரி சரி நேரமாச்சு இல்ல, நான் எப்பொ முடிச்சிட்டு போறது" என்று மருத்துவச்சி அவசரப்படுத்தவும் அவர்கள் அவ்விடத்திலிருந்து விலகிக்கொள்ளத் தொடங்கையில், மைமூன் கூப்பிட்டாள் "அக்கா நீ மட்டும் ஏங்கூட இருக்கமாட்டியா" என்ற கெஞ்சலுடன். "இல்லம்மா நான் உன்கூடத்தான் இருக்கப்போறேன்" என்று அவள் கைகளைத் தன் கைகளுக்குள் எடுத்து வைத்துக்கொண்டாள் ஆமினா.

அடுத்த சில மணி நேரத்தில் மருந்து வைத்ததால் ஏற்பட்ட வேதனையில் அவள் துடித்ததும் அவளைக் கத்தவிடாமல் இவர்கள் நால்வருமாக மடக்கிப் பிடித்ததும் விடிய விடிய தொடர்ந்துகொண்டிருந்தது. அந்நேரத்தின் நினைவுகள் கொடியதாக, நரக வேதனையாக, பிறகு எவ்வளவோ நாட்கள் ஆமினாவைத் துன்புறுத்தியிருக்கிறது. ரத்தத்திட்டாக, சிதைந்து வெளியேறிய அச்சிசுவின் உயிரோடு மைமூனின் உயிரும் அடங்கிப்போய்விட மறுநாளில் காந்தியின் படுகொலை வெளிஉலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கையில், மைமூனின் மரணம் அந்த ஊரை பதறி எழச்செய்திருந்தது. ஆமினாவுக்குத் துக்கம் தொண்டையை அடைக்கக் கடுமையான வலி உண்டாயிற்று. தலையணை நனைந்துகிடக்க எழுந்து உட்கார்ந்தாள். தன் நினைவுகளால் நெடுந்தொலைவு பயணித்துவிட்டு மீண்டிருந்தது அசதியாக இருந்தது. விடியத் தொடங்கியாயிற்று என்பதை சேவல் கூவும் ஒலியும், பாங்கு சொல்லும் ஓசையும் உணர்த்திற்று. பக்கத்தில் படுத்திருந்த பிர்தவ்ஸின் முகத்தைப் பார்த்தாள். தன் அம்மாவைப் போன்ற அழகும் தங்கையின் பிடிவாதமும் அவளிடம் ஒன்று சேர்ந்திருப்பதாகத் தோன்றிற்று, அவளைப் போலவே இவளும் தன் கணவனை விலக்கி விட்டுத் திரும்பியிருக்கிறாள் என்பது நினைவுக்கு வந்து கடும் வெறுப்பு அவளுக்குள் மண்ட, கையூன்றி எழுந்தாள் தொழுக நேரமாகிவிட்டதை நினைத்தபடி.

தொடரும்

nantri - Ulagathamizh

Sunday, June 27, 2004

இரண்டாம் ஜாமங்களின் கதை - 4

சல்மா

சொஹ்ராவுக்குத் தன்னை ஒரு அப்பாவியாக எல்லோரும் நம்பிக்கொண்டிருப்பதை நினைத்து ரொம்பவும் ஆசுவாசமாக இருந்தது. தனது பெரும்பாலான உணர்ச்சிகளைத் தனக்குள்ளாகப் புதைத்து வைத்துக்கொள்ளவும், யாரும் தன்னைக் கிளறிவிடாமல் இருக்கவும் இந்த பிம்பம் அவளுக்குத் துணையாக இருந்தது. எப்பொழுதுமே அவள் தனது மனத்திலுள்ள எண்ணங்களை எளிதில் யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டாள். பிர்தவ்ஸைப்போல. பிர்தவ்ஸ் எதையும் உடனுக்குடன் போட்டு உடைப்பது போல வெளிப்படுத்திவிடுவாள். அதனால்தானே தனது வாழ்க்கையையும் இப்படி சீரழித்துக் கொண்டாள். யாரிடம் பகிர்ந்து என்னவாகப் போகிறது என்று நினைத்துத் தன் மனத்திற்குள் வைத்துக்கொள்வாள் எதையுமே.

தந்தை இஸ்மாயிலின் மவுத்திற்குப் பிறகும் நன்றாக இருந்த தன் குடும்பத்திடம் தனது திருமணத்திற்குப் பிறகு தன் கணவனால் நிகழ்ந்துகொண்டிருந்த அத்துமீறலான ஊடுருவல் குறித்து அவளுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லாமல்போயிற்று. தனது தாயும் தங்கையும் மென்று விழுங்கிக்கொண்டிருக்கும் வேதனை புரிந்தாலும், தன்னைக் கட்டிப்போட்டிருந்த இயலாமை அவளைச் செயலற்றவளாக ஆக்கியிருந்தது. அக்குடும்பத்திற்கென ஒரு பொறுப்பான ஆண்துணை இல்லாததால்தான் தன் கணவனிடமிருந்து அவர்களை விலக்கவோ, அவனது உதவிகளை மறுக்கவோ இயலாத நிலை உருவாகியிருந்தது. பிர்தவ்ஸ§க்கு மாப்பிள்ளை பார்த்தது, திருமணம் முடிந்தது, சீர் செய்தது என்றெல்லாம் நிறையக் கடமைகளும் செலவும் இருந்தன. இதையெல்லாம் வேறு யார் பார்க்கப்போகிறார்கள் இவனை விட்டால்? அதே சமயம் அவனிடம் எவ்வளவு நாள் அழுதிருக்கிறாள்: "நீங்க அங்கெ போய் வர்றது நல்லாவா இருக்கும்?", "தகப்பனில்லாத பிள்ளைக்குத் தகப்பனா இருக்கக்கூடாதா?", "வெளியில் தெரிந்தால் யார் அவளைக் கல்யாணம் செய்ய வருவாங்க" என்றெல்லாம்.

அவன் எதைத்தான் காதில் வாங்கியிருக்கிறான்! "நீயும் உன்னோட அம்மா வீட்டுல போய் இருந்துக்கறதா இருந்தா எனக்கு சரிதான்!’" என்று அலட்சியமாகச் சொல்லிவிடுவான்.

ஆனால் இவள் தனக்கு எதுவுமே தெரியாத மாதிரித்தான் தங்கையிடமும் தாயிடமும் இருந்து கொண்டிருந்தாள். நடந்து முடிந்த இந்தத் திருமணத்தின் சகல நோக்கங்களையும் இவளும் அறிவாள். இந்த மாப்பிள்ளையை முடிக்க இவள் ஒத்துக்கொள்ளவேயில்லை. கொஞ்சமாவது பொருத்தம் வேண்டாமா என்று அழுது தவித்துப்பார்த்தாள். "உங்க குடும்ப நிலைமைக்கு இவன் ஒத்துக்கிட்டதே பெரிய சங்கதி. உன் வேலையைப் பார். பொருத்தம் பாக்குறாளாம். பொருத்தம்" என்று சொல்லி விட்டான்.

பெண்ணாகப் பிறந்துவிட்ட பிறகு தன் சொல்லுக்கு யாரும் இங்கே மதிப்பு வைக்கப்போவதில்லை என்ற நிலையில் அவள் மௌனமாக இருக்க வேண்டியதாயிற்று. அதன்பிறகு நடந்தவை எல்லாம் அவசர கதியில் நடந்து முடிய, சொஹ்ரா ரொம்பவுமே மனம் ஒடுங்கிப்போய்விட்டாள் என்பதே உண்மை.

அந்த மாலை நேரம் கடுமையான வெப்பத்தைக் கொண்டதாயிருந்தது. பள்ளியிலிருந்து திரும்பிய ராபியாவுக்கு மற்றெந்த நாளையும்விட இன்று மிக முக்கியமானதாக இருந்தது. எல்லாப் பிள்ளைகளுக்கும்தான். ஏன் பெரியவர்களுக்கும் அப்படித்தான். இன்னும் சிறிது நேரத்தில் இருள் கவியத் தொடங்கிவிடும். அப்பொழுதுதான் வானில் ரமலான் பிறை தோன்றும். அதன் பிறகு அடுத்த ஒருமாத காலத்திற்கு ஒரே கொண்டாட்டம்தான். இந்த ரமலான் மாதத்தில் செத்துப்போவதற்கும் கூட கொடுத்துவைத்திருக்க வேண்டுமாம். நேரடி சொர்க்கம் நிச்சயமாம். இதெல்லாம் அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறாள். அதோடு தினமும் வீடுகளில் தின்பதற்குத் தீனி நிறையக் கிடைக்கும். இவையெல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் இம்மாதத்தில் அல்லா பேய்களை வானத்தில் கட்டிப்போட்டு வைத்துவிடுவான் என்பதுதான். குழந்தைகளுக்கு இதைவிட சந்தோஷம் தரும் விஷயம் வேறெதுவும் இருக்க முடியாது இல்லையா?

சாயங்காலத்திலிருந்தே அவளும் மதினாவும் இன்னும் சில பிள்ளைகளுமாக அவளது வீட்டுக்கருகிலிருந்த காலியிடத்தில் ஆளுக்கொரு கல்லைத் தூக்கிப்போட்டுக்கொண்டு அதில் குத்தவைத்து உட்கார்ந்திருந்தார்கள். ராபியாவின் கெண்டைக்காலில் கொசுக்கடிக்க ஆரம்பிக்க, பல்லைக் கடித்தபடி சொறிந்துகொண்டிருந்தவாறு மதினா கேட்டாள், "ஏன் ராபியா இன்னிக்கு அவசியம் பிறை வருமில்ல" என்று. அவளுக்கு ஏதோ சந்தேகமாக இருந்தது. அது தங்களை ஏமாற்றிவிடுமோ என்று. அவளது நீளமான முகத்தில் ஏமாற்றத்தின் சாயல் படர்ந்திருந்ததைக் கவனித்த ராபியா அவளுக்காகவேனும் இன்றே பிறை தெரிந்துவிட வேண்டும் என விரும்பினாள். அவளது முக வாட்டத்தைத் தற்சமயத்திற்காவது போக்க வேண்டுமென்கிற நினைப்பில், "வரும், கட்டாயம் வரும்" என்றவள், "அப்படித் தெரியலைன்னாலும் கூட சிலோன் ரேடியாவுல சொல்வாங்க இல்ல" என்றாள். ஆறுதல் சொல்கிற தோரணையோடு.

"ஆமா உங்க வீட்டுல மாவு இடிச்சாச்சா?" என்று கேட்டாள் மதினா. "உம் இடிச்சாச்சே. உங்க வீட்டுல இடிச்சதுக்கு மறுநாள் அதைக்கூட மறந்துட்டியா" வியப்பு மேலிடக் கேட்டாள் ராபியா.

"அடடா, மறந்தேபோயிட்டேன் பாரு" என்று தன் நெற்றியில் லேசாகத் தட்டிக்கொண்டாள் மதினா.

அதன்பிறகு அவர்கள் மௌனமாக இருந்து வானத்தைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். ராபியாவுக்கு மாவு இடிப்பது பற்றி ஞாபகம் வந்தது. ரம்ஜான் துவங்க ஒருமாதம் முன்பே அதற்கு முன்னேற்பாடாக வீடுகளில் மாவு இடிக்கத் துவங்கிவிடுவார்கள்.

ராபியாவுக்கு ரொம்பவே கொண்டாட்டமாக இருக்கும். அந்த வேலை உண்டு பண்ணுகிற பண்டிகை ஞாபகங்கள் இவளுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும். முன்னாடியே அம்மாவும் பெரியம்மாவும் நெல் அரைக்க ஏற்பாடு செய்வார்கள். முதலில் ஆள்விட்டு நெல்லைப் புடைப்பார்கள். பிறகு அதை அரைத்து வரும்படி செய்து, தேவையான அளவு மாவுக்கு எடுத்துக்கொண்டு, மீதியை மறுபடி மிஷினில் கொடுத்து இரண்டாக உடைத்து வர அனுப்புவார்கள். அதை நோன்புக் கஞ்சிக்கென ஒதுக்கி வைத்துவிடுவார்கள். முதல் நாளிலிருந்தே ராபியா பக்கத்து வீடுகளுக்குச் சென்று உலக்கைகள், மாவு சல்லடைகள் உட்காரும் பலகை, மாவு வறுக்கும் ஓடு எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்ப்பாள். ஒவ்வொன்றிலும் பத்து, பத்து வேண்டியிருக்கும். மறுநாள் அதிகாலையிலேயே பண்ணையார் முதல் நாளே சொல்லி வைத்திருந்து வரச்சொல்லியிருந்த கூலிப்பெண்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள். அம்மாவும் பெரியம்மாவும் காலை மூன்று மணிக்கே எழுந்து அரிசியை அண்டாக்களில் கொட்டிக் களைய ஆரம்பிப்பார்கள். களைந்த அரிசியை நீர் வடிய கூடைகளில் அள்ளிப் போட்டுவிட்டு கழனித் தண்ணியை மாடுகளுக்கென்று குழுதாடியில் நிரப்பிவிட்டு மறுபடி மறுபடி அரிசி வெள்ளை வெளேரென மாறும்வரை களைந்து ஊறவைத்துவிடுவார்கள்.

றைமா பெரியம்மா, "ராபியா மாதிரி அரிசி பளீர் வெள்ளையா மாறணும்" என்று சொல்லி சிரிப்பாள். இவளுக்குப் பெரியம்மா சும்மா தனக்காகச் சொல்கிறாள் எனத் தோன்றும். இரவெல்லாம் அம்மாவைத் தூங்கவிடாமல் ராபியா கெஞ்சிக்கொண்டிருப்பாள். அரிசி களைய எழுந்திருக்கும்பொழுது தன்னையும் எழுப்பிவிடச் சொல்லி. அம்மா ஒத்துக்கொள்ள மாட்டாள். காலையில மூணு மணிக்கி எந்திரிச்சு என்ன செய்யப்போறே நீ என்று. அவளை றைமா பெரியம்மாதான் எழுப்பி விடுவாள்.

அதிகாலை ஐந்து மணிக்குப் பக்கத்து ஊர்களிலிருந்து கூலிக்கு வரும் பெண்கள் வெயில் வரும் முன் உலக்கையால் அரிசியைக் குத்த ஆரம்பிப்பார்கள். வீடெல்லாம் அதிரும். மூச்சை தம் பிடித்து நான்கு நான்கு பேராக இடிக்கத் துவங்க, மற்றவர்கள் சலிக்க ஆரம்பிப்பார்கள். சலித்த பச்சை மாவை முற்றத்தில் வெயில் இல்லாத இடத்தில் அடுப்பு மூட்டி ஒருத்தி வறுப்பாள். பிறகு வறுத்த மாவை அடுப்படிக்குள் பாயில் கொட்டி ஆறவைப்பார்கள். வீடே போர்க்களமாக மாறியிருக்கும். புகையும் தூசியும் கண்ணைப் பிழிந்தெடுக்க, வீட்டுக்குள்ளேயே ஓடிக்கொண்டிருப்பாள் ராபியா, பச்சை மாவை அள்ளித் தின்றுகொண்டு. வயித்துக்குப் பச்சை மாவு ஒத்துக்கொள்ளாது என்று அம்மா அவளை அதட்டியதும், வறுத்த மாவைத் தின்றுகொண்டிருப்பாள். வீட்டில் ஒவ்வொருவருக்கும் செய்ய ஒரு வேலை இருந்து கொண்டேயிருக்கும். அத்தனை கூலிப் பெண்களுக்கு மத்தியில் மாவு இடிக்கவரும் ஒரே ஆண் சாத்தப்பன் மட்டும்தான். அவனைப் பார்த்தால் பெண் மாதிரிதான் தெரியும் இவளுக்கு. தனது உடம்பைப் பெண்ணைப் போலவே அசைத்து மாவு இடித்தபடி இடையிடையே பாட்டுப்படித்து ஆடிக்காட்டி எல்லோருக்கும் உற்சாக மூட்டுவான்.

சாயங்காலம்வரை நடந்துகொண்டிருக்கும் வேலைகளுக்கிடையில் அதிரசம் சுடுவதற்காக மாவு கிண்டத் தயார் செய்வார்கள். அம்மாவும் பெரியம்மாவும். நோன்பில் ஆடிப்போகும் பாக்கிஹாவுக்கு அதிரசமும் வைத்து ஓதவேண்டும். வெல்லம் போட்ட அதிரசமாவும் சீனி போட்ட அதிரசமாவும் தனித்னியே கிண்டி, வேடு கட்டி அறைக்குள் வைப்பார்கள். சூடாக அதிரச மாவு தின்பதற்கு இவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். அதற்கும் அம்மா அதட்டுவாள், சீக்கிரம் உக்காரப்போறே என்று. வீடெங்கும் மாவுத்தூசியால் நிறைந்து போயிருக்கும் இவளும் மாவு இடிக்க வந்த பெண்களும் பெரியம்மா, அம்மா அத்தனை பேருடைய உருவமும் பார்க்கையிலேயே சிரிப்பு பொங்கும் இவளுக்கு.

தலைமுடி உடம்பெல்லாம் மாவு பூசி பூச்சாண்டியைப் போல இருக்கும். எவ்வளவு தட்டி விட்டாலும் தலைமுடி நரைத்தது போலிருப்பது போகாது. இக்கோலத்தோடு தெருவில் போய் தன்னைத் தன்தோழிகளிடம் காட்ட ஆசைதான் என்றாலும் அன்றைய நாள் முழுக்க வீட்டுக் கதவு பூட்டப்பட்டே இருக்கும், வெளியாட்கள் உள்ளே வர முடியாதபடிக்கு. அம்மா சொல்வாள் "யாராவது இத்தனை மாவு காயிறதைப் பார்த்தால் திருஷ்டி வெச்சிடுவாங்க" என்று.

அதன் பிறகு வீடெல்லாம் கழுவி முடித்து அவர்களுக்குக் கூலியைக் கொடுத்து அனுப்பிவிட்டு இவர்களும் குளித்து முடிக்க இரவாகிவிடும். அன்று மட்டும் அத்தாவும் பெரியத்தாவும் சாப்பிட வீட்டுக்கு வராமல் கடையிலிருந்துகொண்டு கேட்டு அனுப்புவார்கள். இரவெல்லாம் கால் வலி தாங்காமல் அம்மாவும் பெரியம்மாவும் முனகிக்கொண்டிருப்பார்கள். இவளுக்குக் கஷ்டமாக இருக்கும். "எதுக்காக இவ்வளவு பாடுபட்டு மாவு இடிக்கணும்" என்று அம்மாவிடம் கேட்பாள்.

"நோன்பு திறந்திட்டு ஆம்பளைங்களுக்கு சாப்பிட இடியாப்பம் சுடணும் இல்லெ அதுக்காகத்தான்" என்பாள் அம்மா.

ரம்ஜான் மாதம் ஆரம்பமாவதற்கு முதல் மாதத்திலேயே அனேகமாக ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மாவு இடிக்கும் ஓசை ஒருவித ராகத்துடன் ஊரெங்கும் சுற்றிச் சுற்றி ஒலித்தபடி இருக்கும், ரம்ஜானை வரவேற்கத் தயாராக.

அவர்கள் நெடுநேரமாகவே வானை அண்ணாந்து பார்த்து சோர்ந்து போய்விட்டார்கள். பிறை தெரிந்தவுடன்தான் சஹருக்கான ஏற்பாடுகளில் இறங்க வேண்டும். வீட்டில் சமைக்க ஆரம்பிக்க, இவள்தான் கடைக்குப் போய் வாழைப்பழமும் முட்டையும் வாங்கி வர வேண்டும், சஹருக்காக.

ராபியா அலுப்புடனும் வருத்தத்துடனும் எழுந்துகொண்டு பாவாடையின் பின்புறத்தைத் தட்டி மணலை உதிரச் செய்தாள். "நான் சாப்பிடப்போறேன், பசிக்குது" என்று மதினாவிடம் சொன்னபடி நடக்க ஆரம்பித்தாள். "அப்ப பிறை வந்த விபரம் ரேடியோவுல கேட்டு சொல்லுவ இல்ல" - பின்னாடியிருந்து கத்தினாள் மதினா.

அவள் தன்னிடம் மதிப்பு வைத்துக் கேட்டது ராபியாவுக்குத் தாங்க முடியாத சந்தோஷத்தை உண்டாக்க, மற்ற பிள்ளைகளுக்கு மத்தியில் தான் ஒரு முக்கியமான ஆளாக இருப்பதுபோல உணர்ந்தாள். அதுவும் பக்கத்தில் அஹமது வேறு இருந்தான்.

"ஓ, சொல்றேன்" என்றாள் கர்வமாக. அஹமது தன்பாட்டுக்கு இருக்காமல், "நீ என்ன சொல்றது. இன்னும் கொஞ்ச நேரத்துல பள்ளிவாசல் மைக்குல மோதினார் பாவா சொல்லிருவாருல்ல, சும்மா எம்முன்னால பீத்திக்கிறான்" என்று.

மதினாவுக்கும், ராபியாவுக்கும் அவன் பேச்சு கடும் கோபத்தை உண்டுபண்ணினாலும் பதில் சொல்லாமல் வீட்டை நோக்கிப் போகத் துவங்கினார்கள்.

முதல் நோன்பு என்பதால் ராபியாவும் மதினாவும் நோன்பு வைத்திருந்தார்கள். அவர்களால் முப்பது நோன்பும் வைக்க முடியாது என்பதால், முதலாவது பதினைந்தாவது, இருபத்தி ஏழாவது, முப்பதாவது என்று விசேஷமான நோன்புகளைத்தான் வீட்டில் வைக்க அனுமதிப்பார்கள். காலையில் சாப்பிடும் வேலையும் இல்லை மதரஸாவும் இல்லை என்பதால் அவர்களிருவரும் சீக்கிரமாகவே ஸ்கூலுக்கு வந்துவிட்டார்கள், உமா இனிமேல்தான் வருவாள். பள்ளிக்கு இன்னும் ஒரு ஆசிரியர்கூட வந்திருக்கவில்லை. பள்ளியே வெறிச்சோடிக் கிடந்தது. வகுப்பறைக்கு வெளியில் பின்புறமாக இருந்த மாமர நிழலில் இருவரும் நின்றுகொண்டிருந்தார்கள். தரையோடு தாழ்ந்திருந்த கிளையில் தாவி ஏறி உட்கார்ந்த ராபியாவுக்கு, அம்மா இதைப் பார்த்தால் என்ன சொல்வாள் என்பது ஞாபகத்துக்கு வந்து சிரிப்புண்டாக்கியது. தனக்குள் சிரித்தபடி தான் அணிந்திருந்த பச்சை நிற சீருடையின் பின்பகுதியை லேசாகக் கை வைத்து அழுத்திப்பார்த்தாள். பிறகு மன நிம்மதியோடு கையை எடுத்து மரக்கிளையின் மீது வைத்து அதனை மெதுவாக ஆட்டிவிட்டுக்கொண்டாள். இவளைத் தொடர்ந்து மரக்கிளையில் ஏறி உட்கார்ந்த மதினா இவளது செயலின் அர்த்தம் புரியாமல் ராபியாவின் முகத்தை உற்றுப் பார்த்தாள். அவளது வட்ட முகம் ஏதோ கவலையினால் இருப்பது போலத் தோன்றிற்று.

"ஏன் ராபியா, இன்னைக்கு உங்க வீட்டுல ஸஹருக்கு என்ன சாப்பாடு?" என்றாள் மதினா.

சிறிது நேரம் யோசனை செய்வது போலிருந்துவிட்டு, "முதல் ஸஹருல்ல? அதனால பருப்பானமும். கறியும்தான்" என்றவள், "உங்க வீட்டுல" என்றாள்.

"எங்க வீட்டுலயும்தான்" என்ற மதினா, "நீ எத்தினி மணிக்கு எந்திரிச்சே சாஹர் நேரம்?" என்றாள்.

"நான் மூணுமணிக்கே எந்திரிச்சிட்டேன் தெரியுமா" என்றாள் ராபியா பெருமையாக. "சஹர் பொஸார நீ பாக்கலையா என்ன?" என்றாள்.

"ப்சி, நான் நாலுமணிக்குத்தான்" என்றாள் வருத்தத்துடன் மதினா. "ஆமா அப்பவே முழிச்சு என்ன செய்வியாம்?"

"எங்க அம்மா இரண்டரை மணிக்கே அலாரம் வச்சு எழுந்திரிச்சுருவாங்க, அந்த சத்தத்துல நானும் எழுந்திரிச்சிருவேன் இல்ல."

"அப்பவே எழுந்திரிச்சு உங்கம்மா என்ன செய்வாங்க?" கண்களை அகலத் திறந்து ஆச்சர்யமாகக் கேட்டாள் மதினா.

"அப்ப எழுந்தாத்தானே சரியா இருக்கும்? முதல்ல அடுப்பு மூட்டி சோறு ஆக்குவாங்க. சோறு வேகுறப்போ ஏலுச் செய்துட்டு தஜஜ்ஜத் தொழுவாங்க. அப்புறம் மத்த வேலைகளப் பாக்கறதுக்குள்ள நாலு மணி ஆயிரும் இல்ல" என்று தான் பார்த்தவற்றைப் பெரிய மனுஷத்தன்மையுடன் விவரித்தாள் ராபியா.

கொஞ்ச நேரம் இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. மதினாவுக்கு ஆதங்கமாக இருந்தது, சஹர் முஸாபரைப் பார்க்க முடியவில்லையே என்று. காற்று இதமாக வீசியது. மாமரத்திலிருந்து பூக்கள் உதிர்ந்து தரையில் விழுவதைக் கவனித்துக்கொண்டிருந்த ராபியா திடீரென நினைவு வந்ததுபோல, "ஆமா நீ வீட்டுப்பாடம் எழுதிட்டியா?" என்றாள்.

"இல்லை" அலட்சியமாக பதில் சொன்னாள் மதினா.

"ஏன், சார் அடிக்க மாட்டாங்க?" தன் பயத்தை வெளிப்படுத்தினாள் ராபியா.

"நான்தான் நோன்பு வச்சிருக்கேன் இல்ல, சார் அடிக்க மாட்டாங்களே" என்ற மதினா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிக்க அவளோடு சேர்ந்துகொண்டாள் ராபியாவும்.

ரம்ஜான் மாதத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் சிறு சலுகை ஆசிரியர்கள் யாரும் அடிக்கமாட்டார்கள் என்பதுதான். அந்தப் பெருமை எல்லாக் குழந்தைகளுக்குமே உண்டு.

மதினாவின் தலையில் செல்லமாகக் குட்டிய ராபியா, "நீ சரியான ஆளு" என்றவளின் குரலில், தான் மட்டும் வீட்டுப்பாடத்தைக் கை வலிக்க எழுதி விட்டோமே என்கிற ஆதங்கம் நிறையவே இருந்தது.

- தொடரும்

nantri - Ulagathamizh

இரண்டாம் ஜாமங்களின் கதை - 5

சல்மா

நடு இரவில் திடுக்கிட்டுக் கண் விழத்தாள் ஆமினா. அவளது கை அவளையறியாமலேயே அருகில் பாயைத் துழாவிற்று. பிர்தவ்ஸின் கதகதப்பான உடல் கையில் தட்டுப்பட்டவுடன் நிம்மதியடைந்தவள் ‘துவோய் யா அல்லாஹ்’ என முனகினாள். பிர்தவ்ஸை இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படி வயிற்றுக்குள் போட்டுப் படுத்திருக்கப் போகிறோமோ என்கிற நினைவு எழுந்து, பெரும் துக்கமாக மாறி தொண்டையை அடைத்தது. சொஹ்ராவின் கணவன் கரீமிடமிருந்து அவளைப் பாதுகாத்த காலம் போய், இன்று மனசொடிந்த நிலையில் என்னமும் செய்துகொண்டு உயிரைப் போக்கிக்கொள்வாளோ என்கிற பயம் ஆமினாவை தூங்க விடாமல் செய்துகொண்டிருந்தது.

அவளுக்குத் தன் திருமணம் நடந்த விதமும் தன் தாய், தந்தை, தங்கை ஞாபகமும் ஏனோ வந்தது. தன் தந்தை கனி ராவுத்தர் நிறம் தொட்டுப் பொட்டு வைத்துக்கொள்ளலாம் போலக் கறுப்பு. அம்மாதான் எத்தனை வெண்மையாக அழகாக இருப்பாள். அவள் ஒரு அறைக்குள் உட்கார்ந்திருந்தாள் என்றால் ஒரு மின்னல் கீற்று உள்ளேயிருப்பது போல பிரகாசமாக இருக்கும். விளக்காங் குழியிலிருக்கும் சிம்னி விளக்கின் ஒளியில் அவள் நிறம் தகதகப்பதுபோல இருக்கும். அம்மாவுக்கும் அத்தாவுக்கும் எப்போதாவது சண்டை வந்திருக்குமாவென ஞாபகப்படுத்திப்பார்த்தாலும் நினைவுக்குள் அப்படி ஒரு விஷயமே நிகழ்ந்ததில்லை என்றுதான் இருந்தது.

கனி ராவுத்தர் தனது வியாபாரத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பினாரென்றால் ஏதோ ஆர்ப்பாட்டமாகத்தானிருக்கும். தான் கொண்டு வந்த பணத்தினை வைத்து தடபுடலாகச் செலவு செய்து ஊரைக் கலக்கிக்கொண்டிருப்பார். ஒரே நேரத்தில் கறிக்கார நைனார் கடையில் போய் நான்கு ஆட்டுத் தலையை வாங்கி தெருவில் அனைவரும் பார்க்கும்படி இரண்டு கைகளிலும் இரண்டிரண்டாகக் காதைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு வருவார். தெருப் பெண்கள் பேசிக்கொள்வார்கள், "இவருக்கு எதுக்கு இத்தினி பவுசு" என்று.

பொழுதுபோகாத நேரத்தில் பஞ்சாயத்துக் கல்லில் அமர்ந்து சீட்டாடத் தொடங்குவார். அப்படிச் சீட்டாடும் பொழுதுதான் இஸ்மாயிலும்கூட வந்து ஆடத் துவங்கியதும். ஒரு நாள் விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்த இஸ்மாயில் கனியிடம் "பணம் வெச்சு விளையாடப் புடிக்கலே மாமு, எங்கிட்டே இல்லாததா" என்று சொல்லி எழுந்திருக்க.

"பிறகு என்ன வச்சு வெளையாட மாப்பிள்ளை சொல்லு" என்று குஷியாக ராவுத்தர் கேட்க.

"உங்க பொண்ணை வச்சு ஆடலாம். நான் ஜெயிச்சா அவளைக் கட்டிக்கிர்றேன்" என்று இஸ்மாயில் சொல்ல அவரும் உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

"உனக்குப் பொண்ணுக் குடுக்க எனக்குக் கசக்குதா. இருந்தாலும் வெளையாடிப் பாத்துடுவோம்" என்று ஆட்டத்தை ஆரம்பிக்க அன்று மாலை ஆமினா பள்ளியிலிருந்து திரும்பிய பிறகு, ஒரே சந்தோஷமும் பாட்டுமாக வந்தவர், தெருவில் நின்று எதையோ சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆமினாவை "ஏண்டி பொண்ணு இங்கனெ வா" என்று கூப்பிட்டார். குடுகுடுவென ஓடிவந்து அவர் மடியில் உட்கார்ந்து கொண்டு என்ன என்கிற மாதிரி அவர் முகத்தை நிமிந்து பார்த்தாள்.

"ஏய் கத்துஜா, வா இங்கே" என்று உற்சாகமாகக் கூப்பிட்டவர். உம் மகளுக்குக் கல்யாணம் பேசிட்டு வந்திருக்கேன் ஓடி வா" என்று அடுப்படியை நோக்கி தலையை எட்டிப் பார்த்துவிட்டுத் தன் மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டார்.

அறைகுறையாகக் காதில் விழுந்த விஷயத்தைத் தெளிவாக்கிக்கொள்ளும் பொருட்டு தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்தாள் கத்துஜா. அவளுக்கு சிறு வயதில் காலில் அம்மி விழுந்து நைத்து விட்டதால், நடை நேராக வராது. இழுத்து வைத்துத்தான் நடப்பாள்.

அவரது அருகில் வந்தவள் தரையில் விரித்திருந்த தடுக்கில் அமர்ந்தபடி, "என்ன சொன்னீங்க" என்றாள் ஆர்வமாக.

"பெரிய வீட்டு இஸ்மாயில் இல்ல. அவன் ஒம் பொண்ணை கட்டிக்குடுன்னு கேட்டான். சரி கட்டிக்கடான்னு சொல்லிட்டேன்" என்று சொல்லி சத்தம்போட்டு சிரித்தார், எப்படி என் சாமர்த்தியம் என்பதுபோல.

அவர் எதிர்பார்த்தபடி கத்திஜாவின் முகத்தில் பெரிய சந்தோஷம் எதுவும் தோன்றாதது அவருக்கு ஏமாற்றமாக இருக்க அதனை மறைத்துக்கொண்டபடி, "ஏன் ஒண்ணும் சொல்ல மாட்டிகளோ" எனக் கிண்டலாகக் கேட்டு அவளைக் கூர்ந்து நோக்கினார்.

"அதுக்கில்லேங்க" என்றவள் "இவளுக்கு இப்போதான் பத்து வயசு முடிஞ்சிருக்கு, என்ன அவசரம்னுதான். அந்த இஸ்மாயிலும்கூட மொதத் தாரம் கட்டி இழந்து வயசும் முப்பதத் தாண்டிக் கெடக்குமுல்ல" என்று தயக்கத்துடன் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியவள், அவரது பதிலை எதிர் நோக்கி உட்கார்ந்திருந்தாள்.

"இம்புட்டுத்தானாக்கும். நான்கூட என்னவோ ஏதோன்னுல்ல நெனைச்சேன். போடி போ. இதெல்லாம் ஒரு காரணமா?" என்றவர் "ஊர் உலகத்துல இல்லாததச் செய்ற மாதிரியில்ல சலிச்சுக்கிர்ற. நான் வாக்குக் குடுத்தாச்சு. அடுத்த வாரத்துல ஜிம்மாவுல நிக்கா" என்று சொல்லிவிட்டு "சரி சரி, போய் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணி வெச்சுக் குடு" என்று சொல்லியவாறே துண்டை உதறித் தோளில் சுற்றிப் போட்டபடி மிடுக்காக நடந்து திண்ணைக்குப் போனார்.

அடுத்த சில நாட்களில் திருமணம் நடந்தபொழுது ஆமினாவுக்கு அது பற்றிய எந்த புரிதலும் இல்லை. ஊரெல்லாம் ஆச்சரியப்படும் விதத்தில் சாப்பாடும் குதிரை ஆட்டமும் நடந்தது. கனி ராவுத்தர் புளியங்கொம்பு பார்த்துப் பிடித்ததையே ஊரெல்லாம் பேசிப் பொறாமைப்பட்டது. அதே கனி ராவுத்தர் தன் இரண்டாவது பெண் மைமூதுக்குத் தன் வியாபாரத் தொடர்புகள் மூலம் மாப்பிள்ளை பார்த்து முடித்தபிறகுதான் அவரது சந்தோஷமும் உற்சாகமும் பறிபோனது. மணமான இரண்டே மாதத்தில் வீடு வந்து சேர்ந்தாள் மைமூன். அவனோடு வாழவே மாட்டேன் என்றபடி வீட்டின் மச்சு அறையில் நெற்குதிரை ஒட்டி ஒடுங்கிப்போய் அமர்ந்திருந்த அவளிடம் ஆமினாவும் கதிஜாவும் புத்திமதி சொல்லித் திருப்பி அனுப்பிவிட எவ்வளவோ முயற்சித்தும் மன்றாடிப்பார்த்தும் அவள் அசைந்து கொடுக்கவேயில்லை. "முடியாது" என்று மட்டும் சொல்லியபடியேயிருந்தாள். சிம்னி விளக்கின் ஒளி பட்டுத் தெறித்த அவளது பிஞ்சு முகத்திலிருந்த பிடிவாதத்தையும் வைராக்கியத்தையும் இவர்களால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. யாரும் இனி இது குறித்துப் பேசக்கூடாது என்கிற கட்டளையும் அதிலிருக்கவே செய்தது.

தன் குடும்பத்திற்கு நேர்ந்த அவமானம் கதிஜாவைக் காட்டிலும் கனி ராவுத்தரை ரொம்பவே பாதித்தது. தனது சிரிப்பு, பாட்டு, கிண்டல் அனைத்தையும் மறந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்க ஆரம்பித்தார் அவர். கதிஜா அழுததெல்லாம் "நாமதான் பொட்டச்சிக வீட்டுக்குள்ள கிடக்கறோம். அவரு ஆம்பளை நாலு இடம் போக, கொள்ள, கடைத்தெரு போகக்கூட வழியில்லாமப் போயிருச்சே" என்று தான்.

கனி ராவுத்தருக்கு ஆமினாவைப் பார்க்கும் பொழுதெல்லாம் கண்ணீர் கோர்க்கும். "என் பிள்ளை," என்று தனக்குள் முனகிக்கொள்வார். தான் சொன்ன மாப்பிள்ளையை ஒரு மறுப்பும் சொல்லாமல் கட்டிக் கொண்ட தியாகியாகத்தான் அவர் அவளை நினைத்துக்கொள்வார். இப்போதெல்லாம் வெளி உலகத்திற்கோ வியாபாரத்திற்கோ போகாத நிலையில் ஆமினா இஸ்மாயில் தயவில்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. அவன் எத்தனை தங்கமானவன் என தன் மாமனை நினைத்துப் பூரித்துப்போவார். அவர் முன்பு மாதிரி வெளியில் வியாபாரத்திற்க்குப் போவதில்லை என்றாலும் ஏதோ வீட்டிலிருந்தேனும் கொஞ்சம் வருமானத்திற்க்கு வழிபார்ப்போமென நினைத்திருந்ததினால் தினமும் காலை உணவுக்குப்பின் உட்காரும் பலகையை எடுத்துப் போட்டு முற்றத்தில் அமர்ந்துகொள்வார். வெளியிலிருந்து மொத்த விலைக்கு வாங்கி வந்து வைத்திருக்கும் ஊதுபத்திக் கட்டைக் கவிழ்த்து நான்கு நான்காகப் பிரித்துக் கைகளில் எடுத்துக்கொள்வார். பிறகு தனது சிறிய மரப்பெட்டியிலிருக்கும் சென்ட் குப்பிகளை வரிசையாக எடுத்துத் தரையில் அடுக்கி பிறகு ஒவ்வொன்றாகத் திறந்து முகர்ந்து பார்த்து ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு சில துளி அத்தரை உள்ளங்கையில் விட்டு ஒன்றாக்கிக்கொள்வார். பிறகு அதை நான்கு ஊதுபத்திகளின் மீதும் மிருதுவாகத் தடவித்தடவி விடுவார். பிறகு வாசனை சரியாக இருக்கிறதாவென முகர்ந்து முகர்ந்துபார்த்துக்கொண்டிருப்பார். அவருக்கு திருப்தி வரும்பொழுது அதனை ஒரு முறத்தில் அடுக்கிவைத்து முற்றத்து வெயிலில் காயவைப்பார். நாள் முழுக்க அத்தர் பூசிய ஊதுபத்திகளை ரோஸ் வண்ண ஜரிகைக் காகிதங்களில் பத்துப் பத்தாக அடுக்கி வைத்து சுருட்டி நுனி வரை சுருட்டி மடித்து ஒரு அட்டைப் பெட்டியில் அடுக்கத் துவங்குவார். யாருடைய ஒத்தாசையையும் அவர் விரும்புவதில்லை. மிகச் சன்னமான குரலில் தனக்குள்ளாகவே ஒரு பைத்தை முணு முணுத்தபடி வேலை செய்து கொண்டிருப்பார். யாரும் இடையூறு செய்யவோ பேசவோ தயங்கும் விதத்தில் அக்குரலில் வருத்தம் தோய்ந்து நெஞ்சைப் பிழிவதாக இருக்கும். பிறகு அவரே மரப்பெட்டியில் அத்தர் பாட்டில்களை வரிசையாக அடுக்கத் துவங்குவார். ஆமினாவுக்கு அந்தப் பாட்டில்களை பார்க்கப் பார்க்க ஆசையாக இருக்கும். விதவிதமான வடிவங்களில் கலை நயமிக்கதாக இருக்கும். மூடிகளும் மிக அழகழகான வடிவத்தில் இருக்கும். நடுங்கும் தன் கரங்களில் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து இறுக அடைத்திருக்கிறதாவென சரிபார்த்து பத்திரப்படுத்துவார். ஒரு சில நாட்களில் யாரேனும் ஒரு வியாபாரி வந்து ஊதுபத்திக் கட்டுகளை பணம் கொடுத்துப் பெற்றுச் செல்வான்.

- தொடரும்

nantri - Ulagathamizh

Thursday, June 24, 2004

இரண்டாம் ஜாமங்களின் கதை - 3

சல்மா

காலையில் சீக்கிரமாகவே எழுந்துவிட்டாள் ராபியா. மதரஸாவுக்கு ஓதச் செல்ல வேண்டும் என்பதைவிட வாதா மரத்தினடியில் உதிர்ந்து கிடக்கும் பழங்களைப் பொறுக்க வேண்டும் என்கிற ஆசையில் அதிகாலையிலேயே எழுந்து கிளம்பிப் போவாள். இவளைப் போலத்தான் மற்ற பிள்ளைகளும். யார் முதலில் போவது, யார் நிறைய பழம் பொறுக்குவது என்கிற போட்டி அவர்களுக்குள் இருந்துகொண்டிருக்கும்.

வழக்கம்போல தலைக்கு ஒரு துண்டையும் குர்ஆனையும் எடுத்துக்கொண்டு கிளம்பியவளின் ஓட்டத்தை சொஹ்ராவின் குரல் தடுத்து நிறுத்த, வாசல் படியருகிலிருந்தவாறே "என்னம்மா?" என்றாள்.

"குர்ஆனைத் தொடுறதுக்கு முன்னால ஏலுச் செய்தியா?" என்று கத்தினாள் சொஹ்ரா,

"செய்தாச்சும்மா" என்று சொல்லிவிட்டுத் தெருவில் இறங்கி ஓடினாள் அவள். பள்ளிவாசலில் பஜருத் தொழுகைக்குப் பின் யாரும் இருக்கமாட்டார்கள். மோதினார் பாவா மட்டும்தான் ஏதாவது வேலைகள் செய்துகொண்டிருப்பார். அவரை ராபியாவுக்கு ரொம்பவும் பிடிக்கும். காலையில் இவள் போகும்பொழுது அவர் ஒரு பெரிய இரும்புத்தட்டில் சலித்த நைசான மணலை அள்ளித் தண்ணீர் ஊற்றிக் கரண்டியில் கலக்கிக்கொண்டிருப்பார். ராபியா அவர் பக்கத்தில் போய்க் குத்துக்காலிட்டு உட்கார்ந்துகொள்வாள்.

"மோதினார் பாவா இது எதுக்கு?" என்று கேட்பாள்.

"சொல்றேன் புள்ளை இரு" என்பார்.

இவளிடம் ஒரு குவளையைக் கொடுத்து "இந்தா போய் அவுசுல தண்ணி மெத்திக்கிட்டு வா" என்பார். இவள் ஓடிப்போய்த் தண்ணீர் கொண்டுவருவாள்.

"இப்பச் சொல்லுங்க இது எதுக்கு" என்று மறுபடி கேட்பாள்.

அவர் தனது தாடியை லேசாகச் சொறிந்துவிட்டுக்கொண்டு "அதுவந்து நீங்கள்ளாம் சுட்டிபானை வச்சு விளையாடுவீங்க இல்லெ, அதுமாதிரித்தான் நான் விளையாடுறேன். இப்பப் பாரு" என்று சொல்லிவிட்டு விளக்குமாறால் மண்தரையைச் சுத்தமாகக் கூட்டிவிட்டு, அந்த இடத்தில் கரைத்த மணலை ஒவ்வொரு கரண்டியாக இடம்விட்டு வரிசையாக இட்லியைப் போல ஊற்றுவார். அவர் பொய் சொல்கிறார் என்பது இவளுக்குத் தெரியும், அதனால் அவர் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுவாள் "பொய் சொல்லாதிங்க பாவா. தினமும் இப்பிடி மணல் இட்லி ஊத்துறிங்களே, எதுக்காக?" என்று கேட்பாள். அவள் முகத்தில் தெரியும் ஆர்வம் அவருக்குப் பரிதாபமாக இருந்தாலும் சிரித்துக்கொள்வார். அவர் சிரிக்கும்பொழுது அவரது குட்டையான தாடியும் மீசையும் கறுத்த உதடுகளுக்குள்ளிருந்து வெளித் தெரியும் பற்களும் ரொம்பவே வினோதமாக இருக்கும் இவளுக்கு.

தினமும் அவர் இப்படிச் செய்வதும் பள்ளிவாசலுக்குத் தொழுகை செய்ய வரும் ஆண்கள் அதிலொன்றைக் கையில் எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குப் போவதும் இவளுக்கும் இவளது தோழிகளுக்கும் பெரும் புதிராகவே இருக்கும். ஒரு நாள் மதரஸாவில் இவளோடு ஓதும் அஹமது கேட்டான், "ஏய் அதுக்குப் பேரு என்னன்னு தெரியுமாடி உங்களுக்கு?" என்று எகத்தாளமாகக் கேட்டான். அவனுடைய கெக்கரிப்பும் ஆர்ப்பாட்டமும் தனக்கு மிகப்பெரிய ரகசியம் ஒன்று தெரியும் என்றும் அதைக் கேட்பவர்கள் அவனிடம் கெஞ்சிக் கேட்க வேண்டும் என்றும் சொல்வதுபோலவும் இருந்தது.

மதினாவும் ராபியாவும் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள் இவனிடமிருந்து நாம் எதையும் தெரிந்துகொள்ளவே வேண்டாம் என்று. இவர்கள் அவனை அலட்சியத்துடன் விலக்குவது அவனுக்குப் பெருத்த அவமானமாக இருக்கும். "ஏண்டி உங்களுக்குத் தெரிய வேணாமா? சொல்லுங்க" என்று கண்களை உருட்டிப் பயம் காட்டினான்.

வேணாம் போடா! அஜரத்துங்ககிட்ட சொல்லிடுவோம் தெரியுமில்ல" என்று மதினா மிரட்டினாள். அதன் பிறகு ஒரு ஓரத்தில் போய் உட்கார்ந்துகொண்ட அஹமதுவுக்குத் தனக்குத் தெரிந்த விஷயத்தை இவர்களிடம் சொல்லியே ஆக வேண்டுமென நாவு துடித்தது. எவ்வளவோ தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு, பிறகு அவர்களைப் பார்த்துத் திரும்பி உட்கார்ந்துகொண்டவன், அவர்களிடம் சொன்னான்.

"அது பேரு வந்து டேலாக்கட்டி. சில மக்குப் பொண்ணுகளுக்கு இதுகூடத் தெரியலை பாவம்" என்று அவர்களிடம் சொல்லி அங்கலாய்த்துக்கொண்டான். ராபியாவும் மதினாவும் அன்று அதன் பெயரை மட்டும் காதில் வாங்கிக்கொண்டார்கள்.

ராபியாவின் தந்தை கரீம் தன் மனைவியிடம் பேசும்பொழுதெல்லாம் யாரையேனும் திட்ட நேரும்பொழுது, "அவனுடைய உறவு எனக்கு டேலாக்கட்டியாக்கும். நெனைக்கறப்போ தூக்கியெறிஞ்சிடுவேன்" என்று அடிக்கடி சொல்வார்.

மோதினார் பாவாவின் கைகள் அளவோடும் அழகாகவும் மணலை மொண்டு ஊற்றுவதைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு இன்று வாதா மரத்தினடியில் பழங்களேயில்லை என்பது கவலையாக இருந்தது.

"ஏன் பாவா இன்னிக்கு மரத்தடியில் பழங்களே இல்லை?" என்றாள் ஏமாற்றத்தோடு.

"ஏன் இல்லை. அங்கே பாரு பெரிய அஜரத்து பொறுக்கிவச்சிருக்காங்க. போய் வாங்கிக்க" என்று சொல்லிக் கைநீட்டினார். அவர் காட்டிய இடத்தில் பெரிய அஜரத் தலைப்பாகையைக் கழட்டி மடியில் வைத்துக்கொண்டு கையில் தஸ்பீஹ் மணியுடன் உட்கார்ந்திருந்தார். ராபியா சந்தோஷமாக அவரை நோக்கி ஓடினாள். தன்னை நோக்கி ஓடிவந்தவளைத் தன் கருணை மிகுந்த கண்களால் பார்த்தவர். "இங்கெ வாம்மா என்று அருகில் கூப்பிட்டார். "அஸ்ஸலாமலைக்கும் அஜரத்துங்க" என்றபடி அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டாள் அவள்.

"அலைக்கும் ஸலாம். எங்கே வந்தீங்க பழம் வாங்கத்தானே" என்றார் குறும்புச் சிரிப்புடன்.

"இல்லை சும்மாதான்" என்று சொல்லிக் கூச்சத்துடன் தலைகுனிந்துகொண்டாள் இவள்.

அவர் மெலிந்த உடலும் சுருங்கிய தோலுமாக ரொம்பவும் ஒட்டிப்போயிருந்தார் முதுகில் கூன் விழுந்திருந்தது. கண்கள் குழிக்குள் இருப்பதுபோல உள்ளே ஒடுங்கியிருந்தன. மிக நீளமான மூக்கும் நீண்ட தாடியும் அவருக்கு இருந்தன. அந்த தாடிக்குள் விரலை நுழைத்துக் கோதி விட்டுக்கொண்டிருந்தார். பிள்ளைகள் மீது அவருக்குப் பிரியம் அதிகம். பல நாட்கள் தானே பழங்களைப் பொறுக்கிவைத்துக்கொண்டு, எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து, அவர்களது சந்தோஷத்தைப் பார்த்து ரசிப்பார். வெற்றிலையை அசைபோட்டபடியிருக்கும் வாய்க்குள்ளாக ஸல்வல்லாஹ் என்றபடி தஸ்பீஹ் மணியை உருட்டியவாறு முணுமுணுத்துக்கொண்டிருப்பார். அவர் என்றால் பிள்ளைகளுக்கும்கூடப் பிரியம்தான். ஆனால் சின்ன அஜரத்தை யாருக்குமே பிடிக்காது. முக்கியமாக ராபியாவுக்கும் மதினாவுக்கும். ஓதும்பொழுது ஒரு வார்த்தை தப்பாக உச்சரித்தால் போதும், தொடையிலேயே கிள்ளுவார். அவர் தொடையைத் தொடுவது கிள்ளுவதற்காக மட்டுமில்லை என்று இவளுக்குத் தோன்றும். அவர் தன் கையில் வைத்திருக்கும் குச்சியால் பையன்களை மட்டும்தான் அடிப்பார். பொண்ணுகளைத் தொடையில்தான் கிள்ளுவார். அவரைப் பார்த்தாலே இவளுக்குக் கூச்சமாகவும் வெறுப்பாகவும் இருக்கும்.

"ராபியா இங்க வந்து எம்பக்கத்துல உக்காரு. உனக்கு நல்லா சொல்லித்தரணும்னு உங்கம்மா சொல்லியனுப்பிருச்சிருக்காங்க" என்று பக்கத்தில் வேறு உட்கார வைத்துக்கொள்வார். அவ்வப்போது இவளது கன்னத்தில் கிள்ளுவதும் தடவுவதும் உண்டு. அப்பொழுதெல்லாம் ராபியாவுக்கு அழுகை வரும். மதினாவிடம் "எனக்கு இந்த ஆள்கிட்ட ஓதப் புடிக்கவேயில்லை" என்பாள். அதற்கு "ஒனக்கு மட்டுமா, எனக்குந்தான் புடிக்கலை" என்பாள் மதினாவும்

பையன்களுக்கும் அவரைப் பிடிக்காது, நன்றாக அடிப்பார் என்பதால். அஹமது சொல்வான், "இந்த ஆள் கல்யாணமும் பண்ணலை புள்ளையும் பிறக்கலை, அப்புறம் எப்புடிப் பிள்ளைகள் மேல பாசம் இருக்கும்? காட்டுப்பய மாதிரி அடிக்கிறான்" என்று.

ராபியா அவனைக் கோபிப்பாள் "அஜரத்துங்கள அப்பிடித் திட்டாதே. நரகத்துக்குப் போயிருவே. அஜரத்துங்க அடிக்கிற எடத்திலயெல்லாம் நரகத்து நெருப்பு படாது தெரியுமில்ல" என்பாள்.

"நரகத்துக்குப் போனா சரி, சொர்க்கத்துக்கு நான் போனேன்னா, அப்ப என்ன ஆவும் இப்ப வாங்கின அடியெல்லாம்?" என்று சொல்வான்.

"போடா லூசு, உங்கிட்ட பேசுறதுக்கு" என்று அலுத்துக்கொள்வாள் ராபியா.

பள்ளிவாசலிலேயே ராபியாவுக்குப் பிடித்தமான இடம் அவுஸ்தான். தரையோடிருக்கும் பெரிய தண்ணீர்த் தொட்டி. தொழ வருபவர்கள் அந்தத் தண்ணீரில்தான் ஏலுச்செய்வார்கள். அந்தத் தொட்டியில் ஏராளமான மீன்களை வாங்கி விட்டிருப்பார்கள். தண்ணீரில் வளர்ந்து கிடக்கும் பாசிக்குள் நுழைந்துகொண்டு, பதுங்கி விளையாடும் மீன்களை மேலே வரச்செய்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பாள். காலையில் வீட்டிலிருந்து வரும்போது மறக்காமல் கொண்டுவரும் காசில் பள்ளிவாசலுக்கு வெளியே புட்டு விற்கும் பையனிடம் புட்டு வாங்கிக்கொள்வாள். அதை அவுஸின் ஒரு மூலையில் அமர்ந்து தூளாக்கி அதனுள் போடுவாள். மொத்த மீன்களும் அதைச் சாப்பிட மேலேறி வரும். ஒரே பரபரப்பும் சண்டையும் அவைகளுக்கிடையே நடக்கும். அதைப் பார்த்து ரசிப்பது அவளுக்கு அன்றாட வேலை. இதை யாரோ அவளது அம்மாவிடம் சொல்லிக்கொடுத்து அம்மா நன்றாகத் திட்டினாள்.

"உன்னைப் பள்ளிவாசலுக்கு அனுப்பறது ஓதத்தானே தவிர வெளையாட இல்லை. வயசுக்கு வர்றதுக்கு முந்தி குரானை முடிச்சிட்டா அஜரத்துங்களுக்கு வேட்டி பணம் வச்சுக் குடுக்கலாம்னு இருக்கேன். நீ இப்படி விளையாடிட்டா வர்றே" என சத்தம் போடுவாள். அதே மாதிரி பள்ளிக்குப் போகும்பொழுதும், போய்விட்டு வந்த பிறகும் "முகம் கழுவி பவுடர் போட்டுக்கொள். வயசுக்கு வர்ற வயசாகப்போகுது" என்று அறிவுறுத்துவாள்.

அன்று காலை மதரஸா நடக்கும்பொழுது பிள்ளைகள் எல்லோருக்கும் குப்பியின் மூணாம் நாள் கத்தப் பாத்திஹாவுக்காக ஒவ்வொரு ரூபாய் கொடுத்தார்கள். பிள்ளைகளுக்கு ஒரே சந்தோஷம். எதிர்பாராமல் கிடைத்த ரூபாயை எப்படியெல்லாம் செலவழிப்பது என்று மனதிற்குள் கனவு கண்டுகொண்டிருந்தார்கள். பள்ளிவாசல் எதிரிலிருக்கும் பெட்டிக் கடைக்கு முன்னால் ஒரே கூட்டம்.

மதினா ராபியாவின் காதில் கிசுகிசுத்தாள் "காசை செலவழிக்காதே" என்று. ஏன் எனப் புரியாமல் கேட்டவளிடம் "மவுத்தான வீட்டுக்காசு. அத வச்சுக்க வேணாம். அவுஸ் தண்ணிக்குள்ள போட்டுருவோம்" என்றாள் பிறகு இருவரும் காசை யாருக்கும் தெரியாமல் அவுஸ் தண்ணிக்குள் வீசினார்கள். ராபியாவுக்கு மனசே சரியில்லை. காலையில் புட்டு வாங்கியாவது மீனுக்குப் போட்டிருக்கலாமே என்று தோன்றியது. மதினா ஒன்று சொன்னால் நிச்சயம் அதற்குக் காரணம் இருக்கும் என்பதனால்தான் அவள் சொல்படி செய்தாள். மதினாவுக்கும் இவளுக்கும் இடையில் எந்த ஒளிவு மறைவும் ரகசியங்களும் இதுவரைக்கும் இருந்ததில்லை. ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. அது ராபியாவின் சித்தி பிர்தவ்ஸ், தன் கணவனிடமிருந்து தலாக் வாங்கி வீட்டிற்குத் திரும்பிவிட்டது மட்டும்தான். அதைப்பற்றி யாரிடமும் எதுவும் பேசக்கூடாது என்று அவளை அம்மா மிரட்டிவைத்திருந்தாள்.

றைமா பெரியம்மா சத்தம் போடுவாள் "இதையெல்லாம் எத்தனை நாள் மறைத்து வைக்க முடியும். இன்னைக்கு இல்லே நாளைக்கு வெளியில் வரத்தான் போகிறது. இதெல்லாம் ஒண்ணும் தெரியாத பொண்ணிடம் போய் என்ன பேச்சு பேசுற நீ" என்று.

அவர்கள் இருவரின் வாக்குவாதங்களும் எதையட்டி என்கிற விபரம் புரியாமல் ராபியா தடுமாறுவாள், ஏகப்பட்ட குழப்பங்களுடன். தலாக் என்றால் என்னவென்று யாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது என்றும் தெரியவில்லை. ஒருவேளை அஹமதுவுக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ?

nantri - Ulagathamizh

Wednesday, June 16, 2004

இரண்டாம் ஜாமங்களின் கதை - 2

"இப்பத்தான் வர்றியா ராபியா" என்றபடி அறைக்குள் எட்டிப்பார்த்த றைமா பெரியம்மாவை ஓடிப்போய்க் கட்டிக்கொண்டாள். "நாம இப்ப குப்பி வீட்டுக்கு எதுக்காகப் போறோம்" என்று அண்ணாந்து அவள் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.

"ஆமா, குப்பி மௌத்தாப் போயிட்டாங்க தெரியுமா, அதுக்காக," என்ற றைமா, "சரி சரி, நீ கௌம்பு. ஏற்கனவே ஒங்கம்மா கோபமா இருக்கா" என்றாள்.

குப்பியை ராபியாவுக்கு அவ்வளவாகப் பிடிக்காது. அதனால் அவளுக்கு விசேஷமாக ஒன்றும் தோன்றவில்லை. அவசர அவசரமாகப் பாவாடை சட்டையை பீரோவிலிருந்து உருவி எடுத்து உடுத்திக் கொண்டாள். சீப்பை எடுத்துத் தனக்குத்தானே தலைமுடியை ஒதுக்கிக்கொண்டாள். நீளமான தலைமுடி. ஈரம் காயாமல் நசநசத்தது. அம்மா பார்த்தால் நன்றாகத் திட்டுவாள் என நினைத்தபடி முடியை அறைகுறையாகப் பின்னி விட்டுக்கொண்டு ஓடிப்போய்த் தயாராக வாசல்படியை ஒட்டி நின்று கொண்டாள்.

"ராபியா!" மறுபடி அம்மா கூப்பிடும் குரல் கேட்டதும் அடுப்படிக்குள் ஓடினாள். "இந்தா, இந்த பால குடி. குடிச்சிட்டு இந்த தூக்குப் போணிய கையில எடுத்துக்க கிளம்பறதுக்கு. இந்தா நாங்களும் துப்பட்டிய போட்டுட்டு கௌம்புறோம்" என்றபடி அடுப்படியைத் தாழ்ப்பாள் போட்டாள்.

ராபியா பாலைக் குடித்துவிட்டு வாசற்படியில் போய் நின்றுகொண்டாள். மழை இன்னும் லேசாக தூறிக்கொண்டிருந்தது. எதிர் வீட்டு பரிதாக்கா ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துக் கேட்டாள். "ராபியா, எங்கெ போறிங்க? அடக்கம் பண்ணப் போறாங்களாக்கும்."

"ஆமா. குப்பி வீட்டுக்குத்தான்" என்றாள் ராபியா. வாசல்படியை ஒட்டி நிறுத்தியிருந்த காரிலிருந்து முத்து கீழே இறங்கி பரிதா வீட்டு ஜன்னலைப் பார்க்க திரும்பியதும் பரிதா விடுக்கென்று தலையை உள்ளுக்குள் இழுத்துக்கொண்டாள்.

முத்துவுக்குச் சிரிப்பு வந்தது. "ஏன் ராபியா நான் என்ன பேயா பிசாசா? ஏன் இப்படி பயந்து ஒளியுது" என்று கேட்டான். "அதெப்புடி? பரிதாக்கா வயசுக்கு வந்துட்டாங்க இல்லெ? பிறகெப்புடி ஆம்பளைங்க முகத்துல முழிப்பாங்க. அதெல்லாம் முழிக்கக்கூடாது தெரியுமா" என்றாள் பெருமை பொங்க.

அதற்குள்ளாக அம்மாவும் பெரியம்மாவும் வெளியில் வரவும், முத்து காரில் ஏறி டிரைவர் சீட்டில் உட்கார்ந்துகொள்ள, முதலில் காரில் ஏறப் போன ராபியாவிடம், "இந்தா இதைப் போட்டுக்க" என்றபடி சொஹ்ரா ஒரு தாவணியை அவள் கையில் கொடுத்தாள். இவள் அதைக் கையில் வாங்கியபடி மலங்க மலங்க விழித்தாள், இது எதுக்காக என்கிற மாதிரி.

"உஷ், நெஞ்சு தெரியுதுல்ல. மவுத்தான வீட்டுக்கு நாலு பேர் வருவாங்க. அசிங்கம் பிடிச்சாப்புல இப்படியா நிக்கப் போறே? பொண்ணா லச்சணமா இருக்க வேணாம். சொல்றத செய்யி" என்று கிசுகிசுத்தாள் சொஹ்ரா.

றைமா பெரியம்மாவுக்கு ஏனோ கோபம் வந்தது. "எதுக்காக நீ அவள இப்பிடி விரட்டுற? இப்ப என்ன அவ்வளவு பெரிய பொம்பளையாயிட்டா அவ, எப்பப் பாரு குத்தம் சொல்லிக்கிட்டு" என்று அவளை அதட்டியவள், ராபியாவிடம் "சும்மா இப்போதைக்கு இதை உடம்புல சுத்திக்கோ, உங்கம்மாவுக்காக" என்றாள்.

ராபியாவுக்கு சொஹ்ராவே தாவணியை சுத்தி விட்டாள். இருவரும் காரில் ஏறிக்கொண்டதும் கார் புறப்பட்டது. அம்மாவும் பெரியம்மாவும் வெள்ளை நிறத் துப்பட்டியினால் தங்கள் உடம்பை முழுவதுமாகச் சுற்றி மூடியிருக்க அவர்கள் இருவருக்கும் நடுவே ஒடுங்கிப்போய் உட்கார்ந்திருந்தாள் ராபியா.

இரண்டு தெரு தள்ளித்தான் மவுத்தான குப்பியின் வீடு இருந்தது. ஐந்தே நிமிடத்தில் போய்ச்சேர்ந்து விட்டார்கள். வாசலில் பெரிய பந்தல். நிறைய ஆண்கள் அங்கு கிடந்த சேர்களில் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். மணி ஐந்து தான் இருக்கும் என்றாலும், மழை பெய்ததால் வேகமாக இருட்டிக் கொண்டிருந்தது. காரிலிருந்து இறங்கிய அம்மாவும் பெரியம்மாவும் முகத்தைக் கண் மட்டும் தெரியும்படி மூடிக்கொண்டு வேகமாக நடந்து அங்கிருந்த ஆண்களைத் தாண்டிப்போய் வீட்டிற்குள் நுழைந்து கொள்ள, புதிதாகப் போட்டிருந்த தாவணி வெட்கத்தை உண்டு பண்ண, முன்னும் பின்னும் அதை இழுத்து சரிசெய்தபடி நடந்தாள் ராபியா.

வீட்டினுள்ளிருந்து கேட்ட அழுகைச் சத்தம் வேறு பயமாக இருந்தது என்றாலும் தயங்கியபடி வீட்டிற்குள் நுழைந்தாள். உள்ளே நுழைந்ததுமே குப்பென்று ஊதுபத்திப் புகை வாடை மூக்கில் ஏறி பயத்தை அதிகப்படுத்தியது. நாலா பக்கமிருந்தும் அழுகையலி கேட்கும் அந்த ஹாலின் நடுவில் செத்துப்போன குப்பியின் மையத்தைப் பெரிய பெஞ்சில் மேற்கு நோக்கி கால் நீட்டி படுக்க வைத்திருந்தார்கள். முழுக்க வெள்ளைத் துணியால் மூடியிருந்த உடல் இவளுக்கு நடுக்கத்தை உண்டு பண்ணியது. கையிலிருந்த தூக்கை நழுவவிட்டு விடுவோமோ என்கிற பயத்தில் அதனை இறுகப் பற்றித் தன் நடுக்கத்தை அதனுள் புதைக்க முயன்றாள்.

அம்மா இருக்கும் இடத்தை நோக்கி சுவர் ஓரமாகவே பதுங்கிப் பதுங்கி மெதுவாக நடந்து அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் நடுவில் உட்கார்ந்துகொண்டாள். நாற்காலிக்குக் கீழே ஒரு வட்ட டப்பியில் உப்பை நிரப்பி அதில் ஒரு கட்டு ஊதுபத்தியைச் சொருகி வைத்திருந்தார்கள். அதிலிருந்து திமுதிமுவென்று மேலெழும்பி வந்துகொண்டிருந்த புகையை உற்றுப் பார்த்தவளுக்கு குடலைப் புரட்டியது.

அம்மா, நபிஸா மச்சியைத் தன் மடியில் சாய்த்து, முதுகை தட்டிக் கொடுத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். "அழுகாதே நபிஸா. நமக்கு வகைஞ்சது அவ்வளவுதான். அழுகாதே."

நபிஸாவுக்கு அழுகை ஓயவில்லை. "என்னைப் பெத்த அம்மா என்னைய அனாதையா விட்டுட்டுப் போயிட்டியே. அத்தாவை இப்படி அனாதையா விட்டுட்டுப் போயிட்டியே, இனி எங்களுக்கு யாரு இருக்கா? அல்லா எம் மொகத்தப் பாக்கமாட்டேன்னுட்டியேடா" என்று உரத்த குரலில் கதறினாள்.

அவளது கத்தலின் துக்கம் பற்றிக்கொள்ள, இன்னும் ஒன்றிரண்டு பேர் அவள் கூட சேர்ந்து கொண்டு ஒப்பாரிவைக்க ஆரம்பித்தார்கள். நபிஸா மச்சியின் சிவந்த உருண்டை முகம் அழுதழுது வீங்கிப் போயிருந்தது. பிரிந்து கிடந்த தலைமயிர் நெற்றியிலும் முகத்திலும் வந்து விழுந்து முகத்தை மறைத்தது. அவளது கேவல் சத்தம் அம்மாவின் மடியிலிருந்து பெரிதாகக் கேட்டுக்கொண்டிருக்க, இந்தத் தூக்கைப் பெரியம்மா வாங்கிக்கொள்ள மாட்டாளா என்று அவள் முகத்தையே உற்றுப் பார்த்தாள் ராபியா. இதைக் கொடுத்த நிமிடமே ஒரே ஓட்டமா இங்கிருந்து வெளியே ஓடிவிட வேண்டும் என நினைத்தவள் மெதுவாக, "பெரியம்மா எனக்குப் பயமா இருக்கு. நான் வெளிய போய் உக்காரட்டுமா?" என்றாள்.

"சரி போ" என்று இவள் காதில் கிசுகிசுத்த றைமா இவள் கையிலிருந்த காப்பியை வாங்கிக்கொண்டாள். "மொத இதை நான் எல்லாருக்கும் ஊத்திக் குடுக்குறேன். . . ஏம்மா யாராவது இந்தக் காப்பியை ஒரு டம்ளர்ல ஊத்திக்கொண்டு வாங்களேன் இந்தப் பொம்பளைப் புள்ளைக்குக் குடுக்க" என்றவாறு நபிஸாவை சொஹ்ராவின் மடியிலிருந்து எழுந்து உட்கார வைக்க முயன்றாள்.

ராபியாவுக்கு பெரிய நிம்மதி. அங்கிருந்து எழுந்து மெதுவாக கூட்டத்தைக் கடந்து வெளியே வந்தவள், இனி உட்கார ஒரு சௌகரியமான இடம் தேட வேண்டும் என நினைத்தபடி கண்களை நாலாபுறமும் சுழற்றிப் பார்த்தாள். காலியாகக் கிடந்த ஒன்றிரண்டு சேர்களில் எதில் உட்காரலாம் என்று யோசித்து விட்டுக் கறுப்புக் கலர் சேரொன்றை சுவர் பக்கம் சத்தமில்லாதபடி தூக்கி வந்தாள். மழை பெய்து தரையெல்லாம் சேறும் சகதியுமாக இருந்ததால் பாவாடையைக் கெண்டைக் காலுக்கு மேலாக தூக்கிப் பிடித்தபடி சேரில் உட்கார்ந்தாள்.

அவளுக்குச் சற்றுத் தள்ளி குப்பியின் கணவர் கமால் மாமு உட்கார்ந்திருந்தார். அவர் அழுகிறாரா என்று அவர் முகத்தையே உற்றுக் கவனித்தாள். தலையைக் குனிந்தபடி வருத்தமாக உட்கார்ந்திருந்தாரே தவிர அழவில்லை. ஏன் அவருக்கு அழுகை வரவில்லை என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள். ஒரு நாள் அம்மாவிடம் கேட்டிருக்கிறாள், "ஏம்மா ஆம்பிளைங்களுக்கு அழுகையே வராதா" என்று.

"ஏன்?"

"இல்லெ, ஆம்பளைங்க அழுது நான் பார்த்ததேயில்லை. அவங்களுக்கு கண்ணுல தண்ணிய வச்சு அல்லா படைக்கலையா?"

அம்மா சொன்னாள், "மக்கு. ஆம்பளைங்க அழுகக் கூடாது. அழுகமாட்டாங்க. அவங்க பொம்பளைங்க மாதிரியில்ல."

அவளுக்குப் போரடித்தது. அஹமதுவை எங்கே காணவில்லை என்று கண்களாலேயே தேடத் துவங்கினாள். அவன் இருந்தாலாவது பேசிக்கொண்டிருக்கலாம்.

nanatri - ulagathmizh